"18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை வழங்குதில் தவறில்லை, அதற்கு உரிய மனநிலை அவர்களிடம் இருக்கும், ஆனால் திருமண பந்தத்தில் அடிஎடுத்து வைக்க ஒரு பெண்ணுக்கு அந்த வயதில் உடல், மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணின் திருமணவயது 18 என்று எந்த அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ளது என்பது தெரியவில்லை. எனவே பெண்ணின் திருமண வயதை 21 என்று உயர்த்த வேண்டும், அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்" என்று சொல்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
18-21 வயதுவரையான பெண்ணுக்கு உடல் மன வளர்ச்சி இருக்காது என்கிறார்கள், ஆனால் அதற்கும் குறைந்த வயது குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் கொடுமைக்கு என்ன தீர்வு எழுதப் போகிறது காலம்....? இளவயது கருத்தரிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எங்கே ஆரம்பிக்கிறது சிக்கல்? ஆண் பெண் இரு குழந்தைகளுமே வன்கொடுமையை அனுபவிக்கிறார்கள்.. நம் குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாகாமல் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நம் குழந்தைகளின் மூலமாக இப்படி ஒரு கொடுமை நிகழாமல் இருப்பதும் ?! இதைப் படிக்க அதிர்ச்சியாக இருந்தாலும் இன்றைய நிஜம் இது.
என் மகன்/மகள் அப்படி நடக்க மாட்டார்கள் என்ற எந்த உத்திரவாதமும் உங்களால் கொடுக்க முடியாது. இன்றைய தொழில்நுட்பம் தான் உங்களையும் அவர்களையும் பிரித்து வைத்திருக்கிறதே, அதன் மூலம் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தனி உலகத்தை பற்றியும் உங்களுக்கு அக்கறையில்லை. உங்களுக்கு உங்கள் கவலை , பணத்தின் மீதான கவலை. நல்லதை சொல்லிக் கொடுக்க பெற்றோரும் இல்லை வழிக்காட்ட சமூகமும் இல்லை...தவறுகிறார்கள் தவறிழைக்கிறார்கள்...எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் !!
காதல் திருமணங்கள்
டீன்ஏஜ் பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சியை காதல் என்ற பெயரிட்டு பழகும் இவர்கள் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு என்றதும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அந்த பெண்ணுக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகி இருந்தால் காவல்துறையினரே முன் நின்று திருமணமும் முடித்து வைத்துவிடுகிறார்கள். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படியாகும் என்பதை பற்றி எல்லாம் சட்டத்திற்கு அக்கறை இல்லை. சட்டத்திற்கு தேவை வயது, பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21.
அதே சமயம் 21 வயது பெண்ணுக்கே உடல், மன வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற இன்றைய வாதத்தையும் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் உடல் வளர்ச்சி என்பது எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லை, அவ்வாறேதான் உளவியல் ரீதியிலான வளர்ச்சியும்...!
திருமண வயது 18, 21 என்பதல்ல முக்கியம் அவர்கள் தகுந்த மனப்பக்குவம் அடைந்திருக்கிறார்களா என்பதே முக்கியம். 40 வயதாகியும் திருமணத்திற்கேற்ற உடல், மனநிலை பக்குவப்படாதவர்கள் உண்டு. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் குழந்தைகள் முந்தைய தலைமுறையினரை விட சிந்தனையிலும் செயலிலும் அதிவேகமாக இருக்கிறார்கள், படிப்பாகட்டும் வேறு துறையாகட்டும் துணிந்து இறங்குகிறார்கள், சாதிக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் செய்யக் கூடிய வேலையை ஐந்து நிமிடத்தில் செய்துவிடும் இவர்கள் காதல், திருமணம் என்றதும் தடுமாறிவிடுகிறார்கள்.
உலகத்தில் 1.6 கோடி டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பமடைவதாக சர்வதேச புள்ளி விவரத்தை குறிப்பிட்டு ஐநா ஒரு அறிக்கையை வெளியிட்டது. தகுந்த உடல் வளர்ச்சி இன்றி ஏற்படும் கருத்தரிப்பின் காரணமாக அதிக மரணங்கள் ஏற்படுகின்றன என்று கூறுகிறது. இத்தகைய மரணங்கள் நமது இந்திய நாட்டில் அதிகம் என்ற புள்ளிவிவரத் தகவல் மகிழ்ச்சிக் கொடுக்கக் கூடியதல்ல. பெங்களுரூவில் அபார்ஷன் செய்ய வரும் பெண்களில் முக்கால்வாசிப் பேர் 10, +1 படிக்கும் மாணவிகளாம்!?
இளவயது கருத்தரிப்பினால் ஏற்படக்கூடிய மரணங்களுக்கு நம் நாட்டில் நிலவும் ஏழ்மை, கல்வியறிவு இன்மை, பாலியல் பற்றிய விழிப்புணர்வு இன்மை, ஆரோக்கிய உணவு பற்றாக்குறை இப்படி பல காரணங்களை பட்டியலிட்டாலும் காரணங்களை அறிந்ததுடன் நில்லாமல் தீர்வுகளை விரைந்து காண வேண்டிய சூழலில் இன்று நாம் இருக்கிறோம். பள்ளியின் கழிவறையில் சிறுமி குழந்தை பெற்றாள் என்ற செய்திகள் மகிழ்வை தரக்கூடியவை அல்லவே !?
