புதன், டிசம்பர் 23

பெண்ணியவாதிகள் சிலரின் ஆதிக்க வக்கிரங்கள்...!!?




எனக்கு இந்த ஒரு விசயத்தில் மட்டும் எப்பொழுதும்  ஒரே குழப்பம் இந்த பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்களா பெண்களுக்கு  எதிரானவர்களா? பெண்ணுக்கு இழிவு ஏற்பட்டுவிட்டது என்றதும் சிலிர்த்து எழும் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குரூப், தங்களின் எழுத்து, பேச்சின் வாயிலாக 'ஏய் ஆணாதிக்க வர்க்கமே' என ஆரம்பித்து கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்... இதை நன்றாக கூர்ந்துக் கவனித்தோம் என்றால் அங்கே பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருப்பது சாட்சாத்  பெண்மை?! பெண்ணுரிமையை  பேணுகிறோம் என்று கூறிக் கொண்டே பெண்மையை இழிவுப்படுத்துவதில் பெண்ணியவாதிகளுக்கு நிகர் அவர்களேதான்.   

ஆம் போற்றப்படவேண்டியவள் தூற்றப்படுகிறாள் ஆண்களாலும் ஒரு சில பெண்களாலும்... அவர்கள் பெண்ணுக்குரிய மதிப்பை, மாண்பை குறைத்துக்கொள்ள சிறிதும் அஞ்சுவதில்லை. சிலரின் போகப்பொருள் சிலரின் கேலிப் பொருள் சிலரின் பொழுதுபோக்கு இப்படி பெண்மையை எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம், உண்மையில்  இதை தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் யாருமில்லை. ஆண்கள் தான் தங்களுக்கு எதிரிகள் என்று எண்ணிக் கொண்டே சில பெண்கள் நடந்துக் கொள்ளும் விதம் சகபெண்களாலேயே சகித்துக்கொள்ள முடிவதில்லை.

பெண்ணுரிமை பெண்ணியம் பேசுபவர்கள் தங்களின் தன்முனைப்பை பொதுவெளியில் நிலைநாட்ட துடிக்கிறார்களே  தவிர சக பெண்ணிற்கு உதவுவதாக இல்லை. அதிலும் இவர்களின்  கருத்துகள் பெண்ணை மேலும் மேலும் அவமானப் படுத்துவதாகத்தான் இருக்கிறது. இவர்களை போன்றோரின் கருத்துகளால் பெண் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தை வலுவாக எல்லோரின் மனதிலும் பதிய வைக்கிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கெதிரான நிகழ்வு என்றாலும் சம்பந்தப்பட்ட நிகழ்வின் முன் பின் சூழல்கள்  எதையும் அலசி ஆராயாமல் பொத்தாம் பொதுவாக ஆணாதிக்கம் என குற்றம் சாட்டுவது அவர்களின் முக்கியமான பொழுதுப் போக்கு.

தற்போது பரபரப்பான விசயமாக மாறிப் போன பீப் சாங் பிரச்சனையில்  சம்பந்தப் பட்டவர்களின் மீது வழக்குகள், கைது நடவடிக்கை என வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் ஓகே ரகம் என்றால் இதை குறித்து எழுதப்பட்ட விமர்சனங்கள் ஐயகோ ரகம். நிர்மலா கொற்றவை, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி போன்றோரின் எழுத்துக்களை படிக்க நேர்ந்தது.  அதிலும்  கொற்றவை எழுதிய கட்டுரையை மூன்று பாராக்களுக்கு மேல் இயல்பாக  படிக்க இயலவில்லை.  முன்பு நண்பர் ஒருவர்  எழுதிய கிராமத்து கதையில் சில வசைச்  சொற்கள் இடம் பெற்றிருந்தன, கதையை வாசிக்கும் போதே, 'இது போன்ற வார்த்தைகளை நானும் வாசிக்க நேர்ந்துவிட்டது, ஏன் இந்த வார்த்தைகள் போடாமல் எழுத முடியாதா' என்றதற்கு கிராமத்து மனிதர்கள் சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகளான இவை  இருந்தால் தான் கதை அதன் இயல்பு குன்றாமல் இருக்கும் என்று அவர் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.   கண்களாலும் மனதாலும் வாசித்து பெரிய பாவத்தை செய்ததைப் போல படபடப்பாகிவிட்டது.  

ஒரு ஊருக்கு சாதாரணமாக சொல்லாக தெரிவது பிற ஊர்களுக்கு தவறு, குற்றமாக இருப்பது யதார்த்தம் என்றாலும் பாலியலை மட்டுப்படுத்தும் கேவலப்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் இயங்குபவர்கள் தவிர்த்தல் நலம் என்பது எனது கருத்து. உடல் ரீதியில் பெண்ணை துன்புறுத்துவதற்கும் உடல் உறுப்பு வார்த்தைகளை பிரயோகிப்பதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் முன்னது உடலை வருத்துகிறது பின்னது  மனதை வருத்துகிறது. இரண்டுக்குமான வலி என்பது பொது.

