திங்கள், செப்டம்பர் 10

ஒரு புதிய முயற்சி - 'தினம் ஒரு மரம்'

அருமை இணைய உறவுகளே,

வணக்கம். 

சில நிமிடங்கள் உங்கள் பார்வையை இங்கே பதியுங்கள்...படித்து கடந்து செல்லும் முன் ஒரு உறுதியுடன் செல்வீர்கள் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென்று ஒரு புதுமையான திட்டம் 'தினம் ஒரு மரம்' யார் தொடங்கினாங்க? எப்படி? எதுக்கு? என்னவென்று கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் EAST TRUST ஆல்  தொடங்கப்பட்ட 'பசுமைவிடியல் அமைப்பு' கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென்று பல செயல்களை செய்துவருகின்றது. அதன் அடுத்தகட்ட ஒரு முயற்சிதான் 'தினம் ஒரு மரம்' என்ற திட்டம். நாம் வாழும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற தேடல், ஆர்வம் இருப்பவர்கள் பங்கு பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் .  

 

தினம் ஒரு மரம்!
பசுமை விடியல் குழுவின் புதிய பசுமைத் திட்டம்!

இத் திட்டத்தின் நோக்கம் என்ன?
பசுமை விடியல் சார்பில் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினம் ஒரு மரம் நடப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் யார் யார் எல்லாம் பங்கு கொள்ளலாம்?
உலகில் பசுமை நிலைத்திருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும் பங்கு கொள்ளலாம்

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?
ஒரு சங்கிலித் தொடர்போல, மரம் நடும் நண்பர்கள், தினம் தினம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் ஆர்வலரை பசுமைவிடியலே பரிந்துரை செய்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறது. முதல் நபர் மரத்தை நடும் முன்பே, அடுத்த நபரை பரிந்துரைக்க வேண்டும். அவர் நண்பராகவோ, உறவினராகவோ, பசுமை விடியல் அங்கத்தினராகவோ இருக்கலாம். அவர் அவருக்கடுத்த நபரை பரிந்துரைப்பார். இப்படியே தினம் ஒரு மரம் பசுமை விடியல் சார்பில் உலகில் எங்காவது ஒரு மூலையில் நடப்படும். வருடத்திற்கு 365 மரங்கள். சங்கிலித் தொடர்போல இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சங்கிலித் தொடருக்குள் இணைவது எப்படி?
மிக எளிது. தினம் ஒரு மரம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் பெயர் தினம் ஒரு மரம் ஆர்வலர்களின் பட்டியலில் இணைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை மற்றவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஒரு மரம் நட வேண்டும்.

மரம் நடப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது?
 மரம் நடும் காட்சியை ஒரு புகைப்படமாக tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப் புகைப்படம் தேதிவாரியாக ஒரே ஆல்பத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைக்கப்படும். இந்த ஆல்பம் மற்றவர்களை  நிச்சயம் ஊக்கப்படுத்தும்

                                                                               * * * * *                                                                      

விழிப்புணர்வு ஏற்படுத்துவதே...

உலகம் தற்போது இருக்கும் நிலையில் ஒருநாளைக்கு ஒரு மரம் நட்டால் போதுமா? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படக்கூடும். இத்திட்டம் ஒரு மரம் வைக்கணும் என்பதாக இருந்தாலும், உலகின் பல இடங்களில் இருந்தும் பலர் இணைந்து தினமும் தொடர்ச்சியாக செய்து வரும் போது பிறருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். 

இத்திட்டத்தின் நோக்கம் பலரை தட்டி எழுப்புவது தான். அவர் செய்துவிட்டார் நாமும் செய்வோம் என்ற மறைமுக ஊக்கப்படுத்துதல். மரம் நடுவது அனைவரின்  இன்றியமையாத கடமை என்றில்லாமல், அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பலன் என்ற கேள்வியை இன்னமும் கேட்கும் பலர் இங்கே உண்டு...! அப்படிபட்டவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பதே போதுமானது. பின் அவர்களாக தொடர்ந்து செய்ய தொடங்கிவிடுவார்கள்.

எந்த ஒன்றும் எல்லோரின் ஒத்துழைப்பு இன்றி செயல்வடிவம் பெற இயலாது என்பதை தெரிந்தே இருக்கிறோம்.  அதனால் உங்களின் மேலான ஆதரவையும், பங்கெடுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறிதும் தயக்கம் இன்றி முழுமனதாக ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இனிமேல் இது  'எங்க திட்டம்' இல்லை 'நம்ம திட்டம்'. 

இணைந்து செயலாற்றுவோம். 
                                    வாழ்த்தட்டும் இயற்கை !! வணங்கட்டும் தலைமுறை !!

தினம் ஒரு மரம்!
இந்த பூமி உள்ள வரை...
 
ஆம் சங்கிலித் தொடராக தினம் ஒரு மரம்.

இன்று நீங்கள், நாளை நண்பர், அடுத்த நாள் மற்றொருவர்!

ஆளுக்கொரு மரம்!
                                       மரம் நடுவோம்! 
                                                                           மண் காப்போம்!!

                                                                                      * * * * *

பிரியங்களுடன்

கௌசல்யா 
பசுமைவிடியல்.


வெள்ளி, செப்டம்பர் 7

நெருப்புக்கு இன்னும் பசி அடங்கவில்லை...!? உடல் தாருங்கள்...!!!



சிவகாசி என்றதும் பட்டாசு நினைவுக்கு வரும், கூடவே வெடித்து சிதறிய கருகிய உடல்களும்...  வருடாவருடம் இத்தகைய விபத்துகள் நடந்துகொண்டு இருக்கின்றன...தீபாவளியும் மகிழ்ச்சியுடன்(?) கொண்டாடப்படுகிறது. எதுவும் யாருக்காகவும் மாறப்போவதில்லை.  இதோ இப்ப நடந்த இந்த கோர விபத்து பத்தி 'பாவம் அப்பாவிகள்' என்று அனுதாபம் தெரிவித்து  இரண்டு நாள் பேசுவோம்  பிறகு புதிதாய் வேறு ஒரு பரபரப்பு செய்தி...!!
 
ஆனால் சில மணித்  துளிகளில் பொட்டல் காடாக மாறிய அந்த பிரதேசம், காற்றில் கலந்திருக்கும் நெடியுடன் கூடிய அந்த கந்தக வாசம்,  தீயில் வெந்த, கருகிய உடல்களின் வாடை அந்த பூமியை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது.

வெடி விபத்தை நேரில் பார்த்ததில்லை ஆனால் தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரும் விபத்துகளின் பாதிப்பை நேரில் கண்டு அதிர்ந்திருக்கிறேன். தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தே கோரமாக இருக்கும் என்றால் அதை விட பல மடங்கு வீரியம் உள்ள வெடிவிபத்து எத்தகைய மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எண்ணி உடல் நடுங்குகிறது. 

நினைக்காமல் இருக்க முடியவில்லை 

தீப்பெட்டி தயாரிக்க முக்கிய மூல பொருளான  குளோரேட் வைக்க தனி அறையும், சல்பர் பிற மருந்து பொருட்கள் வைக்க தனி அறையும் எல்லா தொழிற்சாலைகளிலும் இருக்கும். இதில் குளோரேட் மிக ஆபத்தானது...சிந்தி கிடப்பதின் மேல் கால் லேசா உரசினால் கூட பற்றிக்கொள்ளும். ஒரு பாக்டரியில் குளோரேட் எடுக்க அந்த அறைக்கு சென்ற ஒரு தொழிலாளி கை தவறுதலாக தராசு எடை கல்லை கீழே போட சிந்தி கிடந்த குளோரேட் சட்டென தீப்பிடித்து வெடித்து எரிய தொடங்கியது. தனியாளாக உள்ளே மாட்டிகொண்ட தொழிலாளியை  சிரமப்பட்டு (சிறிது நேரம் கழித்து) மீட்டு எடுத்தார்கள். இரண்டுநாள் கழித்து மருத்துவமனையில் உயிர் பிரிந்துவிட்டது.

