திங்கள், மார்ச் 28

தாம்பத்தியம் பாகம் 22 - உடலின் மீதான திருப்தியின்மை



பதிவை படிக்கும் முன் :

தாம்பத்தியம் தொடர்பான 21 பாகங்களில் திருமணம் முதல் கணவன் மனைவி உறவு நிலைகள், பிரச்சனைகள் போன்ற பல விசயங்களை பகிர்ந்திருந்தேன். கடைசி சில பதிவுகள் தாம்பத்தியத்தின் முக்கிய கட்டமான  அந்தரங்கம் எப்படி இருக்கவேண்டும், அங்கே ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதை சரி படுத்தி கொள்ள என்ன வழிகள் இருக்கின்றன என்பதை பற்றியவை.....

கடைசி பதிவில் கணவன், மனைவி பாதை மாறுவதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்றும் அதில் அதீத அன்பும் ஒரு காரணம் என்று  எழுதி இருந்தேன், இந்த பதிவு உடலின் மீதான திருப்தியின்மை பற்றியது, சொல்லபோனால் இந்த வார்த்தையே தவறுதான், யாரும் துணையின் உடல் பிடிக்கவில்லை என்று பாதை மாறமாட்டார்கள், அதன் பின்னால் மன ரீதியிலான சலிப்புகள் இருக்கும் என்பது தான் உண்மை. இது என் கருத்து. சலிப்புகள், வெறுப்புகள் ஏற்படாமல் தடுப்பதில் ஒரு வழியினை இங்கே பார்ப்போமே.....      

இருவருக்கும் உடல் அளவில் இருக்கும் வேறுபாடுகள்..

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணதிற்கு வரன் பார்க்கணும் என்று முடிவு செய்ததும் முதலில் கையில் எடுப்பது ஜாதகம். ஜாதகம் பொருந்தி இருந்தால் போதும் கண்ணை மூடி கொண்டு மணம் முடித்து விடுகிறார்கள் (ஒரு சிலர் விதிவிலக்கு)  எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று வெளியில் பேசுபவர்கள் கூட கடைசியில் மனதிருப்திக்காக பார்க்காமல் இருப்பது இல்லை.ஆனால் அது மட்டுமே போதாது. திருமணம் முடிக்க போகும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பாட்டு கூட உண்டு "ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்டை குட்டை என்றும் இணையாது.....!"  வண்டி ஓடவே இரண்டு மாட்டின் உடல் பொருத்தம் தேவை படும்போது, இந்த வாழ்க்கை வண்டி ஓட கணவன் மனைவி உடல் பொருத்தம் என்பது மிக அவசியம். (ஒரு சிலர் விதிவிலக்கு)

முன்னாடி எல்லாம் பெண்ணையோ பையனையோ வரன் பிடித்து இருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு என்று சொன்ன பிறகு தான் திருமணமே நடக்கிறது. ஆதலால் தங்கள் மனதிற்கும் தங்கள் உடம்பு அமைப்புக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறதா துணை என்று பார்ப்பது மிக அவசியம். பணம், படிப்பு,அழகு,சொத்து, அந்தஸ்து எல்லாம் திருமணத்தின் ஆரம்ப சில வருடங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும், சமூகத்தில் ஒரு மதிப்பையும் கொடுக்கலாம். ஆனால் வருடம் சில கடந்த பின் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பது இல்லை. துணைக்கு தன் மீதான கவனம் எந்த அளவில் இருக்கிறது,  தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் துணையிடம் இருக்கிறது  என்பதை பொறுத்தே வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இச்சூழ் நிலையில் தான் உடல் பற்றிய யோசனைகளும் ஏற்படுகிறது.

உடல் அளவில் பொருத்தமாக  இருக்கிறவர்கள் தங்கள் அந்தரங்க வாழ்விலும் பொருத்தமாக இருப்பாங்க என்று சொல்ல இயலாது. தவிரவும் படுக்கையறையில் உடல் பொருத்தம் அவசியமும் இல்லை. நிறம்,அழகு, உயரம், குள்ளம் மற்றும் அந்தரங்க உடல் அமைப்புகள் இப்படிதான் இருக்கணும் என்று எந்த அளவுகோலும் இல்லை. தன் துணையை   படுக்கையில் உற்சாகமாக வைத்து கொள்ளாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கே திருப்தி கிடைக்காது . இதை முதலில் பிரச்சனைக்குரிய தம்பதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அந்தரங்கம் இனிமையாக நீடித்த காலத்திற்கு இருப்பதற்கு துணையின் உடலை திருப்தி செய்யணும், ஆனால் இங்கே திருப்தி என்று சொல்வதின் அர்த்தம் உடலுறவு இல்லை. பின்ன வேறு என்ன ??  தொடர்ந்து படிங்க......

உடலின் மீதான திருப்தியின்மை எப்போது ஏன் எதனால் ??

சில சரி செய்துகொள்ளகூடிய காரணங்கள் உடல் சுத்தமாக வைத்துகொள்ளாமை, அதிகபடியான வியர்வை, உடல் பருமன்/ஒல்லி, மனதிற்கு பிடிக்காத மணம் போன்றவை இருக்கலாம் ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தன் துணையின் அந்தரங்க நடவடிக்கைகள் பிடித்துவிட்டால் இந்த குறைகள் மிக பிடித்தவையாக மாறிவிடக்கூடும் !!

*  ஒரு சில நாட்களில் கணவன்/மனைவி யின் மனநிலை உறவிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு சோர்வு,  ஆர்வம் இல்லாமை போன்றவை இருக்கும் போது துணை உறவிற்கு வற்புறுத்தினால் சலிப்பு வரும் நாளடைவில் இதே போன்ற வற்புறுத்தல்கள் தொடர்ந்தால் நிச்சயம் வெறுப்பு அதிகமாகி விரிசலில் கொண்டு போய் விட்டுவிடும். 

*  வேறு சிலருக்கு வேலை, வீடு, குடும்பம் போன்றவற்றினால் மன அழுத்தம் இருக்கலாம். உடல் சம்பந்தப்பட்ட உபாதைகளையும் சட்டை பண்ணாமல் உறவிற்கு அழைத்து அதன் பின் ஏற்படக்கூடிய உறவில் நிச்சயம் திருப்தி இருக்காது. 

*  பெண்களை பொறுத்தவரை வீட்டிற்கு உறவினர்கள் குறிப்பாக தனது பெற்றோர்கள் வந்திருக்கும் போது உறவை விரும்பமாட்டார்கள். குழந்தைகள் சரியாக தூங்கி விட்டார்களா என்று தெரியாதபோது உறவை மனதாலும் நினைக்கமாட்டார்கள். 

*  முக்கியமாக மருத்துவ ரீதியாக மட்டுமே, அது மருந்துகளின்மூலம் அல்லது கவுன்செல்லிங் மூலமாகவோ குணபடுத்தகூடிய உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆண்/பெண்ணுக்கு இருந்தால் அங்கே கண்டிப்பாக உடலின் மீதான திருப்தியின்மை ஏற்படக்கூடும். 

கணவன்/மனைவி அழகாக இருந்து மனதிற்கு பிடித்திருந்தும் 'உடலுறவில் ஈடுபட இயலாதவர்கள்' இருக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. வெளி உலகில் வலம் வரவும், திருமணம் ஆன புதிதில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமைபட்டுக்கொள்ள உதவிய இந்த அழகு அடுத்து தொடர்ந்து வரும் வருடங்களில் உடலுறவுக்கு உதவுவது இல்லை. அப்போது அங்கே தேவை படுவது வேறு ஒன்று...! 

பாதை மாறி சென்று விடாமல் தன் துணையை பிடித்துவைத்துக் கொள்ளும் சூட்சமம் ஒன்று இருக்கிறது, அதுதான் தொடுதல் !! 