அதுபோன்ற ஒரு வலி, பதட்டம்  கொற்றவை அவர்களின் கட்டுரையை படிக்கும் போது ஏற்பட்டது. எதை சிம்பு அனிருத் செய்ததாக குற்றம் சாட்டுகிறோமோ அதே வார்த்தையை பலமுறை பலவிதமாக அழுத்தம் திருத்தமாக சொல்வதுதான் எதிர்வினையா ? ஆண் சொன்ன போது தவறாக தெரிந்த ஒன்று பெண் சொன்னதும் சரி என்றாகிவிடுமா? 

முற்போக்கு பெண்ணியவாதிகள் 

சிம்பு அனிருத் செய்ததற்கு அவர்கள் வீட்டுப் பெண்களை தெருவுக்கு இழுத்து 'அந்த வார்த்தைக்கு அபிநயம் பிடித்து ஆடுவாயா' என்றெல்லாம் கேவலப்படுத்துவது கொஞ்சமும் நியாயம் இல்லை... எந்தவொரு வாக்குவாதத்தின் போதும்  பிறர் வீட்டுப் பெண்களின் பத்தினித்  தன்மையை விலை பேசுவது ஆண்களின்  அதிகபட்ச தாக்குதலாக இருக்கும் அதுபோன்ற ஒன்றை பெண்ணியவாதிகளும் செய்வது வேதனை. ஒட்டுமொத்த தாக்குதலும் சிம்பு அனிருத் வீட்டு பெண்களை நோக்கி மட்டுமே வசதியாக அந்த வீட்டு ஆண்களை மறந்துவிட்டார். பெண்ணுக்கு சார்பாக பேசுகிறோம் என்ற போர்வையில் பெண்மையை விலைபேசுவது வக்கிரத்தின் உச்சம்?! இதுதானா  பெண்ணியம்??!!   

ஆணோ பெண்ணோ சிந்தனையில் நாகரீகம் இருந்தால் தான் வார்த்தை பிரயோகமும் நாகரீகமாக இருக்கும் மாறாக சிந்தனையே வக்கிரமாக இருந்தால் அவர்களின் செயலும் அவ்வாறே... மனதில் இத்தனை அசிங்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் எவ்வாறு இவர்களால் பொதுவெளியில் பிறரை நேர்மையாக எதிர்க் கொள்ளமுடியும்.  சிம்பு அனிருத் இருவரின் வளர்ப்பு சரியில்லை, பண்பு இல்லை இப்படி ஏகப்பட்ட இல்லைகளை சொன்னவரின் எழுத்தில்  'எதுவுமே' இல்லை. 

அந்த பாடலை பற்றிய இவரது விமர்சனம் அருவருப்பாக குமட்டலை ஏற்படுத்துகிறது... இங்கே லிங்க் கொடுப்பது இந்த பதிவின் உண்மைத் தன்மைக்காகத்தான்,    http://saavinudhadugal.blogspot.qa/2015/12/blog-post.html

பாதிக்கப்படும் பெண்களுக்கு பக்கபலமாக இருப்பது பெண்ணியவாதிகள் என்பது  பலரின் எண்ணமாக இருந்தால் இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். பெண்ணியவாதிகளையும் பிற பெண்களையும் ஒன்றாக இணைத்து இனிமேலும் தயவுசெய்து பேசாதீர்கள்.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் பிளவை ஏற்படுத்தவே  பிறந்தவர்கள் அவர்கள்.   'பெண் மேக்கப் செய்வது ஆணை உடலுறவுக்கு அழைப்பதற்காக' என்று பகிரங்கமாக பொது ஊடகத்தில் டாக்டர் ஷாலினியால் சொல்லமுடிகிறது என்றால் பெண்ணியவாதிகளுக்கு இந்த சமூகம் கொடுத்து வைத்திருக்கும் அந்தஸ்தை புரிந்துக் கொள்ளலாம். நாளையே  ஒரு ஆண் இப்படி சொன்னால் இதே ஷாலினி 'என்ன ஒரு ஆணாதிக்க வக்கிரம் என்று அந்த ஆணை நோக்கி  வாளையும் வீசக் கூடும்.    

பெண்ணியவாதிகள், சமூகம் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வருவதாக எண்ணிக் கொண்டு சமூகத்திற்கு எதிர் திசையில் போகிறார்கள், எதிர்த்து செய்கிறார்கள். ஆறறிவு உள்ள மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சுய சிந்தனை அற்று வாய்க்கு வந்ததையும்  நினைப்பதை எல்லாம் பேசுவதும் உடல் உறுப்புகளை இழிவு செய்வதும் சாதி மத ரீதியிலான தாக்குதலுமா  கருத்து சுதந்திரம் ? 

பெண்களை பற்றிய கட்டுரையில் சாதிக்கு என்ன வேலை, இவ்வாறுதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் எதற்கோ எதையோ இழுத்து பத்தாததுக்கு பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொள்வார்கள். அவர் ஏதோ அப்போதையை சூழலுக்கு தனக்கு சரி தவறு என்று பட்டதை எல்லாம் சொல்லி எழுதி வைத்துவிட்டு போய்விட்டார். அப்போதைய சூழலா இப்போதும்  இருக்கிறது? 

