அந்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 15

'உச்சகட்டம்' எனும் அற்புதம் - தாம்பத்தியம் 19

இதற்கு முந்தைய பதிவைப்  படிக்க உறவு ஏன் மறுக்கப்படுகிறது ?! செல்லவும்


திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்குமே  செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு தான் என்பது ஆய்வுகளின் முடிவு.  குழந்தை பிறந்து விட்டது என்பதுடன் உறவில் முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்றுச்  சொல்லிவிட முடியாது.  மருத்துவர்களிடம் ஆலோசனை என்று வருபவர்கள் கேட்கும் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்....!!? இதில்  படித்தவர்களின் சந்தேகங்களை வைத்துப்  பார்க்கும் போது அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றேத்   தோன்றுகிறது. ஏன் இப்படி தெளிவு இல்லாமல், புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்று தெரியவில்லை.

குடும்ப வாழ்வில் பொருள் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட கணவன் , மனைவி இருவருக்குள் கருத்து வேற்றுமை இன்றி வாழ்வது  முக்கியம். அந்த கருத்து வேற்றுமை இருவரின் அந்தரங்கம் பற்றியதாக  இருந்துவிட்டால்...குடும்பத்தின் மொத்த நிம்மதியும் போய்விடும். செக்சைப்  பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லை,காரணம் நாம் வளர்ந்த , வாழ்ந்துக்  கொண்டிருக்கும் இந்த சமுதாயம். சந்தேகம் ஏற்பட்டால் பிறரிடம் கேட்க தயக்கம், அச்சம், சமூகத்தில் இதை பேசுவது தவறு, பாவம் என்று கூறப்பட்டு வந்ததால் நாமும் அப்படியேப்  பழகிவிட்டோம்.

கணவன் மனைவி இருவரும் கூட தங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களை பரிமாறிக்  கொள்வது இல்லை. இதன் விளைவு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பிரச்சனைகள் பூதாகரமாக எழுகின்றன. இதன் பின்னர் மோசமான முடிவுகளில் கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. பாலியல் தொடர்பான குற்றங்கள், திருமணம் தாண்டிய உறவுகள் போன்றவை ஏற்பட  செக்சை பற்றிய சரியான அறிவு இல்லாதது தான் காரணம்.

ஒரு சில குழப்பங்களும், சிக்கல்களும் இந்த விசயத்தில் இருக்கின்றன. இந்த தொடர் பதிவில் அவற்றை விளக்குவதின் மூலமே இந்த தொடர் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

உச்சகட்டம் (ஆர்கஸம் )

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உறவில் மிக முக்கியமானது உச்சகட்டம் எனப்படும்  இறுதி நிலையாகும். ஆண்களைப்  பொறுத்தவரையில் அணுக்கள் வெளியேறும் அந்த தருணத்தில் அவர்கள் உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள்.  ஆனால் பெண்களைப்  பொறுத்தவரை இது பெரிய கேள்விக்  குறியாக இருக்கிறது.

இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன என்பது கூட பல திருமணம் ஆன பெண்களுக்கும் தெரியாது என்பது தான் நிதர்சனம். 

* அப்படி என்றால் என்ன..??
* அந்த உணர்வு எப்படி இருக்கும் ??
* அந்த உணர்வு  கட்டாயம் உணரப்பட்டுத்தான் ஆகவேண்டுமா ??
* உச்சகட்டம் ஆகவில்லை என்றால் அதன் பாதிப்பு என்ன ??

* பெண்களின் அந்தரங்க உறுப்பில் கிளிட்டோரிஸ் என்ற சிறு பகுதியில் தான் பல நூற்றுக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். அதிக உணர்ச்சி மிகுந்த பகுதியும் இதுதான். அந்த பகுதி தூண்டப்பட்டு அடையும் இன்பமே உச்சகட்டம் ஆகும். 

* உச்சகட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில், அங்கே மட்டுமே ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்துக்  கொள்ள வேண்டும். முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளையின்  அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன.  

இந்த உணர்வலைகளில் உடல் அதிகச்  சூடாக மாறிவிட., அப்படியே சப்த நாடிகளும் அடங்கி மயக்கமான ஒரு நிலைக்கு கொண்டு போய்விடும். உடல் பறப்பதை போன்ற ஒரு பரவச நிலைக்கு தள்ளபடுவதை நன்றாக உணர முடியும். 

* வெறும் உடலுறவு மட்டுமே ஒரு போதும் 'முழு திருப்தியை  ஒரு பெண்ணுக்குத்  தராது' என்பதே ஆய்வுகளின் முடிவு. உச்சகட்டம் அடைந்த ஒரு பெண்ணால் மட்டுமே  மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும். அதை எட்டமுடியவில்லை, இருந்தும் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று ஒரு மனைவி சொல்கிறாள் என்றால் அது முழு உண்மை கிடையாது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதைப்  பற்றித்   தெரியாதவர்களாக இருக்கலாம் அவ்வளவே. 

