வெள்ளி, ஆகஸ்ட் 6

பதிவுலகில் இவள்...!


எனக்கு இந்த தொடர் பதிவு என்றால் கொஞ்சம் யோசனைதான்...நாம என்னத்தை  உருப்படியா தொடர போறோம்  என்று.  ஆனால் நண்பர் LK என்னையும் தொடர அழைத்ததை மதித்து இந்த பதிவை எழுதுகிறேன். இனி கேள்விகளும் அதற்கு  என் பதில்களும்....



1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
   
கௌசல்யா 

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் உண்மையான பெயரும் அதேதான். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

என் கணவர் சொல்லித்தான் எழுத தொடங்கினேன். ( நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் எதை பற்றியாவது சொல்லி புலம்பிட்டு இருப்பேன். அவர்தான், ' என்னிடம் சொல்வதை வலைபதிவுலகில் சொல் ..... 'யாம்(ன்)  பெற்ற இன்பம் பெருக வையகம்'  என்றார். அவர் தப்பிச்சிட்டார்.....ஆனா நீங்க எல்லோரும்....??)  

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அப்படி எல்லாம் ஒன்றும் தெரியாது. ஏதோ எழுதணும் என்று மட்டும்தான் ஆரம்பத்தில் எழுதினேன், பின்னர்தான் பிற தளங்களை பார்த்து தமிளிஷில் இணைந்தேன்....அதில் LK அவர்கள் முதலில்   summit பண்ணி ஆரம்பித்து வைத்தார்....தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.....  பிரபலம் பற்றிய வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை. எதை வைத்து 'பிரபலம்'  என்பது கணிக்க படுகிறது என்பதில் எனக்கு சில விளக்கங்கள் தேவை படுவதால், அதை பற்றி இன்று வரை யோசிக்கவில்லை.  

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

 யார் எழுதினாலும் அதில் சொந்த விசயங்கள் கண்டிப்பாக கலந்தே இருக்கும்....சில அனுபவம் கலப்பதை தவிர்க்க இயலாது. நானும் அப்படி சிலவற்றை பகிர்ந்து இருக்கிறேன்.  விளைவுகள் என்ன என்று அதை படித்தவர்களுக்கு தானே தெரியும். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்காகத்தான் எழுத தொடங்கினேன். ஆனால் இந்த எழுத்தால் சில நல்லவைகளும் நடந்து கொண்டு இருக்கிறது. தாம்பத்தியம், கள்ளகாதல் போன்ற  பதிவை படித்த சிலர் மெயிலின்  மூலம் என்னிடம்  தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் கேட்கிறார்கள். அப்போதுதான் புரிந்தது.... இனி பொழுதுபோக்கு என்று நினைத்து எழுதாமல் பிறருக்கு பயன்படணும் என்று... கொஞ்சம் அதிகமாக கவனம்  எடுத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்.    

சம்பாதிக்கிறதா அப்படினா....? 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 இரண்டு வலை பதிவுகள் உள்ளன.  சிந்தனைக்கு 'மனதோடு மட்டும்',  மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண 'வாசல்' 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பிறரின் மீது பொறாமை அப்படி என்று எல்லாம் இல்லை, ஆனால் நகைசுவையாக  எழுதுபவர்களின் பதிவை மிகவும் விரும்பி படிப்பேன்.  கோபம் என்று பார்த்தால் சில நேரம் வந்தது உண்டு, எழுத்தின் வலிமையை  புரிந்து  கொள்ளாமல் அதை வைத்து தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்காக அரசியல் செய்பவர்களை எண்ணி கோபம் வரும்.    

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..      

தமிளிஷில் இணைவதற்கு முன், முதன்  முதலில் என்னை பாராட்டியவர் ஆதிரன் (  மகேந்திரன் ) அவர்கள் தான்.  இன்றும்  எனக்கு ஒரு நல்ல நண்பர். அந்த பாராட்டு என்னை இன்னும் அதிகமாக சிந்தித்து எழுத தூண்டியது. 





அந்த பாராட்டு...,
//this is very glad to know you write this article with the heading 'kalla kaathal'.
thanks.

சமூகத்தின் மிக முக்கியமான உளவியல் பிரச்சனை இது. சரியான கோணத்தில் நுழைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி//


April 18, 2010 2:03 PM//
    
 10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

சக பதிவர்களுக்கு இங்கே ஒன்றை சொல்லி கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.  நாம் நட்புக்காக என்று மட்டும் பார்க்காமல் நல்ல பதிவுகள் எங்கே இருந்தாலும் அதை கவனித்து அவர்களையும் உங்கள் வாக்குகளாலும், பின்னூட்டத்தாலும் ஊக்கபடுத்துகள். பின்னூட்டம் எழுத நேரம் இல்லை என்றாலும் வாக்கையாவது அளித்து,  அந்த பதிவு பலரை சென்று அடைய  உதவுங்கள். 


எல்லோருமே ஒரு சிறு அங்கீகாரத்திற்காக தான் காத்து இருக்கிறோம்...அந்த அங்கீகாரத்தை நாம் பிறருக்கும் கொஞ்சம் கொடுப்போமே....! 


பல நல்ல பதிவுகள் சரியாக கவனிக்க படாமலேயே போய்விடுகிறது...ஒரு சில சாதாரண பதிவுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்னை சில சமயம் அதிர்ச்சி அடைய  செய்கிறது...நட்பை ஆதரிக்க வேண்டியதுதான்...(ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அல்ல )   


"தேவையான நேரம் கொடுக்க படாத அங்கீகாரம், இருட்டு அறையில்.... மெழுகுவர்த்தி இருந்தும்  ஏற்றி வைக்க படாமல் இருப்பதை போன்றது...."


பதிவுலகம் எனக்கு, பல நல்ல நட்புகளையும், அன்பான உறவுகளையும் கொடுத்து இருக்கிறது... அதற்காக உண்மையில் பெருமை படுகிறேன். 