அந்த இளைஞன் சிறுவயதில் இருந்து எங்கள் பாக்டரியில் வேலை பார்த்தவன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தான் அங்கே இடம் மாறினான். காதுகேளாத வாய் பேச முடியாத, அவனால் தீப்பிடித்த போது உதவிக்கு ஆட்களை கூப்பிட கூட இயலாமல் போய்விட்டது. அப்போது அவன் மனது எப்படி துடித்திருக்கும் !! தீப்பிடித்தால் கத்த கூட வாய்ப்பில்லாத ஒருவனுக்கு வேறு வேலை கொடுக்காமல் இந்த வேலைக்கு அமர்த்தியது யார் தவறு...! இறந்த பின் ஒரு லட்சம் கொடுத்தது அந்த நிர்வாகம். பணத்தை வழங்கி இறப்பினை, இழப்பினை மறக்கச் சொல்கிறது (முதலாளிகள்) சமூகம்!!

கண் முன் நிகழ்ந்த விபத்து 

ஒருமுறை எங்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை  நடந்து கொண்டிருந்த மதிய நேரத்தில், மருந்து கட்டைகள் அடுக்கி வைத்திருந்த பெரிய அறையில் தீப் பிடித்துவிட்டது. பெண் தொழிலாளி ஒருவர் கட்டையை (மருந்து குச்சிகள் அடுக்கி வைக்கப்பட்ட மரபிரேம்) மர ஸெல்ப்பில் இருந்து எடுக்கும்போது உரசி தீ பிடித்து விட்டது. அந்த பெண் அப்படியே கீழே போட்டுவிட்டு வெளியே (உடனே வெளியேறி விடவேண்டும் என்று ட்ரைன் பண்ணுவோம்) ஓடிவந்து விட்டாள். தீ மளமளவென பிற  ஸெல்ப்களுக்கும் பரவி விட்டது. சில நிமிடங்கள் கழித்து நான் சென்று பார்த்தபோது எட்டடி உயரத்துக்கு தீ எரிகிறது. நாலு பேர் வெளியே இருந்து Fire Extinguisher மூலமா அணைக்க முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது...

அருகில் போக முடியாத படி வெப்பம், புகை, மெதுவாக உள்ளே எட்டி பார்த்தேன் தீக்குள்  இரு கரிய உருவங்கள், "அங்க என்ன பண்றீங்க, வெளில வாங்க" பதறி நான் கத்த, மூச்சிரைக்க ஓடி வந்த அவங்க, "ஒண்ணுமில்லமா, தீ பிடிக்காத நல்ல கட்டைகளை தனியா எடுத்து வெளில வீசுறோம், இல்லைனா அதும் எரிஞ்சிடும்"  னு சொல்ல எனக்கு பேச வாய் வரல. அவங்க கண்ணில் சுத்தமா உயிர் மீதான பயம் இல்லை...மாறாக கண் முன்னே சேதமாகும் பொருளை காப்பாற்ற முடியலையே என்ற வருத்தம்  மட்டுமே தெரிந்தது.   

சுற்றிலும் சூழ்ந்த (மருந்து)புகையால்  தொண்டை அடைக்க எனக்கு இருமல் வந்துவிட்டது (ஆழமாக சுவாசித்துவிட்டால் மயக்க நிலைக்கு ஆளாக நேரும், கண் எரிச்சல், பாதிப்பு ஏற்படும்) 'நீங்க போங்கமா இங்க நிக்காதிங்க' என்று என்னை அங்கிருந்து போக வைப்பதில் கவனமாக இருந்த அவர்களின் அக்கறைக்கு முன்னால் யார் அங்கே முதலாளி !? முதலாளி என்ற எண்ணம் எனக்குள் சுத்தமாக அழிந்தே விட்டது !

இப்படி பட்ட தொழிலாளியை தான் நாம் சுலபமாக சொல்கிறோம் அப்பாவி மக்கள்னு...இத்தகைய மாமனிதர்களின் உழைப்பில், உயிர் தியாகத்தில் தான் பல முதலாளிகள் கொழுத்து திரிகிறார்கள்.

பணத்தை போடுவதுடன் முதலாளிகளின் வேலை முடிந்து விடுகிறது , ஆனால் தொழிலாளிகள் செய்யும் தொழிலை தாய்க்கும் மேலாக வழிபடுகிறார்கள். விபத்து நேரிட்டால் முதலாளிகளுக்கு நஷ்டம் பணம் மட்டும், ஆனால் தொழிலாளி தன் வாழ்க்கையை தொலைக்கிறானே...!? இந்த காலத்திலும் முதலாளி விசுவாசம் என்பது இன்னும் நீர்த்துபோகவில்லை.

சிவகாசி விபத்தில் ஒரேநாளில் எத்தனை குழந்தைகள்  அநாதையோ, எத்தனை பெண்கள் தாலியை , எத்தனை கணவன்வர்கள் மனைவியை, எத்தனை தாய்மார்கள் தங்கள் வாரிசுகளை இழந்தார்களோ !! வேதனை சூழ்ந்து விட்ட அவர்களின் வாழ்வை மீட்டு தர யாரால் முடியும்...?!

நிவாரண பிச்சை போட அதிகார கூட்டம்
அஞ்சலி செலுத்த ஒரு கூட்டம்
ஆறுதல் சொல்ல ஒரு கூட்டம்
வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்
அத்தனைக்கும்  நடுவில்
கையில் கேமராகளுடன் ஒரு கூட்டம்
எல்லாம் சில மணி நேரங்களில் காணாமல் போய்விடும்
அப்பாவிகள் இனி அனாதைகள் !!

'சிவகாசியில் சரியான மருத்துவமனைகள் இல்லை' இப்படி சொல்றது ரோட்ல போற யாரோ இல்ல விருதுநகர் எம்.எல்.ஏ !! அதுவும் எதிர்கட்சி என்பதால் அவர்களுக்கு ஆளும் கட்சியை குறை சொல்ல கிடைத்த ஒரு வாய்ப்பு. பதவியில் அமரவைத்த மக்களின் அடிப்படை வசதி எது குறை, என்ன என்ன இல்லை என்று இத்தனை மாதமாக ஏன் இவர் பார்க்கவில்லை...! 'சொன்னோம், மேலிடம் கவனிக்கவில்லை' என்பார்கள்...! ஓம்சக்தி  முதலாளி ஆளுங்கட்சி கவுன்சிலர் !! பேஷ் இப்படிதான் இருக்கணும்...!! 

அரசியல்வாதிகள் , அதிகாரிகள் மத்தியில் மக்கள் விளையாட்டு பொம்மைகள்...சுற்றிலும் ஆபத்தான தொழில்சாலைகள் இருக்கும் ஊரில் தீவிபத்து தனி பிரிவு உள்ளடக்கிய,அனைத்து வசதிகள் கொண்ட  சிறப்பு மருத்துவமனை இல்லை. சுத்தம்,சுகாதாரம்,பாதுகாப்பு எல்லாம் வசதியானவர்களுக்கு மட்டுமானப் பேச்சுக்கள்.  

முதலாளிகள் என்னும் மனிதநேயமற்றவர்கள் 

உரிய விதிமுறையின்(40 விதிமுறை மீறல்) கீழ் நடத்தப்படவில்லை என்று லைசென்ஸ் ரத்து செய்ய தெரிந்தவர்களுக்கு ஆலையை இழுத்து மூடி சீல் வைக்க மறந்து போய்விட்டது. மறக்கவைத்தது பணம் தரும் போதை. 

