வெள்ளி, ஜூன் 25

நினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன்

One  year without MJ 






பாப்  இசை உலகின் மன்னன்'  இந்த உலகம் இருக்கும் வரை இந்த பட்டம் இவர் ஒருவருக்குத்தான் பொருந்தும்.  இவர் இன்று நம்மிடையே இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற இசை, பாடல்கள், நடன முறைகள், நினைவுகள் கோடிக்கணக்கான இதயங்களில் என்றும்  வாழும்.....!!



அவரது இசை நாடு, மொழி, மக்களை கடந்த உலக காவியம். 





சிறு வயது முதல் தீவிர ரசிகையான  எனக்கு அவரது முதல் நினைவுநாளில் இந்த பதிவை எழுத கிடைத்த வாய்ப்பை பெரும்பேறாக எண்ணுகிறேன்.  இசையால் ஒருவருக்கு ஆறுதலை, அமைதியை கொடுக்கமுடியும் என்பதை உணர்ந்து அனுபவித்தவள்.




அவரது முதல் ஆல்பம் முதல் கடைசி ஆல்பம் வரை உள்ள அனைத்து பாடல்களும் அசத்தலானவை. தனது 11  வயதிலேயே மேடையேறி பாட தொடங்கிய மைக்கேல் தனது 50 வது வயதுவரை ஓய்வின்றி இசைக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தார்.  


அவரின் வாழ்க்கை ஒரு மலர் படுக்கை அல்ல, முள் படுக்கை. முள்ளை  அவர் வைத்து கொண்டு ரோஜா மலரை நமக்கு பரிசளித்தவர்.  தந்தையுடன் மனகசப்பு, பல முறையற்ற   குற்றசாட்டுகள் , முதல் மனைவியுடன் விவாகரத்து,  உடம்பை சோதனைசாலையாக மாற்றிய பல ஆப்பரேஷன்கள்,  இன்னும் எழுத்தில் வடிக்க முடியாத அளவு மோசமான குற்றசாட்டுகள், பல தேவை அற்ற பிரசாரங்கள்......??!!  இதில் எவையெல்லாம்    உண்மை என்பது அவருக்கும், கடவுளுக்கும் தான் தெரியும்.  


ஒரு தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியில், தனது நிலையை நன்றாக தெளிவு படுத்தினார். ஒரே  வார்த்தையில் தன் மேல் உள்ள குற்றசாட்டுகளுக்கு பதில் உரைத்தார் , ' நான் ஒரு பாவமும் அறியேன் ' என்று கண்ணில் நீர் வழிய ஒரு மகா கலைஞன் சொன்னதை பார்த்தபோது என் கண்ணீரை கட்டுபடுத்த நானும் வழி அறியேன்.  புத்தரையும், ஏசுவையுமே  குறை சொன்ன இந்த உலகம் இந்த சாதாரண மனிதனையா விட்டு வைக்க போகிறது?  " உங்களில் ஒரு குற்றமும் செய்யாதவர்கள் யாரும் இருந்தால்  அவர்களே முதல் கல்லை இவள் மேல் எறியுங்கள் " என்று ஒரு இடத்தில் ஏசுநாதர் கூறி இருப்பார்.  அது போல் ஒரு குறையும் இல்லாத  மனிதராக  நாம் இருந்தால்  அவரை குறை சொல்லலாம்  ஆனால் நாம்....???


சிறு வயதில் வெள்ளையர்களின் நிற பேத கொடுமைகளில் தொடங்கி  அவர் இந்த உலகை விட்டு மறைந்த பின்னும் இன்னும் அவரை வைத்து தொடரும் அவலங்கள்....?  மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட  யாருக்கும் உரிமை இல்லை, ஆனால் பிரபலம் என்றால் எதுவுமே செய்திதான்.  இவரை பொறுத்தவரை அவரது ஒவ்வொரு அசைவும் உலகத்தாரால் விமர்சிக்கப்பட்டது.  இந்த விமர்சனம் அவர் மறைந்த பின்னும் குறையவில்லை . ஒருவர் இறந்தபின் அவரது நிறைகளை மட்டுமே பேசபடுவதுதான் நாகரீகம்.  ஆனால் அவர் இறந்த பின் வந்த செய்திகள் அதனை விளம்பரத்திற்காக வெளி இட்டவர்களை அவரது ரசிகர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.  



அவரை வைத்தும், அவரது பாடல்களை கொண்டும் சாதாரண பிளாட்பார கடையில் இருந்து ஆல்பம் வெளியிட்ட பெரிய நிறுவனங்கள் வரை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு லாபம் சம்பாதித்தன,  இன்றும் சம்பாதித்து கொண்டுதான் இருக்கின்றன.  


அவரது நினைவாக ஒரு மியுசியம் கட்ட போகிறார்களாம். ஆனால் அதற்கு அடிக்கல் நாட்டும் முன்னரே, அதனால் ஒரு வருடத்திற்கு வர கூடிய வருவாய் இத்தனை  கோடி டாலர்கள் என்று கணக்கு போட்டு விட்டார்கள்.  என்ன உலகம்...??!! 