"உரிமையாக கடிந்து கொள்ளவும், 
 தவறுகளை சுட்டி காட்டவும், 
 பொழுது போக்கிற்காக பேசாமல் 
 கருத்துகளை பரிமாறி கொள்ள பேசுகிற, 
 முகவரியும் முகமும் தேவை இல்லை 
 'அகம் ஒன்றே அகமகிழ்ச்சி' என்று 
 பிடிவாதம் பிடித்து நட்பை வளர்த்து 
 கொண்டு இருக்கிற, உங்கள் அனைவரின் 
 நட்பிற்கு ஈடாக வேறு ஒன்று 
 இந்த உலகில் இருப்பதாக 
 எனக்கு தெரியவில்லை..."


இந்த தொடர் பதிவை பெரும்பாலும் பலரும் எழுதி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.... நண்பர் LK அழைத்ததில் இன்னும் தொடராமல் இருக்கும் நண்பர் தேவா இனி தொடருமாறு அழைக்கிறேன்....( அப்பாடி... நான் அழைக்க ஒருத்தராவது கிடைச்சாரே) 


 ( தம்பி சௌந்தர் சொன்னதுக்காக பயந்து இந்த பதிவை எழுதவில்லை....அந்த கட்சியில் இருந்து என்னை நீக்கிவிட்டாலும் கவலையில்லை....புது கட்சி தொடங்கிவிடுவேன் என்று இதன் மூலம் சொல்லி கொள்கிறேன்....!!)   


திங்கள், ஆகஸ்ட் 2

ஏன் விட்டுக் கொடுக்கணும் - தாம்பத்தியம் பாகம் 14

  
இதற்கு முந்தையப் பதிவு  - குடும்பத்தில் பெண்ணியம் தேவையா ? 


தாம்பத்தியம் பதிவு என்பது சாதாரணமாக குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் எந்த அளவிற்கு அந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கிறது என்றும் அதனால் அந்த வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எந்த அளவுக்கு  பாதிக்க படுகிறார்கள் என்பதை பற்றியது .   ஒரு சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் வேண்டும் என்றால் முதலில் ஒவ்வொரு குடும்ப அமைப்பும்  சீராக இருக்கவேண்டும்.  பல வன்முறையாளர்கள் தானாக உருவாவது இல்லை, உருவாக்கப்படுகிறார்கள்.  அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் அமைப்பு சரியில்லாமல் போய்விடுவதும் அவர்கள் தடம் மாற ஒரு காரணம்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கப்போவது இல்லை.
 
தாம்பத்தியம்
எது ஆரம்பம் ?


கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பொதுவாக, அடிப்படையில்  சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, சிலர் அதை பெரிதுப்  படுத்துகிறார்கள். சிலர் அது இயல்புதானே என்று கண்டுக்கொள்வதில்லை. முந்தைய பாகத்தில் நான் குறிப்பிட்ட ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பது எல்லாம் குடும்பத்தில் இன்றும் நிலவிக்  கொண்டுதான் இருக்கிறது....ஆனால் வேறு பெயரில்....!!? ஒரு மனைவி, 'எனக்கென்று  இந்த வீட்டில் என்ன மரியாதை இருக்கிறது..? நான் உன்னைவிட எதில் குறைந்துப்  போய்விட்டேன்' என்று கொடிப் பிடித்தாலே அது உரிமைகோரும் ஒரு நிலைதானே. இந்த உரிமைக்  கோரலே நீதிமன்றம் வரை  சென்று  முடிகிறது என்பதை என்னால் அழுத்தமாக சொல்லமுடியும்.

என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களில், பெண் , 'அந்த ஆளை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்' என்றும் அவளின் கணவன்  'ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிர் இருந்தால்,  ஆம்பளை எனக்கு எவ்வளவு இருக்கும்...? ' என்றும்  ஆலோசனை கேட்க வந்த இடத்திலும் சண்டைப்  போடுவதைப்  பார்க்கும் போது இதை ஆணாதிக்கம், பெண்ணுரிமைக்கு இரண்டுக்கும் நடுவில் இருக்கும் பிரச்சனை என்றே  எண்ண முடிகிறது.    

வேண்டாமே குடும்பத்தில் ஈகோ

'நான் பெரியவன்' இல்லை 'நான் பெரியவள்' என்ற வாதம் சாதாரண குடும்பம் நடத்தத்  தேவையா ?  மாட்டுவண்டியில் பூட்டப்  பட்ட இரண்டு மாட்டில்  ஒன்று ஒரு பக்கமாகவும், மற்றொன்று வேறு பக்கமாகவும்  போனால் வண்டி ஓடுவது எவ்வாறு ? குடும்பத்திற்கும்  இது சரியாக பொருந்தும்.  அலுவலகத்தில் சக ஊழியர்  ஏதாவது குறைச்  சொல்லி பேசினால் கூட 'பரவாயில்லை, சொன்னால் சொல்லிட்டுப்  போறாங்க ' என்று பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறோம் ,  ஆனால் சொந்த வீட்டில் அந்த 'விட்டுக் கொடுத்தல்' என்பது  ஏன் இல்லாமல் போய்விடுகிறது .  

இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். என்னிடம் சில பெண்கள் நான் விட்டுகொடுப்பதைப்   பற்றி சொன்னபோது அவர்கள் என்னிடம் கேட்டதை அப்படியே இங்கே குறிப்பிடுகிறேன்.  

*   விட்டுக்கொடுத்தல் என்றால் என்ன ?
*   எதை விட்டுக்கொடுக்கணும் ? 
*   எதுக்கு விட்டுக்கொடுக்கணும் ?
*   யார் விட்டுக்கொடுக்கணும் ?
*   எவ்வளவு விட்டுக்கொடுக்கணும் ?
*   விட்டுக்கொடுத்தால்  மறுபடி எப்போது, எப்படி திருப்பி வாங்குவது ?

இந்த கேள்விகள் வேடிக்கையாக தெரிந்தாலும் , 'உண்மை  என்ன' என்பதை அறியாமல்  தானே இருக்கிறோம் என்றே தோன்றுகிறது . எனக்கு தெரிந்த  பதில்கள் கீழே,    

*  கணவன்  கோபமாக பேசும்போது பதிலுக்கு மனைவியும் கோபப்படாமல் பொறுமையைக்  கைக்கொண்டு, தனக்குள் எழும் கோபத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
அதே போல் மனைவியின் கோபத்தின் போது கணவனும் நடந்துக்  கொள்ளவேண்டும். 
     
