வெள்ளி, ஆகஸ்ட் 13

'அந்தரங்கம்' பற்றிய ஒரு அலசல் - தாம்பத்தியம் - 15


இதற்கு முந்தைய பதிவு - ஏன் விட்டுக்கொடுக்கணும் 

அந்தரங்கம்

தாம்பத்தியம் சீர்குலையப்  பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். 

கடந்துப்  போன கவலைகளிலும் வர இருக்கிற சிந்தனைகளிலும் மூழ்கி, நிகழ்கால ஆனந்தங்களை அனுபவிக்காமலேயே இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்துக்  கொள்ளும் முன்பே இளமை முடிந்து முதுமை வந்து வாழ்க்கை அவர்களைத்  தாண்டிப்  போயே விடுகிறது.

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்பதை விட, சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டிச்  செல்வது என்பதே பலரது கவலையாக இருக்கிறது. 

அந்தரங்கம் என்று சொல்லிவிட்டு அதை எப்படி வெளியில் விவரமாக சொல்வது...? என்ற கேள்வி எழுவதைத்  தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதுதான் பல குடும்பங்கள் பிரிவதற்கு மிக மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பல சண்டைகளின் ஆரம்ப  அடிப்படை காரணமே இதுதான் என்று என்னால் உறுதியாகக்  கூற முடியும். என்னவொன்று கணவன், மனைவி இருவருமே இதுதான் எங்களுக்குள் பிரச்சனை என்று வெளிப்படையாகச்  சொல்வது இல்லை , இதுதான் என்று அவர்களுக்கும் தெரிவது இல்லை!!!

ஒரு ஆணின் அந்தரங்கம் வீட்டில் சரியாக இருக்காத  பட்சத்தில் வெளியில் மாற்று இடம் சுலபமாகத்  தேட முடியும் அது மற்றொரு பெண்ணை தேடும் வழி என்று சொல்லவில்லை... தங்களை நண்பர்கள், வேலை, பொழுதுப்போக்கு என்ற விதத்தில் ரிலாக்ஸ் செய்துக்  கொள்ளமுடியும் .   ஆனால் பெண்கள் , தங்களின் ஆசை நிராசையாக போய்விட்டால் அது வார்த்தைகளில் எரிச்சலாக, கோபமாக, ஆத்திரமாக வெளிப்படுகிறது. நாளடைவில் மன அழுத்தம், மனதெளிவின்மை, ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றில் கொண்டுப்போய் விட்டு விடுகிறது..... ஆனால் இதுதான் பிரச்சனைக்கான சரியான  காரணம் என்று அந்த பெண்ணுக்கே சில நேரம் புரிவது இல்லை.

" பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் செக்ஸ் உறவு வெற்றி " இவை இரண்டும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன என்பது க்ரூகர் என்பவரின் கூற்று.  ஆனால் இதனால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்க படுகிறார்களாம்...??!!


கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையானத்  தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..?? மிக சொற்பமே..!!?? குடும்பத்தில்  சண்டை என்று சொல்பவர்களிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது...பிரச்சனையின் வேர் படுக்கை அறையில் இருக்கிறது என்பது...!!? 

வெளியில் பேசக்கூடாத ஒரு விசயமாக தானே இன்றும் இருக்கிறது. காரணம் நாம் வாழும் சமூதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள். மற்றவர்களுடன் பேசக்கூடாத ஒரு அருவருப்பான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.  கட்டுப்பாடுகள் இருப்பது நல்லதே, ஆனால் ஆரம்ப தெளிவுக்  கூட இல்லாமல் போய்விடுவது சோகம்.
இதனாலேயே வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படுகின்றன.

துணிந்து வெளியில் சொல்லமுடியாத நிலையில் இதனைப்  பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் விடை தெரியாமல் ஒரு தொடர்கதை போல் போய் கொண்டே  இருக்கிறது. இம்மாதிரியான பதில் இல்லா கேள்விகள் பலரை  மனதளவிலும், உடலளவிலும் பயங்கரமாகப்  பாதிக்கிறது. 

 " இதனால்  அவர்களின் வாழ்க்கை தரமே குறைந்துப்  போகக்  கூடிய நிலையில்  இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் " என்கிறார்கள் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம்  என்னவென்றால் , பலரின், குறிப்பாக பல பெண்களின் கேள்வியே, " இதை விட வேற ஒன்றும்  முக்கியம் இல்லையா ? இது மட்டும் தான் வாழ்க்கையா? "  அப்படி உள்ளவர்களுக்கே இந்த பதிவு என்று நினைக்கிறேன். 