முக்கியமான ஒன்று என்னவென்றால் யாரை நம்பி தனது உடம்பை ஒப்படைத்து மருத்துவம்  பார்த்து கொண்டு இருந்தாரோ அவரே அவரது உயிரை பறிக்கும் காலனாக மாறியது.... ??


'make a little space, make a better place' என்று பாடிய அவருக்கு இந்த பூமியில் அப்படி ஒரு சிறந்த இடம் வாழ கிடைக்கவில்லை. அந்த உலகத்திலாவது அவர் விரும்பிய அந்த அமைதியான இடம் கிடைக்கட்டும்!!


                    ரசிகர்கள் 
                    உணருவார்கள், அந்த                                                                       
                    உயிரின் ஓசையை...! 
                    இப்போதும்  கேட்கிறது... 
                    'இந்த அமைதியும்,                               
                    ஆனந்தமும் 
                    கிடைக்கும் என்று முன்பே 
                    தெரிந்து இருந்தால் 
                    என்றோ மரித்திருப்பேன் !
                    வாழ்க என்பேன்...
                    இந்த இடம்,  நான் வர 
                    துணை புரிந்தவர்களை !!'   
                                
ஒவ்வொரு பாடலுமே ஒரு காவியம்தான்.  அனைத்தையும் விரிவாக சொல்வதை விட ஒரு நாலு பாடல்களை இங்கு குறிப்பிடுகிறேன்.


Thiriller   


1980 ம் ஆண்டில் இந்த பாடலை எடுக்க 50,000 டாலர்கள் செலவு ஆகியதாம்.  வசூலில் சாதனை படைத்த பாடல். பேய் படம் பார்த்து பயந்து வெளியில் வரும் தன் பெண் தோழியுடன் ரோட்டில் பாடி கதை சொல்லி கொண்டே வருவார்,  அப்படி ஒரு கல்லறையை  கடந்து வரும்போது, அங்குள்ள கல்லறையை திறந்து கொண்டு சடலங்கள் எழுந்து வருவது போலவும், பின் மைக்கேலுடன் சேர்ந்து நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்க பட்டிருக்கும்.  இந்த காட்சி அமைப்பும், மிரட்டும் இசையும், இன்று பார்க்கும் போதும் திகிலாக இருக்கும்.


Beat it .   


முதல் ராக் பாடல் இதுதான் என்று அறியப்பட்டது.  இதில் இடம் பெற்ற அனைத்து கலைஞர்களும் கருப்பு இன அமெரிக்க மக்களும், தென் ஆப்பிரிக்க இனத்தவர்களும் தான்.  'சண்டை வேண்டாம்'  என்ற பொருளில் பாடல் அமைக்க பட்டிருக்கும்.  இந்த பாடல் மைக்கேலின் சிறந்த பாடல் மட்டும் இல்லை அகில உலகத்தின் சிறந்த பாடல் என்ற பெயரை பெற்றது.


Smooth criminal 


ஒரு சூதாட்ட விடுதியில் நடப்பவற்றை வைத்து பாடல் எடுக்கப்பட்டு இருக்கும்.  அந்த விடுதியை சுற்றி நடனத்துடன் பாடல் மிக அற்புதமாக படமாக்க பட்டு இருக்கும்.   நடனம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.     

Heal the World 


இந்த  பாடலில்  அதிர  வைக்கும்  இசையோ , அசத்தும்  நடன அசைவுகளோ இல்லை. ஆனால் மனதை நெகிழ செய்யும் காட்சிகள்,  ஆழ்மனதை ஊடுருவும் வரிகள்.  உலகில் போர் வேண்டாம் , அமைதி நிலவ வேண்டும் என்பதை சிறு குழந்தைகளை வைத்து மிக அருமையாக படமாக்கப்பட்டு  இருக்கும்.  ராணுவ வீரர்களின் கையில் குழந்தைகள் பூவை கொடுக்கும் காட்சியும், அதன்பின் அவர்கள் தங்கள்  கையில் பிடித்திருக்கும் துப்பாக்கியை கீழே  எறிவது போலவும் இடம்பெற்ற  காட்சிகள் புல்லரிக்க வைக்கும். 
அந்த பாடலில் உள்ள சில வரிகள் 




"Think about the generations and to say we want to make it a better world for our children and our children's children. So that they know 
it's a better world for them; and think if they can make it a better
place." 




"Make it a better place
For you and for me and the entire human race.
There are people dying
If you care enough for the living
Make a better place for 
You and for me"




அவரது நினைவுநாளில்  நான் எழுதும் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.


   
           

புதன், ஜூன் 23

நிலவுமுகம்

கவிதை   
                                           
                                          இரண்டு பேரும் பிரிந்து 
                   
                                          இருக்கிறோம், வேலையின் நிமித்தம்!

                                          ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட 
                                     
                                          நேரத்தில் இருவரும் 

                                         ஒன்றாக நிலவை நோக்க!

                                         அவர் பார்க்கும் 
                            
                                         நிலவில் என் முகம்!

                                         நான் பார்க்கும் நிலவில்
                                         
                                         என்னவர் முகம்!