*  கோபம், ஆத்திரம் , பழி வாங்கும் உணர்ச்சியை, தான் என்ற கர்வத்தை, சில நேரம் சுயமரியாதையை....?!!  (அது பிரச்சனையின் தீவிரத்தைப்  பொறுத்தது) எல்லாம் விட்டு கொடுத்தும் கதை நடக்கலேன்னா,  வேற வழியே இல்லை... கடைசியாக விழுந்துவிட வேண்டியதுதான் கையில் அல்லது காலில் ( உங்க விருப்பத்தைப்  பொறுத்தது ) ஆண், பெண் இருவருக்கும் இது பொருந்தும்....??!  ) நமக்கு அரசாங்கத்தில் ஏதாவது காரியம் ஆகணும் என்றால் கை, காலையாவது பிடித்து வேலையை முடிக்கிறோம் அல்லவா..., அப்படி நினைத்துக்  கொள்ள வேண்டியதுதான்.( வேற வழி...?! ) 

   அப்போதுதான் தாம்பத்தியம் என்ற வண்டி நன்றாக ஓடும். இல்லையென்றால்  தடம் மாறி பெரிய விபத்தைத்தான் சந்திக்க வேண்டியது  இருக்கும்.  

*  யார் விட்டுக்கொடுத்தாலும் நல்லதே. முதலில் விட்டுக்கொடுத்தவர்களே வென்றவர்களாக மதிக்கப்படுகிறார்கள் . குடும்பத்தைப் பொறுத்தவரை தோல்வியும்  இன்பமே. கிட்டத்தட்ட வாழ்நாளின் இறுதி மூச்சை  விடும்வரை கூட இருந்தாகக்  கூடிய துணைக்காக பொறுத்துப்  போவதால் பெரிதாக என்ன இழப்பு நேர்ந்து விட  போகிறது? அதனால் இன்பமும், நிம்மதியும் பல மடங்கு அதிகரிக்குமே தவிர இழப்பு ஒன்றும் இல்லை.  

*  விட்டுக்கொடுகிறது என்று முடிவு செய்தபின், அதில் அளவு என்ன வேண்டி இருக்கிறது...?? அரைகுறையாக இல்லாமல் முழு மனதுடன் முழுதாக விட்டு கொடுப்பதே சிறந்தது.

*   நாம் ஒன்றும் நல்ல விசயங்களை விட்டு கொடுக்கவில்லை.... அதை திருப்ப பெற...?!  தீய தன்மைகளான கோபம், ஆத்திரம், வெறுப்பு, எரிச்சல், ஈகோ, பழி உணர்ச்சி, வறட்டுப்  பிடிவாதம்  போன்றவைகளைத்தான் விட்டுக்  கொடுக்கிறோம்.... இவற்றை விடுவதால் உங்கள் மனது தெளிவாகிறது, மன அழுத்தம், இறுக்கம்  குறைகிறது, ரத்த அழுத்தம் சீராகிறது, முகம் பிரகாசம்  அடைகிறது . இதை விட வேறு என்ன வேண்டும்...? ஆரோக்கியம் தான் பெருகும், குடும்பமும் சந்தோசம் பெறுகிறது, முக்கியமாக குழந்தைகளுக்கு நிம்மதி கிடைக்கிறது தங்கள் பெற்றோர்களை எண்ணி.....!!

மாற்றிச்  சொல்வோம்

ஒரு பெண் தன் ஆயுள் முழுக்க தந்தையை, கணவனை , மகனை என்று ஏதாவது ஒரு ஆணை சார்ந்து இருக்கணும் என்று சொல்வாங்க... ஆனால் இனி அப்படி சொல்லாமல் அப்படியே  மாற்றி  சொல்வோமே....!!?  எல்லா ஆண்களுமே தங்களது வாழ்வைக்  கழிக்க தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ ஏதோ ஒரு வடிவில் பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்று....!!  ஆண்கள் தங்கள் வாழ்வை நிறைவாய் முடிக்க ஏதோ ஒரு வடிவில் பெண் அவசியம். 

கணவன் இறந்ததும் ஒரு பெண் சூழ்நிலையைச்  சமாளித்து வாழ்க்கையை நகர்த்திவிடுவாள், ஆனால் திடீரென்று தங்கள் மனைவியை இழந்த ஆண்களால் அவ்வாறு  சமாளிக்க இயலாது, தடுமாறி விடுவார்கள்.

**************************************
பின் குறிப்பு 

( என் மனதை பாதித்த சில விசயங்களையும், தினம் சந்தித்துக்  கொண்டு இருக்கும் சிலரின்  குடும்பப்  பிரச்சனைகளையும், பிறரின் அனுபவங்களையும் இங்கே எழுதுகிறேன். தனிப்பட்ட என் கற்பனை இல்லை, அனைவருக்கும் தெளிவாக புரியும் அளவிற்கே என் எழுத்து நடை இருப்பதாக எண்ணுகிறேன். இதை  ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு என்று இல்லாமல் உங்களுக்கு தெரிந்த அனுபவங்கள் ஏதும் இருந்தால் ,  இங்கே  பகிர்ந்து கொண்டால் பலர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .)  
    
தாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். அடுத்து தொடர்ந்து வரும்  பதிவுகளில்  அதன் உண்மையான அர்த்தம் என்ன ?  இருவரும் அந்த விசயத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் ? அந்தரங்கம் சரியில்லாமல் போவதால், அது  மொத்த குடும்ப உறவையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்றும் விரிவாக, தெளிவாக அதே நேரம் நாகரீகமாக பகிருகிறேன்.  நட்புடன் தொடருங்கள்.......நன்றி. 


தொடர்ந்துப் பேசுகிறேன்... 

உங்களின் 'மனதோடு  மட்டும்
கௌசல்யா 


சனி, ஜூலை 31

குடும்பத்தில் பெண்ணியம் தேவையா...?! தாம்பத்தியம் பாகம் -13

முந்தைய பதிவு...
 


குடும்பத்தில் பெண்ணியம்


முன்குறிப்பு 

பெரும்பாலான குடும்பத்தை ஆட்டிப்  படைப்பது இரண்டே வார்த்தைகள்தான் , ஒன்று ஆணாதிக்கம் மற்றொன்று பெண்ணுரிமை.  படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப்படையாக வைத்து வருவதுதான். 'ஈகோ' என்று படித்தவர்கள் மேம்பட்ட ஒரு வார்த்தையை சொல்வார்கள்  .


