புதன், செப்டம்பர் 10

ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது - விகடன் கட்டுரையின் அபத்தம்!?




ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது -  விகடன் கட்டுரையின் அபத்தம்!?

பெண்களுக்கு தைரியத்தைக் கொடுப்பது ஜீன்ஸ் ஆ புடவையா என்று பட்டிமன்றம் வைத்தால் தோற்பது புடவையாக இருக்குமோ என்று புடவைகளின் சார்பாகப்  புலம்ப ஆரம்பித்ததின் விளைவே எனது இக்கட்டுரை! மூன்று வருடங்களுக்கு முன் ‘ஆபத்தான கலாச்சாரம்’ என்று நான் எழுதியப்  பதிவுக்கு ஒரு தோழி எதிர்பதிவு(கள்) எழுதி இருந்தார், அதில் ஜீன்ஸ் உடையை ஆஹா ஓஹோன்னுப்  புகழ்ந்துத்  தள்ளினார். வெளிநாட்டில் வசிக்கும் அவர் அப்படி எழுதியதில் எனக்கு பெரிதாக வியப்பேதுமில்லை... அதற்குப்பின் ஜீன்ஸைப்  பற்றி அதிசயப்படும்படியான ஒரு எழுத்தை இப்போதுதான் படிக்கிறேன். ஆனந்த விகடனில் ‘பேசாத பேச்செல்லாம்’ தொடரின் போன வார(3-9-14) கட்டுரையை தெரியாமப்படிச்சுத் தொலைச்சுட்டேன், அதுல இருந்து மண்டைக்குள்ள ஒரு வண்டு பிராண்டிக்கிட்டே இருக்கு. சரி நம்ம கருத்து என்னாங்கிறதையும் பதிய வச்சுடுவோம்னு இதோ எழுதியே முடிச்சுட்டேன். அந்த மகா அற்புதக் கட்டுரையை படிக்காதவங்களுக்காக அதுல சிலவரிகள அங்க இங்கக்  குறிப்பிட்டு இருக்கிறேன். (நன்றி விகடன்)

அந்த கட்டுரையாசிரியர் தனது ஆறு வயது மகளுக்கு , தனக்குப்  பிடித்த உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை/சுதந்திரத்தைக்  கொடுத்திருக்கிறார் என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். பாராட்டவேண்டிய ஒரே விஷயம் இதுமட்டும்தான். அதுக்குபிறகு அந்த கட்டுரை சென்றவிதம் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது......   அந்த பெண் குழந்தை விளையாடுறப்ப தன்னோட டிரஸ் மேல ஒரு துண்டை தாவணியா  போட்டுக்கிட்டுச்  சமைக்கிற மாதிரி, குழந்தை(பொம்மை) வளர்க்குற மாதிரியும் விளையாண்டுச்சாம், அதே குழந்தை குட்டி டிரௌசர் போட ஆரம்பிச்சப்ப ரொம்ப வீரமா தைரியமா கைல கேமரா புடிச்சிட்டு காடு  மலை எல்லாம் சுத்துவேன்னு சொல்லிச்சாம். இதுல இருந்து கட்டுரையாசிரியர்  புரிஞ்சிகிட்டது என்னனா “சர்வ நிச்சயமா நம் உடைக்கும் , நம் எண்ணத்துக்கும் தொடர்பு இருக்கு” அப்டின்றதானாம்...புடவைக்  கட்டுனா சமையல்கட்டோட நம்ம எண்ணம் நின்னு போயிடுமாம். புடவைல இருந்து அப்டியே சுடி, சல்வார்னு ஒவ்வொன்னா மாறி ஜீன்ஸ் போட்டப்போ மனசு அப்டியே ச்ச்ச்சும்மா ஜிவ்வுனு அதோ அந்த பறவையப்  போல பற, இதோ இந்த மானைப்  போல ஓடு, எமனே எதிர்ல வந்தாலும் எட்டி உத ன்ற மாதிரி வீரமும் தைரியமும் நமக்குள்ள போட்டிப் போட்டு வந்துடுமாம். 

