வியாழன், செப்டம்பர் 30

கண்டனம் - எது விழிப்புணர்வு....??!!

பதிவுலகில் சில நேரம்  எந்த கட்டுரை எழுதினாலும் 'கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் எழுதலாமே' என்றும், ஒரு பதிவு பொதுவான விசயங்களை    பற்றிய சிந்தனையுடன் எழுதப்பட்டிருந்தால் 'நல்ல விழிப்புணர்வு பதிவு' என்றும் பின்னூட்டங்கள் வரும். விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தமும், புரிதலும் இல்லாமலேயே கருத்துக்கள்  சொல்வதை 'ஏன் சரி செய்து கொள்ள கூடாது...?'  என்பதே என் ஆதங்கம்.  குறிப்பாக இந்த கண்டனம் என்பது 'விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' என்று வாயளவில் சொல்பவர்களை நோக்கித்தான்.

விழிப்புணர்வு

தெரியாத அல்லது புரிந்து கொள்ளப்படாத ஒன்றை அறியாமலும், கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமலும் , பெற வேண்டிய உரிமைகளை பெற்று கொள்ளாமலும், தம்மை பற்றியே உணராமலும் இருப்பதில் இருந்து, தூக்கத்தில் இருந்து ஒருவரை விழித்தெழ வைப்பது போன்று தமது உணர்வுகளை விழித்தெழ வைப்பது தான் விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தம். ஒருவர் தனது பிரச்சனைகளில் இருந்து 'தானாகவே விழிப்புணர்வு அடையவும் முடியும்', மற்றவர்கள் மூலம் 'விழிப்புணர்வு'  ஏற்படுத்தவும் முடியும்.

ஒரு சில பதிவர்கள் அந்த மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவில் நல்ல பதிவுகளை எழுதி வருகின்றனர். ஆனால் அவை சரியாக பலரிடமும் சென்று சேருவது இல்லை. காரணம் என்னவென்றால் அங்கு சென்று யாரும் பார்ப்பதும் இல்லை , படிப்பதும் இல்லை, அப்படியே படித்தாலும் தங்களது கருத்துக்களை அங்கே பதிவு செய்வதும்  இல்லை, அதனை பற்றிய தங்களின் சந்தேகங்களையும், கேள்விகளை எழுப்புவதும்  இல்லை. அதை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கட்டுரை  எழுதுங்கள் என்று மட்டும் குரல் ஆங்காங்கே எழுப்பபடுகிறது. சொல்வதுடன் நிற்காமல் செயலில் இறங்கி இன்னும் பல நல்ல பதிவுகள் வர நாம் தூண்டுகோலாய் நாம் இருக்கலாமே இனியாவது......!!

உதாரணத்திற்கு  ஒன்றை இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

ஆண்,பெண் சம்பந்த பட்ட அந்தரங்க உறவுகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு இருக்கிறது என்றால் கருத்துகளை அங்கே பதிவு செய்ய பலரும் தயக்கம் காட்டுகின்றனர், தங்களின் பெயர் அங்கே இடம் பெறுவதை பலரும் விரும்புவது இல்லை. சமுதாய சீர்கேடு இன்றைய காலகட்டத்தில் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். திருமணம் முடித்தவர்களுக்குமே எத்தனை பேருக்கு இதனை பற்றிய முழு தெளிவு இருக்கிறது...??!

மேல்மட்ட மக்கள் இதற்காக counselling  என்ற பேரில் மருத்துவரை நாட தொடங்கிவிட்டார்கள். ஆனால் நடுத்தர, கீழ்மட்ட மக்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்கு எய்டஸ் என்பதை பற்றி கூட பெயரளவில் தான் தெரிகிறது. பள்ளிகூடங்களில் ' செக்ஸ் கல்வி '  அவசியம் என்ற குரல்கள் ஒலிக்க  தொடங்கியபோதிலும் அது வேண்டாம் என்று மறுக்கும் பெற்றோர்கள் தான் பெருமளவில் இருக்கிறார்கள். செக்ஸ் கல்வி என்பது வெறும் உறவை மட்டும் எடுத்து கூறுவது மட்டும் இல்லை, ஆண், பெண் உடல் அமைப்பு, டீன் ஏஜ் பருவம், தவறான தொடுதல்கள் என்ன, கருத்தடை பற்றியவை, மனித பாலியல் நடத்தைகள் அதில் இருந்து  மனரீதியான தெளிவு எப்படி பெறுவது என்பது போன்ற பல்வேறு வகை பற்றியும் சொல்லிகொடுப்பது ஆகும்.


நம்  பிள்ளைகள் இப்போது இருக்ககூடிய சமூக அமைப்பு பல தவறுகளின் தூண்டுதல்களை தான் கொடுக்கிறது, அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு இந்த கல்வி உதவும் ஆனால் நம்மிடம் தான் எதை பற்றியும் முறையான விழிப்புணர்வு இன்னும் வரலையே பின் எப்படி இது சாத்தியம்....??! சரி அது போகட்டும்....மற்றவர்களை விடுங்கள்.....


இப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்தை கையாளக்கூடிய நாம் முதலில் எப்படி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்தரங்கத்தை பற்றி அலசகூடிய பதிவு இருக்கிறது என்றால் படிப்பவர்கள் அதை எழுதியது யார் என்றுதான் முதலில் பார்கிறார்கள், எழுதியது ஒருவேளை பெண் என்றால் , அவர்  டாக்டர் என்றாலுமே கூட, உடனே ஒரு முக சுளிப்பு 'ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு இப்படி வெளிப்படையாக இதைச் சொல்கிறாரே'  என்ற வியப்பு.....ஏன் இந்த கண்ணோட்டம்.....?? இந்த உறவு என்பதே ஒரு பெண்ணை வைத்துத்தானே...... மேலும் திருமணம் முடிந்த ஒவ்வொரு பெண்ணுமே,  ஒரு ஆணால் உணரவே முடியாத தாய்மையையும், அதன் மூலமாக உடலுக்குள்ளும் , உடலுக்கு வெளியேயும்  நடக்க கூடிய மாற்றங்களையும் நன்கு உணர்ந்தவள் ஆகிறாள். அப்படிப்பட்ட ஒரு பெண் அந்தரங்கம் பற்றி எழுதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்....??  