'அதற்காக எல்லாம்  எங்களால் நேரம் ஒதுக்க முடியாது' என்று அலட்சியமாக சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம், புகழ், பெயர் இவற்றைச்  சம்பாதிக்க அவைகளின் பின்னால் ஓடவே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை 'தகவல் தொழில் நுட்பங்களும்', 'பொழுதுபோக்கு அம்சங்களும்' விழுங்கி விடுகின்றன.  

தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரிவது இல்லை. அந்த 'பொன்னான நேரத்தை' எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது என்பதை பலரும் உணருவதே இல்லை.  

அந்த நாலு சுவற்றுக்குள் ஒரு கணவனும் மனைவியும்  இருப்பதை பொறுத்தே  அவர்களின் வெளி உலக நடவடிக்கை இருக்கும்.

'செக்ஸ்' என்பதின் அர்த்தம்தான் என்ன ??

உடலுறவு என்பது அறிவியல்/மருத்துவரீதியாக சொல்லவேண்டும் என்றால், "உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகபடியாக வேலை செய்யும் , சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான நல்ல  உடற்பயிற்சி என்பதே".

" பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் " என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை.

'காதல் உணர்வு' என்பது ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வது உண்டு. அதன் பெயர்தான் 'ஆக்சிடோசின்'. இது பொதுவாக  பிரசவ நேரத்திலும் , உடலுறவு சமயத்திலும் அதிகமாக சுரக்கக்  கூடியது. 'இதுதான் அடிப்படை'

இதைப்பற்றி அறிய  அதீத ஆர்வம், இனம் புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பலவகையான உணர்வுகள் நம்மை ஆட்க்கொண்டு விடுகின்றன. 

கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபத்தாபங்கள் அனைத்தும் இங்கே தான்  மறக்கப்படுகின்றன(மறக்கடிக்கப் படுகின்றன). 

பின்குறிப்பு 

தாம்பத்தியத்தில் முக்கியமானப்  பகுதியான இதை கொஞ்சம் விளக்கமாக விவரிக்க சொல்லி, பலர் கேட்டதின் காரணமாக பதிவு விரிவாக இருக்கும்...பதிவைப்  பற்றிய சந்தேகங்கள்  மட்டும் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். உங்கள் பெயர் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டால் பின்னூட்டம் பப்ளிஷ் பண்ணப்பட மாட்டாது என்பதைச்  சொல்லிக் கொள்கிறேன். 

அடுத்து இந்த பதிவின் தொடர்ச்சியாக வருவது...தாம்பத்தியம் 18+

தொடர்ந்து பேசுகிறேன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 


புதன், ஆகஸ்ட் 11

கண்டனம் 2- மத உணர்வோடு விளையாடாதீர்கள்....!

எனது இந்த கண்டனம் பதிவுலகில் மத உணர்வுகளை  கண்டபடி கூறுபோட்டு விளாசி தள்ளும் சிலருக்காக.... 

மதம் என்ற வார்த்தை வேண்டாம்...சமயம் என்றே சொல்லுங்க என்றே சிலர் கூறுவர்.
எனக்கு மதம் என்பதே சரியாக தோன்றுகிறது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நாத்திக மதமும், இருக்கிறது என்று வாதம் புரிபவர்களுக்கு ஆன்மீக மதமும் பிடித்து இருக்கிறது என்பதால் மதம் என்று சொல்வது ரொம்ப சரியே.

மதம் பிடித்த யானை எது சரி எது தவறு என்று உணராமல் தன் பாகனையே மிதித்து கொல்லும். அப்படியேதான் இந்த இரண்டு (நாத்தீகம், ஆன்மிகம் ) மதம்  பிடித்தவர்களும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

உங்களின் கருத்துக்களை சரி என்று புரிய வைப்பதற்காக ஏன் மற்றவர்களின் நம்பிக்கையை குறை சொல்ல வேண்டும்....?? கடவுளை வைத்து மனிதனை பிரிக்காதீர்கள். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

அறியாமை

கடவுளை மறுத்தவர் என்ற உதாரணத்துக்கு எல்லோரும் கைகாட்டுவது தந்தை பெரியார் அவர்களை தான்.  அவரும் கடவுளின் பெயரால்  நடக்கும் மூடநம்பிக்கையை தான் அதிகம் சாடினார்... கடவுளையும் மூட நம்பிக்கையையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்ளாதீர்கள்.