ரொம்ப வெளிப்படையாக பேசுவது தான் பெண்ணுரிமை என்ற கட்டமைப்பை இவர்களாக ஏற்படுத்திக்  கொள்வார்கள் , இத்தகையவர்களுக்கு  ஆதரவாக சில ஆண்கள் இருப்பார்கள், ஆனால்  அவர்களுக்கு தெரியாது தங்களையும் சேர்த்தே தான் பெண்ணியவாதிகள் திட்டித் தீர்க்கிறார்கள் என்று. பெண்ணியவாதிகளின் கட்டுரைகள் கவிதைகளை பகிர்ந்தும் விருப்ப கருத்திட்டும்  தான் ஆணாதிக்கவாதி அல்ல என்று காட்டிக் கொள்வதில்  ஆண்களுக்கு அவ்வளவு விருப்பம். பெண்ணியவாதிகள் என்ன சொன்னாலும் வாவ் என்ன ஒரு தைரியமான எழுத்து என்று ஜால்ரா தட்டும் ஆண்கள் பாவம் ... பச்சை பச்சையா பெண் பேசினால் அது தைரியம்,வீரம்  என்றால் தெருகுழாயடியில் சண்டைப் பிடிப்பவர்கள் அத்தனை பேருமே வீரம் செறிந்த போராளிகள்தான் (ஜான்சிராணி வேலுநாச்சியார் போன்றோர்  மன்னிக்க) 

பெண்ணியவாதிகள் பேசாமல் இருந்தாலே போதும், ஆண்களை சாடுவதாக கூறிக் கொண்டே அத்தனை எதிர் வினையும் பெண்களின் மேல் மட்டுமே காட்டும் இவர்கள் தான் முற்போக்கு பெண்ணியவாதிகள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் வர்க்கத்தை வார்த்தைகளால் வன்கொடுமை செய்து வக்கிரங்களை பரப்பும் இத்தகைய பெண்ணியவாதிகளுக்கு கட்டுப்பாடு ஒன்றும் கிடையாதா ? 

பெண்கள் சாதாரணமாக பேசவும்  எழுதவும்  கூசும் வார்த்தைகளை சுலபமாக கையாளத் தெரிவதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு... ... ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என பாடம் எடுத்தவர்கள் ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலா இருப்பார்கள்... ஆனால் தான் தனித்து தெரியவேண்டும் என்பதன் வெளிப்பாடு தான் அந்த வீட்டுக்கு பெண்களை வார்த்தையால் வம்புக்கு இழுத்தது... 

இப்படி பட்ட முற்போக்கு பெண்ணியம் பேசத்தெரியாத பெண்கள் நிறைய நிறைய  எழுதவேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் எனது சிறு வேண்டுகோள்...அப்போதுதான் பெண் என்றால் யார் அவள் எழுத்து எவ்வளவு நாகரிகமானது என்பதை உலகம் தெரிந்துக் கொள்ளும் மாறாக முற்போக்கு பெண்ணியவாதிகள் சூழ் இணையம் மிக ஆபத்தானது... பெண் பற்றிய இவர்களது கருத்துக்களை வைத்து பெண் என்றால் இவர்களைப் போன்றோர் தான் என்ற தவறான பிம்பத்தை உடைத்தாக வேண்டும்... ஆண் என்றால் பெண் மோகம் கொண்டு அலைபவன் மட்டும்தான் என்ற கருத்தியலையும் பெண் தான் உடைக்கவேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மனு சாஸ்திரத்தையும் பெரியார் சொன்னதையும் கட்டி அழுவார்களோ தெரியவில்லை.

பிறரைவிட பொதுவெளியில் இயங்கும் ஆண் பெண் இருவருக்குமே பொறுப்புகள் அதிகம் இருக்கிறது. தகுந்த காரணக்  காரியம் இல்லாமல் போகிறபோக்கில் ஒரு கருத்தை தெளித்துவிட்டு போய்விட முடியாது... சுற்றி சுழலும் உலகத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மாறாக என்  எழுத்து என் உரிமை என்று உளறிக் கொண்டிருந்தால் பிறரால் தவிர்க்கப் படுவார்கள் அல்லது  கேலிக்கு ஆளாகி விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.

பெண்களை மேலும் மேலும் இழிவுப்படுத்தும் முற்போக்கு பெண்ணியவாதிகளுக்கு எனது  வன்மையான கண்டனங்கள் !!!


