Tuesday, August 21

10:04 AM
13


மரம் வெட்டாதே என்று எத்தனை சட்டங்கள், கட்டுபாடுகள்  போட்டாலும் வெட்டுபவர்கள் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள். அதனையும் ஒரு உயிராக பார்க்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.  வெப்பமயமாதல் குறித்து உலகம் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்ட இன்றைய நாளில் ஓடி ஓடி மரங்களை வளர்க்கிறோம், வளர்க்கச்  சொல்லி விழிப்புணர்வு கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் மரத்தை நடுவது முக்கியம் அல்ல...முதலில் இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுக்காக்க வேண்டும். ஒரு மரம் நன்கு வளர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும், ஆனால் சிறிதும் சிந்திக்காமல் சில நிமிடங்களில் வெட்டி எறிந்து விடுகிறார்கள்...!!

மரம் வெட்டுவதை பெரிய பாவ செயலாக நம் முன்னோர்கள் கருதியதுடன் மட்டும் அல்லாமல் நடைமுறையிலும் செயல்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை பற்றி இணையத்தில் படித்த போது மிக பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. என் ஆச்சர்யங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.


சங்கப்பாடல்களில் பல அரிய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன...
அவற்றில் சில மட்டும் இங்கே...

* நறுந்தண் தகரம் வகுளம் இவற்றைவெறும்புதல் போல் வேண்டாது " (திணைமாலை நூற்றைம்பது 24 )

இந்த பாடலில் "சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அந்த இடத்தில் விவசாயம் செய்பவர்கள் எத்தகைய கொடுமை செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளும் பிறர் படும் துன்பத்திற்கு வருந்தகூடியவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அத்தகையோரின் வீட்டு பெண்ணை விரும்புவதும், மணம் முடிப்பதும் சரி அல்ல, இது குறித்து கொஞ்சம் யோசி" என தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறான்.

மரங்களை வெட்டுவதை பற்றி இப்படி சொல்வதை கூட விடுங்க, 'மரங்களின் நுனி பகுதியை கூட கிள்ளகூடாது. அப்படி கிள்ளுவது அறமற்ற செயல்' என்பதை என்னவென்று சொல்ல...

" எம்நாட்டில் அறநெறி தவறி நடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது " தன் நாட்டின் சிறப்பை பற்றி தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இதை போன்று மற்றொரு பாடல்,

நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரித்து
கண்டல் அம் மண் தில்லை  (திணைமாலை நூ.ஐ.61 )

இன்றைய அவசர யுகத்தில் சக மனிதனை எந்த அளவு சொல்லாலும் , செயலாலும் துன்புறுத்த முடியுமோ அந்த அளவிற்கு நடந்து கொள்ள சிறிதும் அஞ்சாமல் இருக்கிறோம். ஆனால் மரம், செடி கொடிகளை சக உயிராக எண்ணி அதனுடன் பேசுவதும் உரையாடுவதும், செல்லக் கோபப்படுவதும், கொஞ்சி விளையாடுவதும் என இருந்ததை பற்றி பாடல்களில் படிக்கும் போது பழந்தமிழர்களை எண்ணி பெருமைபடாமல் இருக்க இயலவில்லை.

ஒரு பாடலில் மரங்களுக்கு உயிர் இருக்கிறதாக குறிப்பிடுவதாக இருக்கும், 

உடன்போக்குச்சென்ற தலைவியைத் தேடியலையும் ஒரு செவிலித்தாய் வழியில் தென்படும் கொங்க மரத்தைப் பார்த்து "நீயும் ஒரு தாய், குலைகளை  ஈன்றிருக்கிறாய். என் நிலையறிந்து மனம் நெகிழ்ந்து மொழி வழி இல்லையாயினும் உன் முள் எயிற்றால் அவள் சென்ற வழிக்காட்டு " (திணைமாலை 150-65) என்கிறாள்.

பேசும் சக்தி இல்லாத மரங்களுக்கு உயிர் உண்டு, உணர்வு உண்டு, மனம் உண்டு அதனால் கூர்மையான முள் போன்ற விரலினால் அவள் சென்ற வழிக் காட்டு என கேட்கிறாள்.

அறியாமை என்பது இல்லை

இயற்கையை தங்களில் ஒரு பகுதியாக எண்ணி பேணிப் பாதுகாக்கும் மக்கள் நிறைந்த நாட்டில் அறியாமை என்பது எவ்வாறு இருக்கும் என நம்மை கேட்கிறது (ஐந்திணை ஐம்பது.8)  " நாடா கொன்றோ காடா கொன்றோ...எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே "

தாவரங்கள், நீர்நிலைகளின் மதிப்பை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்ந்து சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தி உள்ளனர் பண்டைய தமிழர்கள் !!

குடிநீரை பற்றிய அக்கறை 

இன்றைக்கு குடிநீரை பற்றி பெரிய அளவில் பேசிக்கொண்டு வருகிறோம். காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறோம்.ஆனால் அக்காலத்திலேயே நீரை காய்ச்சி பருகவேண்டும் என்று " குடிநீர் அட்டு உண்ணும்"(382) பழக்கத்தை அறிவுறுத்தியும்,வெயில் காலத்தில் புது மண் பானையை பயன்படுத்த வேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது.

எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோம் 

பலவிதமான சோப்,ஷாம்பூகளை உபயோகித்து குளித்து, துணி துவைத்து என ஆற்றுநீர் மாசுபட மக்களும் ஒரு காரணம். 'துறை இருந்து ஆடை கழுவுதல்  இன்னா' (இன்னா நாற்பது 23) , 'பொது இடத்தில் துப்பகூடாது' என்பதை ஆசாரக் கோவை 'இழியாமை நன்குமிழ்ந்தெச்சி அறவாய்' என்றும் சாப்பிடும் முன், பின் 'வாய் கழுவுதல் அவசியம்' என்றும், வைரஸ், மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுகிருமிகள் கண்களை பாதிக்காமலிருக்க பிறர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதை ' கண்ணெச்சில் கண்நூட்டார்' (ஆசாரக்கோவை 41)

இயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கப்படுவதின் சிறப்பு பற்றி நாலடியார், 'வேம்பின் இலையுள் கனியினும் வாழை தீஞ்சுவை யாதும் திரியாதாம்'(244)என்ற பாடல் மூலம் வேப்ப மர இலைகளுக்குள் பழங்களை பழுக்க வைப்பது தான் சிறந்த முறை என்கிறது (வயிற்றை கெடுக்கும் கார்பைட் கல் நினைவுக்கு வருகிறது)

ஆழிபேரலை

சுனாமி வந்தப்போது முதல்முறையா புதுசா வந்த மாதிரி பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்...ஆனால்  நம் பண்டைய வரலாறுகளை சரியாக படித்திருந்தோமென்றால்  சுனாமி என்பதை பற்றிய ஒரு விழிப்புணர்வு நமக்கு இருந்திருக்கும்...

மாத்தளை சோமு என்பவர் தனது புத்தகமான 'வியக்கவைக்கும் தமிழகம்' என்பதில் தமிழ்நாட்டை 7 ஆழிபேரலைகள் தாக்கி உள்ளதை குறிபிடுகிறார். சங்ககாலத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களை விற்றூற்று மூதெயினனார் (குறுந்தொகை 372) எழுதியுள்ளார்.'கடுவளி' என்றழைக்கப்பட்ட பேய்க்காற்று பனைமரத்து மடல்களைக் குருத்தோடு அடித்துச் சென்றுவிடும் ஆற்றலுடையது. இப்படி வீசி எறியப்பட்ட  மடல்கள் வெகு தொலைவில் உள்ள மலை உச்சியில் காய்ந்து கொண்டிருக்கும்... இக்காற்றினால் கடற்கரை மணலானது வெகுதொலைவிற்கு மேலேஎழும்பி பின் வீசியடிக்கப்படும்.அவ்வாறு வீசியெறியப்பட்ட மணலானது அருவியில் நீர் கொட்டுவது போல மணலைக் கொட்டும். இக்காட்சியை அயிர் சேற்று அருவி என்று குறிப்பிடுகிறார் (குறுந்தொகை 372)

பாதிப்பை பலமுறை சந்தித்துள்ள தமிழர்கள் அதற்கான தீர்வுகளை இயற்கையே வழங்கி இருப்பதையும் அறிந்து வைத்துள்ளனர். சுனாமியால் பாதிக்கப்படாத அளவில் ஊர்களை வடிவமைத்துள்ளனர்...சங்க இலக்கியங்களில் அத்தகைய ஊர்களை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன... முக்கியமாக மூன்று கடல்கள் சூழப்பட்டுள்ள தென் பகுதியே பாதிக்கப்படும் என்பதை அறிந்தே இப்ப பகுதிகளில் தாழை  மரங்களை வளர்த்து வந்துள்ளனர்.


(வேதிப்பெயர் - pandanus odoratissimus இம்மரத்தின் சிறப்பை பற்றி தனிப் பதிவு எழுதணும், அவ்ளோ விஷயம் இருக்கிறது)
  
கண்டல் மரங்களும் தாழை மரங்களும் கடலோர பகுதியில் தடுப்பணை போல இருந்து வந்துள்ளன...நம் முன்னோர்களும் இதை அறிந்து வளர்த்து வந்துள்ளனர் என்று எண்ணும்போது என் பிரமிப்பு இன்னும் அதிகமாகிறது...

ஆனால் முன்னோர்கள் சொல்லி சென்றவைகளை எல்லாம் விட்டுவிட்டு மந்திரத்துல மாங்காயப்பழுக்க வச்சிடலாம்னு விஞ்ஞான ஆராய்ச்சி பண்ணிட்டு வானத்தை பார்த்துட்டு   இருக்கிறோம் !!

சுனாமியால் பாதிக்கபட வாய்ப்பில்லாத ஒரு ஊர் இருந்ததாம்...அதன் பெயர் கண்டவாயில் (கண்டல்வேலி)

"புதுமணற் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்கு தொறும் குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும் தென்கடல்
கண்டல் வேலிய ஊர்" (நற்.74.7)

இவ்வூரைச் சுற்றி உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்கள் இருக்கும்,  இதன் கடற்கரை முற்றிய பனைமரங்கள் மணல்மேட்டில் முள்வேலி இட்டது போல சூழப்பட்டிருக்கும்.


பனைமரங்கள், ஞாழல், தாழை, புன்னைமரங்கள் போன்றவை கடற்கரைகளை சுற்றி அடர்ந்த வேலிபோல் அமைந்து சுனாமி பேரலைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும். இப்படி பட்ட மரங்களால் சூழப்பட்ட சோலைகளை நாட்டு வேலி, பெருநீர்வேலி,கண்டல்வேலி என பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
இதை பார்க்கும் புலவர்க்கு மதில்கள் சூழ்ந்த அரண்மனை கோட்டையை போல தோன்றுகிறதாம்.

அயில்திணி நெடுங்கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட எயில் இடுகளிறே போல் " (கலி.135.3-5)

பேரலைகள் - போர்யானைகள்
அரண்மனை கோட்டைகள் - கண்டல் சோலைகள்

மோதுற அலைகளோட கதி??

"பெருநீர்க்கள் பொறு சிறுனுரை மெல்ல மெல்ல இல்லாகுமே" (குறுந் 290.4-6)

இந்த சோலைகளில் மோதியதும் அவை சிறுநுரையை போல சிதறி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதாம்...

இது கற்பனையாக எழுதப்பட்ட வரிகள் அல்ல பேரலை சிறு நுரையாக மாற தாழையின் மடங்கிய தன்மைதான் காரணம் என்றும் தெளிவாக சொல்லி இருக்காங்க.

வணங்கிய  தாழை " (அகம்.128.1-2) என்ற பாடலில் காக்கும் கடல், அருள் மறந்து அழிக்க முற்படும் போது அதன் சினத்தைத் தணிக்க தாழையின் மடங்கிய தன்மையாலே  இயலும் என்று கூறுகிறது.

திரைமுதிர் அரிய தடந்தாட் தாழை (அகம்.131.3-5)

புன்னை,  தாழை இரண்டும் உறுதியானவை, பேரலைகளுக்கும் தாக்கு பிடிக்கக்கூடியவை. கடற்கரையோரங்களிலும், ஆற்றின் கரையோரங்களிலும் வளர்த்து வந்துள்ளனர். பரிபாடல் (12-6) இவற்றை கண்டிப்பாக வளர்க்கவேண்டும் என்று வற்புறுத்துகிறது.

என்ன தெரியும் இன்றைய மக்களுக்கு...?!

கடல் போன்ற சங்க பாடல்களில் மரங்களை குறித்து ஒரு துளி மட்டும் இங்கே சொல்லி இருக்கிறேன்...எத்தனை ஆச்சர்யங்கள் நம் முன்னோர்களிடம்...அவர்கள் வழி வந்த நாம் வழி மறந்து, முன்னோர்கள் சொன்னதையும்  மறந்துவிட்டோம். அவர்கள் வளர்த்து வணங்கி பராமரித்து வந்த மரங்களை, காடுகளை அழித்து சிதைத்து சின்னாபின்னபடுத்தி கொண்டிருக்கிறோம்...அவர்கள் செய்தவை எல்லாம் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின்  நல்வாழ்வை எண்ணி...ஆனால் நாமோ நாம் பெற்ற குழந்தைகளுக்கு கூட(?) நல்லதை விட்டு செல்ல இயலாதவர்களாக இருக்கிறோம்.

இருக்கும் மரங்களை வெட்டி வீடு கட்டி, அதன் பின்னர் மரக்கன்று நடுகிறோம்...வேடிக்கையாக இல்லையா !? இயற்கை கைகொட்டி சிரிக்கும் இந்த வேடிக்கை மனிதர்களை பார்த்து !!

"மரம் நடவில்லை என்றாலும் பரவாயில்லை !  
மரத்தை வெட்டாதே மனிதா, நீ அழிந்து போவாய் !!"         -  இயற்கை


                                                            SAVE TREES...! 
                                                                                       PLEASE !!


                                                                           * * * * * * *



படங்கள் - நன்றி கூகுள் 
Tweet

13 comments:

  1. மிக மிக மிக அருமையான பதிவு.
    சங்கத்தமிழையும் தந்து அவர்கள் மாண்பினை உணர்த்தி, முன்னோர்களை "யோவ் பெருசு" என விளிக்கும் நமது மடமையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாசூக்காக சொல்லி உள்ளீர்கள்.
    சமீபத்தில் மண்டைக்காடு மற்றும் குளச்சல் கடல் கரை பகுதிகளுக்கு போனேன். ஆக்ரோஷமான கடலை தடுக்க ஒன்றுமே இல்லை.
    பெரிய கான்க்ரீட் அலை உடைப்பான்களை வைத்திருந்தார்கள். எனக்கும் தாழை மரங்கள் ஞாபகம் தான் வந்தது.
    முன்னோர்களை மூடர்கள் என நினைக்கும் எந்த சமுதாயமும் உருப்பட முடியாது.
    கோபத்துடன் வந்த வார்த்தைகள் அல்ல அவை.
    ஆதங்கத்துடன் வந்தவை.

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு...எங்கள் ஊரில் அமைந்துள்ள சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஒருவர் தமிழக கடற்கரை முழுவதும் மாங்குர்ரூவ் காடுகள் இருந்ததாகவும் நாளடைவில் மனிதர்களால் அழிக்கப் பட்டதாகவும் ஆராய்ச்சியில் தெரிய வருவதாக கூறினார்...மாங்க்ரூவும் தாழையும் ஒன்றா என்பது தெரியவில்லை...

    ReplyDelete
  3. வணக்கம் சொந்தமே!இப்படியான பதிவுகள் மிகவே வரவேற்கத்தக்கது.
    முன்னோர்கள் காரணமில்லாமல் டஎதற்கும் ஆரம்பம் தரவில்லை.நாம் தான் முற்போக்கு என்ற போர்வையில் முட்டாள்களாய் இருக்கிறோம்.

    மரங்களை வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள் இப்பதிவிற்காய்.சந்திப்போம் சொந்தமே!

    ReplyDelete
  4. சிறப்பான பகிர்வு...

    உதாரணத்துடன் விளக்கங்கள் அருமை... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

    ReplyDelete
  5. மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரை. பாராட்டுக்கள்.

    Respected Madam,

    I am very Happy to share an award with you in the following Link:

    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    This is just for your information, please.

    If time permits you may visit and offer your comments.

    Yours,
    VGK

    ReplyDelete
  6. மிகவும் அருமை,நன்றி.

    ReplyDelete
  7. @@Bhuvaneshwar...

    நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல என்பதை அமெரிக்காகாரன் வந்து சொன்னா ஒருவேளை ஒத்துப்பாங்க போல...! :)

    பழைய சாதத்தில் பயன்கள் இருக்குன்னு அமெரிக்க மருத்துவர் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சாராம், அதை முகநூல்ல பகிர்ந்து ஆஹா ஓஹோனு நம்மாளுக்கு சொல்றதை பாக்குறப்போ தலைல அடிச்சுகிறத விட வேற என்னத்த சொல்ல புவனேஷ்...

    எதை எதையோ நோக்கி ஓடுற மக்கள் அப்டியே மெல்ல திரும்பி நம் முன்னோர்கள் என்ன சொல்லி இருக்காங்க என்று பார்த்து எடுத்துகிட்டா போதும்...நம்ம நாடு விளங்கிடும்.

    ...

    என் பங்குக்கு நானும் என் ஆதங்கத்தை கொட்டிட்டேன் :)

    நன்றி தம்பி.

    ReplyDelete
  8. @@ koodal bala said...

    //எங்கள் ஊரில் அமைந்துள்ள சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஒருவர் தமிழக கடற்கரை முழுவதும் மாங்குர்ரூவ் காடுகள் இருந்ததாகவும் நாளடைவில் மனிதர்களால் அழிக்கப் பட்டதாகவும் ஆராய்ச்சியில் தெரிய வருவதாக கூறினார்...//

    அது உண்மைதான் என்பதை இணையத்தில் படித்து தெரிந்து கொண்டேன். முன்னோர்கள் எதையும் சாதாரணமாக செய்யவில்லை என்பதை எப்போதுதான் நாம் புரிந்துகொள்ள போகிறோமோ தெரியவில்லை.

    //மாங்க்ரூவும் தாழையும் ஒன்றா என்பது தெரியவில்லை...//

    இல்லை பாலா. மாங்க்ரோவ் காடுகளை சதுப்பு நிலக்காடுகள் என்று தமிழில் சொல்வார்கள். தாழை மரம் வேறு...இதிலும் பல வகைகள் உள்ளன...இது குறித்து தகவல்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன.

    மாங்க்ரோவ் பற்றி இந்த லிங்க் போய் பாருங்க...http://therinthukol.blogspot.in/2010/12/blog-post_8433.html

    ReplyDelete
  9. @@ Athisaya said...

    //முன்னோர்கள் காரணமில்லாமல் டஎதற்கும் ஆரம்பம் தரவில்லை.//

    உண்மை.

    நன்றிகள் அதிசயா.

    ReplyDelete
  10. @@ திண்டுக்கல் தனபாலன்...

    நன்றிகள்.


    ReplyDelete
  11. @@ வை.கோபாலகிருஷ்ணன்...

    தங்கள் விருதிற்கு மிக்க நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  12. அருமை தோழி தமிழை வாழ்விக்க தமிழர்களை வாழ்விக்க இது போன்ற விடயங்களை விளக்கி சொல்லுவது நமது கடமை இலக்கியம் காலத்தின் கண்ணாடி நாம் அதில் பிரதிபலிக்க வேண்டும் நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...