செவ்வாய், ஏப்ரல் 30

சாதியை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்...?!!


சாதிப்பெயர் வச்சாத்தான் என்ன தவறு ?
சாதி மறுப்பவர்களும் சாதி கொடிப்  பிடிப்பவர்களும் அவர்கள் கருத்தில் நிலையாக நிற்கிறார்கள் , ஆனால் அடிப்படையில் இருவருக்கும் அதிக வேறுபாடில்லை. தான் பிறரை விட மேம்பட்டவன், வித்தியாசமானவன்,  எப்படியாவது தான் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற முயற்சி மட்டும் தான் அங்கே தெரிகிறது.  

முகநூலில் சில  நாட்களுக்கு முன் ஒரு புகைப்படம் ஷேர் செய்திருந்தார்கள்.  அந்த புகைப்படம் 'கீதாவீரமணி பிராமணாள் ஹோட்டல்' என்று எழுதிய பெயர் பலகை...! இதை பார்த்த பலரும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை(படு மோசமாக) கூறியிருந்தனர். (இது சாதி பெயரா வர்ணம் சம்பந்தப்பட்டதா என்பது இல்லை எங்கே பிரச்சனை) இது சாதிய அடையாளத்தைக்  குறிக்கிறது இது மிக தவறு என்பதாகத்தான் அங்கே விவாதம் நடந்தது. இந்த ஹோட்டல் இருக்கும் அதே ஊரில் தான் சிவகாசி நாடார் மெஸ், சைவ பிள்ளைவாள் மெஸ், செட்டியார் மெஸ் போன்றவையும் இருக்கின்றன.  ஒருவரின் பெயருக்குப்  பின்னாடி சாதி பெயர் போடக்கூடாது, பெயர் பலகையில் சாதி பெயர் இருக்கக்கூடாதுனு கூச்சல் கேட்கும் போது எனக்கு ரொம்ப அன்னியமா தோணுது !!?

என் கேள்வி ஒன்றுதான் 

பெயர் பலகையிலும், தனது பெயரின் பின்னாலும் சாதிப்பெயர் வச்சாத்தான் என்ன தவறு ?

இதை எடுக்கச்  சொல்லி வற்புறுத்துவதோ, மோசமானக்  கருத்துக்களை மாறி மாறி முன்வைப்பதாலோப்  பெரிதாக என்ன நடந்துவிட போகிறது?!! நம் சமூகத்தில் சாதிய எண்ணங்கள் ஆழ வேரூன்றிப்   புண்பட்டுப்  புரையோடிக் கிடக்கிறது. அதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்...?! இணையத்தில் ஒருத்தர் முகம், மற்றொருவர் அறியாத நிலையில் சாதி பெயரை வைத்தது தவறு என கிண்டலும் கேலியுமாகக்  கூச்சலிடுவது சம்பந்தப்பட்ட பிரிவினரின் மனதில் காயத்தை ஏற்படுத்தும். இங்கே இப்படி கூச்சலிடுபவர்களால் தெருவில் இறங்கி இதை தைரியமாக சொல்ல இயலுமா...? நிச்சயமாக முடியவே முடியாது !! 

சாதிக் கலவரம்

சமீபத்தில்  நடந்த கலவரத்தைக்  குறித்து சமூகத் தளங்களில் பலரும் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் உண்மையாக சாதியை வெறுப்பார்கள். சாதி மறுப்பு கவிதைகளும் பதிவுகளும் காரசாரமாக எழுதலாம், நிஜ வாழ்வில் சாதியை மறுத்து இருக்க இயலுமா? இருப்பார்களா ? நிச்சயம் முடியாது. அப்புறம் எதற்கு இந்த வீண் ஆர்ப்பாட்டம் ?!

இரு சக்கர வாகனம் ஒன்றில் இருந்த பெயர் சாதியை குறிக்கிறது என்று வெகுண்டு எழுந்த  உணர்வாளர்கள் உடனே தங்கள் எதிர்ப்பை பலவாறு தெரிவித்து அப்பெயரை மாற்ற வைத்துவிட்டார்கள். நல்ல விஷயம் தான். அதே சமயம் இந்த போராட்ட வேகத்தை மற்றதில் காட்டுவார்களா ? உதாரணமாக " பள்ளியில் சாதிப்  பெயரை குறிப்பிட மாட்டோம் "  இதை போராடி மாற்றினால் உண்மையில் பாராட்டுக்கு உரியவர்கள். அதை விட்டுவிட்டு  உயிரில்லாத பெயர் பலகையிலும், வண்டியில்  போட்டதை எடுங்க என்று போராடுவதில் என்ன இருக்கிறது. இதை பற்றி முகநூலில் ஒருவரின் கம்மென்ட் "

"நரேஷ் அய்யர் எனும் திரையிசைப் பாடகர் தமிழ் பாடல்கள் பாடி வருகிறார்
அவரையும் பாடக்கூடாதென கையெழுத்து வேட்டை தொடங்கலாமா ?"

கேலிக் கூத்தாகி போனது தமிழனின் இன்றைய நிலை !!

சாதியைப்  பற்றி காரசாரமாக விவாதிப்பவர்களே ! இவர்களை பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன்...!! அப்படியாவது விடியுமா இவர்களது கிழக்கு...??!

பல கிராமங்களில் இரட்டை குவளை முறை இன்றும் தொடருகிறது ...! கையால் கழிவறைக்  கழிவுகளை அள்ளுகிற மனிதர்களும் உண்டு இங்கே...! எங்கே, சிறிது  அவர்களைப்  பற்றியும்  பேசுங்கள். அந்நிலை மாறவேண்டும் என கூச்சலிடுங்கள், போராடுங்கள். மனிதர்களிடையே ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டுச்  சிதைக்கப்படுகிறார்களே அவர்களைப்  பற்றியும் நினையுங்கள். அதை விடுத்து சாதியை வெறுப்பதை போன்ற முகமூடி அணிந்து  'இந்த நூற்றாண்டில் இது என்ன கேவலம்' என கூச்சலிடும் வெட்டி பேச்சு வீணர்களாக மட்டும்  இருக்காதீர்கள்...?? 

நீ என்ன செய்தாய்?

சாதி வேண்டாம் என்பவர்கள் தங்கள் குழந்தைகளை சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்தார்களா? பள்ளி, அரசு வேலையில் சலுகை ஏதும் வேண்டாம் என கூறி இருக்கிறார்களா? அங்கெல்லாம்  சாதி தேவைப்படுகிறதே !  சாதிவாரி கணக்கெடுப்பு அரசு செய்கிறது. கேட்டால் அப்போதுதான் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு வசதியாக இருக்குமாம். அரசாங்கம் மனிதனை இந்த சாதி அந்த சாதி என தனித்துப்  பார்க்க ஒரு காரணம் சொல்லும் போது, சாதியை முன்னிலைப் படுத்துபவர்களுக்கும்  ஏதோ ஒரு காரணம் இருக்கும், இருந்துவிட்டு போகட்டுமே ? அதில் உங்களுக்கு ஏன் வருத்தம் ?!

கலப்புமணம்

கலப்பு மணம் புரிந்தால் சாதி மறைந்துவிடும் என்கிறார்கள். கலப்பு மணம் புரிந்தால் சலுகைகள் , வேலை வாய்ப்புகள் என அரசு கொடுக்கிறது. ஆனால் இந்த சலுகைக்காக கலப்பு மணம்  பயன்பட்டது அன்றி வேறு நல்லவை ஒன்றும் நடக்கவில்லை. இதனால் சாதி மறைந்ததா ?! நிச்சயமாக மறைய வாய்ப்பே இல்லை. கலப்பு மணம் புரிந்த தம்பதிகளில் கணவன் எந்த சாதியோ அது அவர்கள் குழந்தைகளின் சாதியானது. இந்த விதத்திலும் ஏதோ ஒரு சாதி தொடரத்தானே செய்கிறது. கலப்பு மணத்தில் பெண் சாதி மறைந்து ஆண் சாதி தொடர்கிறது. மற்றபடி சாதியே மறைந்தது என்று சொல்ல இயலாது. சொல்லப்போனால் இரு வேறு  சாதி மணம் முடித்திருந்தால் குடும்பத்தில் வேறு ஏதோ பிரச்சனை என்றாலும், "உன்ன போய்  கட்டினேன் பாரு, உன் சாதி புத்தித்  தானே உனக்கும்"    என்று மாறி மாறி சாதி குறித்த சண்டையாக அது மாறிவிடுகிறது.

நடைமுறையில்...

காலங்காலமாக ஊறிப்போன ஒரு உணர்வு(?) இது. புதிதாய் ஒருவர் அறிமுகமானதும் இவர் எந்த சாதிகாரராக இருக்கும், ஒருவேளை நம்மாளா இருக்குமோ என எண்ணத் தொடங்கிவிடுகிறது மனித மனம். வீட்டு வாடகைக்கு ஆள் வைப்பது என்றாலும் எந்த சாதி என்று முதலில் கேட்டுவிட்டுதான் பிறவற்றைப்  பேசுவார்கள். ஒருசில படித்தவர்கள் நேரடியாக கேட்காமல் சொந்த  ஊரு எது , எந்த தெரு என்று சுத்தி வளைச்சு கேட்டு 'இந்த துறையில் வேலை பாக்குறவர் உங்க சொந்தகாரரா' என்பதில் வந்து முடிந்துவிடும். அந்த சோகால்ட்  சொந்தகாரரை வைத்து 'இவர் இன்னார்' என்று முடிவுக்கு வருவார்கள்.

கடவுளைத்  தேடவும் சாதி 

இந்த தலைப்பில் சொல்லனும்னா நிறைய சொல்லலாம். ஆனா அது வேறு ஒரு வம்பில் கொண்டு போய் விட்டு விடும்...!!? எனக்கு கொஞ்சமாகத்  தெரிந்த  ஒரு விஷயம் பற்றி மட்டும் சொல்றேன்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடி தபசு என்று பெரிய திருவிழா ஒன்று உண்டு. கொண்டாடப்படும் 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதிக்கு என்று ஒவ்வொரு நாளையும் ஒதுக்கிவிடுவார்கள். அந்த நாளில் சம்பந்தப்பட்ட சமூதாயத்தினர் மட்டும் ஒன்று சேர்ந்து ஸ்பெஷல் பூசை, தேரோட்டம் இருக்கும். சாதிப்  பெயரை கொட்டை எழுத்தில் போஸ்டரில் எழுதி போட்டு இருப்பாங்க...அந்த போஸ்டரின் முன்பு வைத்து பாட்டு கச்சேரி, மேடை பேச்சு அப்டி இப்படி என்று எல்லா கொண்டாட்டங்களும் நடக்கும். ஒருத்தர் கண்ணுக்கும் இது பெரிதாகத்  தெரிவது இல்லை. வெளியே பேசிக்கொள்ளும் போதும் இன்னைக்கு எங்காளுக 'மண்டகபடி' என்று சொல்வதில் இருக்கும் பெருமை, சந்தோசம் வேறு எதிலும்(!) இருக்காது.

