வியாழன், ஜனவரி 29

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 4


இதற்கு முந்தையப்  பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - 1 
வீட்டுத்தோட்டம் - 2 
வீட்டுத்தோட்டம் - 3

வீட்டுத் தோட்டம் என்பது சுவையான, சத்துள்ள, இரசாயனத்தன்மை அற்ற காய்கறிகளை உற்பத்திச்  செய்வது மட்டுமல்ல...பழையப்  பொருட்களை மறு சுழற்சிச்  செய்வதும் தான். பழைய பிவிசி பைப் , பிளாஸ்டி டப்பாக்கள் , பெயின்ட் வாளி, ஓட்டை உடைசல் பாத்திரங்கள், அட்டைப் பெட்டிகள்  மட்டுமல்ல வீணாக குப்பைக்கு போகும் சமையலறைக்  கழிவுகள், காய்கறிக் கழிவுகள், காய்ந்த இலைத் தழைகள், முட்டை ஓடு, தேயிலை, காபித்  தூள் கழிவுகள் போன்றவற்றை மறுஉபயோகம் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மிக பெரிய  நன்மையை செய்தவர்களாகிறோம். (இனி யாரும் உங்களைப் பார்த்து நீ பொறந்த இந்த மண்ணுக்கு பெருசா என்ன  செஞ்சனுக்  கேக்கவே முடியாது) :-)

ஊரில் எங்களின்  சொந்த வீட்டைச்  சுற்றி நிறைய இடம் அதுவும் வளமான செம்மண் இருப்பதால் தொட்டிகளில் காய்கறித்தோட்டம் போட வாய்ப்பில்லை.  ஆனால் தொட்டியில் வளர்த்துப் பார்க்க  ஒரு சந்தர்ப்பம் தற்போது அமையவே பயன்படுத்திக் கொண்டேன். இது எனக்கு முற்றிலும் ஒரு இனிய அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. அவற்றை இங்கே பகிருகிறேன். நிச்சயமாக  எனது இந்த அனுபவங்கள் உங்களுக்குப்  பயன்படும். 
  
பால்கனித் தோட்டம்

ஒரு சொந்த வேலையாக உடுமலைபேட்டையில்  ஏழு  மாதம் தங்கவேண்டிய சூழல். மாடியில் வீடு, முன்னாடி சிறிய பால்கனி, நல்ல காற்றோட்டமான இடம் மனதை வசீகரிக்கத்  தோட்ட வேலையை ஆரம்பித்துவிட்டேன். தினமும் ஒரு மணி நேரம் இங்கே செலவுச்  செய்கிறேன். நான்கு மாதம் ஆகிறது... தற்போது இங்கே இருப்பவை பாகற்காய், சுரைக்காய், தட்டைபயிறு, சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடி வகைகள், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற செடி வகைகள், மணத்தக்காளி, மஞ்சள் கரிசிலாங்கண்ணி, பச்சை, சிகப்பு பசலை கீரைகள், பாலக் கீரை,  புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணி, புதினா  போன்ற கீரை வகைகள், பிரண்டை, லெமன் கிராஸ், வெற்றிலை , துளசி, சோற்றுக் கற்றாழை, கற்பூரவல்லி (ஓமவல்லி) போன்ற மூலிகைகள் இவை தவிர  அன்னாசி , 2 ரோஜா செடிகள், changing ரோஸ் ஒன்று, செவ்வந்தி, இரண்டு வகை செம்பருத்தி, நான்கு வகை குரோட்டன்ஸ், மற்றும் ஒரு அவகோடா, ஒரு செண்பக மரக்கன்று, செவ்வாழை கன்று, இரண்டு பாக்கு மரக்கன்றும் (ஊர் போனதும் மண் தரையில் எடுத்து வைக்கவேண்டும்) இருக்கின்றன.  

இயற்கை முறையில் மாடித்தோட்டம் ,
அட்டைப் பெட்டியில் பாகற்காய் கொடி  

அனைத்தும் பிளாஸ்டிக் தொட்டிகள், அட்டைப் பெட்டிகள்,  மினரல் வாட்டர் கேன்கள், அரிசி சாக்குகள் , பிளாஸ்டிக் கவர்கள் தவிர கையில் கிடைக்கும் எந்த பொருளும் தொட்டியாக மாறிவிடும். இளநீர் குடிச்சதும் அவற்றையும்    தொட்டியாக மாற்றியாச்சு.

முக்கியமாக இவை எதற்கும் மண் போடவில்லை. உடுமலைபேட்டை,பொள்ளாச்சியை சுற்றி  தேங்காய் நார் கழிவு (coco peat) கம்பெனிகள் இருப்பதால் அவர்களிடம் coco peat blocks வாங்கி
அதனுடன் ஊரில் இருந்து கொண்டு வந்த மக்கிய ஆட்டுச் சாணம் கலந்திருக்கிறேன். இவை இரண்டும் தவிர கிச்சன் கழிவுகள் அனைத்தையும் உரமாக மாற்றிப் போட்டுவிடுவேன்.  அரிசி கழுவிய தண்ணீர், மீன், சிக்கன், மட்டன் கழுவிய தண்ணீர் , முட்டை ஓடுகள் என அனைத்தும் பால்கனிக்கு வந்துவிடும். தேங்காய் நார் கழிவு, நீரை பிடித்துவைத்து கொள்வதால் மூன்று  நாள் தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் செடிகள் வாடுவதில்லை. coco peat இன் எடை லேசாக இருப்பதால்  தொட்டிகளின் கனம் தாங்காமல் வாடகை வீட்டு மாடி பால்கனி  டமால்னு கீழே விழுந்துவிடும் என்ற பயம் இல்லவே இல்லை :-)