‘புடவைய கட்டிண்ட்டு இனியும் வீட்டுக்குள்ள கோழையைப்  போல அடங்கி கிடக்காதிங்க பெண்களே... ஜீன்ஸ் போட்டுக்கிட்டு சுதந்திர வானில் ஒரு பறவையாய் பறந்துத்திரியுங்கள்’ என்று பெண்களுக்கு அறைகூவல் விடுக்கும் இவரை கண்டிப்பாக  பெண்ணிய இயக்கங்கள் எல்லாம் ஒன்னுக் கூடி ஒரு பாராட்டுவிழா நடத்தியே ஆகணும். புடவையைப்  பத்தி ஒரு பெரிய லெக்ட்சர் வேறக்  கொடுத்திருந்தாங்க, அப்டியே அசந்தேப்  போயிட்டேன்.

புடவை என்னும் மகாஇம்சை

புடவைக்  கட்டுனா நிமிசத்துக்கு ஒரு முறை இழுத்து இழுத்து விட்டுகிட்டு, வயிறு,இடிப்பு தெரியுதான்னு அட்ஜெஸ்ட் பண்ணுவதால வேலைல கவனம் சிதறிப் போயிடுமாம். குனிய முடியாது, வேகமா நடக்க முடியாது, வண்டி ஓட்ட முடியாது பஸ்ல ஏற முடியாது... இப்படி ஏகப்பட்ட முடியாதுகள் !!! அதைவிட முக்கியமா  வேலைக்கு போறப்  பெண்கள் ரெஸ்ட் ரூம் போறதும், நாப்கின் மாத்துறதும் மகா கொடுமையா இருக்குமாம். புடவை ஈரமாயிட்டாக்  காயுற வரை அங்கேயே நிக்கணுமாம் என்று எழுதியது எல்லாம் ரொம்பவே ஓவர்! . சொல்லப்போனால் இது போன்ற சமயத்தில் புடவை ஒருவிதத்தில் வசதியும் சுகாதாரமானதும் என்பது பெண்களுக்கு புரியும், பெண்ணியவாதிகளுக்குப் புரியாது. (அதுவும் தவிர புடவை கசங்கிடும் என்றும் காரணம் சொல்லமுடியாது, ஏன்னா அந்த நாட்களில் மொட மொடன்னு கஞ்சிப்  போட்ட காட்டன் புடவையோ, பட்டு புடவையோ நாம கட்ட மாட்டோம்)

கடைசியா நம்மூர் காலநிலைக்கு புடவை கொஞ்சமும் செட் ஆகாதுன்னு ஒரே போடா போட்டாங்க...(ஜீன்ஸ் அப்படியே ச்ச்சும்மா சில்லுனு இருக்குமாமாம்)

* பெண்கள் பிறர் முன் கம்பீரமா தெரியனுமா, ஜீன்ஸ் அணியுங்கள்!

* தேங்காய் வேணுமா, ஜீன்ஸ் போடுங்க, அதாவது தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிக்கச் சொன்னாலும் பறிக்கத் தோணும்.

* ஓடலாம் ஆடலாம் மலை ஏறலாம் பைக் ஓட்டலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (சமையல் மட்டும் செய்யக்கூடாது, தெய்வக்குத்தம் ஆகிடும் ஆமா)

* வெட்கம் பயம் கண்டிப்பாக  இருக்கவே இருக்காது. துணிச்சல் பொங்கும். எவனாவது கிண்டல் பண்ணினாலும் என்னடா நினைச்சுட்டு இருக்கேனு சட்டையைப்  புடிச்சு கேட்க முடியும். ஆனா தாவணி, சேலை கட்டினா பயத்துல நடுங்கியேச்  செத்துடுவாள். (இந்த இடத்துல சமீபத்திய பாலியல் கொடுமைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை)L

* யாரையும் லவ் பண்ணலாம், அதுமட்டுமில்லாம லவ் பண்றதப்  பத்தி வீட்ல சொல்ற அளவுக்கு தைரியத்தையும் ஜீன்ஸ் கொடுக்கும். (ஜீன்ஸ் போடும் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்து வச்சவங்க)

ம்ம்...என்னத்த சொல்ல !! இப்படியெல்லாம் ஜீன்ஸ்ஸோட பெருமைகளைப்  பாயிண்ட் பாயிண்டா புட்டுப் புட்டு வச்சது சாட்சாத் அந்த கட்டுரையாசிரியரே தான். (அடைப்பு குறிக்குள் இருப்பது மட்டும் அடியேன்)

இவ்வளவையும் சொல்லிட்டு பாலியல் வன்முறை உடையால் ஏற்படுவது இல்லை என்று சில கருத்துக்களையம்  சொல்லி இருந்தாங்க. எனது கருத்தும் இதே தான் என்றாலும், ஜீன்ஸ் குறித்தான அவர்களின் எண்ணத்திற்கு சாதகமாகவே இக்கருத்தையும் சொன்னதாக எனக்கு தோன்றியது.