ஆதி காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனை பார்த்து மிரண்டவர்கள் அதை சக்தி , கடவுள் என்று வழிபட்டனர்.  நெருப்பை, மரத்தை, கல்லை என்று விருப்பம்போல் வணங்கினர். ஆனால் இன்றும் சில வழக்கங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் வேதனை.  (ரோட்டின் ஓரத்தில் இருக்கும் மைல்கல்லையும் வணங்கும் அளவில் தான் அறியாமை இருக்கிறது, பாதி புதைந்த அளவில் இருக்கும் ஒரு ஆட்டு கல்லில் கூட மஞ்சளையும் குங்குமத்தையும் வைத்து ஒரு மஞ்சள்  துணியை சுற்றி வைத்து இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்.)

எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒதுக்கு புறமாய் இருக்கும் ஒரு கல் குவாரியில் இருக்கும் ஒரு வேப்பமரத்தில் ஒரு நாள் வெள்ளை நிறத்தில் திரவம் சுரந்து இருக்கிறது.  இதை கேள்வி பட்ட கொஞ்ச நேரத்தில் அந்த காட்டு பகுதி முழுக்க மக்கள் கூட்டம், அந்த மரத்தை மஞ்சள் , குங்குமத்தால் அலங்கரித்து ஒரே வேண்டுதல்கள் தான். 

என்னதான்  வேண்டும் இந்த மக்களுக்கு ....?? எதை தேடி அங்கே ஓடினார்கள் ....?? அங்கே போனதால் எதை அடைந்தார்கள்....?? ஒன்றுமே புரியவில்லை....??!!

அவர்களின் பக்தி பரவசத்தின் முன் விவரம் தெரிந்த  ஒருத்தர் " இது கடவுள் இல்லைங்க, மரத்தினுள் நடக்கும் சில வேதிவினை மாற்றத்தால் இந்த வெண்மை திரவம் சுரக்கிறது , இரண்டு, மூணு நாளில் வருவது நின்றுவிடும் " என்று சொல்கிறார் என்று வைத்து கொள்வோம், அவ்வளவு தான் அவர் உடம்பை பதம் பார்த்து விடுவார்கள். (இப்போது பால் வருவது நின்றுவிட்டது...ஆனால் அதை சொல்லி பணம் பார்த்தவர், இன்றும் பணம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். )
    
இது மூடத்தனம், கடவுளின் பெயரால்  நடக்கும் இந்த அறியாமையை களைய தான் நாம் முற்படவேண்டுமே தவிர, கடவுளை பழிப்பது சரி இல்லை.  மதத்தை இழிவு  படுத்துவதை ஊக்குவிக்க கூடாது.

அனைத்து மதத்திலும் நம்பிக்கை , மூட நம்பிக்கை என்பது சரி விகிதத்தில் தான் இருக்கிறது.....இதில் மாற்று கருத்து இல்லை....  எனக்கு தெரிந்த ஒன்றை இங்கே சொல்லி இருக்கிறேன்...அவ்வளவே.
  
கடவுளை மறுப்பவர்கள், ஏன் மறுக்கிறோம் என்பதற்கு வலுவான காரணத்தை கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அதை விடுத்து தேவை அற்ற வீண் விவாதங்களை பேசி மத நம்பிக்கை உள்ளவர்களின் மன உணர்வை குத்தி கிளறி நெருப்பு மூட்டி அதில் குளிர்  காயாதீர்கள்...

கடவுளை முழு மனதுடன் விசுவாசத்துடன் தேடுபவர்களே கடவுளை உணருகிறார்கள்.  உங்களால் தேடி அடைய முடியவில்லை  என்பதற்காக அப்படி  ஒன்று இல்லை என்று ஆகிவிடுமா...?? ஒன்று நீங்கள் சரியாக தேடவில்லை அல்லது தேட முயற்சி எடுக்க வில்லை என்று தானே அர்த்தம்.......பழம் கைக்கு எட்டவில்லை  என்பதற்காக இந்த பழம் புளிக்கும் என்று குறை சொல்லி நழுவும் நரியை போல் இருக்காதீர்கள்.....

கடவுள் என்ன செய்வார்...??