பரவசம் இதுவே !

ஆண்/பெண் இருவரின் உடலிலும் உணர்ச்சி மிகுந்த சில பகுதிகள் இருக்கின்றன அது நபருக்கு நபர் வேறு படும். ஒருவருக்கு இதழை தொட்டால் பரவசம் ஏற்படும், சிலருக்கு இடுப்பு, கை, கால் பாதம், கழுத்து, காது மடல், நெற்றி இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் தன் துணையின் உணர்ச்சி பகுதிகள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது முழுமையான இல்லறத்திற்கு மிக அவசியம். உறவிற்கு உடல், மனம் ஒத்துழைக்காத போது இந்த மாதிரியான இடங்களை தொடுவதின்/வருடுவதின் மூலம் பரவச நிலையை அடையமுடியும். உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பும் இது மாதிரியான முன்விளையாட்டுகளில் ஈடுபடும் போது உடலுடன், மனமும் உற்சாகமடைந்து பரவசநிலையை எட்டிவிடும், அதன் பின் நடக்கும் உறவே ஒரு முழுமையான உறவாக இருக்கும்.

சில தம்பதிகள் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இன்றியும் உறவில் ஈடுபட இயலாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான விளையாட்டில் மட்டும்  சில நாட்கள் (உறவு கொள்ளாமல் )ஈடுபட வேண்டும். இதிலும் ஒரு முழு இன்பத்தை அடைய முடியும். வெறும் தொடுதலின் மூலம் சில நாட்களை கழித்து விட்டு பின் முழுமையாக  உறவில் ஈடுபடும் போது, நிச்சயம் கணவன் மனைவி இருவருக்கும் ஒரு வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருக்கும். இதை நான் சொல்லலைங்க நம்ம வாத்சயனார் முதல் மேல் நாட்டு மருத்துவர்கள் வரை இது ஒரு சிகிச்சை முறை என்று ஒத்துகொண்ட ஒரு விஷயம். 

சூட்சுமம் எது என்று தெரிந்து, தெளிந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல்லுங்கள்.....!  




தாம்பத்தியத்தில் தொடரும் அடுத்த பதிவு கணவன்/மனைவி பாதை மாற ஒரு காரணம் மன பொருத்தம் இல்லாமை.......காத்திருங்கள் !!


படங்கள் - நன்றி கூகுள் 




திங்கள், மார்ச் 21

பழிக்காதே...!


பூக்களில் இத்தனை நிறங்களா ? ரசிக்காதவர்கள் யாரும் இல்லை ! அதிலும் ரோஜாவில் கருப்பு நிற பூக்கள் வெகு அபூர்வம் , அதை பார்த்துவிட்டால் போதும் வியந்து அதிசயத்துப்  போய்விடுவோம். !! ஆனால் மனிதரில் கருப்பு என்றால் வெறுப்பு...! அதுவும் ஒரு நிறம் என்பது ஏன் இந்த மனித மனங்களுக்கு புரிவதில்லை. அழகு என்றாலே அது சிவப்பு/வெள்ளை நிறம் கொண்டவர்கள் என்ற முட்டாள்த்தனமான இலக்கணத்தை வகுத்தவன்/வகுத்தவள் யார் ?இன்றும் அதை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நபர்கள் அடிமுட்டாள்கள்.

யார் தவறு ?

ஒரு குழந்தை பிறந்ததும் சுற்றியிருக்கும்  உறவுகள் அந்த குழந்தையின் காது மடலையும், இதழையும் பார்ப்பார்கள்...அது கரு நிறத்தில் இருந்துவிட்டால் உடனே பேசத் தொடங்குவார்கள்...குழந்தை கருப்பாகப்  பிறந்துவிட்டதே...ஏன் குங்குமப்பூ எதுவும் சாப்பிடலையா என்ற அங்கலாய்ப்புகள் ! (குங்குமப்  பூவுக்கும் தோல் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை என்று தான் புரிந்துக்கொள்வார்கள் நம் மக்கள் ?!) உறவுகளின் பேச்சுக்கள்  அக்குழந்தையை பெற்றவளின் மனதில் ரணத்தை ஏற்படுத்தாதா? அதிலும் சிலர், அந்த தாயைப்  பார்த்து  இப்படி கேலியாகச்  சொல்வார்கள் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்று. ஏன் இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறோம்...!? கருப்பாக பிறந்தது யார் செய்த தவறு ?  

கருப்பு நிறத்தைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை, இருவரும் பிரச்சனைகளைச்  சந்திக்கிறார்கள். என்னவொரு வித்தியாசம் என்றால்,  சில சமயம், 'ஆண் நிறம் கம்மியா இருந்தால் நன்றாக இருக்கும்' என்றும், கருப்புநிற ஆண் தங்கம், கட்டி வைரம் அப்படி எதையாவது சொல்லி கொஞ்சம் சமாளிச்சுக்கலாம். அதே நேரம் ஒரு பெண் கருப்பாக இருந்து விட்டால் பிறந்தது முதல் அவள் படும் வேதனைகள் எத்தனை எத்தனை ? கருப்பு நிற பெண் இருக்கும் அதே வீட்டில் மற்றொரு பெண் வெள்ளையாக பிறந்துவிட்டால் அவ்வளவுதான் இந்த பெண்ணை மட்டும் கொண்டாடுவார்கள், அந்த கருநிறப்  பெண் ஒதுக்கப்  படுவாள். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் அவர்கள் முன்னும் வேண்டுமென்றே கருநிற பெண் தவிர்க்கப்படுவாள்...?! 

திருமணம்

உதாரணமாக மணமகள் தேவை விளம்பரத்தைப்  பாருங்கள், 'நல்ல சிவப்பான பெண் தேவை' என்றே இருக்கும். சிவப்பு அழகான உயர்ந்த தகுதி என்றும் கருப்பு அவமானச்சின்னம் போல ஏன் பார்க்கப்படவேண்டும். கருப்பாக இருக்கும் தாய் தன் மகனுக்கு 'பெண் சிவப்பா இருக்கணும்' என்று தான் கோரிக்கை வைக்கிறார். பலரும் இதையே எதிர்பார்த்தால் கருப்புநிற பெண்களின் நிலை,முடிவு...முதிர்கன்னிகளா ??!! 

வேலைக்கு பெண்களை எடுத்துக்கொள்ளும் சில நிறுவனங்கள் கூட படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம் இவற்றுக்கு முன் நிறத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. 

திரையில்

இன்றைய தலைமுறையினரின் மனதை பெரும்பாலும் ஆக்கிரமித்து கவர்ந்திருப்பது சினிமாத்துறை மற்றும் விளம்பரத்துறை ! அதில் வலம்  வருபவர்களையே தங்களின் ரோல் மாடல்களாக எண்ணி நடந்துக்கொள்பவர்கள் பலர். வேண்டும்மென்றே கருப்பான/கருப்பு சாயம் பூசப்பட்ட பெண்களை திரையில் காட்டி நகைச்சுவை என்ற பெயரில் 'ரொம்ப பொங்க வச்சிட்டாங்க போல' என்பது போன்ற வசனங்கள் அந்நிறங் கொண்ட பெண்களின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை என்று உணருவார்கள்...? (முன்பு அதிகமாக திரையில் ரௌடி/திருடன் என்றால் கருப்பாக  காட்டுவார்கள்...!??)