(உதாரணதிற்கு ஒன்றை தான், இங்கே நான் குறிப்பிட்டேன்...இதை போல் பல விசயங்கள் உள்ளன விழிப்புணர்வை ஏற்படுத்த...அவற்றில் சில பதிவுகளை என் தளத்தில் இணைத்து இருக்கிறேன்...இன்னும் விடுபட்டவை நிறைய இருக்கிறது...தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும் )


யார் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய அளவில் பதிவு எழுதினாலும் ஆனா, பெண்ணா என்று பார்க்காமல் 'தேவையான நல்ல பதிவு' என்றால் உங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஏன் தயங்க வேண்டும் ??   நல்ல பதிவு எழுதினால் மட்டும் நல்ல பதிவர் என்று இருக்காமல் பிற நல்ல பதிவுகளையும் தேடிச் சென்று கருத்துகளை பதிவு செய்வதின் மூலம் நல்லதொரு விழிப்புணர்வை (மறைமுகமாக மட்டுமாவது) ஏற்படுத்த முடியும். அந்த பதிவை பற்றி வரும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். விஷயம் ஒன்றும் இல்லாத தளத்திற்கு  சென்று எவ்வளவோ நேரம் செலவழிக்கும் அதே நேரம்,  நல்ல பதிவிற்கும் கொஞ்ச  நேரத்தை  செலவு செய்யுங்கள். 

"சந்தேகம் வரும்போது கேள்வி கேட்பவன், அந்த நேரம் மட்டும் அறியாதவனாக  இருக்கிறான்,  கேள்வி கேட்காதவன்  வாழ்நாள் முழுவதும் அறிந்து கொள்ளாதவனாகவே போய்விடுகிறான்....?!!"      

வேண்டுகோள்

ஒரு நாட்டிற்கு பத்திரிகை, தொலைக்காட்சி, பிற மீடியாகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள்  வலைபூக்களை படித்துதான் தங்களுடைய தாய்நாட்டின் அன்றாட நிகழ்வுகளை  தெரிந்து கொள்கிறார்கள். இனி தொடரும் காலங்களில் பெரும்பாலோரின் பார்வையும் இணையத்தை குறிப்பாக வலைபூக்களை நோக்கித்தான் இருக்கும் என்பதே பலரின் அனுமானம். தொலைக்காட்சி, பேப்பரை பார்க்கும் நேரம் கூட இனி குறைந்து வலைபூக்களின் பக்கம்  வருகை அதிகரிக்கும்...அப்படிப்பட்ட ஒரு சிறந்த இடத்தில் இருக்கிற பதிவர்களாகிய நாம் நமது பார்வையை கொஞ்சம் சரி செய்து கொள்வோமே... 

பொழுது போக்கு என்று மட்டும் இல்லாமல் உண்மையில் ஏதாவது சமுதாய விழிப்புணர்வுடன்  எழுதுவோம் என்று இருப்பவர்களை நாம் கண்டிப்பாக தேடி கண்டுபிடித்து உற்சாக படுத்த வேண்டும். ரோட்டில் இறங்கித்தான் புரட்சி செய்ய வேண்டும் என்று இல்லை.. இந்த மாதிரி சிறிய அளவிலான நல்ல பதிவுகளை பற்றிய விழிப்புணர்வையாவது பலரிடம் கொண்டு போய் சேர்ப்போமே..... அதனால் தேவையற்ற வீண் விவாதங்களை விடுத்து நல்ல நேர்மையான கருத்துகளை விவாதித்து நம்மை நாம் சீர் படுத்திகொள்வோம். 

செய்வீர்களா...??!! 

ஒன்றை  மட்டும் நினைவில் வைத்து கொள்வோம்....

"படித்த பலரது பார்வையும், இப்போது பதிவுலகத்தை ஊன்றி கவனித்து கொண்டிருக்கிறது "

மற்றவர்கள் எப்படியோ  இருந்துவிட்டு போகட்டும்....ஆனால் படித்து, விவரம் தெரிந்த , அறிவியல் விந்தையான இணையத்தை  நுனி விரல்களில் கையாளுகிற நாம் ஏன் 'பத்தோடு பதினொன்னு' என்பது போல் இருக்கவேண்டும்....நல்ல தகவலை தேடி கண்டு பிடித்து வாழ்த்தும் முதல் குரலாக உங்கள் குரல் இருக்கட்டும்...


"பதிவுலகம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பல புரட்சிகர மாற்றங்கள் இங்கிருந்தே புறப்பட்டது என்று நாளைய உலகம் புகழட்டும் ...அதை ஓரமாக நின்று நம் வாரிசுகள் ரசிக்கட்டுமே .....!!"





இன்று வாசலில் 'போதிமரம்' 



புதன், செப்டம்பர் 22

நட்பை வளர்ப்போம்....!


அறிவியல் தொழில் நுட்பங்களால் நன்மைகள் பல. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.  அதில் இப்போது முக்கியமாக இருப்பது செல்போனும், இணையமும். இவற்றால்  உலகம் மிகவும் சுருங்கி விட்டதுதான். அதே நேரம் சிலரின்  கையால் தவறாக பயன்படுத்தபடுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.  பெண்கள் இதனை உணர்ந்து இருந்தும் சில நேரம் அவர்களையும் அறியாமல் தங்களுக்கு தாங்களே குழிகளை தோண்டி கொள்கிறார்கள்.

ஜெஸ்ஸி

'செக்ஸ்டிங்' என்ற ஒரு புதிய கலாசாரம் இப்போது பரவிக்கொண்டு  வருகிறது. காதலிக்கும்போது தன் காதலன்தானே என்று தன் நிர்வாணப்படங்களை அனுப்பி இருக்கிறார் ஜெஸ்ஸி லோகன் என்ற இளம் பெண். பின்னர் காதல் கசந்து இருவரும் பிரிந்த பிறகு செல்போனில் இருந்த தன் முன்னால் காதலியின் படத்தை அவன் பலருக்கும் அனுப்பி இருக்கிறான். அதை பார்த்தவர்களின் கேலி பார்வையை  காண  முடியாமல் தவித்து தற்கொலை செய்து கொண்டார் ஜெஸ்ஸி...?!! 

பத்திரிகை வரை வந்த விஷயம் இது.  ஆனால் வெளியில் தெரியாமல் மனதிற்குள் புழுங்கி கண்ணீர் விட்டு தவித்து கொண்டு இருப்பவர்கள் எத்தனையோ பெண்கள். பெண்களின் பலகீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள். யாரையும் நம்ப முடியாத இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுயமாக தங்களை பாதுக்காத்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 

நெருங்கிய நண்பனாகவோ , காதலனாகவோ இருந்தாலுமே கவனமுடன் தகவல்களை பரிமாறி கொள்வது  மிக அவசியம். சாதாரண மின்னஞ்சல், செல்போன் தகவல்கள் கூட பிரச்னையை கொண்டு வரலாம். நம்மை  சுற்றிலும் வம்புக்கு வலைவிரிப்பவர்கள் தான் அதிகம்  இருக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. 

போனில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தால் பேசுவதை உடனே நிறுத்தி விடுங்கள் . உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படலாம் அல்லது பதிவு செய்யப்படலாம்.