முதலாளிகள் அறைக்குள் பேசப்படும் பேரங்கள் பாவம் இந்த தொழிலாளிகளுக்கு எங்கே தெரியபோகிறது. நம்ம முதலாளி எல்லாம் சரியா முறைப்படி  செய்து வைத்திருப்பார், நமக்கு ஒண்ணுனா  அவர் தானே பார்க்க போறார்...என்ற நம்பிக்கை. (இப்போது அவரையே அவர் பார்த்துக்க முடியாதபடி,எங்க  எப்படி இருக்கிறாரோ ??!)

மழை  இல்லை, விவசாய வேலை இல்லை , தீபாவளி சமயம் வேலை அதிகம் ஓவர்டைம் சம்பளம் தரேன் என்ற முதலாளிகளின் பசப்பு வார்த்தைகள் இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது கருகி போவதற்கு...!

ஏழை மக்களின் வாழ்வில் மட்டும் ஏன் மேலும் மேலும் இத்தனை கோரங்கள்...உயிர் இழந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். தீக்காயத்துடன் மருத்துவமனையில் இருப்பவர்களின் உடலில் உயிர் ஓடும் ஒவ்வொரு நொடியிலும் மரண வேதனை ! நரகத்தை தவணை முறையில் தரிசிப்பார்களே.....! தீ நாக்குகள் தீண்டிய தேகத்தை தாயும் தீண்ட அஞ்சுவாள்...வெயிலில் வெறுங்கால் வைக்க அஞ்சுபவர்களுக்கு எங்கே புரியும்  பத்து மாதம் தான்   இவர்களுக்கும் என்பது !!

அரசையும் அதிகாரிகளையும் குறை சொல்லி ஆகபோவது ஒன்றுமில்லை. மனிதநேயம் மறந்த முதலாளிகளே  முழு பொறுப்பு. பணத்தை மட்டுமே பார்க்கும் முதலாளிகள் திருந்தாதவரை இது போன்ற விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கும். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தொழிலாளிகளின் நலன் முக்கியம் அதற்கு பின்தான் லாப கணக்கு என என்று ஒவ்வொரு முதலாளிலும் நினைக்கிறானோ அன்று தான் தொழிலாளர்களின் வாழ்வு விடியும். அதை தவிர எந்த சட்டங்களும் மக்களை பாதுகாக்க முடியாது. போடப்பட்ட சட்டங்களை எப்படி வளைப்பது என்று முதலாளிகளுக்கு  நல்லாவே தெரியும். 

இதுவரை நடந்த பட்டாசு ஆலை விபத்துகள் விபரம்:


1998ம் ஆண்டு சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 150 பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.
2002ம் ஆண்டு கோவில்பட்டியில் 16 பேர் பலி
2005ம் ஆண்டு மீனாம்பட்டியில் 20 பேர் பலி
2006ம் ஆண்டு பர்மா காலனியில் 12 பேர் பலி
2007ம் ஆண்டு நாராயணபுரத்தில் 4 பேர் பலி
2009ம் ஆண்டு மதுரை வடக்கம்பட்டியில் 19 பேர்,
நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர்,
சிவகாசியில் 3 பேர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேர் பலி
2010ம் ஆண்டு சிவகாசியில் 8 பேர் பலி
2011ம் ஆண்டு விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடியில் 14 பேர் பலி
                                                                                                       (தகவல் -இணையம்)

இப்படி வருடந்தோறும் மனிதர்கள் கருகிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் தீபாவளி கொண்டாடி கொண்டுதான் இருக்கிறோம். 

யார் அப்பாவி?

ஏழை மக்கள் பாதிக்கபடுகிறார்கள் என்றதும் வெகு சுலபமாக 'பாவம் அப்பாவி மக்கள்' என்று சொல்வது படு அபத்தம். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இப்படியே சொல்லியே  அவர்களை ஓரங்கட்டுவது. ஓட்டு போட, கொத்தடிமையாய் உழைக்க மட்டும் இவர்கள் வேண்டும்.இவர்களின் உழைப்பில், ஓட்டு பிச்சையில் வாழ்ந்து கொண்டு சொல்கிறோம் அப்பாவிகள் என்று. அனுதாபம் என்ற பெயரில் அவர்களை தயவுசெய்து இனியும் இப்படி சொல்லாதீர்கள். அவர்கள் நமக்கெல்லாம் மேலே, நம்மைவிட மிக பெரியவர்கள் அப்படி எண்ணி அவர்களை நடத்துவோம்...இயற்கை நம்மை வாழ்த்தட்டும்...!!

எதற்கு எதை முடிச்சு போடுவது   என சிலர் நினைக்கலாம், அதிகார வர்க்கத்தினருக்கு பல்லக்கு தூக்கி மனிதர்களின் எதிர்ப்பை சம்பாதித்து அவர்களின் அச்சத்தை அலட்சியம் செய்து பின் யாருக்காக மின்சாரம் ?! என்றாவது ஒருநாள் கூடங்குளத்தில் ஒரு குரல் கேட்கக்கூடும் "அப்பாவிகளே உடல் தாருங்கள், நெருப்புக்கு பசி இன்னும் அடங்கவில்லை !!?"

மனிதத்தை தொலைத்துவிட்டு எங்கே சென்று எதை சாதிக்கபோகிறோம்...! எதிர்பார்ப்புகள் இன்றி ஏற்றத்தாழ்வுகள் பாராமல் சக மனிதர்களை நேசிக்கும் உள்ளம் அனைவருக்கும் வேண்டும் எங்கள் இறையே...!

இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற வெற்று வார்த்தைகள் இனியும் எதற்கு...!? சக மனிதனை உள்ளன்போடு உண்மையாக நேசியுங்கள், அது போதும் !!


                                                                                    * * * * *

படங்கள்  - நன்றி கூகுள் 

செவ்வாய், செப்டம்பர் 4

பதிவுலகத்தில் முகமூடி மனிதர்கள்...! உறவுகளை கொச்சைப்படுத்தாதிங்க...!


இரண்டு வருடங்களுக்கு மேலாக பதிவுலகம் மூலம் பெற்றவை நிறைய அனுபவங்கள், படிப்பினைகள், நட்புகள், சகோதர உறவுகள் பெயரில்  மனிதர்கள் ! ஆம் மனிதர்கள்...பல்வேறு விதமான முகங்கள் கொண்ட மனிதர்கள்...இணையத்துக்கு வெளியே இருக்கும் அதே மனிதர்கள் தானே இங்கேயும், இவர்களை படித்தவர்கள், பண்பட்டவர்கள் என்று எண்ணினால் அது நம்பியவர்களின் தவறு என்கிறது பதிவுலகம். அதிலும் சகோதர உறவு பாராட்டி பழகியவர்களின் நிஜ(?)முகம் பற்றி தெரியவரும் போது பெண்கள் அடையும் மனவேதனை மிக அதிகம்.

சகோதரி என்று அழைத்தால் மனதிலும் அவ்வாறுதான் எண்ணுவார்கள் என்பதற்கு மாறாக அதே பெண்ணை பற்றி தன் நண்பர்கள் மத்தியில் குறிப்பிட்டு கிண்டல் செய்து மகிழ்கிறார்கள் என்று தெரியவரும் போது 'உறவுகளின் உன்னதம்' தெரியாத உன்மத்தர்கள் என்று சொல்வது தான் சரி. இதை பற்றிய ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பதிவுலகத்தில் ஒருவரைவிட ஒருவர் பெரியவர் என்று காட்டிகொள்வதில் நடக்கும் ஈகோ யுத்தத்தில் சகோதர உறவுகளும் தப்புவதில்லை.  

அண்ணன் என்ன? தம்பி என்ன? 

