"2030 ம் ஆண்டில், உலகில் பாதி பேருக்கு குடிநீர் கிடைக்காது....தண்ணீரை மையமாக வைத்து நாடுகள் ஒன்றை ஒன்று அடித்து கொள்ள கூடும்......! இஸ்ரேல், சூடான், மத்திய ஆசியா என்று உலகம் முழுதும் யுத்தம் பரவ கூடும்" இதை நான் சொல்ல வில்லை.....! நம்ம ஐ. நா தான் சொல்கிறது....இதற்கு மாற்று ஏற்பாடு செய்தே ஆக வேண்டும், அதுவும் உடனே என்று எச்சரிக்கை விடுக்கிறது....!!? அதற்கான ஆலோசனையாக மழை நீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் சொல்கிறது......!!
2030 வர இன்னும் 20 வருடம் இருக்கே என்று மெத்தனமாக இருக்காமல் அப்போது அவதி பட போகிறவர்கள் நம் பிள்ளைகள் தான் என்று சுயநலமாக எண்ணியாவது முயற்சிகளை இன்றே எடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசாங்கம் மட்டுமே முயற்சி செய்தால் போதாது....!? தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் அக்கறை கொள்ளவேண்டும்......(நம்ம வீட்டை பார்க்கவே நேரம் போதவில்லை. இது வேறையா என்று புலம்புவர்களை தவிர்த்து !)
முதலில் எந்த விதங்களில் எல்லாம் நீர் ஆதாரங்களை அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்....! மழைநீர் சேகரிப்பு பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அடுத்து முக்கியமானது ஆறுகளில் ஓடும் தண்ணீரை பாதுகாத்து கொள்வது.....அதனை பற்றி இங்கே பார்க்கலாம்.
விவசாயிகளின் முக்கிய தேவைகளில் ஒன்று ஆற்று நீர்......
'ஆற்று வளம் ஒரு நாட்டு வளம் ' என்று விவசாயிகள் சொல்வார்கள். ஆற்று வளம் நன்றாக இருந்தால் தான் நாட்டில் விவசாயமும், குடிநீரின் தேவையும் பூர்த்தி ஆகும். இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் நம்ம ஊரில் இருக்கும் ஆறுகளின் நிலைமையை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது. எனக்கு தெரிந்த ஒரு ஆற்றை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஓடி தூத்துக்குடி வழியாக கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றை பற்றி சொல்லலாம். இந்த ஆறு ஒன்று தான் இப்போதைக்கு ஓரளவிற்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கிறது. ஆனால் இந்த ஆற்றின் நிலைமை இப்போது பெருமையா சொல்லிக்கிற மாதிரி இல்லை.
மணல் வளம்
ஆற்றுக்கு மிக இன்றியமையாதது அங்கே இருக்கும் மணல் தான் ஆனால் அந்த மணலை கொஞ்ச கொஞ்சமா சுரண்டி கொண்டிருக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னனா இங்கே மணல் எடுக்கிறதே தவறு, இந்த மணலும் நமக்கு பயன்படாம பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு கடத்த படுகிறது. (அவங்க எப்பவுமே ரொம்ப விவரமான புத்திசாலிங்க...!) அவங்க மாநில ஆற்றில் மணல் எடுக்க கூடாதுன்னு தடை விதித்துவிட்டார்கள். (பின்ன எப்படி அவங்க ஊர்ல கட்டிடம் கட்டுவாங்க....?! அதுக்குதான் தமிழ் நாடு பக்கத்தில இருக்கிறதே......?! மணலை கடத்தி கொண்டு வந்திட்டா போச்சு)
ஆனால் நாம, அதுதாங்க தமிழன் தன் வீட்டை பற்றி நினைக்காமல் அள்ளிக்கொண்டு போய் அங்கே கொட்டிட்டு வராங்களே....! எல்லாம் விசயத்திலும் நாம எல்லா பக்கமும் சுரண்ட பட்டு கொண்டே இருக்கிறோம், அதுவும் தன் கையை வைத்தே தன் கண்ணை குத்துவது போல் அதுக்கு துணை செல்பவர்களை என்னவென்று சொல்வது....!?
இப்படி மணல் எடுப்பதால் ஆற்றின் நீரின் அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. மணல் நிறைய இருந்தால் தான் மழை பெய்யும்போது தண்ணீர் பூமிக்குள் நன்றாக இறங்கும், நீரின் ஓட்டமும் சீராக இருக்கும். ஆற்றின் ஜீவன் போல் இருக்கும் இந்த மணலை திருடுபவர்களை கொலைகாரர்கள் என்று சொல்லகூட தகுதியானவர்கள் தான். மணல் எடுக்கும் போது எந்திரங்களை வைத்து பெரிய பள்ளம் ஏற்படும் அளவிற்கு தோண்டுகிறார்கள்....இதனால் நீரின் ஓட்டமும் திசை மாறி ஒழுங்கின்றி சென்று வீணாகி போய்விடுகிறது. இன்னும் சொல்ல போனால் இவர்களாகவே நிரந்தரமாக ஆற்றின் நடுவே ரோடு வேற போட்டு விடுகிறார்கள். மீன் வளம் வேறு பாதிக்க படுகிறது....இப்படி கேடுகளை சொல்லிட்டே போகலாம்....
அரசாங்கம் என்ன செய்கிறது ??
தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 'இனி எந்திரங்களை பயன்படுத்தி மணல் எடுக்க கூடாது' என்று அரசாங்கம் கடுமையான உத்தரவு போட்டு இருக்கிறது. குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆற்றில் மணல் எடுப்பதை தடை செய்யவேண்டும் என்று ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். இனி இதை சரியாக கவனித்து கடத்தலை தடுக்க வேண்டியது சம்பந்த பட்ட அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது. மேலும் விவசாயிகளின் மூலம் பொது நல வழக்கு போடப்பட்டதால் தான் தாமிரபரணி ஆறும் அரசாங்கத்தின் பார்வைக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமக்கு என்ன என்ற போக்கு கொஞ்சம் மறைய தொடங்கிவிட்டது என நினைக்கிறேன் . பொது மக்களும் கொஞ்சம் விழிப்பாக இருப்பது அவசியம் ஆகிறது. இரவில் தான் இந்த கடத்தல் முழு வேகத்தில் நடக்கிறது....அதை தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருந்தால் இந்த மணல் திருட்டை தடுக்கலாம்.
குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமான ஆறுகளின் மணல் வளத்தை குறையாமல் பாதுகாத்து கொள்வது மிக மிக அவசியம். இப்போதே பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி படுகிறார்கள்....இனியும் நாம் இந்த மணல் கடத்தல் விசயத்தில் விழித்து கொள்ளவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாக போய்விடும்.
நாட்டில இருக்கிற எவ்வளவோ பிரச்சனைகளில் இதுவே முக்கியமானதாக தோன்றுகிறது....! உயிர் வாழ ஆதாரமான தண்ணீர் பற்றாக்குறையை முதலில் சரி செய்ய முயலுவோம்.....! இனி வரும் சந்ததிகளுக்கு தண்ணீரை கொஞ்சம் விட்டு செல்வோம்.....! தண்ணீருக்காய் நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்து கொள்ளும் என்பதை நினைக்கையில் வருத்தமே வருகிறது.....!
அடுத்து நீரின் பற்றாக்குறைக்கு வேறு ஒரு முக்கிய காரணமாக இருப்பது சுற்றுச்சூழல் இதனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பாப்போம்...
படம் உதவி : சௌந்தர்