மனதோடு மட்டும் - மாடித்தோட்டம்
மிதிப் பாகற்காய் என்ற ஒரு வகை , சுவை மிகுந்தது 

பூக்கள் பூக்கத் தொடங்கியதும் வண்ணத்துப்பூச்சிகள் வந்து குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டன. தேன்சிட்டு ஒன்று ரெகுலர் விசிட்டர்,  வீட்டினுள்ளே பரவும் பூக்களின் மணம்  அவ்ளோ ரம்யம் !! தக்காளி, பாகற்காய், அவரைக்காய் காய்த்து தற்போது சமையலறைக்கும் வந்துவிட்டன. புதினாவை இருமுறை துவையலுக்கும் மூன்று முறை பிரியாணிக்கு சேர்க்கவும் பறித்தாகிவிட்டது. பறிக்கப்  பறிக்க வேக வேகமாக வளருவதே ஒரு அழகுதான்.

செடிகளில் எறும்பு தெரிந்தால் மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் தூவுவேன். பூச்சிகள் இருந்தால் பூண்டு,பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து சாறு  எடுத்து தண்ணீர் கலந்துத்  தெளிப்பேன்.  வேப்ப இலைகளை அரைத்து கலந்த தண்ணீரையும் தெளிக்கலாம். இன்னும் பல முறைகள் இருக்கின்றன...அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாகச்  சொல்கிறேன்.

மாடியில் தோட்டம் போடுவதால் பூச்சிகளின் தொல்லை சுமார் 70 சதவீதம் குறையும் என்கிறார்கள்.

எளிய பந்தல்  முறை


கொடி படர ஆரம்பித்தப்போது ...

பாகற்காய் பந்தல் போட பால்கனியில் வசதி இல்லை. ஸ்லாபில் மழை நீர் வடிய அரை அடி நீள பிவிசி பைப் இரு பக்கமும் இருந்தது.  இரண்டுக்குமாய் கட்டுக்கம்பியை இழுத்துக்  கட்டினேன். (4 அடி நீளத்திற்கு கட்டு கம்பியை 14 துண்டு  வெட்டி வைத்துக் கொண்டேன்)  ஓரத்தில் இருந்து ஒவ்வொரு கம்பியாக  கட்டி தொங்க விட்டேன். கீழ் நுனியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கட்டினேன்,   கம்பி வளையாமல் ஸ்ட்ரைடாக இருப்பதற்காக. (பாட்டில்களில் cocopeat + compost  நிரப்பி புதினா,தக்காளி , பசலை கீரைகளை நட்டு வைத்திருக்கிறேன்) இப்படி வரிசையாக ஏழு  கம்பிகளையும் கட்டி பாட்டில்களைத்  தொங்க விட்ட பின் குறுக்காக  மிச்ச ஏழு கம்பிகளையும் சிறிது இடைவெளி விட்டு கட்டினேன்.  குறுக்கும் நெடுக்கும் இணைக்க கம்பியை சிறிது வளைத்து ஒரு சுற்று சுற்றினால் போதும். அவ்வளவுதான்.  பந்தல் ரெடி.  இருக்கும் இடத்திற்கு ஏற்ப நமது கற்பனையை சிறிது கலந்தால் போதும், எத்தகைய சிறு இடத்திலும் தோட்டம் போட்டுவிடலாம்.

காய்கறிக் கழிவு உரம்

கடைகளில் இதற்கென மண் கலன்கள் கிடைக்கின்றன. கிடைக்காதவர்கள் வீட்டில் இருப்பதை வைத்தே தயாரிக்கலாம். மண் தொட்டி, மண்பானையையும் பயன்படுத்தலாம். நான் பழைய இருபது லிட்டர் மினரல் வாட் கேன் ஒன்றின் அடி பகுதியில் சிறு துளை இட்டு அதனடியில் ஒரு பிளாஸ்டிக் பிளேட்  என தயார் செய்தேன்.. மேல் பகுதி வழியாக கழிவுகளை போட்டுக் கொண்டு வர  கழிவு நீர் பிளேட்டில் சேகரமாகும். வாரம் ஒரு முறை அதை எடுத்து தண்ணீர் கலந்துச்  செடிகளுக்கு ஊற்றலாம். கழிவு நீர் வீரியம் ஜாஸ்தி என்பதால் அப்படியே ஊற்றக் கூடாது, செடி கருகிவிடும்.  maggot எனப்படும் புழுக்கள் கழிவுகளில் உருவாகும், இவைதான் கழிவுகளை மக்க வைப்பவை. கழிவுகள் போடப்பட்டதும் கேனின் வாய் பகுதியை மூடி விட  வேண்டும். ஒரு நீளமான குச்சியால் கிளறிவிடலாம்.  கேன் நிறைந்ததும் அடுத்த கேனில் போட்டுவரவேண்டும்.  அறுபது நாளில் அதிகபட்சம் மூன்று மாதத்தில் உரம் தயாராகிவிடும். கருமைநிறமாக மாறி இருக்கும் உரத்தை கேனின் வாய்பகுதி வழியாக எடுக்கலாம்.