பொதுவாக  நம்ம ஊர் வளர்ப்பு எப்படி என்றால் அண்ணனோட நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அம்மா சொல்வாங்க 'அண்ணன்னு கூப்பிடு' நாமளும் அதையே பாலோ பண்ணுவோம் (ஒன்னு இரண்டு, அண்ணன் பிரண்டை லவ் பண்ணி செட்டில் ஆகிடுவாங்க...அது வேற விஷயம்!) :)

அண்ணன் தம்பியருடன் பிறந்த பெண்கள் பிற ஆண்களுடன் சகஜமாக பேசுவார்கள், தயங்க மாட்டார்கள்.  தன்னைவிட  மூத்தவர்களை அண்ணன் என்றும் இளையவர்களை பெயர் சொல்லியும் தம்பி என்றும் அழைப்பார்கள். கூட பிறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருந்தால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளி ஆண்களுடன் பழக மாட்டார்கள் என நினைக்கிறேன்.

பதிவுலகம் பொருத்தவரை புதிதாக பேசக்கூடிய ஆண்களிடம் ஒரு பாதுகாப்புக்காக அண்ணன், சகோனு சொல்லிக்கிறோமா அல்லது எதுக்கு வம்பு இப்படியே கூப்டுவோம் என்றோ இருக்கலாம்...அவரவர் விருப்பம்.

என் சகோதரர்கள் 

'செல்வா ஸ்பீகிங்' செல்வா அண்ணனை முதல் அறிமுகத்தின் போது சார்னு கூப்ட்டு பேசிட்டு, கிளம்புற சமயம் 'சார்னு சொன்னா நல்லா இல்ல, உங்களை அண்ணன்னு சொல்லட்டுமா' என கேட்டேன்... அவரும் 'தன்னியனானேன் தங்க்ஸ்' என்று கூறிவிட்டார். அப்புறம் என்ன, ஒரு வருஷமா இரண்டு பேரும் பேசாம இருந்த நாட்கள் ரொம்ப குறைவு என்ற அளவுக்கு ஆகிபோச்சு. என்னை  உற்சாகபடுத்தி எனது சமூக சேவைகள் தொடர உறுதுணையாக இருக்கும் அருமையான அண்ணன் இவர்...! 

இன்னொருத்தர்  'உணவு உலகம்' சங்கரலிங்கம் அண்ணா  'என்கூட பிறந்தவங்க எல்லோரும் ஆண்கள் , அக்கா தங்கை கூட பிறக்கலைன்னு வருத்தம் நிறைய உண்டு அந்த குறை இனி இல்லை'னு சொல்லி உரிமையாக தங்கையாக்கி கொண்டவர். டிரஸ்ட் தொடங்க தைரியம் கொடுத்த அன்பான நல்ல மனிதர் !

அப்புறம் ஒருத்தரிடம் முதல் முறையா சாட்டில் பேச, உடனே அவர் உங்க போன் நம்பர் கொடுங்க, டைப் பண்ண பொறுமை இல்லன்னு சொல்ல, "அடடா என்ன இது, ஆரம்பமே இப்படி, மத்தவங்க சொல்ற மாதிரி ஆள் ஒரு மாதிரி தானோ" என யோசிச்சு 'சரி பார்த்துக்கலாம்'னு நம்பர் கொடுத்து பரஸ்பரம் அறிமுகம், பதிவுலகம் என்று பேச்சு போனது. அப்புறம் எப்போவாவது பேசி கொண்டதுண்டு. "என்கிட்டே பேசுறதா வெளில சொல்லாதிங்க, உங்களையும் ஒரு லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க" என்று சிரித்துக்கொண்டே ஒருநாள் சொன்னார். பதிவுலகத்துல ரொம்ப நல்ல பேர் தான் எடுத்திருக்கிறார் போலன்னு உள்ளுக்குள் ஒரு உதறல். பேர் சொல்லி பேசிக்கொள்வோமே தவிர நண்பர் என்றோ, சகோதரன் என்றோ சொல்லிகொண்டது இல்லை. ஒருநாள் போன் செய்து சொன்னார், "கௌசல்யா உங்களுக்கு மருமகள் பிறந்திருக்கிறாள்" 

உறவுகளை எப்படி கையாளணும் என்கிற பண்பு தெரிந்தவர். முக்கியமாக முகமூடி போட்டுக்கொள்ளாதவர். தன்னை குறித்து யாரும் எதுவும் சொல்லிக்கொண்டு போகட்டும், கவலை இல்லை. நான் நானாகத்தான் இருப்பேன் என்பவர். சகோதரன் என்ற முகமூடி அணிந்து உள்ளுக்குள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக தெரிந்தார்.

பதிவுலகின் மூலம் நிறைய தம்பிகள் இருக்கிறார்கள்...பசுமைவிடியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் அவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதில் எனக்கு மகிழ்வுடன் ஒரு நிறைவு இருக்கு. பதிவுலகம் எனக்கு இதுபோன்ற நல்ல சகோதர உறவுகளை கொடுத்திருப்பதில் பெருமைபடுகிறேன்.

உறவுகளின் உன்னதம்

பொண்ணுங்க தங்களை டீஸ் பண்ற ஆண்களை திட்டும்போது 'அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா'னு கேட்பாங்க. அப்படி பிறந்திருந்தா சகோதர உறவின் அருமை தெரிந்திருக்கும், இப்படி இன்னொரு பெண்ணை டீஸ் பண்ண மாட்ட, அவளையும் உன் சகோதரியாக தான் நினைக்க தோணும் அப்டின்னு அர்த்தம் . (பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தை என்பதால்  இனி இப்படி திட்ட முடியாது போல...!?)

ஒரு  பெண் ஆணுடன் சகஜமாக பேசுகிறாள் என்பதால் அவளை பற்றி அடுத்தவரிடம் எப்படியும் பேசலாம் என்கிற உரிமையை யார் கொடுத்தார்கள்...?!

பேச்சுக்கு பேச்சு சகோ, அக்கா என்று அழைத்து பழகியவர்கள் தன் நண்பர்களிடம் பேசும் போது அந்த  பெண்ணை குறித்து விமர்சிப்பது எத்தகைய துரோக செயல் ! வெறும் உதட்டளவில் மட்டும் தானா உறவுகள் ??!  இவர்களை பற்றிய உண்மை தெரியும் போது அந்த பெண்ணின் மனநிலை ??! இப்படி பட்டவர்கள்  பெண்களை கேலி செய்யட்டும் தவறில்லை, அதற்காக சகோதர உறவு கொண்டாடாமல் சாதாரணமாக யாரோ எவரோ என்று பேசிவிட்டு போகலாம். 

இங்கே ஒரு நடிப்பு அங்கே ஒரு நடிப்பு என்று ஆளுக்கொரு வேடம் தரிக்கும் இவர்களை போன்றவர்கள் பிறரை மட்டுமல்ல தங்களையும் ஏமாற்றி கொள்கிறார்கள்...!!

சகோதரன்

சகோதர  அன்பு சாதாரணமானது அல்ல...அண்ணனை அப்பா ஸ்தானத்திலும் தம்பியை மகனாகவும் பாவிக்கிறவள் பெண். உடன் பிறந்தவர், அடுத்தவர் என்ற பேதம் சகோதர அன்பிற்கு கிடையாது. அண்ணன் என்றால் அண்ணன் தான் அதை தவிர்த்து வேறு எதையும் யோசிக்க மாட்டாள் ஒரு நல்ல பெண்...ஒரு குழந்தையாய் விசயங்களை பகிர்வதாகட்டும், சிக்கல்களை சொல்வதற்காகட்டும் முதலில் சகோதரனை தான் தேடுவாள்.

நட்புகளிடம் சொந்த விசயங்களை பகிர மிக யோசிப்பவள், தன்னை சகோதரி என்று அழைக்கும் ஆணிடம்  தயங்காமல் கூறிவிடுவாள். சகோதர பாசம் துரோகமிழைக்காது  என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை.

