வெள்ளி, செப்டம்பர் 7

11:10 AM
20சிவகாசி என்றதும் பட்டாசு நினைவுக்கு வரும், கூடவே வெடித்து சிதறிய கருகிய உடல்களும்...  வருடாவருடம் இத்தகைய விபத்துகள் நடந்துகொண்டு இருக்கின்றன...தீபாவளியும் மகிழ்ச்சியுடன்(?) கொண்டாடப்படுகிறது. எதுவும் யாருக்காகவும் மாறப்போவதில்லை.  இதோ இப்ப நடந்த இந்த கோர விபத்து பத்தி 'பாவம் அப்பாவிகள்' என்று அனுதாபம் தெரிவித்து  இரண்டு நாள் பேசுவோம்  பிறகு புதிதாய் வேறு ஒரு பரபரப்பு செய்தி...!!
 
ஆனால் சில மணித்  துளிகளில் பொட்டல் காடாக மாறிய அந்த பிரதேசம், காற்றில் கலந்திருக்கும் நெடியுடன் கூடிய அந்த கந்தக வாசம்,  தீயில் வெந்த, கருகிய உடல்களின் வாடை அந்த பூமியை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது.

வெடி விபத்தை நேரில் பார்த்ததில்லை ஆனால் தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரும் விபத்துகளின் பாதிப்பை நேரில் கண்டு அதிர்ந்திருக்கிறேன். தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தே கோரமாக இருக்கும் என்றால் அதை விட பல மடங்கு வீரியம் உள்ள வெடிவிபத்து எத்தகைய மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எண்ணி உடல் நடுங்குகிறது. 

நினைக்காமல் இருக்க முடியவில்லை 

தீப்பெட்டி தயாரிக்க முக்கிய மூல பொருளான  குளோரேட் வைக்க தனி அறையும், சல்பர் பிற மருந்து பொருட்கள் வைக்க தனி அறையும் எல்லா தொழிற்சாலைகளிலும் இருக்கும். இதில் குளோரேட் மிக ஆபத்தானது...சிந்தி கிடப்பதின் மேல் கால் லேசா உரசினால் கூட பற்றிக்கொள்ளும். ஒரு பாக்டரியில் குளோரேட் எடுக்க அந்த அறைக்கு சென்ற ஒரு தொழிலாளி கை தவறுதலாக தராசு எடை கல்லை கீழே போட சிந்தி கிடந்த குளோரேட் சட்டென தீப்பிடித்து வெடித்து எரிய தொடங்கியது. தனியாளாக உள்ளே மாட்டிகொண்ட தொழிலாளியை  சிரமப்பட்டு (சிறிது நேரம் கழித்து) மீட்டு எடுத்தார்கள். இரண்டுநாள் கழித்து மருத்துவமனையில் உயிர் பிரிந்துவிட்டது.

அந்த இளைஞன் சிறுவயதில் இருந்து எங்கள் பாக்டரியில் வேலை பார்த்தவன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தான் அங்கே இடம் மாறினான். காதுகேளாத வாய் பேச முடியாத, அவனால் தீப்பிடித்த போது உதவிக்கு ஆட்களை கூப்பிட கூட இயலாமல் போய்விட்டது. அப்போது அவன் மனது எப்படி துடித்திருக்கும் !! தீப்பிடித்தால் கத்த கூட வாய்ப்பில்லாத ஒருவனுக்கு வேறு வேலை கொடுக்காமல் இந்த வேலைக்கு அமர்த்தியது யார் தவறு...! இறந்த பின் ஒரு லட்சம் கொடுத்தது அந்த நிர்வாகம். பணத்தை வழங்கி இறப்பினை, இழப்பினை மறக்கச் சொல்கிறது (முதலாளிகள்) சமூகம்!!

கண் முன் நிகழ்ந்த விபத்து 

ஒருமுறை எங்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை  நடந்து கொண்டிருந்த மதிய நேரத்தில், மருந்து கட்டைகள் அடுக்கி வைத்திருந்த பெரிய அறையில் தீப் பிடித்துவிட்டது. பெண் தொழிலாளி ஒருவர் கட்டையை (மருந்து குச்சிகள் அடுக்கி வைக்கப்பட்ட மரபிரேம்) மர ஸெல்ப்பில் இருந்து எடுக்கும்போது உரசி தீ பிடித்து விட்டது. அந்த பெண் அப்படியே கீழே போட்டுவிட்டு வெளியே (உடனே வெளியேறி விடவேண்டும் என்று ட்ரைன் பண்ணுவோம்) ஓடிவந்து விட்டாள். தீ மளமளவென பிற  ஸெல்ப்களுக்கும் பரவி விட்டது. சில நிமிடங்கள் கழித்து நான் சென்று பார்த்தபோது எட்டடி உயரத்துக்கு தீ எரிகிறது. நாலு பேர் வெளியே இருந்து Fire Extinguisher மூலமா அணைக்க முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது...