( காய்கறிக் கழிவுகளை உரமாக மாற்றும்  Kamba என்னும் compost bin ஒன்றை கோயம்புத்தூரில் வாங்கினேன். அதைப்  பற்றிய விவரம்  அடுத்த பதிவில்...)

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவச்  செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.


தோட்டம் போடுவது பொழுதுபோக்கு, சந்தோசம்  தவிர தேவையான காய்கறிகள்,பழங்கள்  கைக்கெட்டும் தூரத்தில் ப்ரெஷாக கிடைக்கும் என்றளவில் இருந்த என் எண்ணம் பசுமைவிடியல் அமைப்பு ஆரம்பித்ததும் இயற்கையின் மீதான ஈடுபாடு தீவிரமடைந்து தற்போது இயற்கை விவசாயம் செய்ய  நிலம் வாங்குவதில் முடிந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல்  பலரையும் வீட்டுத்தோட்டத்தின் பால் அவசியம் இழுத்தே ஆகவேண்டும் என்ற விருப்பத்தில் எனக்கு தெரிந்த குறிப்புகள் தகவல்களை பலர் கேட்க, சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  

பசுமைவிடியல் பேஸ்புக் தளத்திலும் பகிர்ந்து வருகிறேன்.  வீட்டுத்தோட்டம் பற்றிய இந்த தொடரைத்  தொடர்ந்து எழுத உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இயலாது...படித்துவிட்டு தோன்றும் சந்தேகங்கள் , உங்களுக்கு தெரிந்த தகவல்களை மெயில், கமென்ட் மூலமாக தெரிவியுங்கள். பலரையும் இதில் ஈடுபட வைப்போம். வெறும் நாலே  மாதத்தில் சிறிய இடத்தில்  பால்கனியில் இத்தனை வகையான செடிக் கொடிகளை வளர்ப்பது சாத்தியம் என்றால் உங்களாலும் முடியும் தானே  ... இதுவரை வீட்டுத்தோட்டம் போடவில்லை என்றால் இன்றேனும் ஆரம்பியுங்கள்...

வீட்டுத் தோட்டம்


ஆரோக்கியமான குடும்பமாக எல்லோரின் குடும்பமும் இருக்கவேண்டும் என்ற நமது விருப்பம் சிறிதாவது நிறைவேறும் என்ற  நம்பிக்கையில் ...

ப்ரியங்களுடன்
கௌசல்யா
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


வெள்ளி, ஜனவரி 23

திருநெல்வேலியில் பேஸ்புக், வலைப்பதிவு நண்பர்கள் சங்கமத் திருவிழா

அன்பு நண்பர்களே! 

திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நடந்த பிறகு தற்போது பெரியளவில் நடக்க இருக்கும் ஒரு சந்திப்பு ‘தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம்’
பேஸ்புக் நண்பர்கள் அதிக அளவில் கலந்துக் கொள்வதால் பெயரை முகநூல் நண்பர்கள் என்று வைத்துவிட்டோம்.  தவிர இப்போது நம்ம பதிவர்கள் எல்லோரும் பதிவுலகத்தை விட அதிக நேரம் பேஸ்புக்கில் தானே இருக்கிறோம். அந்த வகையில் பார்த்தாலும் இந்த பெயர் சரிதானே !! :-)




நாள் - 25/1 /2015 ஞாயிற்றுக் கிழமை அன்று (நாளை மறுநாள்)

இடம் -  பதிவர் சந்திப்பு நடந்த அதே ஜானகிராம்  ஹோட்டலில் பெரிய ஹாலில் நடக்க இருக்கிறது. ஹோட்டலுக்கு வெகு அருகில்தான் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் இருப்பதால் வெளியூர் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும். 

இந்த சங்கமத்தை நடத்துவதில் பெரும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்  எங்க மண்ணின் மைந்தன் எழுத்தாளர் திரு.நாறும்பூ நாதன் அவர்கள். என்னிடம் பேசும் ஒவ்வொரு முறையும் விழா குறித்த செய்திகள், தகவல்களை விரிவாக பகிர்ந்துக் கொள்வார். இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவமிக்கவர்.
(கத்துக்குட்டியா இருந்தாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதே நம்ம பொழப்பாப் போச்சு :-) ஆனா அவரு முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியை நடத்தப் போற மாதிரியே படப்படப்பாகப்  பேசுவார். என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்) 

கடந்த மூன்று மாதங்களாக நடத்தப் பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் நண்பர்கள் கலந்துக் கொண்டு அதன் அடிப்படையில் நிகழ்ச்சிநிரல் வடிவமைக்கப் பட்டுள்ளது. அனுபவமிக்கவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இளைஞர்களுக்கும் கொடுக்கப்படுவது ஆரோக்கியமான நட்பை பலப்படுத்தும் என்பதை சங்கம ஏற்பாடுகளை கவனித்து புரிந்துக்கொண்டேன்.  

வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் இரு புத்தகங்கள் வெளியீடும், இணைய உலகத்தின் எதிர்ப்பார்ப்புகள் சில பற்றியும் இங்கே பகிரப் பட இருக்கின்றன. பல்வேறு மத இன மொழியினரை இணையம் இணைத்து வைத்திருக்கிறது என்ற சிறப்புடன் மட்டுமே நாம் நின்றுவிடாமல் இந்த சந்தர்ப்பத்தை ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நடைபெறப்போகும் இந்த சங்கமம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

நிகழ்ச்சி நிரல் 

கரிசல்குயில் இசை நிகழ்ச்சியுடன் துவக்கம்.
உறுப்பினர் பதிவு
வரவேற்புரை: இரா.நாறும்பூநாதன்.
முகநூல் நண்பர்கள் சுய அறிமுகம் (தன்னோட பெயர்,ஊர்,பணி, இயங்கும் துறை இதை மட்டுமே சொல்ல வேண்டும்.)
இரண்டு நூல்கள் வெளியீடு.
1.திரு.விமலன் எழுதிய "பந்தக்கால்"
2.திரு.மொஹம்மத் மதார் எழுதிய "வல்லினம் நீ உச்சரித்தால்..."
சிறப்பு விருந்தினர்கள்
எழுத்தாளர்கள் திரு.வண்ணதாசன்,கலாப்ரியா,உதயசங்கர்,மாதவராஜ்,தேவேந்திரபூபதி,சௌந்திரமகாதேவன்,இரா.எட்வின் மற்றும் மனநல மருத்துவர் ராமானுஜம்,கதிர் ஆகியோர் வலைத்தள பதிவுகள் பற்றி எளிமையான துவக்கவுரை

நண்பர்கள் கலந்துரையாடல்.
நன்றியுரை: திரு.மணிகண்டன்.
பிற்பகல் 2 மணி : மதிய உணவு.
நிறைவு.

நிகழ்வை ஒழுங்குபடுத்துபவர்கள் :-  
திரு.சுப்ரா.வே.சுப்ரமணியன்
திருமதி.ருபீனா ராஜ்குமார்
திரு.அனில் புஷ்பதாஸ்

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்குபவர் :-  
குறும்பட இயக்குனர் நெல்லை முத்தமிழ்.

நூறு பேருக்கு குறைவில்லாமல் வருவதாக தெரிகிறது. சுத்துப்பட்டி மாவட்ட மக்களை தவிர்த்து தொலைவில் இருந்து யாரெல்லாம் வராங்கனு பார்த்தால் (இதுவரை பெயர்  கொடுத்துத்தவர்கள்) கத்தாரில் இருந்து திருவாளர்கள் ஜூமாலி ரசூல், சென்னையில் இருந்து ராஜதுரை தமயந்தி, திருச்சியில் இருந்து இரா.எட்வின், கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி சிவாஜி, மதுரையில் இருந்து விசுவேஸ்வரன், குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து தக்கலை ஹலிமா, நாகர்கோவில் பாபு,விருதுநகரில் இருந்து மணிமாறன், சிவகாசியில் இருந்து ரெங்கசாமி மற்றும்    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நம்ம ரத்னவேல் ஐயாவும் அம்மாவும் வராங்க.  அப்புறம் சில படைப்புகளும் அங்கே விற்பனைக்கு வைக்கப் பட இருப்பதாக இருக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க பொறுப்பு மட்டுமே. 


சந்திப்பு குறித்த நேரத்தில் துவங்க நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் . தொலைவில் இருந்து நண்பர்கள் வருவதால் அவர்கள் ஊர் திரும்ப வசதியாக மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சியை கண்டிப்பாக நிறைவு செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒழுங்கு செய்யப் பட்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தாலும் நாம நம் நண்பர்களுடன் எவ்ளோ பேசணுமோ போட்டோ எடுத்துகனுமோ எடுத்துக்க வேண்டியதுதான். எழுத்துக்களின் மூலமே பார்த்து பேசிப் பழகிய உள்ளங்கள் நேரில் என்றால் உற்சாகம் அளவிட முடியாதல்லவா...

சங்கமம் குறித்து பேஸ்புக் அப்டேட்ஸ் பார்த்தே பல நண்பர்கள் வருவதாக தெரிவித்தார்கள்...அதனால் தனிப்பட்ட அழைப்பு இல்லையே என்று எண்ணாமல் நம் குடும்ப விழாவாக எண்ணி வாருங்கள், வருகையை நாளை மதியத்திற்குள் உறுதி செய்துக் கொண்டால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 

தொடர்பிற்கு - திரு.நாறும்பூநாதன் - 9629487873 

பல பெரிய படைப்பாளிகள் வாழ்ந்த, வாழும் நமது தெக்கத்தி மண்ணில் இன்னும் வெளியே தெரியாத படைப்பாளிகள் இருக்கக்கூடும், அத்தகையவர்கள் பலருக்கு தெரியாமல் பதிவுலகில் இருக்கலாம் அல்லது பேஸ்புக்கில் சில வரிகள் எழுதுவதுடன் நின்றிருக்கலாம். இந்த சங்கமம் அத்தகையவர்களை இனம் கண்டு உற்சாகப் படுத்தக் கூடிய ஒரு இடம். எனவே இது போன்ற அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நண்பர்கள் யாரும் தவறவிட்டுடக் க்கூடாது.  கண்டுக் கொள்ளப் படாத எழுத்துக்கள் இங்கே தெரிந்தக் கொள்ளப்படலாம். யாருக்கு தெரியும் இந்த சங்கமம் முடிந்ததும் பல எழுத்தாளர்கள் அடையாளம் கண்டு வெளிஉலகம் இழுத்துக் கொண்டுப் போகலாம். ஆம் ஆச்சரியங்கள் அதிசயங்கள் தானாக ஏற்படும் என்றில்லையே...நாமாகக் கூட ஏற்படுத்தலாம் !! 