சகோதர அன்பு ஒருவர் செய்யும் தவறினை எளிதாக கண்டுபிடித்து ஒருவரை நல்வழி படுத்தவும் , சரியான பாதையில் வழிநடத்தி செல்லவும் உதவும். 

உலகின் உன்னத உறவு சுயநலமில்லாத உறவு, ஆதரவாய் தோள் கொடுக்கும் உறவு சகோதர உறவு. இந்த உறவு அமையபெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் இதே உறவை சிலர் தங்கள் விருப்பம் போல் கையாளுவது ஏனோ தெரியவில்லை.

கிடைத்த நல்ல உறவை தக்கவைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி தன்னை நேசிக்கும் உன்னத உறவை  ஈகோ, பொறாமை, சுயநலம், தற்பெருமை போன்றவற்றுக்காக இழந்துவிடுகிறார்கள்.

சகோதரி ஸ்தானத்தில் வைத்து பேசிகொண்டிருக்கும் ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்து கேலி பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்து பேசுவது போன்றதை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்வார்களா ?! நிச்சயம் செய்ய மாட்டார்கள். உடன்பிறப்பின் மானத்தை  மட்டும் தான் காப்பார்கள், பிற பெண்கள் எப்படி போனால் நமக்கென்ன, யாரோ தானே என்ற இளக்காரம் !! இப்படி பட்ட வக்கிர புத்தி இருக்கிற ஆண்கள் யாரையும் சகோதரி என்று அழைக்காமல் இருப்பது உத்தமம்.

ஆண் பெண் யாராக இருந்தாலும்...

பெண்களை மட்டம் தட்டி பேசணும், அதுவும் பொது இடத்தில் என்றால் போதும் சில ஆண்களுக்கு எங்கிருந்து வீரம்(?) வருகிறதோ தெரியவில்லை...பெண்களை குறைத்து பேசி தங்களுக்கான மதிப்பை உயர்த்தி கொள்கிறார்களாம். எப்படி புரியும் அந்த இடத்தில் தான் தங்களது மதிப்பு குறைய போகிறது என்று !!

வேடம் கலைந்தபின் அவர்களின் ஒவ்வொரு நாளும் நரகலின் மீது தான் என்பது மட்டும் உண்மை.

மனதில் சகோதரி என்று எண்ணாமல் வாயினால் அந்த வார்த்தையை உச்சரிக்க எப்படி முடிகிறது. யாரிடம் வேண்டுமானாலும் முகமூடி இட்டு நடியுங்கள். சகோதரனாய் எண்ணி பழகும் பெண்ணுக்கு எதிராக நடந்து சகோதர உறவை தயவுசெய்து கொச்சைபடுத்தாதீர்கள்.
                                                      
பதிவுலகம் என்று இல்லை வெளியிடங்களிலும், ஆண், பெண் எல்லோருக்கும் நிஜ முகம் வேறு என்பதை மனதின் ஒரு ஓரத்தில் வைத்தே பழக வேண்டிய நிலை தற்போது இருக்கிறது . வெளியில் தெரியும் முகம் தான் உண்மையானது என்று முழுமையாக நம்பி ஏதோ ஒரு சூழ்நிலையில் உண்மை தெரிந்து வேதனை படுவதை விட, எத்தகைய மனிதர்களிடத்தும் பழக நம்மை தயார் படுத்தி வைத்துகொள்வது நலம். 
                                                      
                                                         மனிதன் இங்கும் அங்கும் 
எதையோ தேடி
ஓடிக்கொண்டே இருக்கிறான்...
சத்தியமாக என்றோ 
தொலைத்த மனிதம் தேடி அல்ல !                    உத்தமர் வேடம் கன கச்சிதம்
கலையாத வரை... 
பேச்சிலும் புழு நெளிகிறது
கலைந்த பின்...!
                                                          
சக மனிதனை கீறிக் கிழிப்பது
பொழுதுப் போக்காம்...
நகைச்சுவை என்ற                                                சப்பைக்கட்டுகள் 
ஆறுதலாம்...!
                                                         
                                                           நம்பிக்கையுடன் பகிர்வதை
அடுத்தவருக்கு 
கடத்திவிடும்
நரம்பில்லா 
நம்பிக்கை துரோகி...!
பாழும் மனதினுள்ளே
பலவித வஞ்சகங்கள்..
பாழும் மனிதா
வாழும் வரை பொய்யன்
கொள்ளி இன்றி வெந்துச் சாவாய்
பிறரின் வயிற்றெரிச்சல் தீயில்...!
                                                   
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் உறவுகளை
ஒவ்வொன்றாக
களைய முயன்றால்  
அனாதையாகிவிடுவேன் 
ஒருவருமின்றி...!

அதனால்  
கச்சிதமாக பொருந்தும்
முகமூடி ஒன்றைத் 
தேடி எடுத்து
பத்திரப்படுத்திக் கொண்டேன்
தேவைப்படுகிறது
இனி எனக்கும்...!?

 * * * * * * * * * * * * * * * * *



படம் -நன்றி கூகுள் 

வியாழன், ஆகஸ்ட் 23

சென்னையில் 'பதிவர்கள் மாநாடு' ! நடக்கப்போவது என்ன...?!

Tamil bloggers meet in Chennai

தமிழ் பதிவுலகமே திரண்டு ஒரு விழாவை முன்னெடுக்கிறது. விழா குறித்த விவரங்கள் தொடர்ந்து பலரின் தளங்களில் வெளியிடபட்டு வருகின்றது. ஒவ்வொன்னையும் படிகிறபோது எனக்கு ஒரு வித படப்படப்பே  வந்துவிட்டது. எவ்ளோ பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள் எப்படி, என்னவெல்லாம் நடக்க போகிறதோ என ஒரே சிந்தனை. நெருங்கி வர இருக்கிற மகளின் திருமண நிகழ்வுக்காக பெற்றோர்கள் எத்தகைய மனநிலையில் இருப்பார்களோ அது போன்ற ஒரு நிலை. உண்மையில் இது எனக்கு ஆச்சர்யம். விழா ஏற்பாடுகளுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, கலந்து கொள்ளவும் இயலாது என்கிறபோது என்ற எனக்குள் ஏன் இப்படி...!? ஒரே ஒரு காரணம் பதிவர்களில் நானும் ஒருவள்...!

சுலபமானது அல்ல 

ஒரு நாலு பேர் கலந்து கொள்ளும் நிகழ்வென்றாலும் அதற்காக எத்தனை மெனக்கிட வேண்டும் என்பது தெரியும். தவிர சந்திப்பு நல்ல படியாக நடக்க வேண்டும், நடந்து முடிந்த பின்னும் அதை குறித்த எதிர் விமர்சனங்கள் வந்தால் அதையும் சந்திக்க வேண்டும். இன்னும்,

எத்தனை சங்கடங்கள்...
எத்தனை சிரமங்கள்...
எத்தனை அவஸ்தைகள்...
எத்தனை கேள்விகள்...
எத்தனை பதில்கள்...
எத்தனை சமாளிப்புகள்...
இப்படி பல எத்தனைகள் !! 

அத்தனைகளையும் சரிகட்டி நடத்தி முடிப்பது என்பது லேசான காரியம் இல்லை. 'ஆமாம் என்ன பெரிய சந்திப்பு?' என்று சுலபமாக யாரும் பேசி விடலாம்...இப்படி அங்கலாய்க்க மட்டும் தான் தங்களுக்கு முடியும் என்பது தெரிந்தும்...!!  