* இங்கே நான் சொல்லப்  போகிற விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்...ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்... உறவில் ஆணோ, பெண்ணோ உச்சகட்டத்தை அடையமுடியவில்லை என்றால் அனார்க்கஸ்மியா (Anorgasmia) என்கிற செக்ஸ் குறைபாட்டில் கொண்டு போய்விட்டுவிடும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கை.  .....??!   ஆனால் உச்சகட்டம் போக முயற்சிச்  செய்தும் போக முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இதற்கு உளவியல் காரணங்கள்  இருக்கலாம்....சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், உறவைக்  குறித்த முறையான தெளிவின்மை, உறவைப்  பற்றிய அச்சம் இவை போன்ற சில காரணங்களும்  உச்சகட்டம் அடைய முடியாமல் தடுக்கலாம். இதில் எதில் குறை என்று பார்த்து மருத்துவரிடம் சென்று சரி செய்துக்  கொள்வது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

எப்படிப்  பார்த்தாலும் கணவன் மனைவி உறவில் அந்தரங்க உறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்ந்து முடியக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு இல்லை.  அங்கே சரியாக  நடைபெறவில்லை  என்றால் அதன்  எதிரொலி பல வடிவத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை தம்பதியினர் மறந்து விடக் கூடாது. கணவன் தனது மனைவியை உச்சகட்டம் என்றதொரு அற்புத உணர்விற்கு அழைத்துச்  செல்வது மிக அவசியம்...அதன் பிறகு  தனது  தேவையை நிறைவேற்றி கொள்வதே மிக சரியான தாம்பத்திய உறவு நிலையாகும். அப்போதுதான் கணவன்  தன் மனைவியின் மனதை  வென்றவன் ஆகிறான்...!! 

ஆனால் ஆண்களில் சிலருக்கு ஆரம்ப நிலையிலேயே தன் தேவையை முடிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம்  (அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம் ) அந்த நேரம் மனைவியை முழு திருப்திப்  படுத்த இயலாமல் போகலாம்....அப்படியான நிலையில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் தங்களால் அதிக நேரம் இயங்க முடியவில்லை என்பதைப்  பற்றி தெளிவுப்படுத்திக்  கொள்ளவேண்டும் இல்லையென்றால்  மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.  

பெண்ணின் செக்ஸ் வாழ்க்கை திருப்தியாக இல்லையென்றால்  அப்பெண்ணின் பொது வாழ்க்கையும் , குடும்ப வாழ்கையும், அவளின் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைகிறது, பாதிக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.

எதிர்பார்ப்புகளும்  ஏமாற்றங்களும் குடும்பத்தில் ஏற்படும் போதுதான் விரிசல்களும் அதிகரிக்கிறது.  ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் நிறைவேறாத தேவைகள், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணங்கள் தான் வேறு தவறான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. தடம் மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்று புரிய வரும் போது...வருடங்கள் ஓடி போயிருக்கும்....தவறான உறவில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.

'ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு சரி இல்லை' என்றால் அதன் முடிவு தவறான வேறு உறவு தான் என்று அர்த்தம் இல்லை.  ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக மிக அதிகம் என்பதை மறுக்க முடியாது. இந்த பிரச்சனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பார்க்கலாம்.
   
"மரணம் ஏற்படும் முன்பு மனிதன் வாழ்ந்தாக வேண்டும்.
கௌரமாக மரணமடைவதற்கு கௌரமாக வாழ வேண்டும் !"

தாம்பத்தியம் தொடர் தொடரும்...

தொடர்ந்து பேசுகிறேன்... 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

புத்தக பரிந்துரை: Indra K.Nooyi எழுதிய  My Life in Full: Work, Family, and our Future 



சனி, செப்டம்பர் 18

உறவு ஏன் மறுக்கப்படுகிறது ?! தாம்பத்தியம் பாகம் -18


உறவு ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது ?

கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும்  கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல  விவாகரத்துக்கு  இதுதான் அடிப்படைக்   காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.

இந்த உறவைப்  பொறுத்தவரை கணவன் விருப்பப்பட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்துப்  போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகிப் பாதிக்கப்பட்டவர்கள் பலர். பாதிப்பின் காரணமாக பார்க்கும் வேலையில் கவனச்சிதறல் ஏற்படும் . 

ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது.  "அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது, எப்பவும் அந்த நினைப்புதான்....?! பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க.  இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..?? என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு..." இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பலரிடமும்...!

ஏன் இதை ஒரு வேலையாகவோ, அசிங்கமாகவோ, அருவருப்பானதாகவோ  நினைக்க வேண்டும் ?? தினம் மூன்று வேளை உணவு என்பது உடம்பிற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த மாதிரி 'அளவான உடல் தொடர்பான உறவும் அவசியம் தான்'  என்பதைப்  புரிந்துக்  கொள்ளவேண்டும்.

ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை  மட்டுமே கொண்டவர்கள்  அல்ல. அதைவிட பல முக்கியப்  பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள். இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை அவர்களின் உடல் அமைப்பு எப்படி என்று பார்த்தோம் என்றால் 90 வயதானாலும் அவர்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும்.  அவர்களின் உடம்பில் அணுக்களின் சுரப்பு என்பது இருந்துக்  கொண்டே இருக்கும். இதன் எண்ணிக்கை வேண்டுமானால் நபருக்கு நபர் வேறுபடலாம். வயதிற்கு ஏற்ப மாதம் குறைந்தது 4 முறையாவது உறவு என்பது அவர்களுக்கு அவசியமாகிறது. 

கணவனின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு மனைவியும் புரிந்துக்  கொண்டு உறவுக்கானச்  சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கவனிக்கும் போதுதான் அந்த கணவனும் மன நிறைவுடன் புத்துணர்ச்சி அடைவான், நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். அதைப் போல் மனைவியின் விருப்பம் என்ன , சூழ்நிலை என்ன என்று கணவனும் புரிந்துக்  கொண்டு நடந்து கொண்டால் சம்சாரம் ஒரு சங்கீதம் தான்.