புதிய கதவுகள் திறக்கட்டும் !!

வாழ்த்துக்கள் !!!
   
நன்றி!


ப்ரியங்களுடன் 
கௌசல்யா 



செவ்வாய், ஜனவரி 20

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் 3

முந்தையப் பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - அனுபவம் 1 
வீட்டுத்தோட்டம் - அனுபவம் 2 

வீட்டுத்தோட்டம் ஏன் அவசியம் என்ற கேள்வி கேட்டவர்களுக்காக
இந்த எச்சரிக்கை ரிப்போர்ட் :-

'எண்டோசல்பான்' என்ற  பூச்சிக்கொல்லியை  2 ஆம் நிலை விஷப் பொருள் என்று உலக சுகாதார நிறுவனமும் முதல் நிலையில் 2 ஆம் பிரிவை சேர்ந்த விஷப் பொருள் என அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் அறிவித்திருக்கிறது. ஆனால் உலக அளவில் எண்டோசல்பான் தயாரிப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது...!! 

மேலும்

தடை செய்யப்பட்ட  இரசாயன பூச்சிக்கொல்லி  மருந்துகள் நமது உடலில் இருப்பதாக மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  Cypermethrinheptachlor, quinalphos, aldrin, chlorodane, dichlorvas, cypermethrin ஆகியவை அரசால் தடை செய்யப்பட்ட இரசாயன பூச்சிமருந்துகள் காலிப்ளவர் முட்டைகோஸ் கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் மீதும் பிற தானியங்களின் மீதும் தெளிக்கப்பட்டிருக்கின்றன என்றும்  கடைகளில் விற்கப் படும் காய்கறிகளில் அதிகளவு அதாவது ஆயிரம் மடங்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் இருப்பதாகவும்  கண்டறியப்பட்டுள்ளன .

Home Garden

* கத்திரிக்காயில் மட்டும் சாதாரண அளவை விட 860% தடை செய்யப்பட பூச்சிக்கொல்லி மருந்துகளின் தடயம் இருந்ததாம். இதற்கு அடுத்த இடத்தில் காலிபிளவரும் மூன்றாம் இடத்தில் முட்டை கோஸ் இருக்கிறதாம்.

இந்த இரசாயனப்  பூச்சி மருந்துகள் அனைத்துமே neurotoxins அதாவது நரம்பு மண்டலத்தை தாக்கிப்  பாதிப்புக்குள்ளாகும் நச்சுப் பொருள்கள். மேலும் இவை நாளமில்லா சுரப்பிகள் ஈரல் சிறுநீரகம் அனைத்தையும் பாதிப்பவை. உணவில் நச்சுத்தன்மை மற்றும் பல ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா ஆகியவற்றின் மூலக்காரணம் இந்த தடைச் செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளே !

கர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறான பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் மரபணு மாற்றங்கள் placenta மூலம் கருவையும் தாக்குகின்றன. ஆப்பிள் சாப்பிட்டால் நோய் வராது என்பதெல்லாம்  அந்தகாலம். ஆப்பிள் , ஆரஞ்சு பழங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்ட அளவினை விட 140% அதிகம் இருக்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல் மூன்று மடங்குக்கும் அதிக அளவு இரசாயனப்  பூச்சி மருந்துக்  கலவையில்  பழங்கள், காய்கறிகள் கீரைகளை  முக்கி எடுத்த பின்னர்தான் கடைகளுக்கு  விற்பனைக்கு அனுப்புகிறார்களாம். விரைவாக அழுகி விடக் கூடாது என்பதற்காக...!

பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் பளப்பளப்பாக பிளாஸ்டிக் கவர்களில் இருப்பவை சுத்தமானவை என்று நம்பிவிடாதீர்கள். அதில் எவ்வளவு இரசாயனம், மெழுகுப்பூச்சு இருக்குமோ ?  
(Reference :Times of India)

மேலும்

2025 ஆம் ஆண்டிற்குள் பிறக்கும்  இரண்டு குழந்தைகளில் ஒருவர் (பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர்) ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்ற  அதிர்ச்சித்  தகவலை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். பாதிப்பிற்குக்  காரணமாக கூறப்படுவது மான்சான்டோ !! இந்நிறுவனத்தின் அரும் பெரும் கண்டுப்பிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி ஒரு எமன்.



நேரம் இருப்பின் இந்த லிங்க் சென்று படித்துப் பாருங்கள்.