நாங்களும் நடத்துவோம்ல மாநாடு

தமிழர்கள் இருவர் சந்தித்தால் ஒருவர் காலை ஒருவர் வாரிவிடுவதிலேயே கவனமாக இருப்பார்கள் என்ற ஒரு நல்ல(?) பெயர் நமக்கு இருக்கிறது...அதை மாற்றிக்காட்டி கொண்டிருப்பவர்கள் தமிழ் பதிவர்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சிலர் விதிவிலக்கு, ஆனால் ஒரு குடும்பமாக கருத்துக்களை பரிமாறி, நிறைகுறைகளை விவாதித்து பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு மெல்ல நகர்த்தி கொண்டிருக்கிறார்கள் பதிவர்கள். அதனால் தான் பல வார, மாத  பத்திரிகைகள், தினசரிகள் இணையத்தில் வெளியிடப்படும் துணுக்குகள்,கட்டுரைகள், படங்கள், பதிவர்கள் பேட்டிகள் என வெளியிட்டு தங்கள் சர்க்குலேஷனை தக்கவைத்து கொண்டிருக்கின்றன.

இப்படி பட்ட பதிவுலகத்தினரின் மாநாடு என்றால் சும்மாவா...பதிவுலகத்தினர் தவிர பிறரின் பார்வையும் ஞாயிறன்று நடக்க போகும் மாநாட்டை நோக்கித்தான் இருக்கப்போகிறது. 

நடக்க போவது என்ன...? 

ஏற்கனவே இப்படி ஒரு மாநாட்டை நடத்தவேண்டும் என்ற பல முறை சிந்தித்து, பேசி இப்போது சாத்தியமாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொன்றும் கலந்தாலோசித்து சரியாக திட்டமிடப்பட்டு  செயல்படுத்தபடுகிறது என்பதை அது குறித்த பதிவுகளை படிக்கும் போது  தெரிகிறது. வெளியூர்களில் இருந்து வர இருக்கிறவர்களின் தங்கும் வசதிக்கான  ஏற்பாடுகள்  செய்து இருக்கிறார்கள்.விழாவில் என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என பார்ப்போம்.....

* கவியரங்கம் இருக்கிறது, இணையத்தில் கவிப்பாடி மயக்கியவர்கள் நேரில்...!! கண்டு ரசிக்க போகிறவர்கள் பாக்கியசாலிகள். 

 * மூத்த பதிவர்களுக்கு பாராட்டும், மரியாதை செய்வித்தலும் நடக்க இருக்கிறது.

*  இணையத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது.

 * அன்றைய தினம் ஸ்பெஷலாக டிஸ்கவரி புத்தக நிலையம் புத்தக கண்காட்சி நடத்த இருக்கிறது, பிரபலங்கள் எழுதிய புத்தகங்களை அரங்கிலேயே பெற்று கொள்ள வசதிகள் செய்யப்பட இருக்கிறதாம். வாங்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் உண்டாம்.

* சிறந்த பதிவர் ஒருவருக்கு லட்ச ரூபாய் வரை பரிசு கொடுக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இவையெல்லாம் முக்கிய துளிகள். ஏற்பாடுகளை பார்க்கும் போது மாநாடு வெகு பிரமாண்டமாய் இருக்க போவதென்னவோ உண்மை. கண் எல்லாம் படாது அதுதான் திருஷ்டி ஏற்கனவே கழிஞ்சி போச்சே !! (சரியாதான் சொல்றேனா ?!) :)

(மாநாடுனா ஏதாவது தீர்மானம் போடுவாங்க, இங்க அப்படி ஏதும் உண்டா...?!) :)

களைக் கட்ட போகிறது !!

விழா வரும் ஞாயிறு(26/8/12) அன்று காலை 9.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. வெளியூர்களில் இருந்து செல்ல இயலவில்லை என்றாலும் சென்னையில் இருக்கும் 'இதுவரை சம்மதம் தெரிவிக்காதவர்கள்' இருந்தால் அவசியம் சென்று கலந்துக் கொள்ளுங்கள்...பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதை எல்லாம் இந்த நேரத்தில் புறந்தள்ளிவிட்டு தமிழர்கள் இணையும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வது நமது கடமை என எண்ணி செல்ல முயற்சி செய்யுங்கள். நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதங்கள் ஒருவேளை இருந்தாலும் இந்த ஒருநாளில் அதை எல்லாம் சற்று மறந்து ஒரே மனத்தினராய் பங்குபெறும்போது நம் மனதிற்கு அது உற்சாகத்தை  கொடுக்கும். நம்மை புதுபித்துகொள்ள ஒரு நாளாக நிச்சயம் அமையும் !!  அமையட்டும் !!



                                                                                                                                   
கலந்துகொள்ளப் போகும் பதிவர்கள் பெயர் விபரங்கள் :

இறுதி பட்டியல்
 
சி. பி. செந்தில்குமார், ஈரோடு
சங்கவி, கோவை 
நண்டு@நொரண்டு, ஈரோடு
சுரேஷ், கோவை
பரமேஷ், ஈரோடு
கோவி, கோவை
ஜீவா, கோவை 
கோவை சரளா, கோவை 
சீனா அய்யா, மதுரை 
ரமணி, மதுரை 
சௌந்தர்திருவள்ளூர்
கருண், திருவள்ளூர்
ரஹீம்கசாலி, அரசர்குளம்
பிரகதீஸ், பெரியகுளம்
கதிரவன், சேலம் 
ரேகா ராகவன், சென்னை 
கேபிள் சங்கர், சென்னை
உண்மைத்தமிழன், சென்னை 
சசிகுமார், சென்னை 
சிவக்குமார், சென்னை 
பிரபாக்கரன் சென்னை
மோகன்குமார், சென்னை 
ரிஷவன், சென்னை 
டி. என். முரளிதரன் சென்னை 
வே. நடன சபாபதி, சென்னை 
சீனு, சென்னை 
இக்பால் செல்வன், சென்னை
ஆரூர் முனா செந்தில் சென்னை
சிராஜுத்தீன், சென்னை 
செல்வின், சென்னை 
சென்னை பித்தன், சென்னை 
புலவர் சா. இராமானுசம், சென்னை
பால கணேஷ், சென்னை
சசிகலா, சென்னை
மதிமதி, சென்னை
ஸ்ரவாணி, சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்சென்னை39. கணக்காயர்,சென்னை
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்சென்னை
ராசின்(நதிகள்) சென்னை 
புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை
அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை

லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை

காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை

மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)

குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை

கார்க்கி(சாளரம்) சென்னை  

விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை

மென்பொருள்பிரபு,சென்னை

அமைதி அப்பா,சென்னை

ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளைசென்னை

சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை

கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை

ராமு,சென்னை

ஷீ-நிசி கவிதைகள் சென்னை

வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை64

மாடசாமி(வானவில்)சென்னை

இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை

அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை

சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்

நிலவு நண்பன்,திருநெல்வேலி

மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்

ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்

நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி

தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை

கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
அருணன் கோபால்(கவிவனம்)
மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை

திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்

சரவணன்(குடந்தையூர்)
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
மணவை தேவாதிராஜன்,மணப்பாறை 

சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர

ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்

பலே பிரபு(கற்போம்)பெங்களூரு

சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு

கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை

தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்

சைதை அஜீஸ்,துபாய்

மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்

சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்  

இரா.தெ.முத்து(திசைச்சொல்) ,சென்னை

ரமேஷ் (சிரிப்பு போலீஸ் ) சென்னை

அகிலா(கோயம்புத்தூர்


மூத்த பதிவர்கள்


லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை 

ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 

 ரேகாராகவன்,சென்னை 

வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை

சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை

ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை

சென்னை பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
கணக்காயர்,சென்னை
கவியரங்கில் பங்குபெறுவோர்
சசிகலா(தென்றல்)சென்னை

மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்  

கோவை சரளா(பெண் எனும் புதுமை

கோயம்புத்தூர்ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை

சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்

அரசன்(கரைசேராஅலை)அரியலூர்

மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை

ரிஷ்வன்,சென்னை
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
மகேந்திரன்(வசந்தமண்டபம்)துபாய்

சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்

ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
கணக்காயர்,சென்னை

நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் கொடுக்காமல் இருந்தாலோ உடனடியாக  கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகணேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301

மோகன் குமார் snehamohankumar@yahoo.co.in
மெட்ராஸ்பவன் சிவகுமார்: madrasminnal@gmail.com
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

பெயர் பட்டியல் நன்றி - திரு சென்னைபித்தன்  அவர்கள்.