pic - google

திங்கள், டிசம்பர் 21

உதவுவதில் முன்னிலை - இஸ்லாம்

சென்னை கடலூரை முடக்கிப் போட்ட மழை வெள்ளம் அம்மக்களை மட்டுமல்ல தொலைதூரத்தில் இருக்கும் மக்களையும் மனதளவில் புரட்டிப் போட்டுவிட்டது.  இதுவரை தான் தனது என்று இருந்தவர்களையும் நிறையவே யோசிக்கவைத்திருக்கிறது.  வெள்ளத்தில் தத்தளித்த மக்களை காப்பாற்றுவதிலும் நிவாரண பணிகளை கவனிப்பதிலும் ஈடுபட்ட இளைஞர்கள் தன்னார்வலர்கள் முஸ்லிம் அமைப்பினர் சமூக வலைதள நண்பர்கள் என்று பல பெயர்களில் சொன்னாலும் அவர்கள் அனைவரையும் தேவதூதர்கள் என்றே இனி அழைக்கலாம்.   பிரதிபலன் பாராது உதவிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்வதை விட  அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். அதிலும் தீவிரவாதிகள் போன்றே  கட்டம் கட்டப்பட்ட இஸ்லாம் சமூக மக்களை பற்றி எழுதாமல் இருப்பது எனக்குள் மனிதநேயம் மரித்துவிட்டதை  போல உணருகிறேன். இஸ்லாமின் ரிஷிமூலம், நதிமூலம் பற்றியே பேசி பேசி சிறுபான்மையினரை சிறுமைப்படுத்துவதை விட அவர்களின் தற்போதைய  சேவைகளை அடிக்கடி பேசுவது எதிர்கால சமூகக் கட்டமைப்பிற்கு நன்மை பயக்கும்.     




நெருங்கிய முஸ்லிம் நட்பு என்று ஒருவர் நம் எல்லோருக்குமே  இருப்பார்கள். அவர்களின் பண்பட்ட குணத்தை அறியும் ஒரு வாய்ப்பு சென்னையில் எனது கல்லூரி காலத்தில் கிடைத்தது. மலையாளம், தெலுங்கு பேசும் தோழிகள், உருது பேசும் முஸ்லிம் தோழி உட்பட நாங்கள் ஆறு பேர். எப்போதும் கலகலப்பான பேச்சுக்களுடன் சுற்றி வருவோம்.  மற்ற தோழிகள்  ஆண்களை பற்றிய கிண்டல் கேலி என தொடங்கினால் இஸ்லாமிய தோழி 'உங்களுக்கு இதை தவிர வேற பேச்சே இல்லையா'  என்று சலித்து எனது கையை பிடித்து இழுத்து அந்த இடத்தைவிட்டு அழைத்துச் சென்றுவிடுவாள்.  கல்லூரியில் படித்த ஐந்து வருடமும் இதே கதைதான் அவர்கள் பேச நாங்கள் ஓட என்று. ஒருமுறை இந்து மத தோழி  விநாயகரை குறித்து மிக ஆபாசமாக கிண்டல் செய்துவிட  இஸ்லாமிய தோழிக்கு வந்ததே கோபம், கத்து கத்து என்று கத்தித் தீர்த்துவிட்டாள், கிண்டல் செய்த தோழி மன்னிப்பு கேக்கும்வரை விடவில்லை... அப்போதில் இருந்தே பிற மதத்தின் நம்பிக்கைகளை மதிக்கும் இஸ்லாமிய மக்களின் மதப்பற்று எனக்கு மிகப் பிடித்துவிட்டது. இன்றும் பிள்ளையார் சதுர்த்தி வந்தால் இஸ்லாமிய தோழிதான் எனது நினைவுக்கு வருவாள்.

ஒருவர் பிறப்பால் ஒரு மதத்தை சேர்ந்தவராக இருப்பார், ஆனால் அந்த மதத்தின் கொள்கைகளை கோட்பாடுகளை எல்லாம் சரியாக தெரிந்து வைத்திருப்பார் என்பது சந்தேகம்தான். உதாரணமாக இந்து மதத்தை சேர்ந்தவர்களில் எத்தனை பேருக்கு தங்களின் புனித நூல் பகவத் கீதை என்று தெரியும்?!  (அதையும் விட இந்து என்றால் யார் என்ற சிறு குழப்பமும் சமீப காலத்தில் ஏற்பட்டுவிட்டது) சர்டிபிகேட்டில் இந்து என்று இருக்கிறது மற்றபடி இறைவழிபாடு என்பது எவ்வாறு என்பது தெரியாமலேயே பலர் உண்டு இங்கே, கடவுளே இல்லை என்பவர்களின் சான்றிதல்களிலும் இந்து என்று இருக்கும். ஆக கடவுளுக்கும் மதத்துக்குமே சம்பந்தம் இல்லை ஆனால் இஸ்லாமில் அப்படி அல்ல,  எல்லோரும் ஒருமித்து கோட்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.  விதிவிலக்குகள் மனிதராக உலவும் அனைவரிடத்திலும் உண்டு அதற்கு மதத்தை குறை சொல்வது சரியல்ல.

சிறுவயதில் இருந்தே புனித நூலை படிக்க வைப்பது, ஐந்து முறை தொழுகை, வெள்ளிக்கிழமை தொழுவது, ரம்ஜான் நோம்பை தீவிரமாக கடைப்பிடிப்பது என்ற (மற்ற  மதத்தினரை விட) இவர்கள் காட்டும் ஈடுபாடு, அக்கறை அலாதியானது. இதை அடிக்கடி என் கணவரிடமும் மகன்களிடமும் சொல்லி பெருமைப்படுவேன்.  ஒருமுறை எனது மகனின் இஸ்லாமிய நண்பன் உடுமலைபேட்டையில் இருந்து இருநாட்கள் விடுமுறையில் வந்திருந்தான்,  டிவி கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் எதையோ நினைத்ததை போல வேகவேகமாக குளித்து உடைமாற்றி என்னிடம் வந்து ஆன்டி ஒரு மேட் கொடுங்க பிரே பண்ணனும் என்றான். எங்கிருந்தாலும் வெள்ளிக்கிழமை என்பதை மறவாமல் தனி அறைக்குள் சென்று அமைதியாக இறைவனை வணங்கும் இந்த பற்றைத்தான் உலகம் சொல்கிறது மதவெறி என்று ! 