ஆண், பெண் இருவரும் ஒன்றை புரிந்துக்  கொள்வது இல்லை, அது என்னவென்றால் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பதன் சரியான அர்த்தத்தை , அர்த்தம் என்று சொல்வதைவிட அந்த வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும்....? எங்கே பயன்படுத்தக்  கூடாது.....?! என்பதைத்தான். ( எனக்கு தெரிந்த சில விளக்கங்களை இங்கே சொல்ல எண்ணுகிறேன் இது முழுக்க முழுக்க என் கருத்துகள்.  தவிர யாரையும் மனம் வருந்த செய்வது என் நோக்கம் இல்லை,  எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன.  என்னை நான் தெளிவுப்  படுத்தி கொள்ளவுமே இங்கே எழுதுகிறேன், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை சொன்னால் பலருக்கும் தங்களை , தங்கள் எண்ணங்களை சரி செய்துக்  கொள்ள உதவியாக இருக்கும். கருத்துகளை  எதிர் பார்க்கிறேன் )

ஆணாதிக்கம்

அது என்ன ஆணாதிக்கம் ? ஒரு ஆண் மற்றொரு ஆணை அதிகாரம் செய்வதையோ...? அல்லது அடக்கி ஆள்வதையோ....?  ஆணாதிக்கமாக சொல்லப்படவில்லை. பெண்களை அடக்கி அவர்கள் மேல் ஆண் என்ற திமிர்வாதத்தை  காட்டுவதையே ஆணாதிக்கம் என்பதாக கருதுகிறேன்.   இன்றைய காலக்கட்டத்தில் எந்த வீட்டில் ஆணாதிக்கம் தலைத் தூக்கி இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியுடன் சொன்னால் உபயோகமாக இருக்கும்.  இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டே  ஆக வேண்டும், நான் பகிர்ந்துக்  கொண்டு இருப்பது தாம்பத்தியம் பற்றியது. வீட்டிற்கு வெளியே நிலவுகின்ற ஆணாதிக்கம் பற்றி எனக்கும் ஆதங்கம் உண்டு, ஆனால் குடும்பம் என்று பார்க்கும் போது இரண்டையும் ஒன்றாக  போட்டு குழம்பிக்கொள்ளக்  கூடாது.  

ஆணாதிக்கம், பெண்ணுரிமை பற்றி என்னாலும்  பக்கம் பக்கமாக பேச இயலும், மேடை போட்டு மைக் கொடுத்தால் ...!! ஆனால் பெண்ணுரிமை என்று கொடிப்  பிடிக்க குடும்பம், அரசியலும் கிடையாது, வருந்திப்  பெற்றுக்  கொள்ள நாம் நமது உரிமையை, யாருக்கும் விட்டு கொடுக்கவும்  இல்லை.

ஏன் ஏற்பட்டது? எதனால்?

ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் என்பது நேற்று இன்று ஏற்பட்டது இல்லை.  ஆடையின்றி அலைந்த ஆதிகாலத்தில் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட தற்செயலாக தீர்மானிக்கப்பட்ட ஒன்றே.  இதை கொஞ்சம் இன்று நன்றாக யோசித்து பார்த்தோம் என்றால் பெண்கள் சரிதான், அப்படியும் இருக்கலாம் என்றாவது சமாதானம்  செய்துக்  கொள்வார்கள்.  ( நான் என்னை சமாதானம் செய்துக்  கொண்டதைப்  போல )

காடுகளில் விலங்குகளுடன் விலங்காக  வாழ்ந்துக்  கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே வேட்டையாடி  தங்களது பசியை ஆற்றிக்  கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த ஒரு சில கட்டத்தில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய ரத்தவாடையில் கவரப்பட்ட மிருகங்களால் பெண்கள்  பாதிப்புக்கு உள்ளானார்கள். அதனால் ஆண்கள், பெண்களைப்  பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு , அவர்கள் வேட்டையாடச்   சென்றார்கள்.  வேட்டையாடிக்  கொண்டு வந்து பெண்களிடம் கொடுத்து, தங்கள் பெண்களையும்  , குழந்தைகளையும் கவனித்துக்  கொண்டார்கள்.  இப்படித்தான் ஆண்கள் வெளியில் வேலைக்கு செல்வதும், பெண்கள் வீட்டை கவனித்துக்  கொள்வதுமாக இருந்திருக்க வேண்டும்.  


நாளடைவில் மனதளவிலும் ஆண்களுக்கு நாம் தான் பெண்களைவிட உயர்ந்தவர்கள் , நமது தயவு  இல்லாமல் அவர்களால் வாழமுடியாது....நாமே சிறந்தவர்கள்....நமது பேச்சைத்தான் பெண்கள் கேட்கவேண்டும்....எதிர் கேள்வி கேட்கக் கூடாது...அடங்கி இருக்கவேண்டும் என்பதாக மனதில் பதிந்து இருக்க வேண்டும். அதுவே இன்று வரை பெரிய அளவில் பெண்களை அடக்கி ஆள்வதில் தொடங்கி கொடுமையில் வந்து முடிந்து இருக்கவேண்டும். வேறு என்ன சொல்வது எல்லாம் இயற்கையின் விளைவுகள். 


பெண்ணுரிமை

பெண்களுக்கு எது உரிமை என்று  விளக்குவதே  பெரும்பாடாக இருக்கிறது. தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாமல் இருப்பவர்களை என்ன சொல்வது....? கணவனை அடக்குவது மட்டுமே பெண்ணுரிமை என்றே பெரும் பாலான குடும்பப்பெண்கள் எண்ணுகிறார்கள்.  'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் 'ஆணை விட தான் எதில் குறைந்துப்  போய் விட்டோம்' என்ற வாதமே பிரதானமாக  இருக்கிறது.  என் விருப்பபடி குடும்பம் நடக்கவேண்டும் என்று ஆண் அதிகாரம் செய்வது போய் இப்போது தன் விருப்பப் படி  தன் கணவன் நடக்க வேண்டும் என்ற குரலே பல வீடுகளில் எதிரொலிக்கத்   தொடங்கி விட்டது.  இது நல்ல முன்னேற்றம் அல்ல என்பது மட்டும் புரிகிறது.  ஆணின் அதிகாரம் ஒரு கட்டத்தில் அமைதி பெரும், ஆனால் பெண்கள்  செய்யும் அதிகாரம்......??!! 