அன்பை போதித்த புத்தரை வணங்குகிற இலங்கையில் தான் மனித உயிர்கள் ஈவு இரக்கம் இன்றி பந்தாடபடுகின்றன....என்பதற்காக புத்தரை பழிக்க முடியுமா? பிற உயிர்களிடத்தும் சகோதர  பாசம் காட்டுங்கள் என்று வலியுறித்திய முகமது நபி அவர்களை பின்பற்றுகிற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக அவரை பழிக்க முடியுமா ?? பைபிளை படிக்கிறவர்கள் தான் ஈரானில் பிற மதத்தவர்களை கொன்று குவித்தார்கள்....நம்மையும் அடிமைபடுத்தி உயிர்களை கொன்று வதைத்தார்கள். அவர்களை இப்படி செய்ய சொல்லி ஏசுநாதர் எங்கே சொன்னார்....??

இப்படி மனித உருவில்  மிருகங்கள் செய்யும் கொடுமைகளுக்கு கடவுளை குறை சொல்வது எவ்வளவு மடத்தனமோ அந்த அளவு மடத்தனம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை பழிப்பதும்...

'கடவுள் பெயரால்' அல்லது 'அந்த பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்பவர்களை',  மனிதனை 'கடவுள்' என்று சொல்லி கொண்டு அலைபவர்களை அலட்சிய படுத்துங்கள், மூட நம்பிக்கையில் உழலுபவர்களை அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லுங்கள்.  மனிதத்தை போதியுங்கள் ...சக மனிதர்களை அன்பால் வசபடுத்த பாருங்கள். மூட நம்பிக்கையை சுட்டி காட்டுகிறேன் என்று மனிதர்களின் நம்பிக்கையை எள்ளி நகையாடாதீர்கள். 

எத்தனை பெரியார்   வந்தாலும் உங்களை திருத்த முடியாது என்று வீராவேசமா வசனம் பேசின விவேக், வாஸ்து படி தன் வீட்டை மாற்றியமைத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? எல்லாம் அறியாமையால் வரும் பயம் தான் காரணம்...கடவுள் மேல் இருக்கும் பக்தி இல்லை. 

நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழி நடத்து கிறது என்று எண்ணி பாருங்கள்..நமக்குள் ஒரு தைரியம் வரும்.....!  அச்சம் விலகும்...! வாழும் நாட்கள் அர்த்தமானதாக தோணும்....! அந்த சக்தி உங்களை  தீய வழியில் போக சொல்லி தூண்டாது.....! பிறருக்கு உதவக்கூடிய எண்ணத்தை கொடுக்கும்....! அந்த சக்தி  அன்பைத்தான் சொல்லும்.... !  அந்த சக்திக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்....!! உங்கள் விருப்பம்.  

தவிரவும் கடவுளை தேடி எங்கேயும்  போக வேண்டாம்....உங்களுக்குள் தேடுங்கள்... கண்டடைவீர்கள்....பிற மனிதனிடம் நீங்கள் அன்பை பரிமாறும் போதே அந்த இடத்தில் கடவுள் நிற்பதை உணரமுடியும்...அதுதான் சிவன், இயேசு, அல்லா,புத்தர்......
கடவுள் இருக்கிறார் , இல்லை என்று வாதிடுவதை விட கண்முன் இருக்கும் மனிதனை அன்பால் அனைத்து  கொள்ளுங்கள்....உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்....அர்த்தமற்ற வீண் விவாதம் புரிந்து உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்.....

கடைசியாக ஒன்று நம் அன்னை தெரேஸா அவர்கள் முதலில் இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தை எடுத்து  கூற  தான் வந்தார்கள்....ஆனால் உண்மையில் நடந்தது என்ன  ..?!!  அன்பை கையில் எடுத்தார்கள்....சக மனிதனை என்று சொல்வதை விட வாழ்வின் இறுதி நாட்களில் ஆதரவற்று தவித்து கொண்டு  இருந்தவர்களை தன் கரத்தால் அணைத்து அன்பால் உதவினார். நம்மிடையே வாழ்ந்த ஒரு தெய்வம்  அவர்கள்....! அந்த மக்களிடையே தான் தன் கடவுளை அவர் கண்டார்.....! அர்த்தத்துடன் வாழ்ந்து முடித்தார்....! 

ஆனால் நாம் வறட்டு விவாதம்  செய்து கொண்டு வீணாய் போய் கொண்டு இருக்கிறோம்.....உணர்வடையுங்கள் மக்களே...!!  




         

வெள்ளி, ஆகஸ்ட் 6

பதிவுலகில் இவள்...!


எனக்கு இந்த தொடர் பதிவு என்றால் கொஞ்சம் யோசனைதான்...நாம என்னத்தை  உருப்படியா தொடர போறோம்  என்று.  ஆனால் நண்பர் LK என்னையும் தொடர அழைத்ததை மதித்து இந்த பதிவை எழுதுகிறேன். இனி கேள்விகளும் அதற்கு  என் பதில்களும்....



