இதுக்கு முந்தைய பாகத்தின் தொடர்ச்சி இந்த பதிவு...
வெடி சத்தம் பயங்கரமா கேட்டதும்,மறுபடியும் ஒரு சந்தோசம்...?! யார் வக்கிராங்கனு பார்த்திட்டு முழுசா சந்தோஷ பாடலாம்னு காரில் இருந்து எட்டி பார்த்தேன். அட வெடி பத்த வைக்கிறது எல்லாம் என் பெரியம்மா பசங்க...! அவங்க ஊர் சிவகாசி என்பதை அட்டகாசமாய், சத்தமா நிரூபிச்சிடாங்க...!
ஊர்வலம் ஒரு வழியா என்னவரின் வீட்டுக்கு (ம்...இனி என் வீடு !) வந்து சேர்த்தது...அங்கே வைத்து தான் வரவேற்ப்பு. ஆரத்தி எடுக்க மக்கள்ஸ் வெய்டிங்...சினிமால மாதிரி தட்டுல எடுக்கல, ஒரு பாத்திரத்தை வச்சு எடுத்தாங்க...மூணு பேரு மாத்தி மாத்தி தனி தனியா எடுத்தாங்க...(ரொம்ப திருஷ்டி பட்டுடுச்சு போல...?!)
இப்ப கரெக்டா ஒரு பாட்டு பாடணுமே...உங்கள் யூகம் சரிதான் 'மணமகளே மருமகளே வா வா' பாட்டுதான். இன்னும் எத்தனை காலம் தான் இதே பாட்டு போடுவாங்களோ தெரியலை (இதுக்கு புதுசா ரீமிக்ஸ் யாரும் இன்னும் ரெடி பண்ணலையா...?) ஆரத்தி எடுத்து வீட்டினுள் மெதுவா வலது காலை எடுத்து வச்சு போனோம்.
எங்க மாமியார், மாமனாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் ஒரு போட்டி ஒண்ணு இருக்குனு சொல்லி எங்க இரண்டு பேருக்கும் நடுவில ஒரு குடத்தை வச்சாங்க. குடத்தில இருக்கும் தண்ணிக்குள்ள ஒரு மோதிரத்தை போட்டு இரண்டு பேரையும் ஒண்ணா ரெடி ஸ்டார்ட் சொல்லி மோதிரத்தை எடுக்க சொன்னாங்க. அடடா போட்டியான்னு ஒரு குஷில வேகமா தண்ணிக்குள்ள கையை விட்டேன், ஒரு ஐந்து செகண்ட்ல மோதிரம் மாட்டிகிச்சு, சந்தோசமா எடுத்து அருகில் இருந்த அக்காவிடம் கொடுத்தேன். உடனே பக்கத்தில் இருந்த மாமியார் 'நீ எடுக்ககூடாதுமா, வீட்டுகாரனுக்காக நீ விட்டு கொடுத்திடணும்' அப்படின்னு சிரிச்சிட்டே அட்வைஸ் பண்ணினாங்க...?! (அப்ப எதுக்குங்க போட்டின்னு சொல்லணும், அதுக்கு பதிலா இவரை போட்டியின்றி தேர்ந்து எடுக்க பட்டதா அறிவிச்சு இருக்கலாமே...?!)
எனக்கு ஒரே எரிச்சல் சரி இவர் என்னடா பண்றார்னு நிமிர்ந்து பார்த்தேன், அவங்க அம்மா மாதிரியே அழகா சிரிச்சிட்டு 'இந்தா மோதிரம்'னு நீட்டுறார்...இது என்னனு வாங்கி பார்த்தா, அட இது நான் கைல போட்டு இருந்த மோதிரம்...?! அது எப்படி இவர் கிட்ட போச்சு...குடத்துக்குள்ள இருந்த மோதிரம் மேலேயே என் கவனம் இருக்கிறப்ப இவர் என் கைல இருந்து கழட்டி இருக்கிறார். (அட ச்சே இது கூட தெரியாம...?!) பல்பு தொடருதோ...?!!!