தாவரங்களைத்  தாக்கும் பூச்சிகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நன்மை செய்யும் பூச்சி, மற்றொன்று தீமைச்  செய்யும் பூச்சி. சைவ பூச்சி, அசைவ பூச்சி என்றும் சொல்வார்கள். நன்மை செய்யும் பூச்சி, அசைவ இனம் பிற பூச்சிகளை ஸ்வாஹா செய்யும், இதனால் தாவரத்திற்குப்  பாதிப்பு இல்லை. இவற்றில் நன்மை செய்யும் பூச்சி இலையின் மேலே இருக்கும், தீமை செய்யும் பூச்சி இலையின் அடியில் இருக்கும். நாம் என்ன செய்கிறோம் பூச்சி மருந்து அடித்து நன்மைச்  செய்யும் பூச்சிகளைக்  கொன்றுவிடுகிறோம்,  (இது சின்ன உதாரணம்தான், தொடர்ந்து பூச்சிகளின் நன்மை, தீமை பற்றி பகிர்கிறேன்)

இவ்வளவும் தெரிந்துக்கொண்ட பிறகாவது  நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எப்படி? நம் வீட்டிற்குப்  பாதிப்பில்லை என்று இனிமேலும் மெத்தனமாக இருக்கக் கூடாது. நமது குழந்தைகள்/சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது?? பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டிருந்தால் போதாது. நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். தொடர்ந்து வாசிங்க, அந்த ஏதாவது என்ன என்று இப்போது உங்களுக்கு  புரியும்.

ஒன்றே செய் அதை இன்றே செய் 

ஒரே வழி இயற்கைக்கு மாறுவது தான் ! இயற்கைக்கு மாறுவது என்றால் இயற்கையை  நோக்கி நாம் சென்றாக வேண்டும், செயற்கையை தவிர்க்கவேண்டும் என்பதே. அபரீத விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மறுபக்கம் வேதனையானது என்பதை   ஒத்துக் கொண்டு இயற்கையிடம் சரண் அடைந்தே ஆகவேண்டும்.  சேர்ந்தாற்போல் ஒரு வாரம் எந்தவித உடல் உபாதையும் இன்றி நம்மால் இருக்க இயலவில்லை என்பதை மறுக்க முடியாது. மாத வருமானத்தில் ஒரு கணிசமான அளவு பணம் மருத்துவத்திற்காக செலவாகிறது.  இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா ? டாக்டரை பார்க்கிறோம், ஊசி போடுகிறார், சரி ஆனதும் அத்தோடு விட்டுவிடுகிறோம்...ஆனால் ஒவ்வொரு முறை காய்ச்சல், அலர்ஜி, வலி ஏற்படும் போதும் உள்ளுறுப்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என நாம் எண்ணுவதே இல்லை. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற குறளின் பொருளை மறந்தேவிட்டோம்.

எவ்வாறு இயற்கையை நோக்கிச் செல்வது

இது பெரிய வித்தை எல்லாம் இல்லை, நமது சுற்றுப்புறத்தை பசுமைச்  சூழ இருக்குமாறுப்  பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் போடப்பட்டவைகளை அறவேத்  தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விளைந்த தானியங்கள்,காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான ஒரே தீர்வுதான்  வீட்டுத்தோட்டம். நெருக்கடி மிகுந்த அப்பார்ட்மென்டிலும் தோட்டம் போட வழிமுறைகள் இருக்கின்றன.  பலர் இணைந்தும் செய்யலாம்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.

how old are you என்ற ஒரு மலையாளப் படத்தை பலரும் பார்த்திருக்கலாம், ரசித்திருக்கலாம். அட இப்படியுமா என ஆச்சர்யப்பட்டிருக்கலாம். அந்த படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து எடுப்பதையும் கேள்விப்  பட்டிருக்கலாம். நிச்சயமாக அதில் சொல்லப்பட்ட விஷயம் பலரின்  மனதை பாதித்திருக்கும்,  மலையாளப் படம்  பார்க்காதவர்கள் தமிழில் வெளி வந்த பிறகாவது கட்டாயம் பாருங்கள்.

நடிகை மஞ்சுவாரியரின் முக்கியமான மேடைப் பேச்சு உங்களின் பார்வைக்காக...




வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தோட்டம் போடத் தொடங்குங்கள்...சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் எனது மெயில் ஐடியில் அல்லது கமெண்டில் தெரிவியுங்கள். பதில் சொல்லக்  காத்திருக்கிறேன்.



ப்ரியங்களுடன்
கௌசல்யா.
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


தகவல் உதவி :Angelin 
படம்:கூகிள் 

செவ்வாய், ஜனவரி 13

பாதைத் தவறும் "டீன் ஏஜ்" குழந்தைகள் ??!! பகுதி - 2

"18 வயதிற்கு குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 40 சதவீதமாக இருக்கிறது. இவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலச் சமுதாயத்தின் நிலை மிக மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான அத்தனை பிரச்சனைகளிலும் உடனடித் தீர்வு காணப்படவேண்டியது அவசியம். கட்டுப் படுத்த முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் கிடைக்கும் நன்மைகளுக்கு சரிசமமாய் தீமைகளும் இருக்கின்றன" என்றெல்லாம் கவலை தெரிவித்திருப்பவர் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி. சஞ்சய் கிஷன் அவர்கள்.