நட்பு 

நெருங்கி பழகிய நண்பர்கள் ஒரு கட்டத்தில் ஒரு சில காரணங்களால்  பிரிய நேரலாம். ஆனால் முன்பு பழகிய காலத்தில் நடந்த உரையாடல்களை (உதாரணமாக சாட்டிங், மெயில்)  வேறு பலருக்கும்  அதை அனுப்பி, பழைய நண்பரின் மனதை கொல்கிறார்கள் . இது எவ்வளவு பெரிய துரோகம், அநாகரீகம். நம்பிக்கை வைத்து கருத்துக்களை, சொந்த விசயங்களை பரிமாறிவிட்டு பின் பிரிந்த பின் அவரது சொந்த விசயங்களை பிறரிடம் சொல்லி கேலி பொருளாக்குவது மனவலியைக் கொடுக்கும்.  

மனித நேயம் என்பது கொஞ்சங் கொஞ்சமாக நம்மிடையே கரைந்து , மறைந்து வருகிறது. தூய்மையான அன்பு கொள்ளுங்கள். கருத்து விவாதம் செய்யுங்கள். தேவை இல்லாமல் பிறர் மன உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். 

 " நமக்கு யாரும் துரோகம் செய்தால் எப்படி தவித்து போவோம்? அதை நாம் அடுத்தவருக்கு செய்வது என்ன நியாயம்..??! " 

" நண்பனில் சிறந்தவன் என்று யாரும் இல்லை...நண்பன் என்றாலே சிறந்தவன் தான்....!! "

அத்தகைய நட்புக்கு ஒரு சிலர் ஏற்படுத்தும் கெட்ட பெயரால் நல்ல நண்பர்களுக்கும் அவ பெயர் ஏற்படுகிறது.




ஆச்சரியமான ஒரு தகவல் - காந்தி நியுரான்


சில நேரம் அடுத்தவர்களின் வேதனைகளை, வலிகளை காணும் போதோ அல்லது கேள்வி படும்போதோ நம்மையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால் நம்முடைய மூளையில் உள்ள 'எம்பதி நியுரான்கள்' தான். இந்த உணர்வு காந்தியடிகள் அவர்களுக்கு அதிகமாக இருந்ததால் தான் இந்த நியுரான்கள் ' காந்தி நியுரான்கள் ' என்றும் கூட அழைக்கப் படுகின்றனவாம்...!


" கருணையே வடிவானவர்களையே கூட காலம் ஒருநாள் அழைத்து சென்று கணக்கை முடித்து கொள்ளும். துடிக்கின்ற இதயம் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் நிற்கும்போது குடும்பத்துக்கு வெளியேயும்  கொஞ்ச பேரையாவது  மனதளவில் துடிக்கிற வைக்கிற மாதிரி, நல்லவர்களாக வாழ்ந்து வாழ்வை நிறைவு செய்து விட்டு போவோமே..!! "

"எல்லா உயிருக்கும் முடிந்தவரை நன்மையை மட்டுமே செய்வோம் ..!!"

நட்பை போற்றுவோம்....நட்பை வளர்ப்போம்.....

தொடர்ந்து வரும் அடுத்த பதிவு - கண்டனம்.

சனி, செப்டம்பர் 18

உறவு ஏன் மறுக்கப்படுகிறது ?! தாம்பத்தியம் பாகம் -18


உறவு ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது ?

கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும்  கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல  விவாகரத்துக்கு  இதுதான் அடிப்படைக்   காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.

இந்த உறவைப்  பொறுத்தவரை கணவன் விருப்பப்பட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்துப்  போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகிப் பாதிக்கப்பட்டவர்கள் பலர். பாதிப்பின் காரணமாக பார்க்கும் வேலையில் கவனச்சிதறல் ஏற்படும் . 

ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது.  "அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது, எப்பவும் அந்த நினைப்புதான்....?! பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க.  இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..?? என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு..." இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பலரிடமும்...!

ஏன் இதை ஒரு வேலையாகவோ, அசிங்கமாகவோ, அருவருப்பானதாகவோ  நினைக்க வேண்டும் ?? தினம் மூன்று வேளை உணவு என்பது உடம்பிற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த மாதிரி 'அளவான உடல் தொடர்பான உறவும் அவசியம் தான்'  என்பதைப்  புரிந்துக்  கொள்ளவேண்டும்.

ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை  மட்டுமே கொண்டவர்கள்  அல்ல. அதைவிட பல முக்கியப்  பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள். இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை அவர்களின் உடல் அமைப்பு எப்படி என்று பார்த்தோம் என்றால் 90 வயதானாலும் அவர்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும்.  அவர்களின் உடம்பில் அணுக்களின் சுரப்பு என்பது இருந்துக்  கொண்டே இருக்கும். இதன் எண்ணிக்கை வேண்டுமானால் நபருக்கு நபர் வேறுபடலாம். வயதிற்கு ஏற்ப மாதம் குறைந்தது 4 முறையாவது உறவு என்பது அவர்களுக்கு அவசியமாகிறது. 

கணவனின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு மனைவியும் புரிந்துக்  கொண்டு உறவுக்கானச்  சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கவனிக்கும் போதுதான் அந்த கணவனும் மன நிறைவுடன் புத்துணர்ச்சி அடைவான், நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். அதைப் போல் மனைவியின் விருப்பம் என்ன , சூழ்நிலை என்ன என்று கணவனும் புரிந்துக்  கொண்டு நடந்து கொண்டால் சம்சாரம் ஒரு சங்கீதம் தான்.

மறுப்பது எதனால் ??

சில நேரம் கணவனோ, மனைவியோ ஒருவருக்கு விருப்பம் இருந்து அதை மற்றொருவர் மறுக்க வேண்டிய நிலை  ஏற்படும்.  பொதுவாகப்  பார்த்தோம் என்றால் இது ஒரு சாதாரண விசயமாகத்  தோன்றலாம்...ஆனால் 'உறவு மறுத்தல்' என்பது உடனே கொல்லும்  விஷம் போன்றது. ( மனதை ) இதனால் ஏற்படும் கோபம் பயங்கர வெப்பமாக இருக்கும், நெருப்பைப்  போல் சுடும்.

ஒருநாள் உறவு மறுத்தலானது கூட கணவன், மனைவி உறவைக்  கெடுத்து விடுகிறது. தன்னைப்  பிடிக்கவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது , தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணி உள்ளுக்குள் மருகுகிறார்கள். நாளடைவில் மன அழுத்தம் அதிகமாகி தன்னை மறுத்தவர் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை வார்த்தைகளில் கொட்டுவார்கள். அவர்கள் செய்யும் சின்னச்  சின்ன தவறையும் பெரிதாக எண்ணி கூச்சலிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது தான் துணையின் மீதான சந்தேகம்...??!  தன்னைத்  தவிர்க்க காரணம் வேறு ஒருவரின் பால் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்குமோ என்பதில் வந்து நின்றுவிடுகிறது.

இப்படியாக நீண்டு கொண்டேச்  செல்லும் பிரச்சனை முதலில் வார்த்தையால் நோகடிப்பது, சண்டை, சில நேரம் கை நீட்டல் என்று போய்விடுகிறது.