ஆகச் சிறந்த கட்டுரையின் இறுதி வரியில் 'சோர்வைத் தொடருவதும், புத்துணர்ச்சியுடன் ஓடத்தொடங்குவதும் நம் தேர்வில் இருக்கிறது தோழிகளே' என்று அந்த கட்டுரையை முடித்திருப்பதன் மூலம் ஜீன்ஸ் மட்டுமே தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். (ஒருவேளை ஜீன்ஸ் கடை ஏதும் புதுசா திறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை)J

பெண்ணியம் மட்டுமே பேசும் பெண்களே...

பூ, பொட்டு, புடவை, வளையல், கம்மல் இதெல்லாம் போட்டுக் கொள்வது பெண்ணடிமைத்தனம் என்றுச் சொல்லி இதை எல்லாம் தவிர்த்து ஜீன்ஸ் போட்டு இதுதான் பெண்ணியம் அப்படினு என்ன கர்மத்தையும் சொல்லிக்கோங்க...ஆனால்  நமது பாரம்பரியத்தை நமது அடையாளத்தை கேலிச்  செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

ஜீன்ஸ் என்பது மேல்நாட்டினர் உடை, அவர்கள் நாட்டின் குளிர்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொன்றாக அவர்களை பின்பற்றி வருவது ஒன்று மட்டும் தான் நாகரீகம் என்று இருப்பவர்கள் இருந்துவிட்டு போங்கள், ஜனநாயக நாடு இது, ஆனால் நமது பாரம்பரிய உடையை அவமானப்படுத்துவது என்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ??!!

பெண்கள் என்றால் அவங்க ஓடணும் , பாடணும் , ஆடணும் என்று புதிதாக  ஒரு பிம்பத்தை பெண்ணுக்கு ஏற்படுத்தும் இது போன்ற முயற்சிகள் தேவையற்றது. ஒரு கட்டுரை நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை அபத்தங்களைப்  பேசாமலாவது இருக்கலாம்.

நீங்கள் புதுமையானவர்கள் என்பதற்காக நம் பழமையைக்  குறைச் சொல்லாதீர்கள்...பலரும் பெரிதும் மதிக்கும் மேற்குலகமே இன்று நம்மை பார்த்து மாறிக் கொண்டிருக்கிறார்கள்...ஏன் நாமே இன்று இயற்கை விவசாயம், கம்பு சோளம், திணை, குதிரவாலி, சாமை என்று மாறிக் கொண்டிருக்கிறோமே...!

எந்த உடையாக இருந்தாலும் அதை அணிபவரின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தே அன்றைய அவரது செயல்பாடு இருக்கலாம். அதற்காக  உடை அணிந்ததும் வீரம் வரும் என்பது எல்லாம் மகா அபத்தம். ஒருவரின் கல்வி, அறிவு, திறமை இவை தராத தைரியத்தையா உடை கொடுத்துவிடும். அவயங்களை மிகவும் இறுக்கிப் பிடிக்காத நாகரீகமான எந்த உடையும் பெண்ணுக்கு கம்பீரத்தைக்  கொடுக்கும். அனைத்தையும் விட அவரவர் உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து அணிவது மிக முக்கியம். ஜீன்ஸ், சுடி, சல்வார், புடவை எதாக இருந்தாலும் அணியும் விதத்தைப்  பொருத்தே பெண்ணுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கும். நாம் பார்க்கும் வேலைக்கு ஏற்ப உடையை தேர்ந்தெடுத்து அணியலாம், உடலுக்கு சிறிதும் பொருந்தாத உடைகளை அணிந்தால் அதுவே கேலிக்கூத்தாகிவிடும், அது புடவையாக இருந்தாலுமே!

நவநாகரீக உடைகள் மட்டும்தான் பெண்ணுக்கு தைரியத்தைக்  கொடுக்கும் என்று குருட்டாம்போக்கில் எழுதப் படும் இது போன்ற கட்டுரைகள் உண்மையில் ஆபத்தானவை.