அவரது கவலை அர்த்தமுள்ளது, இந்த கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கவேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின்  நீரோட்டத்தில் உங்கள் பிள்ளைகள் மிதக்கப் போகிறார்களா?  மூழ்கப் போகிறார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். 



நாம்  அனுபவிக்காததை நம் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டும் என்ற பெருந்தன்மை தான் அனைத்து பிரச்சனைகளின்  ஆணிவேர். நீங்கள் அனுபவிக்காத சந்தோசத்தை அனுபவிக்கட்டும் என எண்ணுவது சரி அது எத்தகைய சந்தோசம் என்பதில் கவனம் மிக மிக அவசியம்.

டீன் ஏஜ் பிள்ளைக்கு  அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அக்கவுன்ட் இருப்பதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அதில் அவர்கள் எவ்விதமாக நடைபோடுகிறார்கள் என்ற கட்டாய கவனிப்பு தேவை.   நம் பிள்ளைதானே தவறென்ன செய்யப்போகிறான்/ள்  என்ற மெத்தனம் இனியும் வேண்டாம். இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கியமானவை செல்போன், இணையம், சினிமா இவை மூன்றும். தவறுகள் ஏற்படவும் அவை தொடரவும் அதிகமாக துணை புரிகின்றன. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தேவையானதும் கூட ...ஆனால் அதை நாம் கையாளுவதை பொறுத்தே நன்மை தீமைகளின் சதவீதம் அமைகிறது. 

வளர்ந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் இன்னும் குழந்தைகள் தான், பிறந்த குழந்தையை வளர்க்கும் போது கவனம் வைத்ததை விட அதிகளவு கவனத்தை டீன்ஏஜிலும் வைத்தே ஆகவேண்டும் என்பது  காலத்தின் கட்டாயம்.

தவறுகளின் ஆரம்பம் 

மாணவன் ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே பலரும் சுட்டிக் காட்டுவது ஆசிரியர்களை நோக்கியே... தங்களின் ஒரு குழந்தையை சரியாக வளர்க்க முடியாத பெற்றோர் நாற்பது குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரை குறைச்  சொல்வது எவ்விதம் சரி. வெகு சுலபமாக ஆசிரியர்களை கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பள்ளியில் தானே அதிக நேரம் இருக்கிறார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த இடத்தில், எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை விட முக்கியம் பெற்றோர்களின் வளர்ப்பு எத்தகையது என்பதே.  தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கத்  தவறினால் அதுவே பல பெரிய தவறுகளின் ஆரம்பமாகிறது. தவறும் குழந்தைகளைக்  கண்டிக்கும் ஆசிரியர்களை ஆள் வைத்து அடிக்கும் அளவிற்கு இன்றைய பெற்றோர் மாறிப் போனது வருத்தத்திற்குரியது. 

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று பெருமிதம் கொள்வோர் அதிகம், அதனால் பிள்ளைகளின் வாழ்க்கை திசை மாறுவதையும் அவர்கள் கவனிப்பதில்லை. அவ்வாறு அவர்களை திசை மாற்றுவதில் முக்கியமானவை செல்போன் பைக் இணையம் சினிமா.   


பள்ளிக் குழந்தைகளின் கைகளில் விதவிதமான செல்போன்கள்...வாங்கி தருபவர்கள் பெற்றோர்! அதன் மூலம் பேஸ்புக் வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொண்டு பெற்றோர்களிடம் இருந்து தனித்தே இருக்கிறார்கள். பெற்றோர்களும் இதை பெரிதுப்படுத்துவதில்லை.. 'ஒருவருக்கு ஒரு காதல்' என்று இல்லாமல் பல சிம் பல காதல் என்றாகிப்போனது.

கிராமத்திற்கு சென்றால் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம் ஏதோ ஒரு மரத்தடி அல்லது கோவிலில் அரசு கொடுத்த விலையில்லா மடிகணினியை சுற்றி அமர்ந்து பள்ளிமாணவர்கள் விரும்பத்தகாத காட்சிகளை கண்டுக்களிக்கிறார்கள். நகரத்தில் தனி அறையில் மகன் /மகள் படிக்கிறான் என்ற எண்ணத்தில்  வெளியே பெற்றோர், உள்ளே நடப்பதோ வேறு. வரைமுறையற்ற இணையவெளியில் உலவும் இவர்களுக்கு எது சரி எது தவறு என்ற விழிப்புணர்வை கொடுக்கவேண்டிய பெற்றோர் கண்டும்காணாமல் இருப்பது பல விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது.  
   

மொபைல் போன் அதிகம் உபயோகிப்பதால் தூக்கமின்மை, அமைதியின்மை ஏற்பட்டு மறதியில் முடியலாம்.  தவிர கம்ப்யூட்டர் உட்பட அனைத்து நவீன சாதனங்களையும் தூங்கச்  செல்லும் வரை உபயோகித்தால்  இதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் சிதற இதுவும் ஒரு காரணம். .