1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
   
கௌசல்யா 

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் உண்மையான பெயரும் அதேதான். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

என் கணவர் சொல்லித்தான் எழுத தொடங்கினேன். ( நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் எதை பற்றியாவது சொல்லி புலம்பிட்டு இருப்பேன். அவர்தான், ' என்னிடம் சொல்வதை வலைபதிவுலகில் சொல் ..... 'யாம்(ன்)  பெற்ற இன்பம் பெருக வையகம்'  என்றார். அவர் தப்பிச்சிட்டார்.....ஆனா நீங்க எல்லோரும்....??)  

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அப்படி எல்லாம் ஒன்றும் தெரியாது. ஏதோ எழுதணும் என்று மட்டும்தான் ஆரம்பத்தில் எழுதினேன், பின்னர்தான் பிற தளங்களை பார்த்து தமிளிஷில் இணைந்தேன்....அதில் LK அவர்கள் முதலில்   summit பண்ணி ஆரம்பித்து வைத்தார்....தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.....  பிரபலம் பற்றிய வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை. எதை வைத்து 'பிரபலம்'  என்பது கணிக்க படுகிறது என்பதில் எனக்கு சில விளக்கங்கள் தேவை படுவதால், அதை பற்றி இன்று வரை யோசிக்கவில்லை.  

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

 யார் எழுதினாலும் அதில் சொந்த விசயங்கள் கண்டிப்பாக கலந்தே இருக்கும்....சில அனுபவம் கலப்பதை தவிர்க்க இயலாது. நானும் அப்படி சிலவற்றை பகிர்ந்து இருக்கிறேன்.  விளைவுகள் என்ன என்று அதை படித்தவர்களுக்கு தானே தெரியும். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்காகத்தான் எழுத தொடங்கினேன். ஆனால் இந்த எழுத்தால் சில நல்லவைகளும் நடந்து கொண்டு இருக்கிறது. தாம்பத்தியம், கள்ளகாதல் போன்ற  பதிவை படித்த சிலர் மெயிலின்  மூலம் என்னிடம்  தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் கேட்கிறார்கள். அப்போதுதான் புரிந்தது.... இனி பொழுதுபோக்கு என்று நினைத்து எழுதாமல் பிறருக்கு பயன்படணும் என்று... கொஞ்சம் அதிகமாக கவனம்  எடுத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்.    

சம்பாதிக்கிறதா அப்படினா....? 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 இரண்டு வலை பதிவுகள் உள்ளன.  சிந்தனைக்கு 'மனதோடு மட்டும்',  மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண 'வாசல்' 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பிறரின் மீது பொறாமை அப்படி என்று எல்லாம் இல்லை, ஆனால் நகைசுவையாக  எழுதுபவர்களின் பதிவை மிகவும் விரும்பி படிப்பேன்.  கோபம் என்று பார்த்தால் சில நேரம் வந்தது உண்டு, எழுத்தின் வலிமையை  புரிந்து  கொள்ளாமல் அதை வைத்து தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்காக அரசியல் செய்பவர்களை எண்ணி கோபம் வரும்.    

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..      

தமிளிஷில் இணைவதற்கு முன், முதன்  முதலில் என்னை பாராட்டியவர் ஆதிரன் (  மகேந்திரன் ) அவர்கள் தான்.  இன்றும்  எனக்கு ஒரு நல்ல நண்பர். அந்த பாராட்டு என்னை இன்னும் அதிகமாக சிந்தித்து எழுத தூண்டியது. 





அந்த பாராட்டு...,
//this is very glad to know you write this article with the heading 'kalla kaathal'.
thanks.

சமூகத்தின் மிக முக்கியமான உளவியல் பிரச்சனை இது. சரியான கோணத்தில் நுழைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி//


April 18, 2010 2:03 PM//
    
 10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

சக பதிவர்களுக்கு இங்கே ஒன்றை சொல்லி கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.  நாம் நட்புக்காக என்று மட்டும் பார்க்காமல் நல்ல பதிவுகள் எங்கே இருந்தாலும் அதை கவனித்து அவர்களையும் உங்கள் வாக்குகளாலும், பின்னூட்டத்தாலும் ஊக்கபடுத்துகள். பின்னூட்டம் எழுத நேரம் இல்லை என்றாலும் வாக்கையாவது அளித்து,  அந்த பதிவு பலரை சென்று அடைய  உதவுங்கள். 