பெண்களின் சாதனை உடையால் மட்டுமே நிர்ணயிக்கப் படுவதில்லை  

புடவை கட்டத்தெரியாது (தெரியும்ன்றது வேற விஷயம்) என்று சொல்வதே 90களில் பெருமையாகத்  தெரிந்தது, ஆனால் நகரங்களில் இப்போது புடவையே தேவையில்லை என்று தூக்கி எறிவதைபோன்ற எழுத்துக்கள், பேச்சுகள் அதிகரித்து வருவதைப் போல இருக்கிறது. பொருளாதாரத் தேவைக்கென்று யாரையும் சார்ந்து நிற்காமல் சுயத்தொழில் மூலமாக உழைத்து தன் குடும்பத்தை உயர்த்தி உன்னத நிலைக்கு கொண்டுவந்த பல பெண்கள் இன்று நம் கண்முன்னே பெண்மையைப்  பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் இன்று எந்த பெண்ணும் வருமானம் இல்லாமல் இருப்பதில்லை, விவசாயம் , பீடி , செங்கல் தயாரிப்பு போன்ற தொழில்கள் முதல் மகளிர் குழுக்கள் மூலம் லோன் பெற்று சுயத்தொழில் ஆரம்பித்து   அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் நவநாகரீக உடை அணிந்தவர்கள் அல்ல.

அதுவும் தவிர கட்டுரையில் குறிப்பிட்ட மாதிரி, புடவை கட்ட நேரமாகும் என்பது எல்லாம் ஒரு காரணமே இல்லை, இன்றைய பெண்கள் மேக்கப் என்ற பெயரில் முகத்திற்கு மட்டும் செலவு செய்யும் நேரம் குறைந்தபட்சம் ஒருமணிநேரம் (நீயா நானா ல இளம்பெண்கள்  சொன்ன ஸ்டேட்மென்ட்). முகத்துக்கு அவ்ளோ நேரம் செலவு பண்ற பெண்கள் புடவை கட்ட ஒரு பத்து நிமிஷம் செலவு செய்வதில் தப்பில்லை. 

புடவைக்கு ஆதரவாக என்பதற்காக இப்பதிவினை நான் எழுதவில்லை, புடவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்பது போன்றுக்  குறிப்பிட்டு இருக்கும் இந்த கட்டுரையை குறித்த எனது கோபத்தை, ஆதங்கத்தை இங்கே வரிகளாக்கி இருக்கிறேன். அவ்வளவே! 

இறுதியாக 

ஜீன்ஸ் அணிவதால் உடல் ரீதியிலான பல பிரிச்னைகள் ஏற்படக்கூடும் என்பது  மருத்துவர்களின் கடுமையான  எச்சரிக்கை .  மக்கள் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை போன்று 'டாக்டர் விகடன்' வெளியிடும் விகடன் குழுமம் இது போன்றப்  படு அபத்தமான கட்டுரையை எப்படி பிரசுரித்தது என்று புரியவில்லை. இளைஞர்கள் பலர் விரும்பிப்  படிக்கும் பிரபலமான பத்திரிக்கையான விகடனின் இந்நிலை வருத்ததிற்குரியது.  

ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்துத்  தெரிந்துக் கொள்ள இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் குவிந்துக்  கிடக்கின்றன.  படித்துப் பாருங்கள் . 

கட்டுரையாசிரியர் ப்ரியா தம்பி அவர்களே! 

உங்களுக்கு சரியென்றுப் படுவதை ஒட்டுமொத்த பெண்களின் கருத்தாக எழுதுவது எப்படி சரியாகும். ஜீன்ஸ் தைரியம் தரும் என்று எழுதி இளம் சமுதாயத்தைக்  குழப்பாதீர்கள். பெண்களின் ஆடை இன்னைக்கு கடும் விமர்சனத்துக்கும் விவாதத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதை மனதில் வைத்து அதீத அக்கறையுடன் எழுத வேண்டிய சூழலில் இருக்கிறோம்...உங்களை பலரும் வாசிக்கிறார்கள் என்று ஒரு சார்பாக மட்டும் தயவு செய்து இனியும் எழுதி விடாதீர்கள். மிக அருமையான ஆளுமை நீங்கள், வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்களைப்  பற்றி பேச நிறைய இருக்கிறது, எதுவும் பேசப்படாமல் போய்விடக் கூடாது ...தொடர்ந்து பேசுங்கள்...நாங்கள் பேசாத பேச்சையெல்லாம் ...! நன்றி தோழி.