இந்த மண்டகப்படி அன்று சில மண்டையுடை(?) சம்பவங்களும் ஏதோ இரு சாதிக்கு நடுவில்  நடக்கும். போன வருடம் இந்த சாதியில் ஒருத்தர் தலை போனா இந்த வருடம் எதிர் பார்ட்டில ஒருத்தர் தலைப்  போகும்.(எங்கும் கொலை பார்த்து கேட்டு இப்டி சாதாரணமா சொல்ற அளவுக்கு நிலைமை ஆகிபோச்சு ?!!) காவல்துறைக்கு ஆடி தபசு முடியும்வரை தூக்கம் இருக்காது...யாருக்கு என்ன நடக்கபோகிறதோ என்று...!! இப்படி இருந்தாலும் வருடந்தோறும் நடக்கத்தான் செய்கிறது...சாதியை முன்னிறுத்தி கடவுளை வணங்குவதும் தொடரத்தான் செய்கிறது...!!

பள்ளிகளில் சாதி

கல்வி ஒன்றால் தான் இது போன்றவற்றை களைய முடியும் என்பது எல்லாம் பொய். தென் மாவட்டத்தில் ஒரு பிரபல பள்ளியின் பெயரே ஒரு சாதியின் பேரை கொண்டு தான் இருக்கிறது...(அதுபோன்ற பள்ளிகள் நிறைய இருக்கிறது) இன்று வரை அதன் பெயரை மாற்றவேண்டும் என்று ஏன் ஒருவருக்கும் தோணவில்லை...வேறு ஒன்றுமில்லை, நமக்கு பழகி போய்விட்டது...! இப்படி இருக்கும் போது சாதிப்  பெயரை எழுதாதே என்பது அபத்தம். கல்வி பயிலப்  போகும் இடத்தில் 'சாதி என்ன' என்ற கட்டத்தை பூர்த்தி செய்தால் தான் கல்வியே கிடைக்கும். இந்த நிலை மாறினால் தான் சாதியை ஒழிப்பதை(?) பற்றி சற்று யோசிக்கவாவது முடியும்.

பொருளாதார முன்னேற்றம் சாதியை ஒழித்துவிடும் என்றாலும் நம் நாட்டில் அத்தகைய நிலை வரும் நாள் எந்நாளோ ?!

இரு சொ(நொ)ந்தஅனுபவம்

* எனது இரண்டாவது மகன்(9 வயது)ஒருநாள் மாலையில் பள்ளிவிட்டு  வந்ததும் 'நான் என்ன காஸ்ட்'என்றான்...நான் ஜெர்க்காகி 'என்னடா இது புதுசா?',

'மிஸ் கேட்டாங்கமா ' என்றான்.

மறுநாள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியையிடம், "ஏங்க சின்ன பையன் கிட்ட எதைக்  கேட்கிறதுன்னு இல்லையா?? அவன் என்ன சாதின்னு ஆபீஸ் பைல்ல இருக்குமே எடுத்துப்  பார்த்துக்க வேண்டியது தானே ?"

அதுக்கு அவங்க " இல்லைங்க பையனும் தெரிஞ்சி வச்சுகிட்டா நல்லதுதானே" என்றதும் எனக்கு BP எகிறி " எதுங்க நல்லது? சாதி தெரிஞ்சிக்கிறதா, பசங்களுக்குள்ள இப்பவே நான் இந்த சாதி, அவன் அந்த சாதினு பேசிக்கிறது நல்லதாங்க...?! பாடத்தை மட்டும் சொல்லிக்  கொடுங்க அது போதும்"னு சொல்லிட்டு, அப்படியே பள்ளி தாளாலரிடம் ஒரு புகாரை(?) அளித்துவிட்டு வந்தேன். ஒரு ஆசிரியை சாதிப்பற்றி பேசுவதும், அதை மாணவர்கள் அவசியம் தெரிஞ்சிக்கணும் என்ற அளவில் தான் நம் சமூக அமைப்பு இருக்கிறது.

* எங்க மேட்ச் பாக்டரிக்கு(தீப்பெட்டி தயாரிப்பது)  பக்கத்து கிராமங்களில் இருந்து  தொழிலாளர்கள் வருவாங்க, வயதானப்  பெரியவர்களை சின்ன பொண்ணுங்க 'ஏய் இங்க வா, போ' னு கூப்பிடுவாங்க. சொந்தகாரங்கப்  போலனு ஆரம்பத்துல இருந்தேன். போகப்  போகத்தான் இது சாதி குறித்தான ஒருவிதமான மரியாதை என்று புரிந்தது.  (யார் எந்த சாதின்னு நீங்களே புரிஞ்சிக்கோங்க) ஒரு நாள் மொத்தமாக  எல்லோரையும் கூப்ட்டு 'இங்க பாருங்க உங்க ஊர்ல எப்படி வேணும்னா கூப்ட்டு பேசுங்க, ஆனா இங்க எல்லோரும் ஒண்ணுதான், வயசுக்கு மரியாதைக்  கொடுத்து பேசணும்'னு கொஞ்சம் அதட்டிச்  சொன்னேன்.(இதை ஏன் பெரிசுப்படுத்துறனு என் மாமி டோஸ் விட்டது தனிக் கதை)

அதன்  பிறகு பாக்டரி உள்ளே இருக்கும் போது 'வாங்க போங்க' சாயங்காலம்  கம்பெனி வண்டியில்  ஏறியதும்  'வா போ'னு மாறிடும். அவ்வாறு அழைத்துப்  பேசுவதில் அவ்வளவு சந்தோசம்,நிறைவு. இதை என்னவென்றுச்  சொல்ல ? யார் இதை மாற்ற ? மாறவே மாறாது என்பதே வேதனையான நிதர்சனம் !! 

என்னத்த சொல்ல...

சாதிக்  குறித்த அடிப்படையே இங்கேத்  தவறாக இருக்கிறது . சாதி வேண்டாம் என்று சொல்றவங்களுக்கு ஒரு காரணம் இருப்பது போல வேண்டும் என்று சொல்றவங்களுக்கும் ஒரு காரணம் இருக்கு...

'சாதி வேண்டும்' என்று சொல்பவர்களைக்  கூட உண்மையைச்  சொல்றாங்க என எடுத்துக்கலாம். ஆனால் சாதி வேண்டாம் என்பவர்களைப்  பற்றி ரொம்பவே யோசிக்கவேண்டும். ஏன்னா 'வேண்டாம்' என்று சொல்வதற்கு முன் தன்னை சுய மதிப்பீடு செய்யணும்... தன் குழந்தைக்கு பள்ளியில் சாதி குறிப்பிடவில்லை, அதே இனத்தில் திருமணம் முடிக்கவில்லை, சாதியை முன்னிறுத்தி சலுகை எதுவும் பெறவில்லை. இதற்கு எல்லாம் 'இல்லை' என்று சொன்னால் 'சாதி வேண்டாம்' என்று சொல்வதிலும் உண்மை இருக்கிறது எனலாம்.

அரசியல்வாதிகள்

சாதிகளை நிலைப்படுத்தி மக்களை பிரிக்கும் வழிகளை அரசியல்வாதிகள் நன்குத்  தெரிந்து வைத்திருக்கின்றனர். சாதிக்  குறித்த முடிவான கொள்கையை வெளிப்படையாக யாராலும் கூறமுடியாது. குழப்பநிலையையே விரும்புகின்றனர். பிறந்ததிலிருந்து இறக்கின்ற வரை சாதி தேவைப்படுகின்றது. அடக்கம் செய்ய தனிப்பட்ட சுடுகாடுகள் ! சாதி அடிப்படையில் தேர்தல்! அந்தந்த சாதியைச்   சேர்ந்தவர்களே அந்தந்த இடங்களின்  வேட்பாளர்கள்...! 

மேடையில், சாதியத்துக்கு எதிராக  வலுவாகப்  பேசிய ஒருவர்  தன் பேச்சை நிறைவு செய்யும் போது எப்படிச் சொல்லி முடிக்கிறார் என்றுதான் பாருங்களேன்...!!

"நான் உங்கள் வேட்பாளர்
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால்
சாதிகளை ஒழிப்பேன்
வீதிகளில் உள்ள
சாதிகளின் பெயர்களை அழிப்பேன்
சாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தை
அகராதியில் இருந்து கிழிப்பேன்
நீ அந்த சாதி
நான் இந்த சாதி
என்று
பேசுவோரால் தான் தேசம் கெட்டுவிட்டது!
எனவே
சாதியில்லாத
சமூகத்தை அமைக்க
எனக்கே ஓட்டுப் போடுங்கள்..."

என கூறியவர் பேச்சை முடிக்கும் போது

"நினைவிருக்கட்டும்
நான் உங்கள் சாதிக்காரன்...!!?"                              


* * * * * * * * *

பின் குறிப்பு

சாதியைக்  குறித்து சமூக வலை தளங்களில் நடக்கும் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. மாறாக ஒருத்தரை ஒருத்தர் சாடி எழுத்துப் போர் புரிகிறார்கள். படித்தவர்களிடையே ஒரு தெளிவு இல்லை என்ற போது புண்பட்டுப்  புரையோடிக்  கிடக்கும் சமூகத்தில் நல்ல மாற்றத்தைக்  கொண்டு வருவது யார் ? தயவுசெய்து இதை நாம் உணர்ந்து  கவனமாக வார்த்தைகளைக்  கையாளவேண்டும். மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை, மாற்றலாம் அதே நேரம் மனித நேயம் மிக முக்கியம். மனிதத்தைத்  தொலைத்து இங்கே எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.  

* * * * *
படம் : நன்றி கூகுள்
கவிதை :நன்றி (யாரோ ஒரு யதார்த்த கவிஞர்)


பிரியங்களுடன் 

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  


செவ்வாய், ஏப்ரல் 16

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து!!?

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக  வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !

படத்தில் இருக்கும் இந்த சிறுவனின் நிலையில் தான் பெரும்பாலான  குழந்தைகள் இருக்கிறார்கள் !

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும்..... இவ்வளவும்  சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும்  முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும் !!!??

என்ன கொடுமைங்க இது.  தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி,  ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை  குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்ல...?? 


போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின்  வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமே என்கிறார்கள். அதற்காக குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள்.   அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்காதீர்கள். அதன் விளைவை வெகு சீக்கிரம் நீங்கள் அனுபவிக்க நேரும் மிக கொடுமையாக...! வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து ! என் குழந்தை எப்படி பேசுறா என்பது எல்லா நேரமும் சாதாரணமாக சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.  

குழந்தை  குழந்தையாகவே...

தன்  போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பாருங்கள்...அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும் ! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள் !! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  . குழந்தை செய்வதை எல்லாம் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

மீடியாக்கள்  வேறு தன் பங்கிற்கு இந்த காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது

சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு 6 வயது குழந்தை ஆடிய ஆட்டம் எல்லோரையும் ஆரவார கூச்சலிட வைத்தது. முகநூலில் இந்த குழந்தையின் நடனத்தை ரசித்து பல ஆயிரம் ஷேர்ஸ், பலவித கமெண்ட்டுகள், அதிலும் ஒருவர் 'நீ நல்லா வருவே' என வாழ்த்த(?) எதில் நல்லா வர, குத்து பாட்டு நடிகையாகவா ? என்ன சொல்ல தெரியல. இந்த 'நல்லா வருவ' க்கு என்ன அர்த்தம்னும் புரியல.

பார்க்கும்  கண்ணை பொறுத்தது என்று எப்படி இதை ரசிப்பது. இன்றைய திரைப்படங்கள் நன்றாகவே நம் கண்ணையும் கருத்தையும் கெடுத்து வைத்திருக்கிறது. முகநூலில்  கருத்து சொன்னவர்களும் சிறு குழந்தை என்று எண்ணாமல் 'எப்படி இடுப்பை வளைக்குறா', கிறங்கடிக்குது கண்ணு, என்னமா கண் அடிக்கிறா என ஒவ்வொன்றாக வர்ணிக்கும் போது குழந்தையின் தாயால் அதை பாராட்டாக எண்ணி மகிழமுடிகிறது என்பது எனக்கு  ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சி ! 
போனமாதம்  ஒரு விழாவிற்கு சென்றிருந்த இடத்தில் , 4 வயதிருக்கும் ஒரு பெண்குழந்தையை பார்த்து எனக்கு அருகில் இருந்த ஒரு  தோழி ,'செம கிளாமர் ' என கமென்ட் அடித்து சிரித்தார். காரணம் இது தான்,  இடுப்பு தெரியும்விதத்தில் அக்குழந்தை அணிந்திருந்த மாடர்ன் உடை. சிறு குழந்தையின் ஆடை அழகை ரசிக்கும் லட்சணம் இப்படி இருக்கு! அதுவும் ஒரு பெண்ணே ப்படினா... ஆண்கள் ?!!

சினிமா,  தொலைகாட்சி போன்றவற்றை  பார்த்து அதில் வருபவர்களை போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காத போது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை...இறுதியில் அடி !!?   

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால்  கைத்தட்டு வாங்குவது தான் முக்கியம் என்பது  குழந்தையின் மனதில் ஆழமாக  பதிந்துவிடுகிறது...கிடைக்கும் கைத்தட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்டனும் என்பதை நோக்கித் தான் அதன் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு அடுத்தவங்க புகழ, நல்ல(!) பெயர் எடுக்க என்று முயலுகிறது. இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறது...சமயத்தில் தற்கொலை ! 

தேவையற்ற அதிக மன அழுத்தம்


நண்பர்  ஒருத்தர் சொன்னார், 'என் குழந்தை இப்பவே ஓஷோ புக்  படிக்கிறாள்' என்று... நம்மில் பலருக்கு புரிய கடினமான விஷயத்தை குழந்தையை  படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் என்னனு புரியல...?! ஒன்பது  வயது குழந்தைக்கு வேண்டிய புத்திமதிகளை பெற்றோர்கள் நீங்கள் சொல்லி வழிகாட்ட முடியாதா? யாரோ ஒருவர்  அன்று அவர் வாழ்ந்த சூழல், பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று இன்றைய குழந்தைகளுக்கு எப்படி புரியும், எப்படி இன்றைய சூழலுக்கு சரியாக வரும்.  பெற்றோர்கள் நீங்கள் அதை படித்து அதில் குழந்தையின் வயதிற்கு  தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்'  என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள் ! 

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை  சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர்,அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் உங்களிடத்தில்  கண்டுக்கொள்ளட்டும்... கண்டு கற்றுக்கொள்ளட்டும்... உணரட்டும்...உங்களை மதிக்கட்டும் ! நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தை என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே , இவர்களை போன்றவர்களே என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிருங்கள் அது போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களிடத்தில் காணமுடியாத  நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்' என்ற கேள்வி எழும் ! உங்களிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது உங்கள் மீதான மதிப்பின் சதவீதம் பற்றியும்  சற்று சிந்தியுங்கள் !!  அரிச்சந்திரன் கதையை கேட்டு பின்பற்றி நடந்தது என்பது அந்த காலம் ...இப்போதைய உலகம் வேறு...! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள் ! 
  
எங்கையோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது    என்பதற்காக உங்கள் குழந்தையையும் படுத்தி எடுக்காதீர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது எது என்று கண்டு அந்த வழியில் நடக்க விடுங்கள், வழிகாட்டுங்கள், வழிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! மாறாக உங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்க பார்க்காதீர்கள், ஒடிந்துவிடுவார்கள் ! 

பொருளாதாரத்தில்  உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளருங்கள். அப்போதுதான் உங்களின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

ஆரோக்கியமான சமூதாயம் நம் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து நம் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து நம் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

தயவுசெய்து குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்...! உலகை தெரிந்துக் கொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.. மூன்றே வருடத்தில் தென்னையை  வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல !

குழந்தையின் வயதுக்கு  மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து  தன்னம்பிக்கையை  இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்... எரிச்சல், கோபம் , இயலாமை,விரக்தி, சுயபச்சாதாபம்  போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள்  இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை !?

பின்குறிப்பு 

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் குழந்தைகளை விட பாலியல் துன்புறுத்தலை நிகழ்த்துபவர்கள், வன்கொடுமையை ரசிப்பவர்கள் அதிகம். அவர்களின் ஆரம்பம் எங்கிருந்தும், இப்படியும் தொடங்கலாம் என்பதை இந்த பதிவு உணர்த்த முயலுகிறது. வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம்... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் மனதோடு மட்டும்
கௌசல்யா  

செவ்வாய், மார்ச் 12

மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் தமிழ் நண்டுகள் !?

சிகப்பு கம்பள வரவேற்பு ஒரு பக்கம், நேரில் சென்று பொன்னாடை போர்த்து வாழ்த்துவது ஒருபக்கம் நடக்க மேடையில் ஈழத்துக்காக உயிரை விடவும் தயார் என இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை தான் நமக்கு தெரியும். மாணவர் சக்தியை அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்துவதையும் அறிவோம்.

மாறாக இன்று ஈழ மக்களுக்காக உண்ணாவிரத்தை கையில் எடுத்திருக்கும் கல்லூரி மாணவர்களின் உணர்விற்கு என் வணக்கங்கள். மாணவர்கள் நினைத்தால் சமூகத்தில் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும். இப்படி ஒரு போராட்டம், புரட்சி இங்கே வராதா என் சமூக அக்கறை உள்ள எல்லோரின் மனதிலும் நிச்சயம் ஒரு கேள்வி எழும். அதற்கான பதிலாய் இவர்களின் போராட்டத்தை பார்க்கிறேன்.


ஈழம் முழுமையாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டு இன அழிப்பு வேலைகள் கனகச்சிதமாக நடைபெறுகிறது. நெஞ்சில் ஈரம் உள்ள எவரும் நம் பாலச்சந்திரனுக்காக இரு சொட்டு கண்ணீர் விடாமல் இருந்திருக்க முடியாது. சிறு பாலகனையும் சுட்டுக்கொல்லும் அளவுக்கு ஈனமதி படைத்த அரக்கர்கள் ! இவர்களிடம் பணிந்து போகும் மத்திய அரசு. கொலை பாதகங்களை, பாலியல் ரீதியிலான கொடூரங்களை ரசித்து கொண்டாடும் சர்வ தேச அரசியல் !!

அகிம்சை வழியில்  போராடும் மாணவர்களை பல இன்னல்கள் கொடுத்தும் அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் ஒரு கல்லூரி தானா இருக்கிறது தமிழகத்தில்...?! தீ பரவட்டும் அனைத்து மாணவர்களிடையே...நீதி கிடைக்கட்டும்...! மாபெரும் ஜன சமுத்திரத்தில் மாணவர்கள் தம் மக்களின் உரிமைக்காக கொடுக்கும் குரல் சர்வ தேசம் எங்கும் ஒலிக்கட்டும். மாணவர்கள் உலகம் கேளிக்கை நிறைந்தது மட்டுமல்ல சமூக அக்கறை அதிகம் கொண்டது என சுயநல உலகம் உணரட்டும்.

அதிகார வர்க்கத்தினரின்/ஆசிரியர்களின் இன்டெர்னல் மார்க் கிடையாது என்ற மிரட்டல்கள் ஒரு பக்கம்... மனிதர்களை உணர்ச்சி அற்றவர்களாக்கும் முயற்சி இது. இன்றைய மாணவர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்று சொல்லும் நாவுகள் தான் இப்படி பேசுகின்றன.  இன்று வாழும் தேசம் நாளை பறிபோகும் என்றானாலும் படிப்பில் முதல் இடம் பிடிப்பது எப்படி என்ற சிந்தனையில்  இருக்க சொல்கிறது இன்றைய கல்வி !

தமிழ் நண்டுகள்

இந்த சூழலில் எனக்கு தமிழ் நண்டுகள் கதைதான் நினைவுக்கு வருகிறது. தமிழர்களின் குணம் இது போன்றதுதான் என அடிக்கடி நிரூபிக்கிறார்கள் இங்கே சிலர் ! இணையத்தில் பலரது வாதத்தையும், கருத்துக்களையும் பார்த்தால் நண்டு கதை இவர்களை வைத்து தான் சொல்லப்பட்டது போல இருக்கிறது. பூட்டப்பட்ட அறைக்குள் உணர்ச்சி பிழம்பாய் கொந்தளித்தால் போதும் நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை போல வேறு சிலரது எண்ணமாக இருக்கிறது !! இப்படி எல்லாம் இருக்காமல் ஒன்று மாணவர்களின் போராட்டத்திற்கு கருத்துக்களால் வலிமை சேர்க்கலாம் அல்லது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுவது உத்தமம்.