உண்மையில் ஒரு ஆண் பிறக்கும்போது ஆணாதிக்கவாதியாக பிறப்பதில்லை, ஆணாதிக்க மனப்பான்மை என்ற  பாலை  ஊட்டி வளர்த்தெடுப்பது எல்லாம் அவனைச்  சுற்றி இருக்கும் பெண்களால் மட்டுமே  என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும் .  ஆக பெண்ணுக்கு பெண்ணே எதிரி !??

எனவே 

பெண்ணுரிமை கேட்டு வீட்டிற்கு வெளியில் போராடுங்கள், வீட்டுக்குள் வேண்டாமே.... கணவனின் அன்பைக்  கேட்டு  மட்டுமே போராடுங்கள் அதுவும் அன்பாக.... வீட்டில் எதற்கு இடஒதுக்கீடு..... ? அதிகாரம் செய்யும் கணவனையும் உங்கள் அன்பால் கட்டி அரசாளுங்கள்..... ஒரு கட்டத்தில் அந்த ஆணின் அதிகாரம் புறமுதுகைக்   காட்டி ஓடிவிடும்

கணவனைப்  பார்த்து 'ஆணாதிக்க மனபான்மையுடன் என்னை நடத்துற 'என்று மனைவி குறைப்பட்டுக்  கொள்வதும் ,  மனைவியைப்  பார்த்து ' நான் ஆண்  அப்படித்தான் இருப்பேன் , நீ அடங்கி இரு ' என்று கணவன் சொல்வதும்  அநாகரீகம்.

ஆண்கள் தங்களது இத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டாமல் இயல்பாக மனைவியை கையாளும் போதுதான் அங்கே ஆண்மை கம்பீரம் பெறுகிறது.  மனைவி தன்னை விட எதிலும் தாழ்ந்தவள் இல்லை , அவளது எண்ணத்திற்கும், கருத்திற்கும் கண்டிப்பாக மதிப்பு கொடுக்கவேண்டும் என்று கருத வேண்டும் .    

குடும்பத்தில் ஏற்படக்கூடிய எந்த விசயத்திற்கும் ஆண், தான் மட்டுமே  முடிவு செய்ய வேண்டும் என்று இல்லாமல் மனைவியின் ஆலோசனையையும் கேட்கவேண்டும். இருவரும் கூடி விவாதிக்கும் போதுதான் அந்த விசயத்தின் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கமும்  வெளிவரும், அதனால் அதை கையாள்வதும் சுலபம். தன்னிச்சை முடிவு தவறாகக்   கூடிய வாய்ப்புகளும் உள்ளது. நாளை இருவரும் சேர்ந்த எடுத்த முடிவு தவறாக இருந்தாலுமே ஒருவர்  மீது ஒருவர் பழி போடாமல்.  'அடுத்து என்ன  செய்யலாம்'  என்று அடுத்த  அடி எடுத்து வைக்க சுலபமாக  இருக்கும்.

தாம்பத்தியத்தில் " பெண்மை தோற்றாலும்  ஆண்மை தோற்றாலும்  அங்கே இறுதியில்  வெல்வது என்னவோ இருவருமேதான் "

இதன் தொடர்ச்சி நாளை மறுநாள் வெளி வரும்.......
                                                                    
                                                                

                                                                                            
தொடர்ந்துப்  பேசுகிறேன்... 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  

வியாழன், ஜூலை 22

மரங்களை வெட்டுங்கள்





உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 

மண்ணின் வில்லன் 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே !

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!  





நன்றி - தினத்தந்தி 

திங்கள், ஜூலை 19

சிறுவயது பாலியல் தீண்டல், பாதிப்புக்கு உள்ளாகும் தாம்பத்தியம் . பாகம் -12



முந்தைய பதிவு - டீன் ஏஜ் கர்ப்பம் யாரால் ??

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று பார்த்தால் முக்கியமானதும் கொடூரமானதும் ஒன்று உண்டென்றால் அது பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகள்தான்.  மூன்று வயது தொடங்கி நடக்கும் இந்த கொடூரம் அந்த குழந்தையை சுற்றி இருக்கும் நபர்களாலேயே பெரும்பாலும் ஏற்படும்.  ஆன்மிகத்தில், தெய்வ நம்பிக்கை மற்றும் பண்பாடு, கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது என்று நாம் பெருமைப்  பட்டு கொண்டு இருக்கிற இதே நாட்டில்தான் இந்த அருவருப்பான ஒழுங்கீனங்களும் அதிகளவில் நடைபெற்றுக்  கொண்டு இருக்கின்றன. 



பெண்களில் பெரும்பாலானவர்கள் சிறு வயதில் ஏதாவது ஒரு சூழ்நிலையிலாவது கட்டாயம் சிறு அளவிலாவது சுற்றி இருக்கும் ஆண்களால் தவறான தொடுதலுக்கு உட்பட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில்  அவர்களுக்கு அது தவறு என்று உணரமுடியாத பட்சத்தில் தெரியாமல் போய் இருக்கலாம், அல்லது இப்போது மறந்து இருக்கலாம். ஆண்களின் அந்த தொடுதல் தவறானது என்பதை புரியக்கூடிய வயது இல்லை என்பதுதான் ஒரே காரணம்  ஆனால் திருமணத்திற்கு பின்பு கணவனின் அருகாமையில் தொடுதலில் சிறுவயது தவறான தீண்டல் நினைவுக்கு வந்து  அருவருப்புக்கு ஆளாகி குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை.

பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த கொடுமை என்று இல்லை,   ஆண் குழந்தைகளும்  இக்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஜீரணிக்க முடியாத விஷயம்தான் என்றாலும் இந்த கொடுமைகள் தாமதமாகவே வெளி உலகிற்கு தெரிய வருகின்றன, பல வராமலும் போய் விடுகின்றன. 10, 12  வயது நிரம்பிய சிறுவர்கள் ஆண்களால் மட்டும் அல்ல சில பெண்களாலுமே  பாதிக்க படுகிறார்கள். இதனைப்  பற்றி இன்னும் விரிவாகச்  சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று எண்ணுகிறேன்.  (ஆனால் கற்பனை இல்லை , நான் கேள்விப்பட்ட அருவருப்பான நிஜம் ) 

சில பெண்கள் திருமணம், கணவனின் முதல் தொடுதல் என்று வரும்போது அருவருப்புடன்  பயந்து விலகுவது, பல திருமணங்கள், தொடங்கிய கொஞ்ச நாளில் முறிந்து போவதற்கு, ஆண்களால் சிறு வயதில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட பாதிப்பு ஒரு காரணம்.   ஆனால் இதை யாரும் துணிந்து வெளியே சொல்வதும்  இல்லை. அந்த பெண்ணின் பாதிக்கப்பட்ட மனநிலையை  சரிப்படுத்த, சம்பந்தப்பட்டவர்கள் முயலுவதும்  இல்லை.


சிறு குழந்தைகள் பாலியல் கொடுமை  


பால் மனம் மாறாத சிறு குழந்தைகளைச்  சிதைத்து சின்னாபின்னப்படுத்த கூடிய அளவிற்கு மனிதம் மிருகமாகி விட்டது நிதர்சனம். சிதைந்துப்  போனபின் அந்த குழந்தையின் உடலில் உயிர் இருக்கும் என்பதற்கு நிச்சயம் இல்லை.  அந்த குழந்தையை பெற்றவளின் இதயம் நொறுங்கி போகாதா ?  அந்த மிருகத்தை பெற்றவளின் நிலை இதை விட கொடுமைதான்.  ஏன் ஏன் இந்த கொடூரம்.....?


இந்த ஈன புத்தி மனித மனதில் எத்தகைய நேரத்தில் நுழைகிறது ?
மனிதனின் உணர்வை மீறிய செயலா ?
இந்த செயல் ஒருவேளை மனச்சிதைவால் நடக்கிறதா ?
அந்த மனச்சிதைவு ஏன் ஏற்படுகிறது ?


இப்படி கேள்விகளை அடுக்கிகொண்டே போகலாம்.  ஆனால் பதில்...?! பதில் கிடைத்தாலும் அதனால் அடையபோவது என்ன? ஒன்றும் இல்லை. இழந்தது இழந்தது தான். இறந்தகாலத்தை மறுபடி நிகழ்காலமாக மாற்றும் விந்தை நடந்தால்  மட்டுமே இந்த பதில்களால் ஆதாயம் .


நடந்த எதையும் மாற்ற முடியாது ஆனால் முடிந்தவரை இனி நடக்காமல் பார்த்து கொள்ளலாம் அல்லவா ?  ஆண், பெண் குழந்தை எந்த பாலினமாக இருந்தாலும் சிறு வயதிலேயே சில விசயங்களில்  பெற்றோர்கள் கவனமாக இருந்தாலே போதும்.  நான்  மறுபடி சொல்லப் போவது வேறு ஒன்றும் இல்லை,  திருமணம் பொம்மை விளையாட்டும் இல்லை, குழந்தை பேறு தற்செயல் சமாச்சாரமும் இல்லை.  குழந்தை பெறும்வரை கணவன், மனைவி இருவரின்  கருத்து வேறுபாடுகள் பெரிதாக யாரையும் பாதிக்கப் போவது இல்லை, ஆனால் குழந்தை பிறந்தபின் உங்களது இருவரின் கவனமும், அக்கறையும் அந்த குழந்தையின் மேல் அதிகம் இருப்பது காலத்தின் கட்டாயம்.


பணம் பொருள் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் குறிக்கோள் என்று இருந்தால் தயவு செய்து குழந்தை பெற்றுக்  (கொல்லாதீர்கள்) கொள்ளாதீர்கள். உங்கள்  பணத்தேவை முடிந்ததும் (முடியுமா ?) பெற்றுக்  கொள்ளுங்கள்.


தவறான தொடுதல்கள் 


சிறுமிகள், சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகாமல் பார்த்துக்  கொள்வது பெற்றவர்களின் தலையான கடமை.  சூழ்நிலையின் மேல் குறை சொல்லி தப்பித்துக்  கொள்வதை போல் பாவம் வேறு இல்லை.  மூன்று  வயதில் இருந்தே குழந்தைகளிடம் , (ஆண், பெண் ) பிறரிடம் பழகும் விதங்களை சொல்லிக்  கொடுக்க வேண்டும். மற்றவர்கள் , அவர்கள் நெருங்கிய உறவினர்களாக  இருந்தாலுமே BAD TOUCH, GOOD TOUCH  பற்றி விளக்கமாக சொல்ல வேண்டும்.  (சில பெற்றோர்களுக்கே இதன் அர்த்தம் புரிவது இல்லை)  எங்கு தொடுவது சரி என்றும் , தவறான மறைவான இடங்கள் எவை என்றும் சொல்லி வைக்க வேண்டும். அப்படி அந்த இடங்களில் யாராவது தொட்டால் உடனே எங்களிடம் சொல்ல வேண்டும் என்பதை அன்பாக அறிவுறுத்துங்கள்.

குழந்தைகளை  பள்ளிக்கூடம் அழைத்துச்  செல்லுகின்ற வாகன ஓட்டிகளைப்  பற்றி குழந்தைகளிடம் அடிக்கடி விசாரித்து வையுங்கள்.    நேரம் கிடைக்கும் போது அவர்களிடம் நீங்களும் பேசி நட்பை வளர்த்துக்  கொள்ளுங்கள்.  ஆசிரியர்கள் உங்கள் குழந்தையிடம் எப்படி நடந்துக்  கொள்வார் என்பதையும் அடிக்கடி கேட்டு தெளிவாகிக்  கொள்ளுங்கள் (எந்த புற்றில் எந்த பாம்போ ? )


இந்த கேள்விகள் உங்கள் குழந்தைகள் பதினாறு வயதை தாண்டும் வரை கூட கேட்கலாம்  தப்பில்லை. ( அவர்கள் வளர்ந்தாலும் குழந்தைகள் தான் ) உங்கள் கவனம் இந்தப்படியே இருந்தால் பல சிறுவ / சிறுமியரின் பால்யம் இன்பமாகவே இருக்கும். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின் எதிர்வரும் திருமணத்தையும் விரும்பி எதிர்பார்பார்கள்.