பாலியல் கல்வி அவசியம் என்பதை உணரவேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் அதிகளவில் வந்துக் கொண்டிருக்கும் இந்நாளில் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் பற்றிய விழிப்புணர்வையாவது கொடுத்தாக வேண்டும்.
டீன் ஏஜ் கருத்தரிப்புக்கு காதல், கல்யாணம் மட்டுமல்ல காரணம், வன் புணர்வு, வன்கொடுமையினால் ஏற்படுவதும் அதிகம். இதற்கு என்ன செய்ய போகிறோம்? சமூகத்தை நோக்கி மட்டும் கையை நீட்டிவிட்டு அமைதியாக இருக்க போகிறோமா? இந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வோரு ஆண் பெண்ணுக்கும் சம பொறுப்புகள் இருக்கின்றன, காரணங்களை பட்டியல் இட்டுவிட்டு இத்துடன் என் பொறுப்பு தீர்ந்தது என்பதல்ல. தீர்வுகளை கண்டு அதை சமூகத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும். தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவேண்டும், பெற்றோர்களின் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு அவை பயிற்றுவிக்கப் படவேண்டும்.
மேலும்
சமச்சீரான சத்துள்ள உணவை நமது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத சூழல் இன்று. நொறுக்குத்தீனிகள், இரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள், பாஸ்ட் புட் உணவு வகைகள் குழந்தைகளுக்கு அபரீதமான வளர்ச்சியைக் கொடுக்கிறது, பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பூப்படைய இது ஒரு காரணம். இப்பருவ வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்படும் இவர்களுக்கு நண்பர்கள் கடவுளாகிறார்கள் ...பெற்றோர்கள் எதிரியாகிறார்கள் ...வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்...கோவிலோ போலிஸ் ஸ்டேசனோ ரெஜிஸ்டர் ஆபிசோ கல்யாணம் முடிந்துவிடுகிறது. இன்றைய எதார்த்த வாழ்வை எதிர்க்கொள்ள தேவையான பணம் படிப்பு வேலை எதுவும் இல்லாமல் அந்த திருமண வாழ்வு தற்கொலையில் முடிந்து விடுகிறது அல்லது கொலையில் முடித்து வைக்கிறார்கள் சாதிப் பிடித்தவர்கள்.
பொறுப்பற்ற பெற்றோர்கள்
டீன்ஏஜ் பருவக் காதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப் பொறுத்தவரை அவற்றின் ஆரம்பமும், தீர்வும் எங்கே இருக்கிறது என்று சிறிது யோசித்தோம் என்றால் புரிந்துவிடும் நம் வீடுகளில்,பெற்றோர்களிடத்தில் தான் என்று. ஒரு வீடு நன்றாக இருந்தால் தான் அந்த சமுதாயமும் அதை தொடர்ந்து நாடும் நன்றாக இருக்கமுடியும். வீட்டிற்குள் ஆயிரம் சிக்கல்களை வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே நின்று 'சமுதாயம் கெட்டுவிட்டது இதில் உலவும் என் மகன்/மகள் தடமாறிவிடுவார்கள்' என்று கூச்சலிடுவது முட்டாள்தனம்.
டீன்ஏஜ் பருவக் காதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப் பொறுத்தவரை அவற்றின் ஆரம்பமும், தீர்வும் எங்கே இருக்கிறது என்று சிறிது யோசித்தோம் என்றால் புரிந்துவிடும் நம் வீடுகளில்,பெற்றோர்களிடத்தில் தான் என்று. ஒரு வீடு நன்றாக இருந்தால் தான் அந்த சமுதாயமும் அதை தொடர்ந்து நாடும் நன்றாக இருக்கமுடியும். வீட்டிற்குள் ஆயிரம் சிக்கல்களை வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே நின்று 'சமுதாயம் கெட்டுவிட்டது இதில் உலவும் என் மகன்/மகள் தடமாறிவிடுவார்கள்' என்று கூச்சலிடுவது முட்டாள்தனம்.
பருவ வயது வந்த எல்லோருமே இனக்கவர்ச்சியால் பாதிக்கப்படுவதில்லை. பெற்றோரின் கவனிப்பு அற்ற டீன்ஏஜ் குழந்தைகள் ஏதோ ஒன்றை வீட்டிற்கு வெளியே தேடும் போது சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக இருந்தால் எதிர்பாலினம் மேல் ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. பெற்றோரின் கருத்து வேறுபாடுகளினால் ஏற்படும் சண்டைகள், வீட்டிற்கு வெளியே புது உறவுகள் ஏற்பட முக்கிய காரணம். பொருளாதாரத் தேவைக்காக அலையும் பெற்றோரால் தனித்து விடப்படும் குழந்தைகள் பள்ளியில், வெளியிடங்களில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள், குழப்பங்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். சாய்ந்துக் கொள்ள தோள் தேடும் குழந்தைகளே, தவறுகிறார்கள்.
தனிமை, பாடச் சுமை கொடுக்கும் மன அழுத்தம் , மன உளைச்சலால் அவதியுறும் குழந்தைகளிடம் சிறிது நேரத்தையும் செலவிடமுடியாத பெற்றோர் அவர்களுக்கான பணத்தைத் தேடுவது வேடிக்கை!
---தொடரும்
* * * * * * *
'டீன் ஏஜ்' என்பது பயப்படக்கூடிய ஒன்றா என்ன?
தொடர்ந்துப் பேசுகிறேன்...உங்களின் 'மனதோடு மட்டும்'
---கௌசல்யா.