வியாழன், செப்டம்பர் 30

7:33 AM
70

பதிவுலகில் சில நேரம்  எந்த கட்டுரை எழுதினாலும் 'கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் எழுதலாமே' என்றும், ஒரு பதிவு பொதுவான விசயங்களை    பற்றிய சிந்தனையுடன் எழுதப்பட்டிருந்தால் 'நல்ல விழிப்புணர்வு பதிவு' என்றும் பின்னூட்டங்கள் வரும். விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தமும், புரிதலும் இல்லாமலேயே கருத்துக்கள்  சொல்வதை 'ஏன் சரி செய்து கொள்ள கூடாது...?'  என்பதே என் ஆதங்கம்.  குறிப்பாக இந்த கண்டனம் என்பது 'விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' என்று வாயளவில் சொல்பவர்களை நோக்கித்தான்.

விழிப்புணர்வு

தெரியாத அல்லது புரிந்து கொள்ளப்படாத ஒன்றை அறியாமலும், கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமலும் , பெற வேண்டிய உரிமைகளை பெற்று கொள்ளாமலும், தம்மை பற்றியே உணராமலும் இருப்பதில் இருந்து, தூக்கத்தில் இருந்து ஒருவரை விழித்தெழ வைப்பது போன்று தமது உணர்வுகளை விழித்தெழ வைப்பது தான் விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தம். ஒருவர் தனது பிரச்சனைகளில் இருந்து 'தானாகவே விழிப்புணர்வு அடையவும் முடியும்', மற்றவர்கள் மூலம் 'விழிப்புணர்வு'  ஏற்படுத்தவும் முடியும்.

ஒரு சில பதிவர்கள் அந்த மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவில் நல்ல பதிவுகளை எழுதி வருகின்றனர். ஆனால் அவை சரியாக பலரிடமும் சென்று சேருவது இல்லை. காரணம் என்னவென்றால் அங்கு சென்று யாரும் பார்ப்பதும் இல்லை , படிப்பதும் இல்லை, அப்படியே படித்தாலும் தங்களது கருத்துக்களை அங்கே பதிவு செய்வதும்  இல்லை, அதனை பற்றிய தங்களின் சந்தேகங்களையும், கேள்விகளை எழுப்புவதும்  இல்லை. அதை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கட்டுரை  எழுதுங்கள் என்று மட்டும் குரல் ஆங்காங்கே எழுப்பபடுகிறது. சொல்வதுடன் நிற்காமல் செயலில் இறங்கி இன்னும் பல நல்ல பதிவுகள் வர நாம் தூண்டுகோலாய் நாம் இருக்கலாமே இனியாவது......!!

உதாரணத்திற்கு  ஒன்றை இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

ஆண்,பெண் சம்பந்த பட்ட அந்தரங்க உறவுகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு இருக்கிறது என்றால் கருத்துகளை அங்கே பதிவு செய்ய பலரும் தயக்கம் காட்டுகின்றனர், தங்களின் பெயர் அங்கே இடம் பெறுவதை பலரும் விரும்புவது இல்லை. சமுதாய சீர்கேடு இன்றைய காலகட்டத்தில் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். திருமணம் முடித்தவர்களுக்குமே எத்தனை பேருக்கு இதனை பற்றிய முழு தெளிவு இருக்கிறது...??!

மேல்மட்ட மக்கள் இதற்காக counselling  என்ற பேரில் மருத்துவரை நாட தொடங்கிவிட்டார்கள். ஆனால் நடுத்தர, கீழ்மட்ட மக்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்கு எய்டஸ் என்பதை பற்றி கூட பெயரளவில் தான் தெரிகிறது. பள்ளிகூடங்களில் ' செக்ஸ் கல்வி '  அவசியம் என்ற குரல்கள் ஒலிக்க  தொடங்கியபோதிலும் அது வேண்டாம் என்று மறுக்கும் பெற்றோர்கள் தான் பெருமளவில் இருக்கிறார்கள். செக்ஸ் கல்வி என்பது வெறும் உறவை மட்டும் எடுத்து கூறுவது மட்டும் இல்லை, ஆண், பெண் உடல் அமைப்பு, டீன் ஏஜ் பருவம், தவறான தொடுதல்கள் என்ன, கருத்தடை பற்றியவை, மனித பாலியல் நடத்தைகள் அதில் இருந்து  மனரீதியான தெளிவு எப்படி பெறுவது என்பது போன்ற பல்வேறு வகை பற்றியும் சொல்லிகொடுப்பது ஆகும்.