அப்படி இல்லாமல் சிறுவயதில் தவறானத்  தொடுதலால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கண்டிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கை சோபிக்காது, விளைவு அவர்களின் தாம்பத்தியம் மனநல மருத்துவ வாசலிலும் , அல்லது  கோர்ட் வாசலிலும் தான்  போய் நிற்கும், தவிர்க்க முடியாது...?!!


அக்கறை உள்ள  பெற்றோர்களின் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்,  ஆனால் பெற்றோர்களின் கருத்து வேறுபாடால் தனித்து விடப்படுகின்ற குழந்தைகளின் நிலை....?!!   


தாம்பத்தியம் தொடரும்....


தொடர்ந்து பேசுகிறேன் 
உங்களின் 'மனதோடு மட்டும்
கௌசல்யா 

வெள்ளி, ஜூலை 16

கண்டனம்

முன் குறிப்பு:  

ஒரு வழியா 50 பதிவை தாண்டியாச்சு...! இனி சதம் அடிப்பதை பற்றிதான் ஒரே கவலை...!! (அதுக்குனு  ஒரு பதிவ மூணா பிரிச்சு போடும் குறுக்கு முயற்சி ஏதும் செய்றதா  இல்லை, என்று உறுதி கூறுகிறேன்)  நான் அரைசதம் அடித்ததை பெருமையுடன் வாழ்த்திய அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும்........,  அல்வா கொடுக்கணும் என்றுதான் ஆசை...?! ஆனால் இருட்டு கடையில் ஸ்டாக் தீர்ந்து விட்டதாம். ரெடி பண்ணதும் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். பார்போம் இந்த போஸ்ட் எழுதி முடிப்பதற்குள் வருகிறதா என்று.

தலைப்பை பற்றிய சிறு விளக்கம்

இதுவரை சில நல்ல விசயங்களைத்தான் எழுதி இருக்கிறேன் என்று திடமா நம்புகிறேன். இனியும் அப்பணி செவ்வனே  தொடரும்...! நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிற விரும்பத்தகாத சில நிகழ்வுகளை கண்டனங்கள் என்ற தலைப்பில் பகிரலாம் என்று உள்ளேன்.  அன்றாடம் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அவலங்களை, அதை பற்றிய என் ஆதங்கங்களை இந்த தமிழ் கூறும் பதிவுலகத்திற்கு தெரிய படுத்த எண்ணுகிறேன்.  நான் எழுதும் கண்டனங்களுக்கு எதிர்  பின்னூட்டம் வந்தாலும் அதை புன்னகையுடன் எதிர் கொள்வேன் (அப்படியாவது உங்களை யோசிக்க வைத்து இருக்கிறேனே...?!  ) 

முதல் கண்டனம் -  நைட்டீயா ? மேக்ஸ்சியா ?!

எங்க போடணும், எதுக்கு போடணும் என்று சரியாக தெரிந்து  கொள்ளாமல் கண்ட இடத்துக்கும் நைட்டி என்ற ஆடையை போட்டுக்கொண்டு அலையும் பெண்களுக்கு
எதிராக ( இத படிக்கிற யாரும் பெண்ணுரிமை அப்படி இப்படின்னு ஏதாவது குரல் குடுத்தா, எனக்கு கெட்ட  கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்... )

நைட்டி என்ற பெயருக்கே அவமானம்



அழகான , சௌகரியமான ஆடையை தயாரித்து அதற்கு நைட்டி என்று பெயரும் வைத்தவர்கள், இப்போது அது படும்பாட்டை நினைத்தால் நொந்து விடுவார்கள். பகலில்  வெளியில் வேலைக்கு செல்பவர்களும் , வீட்டில் இடுப்பொடிய வேலை செய்கிற பெண்களும்,  இரவில் தூங்க போகும் போதாவது தங்களை கொஞ்சம் ரிலாக்சாக வைத்து கொள்வதற்காக, 6 முழ புடவையை மாற்றி சிம்பிளாக, தளர்வான இந்த உடையை அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கபட்டது. (ஸ் ப்பா... என்ன ஒரு நீளமான வாக்கியம் ?!!)  இரவில்  போட வேண்டும் என்பதால் தான்  நைட்டி என்றே  பெயர் வைத்தார்கள்..!! ( என்னவொரு கண்டிபிடிப்பு... கிளாப்ஸ் ப்ளீஸ்) 

நம்ம பெண்களும் தொடக்கத்தில் அப்படித்தான் பயன்படுத்தினார்கள் (இப்ப பாடு படுத்துறாங்க ) அப்புறம் போக போக பகலில் வீட்டில் அணிய தொடங்கினார்கள் . இந்த ஆண்களும் மனைவியிடம் மெதுவாக " நாம் தனியா இருக்கிறப்போ பரவாயில்லைடா , அம்மா, அப்பா இருக்கிறப்போ அவங்க முன்னாடி போகும்போது  மட்டும் புடவையை மாத்திக்கோமா  " என்று சொன்னார்கள். அப்புறம் புடவை  மாத்த நேரம் இல்லை என்று  மேலே  அழகா ஒரு துப்பட்டா போட்டால் போதும் என்று ஆனது.  அப்புறம் கேட்கணுமா நம்ம மாதர்குல மாணிக்கங்களை......? இதுதான் நமது தேசிய உடை என்று கோஷம் போடாத குறையாக  வெளியிலும் போட்டுட்டு போக தொடங்கி விட்டார்கள்.

கொடுமையான விசயங்கள்

இங்கே உதாரணத்துக்கு இரண்டு விசயங்களை சொல்கிறேன். படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க நான் வருத்தபடுறது நியாயமா இல்லையா என்று ...?! 