ஈழத்தில் நடக்கும் இன அழிப்புகள் பற்றி சிறிதும் அக்கறையற்ற தமிழ்நாட்டு தமிழர்கள்(?) மாணவர்கள் போராட்டத்தை கிண்டலும் கேலியும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மாணவர்கள் சிறு பிள்ளைகளாம், மன முதிர்ச்சி இல்லாதவர்களாம் ...அரசியல்வாதிகளால் தவறாக கையாளப்படலாம் என்பது பலரின்  எண்ணம் ஆனால் மாணவர்களின் எழுச்சிக்கு காரணமே இன்றைய அரசியல்வாதிகள் மேலுள்ள கோபம் தானே. மக்கள் நலனை மறந்த ஊழல் மலிந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட மாணவர் சமுதாயத்தால் மட்டும் தான் இயலும். இவர்களுக்கு தலைவன் என்று யாரும் தேவை இல்லை, சமூக நலன் மட்டும் தான் தலைவன் என்பதாக இருந்தால் இவர்களின் வேகத்திற்கு முன் பொய்மை கயமை ஏதும் நிற்க முடியாது. முக்கியமாக இவர்களிடம் இருக்கவேண்டியது துணிவுடன் கூடிய பொதுநலம் மீதான ஒற்றுமை.

இன்று சேனல் நான்கை பார்த்து பொங்குகிற நீங்கள், இத்தனை நாள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விகள்  மனதை வதைக்கிறது. என்ன பதிலை சொல்வது எங்களின் கையாலாகாத்தனம் என்றா ?! குத்த குத்த  பொறுத்துக்கொண்டே இருக்கும் புழு ஒரு கட்டத்தில் தன் உடலை வளைத்து எதிர்ப்பைக் காட்டும். அது போல அரசியல்வாதிகளால ஏதாவது நல்லது நடந்துவிடாதா என பொறுத்து பொறுத்து இன்று அதற்கு வழியே இல்லை என்று ஆனதும் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுக்கிறார்கள். முத்துகுமரன், செங்கொடியை யாரும் மறக்கவில்லை, அன்று அவர்கள் பற்ற வைத்த தீ இன்று எரிய தொடங்கி  இருக்கிறது. எனது கவலை எல்லாம் நெருப்பு நீர்த்து போய்விடகூடாது என்பதாகத்தான் இருக்கிறது. மாற்றம் தேவை அதுவும் உடனடியாக...சப்பை கட்டும் பேச்சுக்கள் கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது.  

மாணவர்கள் ஒன்றுகூடுவது கேளிக்கைக்காக திரைப்பட கதாநாயகர்களுக்காக, கிரிகெட்டுக்காக என்ற போது   கண்டுகொள்ளாத பெற்றோர்கள் உண்ணாவிரதம் என்றதும் அவர்களின் படிப்பை பற்றி/எதிர்காலம் பற்றி  கவலைப்படுகிறார்கள். நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவனை அனுப்பியதும் நாம் தான் !   மாணவர்கள் தான் தேசத்தின் தூண்கள் என்பதை உணருங்கள்.

நேற்றைய செய்தி ஒன்று 

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை போராட்டத்தை முடக்கியபின் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களை ஒன்றாக இணைத்து போராட இருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் மாணவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் 'எங்கள்  அமைப்புக்கு அரசியல் சாயத்தை பூச வேண்டாம் எனவும் எந்த அரசியல் கட்சிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட வேண்டாம்' எனவும் கேட்டுள்ளனர்.   

இவர்கள் தெளிவாகவே உள்ளனர். கருத்து சொல்றோம்னு இணைய போராளிகள் எதையாவது சொல்லி குழப்பாம இருந்தால் சரி.

மாணவர்கள் சமூக உணர்வு பெறுவதை அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்ப மாட்டார்கள்.  அதனால்  பல எதிர்ப்புகளை சமாளித்தாக வேண்டும்.  வேகமாக பரவக்கூடியது என்பதால் விரைவாக போராட்டத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாட்டை சீரழித்து கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளிலும் மாணவர்களின் தலையீடு மிக அவசியம் என்பதை போராட்டத்தை குறை சொல்பவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் .

மாணவ நண்பர்களே !!! 

சினிமா, விளையாட்டு, கேளிக்கை தவிர வேறு ஏதும் தெரியாது என நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரது எண்ணத்தையும் தவிடுபொடியாக்குங்கள்...பிற மாநிலத்து இளைஞர்கள் அவர்களின் உரிமைக்காக உறுதியுடன் நின்று போராடும் போது அவர்களை விட நீங்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டீர்கள்...நம் பாரதியின் அக்னிகுஞ்சுகள் நீங்கள்...! நினைவில் கொள்ளுங்கள் !!

யாருடைய போலி சமாதானத்தையும், பொய்யான வாக்குறுதிகளையும் நம்பாதீர்கள். உங்கள் போராட்டத்தை சிதைக்க பல வகையிலும் முயற்சிகள் எடுக்கப்படும்...எதற்கும் அஞ்சாதீர்கள்...உள்ளஉறுதியுடன் ஒற்றுமையாக நில்லுங்கள்...! பல நல்ல உள்ளங்கள் தூரத்தில் நின்று உங்களுக்காக உங்களின் நலன் வேண்டி மனதார தொழுது கொண்டிருக்கின்றன... என்பதை மறக்காதீர்கள் ! 

வெல்க தமிழ் ! வெல்லட்டும் இளைஞர்களின் ஒற்றுமை !

வெள்ளி, மார்ச் 8

மகளிர் தின வாழ்த்தும் போலித்தனமும் ?!!

முகநூல்  சுவற்றில்  
நேற்றுவரை  
பெண்ணின் புகைப்படம் பகிர்ந்தும்  
அங்கங்கள் குறித்த அர்த்தமற்ற கவிதைகள் எழுதியும்  
ரசித்து விளையாடியவர்கள்  
இன்று 
தெய்வம் என்கிறார்கள் 
தேவதை என்கிறார்கள் 
சகோதரியாம் 
தோழியாம்  
சிலரோ அதிக உணர்ச்சிவசப்பட்டு 
அம்மா தாயே பெற்றவளே என்கிறார்கள்...
நாளையே இது அத்தனையும் மாறி 
பெண் என்பவள் போகப்பொருள் மட்டும் 
என்ற தங்கள் ஆழ்மன அசிங்கத்தை அரங்கேற்றுவார்கள்
அதையும் கண்டு காறித்துப்பிவிட்டு 
வழக்கம் போல எங்கள் வேலைகளை 
நாங்கள் பார்க்கவேண்டும்  !?
  
பெண்னை 
தூற்றலும்
வதைப்பதும்  
சிதைப்பதும்
எல்லாம் செய்து 
துதிக்கவும் முடிகிறது 
ஆண்களால் ??!!

இங்கே பல ஆண்களின் சுயவிளம்பர போற்றுதலுக்கு ஆளாகும் பெண்ணின் நிலை அடுத்த சில மணிநேரங்களில் தலைகீழாக மாறிவிடும்.

வெளியிடங்களிலும் எங்குப்பார்த்தாலும் மகளிர் கொண்டாட்ட வாழ்த்தொலிகள், பாராட்டு விழாக்கள் ! 

சிங்கள அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த பலமாக யோசிக்கும் நிலையில் மகளிர் தினத்தை கொண்டாடுவது ரொம்ப முக்கியம்தான்  !! வரிசையாக  பெண்ணை சிதைத்துக் கொன்று உடலுடன் உறவு கொண்டான்  சிங்களவன் என்ற செய்தியை கேட்டும் பார்த்தும் கொதிக்காத நெஞ்சில் இருந்து எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் வருகிறது...கொத்துகொத்தாக பெண்கள் சின்னாபின்னாமாகி சீரழிந்து போனதுக்கு காரணமானவர்களை சாமரம் வீசி நாட்டுக்குள் வரவேற்பார்கள், அதை எதிர்த்து ஒரு கண்டனம் கூட சொல்ல தைரியம் அற்ற கோழைகள் தானே நாம்!?

சிறுகுழந்தையையும் விட்டுவைக்காமல் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை  ஒரு செய்தியாய் சகஜமாய் கடந்து போகும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். நமது பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் சரியானமுறையில் ஒரு கழிவறை வசதி இல்லை. காதல் என்ற பெயரில் நடக்கும் ஆசிட் வீச்சுக்கள், கௌரவ கொலைகள், சாதி மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனங்கள்.......இன்னும் பல கேவலங்கள், அசிங்கங்கள் !!   

பெண்ணுக்கு எங்கே எந்த கொடுமையும் நடக்கட்டும் என் வீட்டு பெண் பத்தரமா  இருக்கிறாள் என்ற தெம்பில், திமிரில் ஒரு நாடுனா நாலும் நடக்கத்தான் செய்யும் அதற்காக பண்டிகை, தினம் எல்லாம் கொண்டாடாம, வாழ்த்தாம இருக்க முடியுமான்னு சில அறிவாளிகள் கேள்வி கேட்பதை தான் சகித்து கொள்ள முடியவில்லை. 

ஏன் சொல்றோம் எதற்கு சொல்கிறோம் என்பதைவிட அவன் சொல்றான் அதனால் நானும் சொல்றேன் என்ற ஆட்டுமந்தை குணம் மனிதர்களை விட்டு என்று ஒழியுமோ தெரியல. எந்த தினமாக இருந்தாலும் அத்தினத்தின் உண்மையான பொருள் விளங்கப்படாமலேயே அந்த தினம் முடிந்துவிடுகிறது.  

முகநூலில்  முன்பின் தெரியாத பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி பெண்கள் மீதான  அக்கறைய காட்டுற மாதிரி, அப்படியே மறக்காம உங்க வீட்டிலும் அம்மா, மனைவி, சகோதரி  என்று பெண்கள் இருப்பாங்க அவங்களுக்கும் சொல்லிடுங்க, சந்தோபடட்டும். ஆண்களே ! தயவுசெய்து தினங்களை விட்டுவிடுங்கள் உங்கள் வீட்டு பெண்களை கொண்டாடுங்கள் !

முகநூலில் பெண்ணை வர்ணித்து எழுதும் சில கவிதைகள் ஆபாசத்தின் உச்சம் ! நடிகைகள், பெண்கள் படங்களை போட்டு கருத்து சொல்றோம்னு ஒட்டுமொத்த பெண்களை வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறார்கள். இளம்பெண்கள்  குடிக்கிற மாதிரியான படங்களை பகிர்ந்து ஆண்கள் நாங்கள் குடிக்கிறது நாட்டுக்கு நல்லது,ஆனா பெண்கள் இப்படி குடிச்சா உலகத்துக்கே கெட்டது என்பதை போல பறைசாற்றுகிறார்கள். இந்த படங்களை போடுவதன் மூலம் தாங்கள் குடிப்பதை நியாயபடுத்திக்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருக்கும், அவலநிலைக்கும் பெரும் காரணமான டாஸ்மார்க் வியாபாரத்தை தீவிரமாக்கி வருமானம் பார்த்துக் கொண்டிருப்பதும்  ஒரு பெண் என்ற அளவில் இந்த மகளிர் தினத்தை நாம் கண்டிப்பாக சிறப்பாக கொண்டாடியே தீரவேண்டும் !? வேதனை !!