காரணங்களும் விளக்கங்களும் 

*  உண்மையில் கணவனோ, மனைவியோ ஒருவர் உறவுக்கு அழைக்கும் போது இன்னொருவர் மறுப்பதற்கு 99 சதவீதம் செக்ஸ் காரணமாக இருப்பது இல்லை. அதாவது செக்ஸ் ஐ  மறுத்தாலும் காரணம் செக்ஸ் கிடையாது, இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுகளில் ஏற்பட்ட புரிந்துக் கொள்ளாமை தான் காரணம் .  தங்களது கோபத்தை இந்த நேரத்தில், இதில் தான் காட்டுவார்கள்.

*   அப்புறம் நேரம், உடல் சோர்வு, தூக்கம், உடல் நலக்   குறைவு இவையும் காரணமாக  இருக்கலாம்.

*    "இரண்டு பிள்ளைகள் ஆயிருச்சு, பிள்ளைகள் வேற வளர்ந்திட்டாங்க.இனிமே என்ன ?"
என்பது மாதிரியான சில மனைவிகளின் சலிப்பான பதில்கள், எண்ணங்கள்..!

விளக்கங்கள் சில

* மனைவி அல்லது கணவன் உறவைத்  தவிர்க்கிறார் என்றால் அவர் செக்சை தவிர்க்கிறாரே தவிர, உங்களையே தவிர்க்கிறார் என்று அர்த்தம் இல்லை !

*   மறுப்பதற்கு என்ன காரணம் என்பதைப்  பேசித்  தெளிவுப் படுத்திக்  கொள்ள வேண்டும். மறுப்பவர் காரணத்தைச்  சொல்லி விட வேண்டும்.

*  மறுப்பது சுலபம் ஆனால் அதனால் ஏற்படும் மனவலியை, மறுப்பவர்  புரிந்துக்  கொள்ள வேண்டும்.

*   ஒருவேளை உறவு கொள்வதில் ஏதும் பிரச்சனை இருந்து, அதன் காரணமாக தான் உறவை தவிர்ப்பதாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை சந்திப்பது உத்தமம். அலட்சியம் இந்த விசயத்தில் தயவுச்செய்து வேண்டாம்.

" பல ஆண்களுக்கு அவர்களின் சுய மதிப்பீடு என்பது சம்பாதிக்கும் திறனையும், செக்ஸ் ஆற்றலையும் சார்ந்தே உள்ளது. இதில் எதைக் காயப்படுத்தினாலும் வெறுத்துப்  போய் விடுவார்கள் "

இதை பெண்கள் கொஞ்சம் புரிஞ்சிக்  கொள்ளனும்.

மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாகப்  போக்கிவிடும்.

எந்த விதத்தில் எல்லாம்  கணவனும்  , மனைவியும் தங்களது நெருக்கத்தை அதிகரித்துக்  கொள்ளலாம் என்பதைப்  பற்றி அடுத்த பதிவில் பார்போம்.

தாம்பத்தியம் தொடர் தொடரும்.....

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

வியாழன், செப்டம்பர் 16

கல்யாண நினைவுகள்

இனிய அனுபவம் 

நானும் என் கணவரும் சந்தித்த அந்த நாளையும் அதன்பின் நாங்கள் திருமணம் மூலம் ஒன்று சேர்ந்த அந்த நாளும் இன்று வரை பசுமையாய் நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் ஒன்று நாங்கள் இருவரும் கணவன், மனைவியாய் மாறவே  இல்லை என்பதுதான் ஒரு வருத்தம் வேற எப்படிங்க சொல்றது, காதலர்களாய் இன்னும் காதலித்தே முடியவில்லை. ( காதலில் சலிப்பு வந்தால் அப்புறம் மெதுவாய் தம்பதிகளாய் மாறி கொள்ளலாம்...நான் சொல்றது சரிதானே...?!)

தற்செயலாக நடந்த சம்பவம் ஒன்று, வாழ்நாள் முழுவதும் தொடரும் இனிய அனுபவமாக அமைவது மிகவும் அபூர்வம்.  ஆனால் என் வாழ்வில் அந்த அதிசயம் நடந்தது .  அந்நினைவுகளை இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்வது மற்றொரு   சிறந்த நினைவாக  இருக்கும் என்று நினைக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என் பெற்றோருடன்  சென்னையில் இருந்து எங்கள் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கு வந்திருந்தோம். விசேஷம்  முடிந்து கிளம்பும் நேரம்,  எங்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் அருகில் ஒரு ஊரில் பெரிய தொழிலதிபர் குடும்பம் இருப்பதாவும் 'மிகவும் வயதான அவர்கள் உங்களை சந்திக்கணும் என்று அடிக்கடி சொல்வார்கள், காரில் தானே வந்து இருக்கிறீர்கள், ஊருக்கு போற வழியில் அப்படியே அவர்களை பார்த்து விட்டு போகலாம்'  என்று பலவாறு  சொல்லி எங்களை வற்புறுத்தி அழைத்தார். என் பெற்றோரும் சரி வயதானவர்கள் தானே சென்று பார்த்து விட்டு போகலாம் என்று முடிவு செய்ததால்  கிளம்பினோம். 

கிராமத்து பசுமையான வயல்களை கடந்து அந்த ஊரை அடைந்தோம். அவர்களும் மிக அன்பாக எங்களை வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்றனர். (நாங்கள் வருவது  முன்பே எப்படி தெரிந்தது என்ற யோசனையுடன் உள்ளே சென்றோம்) அங்கிருந்த வயதானவர்களை எங்கள் உடன் வந்த உறவினர் இவங்க உனக்கு தாத்தா,  பாட்டி வேணும்  என்று கூறி அறிமுக படுத்தினார். என்  அப்பா வழி சொந்தமாம்...இந்த விவரமே என் அப்பாவிற்கு அங்கு சென்றபின் தான் தெரிந்தது.( வேலை நிமித்தமாக சென்னையில் செட்டில் ஆனதால் சொந்தகாரர்கள் யார் என்றே தெரியாமல் தான் போய் விடுகிறது ) அந்த பாட்டி என் அப்பாவிற்கு அத்தை முறையாம்...! 

நானும் மரியாதையுடன் ஒரு வணக்கம் போட்டு விட்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்தேன்... அமர்ந்த பின் தான் கவனித்தேன் என்னை சுற்றி கிட்டத்தட்ட 10  பேர்க்கு மேல் இருந்தனர்...??! எல்லோரின் பார்வையும் என்மேல் தான்..நானும் 'என்னடா இப்படி பர்ர்கிறாங்க' என்று லேசாக எட்டி பார்த்த கோபத்தை கட்டு படுத்தி கொண்டு சும்மா சிரித்து வைத்தேன். திடீரென்று  எல்லோரிடமும் ஒரு சின்ன பரபரப்பு..! வாட்டசாட்டமாக  தாதா மாதிரி ஒருவர் உள்ளே வந்து எனக்கு எதிர் சோபாவில் அமர்ந்தார். என்னை பார்த்து லேசா சிரித்து என் பேரை கேட்டார்...நானும் இவர் யார் என்ற யோசனையுடன் கொஞ்சம் தயக்கத்துடன் (பயத்துடன்...! ) 'கௌசல்யா' என்றேன். அதுவே அதிகம் என்று எண்ணினாரோ என்னவோ எழுந்து சென்று விட்டார். 