                                                         * * * * * * * * * * * * * * * *

சாதி, மத, இன,கொள்கை வேறுபாடுகள் இன்றி பதிவர்கள் என்ற ஒரே ஒரு  அடையாளத்தோடு மட்டும் நடக்க போகும் இதில் கலந்துகொண்டு தமிழ் பதிவுலகை பெருமைப்  படுத்துங்கள். அனைத்தும் குறைவின்றி நடைபெற்று முடிய எல்லாம் வல்ல தேவனிடம் என் பிரார்த்தனைகள் ! விழாவினை மாநாடு போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நேச உறவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...! விழா வெற்றி பெற  என் வாழ்த்துக்கள்...! 

                                                           வெல்க தமிழ் !
                                                              


பிரியங்களுடன்
மனதோடு மட்டும் 
கௌசல்யா  



 

செவ்வாய், ஆகஸ்ட் 21

எத்தனை ஆச்சர்யங்கள் !! மரங்களும் நம் முன்னோர்களும்...!


மரம் வெட்டாதே என்று எத்தனை சட்டங்கள், கட்டுபாடுகள்  போட்டாலும் வெட்டுபவர்கள் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள். அதனையும் ஒரு உயிராக பார்க்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.  வெப்பமயமாதல் குறித்து உலகம் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்ட இன்றைய நாளில் ஓடி ஓடி மரங்களை வளர்க்கிறோம், வளர்க்கச்  சொல்லி விழிப்புணர்வு கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் மரத்தை நடுவது முக்கியம் அல்ல...முதலில் இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுக்காக்க வேண்டும். ஒரு மரம் நன்கு வளர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும், ஆனால் சிறிதும் சிந்திக்காமல் சில நிமிடங்களில் வெட்டி எறிந்து விடுகிறார்கள்...!!

மரம் வெட்டுவதை பெரிய பாவ செயலாக நம் முன்னோர்கள் கருதியதுடன் மட்டும் அல்லாமல் நடைமுறையிலும் செயல்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை பற்றி இணையத்தில் படித்த போது மிக பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. என் ஆச்சர்யங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.


சங்கப்பாடல்களில் பல அரிய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன...
அவற்றில் சில மட்டும் இங்கே...

* நறுந்தண் தகரம் வகுளம் இவற்றைவெறும்புதல் போல் வேண்டாது " (திணைமாலை நூற்றைம்பது 24 )

இந்த பாடலில் "சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அந்த இடத்தில் விவசாயம் செய்பவர்கள் எத்தகைய கொடுமை செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளும் பிறர் படும் துன்பத்திற்கு வருந்தகூடியவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அத்தகையோரின் வீட்டு பெண்ணை விரும்புவதும், மணம் முடிப்பதும் சரி அல்ல, இது குறித்து கொஞ்சம் யோசி" என தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறான்.

மரங்களை வெட்டுவதை பற்றி இப்படி சொல்வதை கூட விடுங்க, 'மரங்களின் நுனி பகுதியை கூட கிள்ளகூடாது. அப்படி கிள்ளுவது அறமற்ற செயல்' என்பதை என்னவென்று சொல்ல...

" எம்நாட்டில் அறநெறி தவறி நடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது " தன் நாட்டின் சிறப்பை பற்றி தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இதை போன்று மற்றொரு பாடல்,

நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரித்து
கண்டல் அம் மண் தில்லை  (திணைமாலை நூ.ஐ.61 )

இன்றைய அவசர யுகத்தில் சக மனிதனை எந்த அளவு சொல்லாலும் , செயலாலும் துன்புறுத்த முடியுமோ அந்த அளவிற்கு நடந்து கொள்ள சிறிதும் அஞ்சாமல் இருக்கிறோம். ஆனால் மரம், செடி கொடிகளை சக உயிராக எண்ணி அதனுடன் பேசுவதும் உரையாடுவதும், செல்லக் கோபப்படுவதும், கொஞ்சி விளையாடுவதும் என இருந்ததை பற்றி பாடல்களில் படிக்கும் போது பழந்தமிழர்களை எண்ணி பெருமைபடாமல் இருக்க இயலவில்லை.

ஒரு பாடலில் மரங்களுக்கு உயிர் இருக்கிறதாக குறிப்பிடுவதாக இருக்கும், 

உடன்போக்குச்சென்ற தலைவியைத் தேடியலையும் ஒரு செவிலித்தாய் வழியில் தென்படும் கொங்க மரத்தைப் பார்த்து "நீயும் ஒரு தாய், குலைகளை  ஈன்றிருக்கிறாய். என் நிலையறிந்து மனம் நெகிழ்ந்து மொழி வழி இல்லையாயினும் உன் முள் எயிற்றால் அவள் சென்ற வழிக்காட்டு " (திணைமாலை 150-65) என்கிறாள்.

பேசும் சக்தி இல்லாத மரங்களுக்கு உயிர் உண்டு, உணர்வு உண்டு, மனம் உண்டு அதனால் கூர்மையான முள் போன்ற விரலினால் அவள் சென்ற வழிக் காட்டு என கேட்கிறாள்.

அறியாமை என்பது இல்லை

இயற்கையை தங்களில் ஒரு பகுதியாக எண்ணி பேணிப் பாதுகாக்கும் மக்கள் நிறைந்த நாட்டில் அறியாமை என்பது எவ்வாறு இருக்கும் என நம்மை கேட்கிறது (ஐந்திணை ஐம்பது.8)  " நாடா கொன்றோ காடா கொன்றோ...எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே "

தாவரங்கள், நீர்நிலைகளின் மதிப்பை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்ந்து சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தி உள்ளனர் பண்டைய தமிழர்கள் !!

குடிநீரை பற்றிய அக்கறை 

இன்றைக்கு குடிநீரை பற்றி பெரிய அளவில் பேசிக்கொண்டு வருகிறோம். காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறோம்.ஆனால் அக்காலத்திலேயே நீரை காய்ச்சி பருகவேண்டும் என்று " குடிநீர் அட்டு உண்ணும்"(382) பழக்கத்தை அறிவுறுத்தியும்,வெயில் காலத்தில் புது மண் பானையை பயன்படுத்த வேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது.

எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோம் 

பலவிதமான சோப்,ஷாம்பூகளை உபயோகித்து குளித்து, துணி துவைத்து என ஆற்றுநீர் மாசுபட மக்களும் ஒரு காரணம். 'துறை இருந்து ஆடை கழுவுதல்  இன்னா' (இன்னா நாற்பது 23) , 'பொது இடத்தில் துப்பகூடாது' என்பதை ஆசாரக் கோவை 'இழியாமை நன்குமிழ்ந்தெச்சி அறவாய்' என்றும் சாப்பிடும் முன், பின் 'வாய் கழுவுதல் அவசியம்' என்றும், வைரஸ், மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுகிருமிகள் கண்களை பாதிக்காமலிருக்க பிறர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதை ' கண்ணெச்சில் கண்நூட்டார்' (ஆசாரக்கோவை 41)

இயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கப்படுவதின் சிறப்பு பற்றி நாலடியார், 'வேம்பின் இலையுள் கனியினும் வாழை தீஞ்சுவை யாதும் திரியாதாம்'(244)என்ற பாடல் மூலம் வேப்ப மர இலைகளுக்குள் பழங்களை பழுக்க வைப்பது தான் சிறந்த முறை என்கிறது (வயிற்றை கெடுக்கும் கார்பைட் கல் நினைவுக்கு வருகிறது)

ஆழிபேரலை

சுனாமி வந்தப்போது முதல்முறையா புதுசா வந்த மாதிரி பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்...ஆனால்  நம் பண்டைய வரலாறுகளை சரியாக படித்திருந்தோமென்றால்  சுனாமி என்பதை பற்றிய ஒரு விழிப்புணர்வு நமக்கு இருந்திருக்கும்...