ஒரே மதம் அன்பையும் ஆத்திரத்தையும் ஊட்ட முடியுமா ? அவ்வாறு வெறியை ஏற்படுத்தும் மதத்தை மனிதர்கள் விரும்புவார்களா என்ன... அதை விரும்புவர்கள் மனிதர்களாக இருப்பார்களா என்ன?  எப்படி இருப்பினும் இந்தியா மத சார்பற்ற நாடு என்பதை இந்த மழை வெள்ளம் தமிழக மக்களுக்கு நினைவுபடுத்திவிட்டது. 

முஸ்லிம் துலுக்கன் என்றெல்லாம் சொல்லி அவர்களின் மீது ஒரு பயத்தை வெறுப்பை வளர்த்தது யார் என்பதை தமிழக மக்கள் முக்கியமாக சென்னை கடலூர் மக்கள் புரிந்துக் கொண்டார்கள்.  மதத்தை வைத்து தியாக உள்ளம் கொண்ட மக்களை பெருவாரியான மக்களிடம் இருந்து  சுலபமாக பிரித்துவிடலாம் என கனவு கண்டவர்கள் இனியாவது அச்சப்பட்டு தலையை குனிந்துக் கொள்ளவேண்டிய தருணமிது. இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் ஒட்டுமொத்த மக்களும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஒன்று புதிதாக ஏற்படுகிறது. 

வெள்ளம் வடிந்ததும் மக்கள் உதவி செய்தவர்களை மறந்துவிடுவார்கள் என்ற அரசியல்வியாதிகளின் நினைப்பில் ஆயிரம் டன் மண் விழ வேண்டும்.  நம்மிடையே மதத்தின் பெயரால் பிரிவினைகளை ஏற்படுத்துவது யார், அவர்களின் நோக்கம் என்ன  என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது.  இஸ்லாமியர்களை குறித்த தவறான சித்தரிப்புகளை கற்பிதங்களையும் உடைத்தெறிந்துவிட்டது மழை என்றே தோன்றுகிறது.  

நாம் ஒன்றுப் பட்டால் ஏற்படக்கூடிய நன்மை என்ன என்ற விழிப்புணர்வை விதைக்கவேண்டியது இளைஞர்களின் கையில் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியான செய்திகள் தகவல்களை பதிவிடுவதன் மூலம் இது சாத்தியமாகலாம். 

ஏன்  இந்த பாராமுகம் 

ஊடக வெளிச்சம் பேர் பணம் புகழ் எதற்காகவும் இவங்க எல்லோரும் ஓடி ஓடி பாடுபடவில்லை... அவர்களின் மதம் போதிக்கும் தியாகம் மனித நேயம் இதற்காக மட்டும் தான். ஆனால் ஊடகங்கள் இவர்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்ச மிகவும் யோசிக்கிறது தயங்குகிறது ஏன் அஞ்சுகிறது என்றுகூட சொல்லலாம்.  அதனால்தான் எந்த பிரதிபலனும் பார்க்காமல் இவர்கள் உழைக்க இவர்களின் படத்தை போட்டு தன்னார்வலர்கள் என்று குறிப்பிடுகிறது, இஸ்லாம் அமைப்பு என்று சொன்னால் என்னவாம். சிறு பான்மையினர் என்ற குறுகிய வட்டத்திற்குள் இவர்களை அடைத்து அடக்கி வைப்பதை பல காலமாக ஒரு கூட்டம் செய்து வந்திருக்கிறது, அதை மற்றவர்களும் கவனிக்க வில்லை, அவரவர் வேலை அவரவருக்கு அதனால்தான் சிலரின் சூழ்ச்சி பலருக்கும் பெரிதாக தெரியவில்லை. 

பழைய படங்களில் வரும் ரௌடிகள் ஜேம்ஸ் பீட்டர் என்ற பெயரில் இருந்ததற்கு காரணமும் பிற மதத்தினரின் மீதான பார்வை தவறாகத் தான் இருக்கவேண்டும் என்பதாக இருக்கும்.  நம்மை அறியாமலேயே நமது ஆழ்மனதில் மிக சாதூர்யமாக இவை எல்லாம் பதிய வைக்கப் பட்டிருக்கின்றன, அதனால் தான் முஸ்லிம் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் கிருஸ்தவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒவ்வொரு சாதி மதத்துக்கும் ஒரு அடையாளத்தை  ஏற்படுத்தி விட்டார்கள்.  இத்தகைய போலி பிம்பத்திற்குள் இருந்து என்று நாம் வெளிவரப் போகிறோம் என்று தெரியவில்லை. அதற்கான ஒரு நேரத்தை இயற்கை உருவாக்கி விட்டது. மழை வெள்ளத்தில் ஓடி ஓடி முதலில் தனது கரத்தை நீட்டியது தீவிரவாதி என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் தான்.   இந்த சேவையை செய்தியை பதிந்து வைக்க வில்லையென்றால்  வரலாறு தனது இஷ்டத்திற்கு ஏற்றவாறு எழுதிக் கொள்ளும் அல்லது எழுதி விடுவார்கள் பிரிவினைவாதிகள்.  

பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய அவர்கள் தான் தொடர்ந்து குப்பைகளை அகற்றுகிறோம் சுத்தப்படுத்துகிறோம் பேர்வழி என்று நாற்றம் குடலைப் பிடுங்கும் சாக்கடையில் கையை விட்டு அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். துப்புரவு தொழிலாளி வீட்டு வராண்டாவில் நின்றால் கூட தீட்டு என்று பின் வாசல் கதவை திறந்துவிடும் மனிதர்கள் வாழும் மண்ணில் தான் இவர்களும் வாழுகிறார்கள்.  நினைத்து பார்க்கவே கை எடுத்து வணங்கத் தோன்றுகிறது.  தன்னலம் பார்க்காத மனிதநேயத்தை எந்த மதம் வலியுறுத்தினாலும் அதை பின்பற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல ஆனால் இவர்கள் பின் பற்றுகிறார்கள் அதையும் மிக தீவிர மாகவே... ஆமாம் இவர்கள் தீவிர வாதிகள் தான், மனித நேயத்தை விதைப்பதில் ...! 

சேவை எல்லாம் பண்ணவில்லை, விளம்பரம் பண்ணாங்க , மதப் பிரசாரம் பண்ணாங்க என்று ஆதாரத்தை போட்டிப் போட்டு ஷேர் பண்ணும் மனிதர்களை கண்டால் சிரிப்புத்தான் வருகிறது. யாரோ ஒருவர் செய்வதை மொத்த இன மக்களுக்குமான ஆதாரமாக கொள்ளும் சின்னபுத்தி இது. ஒருவேளை அப்படியே செய்தாலும்தான் என்ன, அதில் பிறருக்கு என்ன  பிரச்சனை, அதாக்கும் இதாக்கும் என்று போட்டோ ஷாப் விளம்பர யுக்தியால்  ஆட்சியை பிடித்ததை விடவா இவர்கள் செய்துவிட போகிறார்கள்.  மதம் மாற்றுபவர்கள் பிரசங்கம் செய்ததுமே உடனே வணங்கிக்கொண்டிருக்கிற    கடவுளை குப்பையில் தூக்கி போட்டு விட்டு அடுத்த மதத்துக்கு ஜம்ப் பண்றாங்க என்றால் பிரச்சனை மதத்தில் இல்லை பக்குவம் இல்லாத மனிதர்கள் இடத்தில்தான் பிரச்சனை இருக்கிறது.

இந்த கூட்டத்தில் வசதியான வீட்டை சேர்ந்தவர்கள் பலர் இருந்தும் தங்களின் அடையாளத்தை மறைத்து அல்லது மறந்து இஸ்லாமிய அமைப்பின் கீழ் சேவை புரிந்தது எனக்கு மிகுந்த வியப்பை கொடுத்தது. நான் பார்த்தவரை  யாரும் கேமரா எங்க இருக்கிறது என கவனிக்க கூட இல்லை மொத்த கவனமும் மக்களை மீட்பதில் ...! வியத்தக்க அம்சம் என்னவென்றால் அவர்களின் பணியில் ஒரு கட்டுக் கோப்பு ஒழுங்கைப் பார்த்தேன். இவர்களின் பணிகளை பார்த்து ஜீரணிக்க முடியாமல் இவர்களை குறை சொல்லும் கூட்டம் இங்கு நிறைந்திருந்தாலும் அந்த  கூச்சல் இங்கே யாருக்கும் இனியும் விழாது மக்கள் நேரடியாக பார்த்துவிட்டார்கள் உணர்ந்துவிட்டார்கள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்வது யார் நன்மை செய்வது யார் என்பதையும் புரிந்துக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். 

ஜெயின் இன மக்களின் சேவை வட சென்னை மக்களை நெகிழச் செய்தது.  இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் என யாரும் மதம் பார்க்கவில்லை என்ன சாதி என்று பார்க்கவில்லை ஓடி ஓடி அவர்கள் தேடியது எங்காவது உயிர் தவிக்கிறதா துடிக்கிறதா என்றுதான். இதுதான் மனித நேயம். இத்தனை நாளாக தொலைந்தே போய்விட்டது என நினைத்த மனித நேயத்தை வெளிக்கொணர்ந்த மழையை என்னால் வாழ்த்தத்தான் முடிகிறது, திட்ட தோன்றவில்லை.