பிரியங்களுடன்
கௌசல்யா 

திங்கள், செப்டம்பர் 1

நினைவே ஒரு சங்கீதம் - MJ

என் நினைவே ...

கடந்த ஜூன் 25 நினைவு தினத்தன்று எழுத வேண்டிய பதிவு, உன்னை பற்றிய நினைவுகளை எழுதவும் நேரம் இன்றி வேலைகளுக்குள் மூழ்கி போன என்னை, ‘என் பிறந்த தினத்தன்றாவது  வந்து எழுதுறியா’ என்று மிரட்டி கைப்பிடித்து இழுத்து வந்து எழுத வைத்ததும் அதே நினைவுகள் தான். பிறந்த தினமான ஆகஸ்ட் 29 அன்று எழுதி இதோ இன்று போஸ்ட் செய்தாலும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது...வருடத்தில் ஏதோ ஒரு நாளில் உன்னைப்  பற்றி ஏதாவது கிறுக்கிக் கொண்டுத்தான் இருக்கப் போகிறேன்... உன்னை கொண்டாட அல்ல இந்த நினைவு நாள், பிறந்தநாள் எல்லாம்...அவற்றை எல்லாம் வழக்கம் போல மற்றொரு நாளாகவே கடந்து விடுகிறேன். ஆனால் என்னுள் நீ உயிர்ப்புடன் இருக்கிறாய் என்பதை இந்த ஒரு நாளில் பதிய வைத்து என் உயிர்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவேனும் எழுதுகிறேன் ... முன்பு உனது  சங்கீதம் பல நினைவுகளை கிளறிவிட்டுச் செல்லும், இப்போது உனது நினைவே ஒரு சங்கீதம் என்றாகிவிட்டது!! 


கரடு முரடான வாழ்க்கை பாதையில்  பஞ்சுப் பொதிகளை இறைத்து போட்டிருக்கிறதே உனது இசை... இதில் கடந்த ஐந்து வருடமாக இன்னும் அதிகமாக உன்னை நெருங்கிவிட்டேன் என தோன்றுகிறது... ஆன்மாவால் இறுகத் தழுவிக் கொண்டிருக்கிறாய்.  என்னை மட்டுமல்ல என்னைப்போல பல்லாயிரம் பேர் தினமும் ஏதோ ஒரு விதத்தில்  உன்னுடன் பயணித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். உனது பெயர் தாங்கிய இந்த  பேஸ்புக் தளத்தில்  யாராலோ போடப்படும் உன்னை பற்றிய தகவலுக்கும் விழுந்தோடி வந்து லைக் கொடுப்பதும் கமென்ட் பண்ணுவது என்று உன்னுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களாக வருகிறார்கள் , ரசிக்கிறார்கள், பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள் சென்று விடுகிறார்கள், அங்கே மறுமொழி கொடுக்க உன் போல் யாரும் இல்லை என்று எங்களுக்குத்  தெரியும், மறுமொழிக்காக வருபவர்கள் அல்லவே நாங்கள்.  உணர்வாய் , காற்றாய், இசையாய் எங்களை சுற்றி வியாபித்து இருக்கும் உன்னை, உன் இருப்பை தவிர்த்து வாழ்வது உன் ரசிகர்களுக்கு எங்கணம் இயலும் !

உன்னை பற்றிய பல வித வதந்திகள் போலவே உன் இறப்பும் ஒரு வதந்தியாக இருந்துவிடாதா  என்று இன்றும் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்... உண்மைதானே உன்னை உனக்காகவே ரசித்தவர்கள் ஆயிற்றே ... இசை, பாடல், குரல் எல்லாம் தாண்டியும் உன்னை நேசிக்கிறார்களே...அவர்களுக்காக நீ செய்ததை போல வேறு யாரும் செய்திருப்பார்களா என்ன...எதிர்பார்ப்பிலேயே வாழும் மனித கூட்டத்திற்கு இந்த நேசம் புரியாது...எங்கோ இருந்து எங்கள்  மனதை ஆளும் உன் ஆன்மா அப்படிப்பட்டவர்களை தவிர்க்கவும்  கற்றுத்தந்திருக்கிறதே. போதும் இவ்வாழ்க்கை என சோர்ந்து விழுந்தப்  போதெல்லாம் பிடித்துத் தூக்கிவிட்டாய்,  நடுவில் போக எண்ணாதே நிறைவாய் வாழ்ந்துவிடு என காதில் ஓதிக் கொண்டே இருக்கிறாய்... வாழ்க்கையை வாழ சொல்லித்தருகிறாய்.......