கொஞ்ச நேரம் சென்றதும் என் அம்மா என்னை தனியே அழைத்து அந்த பையனை பார்த்தியா, "அவர்தான் மாப்பிளை...எல்லோருக்கும் உன்னை பிடித்து விட்டது. உன் முடிவை கேட்கிறார்கள்" ,என்று ஒரு குண்டை அசால்டாக தூக்கி போட்டாங்க. " ஐயோ  கடவுளே ! என்னமா இது இந்த மாதிரி எந்த ஊரிலும் நடக்குமா...? தயவு செய்து சரின்னு சொல்லிடாதிங்க. எனக்கு இந்த கூட்டத்தை பார்த்தாலே என்னவோ போல் இருக்கு அதுவும்  அவர பார்த்தா தாதா மாதிரி...நாட்டில வேற ஆளா இல்லை ...!?" அப்படி இப்படின்னு ஒரே கத்து கத்திட்டேன். நல்லவேளை என் புத்தி தெரிஞ்சதால அம்மா எல்லோரையும் விட்டு தள்ளி தனியா போய் கேட்டதால பரவாயில்லை.  'எங்களுக்கும் இங்கு வந்த பிறகு தான்மா  தெரிகிறது' என்று சொல்லி என்னை சமாதானம் செய்த பின்னர் அவர்களிடம், 'ஊரில் போய் எங்கள் பசங்களிடமும் பேசிட்டு சொல்கிறோம் ' என்று ஒரு வழியா சமாளிச்சு சொல்லிட்டு கிளம்பினோம்.  

எங்கள வழி அனுப்புறேன் பேர்வழி என்று நான் இருந்த பக்கம் வந்து கார் கதவை அடைத்தார் பாருங்க (வேற யாரு, தாதா தான் ) அப்படியே ஆடி போயிட்டேன்.  

வண்டியில் ஏறியதும்  முதல் வேலையா எங்களை அழைத்து சென்ற உறவினரை முறைத்தேன் ஆனா  அவர் கொஞ்சமும் அசரவே இல்லை !? எங்களை இங்கு அழைத்து வருவது அவரது ஒரு வார ஏற்பாடாம். ( என்னவொரு வில்லத்தனம்...??! ) 

ஊர் சென்றதும் இந்த விஷயத்தை அப்படியே மறந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து அம்மா மெதுவாய் பேச்சு எடுத்தார், "என்னமா செய்யபோற, உன் முடிவு என்ன" என்று . நான் 'என்ன சொல்ல கொஞ்ச நாள் போகட்டும்'  என்று சொல்லி சமாளிக்க பார்த்தேன். அம்மா விடவில்லை அந்த பையனின் அப்பா உடல்நிலை மோசமாக இருப்பதால் சீக்கிரம் கடைசி பையனின் கல்யாணத்தை பார்க்க  நினைக்கிறாராம். ( அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்...? ) சரி வேற எப்படி தப்பிக்கலாம் என்று ஒரு நாள் முழுதும் யோசித்து கடைசியாக  என் உடன் பிறந்த அண்ணனை போய் பார்த்து விட்டு வர சொல்லுவோம் , கண்டிப்பா அவனுக்கும்  பிடிக்காது. நாம சாதித்து விடலாம் (ரொம்ப புத்திசாலிதனமா திட்டம் போட்டதா பெருமை வேறு பட்டுக்கொண்டேன்)   என்று முடிவு பண்ணி அம்மாவை  அழைத்தேன், " அம்மா அண்ணனை போய் பார்த்து விட்டு வர சொல்லுங்க, அவனுக்கு ஓ.கேனா ? எனக்கும் ஓ.கே தான்  " என்றேன் ரொம்ப தெம்பாக.  அவனும் தன்னுடன் இரண்டு நண்பர்களையும் அழைத்து கொண்டு கிளம்பினான். 

சந்தோசமாக  அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தேன்....சென்றவன் திரும்பினான்...மனதிற்குள் எல்லா கடவுளையும் வேண்டி கொண்டு அவன் பதிலுக்காய் அவனையே பார்த்து கொண்டிருந்தேன். ஒரே வார்த்தைதான் என் அன்பு அண்ணன் சொன்னான், "ரொம்ப நல்லவரா தெரிகிறார், இவரை மிஸ் பண்ணிடாத"   அடபாவி கவுத்துட்டீயே டா.... (மனதிற்குள்தான் )  

அப்புறம் என்ன அவன் சம்மதமே என் சம்மதமாக எடுத்து கொள்ளப்பட்டு (அப்படிதானே அக்ரீமென்ட் ) வேகமாக திருமண வேலைகள் நடக்க ஆரம்பித்தன. பத்திரிக்கையும் அடித்து வந்து சேர்ந்தது....அம்மா 'மாடல் நல்லா இருக்கா ?" என்று என்னிடம் ஒன்றை கொடுத்தார். பார்த்ததும் அப்படியே நொறுங்கி போயிட்டேன்....?! திருமணம் நடக்க கூடிய இடம் என்பதில்  St.Pauls Church  என்று இருக்கிறது. 'முருகா இது என்னப்பா இப்படி ஒரு சோதனை' என்று அம்மாவை பார்க்க இதில் என்னமா இருக்கிறது அவங்க வேதகாரங்க தான், அவங்க முறைபடி தானே  கல்யாணம் நடக்கணும். ( என் அம்மாவிற்கு கிறிஸ்டியன்ஸ் என்றால் கொஞ்சம் பிடிக்கும், ஏன்னா அவங்க படிச்சது கிறிஸ்டியன் கான்வென்ட்) ஆனா நான் அப்படி இல்லையே எப்பவும் மனதிற்குள் 'முருகா, முருகா' என்று தானே சொல்லிட்டே இருப்பேன்.  இனி அப்படி சொல்ல முடியாதே. எனக்கு இந்த மஞ்சள் கயிறு, 'மாங்கல்யம் தந்துனானே' மந்திரம்  இது தான் கல்யாணம் என்ற நினைப்பிலேயே இருந்திட்டேனே அதிலும் மண் விழுந்துவிட்டதே....?!!    

என்னை சுத்தி எதுவோ நடக்கிறது என்று மட்டும் நல்லா தெரியுது.  ஆனா சத்தியத்துக்கு கட்டு பட்ட மாதிரி நானும் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டே இருந்திருக்கிறேன். இப்படியாங்க சோதனை மேல் சோதனையா  வரும். 