                                         இருவரையும் பார்த்த 

                                         நிலவு ஓடி மறைந்தது

                                         மேகத்தில், வெட்கமாம்!!

                                                     *******************




பி.கு

எப்படி தெரியும் என்று யோசிக்ககூடாது ...! கண்டிப்பாக தெரியும், மனதில் காதல் இருந்தால் !!


நிலவு வராத அமாவாசையில் என்ன செய்வீர்கள் என்றும்  கேட்ககூடாது ?!  ஒரு வேளை நீங்க கேட்டால்,  நட்சத்திரத்தை பார்த்து கொள்வோம் என்பேன்!  நிலவு என்றால் ஒரு முகம் தான் ஆனால் நட்சத்திரம் என்றால்...............புரியும் என்று நினைக்கிறேன் !!

செவ்வாய், ஜூன் 22

இருமனம் இணையும் திருமணம் - தாம்பத்தியம் பாகம் 9



முந்தைய பதிவு எல்லாம் பெண்ணாலே ...?!


திருமண பந்தம்

இருமனம் இணையும் திருமணம்

 

இப்பந்தம் இருவரை மட்டும் இணைக்கும் மண விழா இல்லை, இரு குடும்பங்களை இணைக்கும் திருவிழா.  இனிமையான இந்த விழாவில்தான் எத்தனை சாஸ்திரங்கள், சம்பிராதயங்கள் !! ஆச்சரியமான பல சடங்குகள்....!! அணியும் உடைகள் முதல் மண்டபம் வரை பெற்றவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள்.  ஆண், பெண் இருவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான கால கட்டமே இந்த திருமணம்தான்.  

திருமணதிற்கு முன் வாழும் வாழ்க்கை நம் பெற்றோர்களின்  விருப்பத்திற்கு ஏற்றார் போல்தான்  இருக்கும் .  அவர்கள் சேர்த்துவிடும் பள்ளி, கல்லூரிகளில் தான் நமது படிப்பு தொடரும், அவர்கள் எடுத்து கொடுக்கும் உடையைத்தான் உடுத்துவோம், நேரம் கழித்து வீட்டிற்கு போனால் டோஸ் கண்டிப்பாக இருக்கும்.  நமக்கு எது விருப்பம் என்று பார்த்து முடிவு செய்வார்கள் .  

திருமண வயது வந்ததையும் கவனித்து தகுந்த நேரம் பார்த்து  வரன் பார்க்க தொடங்கி விடுவார்கள்.  இப்ப உள்ள சூழ்நிலையில்  நம் விருப்பத்தையும்  கேட்க கூடிய  கூடிய   பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.   வரன் பார்க்கும் அந்த நேரத்தில் இருந்தே பெற்றோர்களின் படபடப்பு அதிகரித்து விடும்.  அதுவும் பெண்ணை பெற்றவர்களின் நிலையை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.  நல்ல  குணமுள்ள வரன் கிடைக்க வேண்டுமே என்று தவமே  இருப்பார்கள்....!!

பெண் பார்க்கும் வைபோகம் 

பல வரன்களின் புகைபடங்களையும்  சரி பாத்து கடைசியில் தங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல்  ஒன்றை முடிவு செய்து  பெண் பார்க்க ஏற்பாடு செய்கிறார்கள்.    பெண் பார்க்க வருகிறார்கள் என்றவுடன் தனியாக பெண்ணிற்கு அலங்காரம்  செய்து, வசதி குறைந்தவர்கள் தங்கள் வீட்டில் நகை குறைவாக இருந்தாலும்  அக்கம்பக்கம் வாங்கியாவது  பெண்ணின் கழுத்தில் அணிவித்து தயார் செய்து வைப்பார்கள்.  டிபன், காபி என்று அனைத்தும் தயார் நிலையில் இருக்கும். இந்த தடபுடல் ஏற்பாடு சில பெண்களுக்கு பலமுறை கூட நடந்தேறும்.

வரதட்சணை என்னும் அரக்கன் 

உறவினர் புடை சூழ மாப்பிள்ளை வந்து இறங்குவார்.  சம்பிரதாயமான பேச்சுகள் முடிந்ததும் பெண்ணை பார்ப்பார்கள்.   பெண்ணை பிடித்து விட்டாலும்,  மற்ற கொடுக்கல் வாங்கலில்  திருப்தி  ஏற்பட்டால் தான் சம்மதம் சொல்வார்கள்.  பையனை வளர்த்து படிக்க வைத்ததுக்கும் சேர்த்து ஒரு கணக்கு போட்டு மொத்த தொகையை சொல்வார்கள் .   (ஆனால் இந்த மாதிரி நேரத்தில் எந்த பெண் வீட்டாரும், "  உங்க பையனை வளர்த்தது உங்க கடமைதானே,  அதுக்கு நாங்க ஏன் பணம் கொடுக்கணும் " , என்று கேட்பதே இல்லை.)  