எல்லோருமே ஒரு சிறு அங்கீகாரத்திற்காக தான் காத்து இருக்கிறோம்...அந்த அங்கீகாரத்தை நாம் பிறருக்கும் கொஞ்சம் கொடுப்போமே....! 


பல நல்ல பதிவுகள் சரியாக கவனிக்க படாமலேயே போய்விடுகிறது...ஒரு சில சாதாரண பதிவுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்னை சில சமயம் அதிர்ச்சி அடைய  செய்கிறது...நட்பை ஆதரிக்க வேண்டியதுதான்...(ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அல்ல )   


"தேவையான நேரம் கொடுக்க படாத அங்கீகாரம், இருட்டு அறையில்.... மெழுகுவர்த்தி இருந்தும்  ஏற்றி வைக்க படாமல் இருப்பதை போன்றது...."


பதிவுலகம் எனக்கு, பல நல்ல நட்புகளையும், அன்பான உறவுகளையும் கொடுத்து இருக்கிறது... அதற்காக உண்மையில் பெருமை படுகிறேன். 


"உரிமையாக கடிந்து கொள்ளவும், 
 தவறுகளை சுட்டி காட்டவும், 
 பொழுது போக்கிற்காக பேசாமல் 
 கருத்துகளை பரிமாறி கொள்ள பேசுகிற, 
 முகவரியும் முகமும் தேவை இல்லை 
 'அகம் ஒன்றே அகமகிழ்ச்சி' என்று 
 பிடிவாதம் பிடித்து நட்பை வளர்த்து 
 கொண்டு இருக்கிற, உங்கள் அனைவரின் 
 நட்பிற்கு ஈடாக வேறு ஒன்று 
 இந்த உலகில் இருப்பதாக 
 எனக்கு தெரியவில்லை..."


இந்த தொடர் பதிவை பெரும்பாலும் பலரும் எழுதி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.... நண்பர் LK அழைத்ததில் இன்னும் தொடராமல் இருக்கும் நண்பர் தேவா இனி தொடருமாறு அழைக்கிறேன்....( அப்பாடி... நான் அழைக்க ஒருத்தராவது கிடைச்சாரே) 


 ( தம்பி சௌந்தர் சொன்னதுக்காக பயந்து இந்த பதிவை எழுதவில்லை....அந்த கட்சியில் இருந்து என்னை நீக்கிவிட்டாலும் கவலையில்லை....புது கட்சி தொடங்கிவிடுவேன் என்று இதன் மூலம் சொல்லி கொள்கிறேன்....!!)   


திங்கள், ஆகஸ்ட் 2

ஏன் விட்டுக் கொடுக்கணும் - தாம்பத்தியம் பாகம் 14

  
இதற்கு முந்தையப் பதிவு  - குடும்பத்தில் பெண்ணியம் தேவையா ? 


தாம்பத்தியம் பதிவு என்பது சாதாரணமாக குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் எந்த அளவிற்கு அந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கிறது என்றும் அதனால் அந்த வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எந்த அளவுக்கு  பாதிக்க படுகிறார்கள் என்பதை பற்றியது .   ஒரு சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் வேண்டும் என்றால் முதலில் ஒவ்வொரு குடும்ப அமைப்பும்  சீராக இருக்கவேண்டும்.  பல வன்முறையாளர்கள் தானாக உருவாவது இல்லை, உருவாக்கப்படுகிறார்கள்.  அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் அமைப்பு சரியில்லாமல் போய்விடுவதும் அவர்கள் தடம் மாற ஒரு காரணம்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கப்போவது இல்லை.
 
தாம்பத்தியம்
எது ஆரம்பம் ?


கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பொதுவாக, அடிப்படையில்  சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, சிலர் அதை பெரிதுப்  படுத்துகிறார்கள். சிலர் அது இயல்புதானே என்று கண்டுக்கொள்வதில்லை. முந்தைய பாகத்தில் நான் குறிப்பிட்ட ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பது எல்லாம் குடும்பத்தில் இன்றும் நிலவிக்  கொண்டுதான் இருக்கிறது....ஆனால் வேறு பெயரில்....!!? ஒரு மனைவி, 'எனக்கென்று  இந்த வீட்டில் என்ன மரியாதை இருக்கிறது..? நான் உன்னைவிட எதில் குறைந்துப்  போய்விட்டேன்' என்று கொடிப் பிடித்தாலே அது உரிமைகோரும் ஒரு நிலைதானே. இந்த உரிமைக்  கோரலே நீதிமன்றம் வரை  சென்று  முடிகிறது என்பதை என்னால் அழுத்தமாக சொல்லமுடியும்.