மறுப்பது எதனால் ??

சில நேரம் கணவனோ, மனைவியோ ஒருவருக்கு விருப்பம் இருந்து அதை மற்றொருவர் மறுக்க வேண்டிய நிலை  ஏற்படும்.  பொதுவாகப்  பார்த்தோம் என்றால் இது ஒரு சாதாரண விசயமாகத்  தோன்றலாம்...ஆனால் 'உறவு மறுத்தல்' என்பது உடனே கொல்லும்  விஷம் போன்றது. ( மனதை ) இதனால் ஏற்படும் கோபம் பயங்கர வெப்பமாக இருக்கும், நெருப்பைப்  போல் சுடும்.

ஒருநாள் உறவு மறுத்தலானது கூட கணவன், மனைவி உறவைக்  கெடுத்து விடுகிறது. தன்னைப்  பிடிக்கவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது , தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணி உள்ளுக்குள் மருகுகிறார்கள். நாளடைவில் மன அழுத்தம் அதிகமாகி தன்னை மறுத்தவர் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை வார்த்தைகளில் கொட்டுவார்கள். அவர்கள் செய்யும் சின்னச்  சின்ன தவறையும் பெரிதாக எண்ணி கூச்சலிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது தான் துணையின் மீதான சந்தேகம்...??!  தன்னைத்  தவிர்க்க காரணம் வேறு ஒருவரின் பால் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்குமோ என்பதில் வந்து நின்றுவிடுகிறது.

இப்படியாக நீண்டு கொண்டேச்  செல்லும் பிரச்சனை முதலில் வார்த்தையால் நோகடிப்பது, சண்டை, சில நேரம் கை நீட்டல் என்று போய்விடுகிறது.

காரணங்களும் விளக்கங்களும் 

*  உண்மையில் கணவனோ, மனைவியோ ஒருவர் உறவுக்கு அழைக்கும் போது இன்னொருவர் மறுப்பதற்கு 99 சதவீதம் செக்ஸ் காரணமாக இருப்பது இல்லை. அதாவது செக்ஸ் ஐ  மறுத்தாலும் காரணம் செக்ஸ் கிடையாது, இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுகளில் ஏற்பட்ட புரிந்துக் கொள்ளாமை தான் காரணம் .  தங்களது கோபத்தை இந்த நேரத்தில், இதில் தான் காட்டுவார்கள்.

*   அப்புறம் நேரம், உடல் சோர்வு, தூக்கம், உடல் நலக்   குறைவு இவையும் காரணமாக  இருக்கலாம்.

*    "இரண்டு பிள்ளைகள் ஆயிருச்சு, பிள்ளைகள் வேற வளர்ந்திட்டாங்க.இனிமே என்ன ?"
என்பது மாதிரியான சில மனைவிகளின் சலிப்பான பதில்கள், எண்ணங்கள்..!

விளக்கங்கள் சில

* மனைவி அல்லது கணவன் உறவைத்  தவிர்க்கிறார் என்றால் அவர் செக்சை தவிர்க்கிறாரே தவிர, உங்களையே தவிர்க்கிறார் என்று அர்த்தம் இல்லை !

*   மறுப்பதற்கு என்ன காரணம் என்பதைப்  பேசித்  தெளிவுப் படுத்திக்  கொள்ள வேண்டும். மறுப்பவர் காரணத்தைச்  சொல்லி விட வேண்டும்.

*  மறுப்பது சுலபம் ஆனால் அதனால் ஏற்படும் மனவலியை, மறுப்பவர்  புரிந்துக்  கொள்ள வேண்டும்.

*   ஒருவேளை உறவு கொள்வதில் ஏதும் பிரச்சனை இருந்து, அதன் காரணமாக தான் உறவை தவிர்ப்பதாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை சந்திப்பது உத்தமம். அலட்சியம் இந்த விசயத்தில் தயவுச்செய்து வேண்டாம்.

" பல ஆண்களுக்கு அவர்களின் சுய மதிப்பீடு என்பது சம்பாதிக்கும் திறனையும், செக்ஸ் ஆற்றலையும் சார்ந்தே உள்ளது. இதில் எதைக் காயப்படுத்தினாலும் வெறுத்துப்  போய் விடுவார்கள் "

இதை பெண்கள் கொஞ்சம் புரிஞ்சிக்  கொள்ளனும்.

மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாகப்  போக்கிவிடும்.

எந்த விதத்தில் எல்லாம்  கணவனும்  , மனைவியும் தங்களது நெருக்கத்தை அதிகரித்துக்  கொள்ளலாம் என்பதைப்  பற்றி அடுத்த பதிவில் பார்போம்.

தாம்பத்தியம் தொடர் தொடரும்.....

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

செவ்வாய், செப்டம்பர் 14

எதிலும் அவசரம் எங்கு போய் முடியும் ?! தாம்பத்தியம் பாகம் - 17





முதல் நாள் இரவில் புதுமண தம்பதியினர்  எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும்.  அன்றுதான் உறவு நடக்கணுமா....?  ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்ட பின் நடப்பதே பெரும்பாலும் சரியாக இருக்கும் என்று இதற்கு முந்தைய  முதல் இரவு கட்டுரையில் பகிர்ந்தேன்.  ஆனால் ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்திருந்தால் அதன் பின் விளைவுகள் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியவில்லை.