விளம்பரங்களின் பங்கு

கருப்பை இழிவுப்  படுத்துவதில் முதல் இடம் விளம்பரங்களுக்கு உண்டு. ஒரு விளம்பரத்தில் 7 நாட்களில் சிவப்பான பெண்ணுக்கு வேலையை கூப்பிட்டு கொடுப்பதைப்  போல காட்டுகிறார்கள். அந்த பெண்ணை காட்டும்போது கை,உடல் எல்லாம் கருப்பாக இருக்கும், சிவப்பழகு கிரீம் முகத்திற்குப்  போட்டபின்  முகம் முதல்கொண்டு உடல் முழுவதும் சிவப்பாக மாறிவிடும்...இது என்ன  விந்தை ??? மக்கள் இதை பார்த்து அவ்வளவாக  யோசிக்க மாட்டோம் என்பது அவர்களின் புரிதலா,  இல்லை பார்க்கிறவங்க முட்டாள்கள் என்று முடிவே பண்ணிட்டாங்களா ?? 

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்கான விளம்பரங்களைப்  போல் மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையாம் சிவப்பு அழகு கிரீம் விளம்பரங்கள்.   

1998 இல் 384 கோடி ரூபாயாக இருந்த சிவப்பழகு சாதனங்கள் விற்பனை தற்போது 2 ஆயிரம் கோடியாக  இருக்கிறது என்கிறது ஒரு நாளேடு ?!!! 

முதலாளிகளின் கணக்கு

இந்தியாவில் மட்டும் அதிக அளவிற்கு சிவப்பழகு சாதனங்கள் விற்பனையாவதின் பின்னணியில் ஒரு வியாபார நுட்பம் இருக்கிறது. இந்த சாதனங்கள் வெளிநாடுகளில் அதாவது வெள்ளைக்காரர்களிடம் விலைப்போகாது, மேலும் கறுப்பின மக்களான ஆப்ரிக்காவினரிடமும்  வேலைக்காகாது...இரண்டுக்கும் நடுவில் இரு நிறங்களும் கலந்திருக்கும் இந்தியாவில் தான் அதுவும் 100 கோடிக்கும் மேல்  மக்கள்தொகை, இவர்களிடம் சிவப்பு நிறம் பற்றிய முக்கியத்துவத்தை/பெருமையை ஏற்படுத்திவிட்டால் சுலபமாக தொழில்/விற்பனை பண்ணிவிடலாம் என்பதுதான் அந்த கணக்கு.....!!
   
உலக அழகிகளாக இந்திய அழகிகளைத்  தொடர்ந்து தேர்ந்தெடுப்பதின் பின் இந்த தயாரிப்பாளர்களின் பங்கு இருக்கிறது என்று கூட ஒரு பேச்சு இருக்கிறது. 

அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்றாங்க ?

முகத்தின் மேற்பரப்பில் போடப்படும் எந்த ஒரு அழகு சாதனமும், நிரந்தரமாக முகத்தின் நிறத்தை மாற்ற முடியாது, அதுவும் தவிர சில வாரங்களில் சிவப்பழகு என்பது எல்லாம் சாத்தியமே இல்லை என்று உறுதியாகச்  சொல்கின்றன ஆய்வுகள். மேலும் இந்த கிரீம்களால் தோலின் நிறமியைக்  குறைத்து தோல் அலர்ஜி, புற்றுநோயில் வேறு கொண்டுப்போய் விட்டு விடுகிறது ! 

அழகின் நிறம் சிவப்பு என்று எந்த வேதமும், அறிவியலும் வலியுறுத்தவில்லை. ஆனால் ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று ஆய்வுகள் கூறி வருகின்றன.


கருப்பை பழிக்காதே !

கருப்பு நிறம் அழகு என்று எந்த  விளம்பரமும் சொல்வதில்லை மாறாக கருப்பை மாற்றுவது எப்படி என்று ஒரு தவறான வழிக்காட்டுதலை பதிய வைக்கிறது. 

கருப்பு நிறத்தைத் தாழ்த்திக் கேவலப்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் சிவப்பழகு கிரீம் தயாரிப்பாளர்கள் !?       

பெண்களுக்கு என்று இருந்த இந்த சிவப்பழகு கிரீம்கள் இப்போது ஆண்களுக்கும்.....?!! இப்படி மொத்த சமூகத்தையும் சிவப்புதான் சிறப்பு என்று ஒத்துக்கொள்ள வைக்கும் இந்த விளம்பரங்களை எடுப்பவர்களை, வெளியிடுபவர்களை, எவ்வாறு கட்டுப்படுத்த போகிறோம்....?! விளம்பரம் எடுக்க காரணமான கிரீம் தயாரிப்பவர்களை என்ன செய்ய போகிறோம்.....?!  
  
நம் சமூகமும், மீடியாக்களும் போட்டிப்  போட்டுக்  கொண்டு கருப்பு நிறத்தை பழிக்கின்றன...இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று யாரும்  எண்ணுவதில்லை, அதைப்பற்றி கவலைப்படுவதும் இல்லை. மனதளவில் நொறுங்கிப் போகும் அத்தகையவர்களின் தன்னம்பிக்கை சிதறுவதை பற்றி யாருக்காவது அக்கறை இருக்கிறதா ?!  

                                    கருப்பு ஒரு நிறம் ! 
                          கேவலம் அல்ல பழிப்பதற்கு ! 
                                கருப்பை பழிக்காதே !!



பின்குறிப்பு

நிற வெறி பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற எனது எண்ணத்தின் சிறு முன்னோட்டமே இந்த பதிவு, இது கருப்பு நிறத்தை குறைச்சொல்லும் சமூகத்தையும், மீடியாக்களையும்  பற்றிய சிறு பகிர்வு. இந்த நிறம் சிறுகுழந்தைகளின் மனதிலும் தவறாக விதைக்கபடுகிறது என்பதை அறிவீர்களா ? மற்றொரு சமயத்தில் விரிவாக பகிர்கிறேன். 


படம் - நன்றி கூகுள்   






இங்கேயும் வாங்க...!


கழுகின் இன்றைய இலக்கு 

வெள்ளி, மார்ச் 18

ஜப்பான் அணு உலை வெடிப்பு - ஒரு விஞ்ஞானியின் பார்வையில் !



ஜப்பானில் அணு உலை விபத்து நிகழ்ந்து அதன் மூலம் உலகின் பல  நாடுகளிலும் கதிரியக்கம் பரவுவதாக பல வதந்திகள் வலம் வருகின்றன. மீடியாக்கள் தங்கள் பங்குக்கு எதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கணும் என்பதை விடுத்து திரித்து சில செய்திகளை மட்டும் பெரிதாக்கி வெளியிட்டு வருகின்றன. வழக்கம் போல மக்கள் இப்போ அரசியல்வாதிகள் பண்ணும் கூட்டணி கூத்துக்கு சிரிக்கவா ? இந்த கதிரியக்கம் பற்றி கவலைபடுவதா என்ற யோசனையில் இருக்கிறார்கள். அரசியல் குழப்பத்தை தெளிவு படுத்த என்னால் இயலாது ஆனால் இந்த கதிரியக்கம் பற்றி எனக்கு வந்த ஒரு முக்கிய தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. அதாங்க விழிப்புணர்வு. தொடர்ந்து பதிவை படியுங்கள்...உங்களுக்கு வேறு தகவல் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் போதும், அதைப்பற்றிய பல புரளிகளை கிளப்பிவிட்டுவிட்டு மக்களை குழப்பத்திலும், தேவையற்ற சஞ்சலங்களிலும் ஆழ்த்துவதில்தான் நம்மவர்களுக்கு எவ்வளவு இன்பம்?! இப்படித்தான் 2000 ஆண்டு உலக அழிவுன்னு சொன்னாங்க, அப்புறம் மிகச்சமீபத்துல 2012, 21 டிசம்பர் அன்றைக்கு உலகம் அழியப்போகுதுன்னு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அது இன்னும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில இப்போ அணு உலை பாதிப்புகளால் நிலைகுலைந்துபோயுள்ள ஜப்பான். அணு உலை இருக்கும் கட்டிடங்களின் கூரைகள் வெடித்ததை அணு உலையே வெடித்துச் சிதறிவிட்டது, அதனால் சுற்றுச்சூழலில் கதிரியக்கம் பரவி, உலகெங்கும் அமில மழை பெய்யப்போகிறது ஜாக்கிரதை என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி ஜப்பான் நாட்டு சுக்குபா நகரில் பணிபுரியும்  இந்திய அணு விஞ்ஞானி திரு.அனிர்பன் பந்தோப்தியாய ஒரு விளக்கமளித்திருக்கிறார். அது பின்வருமாறு......