என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களில், பெண் , 'அந்த ஆளை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்' என்றும் அவளின் கணவன்  'ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிர் இருந்தால்,  ஆம்பளை எனக்கு எவ்வளவு இருக்கும்...? ' என்றும்  ஆலோசனை கேட்க வந்த இடத்திலும் சண்டைப்  போடுவதைப்  பார்க்கும் போது இதை ஆணாதிக்கம், பெண்ணுரிமைக்கு இரண்டுக்கும் நடுவில் இருக்கும் பிரச்சனை என்றே  எண்ண முடிகிறது.    

வேண்டாமே குடும்பத்தில் ஈகோ

'நான் பெரியவன்' இல்லை 'நான் பெரியவள்' என்ற வாதம் சாதாரண குடும்பம் நடத்தத்  தேவையா ?  மாட்டுவண்டியில் பூட்டப்  பட்ட இரண்டு மாட்டில்  ஒன்று ஒரு பக்கமாகவும், மற்றொன்று வேறு பக்கமாகவும்  போனால் வண்டி ஓடுவது எவ்வாறு ? குடும்பத்திற்கும்  இது சரியாக பொருந்தும்.  அலுவலகத்தில் சக ஊழியர்  ஏதாவது குறைச்  சொல்லி பேசினால் கூட 'பரவாயில்லை, சொன்னால் சொல்லிட்டுப்  போறாங்க ' என்று பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறோம் ,  ஆனால் சொந்த வீட்டில் அந்த 'விட்டுக் கொடுத்தல்' என்பது  ஏன் இல்லாமல் போய்விடுகிறது .  

இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். என்னிடம் சில பெண்கள் நான் விட்டுகொடுப்பதைப்   பற்றி சொன்னபோது அவர்கள் என்னிடம் கேட்டதை அப்படியே இங்கே குறிப்பிடுகிறேன்.  

*   விட்டுக்கொடுத்தல் என்றால் என்ன ?
*   எதை விட்டுக்கொடுக்கணும் ? 
*   எதுக்கு விட்டுக்கொடுக்கணும் ?
*   யார் விட்டுக்கொடுக்கணும் ?
*   எவ்வளவு விட்டுக்கொடுக்கணும் ?
*   விட்டுக்கொடுத்தால்  மறுபடி எப்போது, எப்படி திருப்பி வாங்குவது ?

இந்த கேள்விகள் வேடிக்கையாக தெரிந்தாலும் , 'உண்மை  என்ன' என்பதை அறியாமல்  தானே இருக்கிறோம் என்றே தோன்றுகிறது . எனக்கு தெரிந்த  பதில்கள் கீழே,    

*  கணவன்  கோபமாக பேசும்போது பதிலுக்கு மனைவியும் கோபப்படாமல் பொறுமையைக்  கைக்கொண்டு, தனக்குள் எழும் கோபத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
அதே போல் மனைவியின் கோபத்தின் போது கணவனும் நடந்துக்  கொள்ளவேண்டும். 
     
*  கோபம், ஆத்திரம் , பழி வாங்கும் உணர்ச்சியை, தான் என்ற கர்வத்தை, சில நேரம் சுயமரியாதையை....?!!  (அது பிரச்சனையின் தீவிரத்தைப்  பொறுத்தது) எல்லாம் விட்டு கொடுத்தும் கதை நடக்கலேன்னா,  வேற வழியே இல்லை... கடைசியாக விழுந்துவிட வேண்டியதுதான் கையில் அல்லது காலில் ( உங்க விருப்பத்தைப்  பொறுத்தது ) ஆண், பெண் இருவருக்கும் இது பொருந்தும்....??!  ) நமக்கு அரசாங்கத்தில் ஏதாவது காரியம் ஆகணும் என்றால் கை, காலையாவது பிடித்து வேலையை முடிக்கிறோம் அல்லவா..., அப்படி நினைத்துக்  கொள்ள வேண்டியதுதான்.( வேற வழி...?! ) 

   அப்போதுதான் தாம்பத்தியம் என்ற வண்டி நன்றாக ஓடும். இல்லையென்றால்  தடம் மாறி பெரிய விபத்தைத்தான் சந்திக்க வேண்டியது  இருக்கும்.  