பெண்கள்

ஆண்களுக்கு சிறிதும் குறைந்தவர்கள் அல்ல ஒரு சில பெண்கள்... பிறரை கவர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ ஜாலங்கள் செய்து அதை உரிமை ,சுதந்திரம் என்று நியாயப்படுத்துவது, ஆண்களை ஆணாதிக்கம் என்று மட்டுபடுத்துவதன் மூலமே பெண்மை ஒளிரும் என்று எண்ணிக்கொண்டு செயல்படுவது,  ஆணை சாடுவது எதிர்த்து பேசுவது மட்டுமே பெண்ணியம் என்பதை போல நடப்பது.....இப்படி இன்னும்... இதுபோன்ற சில பெண்களின் செயலால் ஒத்துமொத்த பெண்களின் சுயகௌரவம் பாழாவதை  பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.  

குடும்பத்தை பொருத்தவரை ஆணுக்காக,பிறருக்காக மட்டுமே வாழ்கிறோம் என்றில்லாமல் தனக்காக வாழ்கிறோம் அதன் மூலம் தன்னை சேர்ந்தவர்களை சந்தோசப்படுத்துகிறோம் என்ற மனநிலை பெண்ணுக்கு வேண்டும். 

அரசியலில்  பெண்கள் ஈடுபடுவது பாராட்டுதற்குரியது...இதில் இரண்டு விதம்,  ஒன்று பெயருக்கு பதவியில் இருந்து கொண்டு ஆணின் சொல்கேட்டு செயல்படுவது மற்றொன்று ஒட்டுமொத்த அதிகாரத்தையும்  கையில் எடுத்துக்கொண்டு  சுயநலத்துக்காக எல்லோரையும் ஆட்டிப்படைப்பது ! இது இரண்டுமே சமூகத்தின் சாபக்கேடுகள்  ! மாறாக பெண் தனக்குரிய சிறப்பு தன்மைகளை மட்டுமே வெளிப்படுத்தி சுயமரியாதையுடன் ஒரு சமூகத்தை, நாட்டை வழிநடத்தி செல்வது என்று நடக்குமோ அன்றே நிறைவான பெண்களின் தினம் !

எல்லா நிலைகளிலும் எல்லா இடத்திலும் சமவாய்ப்பு பெறுவது தான் பெண்ணுரிமையே தவிர  ஆண்களுக்கு சமம் என்ற பெயரில் அவர்களை போல நடப்பது அல்ல என்பதை முதலில் பெண் உணரவேண்டும். ஆண்களும் தனது தாய், சகோதரி, மனைவி, மகள் தவிர மற்ற பெண்கள் வெறும் சதை பிண்டங்கள் என்ற எண்ணத்தை மாற்றியாக வேண்டும். 

ஆண், பெண் இருவரின் மனதில் இந்த மாற்றம் ஏற்படாமல் வெறும் பேச்சிற்கு மகளிர்தின வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அர்த்தமும் இல்லை...அந்த வார்த்தையில் ஜீவனும் இல்லை !!!!


                                                                        * * *



படம் :கூகுள்


புதன், பிப்ரவரி 6

விவசாயத்தால் விருது...! சாதித்த பட்டதாரி பெண் !!

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த திருமதி அமலராணி அவர்கள் சிறந்த சாதனை ஒன்றை அமைதியாக செய்து முடித்திருக்கிறார். வேளாண் அதிகாரிகளின் மூலம் இவரது சாதனை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதோ இன்று ஜனாதிபதியிடம் இருந்து கிருஷிகர்மான் விருதையும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் பெற்றுவிட்டார். அரசாங்கத்தின் பார்வையில் பட்ட இவரை பற்றி நாம் தெரிந்துகொள்வது காலத்தின் கட்டாயம் தான்,  ஆம் உயிர் வாழ உணவு அவசியம் என்பதால்...!! 

உணவு வேண்டும் ஆனால் அதை உண்டு பண்ணுபவனை பற்றி நமக்கு அக்கறை இல்லை.உலக மக்கள் பசியாற வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு உழைக்கும் உழவனின் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இது போன்ற விருதுகள் !


விவசாயத்தின் மீதுள்ள காதலால் கணவர் மருத்துவத்  தொழிலை கவனிக்க, இவர் வயலுக்கு வந்து விட்டார். ஒரு மகனும் ஒரு மகளும் மருத்துவ துறையிலும், இன்னொரு மகள் பிளஸ் 1ம் பயிலுகிறார். விவசாயத்தொழிலை தனது ஜீவனாக பாவிக்கும் இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர்.

சாதனை

விவசாயத்தில் அதிக மகசூலை பெற்று சாதிப்பவர்களுக்கு மத்திய வேளாண்மைத்துறை சார்பில் கிருஷிகர்மான் விருது வழங்கபடுகிறது. அது இந்த வருடம் இவருக்கு கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் தான் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்து இருக்கிறார் அவரது சீரிய முயற்சியின் பலனாக அதிக அளவாக ஏக்கருக்கு 18 ஆயிரத்து 143 கிலோ மகசூல் கிடைத்தது. விருதை குறிவைத்து இவர் விவசாயம் பார்க்கவில்லை, அவ்வபோது வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு அதன் படி வேலை பார்த்திருக்கிறார்.

விருது பற்றி எதுவும் தெரியாத நிலையில் இவரது வயலில் விளைந்திருந்த கதிர்களை பார்த்த அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் அதன் அளவை குறித்து சென்றிருக்கிறார்கள் . அதற்கடுத்த வாரத்தில், தான் ஒரு சாதனை செய்திருக்கிறோம் என்று தகவல் கிடைக்க பெற்றிருக்கிறார் .ஜனாதிபதியின் கையால் விருதையும் வாங்கிவிட்டார்

இதில் இன்னொரு மகிழ்ச்சி என்னவென்றால் தேசிய அளவில் தமிழகத்தில் தான் ஒரு எக்டேரில் அதிக நெல் சாகுபடி செய்து உள்ளனர். எனவே இதை பாராட்டி தமிழகத்துக்கு 2 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

இவரை மத்திய வேளாண் மந்திரி சரத்பவார், மத்திய வேளாண்துறை செயலாளர், தமிழக விவசாயத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, நெல்லை கலெக்டர் சி.சத்தியமூர்த்தி போன்ற பலரும் கௌரவித்து பாராட்டி உள்ளனர். வேளாண்மையில் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை, வாய்ப்பு நிறைய இருக்கிறது என்கிறார் இவர்.

நெல் தவிர தென்னந்தோப்பு, காய்கறிகள் சாகுபடி, கரும்பு சாகுபடி போன்றவற்றையும் ஆர்வமுடன் செய்து வருகிறார். பெரிய அளவில் பூசணியை விளையவைத்து உள்ளூர் மக்களை ஆச்சர்யப்படுத்துகிறார்.

விவசாய தொழிலை கௌரவ குறைச்சலாக நினைக்கும் பலர் இருக்கும் நாட்டில் தான் இவரை போன்றவர்களும் இருக்கிறார்கள். விவசாய நிலபரப்பு குறைவதை பற்றியா ஆதங்கம் இவருக்கு நிறைய இருக்கிறது.

அதை குறித்து இவ்வாறு கூறுகிறார்...

" விளை நிலங்கள் வீடுகளாவது தடுக்கப்பட வேண்டும். மூணு ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நிலம் தரிசாக கிடந்தால் அதை வீட்டு மனையாக்கி விற்க நினைக்கிறார்கள். விவசாய நிலத்தை தரிசாக போட அரசு அனுமதிக்கக்கூடாது. இதில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். ஒரு புறம் மக்கள் தொகை பெருகுகிறது, மறுபுறம் விவசாயம் சுருங்குகிறது. இப்படியே போனால் பஞ்சத்தின் கொடுமையை மக்கள் நேரில் பார்க்க கூடிய காலம் விரைவில் வந்து விடும்.

"இன்னும் சில ஆண்டுகள் கழித்து நகரங்களுக்கு சென்றவர்கள் எல்லாம் கிராமங்களை தேடி ஓடி வரும் நிலை ஏற்படும்...அப்போது விவசாயத்துக்கு அப்படி ஒரு மவுசு கிடைக்கும்...வேலை இல்லாத படித்த ஆண்களும் பெண்களும் ஏர் பிடிக்கும் காலம் வந்தே தீரும் !! 

அதற்கு உதாரணமாக இந்த ஆண்டில் மழை பொய்த்து போனதை கூறலாம். வரும் ஆண்டிலும் இதே போன்று நிகழ்ந்தால் உணவு பஞ்சம் வந்து விடும். அப்போது ஒரு கிலோ அரிசி விலை 100 ரூபாய்க்கு கூட விற்கலாம். இதே போல் மற்ற விவசாய பொருட்களின் விலையும் உயரும். நல்ல விலை கிடைப்பதால் ஏராளமானவர்கள் மீண்டும் கழனிக்கு வருவார்கள்... தரிசு நிலங்கள் பசுமையாக மாறும். மீண்டும் பசுமை புரட்சி ஏற்படும்"                                                   

'பெண்களுக்கு ஏற்ற தொழில் விவசாயம் தான், குடும்பத்தை கவனிக்கவும் நேரம் கிடைக்கும், தேவைக்கு அதிகமாகவே வருமானமும் கிடைக்கும்' என்று பெண்களுக்கு ஒரு யோசனையும் சொல்கிறார். 

வேறு எந்த தொழிலை போலில்லாமல் இதில் உடல் உழைப்பு இருப்பதால் உடல் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக,  உற்சாகமான மனதுடன் நீடித்த இளமையுடன் இருக்கலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் .

காலத்தின் கட்டாயம் 

விவசாயத்தில் இறங்குவது அவசியம் என்பதை உணர்ந்து இருக்கும் விளை நிலங்களை விற்காமல் இயன்றவரை விவசாயத்தில் ஈடுபட முயற்சி எடுப்போம். தெரியாத தொழில் என்று தயங்காமல் தெரிந்தவர்களின் ஆலோசனைகளை பெற்று தைரியமாக இறங்கலாம். விவசாயத்தை பொருத்தவரை வேளாண் அதிகாரிகள் நமக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள், அவர்களை அணுகி தேவையான ஆலோசனைகளை பெற்றுகொள்ளலாம்.