அடுத்து இரண்டு நாளில் மறுபடியும் என் பொறுமையை சோதிக்க ஒரு வேலை வந்தது. "கல்யாணத்திற்கு முன் ஞானஸ்தானம் கொடுக்க வேண்டும் அதனால் பெண்ணை அழைத்து கொண்டு வாருங்கள்" என்று போன் வந்தது. ம்... என் கையில் எதுவும் இல்லை என்று நன்றாக தெரிந்து விட்டது..நடப்பது நடக்கட்டும் என்று என் அம்மா , அண்ணன் தம்பியருடன் சென்னையில் இருந்து கிளம்பினோம். கல்யாணத்திற்கு  இன்னும் இரண்டு நாள் தான் இருப்பதால் அப்பா  மற்ற வேலைகளை முடித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று எங்களுடன் வரவில்லை. 

நாங்கள் வருவதற்கு  முன்பே  அவர்கள் சர்ச்சில் காத்திருந்தனர். என்னை உள்ளே அழைத்து சென்றனர்...பலி ஆடு மாதிரி நானும் என்ன நடக்க போகிறது என்றே தெரியாமல் தரையை பார்த்து கொண்டே பின் சென்றேன்...!!? 

அப்போது அக்கா ஒருத்தர் என் அருகில் வந்து என் மெதுவாக, ' கௌசல்யா உன் நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்துவிடு ' என்றார்....? அதை கேட்டதுமே கண்கள்  நீரை சொரிய தயாராகி  விட்டன.... பின்னர்  ரிஜிஸ்டர் ஒன்றில் என்னை பற்றிய விவரங்களை கேட்டு எழுதிக்கொண்டு என்னை கையெழுத்திட  சொன்னார்கள்...அது முடிந்ததும் பாதிரியார் அருகில் சென்று  அவர் முன்னால் நின்றேன், சில வாசகங்களை வாசித்து என்னையும் தொடர்ந்து சொல்ல சொன்னார், நானும் சொல்லிக்கொண்டே வந்தேன்...அதில் முக்கியமாக  ஒரு வரி வரும், 'இன்று முதல் இயேசுவை உன் இரட்சகராய் (ஆண்டவராய்) ஏற்று கொள்வாயா  என்று ?? அதற்கு நான் 'ஆம்' என்று பதில் சொல்ல வேண்டும். 

மற்ற எல்லா சத்தியங்களுக்கும்  ஆம் என்று உடனே சொல்ல முடிந்த என்னால் இதற்கு சிறிது தயங்கினேன்...பின் மனதை தேற்றி கொண்டு முருகனையும் மனதில் நினைத்து கொண்டு மெதுவாய் 'ஆம்' என்றேன். பின் புனித நீரை என் மேல் தெளித்தார் பாதிரியார்.அந்த நீருடன் மெதுவாய் என் கண்ணீரும் இறங்கியதை யாரும் கவனிக்கவில்லை. 

அங்கு முழங்கால் போட்டு நின்ற என் தலைமேல் கை வைத்து பாதிரியார் ஜெபம்  பண்ணினார்.. முடிந்ததும் என் பக்கமாக ஒரு கை நீண்டது அதில் பணம் இருந்தது, என்னை தன்னுடையவளாக மாற்றி கொண்டிருக்கும் அவரது கரம் தான் அது...! 'இந்த காணிக்கையை பாதிரியாரிடம் கொடு' என்ற மெல்லிய குரல் வந்ததும் முழங்காலில் இருந்த நான் மெதுவாய் மேல் நோக்கி பார்த்து பணத்தை வாங்கினேன்.    வேறு ஒரு ஆடவனிடம் கை நீட்டுகிறோம் என்பதையும்  மறந்து ஒரு உணர்வு 'இவன் தான் உனக்கானவன்' என்று உள்ளே  ஒரு குரல். ஏசுநாதரையும் எனக்கானவரையும் ஒன்றாக மனதால் நான் ஏற்று கொண்ட அந்த ஒரு தருணத்தை இன்று நினைக்கும் போதும் உணர்ச்சி பெருக்கால் கண் கலங்குகிறது. ஆண்டவன் சன்னதியில் வைத்து என் மனதில் குடியேறியவர் நிரந்தரமாக அதிரடியாக  அமரவைக்கவேண்டிய சந்தர்ப்பம்  ஒன்றும் இதன் தொடர்ச்சியாக நடந்தது.     

இந்த இனிய நினைவுகள் இன்னும்  தொடரும்....

சிறு குறிப்பு.

அந்த இனிய கல்யாண நாள் இன்று தான். பதினான்கு வருடங்களை இனிமையாக முடித்து பதினைந்தாவது வருடத்தில் இன்று அடி எடுத்து வைத்து இருக்கிறோம்.

செவ்வாய், செப்டம்பர் 14

தாம்பத்தியம் 17 - எதிலும் அவசரம் எங்கு போய் முடியும் ?!





முதல் நாள் இரவில் புதுமண தம்பதியினர்  எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும்.  அன்றுதான் உறவு நடக்கணுமா....?  ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்ட பின் நடப்பதே பெரும்பாலும் சரியாக இருக்கும் என்று இதற்கு முந்தைய பதிவில் பகிர்ந்தேன்.  ஆனால் ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்திருந்தால் அதன் பின் விளைவுகள் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்ககூடியதாக தான் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியவில்லை.

இன்றைய திருமண முறை

நம்முடைய இந்த திருமண முறை  இன்னும் எவ்வளவு காலம் நடைமுறை வழக்கத்தில் இருக்கும் என்ற  நம்பிக்கை இல்லை. ஒரு பெண் எதிர்பார்க்கும் உடல், மனம் , அறிவு சார்ந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்குரிய ஆண் அவளுக்கு திருமணத்தின் மூலம் தேவைபடுகிறது. ஆனால் இப்படி பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்க கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்குமா என்பது  சந்தேகமே. அந்த காலத்தில் ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. பெற்றோர் விரும்பிய துணையுடன் மணம்  புரிந்தார்கள், உடல் கலந்தார்கள், மனம் ஒருமித்து வாழ முயற்சித்தார்கள் . ஆனால் இப்போது அதே சமூக எண்ணம் தான் இருக்கிறது, ஆனால் தலைமுறையினர் மாறிவிட்டனர். 

தெரிந்த உறவினரின் மகனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு  தான் வெகு விமரிசையாக நடந்தேறியது.  திருமணமும் 10 நாளில் பெண் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் கல்யாணம் என்று குறுகிய காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள்...நல்ல வேலையிலும் இருப்பவர்கள்...இருவரின் முழு சம்மதத்தின்  படி  தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது...

ஒரே மகன் என்பதால் திருமணம்  தொடர்பான பத்திரிகை அடிப்பது, உறவினர்களுக்கு கொடுப்பது, மண்டபம் பேசி முடித்தது உள்பட அனைத்து வேலைகளையும் மணமகன் தான் இழுத்து போட்டு பார்த்தார். திருமணம் முடிந்த அன்று மறுவீடு சடங்கு எல்லாம் முடிந்து மணமக்கள் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது.  பின்னர் இருவரும் தனியறைக்கு அனுப்பப்பட்டனர்.....