சுனாமி தாக்கியதும் ஜப்பானில் உள்ள அணு உலைகளின் உற்பத்தி உடனே நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்க தொடர் வினைகள் எதுவும் அதில் இருக்காது. தொடர் வினைகள் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே அணு உலை வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு. எனவே ஜப்பானின் அணு உலை வெடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. செர்னோபில்  விபத்து போன்றதொரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை. தற்போது ஜப்பானில் உள்ள  அணுமின் நிலையத்தில் வாயுக்கள் வெளியாவதாலும், சுற்றுப்புற தட்ப வெட்ப மாற்றங்களாலும் கட்டிடங்களின் கூரைகள் மட்டுமே தற்போது வெடித்துள்ளன. அணு உலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்கம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் அணு உலை சூடாவதும், கதிரியக்கம் வெளியாவதும் இரு வேறு தனி தனி  நிகழ்வுகள்.

மேலும் நாம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம், காற்றில் கதிரியக்கம் பரவுவதை பற்றி வெளிவரும் செய்திகள். நாம் சில அடிப்படையான விசயங்களை அறிந்து கொண்டால் இதை பற்றி வரும் வதந்திகளை பற்றி கவலைபடவேண்டாம். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நம் உடல் உறுப்புகளை தாக்கும் கதிர்வீச்சுகளில் அயோடின் கதிர்வீச்சு மட்டுமே ஆபத்தானது.

யுரேனியம் போன்றவை, உடனடியாக எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது.தொடர்ந்து மிக மிக அதிக அளவிலான கதிர்வீச்சு உடலில் பட்டு வந்தால் மட்டுமே உடல்நல பாதிப்புகளை உருவாக்கும்.ஜப்பானிலுள்ள ஆறு அணு உலைகளில் உள்ள மொத்த யுரேனியத்தின் அளவு அதை விட குறைவாகவே இருக்கும்.

அயோடின் கதிர்வீச்சு பற்றிய  சில உண்மைகள்.

எதிர்காலத்தில்  இதனால்  நமக்கு பாதிப்பு   வரலாம்  என்றும் அதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோடின் சத்து குறைபாடு நமக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் உடம்பில் அயோடின் சத்து குறைவாக இருந்தால், அப்போது காற்றில் உள்ள அயோடினை நம் உடம்பு உறிஞ்சும். அப்படி உறிஞ்சப்படும் அயோடினில் கதிர்வீச்சு இருந்தால் நம் உடல் பாதிக்கப்படும்.

எனவே அயோடின் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால் நலம், கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். 

(இந்த தகவல்கள் எனக்கு ஆங்கிலத்தில் வந்தது)

தமிழாக்கம் உதவி - திரு. சங்கரலிங்கம், உணவு உலகம் 
படம் உதவி - கூகுள்

Sharing with you the information related to Explosions at Fukushima Nuclear Reactors received from one of Indian Scientists by name Dr. Anirban Bandyopadhyay working in Tsukuba, Japan.



அணு உலை வெடிப்பா அல்லது அணு உலை கட்டிடங்களின் கூரை வெடிப்பா என்பதை  பற்றி ஜப்பானில் வாழும் தமிழகத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் தனது தளத்தில் மிக தெளிவாக எழுதி இருக்கிறார். தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புவர்கள் அதனை படித்து பாருங்கள். அத்தளத்தின் லிங்க் இங்கே 




திங்கள், மார்ச் 14

உடனடி தேவை...ஒரு எழுச்சி !


இப்ப நம்ம நாட்டில மக்களுக்கு ஒரு விசயத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். அது தான் யாருக்கு வோட் போடுவது...? குழப்பம் என்று ஏன் சொல்றேனா ஒவ்வொரு நாளும் அரசியல்வாதிகளின் கூட்டணி பற்றிய முடிவுகளும், கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கிறதே. நாளைக்கு யார் எந்த பக்கம் போவாங்க ? இல்ல மறுபக்கம் போனவங்க மறுநாள் திரும்பி வருவாங்களா ? இல்லை அன்னைக்கே திரும்பி வந்துருவாங்களா ? எத்தனை சீட் கொடுத்தா இந்த கட்சி இங்கேயே இருக்கும் ? இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறும் நேரம் இது...!

மக்களும் பாவம் என்ன செய்வாங்க...சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா... நாங்களும் எங்க ஜனநாயக கடமையை ஆற்ற ரெடி ஆக வேண்டாமா? இல்லைனா மக்களே ஒண்ணு  பண்ணுங்க தேர்தலுக்கு ஒருநாள் முன் வரை எந்த செய்தித்தாளையும் படிக்காதிங்க, தொலைக்காட்சி செய்தி சானல் பக்கம் திரும்பி கூட பார்ககாதிங்க...!? தேர்தல் அன்னைக்கு காலையில் பேப்பர் பார்த்து முடிவு பண்ணிகோங்க.....எந்த கட்சில யார் இருக்காங்க ? யாரும் யாரும் கூட்டணி என்று ?

தேர்தலில் ஆளும் கட்சி ஜெயித்தால் ஊழல்கள் இன்னும் பூதாகரமாக நடைபெறும், எதிர் கட்சி ஜெயித்தால் இப்போதைய ஆளுங்கட்சியின் பழைய வழக்குகள் தூசி தட்டப்படும் அல்லது புதிதாக வழக்குகள் போடப்படும் !!? பழிவாங்கும் படலம் ஆரம்பமாகும், வேற உருப்படியாக உடனே எந்த நல்ல மாற்றமும் ஏற்படாது என்பது திண்ணம். இப்போது நடைமுறையில் இருக்கும் சில நல்ல(?) விசயங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.....

இப்ப இருக்கிற நாட்டின் நிலைமையை பற்றி புதுசா நான் சொல்ல தேவை இல்லை எல்லோருக்கும் நல்லாவே தெரியும்...மிக முக்கியமாக சொல்லணும் என்றால், உணவு, நீர், மின்சாரம் இவற்றின் நிலை, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாற,  விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல், பயிர் செய்வது குறைந்து போனதுக்கு, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டமும் ஒரு காரணம், இத்திட்டத்தால் சிறு தொழில்கள் பலவற்றிற்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் குறைந்து விட்டது. தென் தமிழகத்தில் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன...இன்னும் பல தொழிற்சாலைகள் மூடக்கூடிய நிலையில்...!

குறைவான கட்டுபாடற்ற மின்விநியோகத்தால் பெரும் அவதிக்குள்ளாகும்  பொதுமக்கள், மின்சாரத்தை வைத்து நடைபெறும் தொழில்கள் !?

நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்படாமை...காவிரி, முல்லை பெரியாறு பற்றிய அக்கறை இன்மை, தமிழக மீனவர்களின் நலனில் நிரந்தர தீர்வு எட்டப்படாமை, கச்சதீவை கண்டுகொள்ளாமை, விலைவாசி உயர்வு,  மிக முக்கியமாக எங்கும் மலிந்து போய்விட்ட ஊழல்கள்...சொல்லிக்கொண்டே போகலாம்.....   