நிலங்கள் இல்லாதவர்கள் பிறரிடம் குத்தகை பெற்று விவசாயம் செய்கிறார்கள்...தண்ணீர் தேவைக்கு நீர் மேலாண்மை திட்டம் உதவுகிறது. அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு செயல்படுத்தபடுகிறது. சொட்டுநீர் பாசனம், நுண நீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளின் மூலம் குறைந்த நீரிலும் நிறைவான உற்பத்தி பெறமுடியும். விவசாயம் செய்யபோகும் நம் நிலத்தின் மண்ணையும், நீரையும் பரிசோதனை செய்வது நல்லது. வேளாண் அதிகாரிகளை அணுகினால் இவற்றை குறித்த விளக்கங்களை கூறி உதவுவார்கள்.

மேலும்

இயற்கை விவசாயம் செய்தால் பூச்சி மருந்து ,உரம் போன்றவற்றின் தேவை கணிசமாக குறையும். நெல் தவிர கம்பு, சோளம், உளுந்து,பயறு போன்ற  தானியங்களை விளைவிக்கலாம். காய்கறி தோட்டம் போட்டால் கூட நல்லது. ஏதோ ஒரு வகையில் இயற்கையுடன் நம்மை பிணைந்து கொள்வதின் மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். அதே நேரம்  சுற்றுப்புறமும் சுகாதாரமாக மேன்மையுறும்.

ஆர்வம் உழைப்பு இருந்தால் விவசாயத்தில் வெற்றி பெறலாம். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு  பொருளாதார ரீதியாக பயன் பெற்று நம் நாட்டிற்கும் பயனுள்ளவர்களாவோம். நாமும் ஈடுபட்டு நம்மை சேர்ந்தவர்களையும் ஈடுபட செய்வோம்.

உறுதியுடன் முயன்றால் பசுமை உலகம் சாத்தியம் !!

வாழ்க விவசாயம்!

* * * * *

தகவல், படம் : இணையம்

புதன், ஜனவரி 23

தந்தையை தேடி...! உங்கள் உதவி தேவை நட்புகளே...!

முன்  குறிப்பு :

நண்பர் புவனேஷ் அவரது  தோழியின் தகப்பனார் காணாமல் போனதை  வருத்தத்துடன் என்னிடம் பகிர்ந்தார். பல பத்திரிக்கைகளிலும் செய்தி வெளி வந்திருக்கிறது...இருந்தும் அவர் இன்னும் கிடைக்கவில்லை. மன வேதனையுடன் விரிவாக ஒரு மெயில் அனுப்பி எனது தளத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டுமென கேட்டிருந்தார். அதன் படி இங்கே அப்படியே பகிர்கிறேன். நண்பர்கள் இயன்றால் பிளாக்,முகநூல் உட்பட சமூக தளங்களில் பகிர்ந்து தோழியின் தகப்பனார் கிடைக்க முயற்சி செய்யலாமே. 

தந்தை காணாமல் போனதும் இவர்கள் அடைந்த மன வேதனையும் தகப்பனாரை தேட இவர்கள் மேற்கொண்ட முயற்சியும் கண்கலங்க வைக்கிறது. விரைவில் இவர் கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

* * * * * * * * * *

அன்புள்ள வாசகர்களே, வணக்கங்கள்.

திருவனந்தபுரத்தில் RLNRA-41, Planning Board Lane, Rajalakshmi Nagar, Pattom என்னும் முகவரியில் எங்களுடன் வசித்து வந்த எண்பது வயதான எமது தந்தையார் திரு. நாராயணன் அவர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் காணவில்லை. அவர் தனது ஞாபக சக்தியை இழந்துள்ளார். அதன் காரணமாக மருந்துகளும் தினசரி உட்கொள்ளுகிறார். நவம்பர் எட்டாம் தேதி மதியம் ஒரு மணி வாக்கில் வெளியே நடந்து வருவதாகக்கூறி சென்றவர், இன்றளவும் திரும்பவில்லை. 
நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்யப்பெற்றது. இதைத்தொடர்ந்து நவம்பர் பத்தாம் தேதி இவரைப்பற்றிய விவரங்கள் மலையாள மனோரமாவில் வெளியிடப்பெற்றது. தூர்தர்ஷன் மற்றும் உள்ளூர்த்தொலைக்காட்சி அலை வரிசையிலும் அடுத்தடுத்து அறிவிப்புக்கள் வெளிவந்தன. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் மூலம், வயது முதிர்ந்த எங்கள் தந்தையாரை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. திருவனந்தபுரம் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பெற்றுள்ளன. 
தந்தை காணாமல் போன நவம்பர் எட்டாம் தேதி முதல் நிகழ்ந்த சம்பவங்கள் கீழ்வருமாறு:
8 Nov 12 : 3-30 pm:
பட்டம் மற்றும் கேசவதாசபுரம் பகுதிகளில் தேடினோம். எமது தந்தை ஒரு இதய நோயாளி என்பதால் ஒரு வேளை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பெற்று உள்ளாரா என தேடினோம். அவர் அங்கு இல்லை என எங்களுக்கு தெரிய வந்தது. மருத்துவக்கல்லூரி காவல் நிலையம், காவல் துறைக் கட்டுப்பாட்டறைக்கு இந்த செய்தியை அனுப்பியது. நாங்கள் அதே சமயத்தில் எங்கள் குடியிருப்புப்பகுதியில் தேடினோம். பேரூர்க்கடா காவல் நிலையத்தில் எங்கள் தந்தையாரை தேடுமாறு வேண்டுகோள் விடுத்தோம்,

9 Nov 12:
பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்தோம். அன்றே, தூரதர்ஷனிலும் உள்ளூர் தொலைகாட்சி அலைவரிசையிலும் அறிவிப்புகள் வெளிவந்தன.
10 Nov 12:
காணாமல் போன எமது தந்தையாரை பற்றி மலையாள மனோரமாவில் அறிவிப்பு செய்தி வெளியானது.
 
11 Nov 12:
திருவனந்தபுரம் முழுவதும் காணாமல் போன எமது தந்தையாரைப்பற்றி போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டப்பெற்றன.
12 Nov 12 to 25 Nov 12:
எமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படையினர் உதவியுடன் திருவனந்தபுரம் நகரின் எல்லா மூலைகளிலும் தேடல் நடைபெற்றது. ரயில்வே காவல் துறையும் உஷார்படுத்தப்பெற்றது. தந்தையாருடைய சொந்த ஊர் பாலக்காடு என்பதால் அங்கும் சென்று ஊர் முழுவதும் தேடினோம். அவர் பணிபுரிந்த பெங்களூர் HAL பகுதியிலும் அந்த பகுதி தபால் துறையினர் உதவியுடன் தேடினோம். விமானப்படையினர் உதவியுடன் கேரள – தமிழக எல்லைப்பகுதிகளான கன்னியாகுமரி, சுசீந்தரம், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியில் தேடினோம். பலனில்லை. 
26 Nov 12:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. உம்மன் சாண்டி அவர்களை சந்தித்து, இந்த விஷயத்தில் அவருடைய உதவியை கோரி மனு கொடுத்தோம். அவர், ADGP அதிகாரியான திரு ஹேமச்சந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரை சந்திக்குமாறு சொன்னார். அவரையும் பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் அவர்களையும் தொடர்பு கொண்டோம். அவர்கள் எல்லா உதவியும் செய்வதாக வாக்களித்தனர்.

29 Nov 12:
பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் திரு. பிரதாபன் அவர்கள் எங்கள் தந்தையை பற்றிய குறிப்புகளை சேகரிக்க வேண்டி எங்களைத்தொடர்பு கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர், எங்கள் காரில் ஒட்டி இருந்த போஸ்டரை பார்த்து இந்த பெரியவருக்கும் எங்களுக்கும் என்ன உறவு என்று கேட்டார். நாங்கள் இவர் எமது தந்தையார் சொன்னதும், அந்த ஆட்டோ ஓட்டுனர், எங்கள் தந்தையார் அன்று மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு சாலையை கடக்க முயன்று கொண்டிருந்ததாக கூறினார். இதை வட்ட ஆய்வாளர் திரு பிரதாபன் அவர்களிடம் வாக்குமூலமாக தந்தார்.. அன்றே, ஏசியாநெட் நிருபர் வந்து தகவல்களை சேகரித்தார். ADGP, CCTV ஆவணப்படத்தை கட்டுப்பாட்டறையில் இருந்து நாங்கள் காண ஏற்பாடு பண்ணினார். அப்போது, அந்த ஆவணப்படத்தை கண்ட பொழுது, சாலையை கடந்தது எங்கள் தந்தை தான் என்று உறுதி ஆனது. இதனை அவர் சாலையை கடக்க உதவிய போக்குவரத்துக்காவல் துறை அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.

30 Nov 2012:
ஏசியாநெட் தொலைகாட்சி எனது பேட்டியுடன் கூடிய அறிவிப்பை செய்திகளுக்குப்பின் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் ஒளிபரப்பியது. போக்குவரத்து துறையினரும் உஷார் நிலையில் வைக்கப்பெறுவர் என ADGP உறுதி கொடுத்தார். 
1 Dec 2012 – 4 Dec 2012:
எங்கள் தந்தை இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர் என்பதால், கோயில்களிலும் வழிபாட்டு தளங்களிலும் தேடுதல் தொடர்ந்தது. டிசம்பர் இரண்டாம் தேதி, காவல் துறையிடம் ஐம்பது போஸ்டர்களை தருமாறு அவர்களால் அறிவுறுத்தப்பட்டோம். CCTV ஆவணமும் எங்களுக்கு வழங்கப்பட்டது.