(பதிலுக்கு இவர்களும் " எங்க பெண்ணையும் வளர்த்து படிக்க வைத்து பத்தாதுக்கு ஒரு வேலையை வேற வாங்கி கொடுத்துள்ளோம், திருமணம்  முடிந்ததும், அவளுடன் சேர்த்து  அவள் சம்பளத்தையும் நீங்கதான வாங்க போறீங்க ? அதனால் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு தொகையை நீங்க தான் எங்களுக்கு கொடுக்கணும் " என்று ஏன் கேட்பது இல்லை....?!!?)

காலங்காலமா தொடர்ந்து வரும் சந்தையில் மாட்டை விலை பேசுவது  மாதிரியான இந்த பழக்கத்தை யாரும் மாற்ற  கூடாது என்ற பிடிவாதத்தில் இருக்கும் போது யார்தான் என்ன சொல்லமுடியும்?  (வாங்குபவர்கள் மீது தவறா இல்லை கொடுப்பவர்கள் மீது தவறா )   இந்த பேச்சு வார்த்தைகள் பெண் வீட்டாரையும், பையன் வீட்டாரையும் ஒருவேளை திருப்தி படுத்தினாலும், அந்த நேரம் யாரும் ஒன்றை யோசிப்பதே இல்லை.   

அது  "சம்மந்தப்பட்ட அந்த பெண்ணின் மனநிலை!!".  தான் ஒரு பலிகாடாக மாற்றபடுவதை எந்த பெண்ணும் விரும்பவே மாட்டாள்.   இந்த விசயத்தில் அவள் சூழ்நிலை கைதியாகவே இருக்கிறாள்.  அதிக அளவில் பாதிக்கபடும் அவள்,  அதை அப்படியே திருமணத்துக்கு பின்னால் எதிரொலிக்கிறாள்.  இதுதான் பல மாமியார் மருமகள் சண்டைக்கான பிள்ளையார் சுழி என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்பதுதான் கொடுமை.     

அதைவிட கணவனை வரதட்சணை என்னும் ஒரு விலையை கொடுத்துதான் வாங்குகிறாள்.....! அப்படி இருக்கும்போது வாங்கியவள் அவள் விருப்பம் போல்தான் அந்த கணவனை நடத்தக்கூடும் ....!!  இதை ஜீரணிக்க முடியாவிட்டாலும் இன்றைய யதார்த்தம் இதுதான்!!  (எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை)  பெற்றோர்கள் கேட்கும்  வரதட்சணை என்ற  அரக்கனால் ஒருவகையில் மறைமுகமாக பாதிப்படைவது அவர்களது மகன்தான்...!   தனது தாயாராலும் மனைவியாலும் பந்தாடபடுவது அவன்தானே....!!? 

எந்த பெண்ணும் வெளிபடையாக தனது  வெறுப்பிற்கு காரணம் இதுதான் என்று கூறுவது இல்லை.  அதனால் சம்மந்த பட்டவர்கள் பெண்ணின் குணத்தையும், அவளின் பிறந்த வீட்டு வளர்ப்பையும் குறை சொல்லி சமாதானம் அடைந்து கொள்கிறார்கள் அல்லது எதிர்த்து பிரச்சனை பண்ணுகிறார்கள்.  முடிவு கணவன் மனைவி உறவில் விரிசலில் கொண்டு போய் விடுகிறது....!!

இன்று தாம்பத்தியம் சீர்குலைய இந்த வரதட்சணை பிரச்னை ஒரு பெரிய காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  கணவன், மனைவிக்கு இயல்பாக இருக்க கூடிய பரஸ்பர அன்பையே இது கெடுக்கிறது.  சில பெற்றோர்களும் மகளுக்கு திருமணம் முடித்ததும்  தங்களது கடமை முடிந்து விட்டதாக முடிவு செய்து அதற்கு பின் தன் மகள் அங்கு வாழும் வாழ்க்கை எத்தகையது என்று கவனிப்பதே இல்லை.  


இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வேறு உள்ளது     
வசதி குறைந்தவர்கள் வீட்டில் தான் என்று இல்லை, சில மிக வசதி படைத்தவர்களின் வீட்டிலும் இந்த கொடுமை நடந்து கொண்டுதான்  இருக்கிறது !!? தொடர்ந்து பார்ப்போம்!! 




தாம்பத்தியம் தொடரும்........


   

திங்கள், ஜூன் 21

விடை பெறுவோம்

கவிதை....

                                       இருவரும் விடை பெறுவோம்
                                           
                                       பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!
                                           
                                       காதுகளுக்குள் கேட்ட
                                           
                                       உன் குரலின் இனிய ரகசியங்களை, 
                                           
                                       சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...!
                                            
                                       உனது பாடல்களை, 
                                            
                                       கானல் வெளியில் மிதக்க விட்டிருக்கிறேன்....!
                                            
                                          
                                       முதன்முதல் நீ தந்த  முத்தத்தை,  
                                            
                                       ஒரு  உணவாக சாப்பிட்டாகிவிட்டது!
                                            
                                       எதுவுமில்லை  உன் அடையாளங்கள்!!? 

                                       ஆனால் என்னைக் கொஞ்சி அழைத்த கணங்கள் 
                                             
                                        நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
                                             
                                        பறந்து திரிவதை
                                            
                                        எப்படி கொல்வது...?
                                             
                                           
                                   ************************************


                           உன்னோடு களித்த இனிய கிழமைகள்!
                                          
                                          உன் நினைவில் நான் பைத்தியமானது!
                           