நம்  பிள்ளைகள் இப்போது இருக்ககூடிய சமூக அமைப்பு பல தவறுகளின் தூண்டுதல்களை தான் கொடுக்கிறது, அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு இந்த கல்வி உதவும் ஆனால் நம்மிடம் தான் எதை பற்றியும் முறையான விழிப்புணர்வு இன்னும் வரலையே பின் எப்படி இது சாத்தியம்....??! சரி அது போகட்டும்....மற்றவர்களை விடுங்கள்.....


இப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்தை கையாளக்கூடிய நாம் முதலில் எப்படி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்தரங்கத்தை பற்றி அலசகூடிய பதிவு இருக்கிறது என்றால் படிப்பவர்கள் அதை எழுதியது யார் என்றுதான் முதலில் பார்கிறார்கள், எழுதியது ஒருவேளை பெண் என்றால் , அவர்  டாக்டர் என்றாலுமே கூட, உடனே ஒரு முக சுளிப்பு 'ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு இப்படி வெளிப்படையாக இதைச் சொல்கிறாரே'  என்ற வியப்பு.....ஏன் இந்த கண்ணோட்டம்.....?? இந்த உறவு என்பதே ஒரு பெண்ணை வைத்துத்தானே...... மேலும் திருமணம் முடிந்த ஒவ்வொரு பெண்ணுமே,  ஒரு ஆணால் உணரவே முடியாத தாய்மையையும், அதன் மூலமாக உடலுக்குள்ளும் , உடலுக்கு வெளியேயும்  நடக்க கூடிய மாற்றங்களையும் நன்கு உணர்ந்தவள் ஆகிறாள். அப்படிப்பட்ட ஒரு பெண் அந்தரங்கம் பற்றி எழுதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்....??  


(உதாரணதிற்கு ஒன்றை தான், இங்கே நான் குறிப்பிட்டேன்...இதை போல் பல விசயங்கள் உள்ளன விழிப்புணர்வை ஏற்படுத்த...அவற்றில் சில பதிவுகளை என் தளத்தில் இணைத்து இருக்கிறேன்...இன்னும் விடுபட்டவை நிறைய இருக்கிறது...தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும் )


யார் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய அளவில் பதிவு எழுதினாலும் ஆனா, பெண்ணா என்று பார்க்காமல் 'தேவையான நல்ல பதிவு' என்றால் உங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஏன் தயங்க வேண்டும் ??   நல்ல பதிவு எழுதினால் மட்டும் நல்ல பதிவர் என்று இருக்காமல் பிற நல்ல பதிவுகளையும் தேடிச் சென்று கருத்துகளை பதிவு செய்வதின் மூலம் நல்லதொரு விழிப்புணர்வை (மறைமுகமாக மட்டுமாவது) ஏற்படுத்த முடியும். அந்த பதிவை பற்றி வரும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். விஷயம் ஒன்றும் இல்லாத தளத்திற்கு  சென்று எவ்வளவோ நேரம் செலவழிக்கும் அதே நேரம்,  நல்ல பதிவிற்கும் கொஞ்ச  நேரத்தை  செலவு செய்யுங்கள். 

"சந்தேகம் வரும்போது கேள்வி கேட்பவன், அந்த நேரம் மட்டும் அறியாதவனாக  இருக்கிறான்,  கேள்வி கேட்காதவன்  வாழ்நாள் முழுவதும் அறிந்து கொள்ளாதவனாகவே போய்விடுகிறான்....?!!"      