என் குழந்தை எந்த தவறும் செய்யமாட்டான்/ள் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை வைத்துக் கொள்ளாதீர்கள். இன்றையநாளில் இத்தகைய நம்பிக்கை ஆபத்தானது. எங்கள்  வீட்டிற்கு எதிரில் இருக்கும் நகரின்  பெரிய பள்ளியின் 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு இருபது பேர் காம்பவுண்ட் சுவரின் அருகே  மரத்தடியில் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் வந்து கூடி விடுவார்கள், ஏழரை மணிவரை மொபைல் போனில் பாட்டு கேட்பது, வீடியோ, பேஸ்புக் என்று அரட்டை அடிப்பார்கள். இது தினமும் நடக்கும் காட்சி. இக்கூட்டத்தில் ஒரு மாணவன் (மூன்று மாணவிகளுடன் காதல் ?!)தனியாக சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போனில் பேசிக்கொண்டிருப்பான். அதே பள்ளியில் படிக்கும் என் மகனிடம் 'இந்த பசங்க மாதிரி கட் அடிக்காம  கேர்ள்ஸ்தான்  ஒழுங்கா ட்யூஷனுக்கு போய் படிக்கிறாங்க'  என்றேன் அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், 'இவங்க டியூசன் கட் அடிச்சிட்டு பேசுறாங்க, அவங்க டியூசன்ல போய் பேசுறாங்க அவ்ளோதான் வித்தியாசம் !?'

பள்ளி  மாணவர்களுக்கு எதுக்கு செல்போன்? ஏதாவது அவசரம் உதவி என்றால் செல்போன் அவசியம் என்கிறார்கள், செல்போன் வருவதற்கு முன் நாமெல்லாம் தினம்  செத்துச்  செத்தா பிழைத்தோம்?! மேலும் பல பள்ளிகளில் செல்போன், பைக் இரண்டுக்கும் அனுமதி இல்லை ஆனால் இரண்டும் அவர்களிடம் இருக்கிறது...ஒன்று அமைதியாக(சைலென்ட் மோட்) பையில், மற்றொன்று அடுத்தத்  தெரு மரத்தடியில்...! இரண்டையும் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்கள். ஒருமணி நேரத்திற்கும் மேலாக போனில் இவர்களால் பேசமுடிகிறது என்றால் தவறு எங்கே இருக்கிறது.  நம்ம குழந்தைகள் சரியாக டியூசன்,ஸ்கூல் அட்டென்ட் பண்ணுகிறார்களா என்று அந்த இருபது பேரில் ஒருவனின் பெற்றோர் கூடவா  கவனிக்க மாட்டார்கள். பெற்றோர்களின் இத்தகைய மெத்தன அலட்சியப் போக்கு வருத்தத்திற்குரியது. 

ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் சொல்லிக்கொடுப்பதை மாணவர்கள்  அக்கறையுடன் கவனித்துப் படித்தாலே போதும் , தனியாக எதற்கு  டியூசன்? அதுவும் அதிகாலை ஐந்தரை மணிக்கு ஸ்கூலில் டியூசன் க்கு செல்லும் மாணவ மாணவிகள் 9-4 ரெகுலர் கிளாஸ் அட்டென்ட் செய்துவிட்டு அதன் பின் மாலை நேர  டியூஷன் முடித்து  வீடு வர இரவு எட்டு, ஒன்பது  மணிக்கு மேல் ஆகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றிச்  சிறிதும் அக்கறை இன்றி ஸ்கூல் டியூஷன் செல்லாதவர்களை பிரைவேட் டியூஷனில் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். சேர்த்துவிட்டால் மட்டும் போதும், குழந்தைகள் படித்து விடுவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை, சுத்த முட்டாள்தனம்.

சினிமா 

வன்முறை, வக்கிரம், ஆபாசம், விரசம், இரட்டை அர்த்த வசனங்கள் இவைதான்  இன்றைய சினிமா. குழந்தைகளைக்  கட்டி போட்டு வைத்திருக்கும் சினிமா அவர்களின்  மனதில் காதல் என்ற விச(ய)த்தை விதைக்கிறது.  பள்ளி  மாணவர்கள் காதலிப்பதைப்  போல படமெடுபவர்களின் வீட்டுப்  பிள்ளைகள் காதல் திருமணம் செய்தால் மட்டும் பெற்றோருக்கு துரோகம் ,  அவமானம் என்று கண்ணீர் விடுகிறார்கள். ஏதேதோ காரணம் சொல்லிப்  பிரித்தும் விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப்  பார்த்து திசை மாறும் குழந்தைகளைப்  பற்றி யாருக்கும் இங்கே அக்கறையில்லை.  அநேக படங்கள் டீன்ஏஜ் காதலை நியாயப்படுத்துவதை போன்றே எடுக்கப் படுகின்றன. ...இதெல்லாம் சினிமாவில் மட்டும்  தான் சாத்தியம் என்பதை டீன் ஏஜ் குழந்தைகளுக்கு  யார் புரிய வைப்பது.? 

மாணவர்களின் பெரும்பாலான பொழுதுகள் இன்று சினிமாவைச்  சுற்றி மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது...சினிமா ஒரு பொழுது போக்கு என்ற கட்டத்தைத்  தாண்டி சினிமா தான் வாழ்க்கை என்று என்று வந்ததோ அன்றே நம் மாணவர்கள் தொலைந்துவிட்டார்கள்...தங்களின் வாழ்க்கையைத்  தொலைத்துவிட்டார்கள். இன்றைய மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நடிகனின் ரசிகர்கள், அவ்வாறு காட்டிக்கொண்டால்தான்  மாணவர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கிறதாம்??!

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...