இன்றைய திருமண முறை

நம்முடைய இந்த திருமண முறை  இன்னும் எவ்வளவு காலம் நடைமுறை வழக்கத்தில் இருக்கும் என்ற  நம்பிக்கை இல்லை. ஒரு பெண் எதிர்பார்க்கும் உடல், மனம் , அறிவுச்  சார்ந்த அனைத்துத்  தேவைகளையும் பூர்த்திச்  செய்யக்கூடிய அளவுக்குரிய ஆண் அவளுக்கு திருமணத்தின் மூலம் தேவைப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்கக் கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்குமா என்பது  சந்தேகமே. அந்த காலத்தில் ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. பெற்றோர் விரும்பிய துணையுடன் மணம்  புரிந்தார்கள், உடல் கலந்தார்கள், மனம் ஒருமித்து வாழ முயற்சித்தார்கள் . ஆனால் இப்போதும்  அதே சமூக எண்ணம் தான் இருக்கிறது, ஆனால் தலைமுறையினர் மாறிவிட்டனர். 

தெரிந்த உறவினரின் மகனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு  வெகு விமரிசையாக நடந்தேறியது.  திருமணமும் 10 நாளில் பெண் முடிவுச் செய்யப்பட்டு முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் கல்யாணம் என்று குறுகியக் காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள்...நல்ல வேலையிலும் இருப்பவர்கள்...இருவரின் முழு சம்மதத்தின்  படி  தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது...

ஒரே மகன் என்பதால் திருமணம்  தொடர்பான பத்திரிகை அடிப்பது, உறவினர்களுக்கு கொடுப்பது, மண்டபம் பேசி முடித்தது உள்பட அனைத்து வேலைகளையும் மணமகன்  இழுத்துப்  போட்டு பார்த்தார். திருமணம் முடிந்த அன்று மறுவீடு சடங்கு எல்லாம் முடிந்து மணமக்கள் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது.  பின்னர் இருவரும் தனியறைக்கு அனுப்பப்பட்டனர்.....

ஆனால் காலையில் மணப்பெண் கோபமாக அறையில் இருந்து வெளியில் வந்தாள், பலரும் காரணம் கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல், 'எனக்கு பையனை பிடிக்கவில்லை...அவன் ஆம்பளையே இல்லை ' என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அவளது பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது என் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி ஆக வேண்டியதைப்  பாருங்கள்' என்று ஒரே போடாய் போட்டு விட்டாள்.

முந்தினநாள் இரவு அப்படி என்னதான் நடந்தது என்றால், ஏற்கனவே மணமகன் கல்யாண வேலையாலும், பிரயாணக்  களைப்பினாலும் சோர்ந்து இருந்திருக்கிறார்...நேரமும் அதிகமாகி விட்டதால், பெண்ணிடம் தனக்கு களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும் என்று கூறி விட்டு இவள் பதிலுக்கு கூட காத்து இருக்காமல் தூங்கிவிட்டார். ஆவலுடன் அந்த இரவை எதிர்பார்த்து இருந்த மணமகள் வெறுத்துப்  போய் இருக்கிறாள். இதுதான் நடந்தது  

இப்போது நாலு மாதம் ஆகிறது விஷயம் கோர்ட்டு படி ஏறி...??!

(இந்த விசயத்திற்கு குறைச்  சொல்ல பெண்தான் கிடைத்தாளா என்று நினைக்காதீர்கள். பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய பெண்களே இப்படி புரிந்துக் கொள்ளாமல் நடக்கிறார்கள் என்றால் ஆண்களைப்  பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ) 

எதிலும் அவசரம்...எங்குதான் போய் முடியும் ...??

குழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே  படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது , வேலை தேடுவது என்று எதிலும் அவசரம்...உணவிலும் கூட பாஸ்ட் புட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்....??!  

சீக்கிரமே எல்லாவற்றிலும்  தம் பிள்ளைகள் வல்லவர்களாக மாறிவிட வேண்டும் என்கிற பெற்றோர்களின் ஆவலுடன் இணைந்த அவசரம்....!!  எதிர்பார்ப்புகள் விரைவாக நிறைவேறணும்  என்ற இன்றைய தலைமுறையினரின்  கட்டுக்கடங்காத வேகம் கடைசியில் 'ஆயிரம் காலத்து பயிர்' என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வந்த கல்யாணமும் விரைவாகவே முற்றும் போடக்  கூடிய அளவில்  வந்து நின்றுவிட்டது. 

நான் சொன்ன இந்த உதாரணம் போல் பல இருக்கலாம். ஆனால் அவற்றில் பல  இன்னும் செய்திதாள்கள், பத்திரிகைகள் வரை வரவில்லை, விரைவில் வரக்கூடிய அளவில் தான் விசயத்தின் தீவிரம் இருக்கிறது. 

ஒரே நாளில் எப்படி ஒரு முடிவுக்கு சுலபமாக வரமுடிகிறது என்றே புரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து மட்டும் பார்த்தோம் என்றால் அந்த காலம் மாதிரி இருட்டு அறையில் நடப்பதை முதலில் கவனிப்போம்... அப்புறம்  மெதுவாக ஒருவருக்கு ஒருவர் புரிந்துக்  கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்பது போல் இருக்கிறது அல்லவா..??