தமிழகத்தின் கடன் சுமை 1 லட்சம் கோடியாம் !! இது என்ன கணக்குங்க ?!!


'மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்கள் விரோத செயல்களுக்காக பயன்படுத்தி கொண்டது  அரசு' என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் !!


உண்மையில் என்னங்க  நடக்குது  நம்ம நாட்டில ?

ஒவ்வொரு அரசியல்வாதி பற்றியும் ஒரு தனி அபிப்பிராயம் வைத்து  இருப்போம், அதை நொறுக்கிற மாதிரி ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்கள் நடந்து கொள்ளும் போது ஏற்படும் மனஅழுத்தம் சொல்லிமுடியல...அரசியல் பத்தி சுத்தமா அக்கறையே  இல்லாத எனக்கே இப்படினா தலைவா, தலைவினு அவங்களையே நம்பி தன் சொந்த குடும்பத்தை  கண்டுக்காம அலைந்து கொண்டிருக்கிற  தொண்டனுக்கு  எப்படி இருக்கும்.....? அப்படிபட்டவர்கள் யாரும் இப்ப இல்லைன்னு மட்டும் சொல்லிடாதிங்க...தெருவில் போய் நின்னு யாராவது ஒரு தலைவனை ஒழிக என்று சொல்லி பாருங்க...!? இப்பவும் பிரியாணி, பணத்துக்கு மட்டும் தொண்டனாக இல்லாமல் உண்மையான உணர்வுள்ள தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் இன்னும் தலைவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். 

தொண்டர்களின் விசுவாசத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் !!?

மத்திய அரசில் இருந்து தி.மு.க விலகிய செய்தி பரவியதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அப்புறம் மறுபடி இணைந்தது அதற்கும் பட்டாசு வெடித்து ஆர்பரிக்கின்றனர். இது என்ன கண்மூடித்தனமான பக்தி என்று புரியவில்லை...ஒருவேளை இப்படி பண்ண சொல்லி மேலிடத்தின் உத்தரவாக இருக்குமா ?ஆமாம் தமிழகத்தில் மொத்தம் எத்தனை காங்கிரஸ் இருக்கிறது ?? (நிஜமா எனக்கு சரியா தெரியலைங்க ,தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்...)

தொண்டர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன ? தலைவர்கள் என்ன சொன்னாலும் ஆமாம் என்று தலையாட்டும் ஆட்டு மந்தைகளா இவர்கள் ?? சுய சிந்தனை, சுய மரியாதை என்ன என்பதே தெரியாத இவர்கள் யார் ?

 நம் நாட்டின் அரசியல் இப்படி எள்ளி நகையாடும் கேலிக்கூத்தாகி போன காரணம் என்ன ?? எதைத்தான் சகித்து கொள்வது என்ற வரைமுறை கிடையாதா ? வெறும் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்க்கும் சுயநலம் எதில் போய் முடியும் ? யோசித்தே தீரவேண்டிய  நிலையில் தற்போது இருக்கிறோம்.

என்ன காரணம் ?

அரசியலில் அரங்கேறும் அத்தனை அசிங்கங்களுக்கும் ஒரே காரணம் மக்களின் சகிப்புத்தன்மை ! இன்னும் தெளிவா சொல்லணும் என்றால் எதையும் கண்டுக்காம வாய் மூடி  கொண்டிருக்கிற நாம் தான். நம்முடைய இந்த சகிப்புத்தன்மையை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டார்கள்...விளைவு மலிந்துவிட்ட ஊழல்கள்...தட்டிகேட்க ஆள் இல்லாத இடத்தில் தவறுகள் தாண்டவமாடும் என்பது தெரிந்தது தானே...?  இதை ஒத்துக்கொள்ள முடியாத நாம் அவர்களை நேரம் கிடைக்கும் போது   குறைசொல்லி அல்லது விமர்சனம் செய்து நம் மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

அரசியல்வாதிகள் இப்படியே இருக்கிறார்களே இவர்கள் மாறவே மாட்டார்களா...? மக்கள் ஏன் ஒட்டுமொத்தமாக இவர்களை புறகணிக்கக்கூடாது ?? சமீபகாலமாக இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுகிறது.

இனி ஒரு விதி செய்வோம் ! 

நமது சுதந்திரம், நாட்டின் மீது தீவிர பற்றுக் கொண்ட முன்னோர்களின் உயிர் இழப்பாலும், தியாகத்தாலும் கிடைத்தது என்பதை நாம் மறக்ககூடாது. முன்னோர்கள் சுதந்திரத்துக்காக போராடியது, தங்களுக்கு அடுத்துவரும் தலைமுறையினராவது சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்க்காகத்தான். நாம் ஏன் இனி அடுத்துவரும் நம் வாரிசுகள் ஊழலற்ற சிறந்த நாட்டில் வாழட்டும் என்று அதற்காக பாடுபடக்கூடாது ?


தட்டிகேட்க வக்கில்லாத நமக்கு குறை சொல்ல மட்டும் என்ன தகுதி இருக்கிறது...? யோசியுங்கள் !! 

உடனடி தேவை ஒரு எழுச்சி !

மக்களின் மித மிஞ்சிய சகிப்புத்தன்மைதான் தற்போது கியூபாவிலும், துனிசியாவிலும் புரட்சியாக உருவெடுத்தது. நமக்கான நேரம் எப்போது...? யார் முன்னெடுப்பது ? சாதி, மத வேறுபாட்டால் சிதறி கிடக்கிற மக்கள் சக்தியை இணைக்க தெளிந்த நோக்கமும், திட சிந்தனை கொண்ட இளைஞர்கள் வேண்டும்.....உள்ளத்தில் புரட்சி வேட்கை கொண்ட வேங்கைகள் இருக்கின்றன.....ஆனால் அடையாளம் காணப்படாமல் எங்கோ ஒரு மூலையில்.....! அவர்கள் வெளியே வரவேண்டும்.....இயலாமையால் வெம்பி கிடக்கிற இளைஞர்களை ஒன்று சேர்க்கவேண்டும்.....!

நம்மிடையே பல பாரதிகளும், வாஞ்சிநாதன்களும், கட்டபொம்மன்களும், குமரன்களும் இன்னும் பல வேங்கைகளும் கொந்தளிக்கும் நெருப்பை நெஞ்சில் வைத்துக்கொண்டு பரவிக்கிடக்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி எது ?


இணைக்கும் ஒற்றை மந்திரச்சொல் தமிழன் !

நமது மண்ணின் மீதும் தமிழனின் மீதும் அக்கறை இருக்கிறது என்று வெறும் வாயை மென்று கொண்டும், வெட்டிப் பேச்சு பேசி பொழுதை போக்கி கொண்டும் இருக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று காரியத்தில் இறங்குவது நம் உடலிலும் சூடாகத்தான் ரத்தம் ஓடுகிறது என்பதை உறுதிபடுத்தும்.


"தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?"





ஊழலற்ற இந்தியாவை, தமிழகத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை !!

 



சனி, மார்ச் 5

எங்கே செல்கிறது.. பதிவுலகம் ?



நம்மை போல பதிவுகள் எழுதுபவர்களுக்கு நம் நண்பர்கள் வந்து படித்தால் கிடைக்கிற  திருப்தியே தனி தான். ஒரு மாதமாக பதிவுலகம் பக்கம் வராமல் இருந்த நாட்களில் நான் அதிகமாக வோட், கமெண்ட் போடவில்லை.....அதனால் வழக்கம் போல் என் சந்தேக புத்திக்கு ஒரு சந்தேகம் , 'ரொம்ப நாள் கழிச்சு பதிவு போடுறோம், யாருக்கு தெரிய போகிறது ?' 