5 Dec 2012:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. உம்மன் சாண்டி அவர்களை மீண்டும் இவ்விஷயத்தில் உதவி கோரி அணுகினோம். அவரது உதவியாளரை அணுகுமாறு அவர் கூறினார். அவரது உதவியாளர் ADGPயிடம் பேசி, அவர்களால் முடிந்த அளவு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதி கூறினார். பாதுகாப்புத்துறை அதிகாரியான திரு. அனில் காந்த் IPS அவர்களை சந்தித்து பேசினோம்.  
7 Dec 2012:
நெடுமாங்காடு பகுதிகளில் பல்வேறு அநாதை இல்லங்களில் தேடினோம்.
12 Dec 2012:
திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதி தினமலர் செய்திதாளில் தந்தை காணவில்லை என அவருடைய படத்துடன் அறிவிப்பு வெளியிட்டோம்.
20 Dec 2012:
கேரளாவில் உள்ள அனைத்து பொது சேவை NGO அமைப்புகள் கூட்டம் டிசம்பர் இருபதாம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளத்தின் பலவேறு பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களின் சார்பில்  வந்தவர்களுக்கு, காணாமல் போன தந்தையாரின் விபரங்கள் அடங்கிய படத்துடன் கூடிய போஸ்டர்கள் அளிக்கப்பெற்றன.  
4 & 5th Jan 2013:
தந்தையார் இறை வழிபாடுகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் குமரியில் இருந்து மதுரை வரை கோயில் குளங்களில் தேடினோம். 
15 Jan 2013:
பேரூர்க்கடா காவல் துறையினருடன் வள்ளியூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தேடினோம். இருப்பினும் இன்றளவும் எங்கள் தந்தையார் கிடைக்கவில்லை.
* * * * * * * * * * *

அன்புள்ளங்களே உதவி செய்யுங்கள்!
தோழியின் அன்பு தந்தையை தேடும் முயற்சி தொடர்ந்துக்கொண்டிருக்கிறது...இவரை எங்கேயும் கண்டாலும் உடனே தெரிவியுங்கள்...நாமும் நம்மால் இயன்ற அளவு இந்த செய்தியை பகிர்ந்துகொள்வோம். விரைவில் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவோம். நன்றி.

தகவல் கிடைத்தவர்கள் தொடர்பு கொள்ள - உமா - 09567739646

திங்கள், ஜனவரி 7

அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் - குற்றவாளி யார்...??!



இன்றைய பெண்கள் குறிப்பாக சிறுமிகள் மனதில் ஆண்கள் என்றாலே மோசமானவர்கள் என்பதை மிக அழுத்தமாக இது போன்ற மோசமான நிகழ்வுகள் பதியவைத்துவிடுமோ என்றே வருந்துகிறேன். அருவருக்க தக்க இச்செயல்களை ஒரு சில ஆண்கள் செய்வதால் ஒட்டுமொத்த ஆண்சமூகமும் தலைகுனிந்து நிற்கிறது. நடக்கும் சம்பவங்களுக்கு  ஆண்கள் மட்டுமா காரணம் !!?? என ஒரு கேள்வியும் உடன் எழுகிறது...

ஓடும் பேருந்தில் பலரால் சிதைக்கப்பட்டு இறந்த இளம் பெண், ஆசிட் வீசப்பட்டதால் வாழ்வை தொலைத்தவள், எதிர்வீட்டுக்காரனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கபட்டுவிட்டாள் என தந்தை கையால் கௌரவ(?)கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி, பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட சிறுமி புனிதா, வீட்டில் இருந்த 4 ஆம் வகுப்பு மாணவியை இருவர் சிதைத்த கொடுமை......... இவை எல்லாம் விட கொடுமை பிளே ஸ்கூல் படிக்கும் மூன்றை வயது குழந்தையை வன்கொடுமை புரிந்த பள்ளி உரிமையாளரின் கணவன் !!??

ஊடகத்திற்கு வந்தவை கொஞ்சம், ஆனால் இப்படிபட்ட அல்லது இதை விடவும் மோசமான கொடுமையான நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிக அளவில், விதவிதமாக பெண்களின் மீது காலங்காலமாக நடந்துக்கொண்டிருக்கின்றன, மீடியாக்களின் உபயத்தில் இன்று அதிகரித்து வருவதை போல தெரிகிறது...

இணையத்தின் விவாதப்பொருளா ?!

டெல்லியில் நடந்தது மட்டும் இப்போது பெரிதுபடுத்தி பார்க்கப்படுகிறது,  பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஏன் இல்லை என இணையத்தில் காரசாரமான கருத்துக்கள் கண்டேன்.   ஊடகங்கள் செய்யாவிட்டால் என்ன தனி மனிதர் ஒவ்வொருவரும் போராட வேண்டியது தானே ?! நமக்கு அருகில், தெருவில் ஒரு பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் போது நம்மில் எத்தனை பேர் வேடிக்கை மட்டும் பார்த்து கடந்து சென்றிருப்போம்.

பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்டுவிட்டாள் என தெரிந்ததும் ஆவேசத்துடன்  சரமாரியாக கருத்துக்கள் இடுபவர்களில் சிலர் முகநூலில் நடிகையின் படத்தை வெளியிட்டு மட்டமாக வர்ணிப்பவர்கள் !! மனதில் இவ்வளவு வக்ரத்தை வைத்துகொண்டு பெண்ணுக்கு ஆதரவாக கருத்திடும் வேடதாரிகள் ஒருவகையில் குற்றவாளிகள் தான் ! உடலை தீண்டி சிதைத்தால்தான் வன்முறையா ? பார்வையால், பேச்சால்  பெண்களை கேலிப்பொருளாக்குபவர்கள் செய்வதற்கு பெயரும் வன்முறைதான்   !!

பெண்களை போகப்பொருளாக எண்ணி பேசுபவர்கள் நிறைந்திருக்கும் உலகம், இப்போது பெண்களைப்பற்றி புதிதாக கவலைப்படுவது தான் வினோதம் !!
  
மேலும்

என்னவோ எல்லோரும் தமிழ்நாட்டுக்கு வெளில வாழ்வதை போல 'டெல்லியில் போராடுறாங்க, தமிழ்நாட்டுல ஏன் யாரும் போராடல' என்று முகநூல்,ட்விட்டர்ல  பொங்கறத பார்த்தபோது வேடிக்கையான வேதனை !!??  ஏதோ சொல்லனும்னு கண்டபடி உளறி இந்த மாதிரி நிகழ்வுகளை தயவுசெய்து  வெட்டி விவாதப்  பொருளாக்கி வேடிக்கை பார்க்காதீர்கள் !!  நடந்த கொடுமையை விட இது மிக அதிகமாக வலிக்கிறது !!

இது போன்ற செய்தியை சில நாள் பேசுவதும் பின் மொத்தமாக மறந்து விடுவதுமாக இருக்கும் நாம் தான் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகள் !! .

போராட்டம் ??

பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப்பிடிக்கிறோம் என்ற பெயரில் போடப்படும் கோஷங்கள் அறிக்கைகள் எல்லாம் தங்கள் உடை சுதந்திரத்தில் யாரும் தலையிட கூடாது , என் உடல் என் விருப்பம் என்பது மாதிரியாக த்தான் இருக்கிறது !! எங்கோ ஒரு மூலையில் நிமிடத்திற்கு ஒரு முறை பெண் கொடுமைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாள், அவற்றை எதையும் கண்டுகொள்ளாத ஆணுலகம் ஒரு புறம் என்றால், பெண்கள் இயக்கமும், அமைப்புகளும் அமைதியாகவே  இருக்கிறது !

இரோம் ஷர்மிளா என்ற பெண்ணின் பல வருட தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்று வரை பெரிதுபடுத்தப்படாமல், முடிவும் எட்டப்படவில்லை. எந்த பெண்ணுரிமை இயக்கங்களும் இதனை அவ்வளவாக தீவிரப் படுத்தவும் இல்லை ?! அவருக்கே நீதி கிடைக்காத நாட்டில் வேறு எந்த பெண்ணிற்கு கிடைத்துவிட போகிறது...??!!

தூக்கில் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்?!!

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு அரசும் அதிகாரிகளும் என்ன செய்வார்கள், அவர்கள் மட்டுமா பொறுப்பு ?! தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாத வரை எந்த அரசும் என்னவும் செய்ய முடியாது ! அந்த 6 பேரை தூக்கில் போடுவதுடன் முடிந்துவிடுமா அத்தனை கேவலங்களும், அசிங்கங்களும் ?! நிச்சயமாக இதுவல்ல தீர்வு...?!!

குற்றச்செயலின் போது, உணர்ச்சி வசத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்களுக்கு உயிர் பயம் சுத்தமாக இருக்காது, ஈடுபடும் செயலை முடித்தே தீரவேண்டும் என்ற வெறி மட்டுமே  மனதை ஆக்கிரமித்து இருக்கும் என்ற நிலையில் தண்டனையை பற்றிய எண்ணம் எப்படி வரும் ?

நடக்கும் அத்தனை பாலியல் கொடுமைகளும் வெளிவருவதில்லை...  ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டுமே வெளி உலகம் அறிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினர் மறைத்துவிடும் அளவில் தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது. கேவலம் அவமானம் போன்றவைகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை பெண்மை மௌனம் சாதித்துத்தான் ஆகவேண்டும் போல...!!

குற்றவாளியை தூக்கில் போடணும், அடிச்சே கொல்லனும் என்கிற ஆவேசமான ஆர்பாட்டங்களை மதிக்கிறேன். ஆனால் இதனால் மட்டும்  இது போன்ற பிரச்சனைகள்  முடிவுக்கு எப்படி வரும்...??!  வன்முறைக்கு மற்றொரு வன்முறை என்பது போல் ஆகுமே தவிர குற்றங்கள் குறைந்துவிடுமா?.  பலிக்கு பலி என்று மனதை சமாதானம் பண்ணிக்கொள்ளலாம், அதே நேரம் இப்படிப்பட்ட பலியை எதிர்பார்க்கும் நமக்கு  என்ன பெயர் ???! 

இன்று இவர்கள் 6 பேரை தூக்கில் போட்டுவிடுவோம், அதே நேரம் இன்னும் பலர் தினசரி செய்திகளில் தொடர்ந்து வருகிறார்களே...அவர்களை என்ன செய்வது...அதன்பிறகு நாளை சிலர் வருவார்களே...அவர்களை...???!!!  தண்டனைகள்  தொடர்கதையாகுமே தவிர வேறு என்ன நடந்துவிடும்.  மாற்றம் வந்தாகவேண்டும்...சமூகத்தில்...அரசியலில்...கல்வியில்...மனிதமனங்களில்...!!

சட்டங்கள் என்ன செய்யும் ??

ஒவ்வொரு கொலை, மரணங்கள்  ஏற்பட்ட பின்னரே விழித்துக்கொண்டு சட்டங்களை இயற்றும் நம் அரசு. பள்ளி கூரை தீப்பிடித்து நூறு குழந்தைகள் இறந்தால், பள்ளிகளை கண்காணிக்க உத்தரவு!  பள்ளி வேனின் ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்ததும் வாகனங்கள் லைசென்ஸ், பராமரிப்பை தீவிரமாக செக் பண்ணுவார்கள்... இப்போது இந்த பரிதாப டெல்லிப் பெண் கிடைத்துவிட்டார் புதிதாக சட்டங்களை இயற்ற 

கடுமையான தண்டனைகள் கொடுக்ககூடிய சட்டங்களை இயற்றுங்கள் என்பது பலரது கூக்குரல் !! சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த நாவரசு கொலை பலருக்கு நினைவிருக்கலாம். நாவரசின் கை கால்களை தனித்தனியாக வெட்டி சூட்கேசில் மறைத்த குற்றவாளி ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் ! உலகமே அதிர்ச்சி அடைந்த அந்த கொடூர கொலைக்கு தண்டனை கிடைக்க 15 வருடம் ஆனது. ராகிங் தடுப்பு சட்டம் (Tamil Nadu Prohibition of Ragging Act)ஒன்றும் அதன் பிறகு இயற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை வேறு ராகிங் குற்றங்களே நடக்கவில்லை என்பது உண்மை என்றால் , பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை இயற்ற சொல்லி போராடலாம் தவறே இல்லை !! 