அருகில் போக முடியாத படி வெப்பம், புகை, மெதுவாக உள்ளே எட்டி பார்த்தேன் தீக்குள்  இரு கரிய உருவங்கள், "அங்க என்ன பண்றீங்க, வெளில வாங்க" பதறி நான் கத்த, மூச்சிரைக்க ஓடி வந்த அவங்க, "ஒண்ணுமில்லமா, தீ பிடிக்காத நல்ல கட்டைகளை தனியா எடுத்து வெளில வீசுறோம், இல்லைனா அதும் எரிஞ்சிடும்"  னு சொல்ல எனக்கு பேச வாய் வரல. அவங்க கண்ணில் சுத்தமா உயிர் மீதான பயம் இல்லை...மாறாக கண் முன்னே சேதமாகும் பொருளை காப்பாற்ற முடியலையே என்ற வருத்தம்  மட்டுமே தெரிந்தது.   

சுற்றிலும் சூழ்ந்த (மருந்து)புகையால்  தொண்டை அடைக்க எனக்கு இருமல் வந்துவிட்டது (ஆழமாக சுவாசித்துவிட்டால் மயக்க நிலைக்கு ஆளாக நேரும், கண் எரிச்சல், பாதிப்பு ஏற்படும்) 'நீங்க போங்கமா இங்க நிக்காதிங்க' என்று என்னை அங்கிருந்து போக வைப்பதில் கவனமாக இருந்த அவர்களின் அக்கறைக்கு முன்னால் யார் அங்கே முதலாளி !? முதலாளி என்ற எண்ணம் எனக்குள் சுத்தமாக அழிந்தே விட்டது !

இப்படி பட்ட தொழிலாளியை தான் நாம் சுலபமாக சொல்கிறோம் அப்பாவி மக்கள்னு...இத்தகைய மாமனிதர்களின் உழைப்பில், உயிர் தியாகத்தில் தான் பல முதலாளிகள் கொழுத்து திரிகிறார்கள்.

பணத்தை போடுவதுடன் முதலாளிகளின் வேலை முடிந்து விடுகிறது , ஆனால் தொழிலாளிகள் செய்யும் தொழிலை தாய்க்கும் மேலாக வழிபடுகிறார்கள். விபத்து நேரிட்டால் முதலாளிகளுக்கு நஷ்டம் பணம் மட்டும், ஆனால் தொழிலாளி தன் வாழ்க்கையை தொலைக்கிறானே...!? இந்த காலத்திலும் முதலாளி விசுவாசம் என்பது இன்னும் நீர்த்துபோகவில்லை.

சிவகாசி விபத்தில் ஒரேநாளில் எத்தனை குழந்தைகள்  அநாதையோ, எத்தனை பெண்கள் தாலியை , எத்தனை கணவன்வர்கள் மனைவியை, எத்தனை தாய்மார்கள் தங்கள் வாரிசுகளை இழந்தார்களோ !! வேதனை சூழ்ந்து விட்ட அவர்களின் வாழ்வை மீட்டு தர யாரால் முடியும்...?!

நிவாரண பிச்சை போட அதிகார கூட்டம்
அஞ்சலி செலுத்த ஒரு கூட்டம்
ஆறுதல் சொல்ல ஒரு கூட்டம்
வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்
அத்தனைக்கும்  நடுவில்
கையில் கேமராகளுடன் ஒரு கூட்டம்
எல்லாம் சில மணி நேரங்களில் காணாமல் போய்விடும்
அப்பாவிகள் இனி அனாதைகள் !!