பெண்களில் சிலர் இந்த மாதிரி நிதானமாக நடந்துக்  கொள்ளாமல் இருப்பதாலும், சில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரப்படுவதாலும் தான்  ஆரம்பமே அலங்கோலமாகி  விடுகிறது.  இன்னும் பல காலம் சேர்ந்துத்  தான் இருக்கப்  போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்.....?!

திருமணத்தை எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்துக்  கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10 , 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும்...இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போதே அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்/இருப்பதை உணரமுடியும்.      

தாம்பத்தியத்தின் ஆயுட்காலம் 

ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை உறவு நீடிக்கிறது என்று கேட்டால் 70 வயது வரை என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.  அந்த காலத்தில் தாம்பத்திய உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என்று இருந்தது. அவர்களை பொருத்தவரைக்கும் இது 'இருட்டறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வு' மட்டுமே. 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்துக் கொள்வது மிக அவசியமாகிறது. "உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்" என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.    

"வேலை பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் எதையும் தங்களது அறைக்குள் நுழையவிடாமல் வாழ்க்கை துணையை அன்பாக நடத்தியும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்திற்கு காரணமான 'கார்டிசால்' என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரக்கிறது. இந்த கெட்ட ஹார்மோன் சுரப்பதைக்  கட்டுப்படுத்துவது 'ஆக்சிடோசின்' என்ற ஹார்மோன். இந்த ஆக்சிடோசின் கணவன், மனைவி உடல் உறவின் போதே அதிக அளவில் சுரக்கிறது என்பது  அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கியப் பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாகவும்' ஆய்வுகள்  கூறுகின்றன.

இந்த மாதிரியான விசயத்தில் ஒரு சிலர் காட்டும் அலட்சியம், குடும்பத்தை எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை எண்ணும்போது தான் இந்த உறவின் அவசியத்தை தம்பதியினருக்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது.

தாம்பத்தியம் தொடரில்  இனி அடுத்து வருவது......

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இந்த உறவிற்கு விரும்பி அழைக்கும் போது மற்றவர் மறுப்பது என்பது இன்று பெரும்பாலோரிடம் சாதாரணமாக காணப் படுகிறது. அப்படி 'உறவு மறுத்தல்' என்பதால் ஏற்படக்  கூடிய விளைவுகள் என்ன என்பதையும் , அதனை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதையும் அடுத்த பதிவில் பார்போம்.      



செவ்வாய், ஆகஸ்ட் 24

'முதல் இரவு' - தாம்பத்தியம் - பாகம் 16

இதற்கு முந்தைய பதிவைப்  படிக்காதவர்கள்,


தாம்பத்தியம் பாகம் 15 படித்து விட்டு வந்தால் தொடர்ச்சிப்  புரியும் என்று நினைக்கிறேன். 

தாம்பத்தியத்தின் முக்கியக்  கட்டமாகிய அந்தரங்கம் பற்றியது தான் இனி வரும் பதிவுகள். நான் ஏற்கனவே சொன்னதைப்   போல் பல குடும்பங்களின் தலையெழுத்து அங்கே நடக்கும் விவகாரங்களை வைத்தே  எழுதப்படுகிறது. ஆனால் பல குடும்பங்களிலும் இதை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.

இதைவிட முக்கியம் வேறு ஒன்றும்  இல்லையா என்பதே...? முக்கியமானதில்,  இதுவும் ஒன்று அவ்வளவுதான்.  'பல ஊடலும்  சரியாவது, கூடலில்  தான்' அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை ஏனோ பலரும் சரிவர கையாளுவது இல்லை.  ஒரு கணவன்,  மனைவி ஆகிய இருவரின் புரிதல் அங்கிருந்தேத்  தொடங்குகிறது...

முதல் நாள் இரவு

சாந்தி முகூர்த்தம் என்றால் " காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது " என்பது தான் அதன் அர்த்தம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்

ஆனால் முதல் நாளே நடந்துதான்  ஆகவேண்டுமா  என்பதுதான் இப்போதைய காலக் கட்டத்தை மனதில் வைத்து எழும் கேள்வி.

இருவேறு கலாச்சாரம், குடும்பச்  சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஆண், பெண் இருவரையும் திருமணம் என்ற பந்தம் இணைக்கிறது என்பது அற்புதமான ஒரு நிகழ்வு.  மாறுபட்ட எண்ணங்கள், வேறுபட்ட உணர்வுகள் என்று வளர்ந்த இருவரையும் அந்த ஒரு நாள் இணைக்கிறது. ஒருவருடைய  விருப்பு, வெறுப்பு என்னவென்று மற்றொருவருக்கு அந்த ஒரே  நாளில் எவ்வாறு  தெரிந்துக்கொள்ள முடியும்.  அப்படி எதையும் தெரிந்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல், உணர்வுகள் கலக்காமல் வெறும் இரு உடல்கள் மட்டும் கலப்பது என்பது ஒரு வித ஆர்வகோளாரில்  கொண்டுப் போய்விட்டு விடுகிறது ...??

தவிரவும் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் கூட இன்னும் ஒருவரின் ஆசைகள், தேவைகள், எண்ணங்கள் என்ன என்றேப்  புரியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காலையில் தாலி கட்டி பின் அன்று இரவுக்குள் அவர்களுக்குள் எப்படி புரிதல் வந்து இருக்க முடியும் ?? அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமைப்  பெற்றதாக இருக்கமுடியும்...??  அவசர கோலத்தில் அள்ளித்  தெளித்த ஒன்றாகத்தான் முடியும்.