வோட் போட்டு ஜெயிக்கவைத்த மக்களை காப்பாற்றவேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்ற எண்ணமே இல்லாமல் ஓடி ஓடி ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிய அரசுக்கு முன் பாதிக்கப் பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடித் தேடி உதவிய இஸ்லாமியர்களின்  தன்னலமற்ற சேவை அசரவைக்கிறது. இதை இணையத்தில் உலவும் நாம் எழுதி வைக்காவிட்டால் முன்பு வரலாற்றை திரித்தவர்கள் இப்போதும் திரிக்கத்தொடங்கி விடுவார்கள் நூலை... பலரும் தானே உதவினார்கள் என்றாலும்  இஸ்லாமிய மக்களின் மீது பலரின் பொது பார்வையும் தவறாகவே இருப்பதால் அவர்களின் சேவையை கட்டாயம் நாம் எழுதவேண்டும். அதன்மூலமாக பார்வையின் கோணத்தை மக்கள் மாற்றிக் கொள்ளும் அதிசயம் நடக்கலாம்.

இதோ பாதிக்கப் பட்ட மக்களை அம்போ என்று விட்டுவிட்டு தேர்தல் கூட்டணி பற்றி பேச ரெடி ஆகிட்டாங்க... பல லட்சம்,கோடி கை மாறும்... மக்களை மேலும் மேலும் முட்டாள் ஆக்குவது எப்படி என்பதை கூட்டணி போட்டு தீர்மானிக்க தொடங்கிவிட்டார்கள். 

மழை வெள்ளத்தின் மிச்சமாக துரத்தும் வாழ்வாதார கவலைகளை சுமந்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்து  விழிகள் கலங்கி எனது நன்றியை காணிக்கை யாக்குகிறேன். அன்பு சகோதர சகோதரிகளே  உங்களின்  குடும்பம் இனி வரும் சந்ததிகளும் மிக சிறப்பாக வாழவேண்டும்  என ஏக இறையான இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

மதத்தை குறிப்பிட்டு இஸ்லாமிய மக்களை வசைபாடக்  கற்றுக் கொடுத்த சமூகம் இனி அவர்களின் மனிதநேய தொண்டை பார்த்து இவன்தாண்டா முஸ்லிம் ,முஸ்லிம் என்றால் இப்படிதான் இருப்பான் என்று பேசட்டும் பேசவேண்டும். 

இனி  எங்காவது குண்டு வெடித்தால் தீவிரவாதி என்று சொல்லுங்கள் முஸ்லிம் என்று சொல்லாதீர்கள் !! 

photo courtesy : google
(முஸ்லிம் மக்களின் படங்களை தேடாதீர்கள்...  தங்களின் அடையாளத்தை தொலைத்து எங்காவது யாருக்காவது உதவி புரிந்துக் கொண்டிருப்பார்கள்  தேடி களைத்துவிடாதீர்கள், என்னை போல!!
   

வெள்ளி, டிசம்பர் 11

சிம்புவின் சைக்கோத்தனம் - Ban Beep Song



எவ்வளவு ஆபாசமாகவும் படம் எடுக்கலாம், மிக வக்கிரமாக  பெண்களை வர்ணிக்கலாம், பெண்ணை இழிவுப் படுத்தி வசனங்களால் வன்புணர்வு செய்யலாம், நடிகைகளின் ஆடைகளை கிழித்து அலங்கோலப்படுத்தி பேஷன் இது என காட்டலாம், பாடல் வரிகளில் நேரடியாக பெண்ணை கேவலமாக வசை பாடி கவிதை என கொக்கரிக்கலாம் ...இது எல்லாமே சாத்தியம் இன்றைய சினிமாக்களில்!? யாரும் இங்கே கேள்வி கேட்க மாட்டார்கள், ஏன் அதில் நடிக்கும்  பெண்ணுக்கே அதை பற்றி எந்த கவலையும் இல்லை. பணம் புகழ் மட்டுமே முக்கியம் தன்மானம் சுயகௌரவம் எல்லாம் வெறும்  வார்த்தைகளாகிவிட்டன! 

இப்படிதான் ஒரு சினிமா எடுக்கப்படவேண்டும் என்ற எந்த சட்ட திட்டமும் திரைத்துறைக்கு கிடையாது, எடுத்து முடித்த பிறகும் தணிக்கை துறை சர்டிபிகேட் கொடுத்து தனது கடமையை முடித்துக்கொள்ளும். வக்கிரம் வன்முறை ஆபாசத்தில் ஊறிய சினிமாக்களால் சீரழியும் இளைய சமுதாயத்தை பற்றி நினைக்கக் கூட இங்கே நமக்கும் நேரமில்லை. அதனால்தான் கொளுத்திவிட்டு கொழுப்பெடுத்துத் திரிகிறார்கள் சிம்பு, அனிருத் போன்ற ஆட்கள்.     