வேண்டுகோள்

ஒரு நாட்டிற்கு பத்திரிகை, தொலைக்காட்சி, பிற மீடியாகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள்  வலைபூக்களை படித்துதான் தங்களுடைய தாய்நாட்டின் அன்றாட நிகழ்வுகளை  தெரிந்து கொள்கிறார்கள். இனி தொடரும் காலங்களில் பெரும்பாலோரின் பார்வையும் இணையத்தை குறிப்பாக வலைபூக்களை நோக்கித்தான் இருக்கும் என்பதே பலரின் அனுமானம். தொலைக்காட்சி, பேப்பரை பார்க்கும் நேரம் கூட இனி குறைந்து வலைபூக்களின் பக்கம்  வருகை அதிகரிக்கும்...அப்படிப்பட்ட ஒரு சிறந்த இடத்தில் இருக்கிற பதிவர்களாகிய நாம் நமது பார்வையை கொஞ்சம் சரி செய்து கொள்வோமே... 

பொழுது போக்கு என்று மட்டும் இல்லாமல் உண்மையில் ஏதாவது சமுதாய விழிப்புணர்வுடன்  எழுதுவோம் என்று இருப்பவர்களை நாம் கண்டிப்பாக தேடி கண்டுபிடித்து உற்சாக படுத்த வேண்டும். ரோட்டில் இறங்கித்தான் புரட்சி செய்ய வேண்டும் என்று இல்லை.. இந்த மாதிரி சிறிய அளவிலான நல்ல பதிவுகளை பற்றிய விழிப்புணர்வையாவது பலரிடம் கொண்டு போய் சேர்ப்போமே..... அதனால் தேவையற்ற வீண் விவாதங்களை விடுத்து நல்ல நேர்மையான கருத்துகளை விவாதித்து நம்மை நாம் சீர் படுத்திகொள்வோம். 

செய்வீர்களா...??!! 

ஒன்றை  மட்டும் நினைவில் வைத்து கொள்வோம்....

"படித்த பலரது பார்வையும், இப்போது பதிவுலகத்தை ஊன்றி கவனித்து கொண்டிருக்கிறது "

மற்றவர்கள் எப்படியோ  இருந்துவிட்டு போகட்டும்....ஆனால் படித்து, விவரம் தெரிந்த , அறிவியல் விந்தையான இணையத்தை  நுனி விரல்களில் கையாளுகிற நாம் ஏன் 'பத்தோடு பதினொன்னு' என்பது போல் இருக்கவேண்டும்....நல்ல தகவலை தேடி கண்டு பிடித்து வாழ்த்தும் முதல் குரலாக உங்கள் குரல் இருக்கட்டும்...


"பதிவுலகம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பல புரட்சிகர மாற்றங்கள் இங்கிருந்தே புறப்பட்டது என்று நாளைய உலகம் புகழட்டும் ...அதை ஓரமாக நின்று நம் வாரிசுகள் ரசிக்கட்டுமே .....!!"





இன்று வாசலில் 'போதிமரம்' 



Tweet

70 கருத்துகள்:

  1. உண்மைதான். மொக்கை பதிவுகளுக்கு சென்று கும்மி அடிக்கின்ற சமயம் நல்ல பதிவுகளுக்கும் வரவேற்ப்பு கொடுக்க வேண்டும். எழுதியவர் யாராக இருந்தாலும் அதற்க்கு பின்னூட்டம் இட்டும் ஓட்டலித்தும் ஊக்கப் படுத்த வேண்டியது நமது கடமை

    பதிலளிநீக்கு
  2. விழிப்புணர்வு பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் அடுத்த பதிவு போட வேண்டும் என்ற எண்ணம வரும்

    பதிலளிநீக்கு
  3. \\நல்ல தகவலை தேடி கண்டு பிடித்து வாழ்த்தும் முதல் குரலாக உங்கள் குரல் இருக்கட்டும்...\\