ஆனால் காலையில் மணப்பெண் கோபமாக அறையில் இருந்து வெளியில் வந்தாள், பலரும் காரணம் கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல், 'எனக்கு பையனை பிடிக்கவில்லை...அவன் ஆம்பளையே இல்லை ' ,என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அவளது பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது என் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி ஆக வேண்டியதை பாருங்கள்' என்று ஒரே போடாய் போட்டு விட்டாள்.

முந்தினநாள் இரவு அப்படி என்னதான் நடந்தது என்றால், ஏற்கனவே மணமகன் கல்யாண வேலையாலும், பிரயாண களைப்பினாலும் சோர்ந்து இருந்திருக்கிறார்...நேரமும் அதிகமாகி விட்டதால், பெண்ணிடம் தனக்கு களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும் என்று கூறி விட்டு இவள் பதிலுக்கும் கூட காத்து இருக்காமல் தூங்கிவிட்டார். ஆவலுடன் அந்த இரவை எதிர்பார்த்து இருந்த மணமகள் வெறுத்து போய் இருக்கிறாள். இதுதான் நடந்தது  

இப்போது நாலு மாதம் ஆகிறது விஷயம் கோர்ட்டு படி ஏறி...??!

(இந்த விசயத்திற்கு குறை சொல்ல பெண்தான் கிடைத்தாளா என்று நினைக்காதீர்கள். பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய பெண்களே இப்படி புரிந்துகொள்ளாமல் நடக்கிறார்கள் என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ) 

எதிலும் அவசரம்...எங்குதான் போய் முடியும் ...??

குழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே  படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது , வேலை தேடுவது என்று எதிலும் அவசரம்...உணவிலும் கூட பாஸ்ட் புட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்....??!  

சீக்கிரமே அனைத்திலும் தம் பிள்ளைகள் வல்லவர்களாக மாறிவிட வேண்டும் என்கிற பெற்றோர்களின் ஆவலுடன் இணைந்த அவசரம்....!!  எதிர்பார்ப்புகள் விரைவாக நிறைவேறனும் என்ற இன்றைய தலைமுறையினரின்  கட்டுக்கடங்காத வேகம் கடைசியில் 'ஆயிரம் காலத்து பயிர்' என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வந்த கல்யாணமும் விரைவாகவே முற்றும் போட கூடிய அளவில்  வந்து நின்றுவிட்டது. 

நான் சொன்ன இந்த உதாரணம் போல் பல இருக்கலாம். ஆனால் அவற்றில் பல  இன்னும் செய்திதாள்கள், பத்திரிகைகள் வரை வரவில்லை, விரைவில் வரக்கூடிய அளவில் தான் விசயத்தின் தீவிரம் இருக்கிறது. 

ஒரே நாளில் எப்படித்தான் ஒரு முடிவுக்கு சுலபமாக வரமுடிகிறது என்றே புரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து மட்டும் பார்த்தோம் என்றால் அந்த காலம் மாதிரி இருட்டு அறையில் நடப்பதை முதலில் கவனிப்போம், அப்புறம்  மெதுவாக ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்றே முடிவுக்கு வரலாம் என்பது போல் இருக்கிறது அல்லவா..??

பெண்களில் சிலர் இந்த மாதிரி நிதானமாக நடந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரபடுவதாலும் தான் ஆரம்பமே அலங்கோலமாகி  விடுகிறது.  இன்னும் பல காலம் சேர்ந்து தான் இருக்க போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்.....?!

திருமணம் எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்து கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10 , 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும்...இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போது தான் அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்  இருப்பதை உணரமுடியும்.      

தாம்பத்தியத்தின் ஆயுட்காலம் 

ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை உறவு நீடிக்கிறது என்று கேட்டால் 70 வயது வரை என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.  அந்த காலத்தில் தாம்பத்திய உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதர்க்கான ஒரே வழி என்று இருந்தது. அவர்களை பொருத்தவரைக்கும் இது 'இருட்டறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வு' மட்டுமே. 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மிக அவசியமாகிறது. "உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்" என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.    

"வேலை பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் எதையும் தங்களது அறைக்குள் நுழையவிடாமல் வாழ்க்கை துணையை அன்பாக நடத்தியும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்திற்குள் காரணமான 'கார்டிசால்' என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரக்கிறது. இந்த கெட்ட ஹார்மோன் சுரப்பதை கட்டுபடுத்துவது 'ஆக்சிடோசின்' என்ற ஹார்மோன் தான். இந்த ஆக்சிடோசின் கணவன், மனைவி உடல் உறவின் போதே அதிக அளவில் சுரக்கிறது என்பது  அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்த்ததாகவும்' ஆய்வுகள்  கூறுகின்றன.

இந்த மாதிரியான விசயத்தில் ஒரு சிலர் காட்டும் அலட்சியம், குடும்பத்தை எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை எண்ணும்போது தான் இந்த உறவின் அவசியத்தை தம்பதியினருக்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது.

தாம்பத்தியம் தொடரில்  இனி அடுத்து வருவது......

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இந்த உறவிற்கு விரும்பி அழைக்கும் போது மற்றவர் மறுப்பது என்பது இன்று பெரும்பாலோரிடம் சாதாரணமாக காணபடுகிறது. அப்படி 'உறவு மறுத்தல்' என்பதால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதையும் , அதனை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதையும் அடுத்த பதிவில் பார்போம்.      



வியாழன், செப்டம்பர் 2

அவசர உலகில் நம் குழந்தைகள் - தொடர்ச்சி


இளம் பெற்றோரின் நிலை  

இதுவரை இருந்த தலைமுறையினருக்கு இல்லாத கஷ்டங்கள் இப்போதுள்ள இளைய  தலைமுறையினருக்கு உள்ளது. ஒன்று நல்லதா, கெட்டதா என்று பிரித்து சொல்ல கூட்டுக்குடும்பம் இல்லை.  பெரியோர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் சில நேரம் தடுமாறி விடுகின்றனர் .  

தங்கள் வரவேற்பறையில் வந்து விழுபவை எத்தகையவை என்பதை தரம் பிரிக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.  தங்களை சுற்றி கலர் கலராய் நல்லதும், கெட்டதும் வலம் வரும்போது, அதையும் தாண்டி ஒழுக்கத்துடனும், முறையுடனும் வாழ்வது என்பது சவாலான விசயம்தான். அந்த சவாலை வெற்றிகரமாக பல இளம் தம்பதியினரும் சமாளித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்.

இதே மாதிரியான சூழ்நிலையில் தங்களது குழந்தைகளை வளர்ப்பது என்பது அதைவிட மிகவும் கடினமான சவால்தான்.