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை வைத்து  பிடிக்காத கணவன்/ கணவன் வீட்டாரை பழிவாங்கும் சில பெண்கள் இருக்கிறார்கள். அதை  போல இதற்காபோடப்படும் சட்டங்களும் தவறாக பிரயோகிக்கப்படலாம் ...  

அரசாங்கம் 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம் என்று மத்திய அரசும், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என மாநில அரசும் சிறிதும் மனசாட்சி இன்றி சொல்கிறது. வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் ?? மக்கள் அரியணையில் அமரவைத்ததற்கு இதையாவது சொல்ல வேண்டாமா?? இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்வதுடன் அரசு தனது பொறுப்பை முடித்துக்கொள்கிறது. சுயநல அரசுகள், கையாலாகாத அதிகாரிகள், ஊழலுக்கு துணை நிற்கும் நீதி மற்றும் காவல்துறை, இவை  எல்லாவற்றையும் விட முதுகெலும்பில்லாத நம் மக்கள் !!!

இணைய தளங்களில் ஆவேசபடுகிற அளவில் தான் மக்களின் தைரியம் இருக்கிறது. அப்படியே ஒரு சிலர் உண்மையாக கருத்திட்டு கோபத்தை காட்டினாலும் சைபர் கிரைம் என்ற பயத்தை காட்டிவிட்டது அரசு.

சமூகம் !!

மக்களால்  கட்டி அமைக்கப்பட்ட இந்த சமூகம் இப்போது மது என்னும் கொடிய அரக்கனாலும், மின் தடையாலும் முடக்கிப்போடப்பட்டுள்ளது. தொழில், வேலை, விவசாயம் பாதிப்பது  ஒரு பக்கம் என்றால் இரவில்  தடை செய்யப்படும் மின்சாரத்தால் சரியான தூக்கமின்றி பகலிலும் தொடரும் உடல், மன சோர்வு, மன உளைச்சலில் கொண்டுபோய் விட்டு விடுகிறது. சிந்தனைகள் முழுவதும் எதன் வசமோ சென்றதை போல் மந்திரித்துவிட்ட கோழியாக வலம்  வருகிறார்கள் மக்கள். இங்கே மக்கள் என்று குறிப்பிடுவது  சென்னையை தவிர்த்த பிற பகுதிகளை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

மனம் தடுமாற குடியை காரணம் சொல்கிறான் ஒருவன், ஓ அப்படியா என்று கேட்பதுடன் இங்கே நம் அனைவரின் கடமையும் ஏறக்குறைய முடிந்தே விடுகிறது. குடிக்கிற எல்லோருமா தவறு பண்றாங்க என்ற மேதாவிகளின் விமர்சனங்களை சகித்துகொள்ளவும் பழகிகொள்ளவேண்டும் .

திரைத்துறை, தொலைக்காட்சி, மீடியாக்கள் 

திரைப்படம் விளம்பர படம் எடுக்கும் ஆண்களால் தான் கலாச்சாரச்சீரழிவு  என்ற கருத்துகள் விமர்சனங்கள் சுத்த அபத்தம் ! அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கு துணை போகும் பெண்களை என்னவென்று சொல்வீர்கள்...??! உடை குறைக்கவேண்டும், ஆபாச காட்சி இருக்கிறது என்றால் முடியாது என மறுக்காமல் அதற்கு  உடன்படும்  பெண்கள் இருக்கும் வரை இந்த சீரழிவு தொடரத்தான் செய்யும் !! தனது விருப்பத்திற்காக , பணம் புகழுக்காக தனது உடலை, பெண்மையை  கடைவிரித்துவிட்ட பெண்களால் நிரம்பி இருக்கிறது திரைத்துறை, விளம்பர மீடியாக்கள் !! 

பெண்களின் அங்கங்களை கேமரா ஜூம் செய்ய அனுமதித்துவிட்டு கேமராவை  குறை சொல்வதை போல் இருக்கிறது படம் எடுப்பவர்களை குறை சொல்வது ... 

இளைஞர் கூட்டத்திற்கு  தன் அங்கங்களை காட்டிவிட்டு, 'நான் காட்டுவேன் அதை நீ பார்த்து சலனபடகூடாது' என கூறுவது என்ன லாஜிக் தெரியல...உணர்ச்சிகள் அற்றவர்களா மனிதர்கள் ?!! இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கும் மொபைல் போன் ஒன்று போதும் எத்தகைய மோசமான நிகழ்வுகளையும் நிமிடத்தில் கண்டுகளிக்க......இதற்கு மத்தியில் வாழும் இன்றைய இளைஞர்கள்  ஒரு விதத்தில் பரிதாபத்துக்குரியவர்கள், இவர்களுக்கு எது சரி எது தவறு என்று வழிகாட்ட பெற்றோர்களோ, கல்வியோ, சமூகமோ இல்லை. 

பெண்களின் உடைதான் காரணம் என்ற கருத்துகளை படிக்கும் போது  இப்படி கேட்கத் தோன்றுகிறது...திரைப்படங்களில் நடிகைகளின் அரைகுறை உடைகள்  பாலியல் உணர்வுகளை தூண்டுகிறது இனிமேல் அது போன்று உடை அணியக்கூடாது, நாகரீகமாக இருக்கவேண்டும் என அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்தால் என்ன...?!! (முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம்........!!)

குற்றவாளிகள்  எங்கும் இருக்கிறார்கள்?!

பல ஹாஸ்டல் அறை சுவர்கள் கூட சொல்லும்... பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல் மாதிரியிலான(?) கதைகளை !! ஒரு சிலர்  உடன்பட்டும் மற்றவர்கள் சகித்துக்கொண்டும் கடத்தவேண்டும் நாட்களை!

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏன் ஒவ்வொரு வீட்டிலும் கூட ஒரு குற்றவாளி இருக்கலாம் மனபிறழ்வு, மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, போட்டி பொறாமை, பழி வாங்கும் எண்ணம் , வன்மம்  நிரம்பிய மனது சந்தர்ப்பம் கிடைப்பதற்காக காத்திருந்து சந்தர்ப்பம் அமைந்தால்,  அப்போது தெரியும் நேற்றுவரை சாதுவாக தெரிந்த இவனா இப்படி என்று...!!???

டெல்லி பெண் விசயத்தில் பிடிபட்ட ஒருவரின் வயது 17,  மற்றொருவனுக்கு 18 இருக்குமாம் ??!! என்ன கொடுமை இது !! பாலியல் வெறியை தணித்துகொண்டதுடன் நில்லாமல் உறுப்பை சிதைத்து.......????!! இவர்களின் ரத்தத்தில், மூளையில், உடல் செல்களில் எதில் கலந்திருக்கும் இத்தகைய  வன்மம் !?  அந்த பெண்ணை பார்த்த அந்த கணத்தில் ஏற்பட்ட வன்மம் மட்டும் அல்ல இது, மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு பாதிப்பு, கோபம், காயம், வலி, வடு இருந்திருக்கிறது... அது இப்போது வெளிவந்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அமைதி அடைந்திருக்கிறது .

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு மிருகம்... அன்பிற்கு அர்த்தமோ...ஆண் பெண் பேதமோ...மனித நேயமோ...இடம் பொருளோ...எதுவும் தெரியாது அவ்வளவு ஏன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வந்ததும்  மறந்து போகும்...
மிருகம் வெளிப்படும் அந்த வேளையில்...

பாலியல் இன்பத்திற்காக, பாலியல் வறட்சி காரணமாக இவை நடக்கின்றன என்றால் நாம் இன்னும் மனித மனதை சரியாக புரிந்துகொள்வில்லை என்றே அர்த்தம்!

ஏதோ ஒன்றை அடைய முயன்று அது முடியாமல் இப்படி தீர்த்துகொள்கிறார்கள்  என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் இதில் உண்மை இருக்கிறது. எதிலும் நிறைவு அடையாமை, மேலும் மேலும் வேண்டும் என்பதை போன்ற மனதிற்கு, ஏதோ ஒரு வடிகால் தேவை படுகிறது, சமூக சீரழிவு அரங்கேறுகிறது! 


மனிதநேயம், சக மனிதரின் மீதான அன்பு குறைந்து காழ்ப்புணர்ச்சி அதிகரித்துவிட்டது. நம் மதங்கள் கடவுளை முன்னிறுத்துகின்றனவே தவிர  ஆன்மீக விழிப்புணர்ச்சியை கொடுக்கவில்லை. மனிதனுக்குள் இருக்கும் ஆத்மாவை தூய்மை படுத்த முயற்சி செய்யாமல் தனி மனித துதிகள் பெருகிவிட்டது. 

ஒரு குற்றம் நடந்ததற்கு பின்னால் மறைமுக கா'ரணங்கள்' இப்படி பல இருக்கின்றன, ஆனால் செய்தவன் மட்டும் குற்றவாளி என கூண்டில் ஏற்றப்படுகிறான்...! வன்மத்தால் கொடுமை செய்தவனுக்கு தண்டனை வாங்கி தருவது பெரிய காரியமல்ல, வன்மம் ஏற்படாமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே மிக நல்லது !!

* * * * * * * * * * * * *
பாலியல் வன்முறை பெண்கள்  மீது மட்டுமல்ல பெண்களாலும் நடந்துகொண்டிருக்கிறது என்பது கொஞ்சமும்  ஜீரணிக்கமுடியாத உண்மை !! நேரம்  இருப்பின்  படித்து பாருங்கள் - பெண்களா இப்படி ??!!
மற்றும் எனது இரண்டு பதிவுகள் உங்கள் பார்வைக்கு
ஒரு அலசல் - குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு 
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன்...?
* * * * * * * * * * * * * * 
பெண்களே காரணம்? பெற்றோர் காரணமா? இந்த பிரச்னைக்கு தீர்வு ஏதும் இருக்கிறதா ?? 
தொடர்ந்து பேசுவோம்...சிந்திப்போம் !!