என் உலகம் அழகானது... உனக்குத் தெரியும், அது உன்னால் தான் என்று !! எனது சிறுவயது முதல் அதை எவ்வாறெல்லாம்  வடிவமைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதையும் அறிவாய் தானே... மரம், செடி கொடி, பூக்கள் பறவை , விலங்கு மழை மலை  என  இயற்கையின் அற்புதங்கள் அனைத்தையும் வெறிப் பிடித்து  நேசிக்கிறேன் , உன்னைப் போலவே ! 

உன் மீதான நேசம் புரிதலுக்கு உட்படாதது, என் எழுத்துக்கள் அதிக உணர்ச்சிவசபட்டதை போல தெரியும், தெரியட்டுமே ... கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முன்னால்  திடீரென்று கடவுள் வந்து நின்றால்   செய்வதறியாது ஒன்றும் பேசாமல்  மெய்சிலிர்த்து கண்ணீர் வழிய காலடியில் பூமி நழுவ விழிமூடி இருகரம் கூப்பி சாஸ்டாங்கமாக அத் தேவனின் பாதத்தில் விழுந்துவிடுவான். பரவச உணர்வுக்குள் ஆட்படும் அச்சமயத்தில் அறிவுக்கு அங்கே வேலை இல்லை...'நான்' என்பதை மறந்து சகலமும் அவனே என்று அவனிடம் சரணாகதி அடைவதே தானே பேரின்பம். இதை பக்தி என்பதும் அசட்டுத்தனம் என்பதும் அவரவர் புரிதல். 

உன் ரசிகர்களாகிய நாங்களும் இப்படியே தான்... எதிர்பார்ப்பு இல்லா உள்ளங்கள் இவை, அதீத அன்பால் சூழப்பட்ட உலகம் இது...அதீத அன்பு தவறென்று வாதிடும் மேதாவிகளை விட்டு என்றும் ஒதுங்கியே இருக்கிறோம்.  நாள்தோறும் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம் உன்னை... உனது இருப்பும் இறப்பும் எங்களை ஒரே நிலையிலேயே வைத்திருக்கின்றது...ஆமாம் நீ தங்கப்பேழையில் உறங்குவதாக எண்ணிக் கொள்வதிலும்  ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும் உண்மையில் அது கனவு அல்ல பகல் பொழுதின் கற்பனை என்பதுதான் சரி. கண்டம் விட்டு கண்டம் கடல் தாண்டி நடுவில் இருக்கும் அத்தனை நாட்டையும் ஊரையும் தாண்டி உலகின் இந்த ஒரு  மூலையில் இருக்கும் என் வீட்டிற்கு நீ வருவதாகவும் என் முன்னால் பாடுவதைப்  போன்றதுமான என் கனவிற்குத்தான் எவ்வளவு பேராசை !! கனவு வந்த நாள் அன்று கரைபுரண்டோடிய மகிழ்ச்சியை எவ்வாறு நான் வார்த்தைப்படுத்துவது, தெரியவில்லை. இந்த கனவு என் கல்லூரி காலத்தையும்  உற்சாகப்படுத்தி இருக்கிறது... சாத்தியமில்லாததையும் சாதித்துப் பார்ப்பதற்குப்  பெயர் தானே கனவு.  எட்டிய வானும் எட்டிப் பிடிக்கும் தூரம் தானே மனதுக்கு !  

உன்னை பற்றிய என் உணர்வுகளை எழுத்துகளில் கொண்டு வர முயலும் போதெல்லாம் பெருகும் கண்ணீருடன் தோற்றுப் போகிறேன் வார்த்தைகளிடம்... அவ்வாறு கண்ணீர் வடித்து வடித்து என் நிகழ்காலச் சுமைகளை இறக்கியும் விடுகிறேன்...அதற்காகவேனும் உன் குரலை கேட்டாக வேண்டுமாய் இருக்கிறது...