அது இருவரில் ஒருவரின் ஏமாற்றத்தில் கூட முடிந்து விடலாம், அந்த ஏமாற்றம் வாழ்வின் இறுதி வரை கூட தொடரக்கூடிய வாய்ப்புகள்  இருக்கிறது. " first impression is the best impression " என்று சொல்வார்கள். அதனால் மிகவும் சென்சிடிவான இந்த விஷயத்தை கையாளுவதில் இருவருக்கும்  மிகுந்த கவனம் தேவைபடுகிறது.

நம் முந்தைய காலத்தில் பெரியவர்கள் நல்ல நேரம், காலம் பார்த்து இதனை நடத்தினர் . பிறக்க  போகும் குழந்தையை மனதில் வைத்து நேரத்தை முடிவு செய்தனர்.  அப்போது இருந்த ஆண், பெண் இருவருக்கும் எதிர்பார்ப்புகள் என்பது இப்போது இருப்பது போல் அதிகம் இல்லை. அதனால் பெரியோர்களின் வழி நடத்தலின் படி நடந்தார்கள்...., அதனால் இருவருக்கும் நடுவில் ஏதும் பிரச்சனை என்றால் அவர்கள் தலையிட்டுத்  தீர்த்து வைத்துவிடுவார்கள்.  அதனால் பிரச்ச்னை  அந்த நாலு சுவற்றுக்குள் மட்டுமே இருந்தன.

இந்த அவசர உலகத்தில் இருவரும் புரிந்துக்  கொண்டு கலப்பது மட்டுமே  தொடர்ந்து வாழ்க்கை நல்ல விதத்தில் பயணிப்பதற்கு உதவியாக இருக்கும்.

அன்றே முடியவேண்டும் என்பது கட்டாயமா??
என்ற  கேள்வி அவசியமா என்றால் அவசியமான கேள்விதான் . சில குடும்பங்களில் பிரிவினைக்கு அதாவது கருத்து வேறுபாட்டுக்கு  காரணம் என்ன என்று விரிவாக விசாரிக்கும் போது தான் தெரிகிறது. அவர்கள் சொல்லும் ஒரு வியப்பான பதில் , " அன்னைக்கு ராத்திரியிலேயே தெரிந்து விட்டது இவர் அல்லது இவளுடன் காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்கமுடியாது என்று...!! " .

அது எப்படி ஒரே இரவில் ஒருவர் சரி இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்...?? காரணம் ரொம்ப சுலபம். அங்கே தான் முழு வாழ்க்கைக்கும் தேவையான அஸ்திபாரம்   போடப்படுகிறது. அது அங்கே சரிவர போடப்படவில்லை என்றால் , வாழ்க்கை என்ற முழு கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் ஏன் பேச தயங்க வேண்டும்...??

சில ஆலோசனைகள்

பூ மலரட்டுமே இயல்பாய்..!!

எதையும் முடிவுச்  செய்ய வேண்டியது திருமணம் முடிந்த அந்த 'புதுமண தம்பதிகள்' தான். இருவருமே ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்...அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பே 'நான்' என்பதை மறந்து விட்டு புது களி மண் போல மனதை வைத்துக்  கொண்டுச்  செல்லவேண்டும். படித்த படிப்பு, அந்தஸ்து, செல்வாக்கு, அழகு குறித்த பெருமை  அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும்....! (புது  மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது  அழகான சிலையாகவோ ??  'எதை'  என்பது அவர்களைப்  பொறுத்தது).

தோழிகள், நண்பர்கள் என்று பலரும் சொல்லும் அறிவுரைகளை மனதில் வைத்து கொண்டுதான் பலரும் நடந்துகொள்வார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் வெளியில் விட்டுவிட்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் தான் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள், புதிதாய் பார்க்கும் நண்பர்களின் அறிமுகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் உங்களின் உரையாடல். அதுவே உங்களின் படபடப்பு, பயம், அச்சம், வெட்கம் அனைத்தையும் விரட்டும். உங்கள் மனமும், உடலும் அப்போதே உற்சாகமாகி விடும். தெளிவாக  தயக்கம் இன்றி பேசுங்கள்...

இங்கு ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஆணோ, பெண்ணோ தங்கள் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்வில் நடந்த, 'பிறரிடம் பகிர்ந்துக்  கொள்ளக்கூடாத' காதல் மாதிரியான சென்சிடிவான விசயங்களை சொல்லிவிடுவார்கள்.(பொய் சொல்ல சொல்றீங்களா  என்று நினைக்காதீர்கள்...உண்மையை சொல்லவேண்டிய அவசியம் இல்லை..அது இனி தொடரப்போகும் வாழ்க்கைக்கு முக்கியமும் இல்லை, தேவையும் இல்லை) காதல், ஈர்ப்பு போன்ற விசயங்கள் இப்போது சகஜமான ஒன்று. துணையிடம்  உண்மையைச்  சொல்கிறேன் பேர்வழி என்று கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிந்தது கதை.