'சிவகாசியில் சரியான மருத்துவமனைகள் இல்லை' இப்படி சொல்றது ரோட்ல போற யாரோ இல்ல விருதுநகர் எம்.எல்.ஏ !! அதுவும் எதிர்கட்சி என்பதால் அவர்களுக்கு ஆளும் கட்சியை குறை சொல்ல கிடைத்த ஒரு வாய்ப்பு. பதவியில் அமரவைத்த மக்களின் அடிப்படை வசதி எது குறை, என்ன என்ன இல்லை என்று இத்தனை மாதமாக ஏன் இவர் பார்க்கவில்லை...! 'சொன்னோம், மேலிடம் கவனிக்கவில்லை' என்பார்கள்...! ஓம்சக்தி  முதலாளி ஆளுங்கட்சி கவுன்சிலர் !! பேஷ் இப்படிதான் இருக்கணும்...!! 

அரசியல்வாதிகள் , அதிகாரிகள் மத்தியில் மக்கள் விளையாட்டு பொம்மைகள்...சுற்றிலும் ஆபத்தான தொழில்சாலைகள் இருக்கும் ஊரில் தீவிபத்து தனி பிரிவு உள்ளடக்கிய,அனைத்து வசதிகள் கொண்ட  சிறப்பு மருத்துவமனை இல்லை. சுத்தம்,சுகாதாரம்,பாதுகாப்பு எல்லாம் வசதியானவர்களுக்கு மட்டுமானப் பேச்சுக்கள்.  

முதலாளிகள் என்னும் மனிதநேயமற்றவர்கள் 

உரிய விதிமுறையின்(40 விதிமுறை மீறல்) கீழ் நடத்தப்படவில்லை என்று லைசென்ஸ் ரத்து செய்ய தெரிந்தவர்களுக்கு ஆலையை இழுத்து மூடி சீல் வைக்க மறந்து போய்விட்டது. மறக்கவைத்தது பணம் தரும் போதை. 

முதலாளிகள் அறைக்குள் பேசப்படும் பேரங்கள் பாவம் இந்த தொழிலாளிகளுக்கு எங்கே தெரியபோகிறது. நம்ம முதலாளி எல்லாம் சரியா முறைப்படி  செய்து வைத்திருப்பார், நமக்கு ஒண்ணுனா  அவர் தானே பார்க்க போறார்...என்ற நம்பிக்கை. (இப்போது அவரையே அவர் பார்த்துக்க முடியாதபடி,எங்க  எப்படி இருக்கிறாரோ ??!)

மழை  இல்லை, விவசாய வேலை இல்லை , தீபாவளி சமயம் வேலை அதிகம் ஓவர்டைம் சம்பளம் தரேன் என்ற முதலாளிகளின் பசப்பு வார்த்தைகள் இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது கருகி போவதற்கு...!

ஏழை மக்களின் வாழ்வில் மட்டும் ஏன் மேலும் மேலும் இத்தனை கோரங்கள்...உயிர் இழந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். தீக்காயத்துடன் மருத்துவமனையில் இருப்பவர்களின் உடலில் உயிர் ஓடும் ஒவ்வொரு நொடியிலும் மரண வேதனை ! நரகத்தை தவணை முறையில் தரிசிப்பார்களே.....! தீ நாக்குகள் தீண்டிய தேகத்தை தாயும் தீண்ட அஞ்சுவாள்...வெயிலில் வெறுங்கால் வைக்க அஞ்சுபவர்களுக்கு எங்கே புரியும்  பத்து மாதம் தான்   இவர்களுக்கும் என்பது !!

அரசையும் அதிகாரிகளையும் குறை சொல்லி ஆகபோவது ஒன்றுமில்லை. மனிதநேயம் மறந்த முதலாளிகளே  முழு பொறுப்பு. பணத்தை மட்டுமே பார்க்கும் முதலாளிகள் திருந்தாதவரை இது போன்ற விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கும். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தொழிலாளிகளின் நலன் முக்கியம் அதற்கு பின்தான் லாப கணக்கு என என்று ஒவ்வொரு முதலாளிலும் நினைக்கிறானோ அன்று தான் தொழிலாளர்களின் வாழ்வு விடியும். அதை தவிர எந்த சட்டங்களும் மக்களை பாதுகாக்க முடியாது. போடப்பட்ட சட்டங்களை எப்படி வளைப்பது என்று முதலாளிகளுக்கு  நல்லாவே தெரியும். 