*  யார் விட்டுக்கொடுத்தாலும் நல்லதே. முதலில் விட்டுக்கொடுத்தவர்களே வென்றவர்களாக மதிக்கப்படுகிறார்கள் . குடும்பத்தைப் பொறுத்தவரை தோல்வியும்  இன்பமே. கிட்டத்தட்ட வாழ்நாளின் இறுதி மூச்சை  விடும்வரை கூட இருந்தாகக்  கூடிய துணைக்காக பொறுத்துப்  போவதால் பெரிதாக என்ன இழப்பு நேர்ந்து விட  போகிறது? அதனால் இன்பமும், நிம்மதியும் பல மடங்கு அதிகரிக்குமே தவிர இழப்பு ஒன்றும் இல்லை.  

*  விட்டுக்கொடுகிறது என்று முடிவு செய்தபின், அதில் அளவு என்ன வேண்டி இருக்கிறது...?? அரைகுறையாக இல்லாமல் முழு மனதுடன் முழுதாக விட்டு கொடுப்பதே சிறந்தது.

*   நாம் ஒன்றும் நல்ல விசயங்களை விட்டு கொடுக்கவில்லை.... அதை திருப்ப பெற...?!  தீய தன்மைகளான கோபம், ஆத்திரம், வெறுப்பு, எரிச்சல், ஈகோ, பழி உணர்ச்சி, வறட்டுப்  பிடிவாதம்  போன்றவைகளைத்தான் விட்டுக்  கொடுக்கிறோம்.... இவற்றை விடுவதால் உங்கள் மனது தெளிவாகிறது, மன அழுத்தம், இறுக்கம்  குறைகிறது, ரத்த அழுத்தம் சீராகிறது, முகம் பிரகாசம்  அடைகிறது . இதை விட வேறு என்ன வேண்டும்...? ஆரோக்கியம் தான் பெருகும், குடும்பமும் சந்தோசம் பெறுகிறது, முக்கியமாக குழந்தைகளுக்கு நிம்மதி கிடைக்கிறது தங்கள் பெற்றோர்களை எண்ணி.....!!

மாற்றிச்  சொல்வோம்

ஒரு பெண் தன் ஆயுள் முழுக்க தந்தையை, கணவனை , மகனை என்று ஏதாவது ஒரு ஆணை சார்ந்து இருக்கணும் என்று சொல்வாங்க... ஆனால் இனி அப்படி சொல்லாமல் அப்படியே  மாற்றி  சொல்வோமே....!!?  எல்லா ஆண்களுமே தங்களது வாழ்வைக்  கழிக்க தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ ஏதோ ஒரு வடிவில் பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்று....!!  ஆண்கள் தங்கள் வாழ்வை நிறைவாய் முடிக்க ஏதோ ஒரு வடிவில் பெண் அவசியம். 

கணவன் இறந்ததும் ஒரு பெண் சூழ்நிலையைச்  சமாளித்து வாழ்க்கையை நகர்த்திவிடுவாள், ஆனால் திடீரென்று தங்கள் மனைவியை இழந்த ஆண்களால் அவ்வாறு  சமாளிக்க இயலாது, தடுமாறி விடுவார்கள்.

**************************************
பின் குறிப்பு 

( என் மனதை பாதித்த சில விசயங்களையும், தினம் சந்தித்துக்  கொண்டு இருக்கும் சிலரின்  குடும்பப்  பிரச்சனைகளையும், பிறரின் அனுபவங்களையும் இங்கே எழுதுகிறேன். தனிப்பட்ட என் கற்பனை இல்லை, அனைவருக்கும் தெளிவாக புரியும் அளவிற்கே என் எழுத்து நடை இருப்பதாக எண்ணுகிறேன். இதை  ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு என்று இல்லாமல் உங்களுக்கு தெரிந்த அனுபவங்கள் ஏதும் இருந்தால் ,  இங்கே  பகிர்ந்து கொண்டால் பலர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .)  
    
தாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். அடுத்து தொடர்ந்து வரும்  பதிவுகளில்  அதன் உண்மையான அர்த்தம் என்ன ?  இருவரும் அந்த விசயத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் ? அந்தரங்கம் சரியில்லாமல் போவதால், அது  மொத்த குடும்ப உறவையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்றும் விரிவாக, தெளிவாக அதே நேரம் நாகரீகமாக பகிருகிறேன்.  நட்புடன் தொடருங்கள்.......நன்றி. 


தொடர்ந்துப் பேசுகிறேன்... 

உங்களின் 'மனதோடு  மட்டும்
கௌசல்யா