மாத்தளை சோமு என்பவர் தனது புத்தகமான 'வியக்கவைக்கும் தமிழகம்' என்பதில் தமிழ்நாட்டை 7 ஆழிபேரலைகள் தாக்கி உள்ளதை குறிபிடுகிறார். சங்ககாலத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களை விற்றூற்று மூதெயினனார் (குறுந்தொகை 372) எழுதியுள்ளார்.'கடுவளி' என்றழைக்கப்பட்ட பேய்க்காற்று பனைமரத்து மடல்களைக் குருத்தோடு அடித்துச் சென்றுவிடும் ஆற்றலுடையது. இப்படி வீசி எறியப்பட்ட  மடல்கள் வெகு தொலைவில் உள்ள மலை உச்சியில் காய்ந்து கொண்டிருக்கும்... இக்காற்றினால் கடற்கரை மணலானது வெகுதொலைவிற்கு மேலேஎழும்பி பின் வீசியடிக்கப்படும்.அவ்வாறு வீசியெறியப்பட்ட மணலானது அருவியில் நீர் கொட்டுவது போல மணலைக் கொட்டும். இக்காட்சியை அயிர் சேற்று அருவி என்று குறிப்பிடுகிறார் (குறுந்தொகை 372)

பாதிப்பை பலமுறை சந்தித்துள்ள தமிழர்கள் அதற்கான தீர்வுகளை இயற்கையே வழங்கி இருப்பதையும் அறிந்து வைத்துள்ளனர். சுனாமியால் பாதிக்கப்படாத அளவில் ஊர்களை வடிவமைத்துள்ளனர்...சங்க இலக்கியங்களில் அத்தகைய ஊர்களை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன... முக்கியமாக மூன்று கடல்கள் சூழப்பட்டுள்ள தென் பகுதியே பாதிக்கப்படும் என்பதை அறிந்தே இப்ப பகுதிகளில் தாழை  மரங்களை வளர்த்து வந்துள்ளனர்.


(வேதிப்பெயர் - pandanus odoratissimus இம்மரத்தின் சிறப்பை பற்றி தனிப் பதிவு எழுதணும், அவ்ளோ விஷயம் இருக்கிறது)
  
கண்டல் மரங்களும் தாழை மரங்களும் கடலோர பகுதியில் தடுப்பணை போல இருந்து வந்துள்ளன...நம் முன்னோர்களும் இதை அறிந்து வளர்த்து வந்துள்ளனர் என்று எண்ணும்போது என் பிரமிப்பு இன்னும் அதிகமாகிறது...

ஆனால் முன்னோர்கள் சொல்லி சென்றவைகளை எல்லாம் விட்டுவிட்டு மந்திரத்துல மாங்காயப்பழுக்க வச்சிடலாம்னு விஞ்ஞான ஆராய்ச்சி பண்ணிட்டு வானத்தை பார்த்துட்டு   இருக்கிறோம் !!

சுனாமியால் பாதிக்கபட வாய்ப்பில்லாத ஒரு ஊர் இருந்ததாம்...அதன் பெயர் கண்டவாயில் (கண்டல்வேலி)

"புதுமணற் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்கு தொறும் குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும் தென்கடல்
கண்டல் வேலிய ஊர்" (நற்.74.7)

இவ்வூரைச் சுற்றி உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்கள் இருக்கும்,  இதன் கடற்கரை முற்றிய பனைமரங்கள் மணல்மேட்டில் முள்வேலி இட்டது போல சூழப்பட்டிருக்கும்.


பனைமரங்கள், ஞாழல், தாழை, புன்னைமரங்கள் போன்றவை கடற்கரைகளை சுற்றி அடர்ந்த வேலிபோல் அமைந்து சுனாமி பேரலைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும். இப்படி பட்ட மரங்களால் சூழப்பட்ட சோலைகளை நாட்டு வேலி, பெருநீர்வேலி,கண்டல்வேலி என பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
இதை பார்க்கும் புலவர்க்கு மதில்கள் சூழ்ந்த அரண்மனை கோட்டையை போல தோன்றுகிறதாம்.

அயில்திணி நெடுங்கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட எயில் இடுகளிறே போல் " (கலி.135.3-5)

பேரலைகள் - போர்யானைகள்
அரண்மனை கோட்டைகள் - கண்டல் சோலைகள்

மோதுற அலைகளோட கதி??

"பெருநீர்க்கள் பொறு சிறுனுரை மெல்ல மெல்ல இல்லாகுமே" (குறுந் 290.4-6)

இந்த சோலைகளில் மோதியதும் அவை சிறுநுரையை போல சிதறி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதாம்...

இது கற்பனையாக எழுதப்பட்ட வரிகள் அல்ல பேரலை சிறு நுரையாக மாற தாழையின் மடங்கிய தன்மைதான் காரணம் என்றும் தெளிவாக சொல்லி இருக்காங்க.

வணங்கிய  தாழை " (அகம்.128.1-2) என்ற பாடலில் காக்கும் கடல், அருள் மறந்து அழிக்க முற்படும் போது அதன் சினத்தைத் தணிக்க தாழையின் மடங்கிய தன்மையாலே  இயலும் என்று கூறுகிறது.

திரைமுதிர் அரிய தடந்தாட் தாழை (அகம்.131.3-5)

புன்னை,  தாழை இரண்டும் உறுதியானவை, பேரலைகளுக்கும் தாக்கு பிடிக்கக்கூடியவை. கடற்கரையோரங்களிலும், ஆற்றின் கரையோரங்களிலும் வளர்த்து வந்துள்ளனர். பரிபாடல் (12-6) இவற்றை கண்டிப்பாக வளர்க்கவேண்டும் என்று வற்புறுத்துகிறது.

என்ன தெரியும் இன்றைய மக்களுக்கு...?!

கடல் போன்ற சங்க பாடல்களில் மரங்களை குறித்து ஒரு துளி மட்டும் இங்கே சொல்லி இருக்கிறேன்...எத்தனை ஆச்சர்யங்கள் நம் முன்னோர்களிடம்...அவர்கள் வழி வந்த நாம் வழி மறந்து, முன்னோர்கள் சொன்னதையும்  மறந்துவிட்டோம். அவர்கள் வளர்த்து வணங்கி பராமரித்து வந்த மரங்களை, காடுகளை அழித்து சிதைத்து சின்னாபின்னபடுத்தி கொண்டிருக்கிறோம்...அவர்கள் செய்தவை எல்லாம் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின்  நல்வாழ்வை எண்ணி...ஆனால் நாமோ நாம் பெற்ற குழந்தைகளுக்கு கூட(?) நல்லதை விட்டு செல்ல இயலாதவர்களாக இருக்கிறோம்.

இருக்கும் மரங்களை வெட்டி வீடு கட்டி, அதன் பின்னர் மரக்கன்று நடுகிறோம்...வேடிக்கையாக இல்லையா !? இயற்கை கைகொட்டி சிரிக்கும் இந்த வேடிக்கை மனிதர்களை பார்த்து !!

"மரம் நடவில்லை என்றாலும் பரவாயில்லை !  
மரத்தை வெட்டாதே மனிதா, நீ அழிந்து போவாய் !!"         -  இயற்கை


                                                            SAVE TREES...! 
                                                                                       PLEASE !!


                                                                           * * * * * * *



படங்கள் - நன்றி கூகுள்