எந்த ஒரு பெண்ணும், எந்த ஒரு ஆணும் தனது துணை இன்னொருவரால் காதலிக்கபட்டவர் என்பதை ஜீரணிப்பது என்பது சிரமம். அவர்களும் அந்த நேரம் பெருந்தன்மையாக ஏற்று கொள்வார்கள்  " இதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி உனக்கு நான் எனக்கு நீ " என்று கூட வசனம் பேசலாம்.  ஆனால் கொஞ்ச நாள் சென்றதும், இந்த உண்மை அவர்களின் மனதைக்  கண்டிப்பாக யோசிக்க வைத்து குழப்பும். சாதாரணமாக  வேறு யாரிடம் பேசினாலும் மனதில் கேள்வி குறி தோன்றும்..அப்புறம்  சந்தேகமாக உருவெடுக்கும்.......அப்புறம் என்ன உங்கள் நிம்மதி குலையும்.....தினம் போராட்டம் தான்.

அதனால் பழைய கதை பேசுவது இருவருக்குமே நல்லது இல்லை... எல்லோரின்  வாழ்விலும் ஏற்படக்கூடிய ஈர்ப்புதான் என்று ஒதுக்கி விட்டு இனி வாழப்போகும் பாதையை ஒழுங்குப்படுத்துவது தான் முக்கியம் என்ற திட  நம்பிக்கை கொண்டு கருத்துகளைக்  கவனமுடன் பரிமாறி கொள்ளுங்கள்.

இறுதியாக இருவரும் நன்கு பேசி ரிலாக்ஸ் ஆன பின்னர் உங்கள் அந்தரங்கம்  நடக்கட்டும் இயல்பாக.  ஆனால் கல்யாணக்  களைப்பில் இருவரும் இருந்தால் அந்த நாளை ஒத்திவைத்து விடுவது மிகவும் நல்லது.  இந்த இடத்தில் பெண்ணின் விருப்பம் கண்டிப்பாகக்  கேட்கப்பட வேண்டும். அவளின்  விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பிக்கப்படுவதை இந்த விசயத்தில் எந்த பெண்ணும் விரும்புவது இல்லை. 

விருப்பம் இல்லை என்ற மாதிரி தெரிந்தால் பெரியக்  கட்டத்திற்கு போகாமல் சின்னச்சின்ன சீண்டல்கள், சில அன்பான வருடல்கள், மென்மையான சில முத்தங்கள் , ஆதரவான அணைப்பு இவற்றுடன் அந்த நாளை நிறைவுப்படுத்துங்கள். தன்னுடைய எண்ணத்திற்கும் கணவன் மதிப்புக்  கொடுக்கிறாரே என்று  எண்ணி நீங்கள் அவளின் மனதில் விரைவாய் குடியேறி விடுவீர்கள். முதலில் தனது துணையை  காதலிக்கத் (கற்றுக்கொள்ளுங்கள்)தொடங்குங்கள்...! அப்புறம் பாக்கலாம் மற்றதை...!!

அற்புதமான இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து சுவையானதாக மாற்றுங்கள். எல்லாம் அந்த ஒரு நாளில் மட்டுமே முடிந்துப்  போய் விடுவது இல்லை. அந்த நாள் ஒரு இனிய  தொடக்கம் மட்டுமே...இனி தொடரும் நாட்களில் மெது மெதுவாய் முன்னேறி அடுத்து  வெல்லுங்கள் அவளின் மனதையும், அழகையும்..... !

பின் குறிப்பு 

ஒருவேளை அன்றே நடக்கவில்லை என்றால் சில விரும்பத்  தகாத நிகழ்வுகள் அடுத்து நடக்கலாம்....??!!  அவை என்ன என்று அடுத்து தொடர்ந்துப் பார்க்கலாம்.

தொடர்ந்துப் பேசுகிறேன்... 
உங்களின் 'மனதோடு மட்டும்'💓
கௌசல்யா.     

வெள்ளி, ஆகஸ்ட் 13

'அந்தரங்கம்' பற்றிய ஒரு அலசல் - தாம்பத்தியம் - 15


இதற்கு முந்தைய பதிவு - ஏன் விட்டுக்கொடுக்கணும் 

அந்தரங்கம்

தாம்பத்தியம் சீர்குலையப்  பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். 

கடந்துப்  போன கவலைகளிலும் வர இருக்கிற சிந்தனைகளிலும் மூழ்கி, நிகழ்கால ஆனந்தங்களை அனுபவிக்காமலேயே இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்துக்  கொள்ளும் முன்பே இளமை முடிந்து முதுமை வந்து வாழ்க்கை அவர்களைத்  தாண்டிப்  போயே விடுகிறது.

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்பதை விட, சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டிச்  செல்வது என்பதே பலரது கவலையாக இருக்கிறது. 

அந்தரங்கம் என்று சொல்லிவிட்டு அதை எப்படி வெளியில் விவரமாக சொல்வது...? என்ற கேள்வி எழுவதைத்  தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதுதான் பல குடும்பங்கள் பிரிவதற்கு மிக மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பல சண்டைகளின் ஆரம்ப  அடிப்படை காரணமே இதுதான் என்று என்னால் உறுதியாகக்  கூற முடியும். என்னவொன்று கணவன், மனைவி இருவருமே இதுதான் எங்களுக்குள் பிரச்சனை என்று வெளிப்படையாகச்  சொல்வது இல்லை , இதுதான் என்று அவர்களுக்கும் தெரிவது இல்லை!!!