    மனமார வாழ்த்துகிறேன்..
    நிகழ்காலத்தில் சிவா

    பதிலளிநீக்கு
  4. செக்ஸ் கல்வி என்பது வெறும் உறவை மட்டும் எடுத்து கூறுவது மட்டும் இல்லை,//

    சரியாக சொல்லியிருக்கீங்க தோழி! செக்ஸ் கல்வி என்பது பயப்படுவதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் சொன்னதுப் போன்று எல்லா விஷயங்களையும் ஆராய்வது தானே செக்ஸ் கல்வி. அருமையான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  5. தவறினை சுட்டிக் காட்டச் சொன்னீர்கள். அந்த உரிமையுடன்...

    Assault - என்பது ஆங்கிலத்தில் தாக்குதல் என்று அர்த்தம். ஆனால் தமிழில் அது Carelessness என்றுப் புரிந்துக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இந்த தவறு ஏன் நடக்க வேண்டும். நாம் திருந்திக்கொள்ளலாமே.

    சரி செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன்...

    பதிலளிநீக்கு
  6. பதிவுலகைப் பற்றிப் பெருமை பேசும்போதெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பதிவுலகம் சாராத நண்பர்கள் இப்போது என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. தற்போது நடக்கும் எதுவும் எனக்குச் சம்மதமில்லை. நல்ல பதிவுகளுக்கு ஆதரவு இல்லையென்றால் பதிவுலகம் வெறுமையை நோக்கிச் செல்கிறது என்று புரிந்து கொள்ளலாம். உங்களுடயது அவசியமான இடுகை.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  7. "சந்தேகம் வரும்போது கேள்வி கேட்பவன், அந்த நேரம் மட்டும் அறியாதவனாக இருக்கிறான், கேள்வி கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் அறிந்து கொள்ளாதவனாகவே போய்விடுகிறான்....?!!"//

    நல்ல பதிவு அக்கா...மேலே உள்ள வரிகள் எனக்கு பிடித்தமானவைகள்....

    பதிலளிநீக்கு
  8. சரியாக எழுதி உள்ளீர்கள், நானும் எனக்கு தெரிந்த வரையில் எழுதிக் கொண்டு உள்ளேன். நன்றி

    பதிலளிநீக்கு
  9. தனிப்பதிவில போடணும்னு நினைச்சேன்... நீங்க கட்டுரை எழுதியிருக்கதால இங்கயே சொல்லிடுறேன்.

    15 நண்பர்கள் இருந்தா... இன்ட்லில பிரபலமாகுது

    8 நண்பர்கள் இருந்தா... தமிழ்மணத்துல பிரபலம் ஆகுது.

    இந்த முறையில் எனக்கு கொஞ்சம் உடன்பாடு இல்லை. ஏன்னா 100 பேர கூட்டு சேத்துக்க நேரம் இருக்குற ஒருத்தர்......30 பேருக்கு பின்னூட்டம் போடுற ஒருத்தர்.....பதிவு பிரபலமாகிறது ரொம்ப சுலபம். எழுத்தின் தன்மை என்பது இங்கே... யாரு பாக்குறா? குவாலிட்டிய ஜட்ஜ் பண்றது எது?

    ஊடக தர்மம் இந்த திரட்டிகளின் கொள்கைகளால் (ஆரம்பத்தில் உதவியிருக்கலாம் இப்போ நீர்த்து போச்சு) நிறைய கூட்டம் சேர்க்க முடியாத நல்லா எழுத்தாளர்களை மறைமுகமாக அடையாளம் காணா பணியை செய்ததாகிறது.

    கோபத்தின் உச்சம் சொல்கிறது.... ஜன நாயக இந்தியாவில் இது சகஜம் என்று...ஜீரணிக்க முடியாத ஒன்று..! இன்னும் சொல்லப்போனால்.. வலைப்பூக்கள் எல்லாம் நிஜத்தில் வலைப்பூக்களின் மூலம் எழுத்த்னை நிறுவவில்லை...எனப்து நிதர்சனமான உண்மை....!