பெண்களும் இப்போது வேலைக்கு செல்வதால், தன் வீட்டு வேலை, பணியின் சுமை , வேலை நேரத்தில் தங்கள் சகாக்களுடன் ஏற்படும் உறவு, உரசல், விரிசல் இதனால் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல், உடல் சோர்வு போன்றவற்றையும் மீறி குழந்தைகளை கவனித்து வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

குழந்தைகளின் எதிர்பார்ப்புகள்

குழந்தையின் வளமான வாழ்க்கைக்கு மிக முக்கியமான அடித்தளமே குழந்தைக்கும்,  அதன் பெற்றோருக்கும் இடையிலான உறவுதான் தீர்மானிக்கிறது.

*  எல்லா குழந்தைகளுமே தங்கள் பெற்றோரிடம் அன்பு, அரவணைப்பு, உணர்வு ரீதியான பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்ப்பார்கிறது. அது ஏமாற்றத்தில் முடியும்போது  தான் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. 

*  தங்களின்  பெற்றோர்கள் தங்களுடைய சிறு சிறு விருப்பங்களையும் நிறைவேற்ற   வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே நேரத்தில் அதை காதுகொடுத்து கேட்கவாவது செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

* தங்களின் சிறு செயல்களையும் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். அது விளையாட்டாகவோ, படிப்பு மற்றும் எந்த விசயமாக இருந்தாலும் சிறு அங்கீகாரத்தை எதிர்பார்கிறார்கள் நம் பிள்ளைகள்.

*  தங்களின் ரோல் மாடலாக ஆண் குழந்தை தந்தையையும், பெண் குழந்தை தன் தாயையும் கொண்டு வளருகிறார்கள் . சிறந்த பெற்றோராய் தங்கள் பெற்றோரும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு.

கிரச் (குழந்தைகள் காப்பகம்)

வேலைக்கு செல்லும் பெற்றோர் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கிரச்சில்  விட்டு செல்கின்றனர். வார  இறுதியில் மட்டுமே தன் தாயுடன் முழு பொழுதையும் கழிக்கிறார்கள். தாயின் அன்பையும் அரவணைப்பையும் சிறு பிராயத்தில் இழந்து விடுவதால் அவர்கள் கண்களில் ஒரு ஏக்கம் நிரந்தரமாக தங்கி விடுகிறது. 

இதைவிட வீட்டு பெரியவர்களிடம் விட்டு செல்லப்படும் குழந்தைகள் நல்ல அன்பான கவனிப்பில் வளருகிறார்கள். ஆனால் பல வீடுகளில் பெரியோர்கள் இல்லாத நிலைதான் நிலவுகிறது. தங்கள் குழந்தைகளின் நன்மையை கருதியாவது பெரியோர்களை வீட்டில் இருக்க செய்வது அல்லது அவர்களுடன் இணைந்து வாழ்வது வேலைக்கு செல்லும் இளம் பெற்றோருக்கு நன்மையாக இருக்கும்.

சில ஆலோசனைகள்

*  உங்கள் விருப்பங்கள், கனவுகளை அவர்களின் மீது திணிக்காதீர்கள். LKG  படிக்கும் போதே டாக்டர் ஆகவேண்டும், இன்ஜீனியர் ஆகவேண்டும் என்பது போன்ற கனவுகளை விதைக்காதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். வளர வளரத்தான் தான் என்னவாக  வேண்டும், எத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பிடிபடும். அதை விடுத்து ஒன்றை மட்டுமே நாம் சொல்லி வளர்க்கும் போது பிற துறைகளில் அவர்களின் கவனம் செல்வது தடுக்கப்படுகிறது. அவர்களின் தனித்தன்மையும் பாதிக்கப்பட்டு, உங்களின் கனவும் நிறைவேறாமல் தடுமாறி போக கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். 

*  வாய்ப்புகளை மட்டும் நீங்கள் ஏற்படுத்தி கொடுங்கள்....இன்றைய குழந்தைகள் மிக புத்திசாலிகள் சாதிப்பார்கள்....அவர்களுக்கு  போடப்பட்ட கனவு கைகட்டுகளை அவிழ்த்து விடுங்கள்.  தன் வாழ்கையை தாங்களே நிர்ணயிக்க கூடிய உரிமையை வளரும் பிள்ளைகளுக்கு கொடுங்கள், அதற்கு தேவையான உதவிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள்.

*   முக்கியமாக ஒரு குழந்தையை ஓயாமல் விளையாட கூட விடாமல் படி படி என்று வற்புறுத்தும் போது அந்த பிள்ளை இப்படித்தான் பதில் சொல்லும், " படிக்கச்சொல்லி வற்புறுத்தி உட்கார வைத்தாலும் நான் மனம் வைத்து முயன்றால் தானே படிக்க முடியும். இப்ப கொஞ்சம் நேரம் விளையாடனும் போல் இருக்கிறது, விளையாடிவிட்டு வந்தால் ரிலாக்சாக  பீல் பண்ணுவேன். அப்புறம் படித்தால் மனதில் நன்கு பதியும். SO LET ME GO  TO PLAY "  இதுதான் நம் எல்லோருக்குமான பதில். நாம் தலை கீழாய் நின்றாலும் படிக்க வேண்டியது அவர்கள்தானே....நிதர்சனம் இதுவே...!! 

அதிக கண்டிப்பு இப்போது வேலைக்கு ஆகாது. ரொம்ப கண்டித்தால் 'சரிதான் போங்கள்' என்று அசால்டாக போய்ட்டே இருப்பார்கள்.


வழி முறைகள்

பெரிதாக ஒன்றும் இல்லை ஒரே ஒரு திட்டமிடல் மட்டுமே போதும் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கு.  தினம் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யுங்கள் என்னதான் வேலை , பிசி என்றாலும் தினம் கொஞ்ச நேரம் அவர்களுடன் மனம் விட்டு பேசி சிரித்து பாருங்கள் உங்களின் அன்றைய மொத்த டென்ஷனும் பறந்து போகும். குழந்தைகளும் உற்சாகமாக  பள்ளியில் நடந்த விசயங்கள் அனைத்தையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் கிடைக்கக்கூடிய பெரிய நன்மை என்னவென்றால் அவர்களின் நடவடிக்கைகள் நல்லவை , கெட்டவை  இரண்டையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த தனிப்பட்ட நேரத்தில் சில நற்பண்புகளையும் அவர்கள் மனதில் சுலபமாக விதைத்து விட முடியும்

" சரியான திட்டமிடுதலும், முன் யோசனையும் மட்டும் இருந்தால் போதும் வேலையையும் இழக்காமல் , உங்கள் குழந்தைகளையும் நன்கு கவனித்து வெற்றிகரமாக வாழ்க்கையில் பேலன்ஸ்   பண்ண முடியும் " 

" நேரத்தை கொஞ்சம் அவர்களுக்காகவும்   கொடுங்கள்,  நம் குழந்தைகள் தானே சந்தோசமாக  இருந்துவிட்டு போகட்டுமே ".


   

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...