சிம்புவுக்கு ஏற்பட்ட காதல்கள் எல்லாம் தோல்வி ஆனதன் பலனை சம்பந்த பட்ட பெண் அனுபவிக்கிறதோ இல்லையோ நாம்  நன்றாகவே  அனுபவிக்கிறோம், இவனது காதல் தோல்விகளை(?) காரணமாக வைத்து தொடரும் அவனது படங்கள், பாடல்கள் அனைத்திலும் பெண்களை இழிவுப் படுத்தி வக்கிரமாக வசனம் பாடல் என எழுதி ஆபாச நடனம் அமைத்து என்று தனது மன வக்கிரத்தை ஒவ்வொன்றாக மேடை ஏற்றிக் கொண்டிருக்கும் சிம்புவின் சமீபத்திய அழிச்சாட்டியம் அனிருத் இசையில்  பாடி யூ டுயூப்பில் வெளிவந்திருக்கும்  'BEEP SONG'  

சிம்பு நல்ல திறமையான மனிதரின் மகன்...அப்பாவைப் போன்றே சிம்புவும்  திறமைசாலிதான்  ஆனால் மன  பக்குவமின்மையால் தடம் மாறி வாய்க்கு வந்ததை எல்லாம் பொது வெளியில் படையல் போடும் லெவலுக்கு போய்விட்டது மகா கேவலம்.  காதலித்ததாக சொன்ன நயன்தாரா  சோர்ந்துப் போகாமல் சிம்புவை சிறிதும் லட்சியம் செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வரிசையாக படங்களில் நடித்து முன்னேறி சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை,  ஆனால்  சிம்புவோ  இன்னும் ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கும் பரிதாபம்...?!!

காதலில் தோல்வி கண்டவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று செல்வது  நல்ல மனிதர்களின் குணம் ஆனால் தான்  ஒரு  மன நோயாளி என்பதற்கு தற்போதைய உதாரணம் இந்த பாடல்.  கேலி செய்யும் ஆண்களை பெண்கள்  'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல' என்று திட்டுவார்கள், ஆனால் கூட பிறந்த தங்கச்சி, பெத்த அம்மா  இருந்தும் பெண்ணை கேவலப் படுத்தும் இந்த பாடல் எந்த எண்ணத்தில் பாடப்பட்டிருக்கும்  என்று நினைத்துப் பார்க்கவே கூசுகிறது.    அவர்கள் இதை கேட்டு இருப்பார்களா கேட்டும் ஒன்றும் சொல்லவில்லையா ? உடன் நடிக்கும் நடிகையை தொட்டுக்கூட  நடிக்காத அப்பாவிற்கு (டி.ராஜேந்தர்) இப்படி ஒரு பிள்ளை ... அந்த அப்பாவும்  இந்த பாடலை கேட்டும்  பெருசா ரியாக்சன் காட்டாம  தொலையுது சனியன் என்று இருந்துவிட்டார் போல

எவண்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்று பாடியபோது ரசித்த அதே கூட்டம் தான் இந்த பாடலையும் ரசிக்கிறது...ரசிக்கப் போகிறது. ஆகச் சிறந்த பாடலான கொலவெறி பாடலை போல இதையும்  ஹிட் ஆக்காமல் ரசிகர்களும் ஓயப் போவதில்லை.  பெண்ணைத் திட்டி வசனம் பாடல் வைத்தால் அதை எல்லோரும் விரும்புவார்கள் குறிப்பாக இளைஞர்கள் என்ற எண்ணம் இருக்கவேதான் இது போன்றவை பிரபலமாகின்றன.  ஆனால் தாய் மனைவி அக்கா தங்கை என்று பெண்களுடன் இணைந்து நன்றாக வாழ்கிற எந்த ஒரு நல்ல ஆண்மகனும் இந்த பாடலை காரித்துப்புவானே தவிர ரசிக்க மாட்டான். 

எனக்கு என்ன கவலை என்றால் நாளையே இந்த பாடல் சூப்பர் சிங்கரிலும், சன் சிங்கரில் சின்ன சின்ன குழந்தைகளினால் பாடப்படுமே , பாடுவதற்கு முன் பலமுறை மனப் பாடம் செய்வார்களே,  நினைச்சுப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.

சினிமாக்களில் வசனம் என்றால் கூட சில நொடிகளில் கேட்டதும் மறந்துவிடலாம், ஆனால் பாடலாக வரும்போது பலமுறை ஒலிக்கும், கேட்டு கேட்டு மக்களுக்கும் பழகிவிடும், நாளை வீட்டில் சாதாரணமாக பேசப்படும் ஒரு வார்த்தையாக இந்த வார்த்தை மாறிவிடும்!!???

இன்னொரு கொடுமை என்னவென்றால் மழை வெள்ளப் பாதிப்பை பற்றிய செய்திகளை  பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை இந்த பாட்டு பிடித்துக் கொண்டதுதான். 

இந்த பாட்டுக்கு எதிர்வினை காட்டினால் அதுவே இதற்கு ஒரு விளம்பரம் ஆகிவிடும் என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டது எனது கோபம். உடல் முறுக்கி நெளியும் சிறு புழுவென எனது எதிர்ப்பை இங்கே காட்டிவிட்டேன். எதிர்ப்புகள் பல ஒன்று சேர்ந்தால் அந்த பாடல் நீக்கப்படவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.  மது வேண்டாம் என்ற பாட்டிற்கு சிறை இந்த பாட்டிற்கு குறைந்தபட்சமாக தடை... ???!!!

#BAN BEEP SONG#


போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...