                           நாம் பகிர்ந்து கொண்ட சந்தோசங்கள் !
                                          
                                        அதிசயமாக எழுதிய கவிதைகள்!
                           
                          ஆழமாக எழுதிய, எழுதாத கடிதங்கள்!
                                          
                                        தொலைபேசியில் பேசி களித்த பொழுதுகள்!
                           
                           முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள்!
                                          
                                        தூங்காமல், தூங்கிய இரவுகள்!
                           
                           சேர்ந்து வாழ  நினைத்த நேரங்கள்!
                                          
                                       பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்!
                           
                           அடுத்து என்று உன் வருகை,
                                           
                                       என்று ஏங்கிய நாட்கள்!
                            
                           எல்லாமே எல்லாமே,    இன்று என்னுள்


                                        எங்கோ தொலைந்த வினோதங்கள்...!!

                                                               ******************************
                                                                                            
                                                                                                   படித்ததில் பிடித்தது....!!
          

ஞாயிறு, ஜூன் 20

தந்தையர் தினம்



இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் நன்றி உணர்வோடு கொண்டாடபடுகிறது. அன்னையர் தினம், தந்தையர் தினம் என்பது முதலில் மேலை நாடுகளில் தான் கொண்டாடப்பட்டு வந்தது . இப்போது அந்த கலாசாரம் மெதுவாக இந்தியாவிலும் பரவி இங்கும் கொண்டாடபடுகிறது.  

"மேலை நாடுகளில் பிள்ளைகள் தங்களது தாய் தந்தையரை விட்டு பிரிந்து தனியே வாழகூடிய சூழ்நிலை காரணமாக, இந்த நாளை  ஏற்படுத்தி அந்த நாளில் தங்களது பெற்றோர்களுக்கு பரிசுகளையும் வாழ்த்துகளையும் பரிமாறி தங்களது அன்பை பரிமாறி கொள்வார்கள், ஆனால் நம் நாட்டு வாழ்க்கை முறை பெற்றோர்களுடன் இணைந்து வாழும் கலாசாரம் கொண்டது.  அதனால் இந்த நாட்களை நினைவு கூறுவது தேவை இல்லாதது "  என்பது ஒரு சாராரின் கருத்து.

ஆனால் நிதர்சனம் என்னவென்றால் நம்ம குடும்ப கட்டுகோப்பும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வருகிறது!!  முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் பெருகி கொண்டே போகிறது...!  வீட்டில் இருக்கும் வயதான பெற்றோர்கள் பெரும்பாலான இல்லங்களில், தேவையற்ற  சுமைகளாய் கவனிக்க படாமலேயே இருக்கிறார்கள்.  

அரசாங்கமே இதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டியதாகிவிட்டது...! கவனிக்காத  பிள்ளைகள், கொடுமை படுத்தினால் அந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மேல் புகார் கொடுக்கலாம், அதன் பின் தண்டனையும் வாங்கி கொடுக்க முடியும் என்பதே அது!!  அந்த அளவிற்கு இந்த நிலைமை மோசமாகி இருக்கிறது!! 

அதனால் அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டடபடுவது ஒரு வகையில் சரி என்றே படுகிறது.  சிலருக்கு இப்படியாவது பெற்றோர்கள் இருப்பது நினைவுக்கு வரட்டுமே!!

தியாக சுடர்-தந்தை 

தாயின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தந்தையின் தியாகம்! தனது குழந்தை பிறந்த அடுத்த நிமிடத்தில் இருந்தே தந்தை ஆனவன் அந்த குழந்தையின் நல்வாழ்வை பற்றி நினைக்க தொடங்கி விடுகிறான். பிறகு அந்த குழந்தைக்காக கடினமாக உழைக்க  தொடங்கி  தன் வருவாயின்  ஒரு பகுதியை அந்த குழந்தையின் வருங்காலத்திற்காக சேமிக்க தொடங்குகிறான்.  நல்ல கல்வியை கொடுப்பதற்காக அவன் படும் பாட்டை சொல்லி முடியாது.  இன்னும் பல தேவைகளையும் பார்த்து பார்த்து செய்யும் அவனது அன்பை அளவிட முடியாது.  இப்படி தன் வாழ்வையே அந்த பிள்ளைக்காக அர்பணிக்கும், அந்த தன்னலமற்ற தியாகத்தை நன்றி பெருக்கோடு நினைவு கூறும், நாள் தான் ஜூன் மாதம் 3 வது ஞாயிற்று கிழமை தந்தையர் தினமாக கொண்டாடபடுகிறது.  

ஒரு பெண்ணே காரணம்

அவள் பெயர் சோநோரா லூயிஸ். தனது தாயின் இறப்பிற்கு பின் அவளது தந்தை தன்னந்தனியாக இவளுடன் சேர்த்து ஆறு பிள்ளைகளையும் அன்போடு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். தனது 27 ம் வயதில் அன்னையர் தினம் போல்   தனது தந்தைக்காக ஒரு தினத்தை கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்து கொண்டாட தொடங்கினார். பின்னாளில் 1972 ல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் ஜூன் மாதம் 3 ம் ஞாயிறு தந்தையர் தினம் கொண்டாடபடுவதை அங்கீகரித்தார்.  இதுவே இன்று வரை உலகம் முழுவதும் கடைபிடிக்க படுகிறது.  

நம் கடமை

இன்று ஒவ்வொரு மகனும், அல்லது மகளும் தனது தந்தைக்கு ஏதாவது சிறு பரிசையாவது அளித்து அவர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம். இயலவில்லை என்றால்  ஒரு அன்பான வாழ்த்து சொல்லை சொல்லியாவது உங்கள் அன்பை தெரிவிக்கலாம்.  தனது வாழ்நாள் முழுவதையும் உங்களுக்காக அர்பணித்த அல்லது அர்பணித்து கொண்டு இருக்கிற தந்தைக்கு இது நாம் செலுத்தும் நன்றி கடனின் சிறு வெளிப்பாடாக இருக்கட்டுமே .......!!

தவிரவும் இந்த ஒரு நாள் மட்டும் அல்ல,  நம் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரையும் நாம் அவர்களுக்கு கடமை பட்டவர்கள்  தான். இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் "எக்காரணம்  கொண்டும் எனது  பெற்றோரை அவர்கள் தளர்ந்த காலத்தில் கைவிட மாட்டேன் " என்ற உறுதிமொழியை   எடுப்பது சால சிறந்தது...!!   

முதியோர் இல்லத்தில் சேர்ப்பது என்பது 'ஒரு கொடுஞ்செயல்' என்பதை பிள்ளைகள் அனைவரும் மனதில் வைத்தால் நல்லது !  " நம்மை பேணி வளர்த்த பெற்றோரை, நாமும் பேணுவோம்"
   

வெள்ளி, ஜூன் 18

எல்லாம் பெண்ணாலே ...?! தாம்பத்தியம் பாகம் 8



முந்தைய பதிவு குறைகள் அல்ல பிழைகள் 

மன நிறைவு 



மனைவி, கணவன் இருவரிடமே இருந்த நிறை,குறைகளை முடிந்தவரை பலவாறு விவரித்து விட்டேன்.  ஆனால் ஒரு குடும்பம் நல்லா நடப்பதற்கு இவற்றை பார்ப்பது மட்டுமே சரியாக  இருக்காது,   இதில் யார் பக்கம் தவறுகள் அதிகமாக இருக்கிறது என்றும், யார் சரி செய்துக்  கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்கவேண்டும்.  

ஆவதும் பெண்ணால்...கெட்டவை அழிவதும் பெண்ணால் !


நான் முன்பே சொன்ன மாதிரி பெண்ணால் மட்டும்தான் பிரச்னை எது வந்தாலும் அதை நன்கு அலசி ஆராய்ந்து ஒரு நல்ல தீர்மானத்துக்கு  விரைவிலும் சுலபமாகவும் வரமுடியும்.  அதேபோல்தான் ஒரு குறையோ அல்லது அனைத்து குறைகளையுமே  ஒரு கணவன் பெற்று இருந்தாலும் அந்த பெண் , அந்த மனைவி நினைத்தால் , மனது வைத்தால் கண்டிப்பாக தனது கணவனை சரிபடுத்த முடியும். (விதிவிலக்குகள் இருக்கலாம்) 

அந்த மனைவி என்னால் மாற்ற முடியவில்லை என்று சொன்னால், ஒன்று மனைவி குறைச்  சொல்லும் அளவிற்கு, அந்த கணவன் மீது தவறு இல்லாமல் இருக்கும் அல்லது அந்த பெண் திருத்த முயற்சிக்கவில்லை என்றுதான் அர்த்தம்....??! யாருமே குறைகளுடன் இருக்கவேண்டும் என்று வரம் வாங்கி பிறப்பது இல்லை, வளர்ந்த சூழ்நிலையால் இடையில் ஏற்பட்ட பிழை தான் இக்குறைகள்!! பெண் நினைத்தால் மாற்ற  முடியும்!!

                      நல்லவை ஆவதும் பெண்ணாலே....!
                      கெட்டவை அழிவதும் பெண்ணாலே. ...!!

இப்படித்தான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் இருந்து இருக்க வேண்டும்!  

ஆண்களை மட்டுமே குறை சொல்வதை பெருந்தன்மையாக விட்டு விட்டு,  நம் குடும்பம் சந்தோசமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்,  என்பதை பற்றி மட்டும் கவனித்து சரி செய்து கொண்டால் உங்கள் தாம்பத்தியத்தில் தினமும் தீபாவளிதான்.....!!

அன்பு செலுத்துவதில் அன்னையாகவும், பரிவு காட்டுவதில் சகோதரியாகவும், ஆலோசனை சொல்வதில் தோழியாகவும், நாலு சுவற்றுக்குள் மனைவியாகவும் நீங்கள் நடந்துக்  கொள்ளும்போது எப்படிப்பட்ட கணவனும் உங்கள் மேல் உயிரையே வைப்பான்....!   இந்த வார்த்தைகள் பழையவைதான், ஆனால் எந்த காலமும் பொருந்தக்  கூடியவை!!

ஒரு சிலரின் வீட்டில் திருமணம் ஆன புதிதில் மனைவி செலுத்தும் அதிக அன்பே கணவரின் மனதில் பின்னாளில் வெறுப்பை ஏற்படுத்தி விடும் ??!! அது எப்படி ?  ஒரு உண்மை சம்பவம்.....

திருமணம் ஆன புதிதில் கணவன், மனைவி இருவரில் அந்த மனைவி தனக்கு தன் பிறந்த வீட்டில் கிடைக்காத அன்பை எல்லாம் சேர்த்து மொத்தமாக கணவன் மேல் செலுத்த தொடங்கினாள்.  அன்பை கொடுக்கவில்லை...... அன்பால் அவனை மூழ்கடித்தாள்...... !! அவன் உலகை மறந்தான்.....! மனைவியின் மெய் அன்பால் திணறித்தான் போனான்!!   

எல்லாம் ஒரு குழந்தை பிறக்கும் வரைதான்..?  அவளது பெரும் பொழுதுகள் அந்த குழந்தையுடன் தான் கழிந்தன. இருந்தும் தன் கணவனுக்கு செய்யும் பணிவிடையில் எந்த குறையும் வைக்க வில்லை.   அவள் எப்போதும் போல் அதே அளவு அன்பைத்தான் அவன் மேல் செலுத்தினாள்.  ஆனால் அவன் மனதிலோ வெறுமை படர்ந்தது.  தனக்கு கிடைக்கவேண்டிய அன்பில் பங்கு போட வந்த ஒரு எதிரியாகத்தான், தன் குழந்தையை பார்க்கத்  தொடங்கினான்.  மனைவி பேச அருகில் வந்தால்,  வெறுப்பை கொட்டியது அவனது நாவு ...! 

                  காரணம் அறியா பேதை அவள்....
                         கெஞ்சினாள்.... 
                  குழைந்தாள்... பரிதவித்தாள்...
                         ஒருநாள் பகல் பொழுதில் மனைவி
                   உணவு வைத்துக்  கொண்டு, 
                         இருந்த நேரம்,  குழந்தை அழுததால் 
                   விரைந்து ஓடினாள் தூக்குவதற்கு,  
                          அதற்கு முன் எழுந்த அக்கணவன் 
                   சிறிதும் யோசிக்காமல் எடுத்து, 
                          வீசி எறிந்தான் குழந்தையை தரையில்...? 
                    மனைவியோ பதறி அதற்கு முன் 
                           தரையில், தான் விழுந்து அக்குழந்தையை 
                    அவள் மடியில் தாங்கினாள்....????!!  

விழுந்த அதிர்ச்சியில் குழந்தை அழவில்லை சிறிது நேரம்...? பின் இவள் சுதாரித்து , தூக்கிக்கொண்டு ஓடினாள் டாக்டரிடம்...?? 

அதற்கு பிறகு தன் கணவனை பயத்துடன் பார்க்க தொடங்கி விட்டாள். ஆனால் அந்த கணவனிடம் எவ்வித மன பிறழ்ச்சியும் இல்லை.  அலுவலகத்திலும் நன்கு பணிபுரிவதால்  அங்கே அவனுக்கு மிகவும் நல்ல பெயர்... !? எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், உறவினர்கள் நண்பர்களிடமும் நல்ல பெயர்தான்....!!  பின் ஏன் இப்படி???

மனைவியின் அதிக அன்பு கூட ஒருத்தரை இப்படி மாற்றுமா??  பதில் தெரியவில்லை. குழந்தைக்கு 8  மாதம் ஆகும் வரை  பொறுத்து பார்த்த, அந்த மனைவி தனது பெற்றோர்களை வரவழைத்து தனது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வீட்டை பார்த்து அவர்களை அங்கே இருக்குமாறு வேண்டிக்  கொண்டு தனது குழந்தையை அவர்களிடம் விட்டுவிட்டாள்.  கணவன் வீட்டில் இருக்கும் வரைக்கும் ஒன்னும் தெரியாததுப்போல் இருந்துக்  கொண்டு அவன் அலுவலகம் சென்றதும் குழந்தையைப்  பார்க்க ஓடிவிடுவாள்.  கணவனிடம், 'ஊரில் இருக்கும் பெற்றோரிடம் குழந்தையை விட்டு விட்டேன், உங்களை மட்டும் கவனித்துக்  கொள்கிறேன் அது போதும் எனக்கு' ,என்று கூறி விட்டாள். 

இப்படியே இரண்டு மாதம் போய்விட்டது. கணவனும் மனைவி தன் மேல் இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறாளே  என்ற பெருமிதத்தில் மனம் நிம்மதி அடைந்து விட்டான். அவனுக்குள்ளும் குழந்தை மேல் பாசம் இல்லாமல் எப்படி இருக்கும் ?  தனக்கு கிடைக்க வேண்டிய அன்பு எங்கேயும் போகவில்லை என்று திருப்தியில் ஒரு நாள் 'குழந்தையை தூக்கி வருவோம்' என்று மனைவியை அழைக்க இவளோ மகிழ்ச்சி தாண்டவமாட, ' நீங்க வேலைக்கு போங்க .  நான் போய் அழைத்து வருகிறேன்' ,என்று அவனை வழியனுப்பி வைத்துவிட்டு குழந்தையையும், பெற்றோர்களையும் அழைத்து வந்து விட்டாள் .