பெண்கள் முதலில் இந்த உடையுடன் வாசல் வரை வந்தார்கள், அப்புறம் வாசலை  தாண்டினார்கள், அப்புறம் பக்கத்தில் இருக்கிற கடைதானே...!, இதுக்கு போய் புடவை மாத்தவா என்று போனார்கள்....?! அப்படியே  பக்கத்தில் இருக்கிற கிளினிக் தானே.....??! என்று சென்றே  விட்டார்கள்....?? (அதுவும் ஸ்கூட்டியில்..!!) . என்ன கொடுமைங்க இது ? (கிளினிக்கில் லேடி டாக்டர் கிட்ட வயிறு வலி என்று போனால் அவங்க எப்படி டெஸ்ட்  பண்ணுவாங்க ...?!) ஓ.கே நான் கேட்கல விடுங்க  ( யோசிக்கிறப்ப கஷ்டமா இருக்கு இல்ல? அப்ப நேரில் பார்த்த எனக்கு எப்படி இருக்கும்?  ) 

இதை எல்லாம் விட 2000  ௦ பிள்ளைகள் வரை படித்து கொண்டு இருக்கிற பள்ளிகூடத்துக்கு தங்கள் குழந்தையை இரு சக்கர வண்டியில் கொண்டு வந்து விடுகிற பெண்களை நைட்டில பார்த்து பிரமிச்சு போயிட்டேன்...!! இந்த காட்சி வேற எங்கேயும்  இல்லை படித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டு இருக்கிற நம்ம சிங்கார  சென்னையில் தான்....!!? வாழ்க தமிழ் கலாசாரம்....!!

இரண்டாவது 

சமீபத்தில் சென்னையில் எனது  உறவினர் மகனுக்கு பெண் பார்க்க முடிவு செய்து எல்லோருமாக சேர்ந்து ஒரு 10௦ பெண்கள் புடை சூழ பயங்கர பந்தாவாக 2   காரில் சென்றோம்.  இதில் போகும்போது இந்த மைசூர் சில்க்குக்கு பதிலா காஞ்சிவரம் கட்டி இருக்கலாமே என்று பையனோட அம்மாவை குறை வேற ( கிண்டலாத்தான் ) சொல்லிட்டு இருந்தோம். 

நாங்கள் எங்க வந்திட்டு இருக்கிறோம் என்று பெண்ணோட அண்ணன் போன் செய்து கேட்டுட்டே இருந்தார். ( பெண்ணோட அம்மா, அப்பா கிராமத்தில் இருப்பதால் பெண் அண்ணன்  வீட்டில் இருந்து வேலைக்கு போயிட்டு இருந்தாள் )  இதை பார்த்த நான் வரவேற்ப்பு செம கிராண்டா இருக்கப்போகுது என்று பெருமை வேறு பட்டுக்கொண்டேன். 'அடடா பூ வாங்கலையே' என்று வழியில் பூ வாங்கி ஒன்றுபோல சூடி கொண்டோம். 

பெண் வீட்டை நெருங்கி விட்டோம் , பெண்ணோட  அண்ணன் டிப்டாப்பா வாசலில் நின்று வரவேற்றார்.  நாங்கள் அப்படியே அசந்து உள்ள போனோம், அங்கே பெண்ணோட அண்ணி வந்து நின்னு வணக்கம் சொன்னதும் எல்லோரும் அப்படியே ஆடி போய்ட்டோம் ...??!! ( இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்...ம் .. ம் )  என்னத்த சொல்ல , அண்ணி தேசிய உடையில் (நைட்டி) இருக்காங்க...( அது கொஞ்சம் பளிச்சுன்னு இருந்தாலும் பரவாயில்ல , சாயம் போய், கசங்கி ஒரு மாதிரியா இருந்தது )  

அதற்கு பிறகு நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்திட்டு பொண்ணு ( நல்லவேளை புடவை கட்டி இருந்தாள் ) கொண்டு வந்த காப்பிய குடிச்சிட்டு கிளம்பி வந்திட்டோம். எனக்கு மனசு கேட்காமல் பெண்ணோட அண்ணாகிட்ட கிளம்பும்போது தனியா 'ஏன் இப்படின்னு' கேட்டேவிட்டேன். அவரும் ரொம்ப கூலா அவங்க  வேலைக்கு போறதால வீட்டில்  இப்படித்தான் இருப்பாங்க , அவளுக்கு இதுதான் comfortable என்றார். (ஆனா புதுசா போன நமக்கு...?) 

நம்ம பெண்கள் ஏன் இப்படி மாறிட்டாங்க..?? புதிதாக ஒருத்தர் வீட்டுக்கு வரும்போது நாம எப்படி இருக்கணும் என்ற அடிப்படை நாகரீகம் கூட மறந்து விட்டதா? மற்றவர்களின் முகசுளிப்பை கூட அலட்சியபடுத்துவது ஏன்..?? எங்கே போய் கொண்டு இருக்கிறது நமது அற்புதமான தமிழ் பண்பாடு..?  மேலை நாடும் பொறாமை படும் நமது விருந்தோம்பல் ஒழுங்கு இப்போது எங்கே...? 

எங்கள் வசதிக்கு ஒரு ஆடை உடுத்த கூட எங்களுக்கு உரிமை  இல்லையா ? என்ற அனாவசியமான விதண்டாவாதம் பேசுவது அநாகரீகம்...  எது உரிமை ? மற்றவர்களின் முகசுளிப்புடன் கூடிய பார்வையில் வலம் வருவது தான் உங்கள் உரிமையா ?  பெண்ணுரிமை என்பதின் உண்மையான அர்த்தம் தெரியாத அறிவிலிகள் தான் இங்கே இப்போது பெருகி கொண்டு இருக்கிறார்கள்.  நமக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது , அதை தாண்ட எண்ணுவதே தவறு என்னும் போது, தாண்டியவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது ...??  தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இந்த மாதிரி சுய சிந்தனை  இல்லாதவர்களை எண்ணியே  எனது முதல் கண்டனம். இன்னும் தொடரும் .....
                                                             **************
நன்றி சொல்ல விட்டுப்போனவர்கள்...மன்னிக்கவும்


தாராபுரத்தான்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
தக்குடுபாண்டி
P. Dhanagopal sir
hamaragana
ரோஸ் விக்
தெய்வசுகந்தி
அம்பிகா
ஹேமா
Jayadeva
Jey  

இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
                                                             ***************