ஒரு ஆணின் அந்தரங்கம் வீட்டில் சரியாக இருக்காத  பட்சத்தில் வெளியில் மாற்று இடம் சுலபமாகத்  தேட முடியும் அது மற்றொரு பெண்ணை தேடும் வழி என்று சொல்லவில்லை... தங்களை நண்பர்கள், வேலை, பொழுதுப்போக்கு என்ற விதத்தில் ரிலாக்ஸ் செய்துக்  கொள்ளமுடியும் .   ஆனால் பெண்கள் , தங்களின் ஆசை நிராசையாக போய்விட்டால் அது வார்த்தைகளில் எரிச்சலாக, கோபமாக, ஆத்திரமாக வெளிப்படுகிறது. நாளடைவில் மன அழுத்தம், மனதெளிவின்மை, ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றில் கொண்டுப்போய் விட்டு விடுகிறது..... ஆனால் இதுதான் பிரச்சனைக்கான சரியான  காரணம் என்று அந்த பெண்ணுக்கே சில நேரம் புரிவது இல்லை.

" பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் செக்ஸ் உறவு வெற்றி " இவை இரண்டும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன என்பது க்ரூகர் என்பவரின் கூற்று.  ஆனால் இதனால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்க படுகிறார்களாம்...??!!


கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையானத்  தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..?? மிக சொற்பமே..!!?? குடும்பத்தில்  சண்டை என்று சொல்பவர்களிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது...பிரச்சனையின் வேர் படுக்கை அறையில் இருக்கிறது என்பது...!!? 

வெளியில் பேசக்கூடாத ஒரு விசயமாக தானே இன்றும் இருக்கிறது. காரணம் நாம் வாழும் சமூதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள். மற்றவர்களுடன் பேசக்கூடாத ஒரு அருவருப்பான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.  கட்டுப்பாடுகள் இருப்பது நல்லதே, ஆனால் ஆரம்ப தெளிவுக்  கூட இல்லாமல் போய்விடுவது சோகம்.
இதனாலேயே வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படுகின்றன.

துணிந்து வெளியில் சொல்லமுடியாத நிலையில் இதனைப்  பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் விடை தெரியாமல் ஒரு தொடர்கதை போல் போய் கொண்டே  இருக்கிறது. இம்மாதிரியான பதில் இல்லா கேள்விகள் பலரை  மனதளவிலும், உடலளவிலும் பயங்கரமாகப்  பாதிக்கிறது. 

 " இதனால்  அவர்களின் வாழ்க்கை தரமே குறைந்துப்  போகக்  கூடிய நிலையில்  இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் " என்கிறார்கள் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம்  என்னவென்றால் , பலரின், குறிப்பாக பல பெண்களின் கேள்வியே, " இதை விட வேற ஒன்றும்  முக்கியம் இல்லையா ? இது மட்டும் தான் வாழ்க்கையா? "  அப்படி உள்ளவர்களுக்கே இந்த பதிவு என்று நினைக்கிறேன். 

'அதற்காக எல்லாம்  எங்களால் நேரம் ஒதுக்க முடியாது' என்று அலட்சியமாக சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம், புகழ், பெயர் இவற்றைச்  சம்பாதிக்க அவைகளின் பின்னால் ஓடவே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை 'தகவல் தொழில் நுட்பங்களும்', 'பொழுதுபோக்கு அம்சங்களும்' விழுங்கி விடுகின்றன.  

தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரிவது இல்லை. அந்த 'பொன்னான நேரத்தை' எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது என்பதை பலரும் உணருவதே இல்லை.  

அந்த நாலு சுவற்றுக்குள் ஒரு கணவனும் மனைவியும்  இருப்பதை பொறுத்தே  அவர்களின் வெளி உலக நடவடிக்கை இருக்கும்.

'செக்ஸ்' என்பதின் அர்த்தம்தான் என்ன ??

உடலுறவு என்பது அறிவியல்/மருத்துவரீதியாக சொல்லவேண்டும் என்றால், "உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகபடியாக வேலை செய்யும் , சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான நல்ல  உடற்பயிற்சி என்பதே".

" பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் " என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை.

'காதல் உணர்வு' என்பது ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வது உண்டு. அதன் பெயர்தான் 'ஆக்சிடோசின்'. இது பொதுவாக  பிரசவ நேரத்திலும் , உடலுறவு சமயத்திலும் அதிகமாக சுரக்கக்  கூடியது. 'இதுதான் அடிப்படை'

இதைப்பற்றி அறிய  அதீத ஆர்வம், இனம் புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பலவகையான உணர்வுகள் நம்மை ஆட்க்கொண்டு விடுகின்றன. 

கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபத்தாபங்கள் அனைத்தும் இங்கே தான்  மறக்கப்படுகின்றன(மறக்கடிக்கப் படுகின்றன). 

பின்குறிப்பு 

தாம்பத்தியத்தில் முக்கியமானப்  பகுதியான இதை கொஞ்சம் விளக்கமாக விவரிக்க சொல்லி, பலர் கேட்டதின் காரணமாக பதிவு விரிவாக இருக்கும்...பதிவைப்  பற்றிய சந்தேகங்கள்  மட்டும் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். உங்கள் பெயர் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டால் பின்னூட்டம் பப்ளிஷ் பண்ணப்பட மாட்டாது என்பதைச்  சொல்லிக் கொள்கிறேன். 

அடுத்து இந்த பதிவின் தொடர்ச்சியாக வருவது...தாம்பத்தியம் 18+

தொடர்ந்து பேசுகிறேன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா