இரண்டு வருடங்களுக்கு மேலாக பதிவுலகம் மூலம் பெற்றவை நிறைய அனுபவங்கள், படிப்பினைகள், நட்புகள், சகோதர உறவுகள் பெயரில் மனிதர்கள் ! ஆம் மனிதர்கள்...பல்வேறு விதமான முகங்கள் கொண்ட மனிதர்கள்...இணையத்துக்கு வெளியே இருக்கும் அதே மனிதர்கள் தானே இங்கேயும், இவர்களை படித்தவர்கள், பண்பட்டவர்கள் என்று எண்ணினால் அது நம்பியவர்களின் தவறு என்கிறது பதிவுலகம். அதிலும் சகோதர உறவு பாராட்டி பழகியவர்களின் நிஜ(?)முகம் பற்றி தெரியவரும் போது பெண்கள் அடையும் மனவேதனை மிக அதிகம்.
சகோதரி என்று அழைத்தால் மனதிலும் அவ்வாறுதான் எண்ணுவார்கள் என்பதற்கு மாறாக அதே பெண்ணை பற்றி தன் நண்பர்கள் மத்தியில் குறிப்பிட்டு கிண்டல் செய்து மகிழ்கிறார்கள் என்று தெரியவரும் போது 'உறவுகளின் உன்னதம்' தெரியாத உன்மத்தர்கள் என்று சொல்வது தான் சரி. இதை பற்றிய ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.
பதிவுலகத்தில் ஒருவரைவிட ஒருவர் பெரியவர் என்று காட்டிகொள்வதில் நடக்கும் ஈகோ யுத்தத்தில் சகோதர உறவுகளும் தப்புவதில்லை.
அண்ணன் என்ன? தம்பி என்ன?
பொதுவாக நம்ம ஊர் வளர்ப்பு எப்படி என்றால் அண்ணனோட நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அம்மா சொல்வாங்க 'அண்ணன்னு கூப்பிடு' நாமளும் அதையே பாலோ பண்ணுவோம் (ஒன்னு இரண்டு, அண்ணன் பிரண்டை லவ் பண்ணி செட்டில் ஆகிடுவாங்க...அது வேற விஷயம்!) :)
அண்ணன் தம்பியருடன் பிறந்த பெண்கள் பிற ஆண்களுடன் சகஜமாக பேசுவார்கள், தயங்க மாட்டார்கள். தன்னைவிட மூத்தவர்களை அண்ணன் என்றும் இளையவர்களை பெயர் சொல்லியும் தம்பி என்றும் அழைப்பார்கள். கூட பிறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருந்தால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளி ஆண்களுடன் பழக மாட்டார்கள் என நினைக்கிறேன்.
பதிவுலகம் பொருத்தவரை புதிதாக பேசக்கூடிய ஆண்களிடம் ஒரு பாதுகாப்புக்காக அண்ணன், சகோனு சொல்லிக்கிறோமா அல்லது எதுக்கு வம்பு இப்படியே கூப்டுவோம் என்றோ இருக்கலாம்...அவரவர் விருப்பம்.
என் சகோதரர்கள்
'செல்வா ஸ்பீகிங்' செல்வா அண்ணனை முதல் அறிமுகத்தின் போது சார்னு கூப்ட்டு பேசிட்டு, கிளம்புற சமயம் 'சார்னு சொன்னா நல்லா இல்ல, உங்களை அண்ணன்னு சொல்லட்டுமா' என கேட்டேன்... அவரும் 'தன்னியனானேன் தங்க்ஸ்' என்று கூறிவிட்டார். அப்புறம் என்ன, ஒரு வருஷமா இரண்டு பேரும் பேசாம இருந்த நாட்கள் ரொம்ப குறைவு என்ற அளவுக்கு ஆகிபோச்சு. என்னை உற்சாகபடுத்தி எனது சமூக சேவைகள் தொடர உறுதுணையாக இருக்கும் அருமையான அண்ணன் இவர்...!
இன்னொருத்தர் 'உணவு உலகம்' சங்கரலிங்கம் அண்ணா 'என்கூட பிறந்தவங்க எல்லோரும் ஆண்கள் , அக்கா தங்கை கூட பிறக்கலைன்னு வருத்தம் நிறைய உண்டு அந்த குறை இனி இல்லை'னு சொல்லி உரிமையாக தங்கையாக்கி கொண்டவர். டிரஸ்ட் தொடங்க தைரியம் கொடுத்த அன்பான நல்ல மனிதர் !
அப்புறம் ஒருத்தரிடம் முதல் முறையா சாட்டில் பேச, உடனே அவர் உங்க போன் நம்பர் கொடுங்க, டைப் பண்ண பொறுமை இல்லன்னு சொல்ல, "அடடா என்ன இது, ஆரம்பமே இப்படி, மத்தவங்க சொல்ற மாதிரி ஆள் ஒரு மாதிரி தானோ" என யோசிச்சு 'சரி பார்த்துக்கலாம்'னு நம்பர் கொடுத்து பரஸ்பரம் அறிமுகம், பதிவுலகம் என்று பேச்சு போனது. அப்புறம் எப்போவாவது பேசி கொண்டதுண்டு. "என்கிட்டே பேசுறதா வெளில சொல்லாதிங்க, உங்களையும் ஒரு லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க" என்று சிரித்துக்கொண்டே ஒருநாள் சொன்னார். பதிவுலகத்துல ரொம்ப நல்ல பேர் தான் எடுத்திருக்கிறார் போலன்னு உள்ளுக்குள் ஒரு உதறல். பேர் சொல்லி பேசிக்கொள்வோமே தவிர நண்பர் என்றோ, சகோதரன் என்றோ சொல்லிகொண்டது இல்லை. ஒருநாள் போன் செய்து சொன்னார், "கௌசல்யா உங்களுக்கு மருமகள் பிறந்திருக்கிறாள்"
உறவுகளை எப்படி கையாளணும் என்கிற பண்பு தெரிந்தவர். முக்கியமாக முகமூடி போட்டுக்கொள்ளாதவர். தன்னை குறித்து யாரும் எதுவும் சொல்லிக்கொண்டு போகட்டும், கவலை இல்லை. நான் நானாகத்தான் இருப்பேன் என்பவர். சகோதரன் என்ற முகமூடி அணிந்து உள்ளுக்குள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக தெரிந்தார்.
பதிவுலகின் மூலம் நிறைய தம்பிகள் இருக்கிறார்கள்...பசுமைவிடியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் அவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதில் எனக்கு மகிழ்வுடன் ஒரு நிறைவு இருக்கு. பதிவுலகம் எனக்கு இதுபோன்ற நல்ல சகோதர உறவுகளை கொடுத்திருப்பதில் பெருமைபடுகிறேன்.
உறவுகளின் உன்னதம்
பொண்ணுங்க தங்களை டீஸ் பண்ற ஆண்களை திட்டும்போது 'அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா'னு கேட்பாங்க. அப்படி பிறந்திருந்தா சகோதர உறவின் அருமை தெரிந்திருக்கும், இப்படி இன்னொரு பெண்ணை டீஸ் பண்ண மாட்ட, அவளையும் உன் சகோதரியாக தான் நினைக்க தோணும் அப்டின்னு அர்த்தம் . (பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தை என்பதால் இனி இப்படி திட்ட முடியாது போல...!?)
ஒரு பெண் ஆணுடன் சகஜமாக பேசுகிறாள் என்பதால் அவளை பற்றி அடுத்தவரிடம் எப்படியும் பேசலாம் என்கிற உரிமையை யார் கொடுத்தார்கள்...?!
பேச்சுக்கு பேச்சு சகோ, அக்கா என்று அழைத்து பழகியவர்கள் தன் நண்பர்களிடம் பேசும் போது அந்த பெண்ணை குறித்து விமர்சிப்பது எத்தகைய துரோக செயல் ! வெறும் உதட்டளவில் மட்டும் தானா உறவுகள் ??! இவர்களை பற்றிய உண்மை தெரியும் போது அந்த பெண்ணின் மனநிலை ??! இப்படி பட்டவர்கள் பெண்களை கேலி செய்யட்டும் தவறில்லை, அதற்காக சகோதர உறவு கொண்டாடாமல் சாதாரணமாக யாரோ எவரோ என்று பேசிவிட்டு போகலாம்.
இங்கே ஒரு நடிப்பு அங்கே ஒரு நடிப்பு என்று ஆளுக்கொரு வேடம் தரிக்கும் இவர்களை போன்றவர்கள் பிறரை மட்டுமல்ல தங்களையும் ஏமாற்றி கொள்கிறார்கள்...!!