என் சந்தேக புத்தியை சாட்டையால் அடிக்கிற மாதிரி போன பதிவிற்கு நண்பர்களின் வரவு இருந்தது. இந்த மாதிரி ஒரு தவறான எண்ணத்தை நான் மட்டும் அல்ல பலரும் கொண்டிருக்கிறோம்...நாம் போய் வோட், கமெண்ட் போட்டால் அவர்கள் நமக்கு வருவார்கள் என்பது நமது எழுத்துகள் பிறருக்கு அறிமுகம் ஆகும் வரை மட்டுமே. பதிவு பிடித்து இருந்தால் நண்பர்கள் தொடர்ந்து  படிப்பார்கள்.  இதை புரிந்து கொள்ளாமல் அதிக ஹிட்ஸ் வேண்டி பல பதிவர்கள் நடந்து கொள்ளும் சில அநாகரீக முறைகள், வீண் ஆர்பாட்டங்கள்...இதன் உச்சகட்டமாக சமீப காலமாக  நடந்துகொண்டிருக்கும் விரும்பத் தகாத  சில நிகழ்வுகள்.....! (இப்போது புரிந்து இருக்கும் நான் எதை பற்றி சொல்லபோகிறேன் என்று !?)

சிறு பிள்ளைகள் 'டீச்சர், டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான், இவன் என் பென்சிலை எடுத்துவிட்டான்' என்கிற  மாதிரி, மாறி மாறி சண்டை போடுவதை பார்த்தால்  நாம் இன்னும் பள்ளிப்படிப்பை விட்டே தாண்டவில்லையோ ?! இணையத்தை கையாண்டும்  இன்னும் மனமுதிர்ச்சி அடையாமல் இருக்கும் சிலரை எண்ணி நகைப்பும்,  கூடவே வெறுப்பும்  வருகிறது. இதை விட வேறு சிலர் தங்களை அதிக முதிர்ச்சி அடைந்தவர்களாக எண்ணி  நடந்து கொள்ளும் விதம் அசிங்கத்தின் உச்சம். 

இலக்கியம், இலக்கணம் தெரிந்தவர்களா எல்லோரும் ?

இங்கே எழுதுபவர்களில் எல்லோருமே  தமிழ் மொழியில் முழு புலமை பெற்றவர்கள் என்று சொல்ல இயலாது...என்னையும் சேர்த்து, பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருகிறவர்களே அதிகம். இதை கூட பள்ளி செல்லும் சிறுவன் மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறான் என்று விமர்சிப்பது எத்தகைய கீழ்த்தரமான செயல்...?!   

எங்கே மனிதம் ?

ஒருத்தர் எழுதிய பதிவு பிடிக்கலைனா அதை சுத்தமா கண்டுக்க கூடாது, இல்லைனா அமைதியாக நாகரீகமான முறையில் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதைவிடுத்து அநாகரீகமான வார்த்தை பிரயோகங்கள், மனித நேயமற்ற விமர்சனங்கள் ! இப்படி செய்து எதை சாதிக்க போகிறாய் , என்ன எதிர் பார்க்கிறாய் ? என்ன வேண்டும் உனக்கு ? மனதினுள் இருக்கும் வக்கிரம் வார்த்தைகளாய் வெளியே வருவதும், அது  சக மனிதனை கீறி கிழிப்பதிலும் என்ன சுகம் கண்டாய் ? பிறரின் மனதை கொல்வது சரி என்று யார் சொன்னார்கள் உங்களுக்கு ?!

நீங்க கேட்கலாம், 'உனக்கேன் அக்கறை' ? சில மாதங்கள் முன் நானே பாதிக்கப்பட்டேன்...!! நானும் அந்த மன உளைச்சலை சந்தித்தேனே ! அப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்தவர்களுக்கு தெரியும், அந்த வேதனை எப்படி பட்டது என்று ?! பதிவுலகில் எதாவது சர்ச்சைகுரிய பதிவு எழுதினா உடனே ஆளாளுக்கு எதிர் பதிவு போட்டு அந்த பதிவை விமர்சிப்பதை ஓரளவிற்கு சரி எனலாம் . ஆனால் அதை விடுத்து , பதிவரை மட்டும் தாக்குவது எந்த விதத்தில் சரி...?! இது எழுத சரக்கு இல்லாத ஒரு குறிப்பிட்ட சிலரின் வேலையாக போய்விட்டது, இதன் மூலம் விளம்பரம் தேடுவது என்ன லாஜிக்கோ ? 

தமிழனை இழிவு படுத்தாதே

பதிவுலகம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் பார்க்க படுகிறது...படிக்கபடுகிறது...இங்கே எழுதப்படும் செய்திகள் தான் தமிழனையும், தமிழ்நாட்டையும் குறிக்கும் அடையாளங்கள். இந்த எழுத்துக்களின் மூலம் தங்கள் நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து கொள்கிறார்கள்... இந்நிலையில் தமது சுயநலத்திற்காகவும், பிறர் மீதான வெறுப்பை உமிழுவதற்காகவும், எழுதப்படும் மோசமான பதிவுகள் கடல் கடந்து இருக்கும் தமிழர்களுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்தும் ? தமிழன் இப்படிபட்ட எண்ணம், செயல், பார்வை கொண்டிருப்பான் என்று பிரகடன படுத்துவது போல் ஆகாதா ? தமிழனின் விருப்பம் இது தான் என்று உறுதியாக அறிதியிட்டு வெளியிடப்படும் சில மோசமான பதிவுகள்...கேவலம் !!   

சமூதாயத்தை திருத்துவது என் வேலை இல்லை என்று விழிப்புணர்வு பதிவுகளை எழுதுபவர்களை குறை சொல்வதற்கு என்றே  சிலர்  இருக்கிறார்கள். யார் நினைத்தாலும் சமூதாயத்தில் புரையோடி போயிருக்கும் அவலங்களை ஒரே நாளில் சரி படுத்தமுடியாது. ஆனால் படிக்கும் ஒருத்தர் இரண்டு பேர் மாறலாம்  அல்லது யோசிக்க வைக்கலாம், அல்லது குறைந்த  பட்சம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். 

வாசகர்கள் இதை தான் விரும்புகிறார்கள் என்று எண்ணி வலிய தவறான கருத்துக்களை திணிக்கும் செயல்கள் தவிர்க்கலாமே . பதிவுலகம் பொறுத்தவரை ஒரு தளத்திற்கு வந்து வோட் செய்து அந்த பதிவை பலரை  சென்றடைய செய்வது சக பதிவர்கள் தான். ஒரு மோசமான தளத்தை படிக்கும் பிற பதிவர்கள் இப்படி எழுதினால், இப்படி ஆபாச படம் போட்டால் தான் நாமும் ஹிட்ஸ் அதிகரிக்க முடியும் என்று எண்ணி செயல் படகூடிய பரிதாப நிலையும் இருக்கிறது...?!    

யோசிக்கலாமே ?!


'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'

எல்லா மதமும் பிற உயிர்களிடத்தில் அன்பை பாராட்டணும் என்று தானே போதிக்கின்றன. அன்பு கொள்ளவில்லை என்றாலும் துவேசம் காட்டாமல் இருக்கலாமே...


சுவாசம் நின்ற மறுநொடி நம்ம எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...'பிணம்'     

நமது இந்த வாழ்க்கை என்னும் ஓட்டத்தூரம் கொஞ்சம் தான்...இதில்  அடிக்கடி நின்று விட்டால் எப்படி? நம்மை பற்றி குறை பேசுறவங்க பேசிட்டு இருக்கட்டும், நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துகொண்டு போயிட்டே  இருக்கணும் (எனது இந்த விமர்சன பதிவையும்  சேர்த்தே சொல்கிறேன்...!) நமக்கு பிரயாணம் தான் முக்கியம், நடுவில் வரும் ஸ்பீட் பிரேக்கர் நிதானித்து செல்லத்தானே தவிர, அங்கேயே நின்றுவிட இல்லை.    