மறுபடி உப்பு நிரம்பிய பாத்திரத்தில் இதே போல் மோதிரம் போட்டு எடுக்க சொன்னார்கள்...இநத முறை எதுக்குடா வம்பு என்று தேமே என்று கையை மட்டும் வச்சிட்டு எடுத்திட்டேன். (ரொம்ப விட்டு கொடுக்க வேண்டி இருக்குமோ என்று இநத நொடியில் தான் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது...)ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு குரல் ரொம்ப அசடா இருந்தது போதும், அலர்ட்டா இருன்னு சொல்லிட்டே இருந்தது.
அப்புறம் சில கலாட்டாக்கள் நடந்து எங்களை ஸ்டேஜில் அமர வைத்தனர். ஒவ்வொருத்தரா வந்து வாழ்த்திட்டு கிப்ட் கொடுத்திட்டு போயிட்டே இருந்தாங்க...நிறைய பேர் வந்திட்டே இருந்தாங்க...கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் செட் செட்டா வந்து சின்ன சின்ன கலாட்டா பண்ணி கிப்ட் கொடுத்திட்டு சென்றார்கள் ஆனா என் நிலைமை கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது... எனக்கு தெரிஞ்ச ஆள்கள் ஒருத்தர் கூட பக்கத்தில இல்லை (சாப்பிட போய்டாங்களா...?? இல்லை வேலை முடிஞ்சதுன்னு ஊருக்கே போயிட்டாங்களான்னு வேற தெரியலை...?!!!)
நானும் பேந்த பேந்த முழிச்சிட்டு என்னவர் அறிமுக படுத்தி வச்சவங்களுக்கு எல்லாம் ஒரு வணக்கம் சொல்லிட்டு ஒரு இயந்திரம் மாதிரி அவர் இன்ட்ரோ கொடுத்தவுடன்(சுவிட்ச் போட்டவுடன்...!) கை தன்னால ஒண்ணு சேர்ந்துடும்...!
அப்புறம் நாங்களும் சாப்பிட போனோம்...அங்கே எல்லோர் கல்யாணத்திலும் போல நடக்குற கலாட்டா செவ்வனே நடந்தேறியது...நான் மட்டும் இந்த உம்மணாமூஞ்சி கெட்டப்பை அப்படியே மெயின்டெயின் பண்ணினேன். என்னவோ சிரிக்கவே தோணல...அது பதட்டமா, சோர்வா, அச்சமா சொல்ல தெரியல.
மறு வீடு போன்ற பிற சடங்குகள் எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு தனி அறை ஒன்றுக்கு வந்து சேர்ந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுகென்று விழித்தேன் இருந்த களைப்பில் அப்படியே தூங்கிட்டேன் போல...நேரம் பார்த்தேன் மணி 12 அவர் வருவதை பார்த்து எழுந்து நின்றேன், அவர் வந்ததும், 'தூங்கியாச்சா, சரி கொலுசை கழட்டு' என்றார் (தூங்கிரப்ப கொலுசு போடகூடாதானு நினைச்சிட்டே வேகமா கழட்டி வச்சேன்) 'சரி பேசாம (எனக்கு பேச தெரியும்கிறத மறந்து இரண்டு நாள் ஆச்சே என்னை போய் பேசாதே என்கிறாரே...ம்...!!?) என் கூட வா'னு சொல்லிட்டு நடக்க தொடங்கிட்டார். வரிசையா உறவினர்கள் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க, சத்த கேட்டு அவங்க எழுந்துவிடாம மெதுவா (கொலுசை இதுக்குதான் கழட்ட சொன்னாரா...ம்...!) மேல கால் படாம மெதுவா ஒவ்வொருத்தரா தாண்டி போயிட்டே இருந்தோம். அப்புறம் ஒரு கதவை திறந்து வெளியே வந்தோம், தோட்டம் போல இருந்தது. (காற்றில் மல்லிகை மணம் வந்ததே...!)
ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம். அவர் பேச தொடங்கினார், 'நகரத்தில் வளந்தவ, இந்த கிராமத்து சூழ்நிலை பழகிக்க சிரமமா இருக்கும் போக போக சரியாகிவிடும். ஞானஸ்தானம் எடுக்கும் போது உன் கண்ணீர் பார்த்தேன், மனதில் இந்து கடவுளை நினைச்சிட்டு வேற மதம் மாறும் போது இருக்கும் வருத்தத்தை என்னால் உணர முடிகிறது. அதே போல் உன் நெற்றி பொட்டை என் அண்ணி எடுக்கும் போது உன் முகம் மாறுவதையும் கவனித்தேன்,திருமணம் இந்த முறையில் நடக்கவேண்டும் என்பது என் பெற்றோரின் விருப்பம் அதை மீற முடியாது . அதே நேரம் இனி 'உனது எனது விருப்பம்' தான் நம் சந்தோசத்தை தீர்மானிக்கும். பெரியவர்களின் மனம் வருத்தபடாமல் நாம் இருவரும் நடந்து கொள்வது நம் கடமை அவ்வளவே.
உன் விருப்பத்திற்கு நடக்க உன்னை யாரும் இங்கே தடை சொல்ல மாட்டாங்க...எல்லோரும் ரொம்ப அன்பானவர்கள்...யாருக்காகவும் உன் சுயத்தை நீ இழக்க கூடாது...பொட்டு வச்சுக்கோ அது உன் முகத்திற்கு முழுமை கொடுக்கிறது...அப்புறம் இருக்கமா இருக்காத, உன் வீடு மாதிரி நினைச்சுக்க...இந்த வீடு, இந்த உறவுகள் அப்புறம் நான் எல்லாம் சகஜம் ஆகட்டும். நம் கல்யாணம் அவசரமா முடிந்து இருக்கலாம், ஆனால் இன்றே வாழ்ந்து விடணும் என்பதற்கு எந்த அவசரமும் இல்லை, இந்த ஊரில் இருக்கிற கோமதி அம்மன் கோவில் ரொம்ப பிரபலம், கல்யாண சந்தடி எல்லாம் ஓயிந்தபின் முதலில் அந்த கோவிலுக்கு போவோம், ஆசைதீர சாமி கும்பிடு...வேண்டுதல் எதுவும் இருந்தா நிறைவேற்றிகோ...சந்தோசமா இயல்பா ஆனபின்னாடி நம் வாழ்கையை தொடங்குவோம் சரியா...??!" என்றார்.
நான் அப்படியே மெய் மறந்து அவர் பேசுவதை கேட்டுட்டே இருந்தேன்...கடவுள் என்னை மட்டும் ரொம்ப ஸ்பெசலா ஆசிர்வதிச்ச மாதிரி இருந்தது. (என்னவோ நான் இந்திய மண்ணையே மிதிக்காத மாதிரியும், அப்பதான் பிளைனில் இருந்து இருந்து இறங்கியது மாதிரியும் ஓவரா சீன் போட்ட என்னை என்ன பண்ணலாம்...?!!!)சற்று முன்வரை எனக்கிருந்த மாறுபாடான எண்ணம் முழுவதையும் அப்படியே நொறுக்கி போட்டுட்டார்.
தவறான எண்ணங்களே பெரிய தவறுதான் என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.
மனதினுள் மெல்ல கவிதை ஒன்று வளர தொடங்கியது...கவிதை மட்டுமா...?!!
பின் குறிப்பு
இதுவரை என் நினைவலைகளை பொறுமையாக படித்த(முழுசா படிசீங்களா...?!) உங்கள் அனைவரையும் மீண்டும் புது வருடத்தில் புது உற்சாகத்துடன், நல்ல பதிவுகளுடன் சந்திக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் என் அன்பான 'புத்தாண்டு வாழ்த்துக்கள்' !!
பிரியங்களுடன் கௌசல்யா