இதுவரை நடந்த பட்டாசு ஆலை விபத்துகள் விபரம்:


1998ம் ஆண்டு சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 150 பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.
2002ம் ஆண்டு கோவில்பட்டியில் 16 பேர் பலி
2005ம் ஆண்டு மீனாம்பட்டியில் 20 பேர் பலி
2006ம் ஆண்டு பர்மா காலனியில் 12 பேர் பலி
2007ம் ஆண்டு நாராயணபுரத்தில் 4 பேர் பலி
2009ம் ஆண்டு மதுரை வடக்கம்பட்டியில் 19 பேர்,
நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர்,
சிவகாசியில் 3 பேர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேர் பலி
2010ம் ஆண்டு சிவகாசியில் 8 பேர் பலி
2011ம் ஆண்டு விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடியில் 14 பேர் பலி
                                                                                                       (தகவல் -இணையம்)

இப்படி வருடந்தோறும் மனிதர்கள் கருகிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் தீபாவளி கொண்டாடி கொண்டுதான் இருக்கிறோம். 

யார் அப்பாவி?

ஏழை மக்கள் பாதிக்கபடுகிறார்கள் என்றதும் வெகு சுலபமாக 'பாவம் அப்பாவி மக்கள்' என்று சொல்வது படு அபத்தம். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இப்படியே சொல்லியே  அவர்களை ஓரங்கட்டுவது. ஓட்டு போட, கொத்தடிமையாய் உழைக்க மட்டும் இவர்கள் வேண்டும்.இவர்களின் உழைப்பில், ஓட்டு பிச்சையில் வாழ்ந்து கொண்டு சொல்கிறோம் அப்பாவிகள் என்று. அனுதாபம் என்ற பெயரில் அவர்களை தயவுசெய்து இனியும் இப்படி சொல்லாதீர்கள். அவர்கள் நமக்கெல்லாம் மேலே, நம்மைவிட மிக பெரியவர்கள் அப்படி எண்ணி அவர்களை நடத்துவோம்...இயற்கை நம்மை வாழ்த்தட்டும்...!!

எதற்கு எதை முடிச்சு போடுவது   என சிலர் நினைக்கலாம், அதிகார வர்க்கத்தினருக்கு பல்லக்கு தூக்கி மனிதர்களின் எதிர்ப்பை சம்பாதித்து அவர்களின் அச்சத்தை அலட்சியம் செய்து பின் யாருக்காக மின்சாரம் ?! என்றாவது ஒருநாள் கூடங்குளத்தில் ஒரு குரல் கேட்கக்கூடும் "அப்பாவிகளே உடல் தாருங்கள், நெருப்புக்கு பசி இன்னும் அடங்கவில்லை !!?"

மனிதத்தை தொலைத்துவிட்டு எங்கே சென்று எதை சாதிக்கபோகிறோம்...! எதிர்பார்ப்புகள் இன்றி ஏற்றத்தாழ்வுகள் பாராமல் சக மனிதர்களை நேசிக்கும் உள்ளம் அனைவருக்கும் வேண்டும் எங்கள் இறையே...!

இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற வெற்று வார்த்தைகள் இனியும் எதற்கு...!? சக மனிதனை உள்ளன்போடு உண்மையாக நேசியுங்கள், அது போதும் !!


                                                                                    * * * * *

படங்கள்  - நன்றி கூகுள் 
Tweet

20 கருத்துகள்:

 1. உருக்கமான பதிவு பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்...

  தொழிலாளியின் கடமை உணர்வினை மதிக்காத முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப கொடுமைங்க... ஒவ்வொரு வருடமும் இப்படித் தான்....

  தீபாவளியே கொண்டாட கூடாது...

  பதிலளிநீக்கு
 3. அதன் உற்பத்தித் தொழிற்சாலையைப் பற்றிய விவரங்கள் முற்றிலும் புதிது. அவ்வளவு ஆபத்துகள் நிறைந்ததா? இதில் குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கின்றார்களே..என்றுதான் ஓயுமோ இந்த அட்டூழியங்கள். வேதனை தரும் பதிவு.

  பதிலளிநீக்கு
 4. சமுதாயம் இது போன்ற கொடுமைகளை அலட்சியப் படுத்தாதிருக்கவேண்டும் ....முன்னெச்சரிக்கை தவறினால் சிவகாசி போன்ற நிகழ்வுகளை தடுக்க இயலாது .....ஜப்பானில் நிகழ்ந்த விபத்தை பார்த்தபின்னும் அணு உலை வெறி பிடித்து அலைகின்றன நமது அரசுகள் ...

  பதிலளிநீக்கு
 5. மனித உயிர்கள் மதிப்பு மிகவும் மலிந்துபோயவிட்டது!

  பதிவின் இறுதிவரிகள் அருமை!

  பதிலளிநீக்கு
 6. தொடர்ந்து நடந்து வரும் கொடுமை.....