பிறர் குறை ,விமர்சனம் சொல்றாங்க என்று பதிலுக்கு நாமும் புழுதி வாரி தூற்றினால் அந்த தூசி நம்மீதும் விழத்தான் செய்யும்.....இன்னும் அதிகமாக !! 

முடிந்தவரை நாளைய தலைமுறையினருக்கு நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை விதைத்து விட்டு சென்றுவிடாதீர்கள். 

வாழும் நாட்கள் விரைந்து மறைந்து விடும் பனித்துளிபோல...இருக்கும் குறுகிய நாட்களில் பல நெஞ்சங்களை அன்பால் சேர்த்து கொள்வோம். 'தனிமனித தாக்குதல்' என்ற ஒரு அநாகரீகத்தை இனியாவது கைவிட்டு நேசம் வளர்ப்போம். ஏற்கனவே சாதி, மத, அரசியல், கொள்கைகள் வேறுபாட்டால் பிரிந்து கிடக்கிறார்கள் தமிழர்கள்...இது போன்ற சூழ்நிலையில் வறட்டு  கௌரவம், சுயநலம் போன்றவற்றுக்காக நமக்குள் சண்டை இட்டு நம் மதிப்பை குறைத்துக் கொள்ளாமல், நேச கரம் நீட்டி நட்புறவை உறுதி படுத்தி 'நாம் தமிழனடா' என்று உரக்க சொல்வோம்.....

தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம். 

வெல்லட்டும் மானுடம் !  







செவ்வாய், மார்ச் 1

இதயம் நனைத்த மழை...!






வெகு நாட்கள் கழித்து மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மெயில், போன், சாட் மூலம் என்னை நலம் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றியை முதலில் இங்கே தெரிவித்து கொள்கிறேன். பதிவுலகம் மூலம் நிறைய அன்பை சம்பாதித்து இருக்கிறேன் என்பதை விலகி இருந்த நாள்கள் எனக்கு புரிய வைத்து விட்டது.கடந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு சம்பவங்களுடன் கழிந்தது. அதில் பதிவுலகம் தொடர்பான ஒரு இனிமையான நாள் ஒன்றை மறக்க இயலாது...

தோழி விக்னேஸ்வரியை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நேசமித்ரன் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பு புத்தகம் ஒன்றை எனக்கு தோழி பரிசளித்தார். பின் மூன்று நாள் கழித்து எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக புத்தகத்தை  புரட்டினேன்...

எனக்கு இலக்கிய செறிவுடைய கவிதைகளை ஒரு முறை படிக்கும் போது புரிவது மிக சிரமம் (நம்ம தமிழ் புலமை அப்படி ?!) இவரது இந்த கவிதைகளை படிக்கும் போது முதலில் சுத்தமாக புரியவில்லை. ஆனால் அப்படி எதை பற்றிதான் எழுதி இருக்கிறார் என்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டது உண்மை. மீண்டும் ஏற்கனவே படித்ததை மெல்ல வாசிக்கத் தொடங்கினேன். படைப்பை மீண்டும் மீண்டும் படித்து பொருள் புரிந்து கொள்ளும் போதே அந்த படைப்பு நிறைவு பெறுகிறது, மனதிலும் பதிந்து விடுகிறது. இதுதான் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்று நினைக்கிறேன். 


படிக்க படிக்க வாசிப்பின் ஆர்வமும், உத்வேகமும் அதிகரிப்பதை புரிந்து கொண்டேன்,இமைகொட்டாமல் அதில் லயிக்க தொடங்கினேன். வரிகளை பற்றிய கற்பனைகள், மனதிற்குள் வலம் வருவதை என்னால் உணரமுடிந்தது...இப்படி ஒரு விசித்திரம் இவரது எழுத்தில் நிகழ்வது அற்புதம். கவிதையை பலமுறை படித்தே தீர வேண்டிய கட்டாயத்தை மறைமுகமாக உணர்த்தும் படிமங்கள் அவை !! 

கவிதையின் பொருள் புரிய இலக்கியம், இசை,கணிதம், விஞ்ஞானம்,வரலாறு,உடலியல், உளவியல், மொழியியல், வேதியியல், புவியியல் இன்னும் எத்தனை இயல்கள்   இருக்கிறதோ... அவற்றை பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லது இவரது கவிதைகள் அதை நமக்கு கற்றுகொடுத்துவிடும்...! நோவா பேழை,வாதை, விலா எலும்பில் விந்து வைத்திருந்தவன் இப்படி இவர் எடுத்தாலும் வார்த்தைகளின் பொருள் புரிய கொஞ்சம் பைபிள் படித்திருக்க வேண்டும்...! (வேதம் எனக்கு பரிச்சயம் என்பதால் புரிந்தது !)

தமிழின் மீதான  காதல் என்பதை விட 'சொற்களின் மீதான காதல்' தான் அதிகம் தெரிகிறது. 


கவிதையும் நானும் !


* சொற்களின் பொருள் புரிந்துகொள்ளாமல் விட்டேனா பார் என்று என் ஆழ்மனம் கவிதைகளிடம் பகிரங்கமாக சவால் விடும் புதுமை !


* கவிதையின் இலக்கணம் என்பது ஆச்சரிய குறியீடு, இன்ன பிற ஜோடனைகள் என்ற என் புரிதலை உடைத்து போடும் லாவகம் !


* தெரிந்த பழகிய வார்த்தைகள், சொற்களை கவிதையாக்கி பார்ப்பதில் என்ன புதுமை என்று முகத்திற்கு நேராய் கை நீட்டும் துணிவு !


* பள்ளி,கல்லூரி வயதை தாண்டி, வெகுதூரம் வந்துவிட்ட என்னை, மீண்டும்  மாணவியாக்கி, கற்று தந்து மகிழும் சுவாரசியம் !


* சொற்களை தேட எடுக்கும் பிரயாசங்கள் அற்புதம் என்றால் கவிதை குழந்தை பிறந்ததும் அடுத்த பிரசவத்திற்கான தேடல்கள் அதிசயம் !


* கவிதையை புரிந்து கொள்ளும் நேரத்தில் பல தளங்களை படித்து/படிக்காமல் பின்னூட்டம் இட்டு நண்பர்களின் வருகை, நம் தளத்திற்க்கான பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற சில சராசரி பதிவர்கள் எண்ணம்  பற்றி கண்டுகொள்ளாத மௌனம்!


* காதலி/காதலன் குணம் சில நேரங்களில் புதிராய் இருந்தும் புரிந்து கொள்ள முயற்சி செய்வதை போல், என்னையும் புரிஞ்சு கொள்ள முயற்சி பண்ணுங்களேன் என்ற கவிதையின் அன்பான கெஞ்சல்/கொஞ்சல் !       


எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன், உங்கள் பார்வையில் என்ன வேண்டுமானாலும் பொருள் கொண்டுகொள்ளுங்கள்...தவறில்லை என்று தாராளமாக அனுமதி கொடுக்கிறார் ! வாசகனின் எண்ணத்திற்கும் கருத்திற்கும் இவர் கொடுக்கும் மரியாதை அளப்பரியது என்று இவரது பிற பதிவுகளை படித்தபோது எனக்கு தெரிந்தது.  


ஒரு எழுத்தாளரின் கவிதைகள் என படிக்க தொடங்கி...இது ஒரு படைப்பாளியின் 'அற்புத படைப்புகள்' என்று மூடிவைத்தேன் புத்தகத்தை !!