சகோதரன்
சகோதர அன்பு சாதாரணமானது அல்ல...அண்ணனை அப்பா ஸ்தானத்திலும் தம்பியை மகனாகவும் பாவிக்கிறவள் பெண். உடன் பிறந்தவர், அடுத்தவர் என்ற பேதம் சகோதர அன்பிற்கு கிடையாது. அண்ணன் என்றால் அண்ணன் தான் அதை தவிர்த்து வேறு எதையும் யோசிக்க மாட்டாள் ஒரு நல்ல பெண்...ஒரு குழந்தையாய் விசயங்களை பகிர்வதாகட்டும், சிக்கல்களை சொல்வதற்காகட்டும் முதலில் சகோதரனை தான் தேடுவாள்.
நட்புகளிடம் சொந்த விசயங்களை பகிர மிக யோசிப்பவள், தன்னை சகோதரி என்று அழைக்கும் ஆணிடம் தயங்காமல் கூறிவிடுவாள். சகோதர பாசம் துரோகமிழைக்காது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை.
சகோதர அன்பு ஒருவர் செய்யும் தவறினை எளிதாக கண்டுபிடித்து ஒருவரை நல்வழி படுத்தவும் , சரியான பாதையில் வழிநடத்தி செல்லவும் உதவும்.
உலகின் உன்னத உறவு சுயநலமில்லாத உறவு, ஆதரவாய் தோள் கொடுக்கும் உறவு சகோதர உறவு. இந்த உறவு அமையபெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் இதே உறவை சிலர் தங்கள் விருப்பம் போல் கையாளுவது ஏனோ தெரியவில்லை.
சகோதரி ஸ்தானத்தில் வைத்து பேசிகொண்டிருக்கும் ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்து கேலி பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்து பேசுவது போன்றதை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்வார்களா ?! நிச்சயம் செய்ய மாட்டார்கள். உடன்பிறப்பின் மானத்தை மட்டும் தான் காப்பார்கள், பிற பெண்கள் எப்படி போனால் நமக்கென்ன, யாரோ தானே என்ற இளக்காரம் !! இப்படி பட்ட வக்கிர புத்தி இருக்கிற ஆண்கள் யாரையும் சகோதரி என்று அழைக்காமல் இருப்பது உத்தமம்.
ஆண் பெண் யாராக இருந்தாலும்...
பெண்களை மட்டம் தட்டி பேசணும், அதுவும் பொது இடத்தில் என்றால் போதும் சில ஆண்களுக்கு எங்கிருந்து வீரம்(?) வருகிறதோ தெரியவில்லை...பெண்களை குறைத்து பேசி தங்களுக்கான மதிப்பை உயர்த்தி கொள்கிறார்களாம். எப்படி புரியும் அந்த இடத்தில் தான் தங்களது மதிப்பு குறைய போகிறது என்று !!
வேடம் கலைந்தபின் அவர்களின் ஒவ்வொரு நாளும் நரகலின் மீது தான் என்பது மட்டும் உண்மை.
மனதில் சகோதரி என்று எண்ணாமல் வாயினால் அந்த வார்த்தையை உச்சரிக்க எப்படி முடிகிறது. யாரிடம் வேண்டுமானாலும் முகமூடி இட்டு நடியுங்கள். சகோதரனாய் எண்ணி பழகும் பெண்ணுக்கு எதிராக நடந்து சகோதர உறவை தயவுசெய்து கொச்சைபடுத்தாதீர்கள்.
பதிவுலகம் என்று இல்லை வெளியிடங்களிலும், ஆண், பெண் எல்லோருக்கும் நிஜ முகம் வேறு என்பதை மனதின் ஒரு ஓரத்தில் வைத்தே பழக வேண்டிய நிலை தற்போது இருக்கிறது . வெளியில் தெரியும் முகம் தான் உண்மையானது என்று முழுமையாக நம்பி ஏதோ ஒரு சூழ்நிலையில் உண்மை தெரிந்து வேதனை படுவதை விட, எத்தகைய மனிதர்களிடத்தும் பழக நம்மை தயார் படுத்தி வைத்துகொள்வது நலம்.
மனிதன் இங்கும் அங்கும்
சத்தியமாக என்றோ
ஆறுதலாம்...!
நம்பிக்கையுடன் பகிர்வதை
அடுத்தவருக்கு
நரம்பில்லா
பாழும் மனதினுள்ளே
பலவித வஞ்சகங்கள்..
வாழும் வரை பொய்யன்
கொள்ளி இன்றி வெந்துச் சாவாய்
பிறரின் வயிற்றெரிச்சல் தீயில்...!
உள்ளொன்று வைத்து
பத்திரப்படுத்திக் கொண்டேன்
தேவைப்படுகிறது
இனி எனக்கும்...!?
* * * * * * * * * * * * * * * * *
படம் -நன்றி கூகுள்