இது ஏதோ கதை இல்லை என் நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த உண்மை சம்பவம் தான். அவள் அனுமதிப்  பெற்றே இதை எழுதுகிறேன்.

பெண் மனது வைத்தால் எந்த பிரச்சனையையும் சரி பண்ண முடியும் என்பதற்காகதான் இதை ஒரு உதாரணமாக சொல்ல வேண்டி வந்தது.

விவாகரத்து கேட்டு கோர்ட்க்கு போக வேண்டிய ஒரு குடும்பம் இன்று சந்தோஷக்  கடலில் திளைக்கிறது !!  

பெண்ணுரிமை , பெண் அடிமைத்தனம்

ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு மேலே குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் அவசியம் இல்லை என்பது என் கருத்து. குடும்பத்தில்  ஆணை விட நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன் என்று ஒவ்வொரு பெண்ணும் கொடி பிடித்தால் அங்கே குடும்பம் நடக்காது.  தினமும் பட்டிமன்றம்  தான் நடக்கும்!!  வெளியில் வேண்டுமானால் உரிமை கேட்டு சண்டை போடட்டும். வீட்டில் அது தேவை இல்லை.  

நாலு சுவற்றுக்குள் தன் கணவனுக்கு கட்டுப்பட்டு  இருப்பதால் யாரும் உங்களை குறைத்து மதிப்பிட போவதில்லை. இதில் அடிமை, அடக்கு முறை என்ற வார்த்தைக்கு வேலை இல்லை. அன்பால் கட்டுண்டு,   வீட்டில் இருப்பவர்கள் தான் வெளியில் ராணியாக உலா வருகிறார்கள்.

 "கொண்டவன் துணை இருந்தால் , கூரை ஏறி கத்தலாம்..!!!"  -நன்றி ஆனந்தி 

தவறான கண்ணோட்டம்

ஒரு பெண் ஒழுக்கத்தில் தவறி விட்டால், உடனே யாரும் இந்த 'பெண்களே இப்படித்தான்' என்று மொத்தமாக தூற்றுவது இல்லை. ஆனால் ஆண்கள் அதே தவறை செய்தால் நம் பார்வையே வேறு விதமாக இருக்கிறது.  இந்த பட்டியலில் தனது கணவனையும் சில பெண்கள் சேர்ப்பதை பார்க்கும் போது தான் ஆண்கள் மேல் பரிதாபம் ஏற்படுகிறது.  என்ன பாவம் செய்தார்கள்? இந்த ஆண்கள்..!   

அவர்களுக்கு எப்பவும் அதே எண்ணம் தான் இருக்குமா?  வேற ஒன்றை பற்றியும் அவர்கள் நினைக்க மாட்டார்களா?  இல்லை அவர்கள் பிறந்ததே அதற்குத்தானா?  இந்த மாதிரியான எண்ணம் என்று மாறுமோ தெரியவில்லை??  


ஒரு 50   வயது அம்மாள் ஒருவரிடம் அவர்களது திருமணம் ஆன மகளை பற்றி விசாரிக்கும் போது , 'இருவரும் எப்படி இருக்கிறார்கள் ? பிரச்சனை ஒன்றும்  இல்லையே ' என்று நான் சாதாரணமாக கேட்க அவர்களோ 'அவளுக்கு என்ன அவனே கதி என்று இருக்கிறாள், ரொம்ப நல்லவனாம், அடிக்கடி சொல்லி மாய்ந்துப்  போகிறாள்.  அந்த பெருமையில் வீட்டிற்கு நான் போனாலும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. எவ்வளவு காலத்திற்கு இவள் பேச்சை கேட்பான்?  எல்லாம் இவளுக்கு இளமை இருக்கும் வரைக்கும் தான்' என்று அவர்கள் அடுக்கிக்  கொண்டே போக நான் வெறுத்து விட்டேன்.  


ஒரு தாயே இப்படி பேசுவார் என்று எதிர் பார்க்கவில்லை என்பதை விட ஆண்களைப்  பற்றி அவர்கள் சொன்ன வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை. வயதான காலத்திலும் பல தம்பதியர் எதை வைத்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்? பரஸ்பர அன்பினால் அல்லவா? புரியாத இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை. 


ஆண்களுக்கும் எல்லை கோடுகள் இருக்கின்றன. அவர்களும் ஒரு தாயின் வயிற்றில் உருவானவர்கள் தான், சகோதரிகளுடன் பிறந்தவர்கள் தான்.  ஒரு சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே பார்வையில் பார்ப்பது முட்டாள்தனம் என்பது தான் என் கருத்து.


தாம்பத்தியம் தொடர் பதிவின் அடுத்த தலைப்பு இனி, தொடரும்....!! இயன்றால் நாளையே!!