புத்தகத்தை மூடி வைத்த சற்று நேரத்தில் அவருடன் தொலைபேசியில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பேச தொடங்கியதும் மனதோடு மட்டும் கௌசல்யா தானே நீங்க' என்றதும் இப்படி ஒரு அறிமுகம் எனக்கு கொடுத்த இந்த பதிவுலகத்தை எண்ணி மகிழ்வாக இருந்தது. கவிதைகள் பற்றிய என் கருத்துக்களை மகிழ்வுடன் கேட்டுக்கொண்டார். என் எளிய தமிழ் எழுத்தின் மேல் எனக்கிருக்கும் வருத்தத்தை சொன்ன போது, 'அதைப்பற்றி ஏன் கவலை படுறீங்க...நிறைய நல்ல புத்தகங்கள் படிங்க' என்று சில எழுத்தாளர்களின் பெயர்களை கூறினார். 


தமிழச்சியாக பிறந்து விட்டு இவரது கவிதைகளையும், உரைநடைகளையும் படிக்கும் போது தமிழ் எனக்கு மிக அன்னியமாக தெரிவதை எண்ணி வருந்துகிறேன். இப்படி நான் மட்டும் இல்லை என்னை போன்றோரே இங்கே அதிகம் என்று நினைக்கிறேன். (தமிழை சரியாக படிக்காதது  நம் தவறா ? இல்லை சென்னை போன்ற நகரத்தில் ஆங்கில வழியில் படித்ததின் விளைவா ?? தாய்மொழிக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்கவேண்டியது யார் கடமை ? என்று பல கேள்விகள் அவசியமின்றி அந்நேரத்தில் மனதில் எழுந்தது !!) 


இவருடனான முதல் அறிமுகத்திலேயே தமிழின் மீதான பற்றும் அக்கறையும் ! மேலும் வெகு நாள் பழகியதை போன்ற இயல்பான உரையாடல்கள்! எனக்கு வியப்பாக இருந்தது அன்றைய பொழுது முழுவதும் !


தற்போது கோவில்களை பற்றிய வரலாற்று குறிப்புகளையும், அங்குள்ள சிலைகள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் தொகுத்து வருவதாகவும் பின் இது தொடர்பான நூல் ஒன்றையும் எழுத உள்ளார் என்று நினைக்கிறேன். அவரது இந்த சீரிய பணி முழுமையாய் நல்லமுறையில் நிறைவேற என் வாழ்த்துக்கள்...

அவர் எழுதிய கவிதைகளில் இரண்டு கவிதைகள் மட்டும் உங்களின் பார்வைக்காக...

"பழமை*புதுமை, தொன்மை*நவீனம் கலந்த அதீத புனைவுத் தன்மைக்கொண்ட அழகான கவிதைகள்" 


அல்சியோன் நாட்கள் 



நோய் நாட்களின் தூசி துடைத்து
நகரும் பள்ளி தலை உயர்த்தியது 
மூளை சாய்ந்த செயற்கை காலின் 
பெருவிரலில்

வயலின் தந்தியில் விரையும் எறும்பு
நின்று உணரிகள் விரிக்கும் தடம் செய்த விரல்
நிறம் மாறும் முள் வளர்ந்து


பிரேத சோதனை மர கத்தி
அகழ் பேஸ் மேக்கர் வசம்
விண்ணூர்திகளின் கறுப்புப் பெட்டி
சமிக்ஞைகள்


ஆலிவ் தளிர் ஏந்திய பறவையின் குரலில்
ஆர்க்மிடிசின் மகா நிர்வாணச் சொல்


தீபகற்பத்து சீசா மூக்கு டால்பின்
அல்சியோன் நாட்களுடன் வரும்
தசாப்தத்தின் பைனரி
விடியலில் !




***************


நாசிச திமிர்




திணை மாற்றும் தீபகர்ப்பப் புன்னகையில்
மஜ்ஜையில் பிரசவிக்கும்
மல்பெரிக் காடு.


நார்சிச வனம் மாற்றும்
நாசிசத் திமிர்.


மதுவில் மிகுந்த மரண 
யாத்திரை குளிகைகள்
மருகும் மெழுகின்
விழித் திரள்.


பிறை வளர்த்து ஆபிரகாமின்
பலி பீடத்துக்கு அனுப்பும்
டிராகன் நாக்கு


டி ஸ்கேல் மேஜரில்
ஒலிக்கும் பியானோவின்
கறுப்புக் கட்டைகள் தரும்
நெட்டி முறிப்பு


தகனத் துறை எலும்புகள்
நதிப் படுகை நரக நகர்வுகள்


இருள் திறவு ஈமச் சுடர்
களரி முன்னோட்டம்.


ஒளி முகை 
உரத்த பறவைகள்
பாடல் இரண்டும்
இணைந்திசை
குரல்வழி கடக்கும்
கோபுர பறவைகள். 




************


தோல் சாட்டைக்கு மறுத்திருக்கலாம்
நேற்று நாயாக்கி பார்த்த
பின் நவீனத்துவ
பெண்ணுடன்.


'கிகோலோ' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் இந்த வரி புரிந்தால் தலைப்பின் பொருள் புரியும். சமூகத்தில் இப்படி ஒரு சாதி/இனம்(சாதி என்று சொன்னால் அதன் வீரியம்  புரியும்  என்று நினைக்கிறேன்)இருப்பது மேல்தட்டு மக்களுக்கு தெரியும் என்பது என் புரிதல். 


*************


ஒரு ஸ்பெஷல் டச் இந்த வரிகள் !!




உள்ளங்கையை தின்னக் 
கொடுத்து விட்டு 
ரேகைகள் மீதம் வைத்திருக்கின்றன 
இலைகள் !          




'வாழ்வின் முடிவு பரியந்தம் தொடர வேண்டும் நண்பரின் எழுத்துலக பணி' என்ற பிராத்தனை, வேண்டுகோளுடன், மகாசமுத்திரத்தில் ஒரு துளியை ருசித்த மகிழ்வில் முடிக்கிறேன்.




பின் குறிப்பு 


இந்த பதிவு ஒரு கவிதை புத்தகத்தின் விமர்சனம் அல்லது பதிவர் அறிமுகம் அல்ல. விமர்சனம் செய்யகூடிய அளவிற்கு நான் இன்னும் கற்று கொள்ளவில்லை என்பதே உண்மை.  கவிதைகளின் மேல் எனக்கு இருக்கும் ஈடுபாடும்,இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திற்கு நேசமித்ரன் அவர்களின் இந்த புத்தகம் உதவியது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.


அவரை பற்றி பலருக்கும் நன்கு தெரியும், தெரியாதவர்களுக்காக அவரது தளத்தின் லிங்க் நேசமித்ரன் கவிதைகள்  


புதிய பதிவர்களுக்கு இவரது கவிதைகள் ஒரு இனிய அனுபவமாக இருக்கும். இயன்றால் இவரது தளம் சென்று அதை உணருங்கள். என்னை நனைத்த மழை நிச்சயம் உங்களையும் நனைக்கும்...வாழும் காலத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட கூடிய சாபம் பல தமிழ் ஆர்வலர்களுக்கு உண்டு. அதனால் தேடி கண்டுப் பிடித்து அவர்களை இன்னும் 'அதிகமாக எழுத' உற்சாக படுத்துவோம்.


தமிழும், தமிழனும் வளரவேண்டும்...சந்தோசமாக வாழவேண்டும்...!!    



பிரியங்களுடன் 
கௌசல்யா




சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் கழுகின் இன்றைய பார்வை...

சுயதொழில் தொடங்குவோம் வாருங்கள்....!!






போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...