  மனித உயிர்களுக்கு மதிப்பில்லை... அதுதான் கொடுமையே...

  பதிலளிநீக்கு
 7. நெகிழ்ச்சியான உருக்கமான மனதை உலுக்குது பதிவு...

  பதிலளிநீக்கு
 8. கடைசி வரி வரை அனைத்தையும் ஒப்புக்கொள்கிறேன்.
  ஆனால்....
  தீப்பெட்டி தொழிற்ச்சாலை நடத்தும் மனிதர்களா கூடங்குளம் நடத்துகிறார்கள்?
  தயவு செய்து எங்களை அவமானப்படுத்த வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 9. @ Bhuvaneshwar

  நம் அணுசக்தி துறையின் லட்சணத்தை ஞாநியின் இந்தப் பதிவில் சென்று பாருங்கள்.

  இரண்டு கழிவுகள்……

  இங்கே அணுஉலையும் ஒன்று தான், தீப்பெட்டித் தொழிற்சாலையும் ஒன்று தான். இரண்டுக்குமே பொது மக்கள் முக்கியமில்லை.

  பதிலளிநீக்கு
 10. @@ சிட்டுக்குருவி...

  நன்றிகள்.


  @@ திண்டுக்கல் தனபாலன்...

  நன்றி.


  பதிலளிநீக்கு
 11. @@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

  //இதில் குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கின்றார்களே.//

  14 வயது உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்ள கூடாது என்று சட்டம் இருக்கிறது அவ்வளவு தான்.

  அதிகாரிகள் விசிட் வருவது குறித்து முன்னாடியே தகவல் வந்துவிடும், அன்று மட்டும் குழந்தைகள் வேலைக்கு வர மாட்டார்கள் !!! இதுதான் எங்கும் பின்பற்றபடும் ஒழுங்குமுறை !!!?:(

  ...

  நன்றி தோழி

  பதிலளிநீக்கு
 12. @@ koodal bala said...

  //சமுதாயம் இது போன்ற கொடுமைகளை அலட்சியப் படுத்தாதிருக்கவேண்டும் ....முன்னெச்சரிக்கை தவறினால் சிவகாசி போன்ற நிகழ்வுகளை தடுக்க இயலாது .....ஜப்பானில் நிகழ்ந்த விபத்தை பார்த்தபின்னும் அணு உலை வெறி பிடித்து அலைகின்றன நமது அரசுகள் ..//

  எந்த விபத்தும் நடந்தாலும் ஆறுதலும், நிவாரணமும் கொடுத்தால் போதுமே என்கிற எண்ணம் தான்.

  அதிகார வர்க்கத்தை விடுங்கள்...இங்க இருக்கிற பலருக்கும் மின்சாரம் தான் ரொம்ப முக்கியம்...!!!

  ...

  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 13. @@ வரலாற்று சுவடுகள்...

  நன்றிகள்


  @@வெங்கட் நாகராஜ்...

  நன்றிகள்


  @@ஹேமா...

  நன்றி ஹேமா.


  @@Uzhavan Raja...

  முதல் வருகைக்கு நன்றிகள்


  @@ மனசாட்சி™...

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 14. @@Bhuvaneshwar said...

  //கடைசி வரி வரை அனைத்தையும் ஒப்புக்கொள்கிறேன்.//

  நீங்க ஒப்புக்கலைனாலும் நான் ஒன்னும் பண்ணமுடியாது :)

  //தீப்பெட்டி தொழிற்ச்சாலை நடத்தும் மனிதர்களா கூடங்குளம் நடத்துகிறார்கள்?//

  சின்னதையே ஒழுங்கா பார்த்துக்க முடியலையே...?! அப்டின்னு அர்த்தம்.

  //தயவு செய்து எங்களை அவமானப்படுத்த வேண்டாம்.//

  அட!! புவனேஷ் இத்தன நாளா பேசி இருக்கோம், இதை எனக்கு சொல்லலையே, பெரியவர் நாராயணசாமிக்கு நீங்க ஒருவேளை சொந்தமா ?! :)))

  ...

  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாசிக்கும்போதே மனமும் பதறுகிறது. சொல்லி அழக்கூட முடியாமல் கத்தக்கூடமுடியாமல் இருக்கும் மனிதர்களை வேலையில் சேர்த்து சுரண்டி கொழுக்கும் முதலாளிகள். பாவம் யாருக்கு என்பது ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...