இப்போதெல்லாம் மனிதர்களை விட்டு நான் விலகியே இருக்கிறேன், அவர்கள் விரும்பிய படி என்னால் நடக்க(நடிக்க) இயலவில்லை என்பதால்... நேசக்  கேடயம் பிடித்து நிர்பந்த வாள் வீசுகிறார்கள்,தோற்று விழும் என்னிடம் பாசப்போர்வை போர்த்தி மீண்டுமாய் மற்றொரு போருக்கு தயார்படுத்துகிறார்கள்... அன்பிற்கு விலை பேசும் வியாபாரிகளிடம் மாட்டிகொண்டு விழிபிதுங்கும் வேளையில் எங்கிருந்தோ ஓடி வந்து இளைப்பாற்றும் உன் குரல் .   எனது  தனிமையை உனது  இசை போர்வையால் போர்த்தி சுக நித்திரை கொள்வது மட்டுமே மிகப் பிடித்ததாகி விட்டது. போதும்  இது போதும்  இன்றும் என்றும் எந்நாளும்...



எனக்கு தேவையான அன்பு காதல் நேசம் நட்பு அத்தனையையும் ஏதோ ஒரு பாடலில் இட்டு நிரப்பி நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் எனும் கூண்டுக்குள்  அகப்பட்டு அடைந்து கிடப்பதை போன்ற ஒரு இன்பம் வேறு இருக்கிறதா என தெரியவில்லை...        அப்படி ஒன்று இருந்தாலும் அதை அல்பமாக எண்ணவும் பக்குவப்பட்டுவிட்டேன் நான்...இல்லை இல்லை பக்குவபடுத்தி விட்டாய் நீ என்பது தான் சரி.   காற்று வீசும் திசைக்கு ஏற்ப தலை ஆட்டும் சிறு மரம் போல உன் நினைவுகள் சொல்லும் இடம் தேடியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உன் நினைவுகளை கிளறிக் கிளறியே என்னை உயிர்பித்துக் கொள்கிறேன். என் தனிமைகளில் என்னை கூட்டத்தோடும் , கூட்டத்துக்கு நடுவில் தனிமையாகவும் உணர செய்வது பிடித்தவனின்  நினைவுகளன்றி வேறேது. வேடிக்கையும் வினோதமானதும்  தானே உன் நினைவுகள்.

நீ வீசிய அன்பு தூண்டிலில் நானாகவே வந்து மாட்டிக் கொண்டப் பின் மீண்டும் மீண்டு  போவதெங்கே... சுவாசத்தில் வித்தியாசம் கண்டாலும் என்னாச்சு என்று தலைக் கோதி விசாரிக்கும் வரிகளின் நேசத்தில், ஏதாவது எனக்கு ஆனாலும் நன்றாக இருக்குமே என ஏங்க வைக்கிறாயே... திமிர் பிடித்த மனதை ஆண்டு அடிமையாக்கும் கலையை எங்கே கற்றது உன் குரல்... சிறு வயது நாட்களுக்குள் என்னை தள்ளி உற்சாகத்தில் மூழ்கடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது  உனது ஒவ்வொரு பாடலும்...சந்தோசமும் சோகமும் ஒன்றாய் தாக்கும்  உன் பாடலுக்குள் நான் புதைந்த தருணங்களில் எல்லாம்... 

வருடத்திற்கு ஒரு முறை உன்னுடன் இப்படி எழுதி  எழுதிப் பேசிக்கொண்டிருப்பதை நீ மௌனமாய் கேட்டுக் கொண்டிருப்பாய் என்று உணரும் போது பெருகும் உற்சாகம் ஒன்று போதும் வருடம் முழுவதற்குமாய்...!   


பிரியங்களுடன்
கௌசல்யா 

* * * * * * * * * * * * * * * * *



ஆஸ்கர் மேடையை அலங்கரித்த மைக்கேல் 





இந்த வீடியோவில் 11 வயது கண்களின் துடிப்புதுள்ளல் , முக பாவனை , உடலின் அதிர்வு குரலின் வீச்சு அத்தனையும் காண்பவர்களையும் பீடித்துவிடுகிறதுஒரு வித போதைக்குள் தள்ளிவிடும் பரவச நிலை,  தியானத்தில் இருப்பதை போலவே இருக்கும் இது போன்ற சில பாடல்களில் என்னை இழக்கும் போது !

* * * * * * * * * * * * * * * * *

தொடர்புடைய முந்தைய பதிவுகள் 






போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...