    ஆதங்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்..!

    பதிலளிநீக்கு
  10. ///பதிவுலகம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பல புரட்சிகர மாற்றங்கள் இங்கிருந்தே புறப்பட்டது என்று நாளைய உலகம் புகழட்டும் ...அதை ஓரமாக நின்று நம் வாரிசுகள் ரசிக்கட்டுமே .....!!"
    ////


    உண்மைதான் தான் அக்கா. எத்தனையோ தேவையில்லாத ( மொக்கை ) பதிவுகள் பார்க்கும் போது பதிவு என்பது ஒருவருடை கண்ணோட்டம் அப்படி என்று என்ன தோனுகிறது.

    நீங்கள் சொல்லுவது போல் இப்போது பதிவு உலகத்தில் அதிகமான மக்கள் திரும்பி பார்க்கின்றனர். அது உண்மையில் பயனுல்லதாக இருக்க வேண்டும் என்று 100% உண்மை.

    இதனை படித்தாவது ஒருசிலர் தன்னை மாத்திக் கொண்டால நல்லது தான்.

    உங்களி ஆரோகியமனா ஆதங்கத்துக்கும், எங்களின் சிந்தனைகளை தூண்டிய வார்த்தைக்கும் மிக்க நன்றிக்கா.

    பதிலளிநீக்கு
  11. LK said...
    உண்மைதான். மொக்கை பதிவுகளுக்கு சென்று கும்மி அடிக்கின்ற சமயம் நல்ல பதிவுகளுக்கும் வரவேற்ப்பு கொடுக்க வேண்டும். /////

    @@@LK
    மொக்கை பதிவு என்று நீங்கள் எதை சொல்றீங்க

    பதிலளிநீக்கு
  12. சௌந்தர் எத்தனையோ நல்ல பதிவுகள் யாரும் ஓட்டளிக்காமல், கமென்ட் போடமால் தூங்கிக் கொண்டு இருக்கிறது. பதிவுலகிலும் கூட்டம் சேர்ந்தால்தான் ஓட்டுகள் வருகிறது, பின்னூட்டங்கள் வருகிறது. ஏன் ஆரம்பத்தில் நான் எழுதிய ஒரு சில நல்ல பதிவுகளுக்கே அதிகம் பின்னூட்டம் வந்தது இல்லை. நாம் நண்பர்களுடன் சேர்ந்து கும்மி அடிப்பதை நல்ல பதிவுகளுக்கு ஆதரளிப்பதிலும் காமிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  13. சும்மா படிச்சேன்னு இதுக்கு கெமெண்ட் போட்டுட்டு போகமுடியாதுங்க. சுய பரிசோதனை வேண்டும். பதிவுலகத்துல எனக்கு அறிமுகமானப்போ நல்ல பதிவுகள்னு என் மனசுக்கு பட்டுச்சு நிச்சயமா கமெண்டும், கருத்துரையும் போடுவேன். ஆனா பதிவு எழுத ஆரம்பிச்சப்பின்னாடி நல்ல எழுத்துக்களை தேடிப்படிக்கின்ற பழக்கம் குறைந்து விட்டது. நேரமின்மையும் ஒரு காரணம். என்னளவுல நான் யோசிக்கின்ற பொழுது நானும் ஒரு சராசரிப்பதிவராதான் இருக்கேன். கமெண்ட் போட்டவங்களும் சரி போடப்போகின்றவங்களும் சரி தன் விரல்களை தன்னை நோக்கி வச்சுக்கிட்டு யோசிக்கனும். இது எனக்கும் தான்.

    பதிலளிநீக்கு
  14. உங்கள் கூற்று உண்மையே...
    நல்ல பதிவுகளுக்கு உரிய மரியாதையை கொடுக்கலாம். நல்ல பதிவுகளை நாமும் பதிவிடலாம்.

    பதிலளிநீக்கு
  15. பதிவு போட்டவுடன் வந்தேன்,ரைட் சைடில் ஒற்றை ஒற்றை எழுத்தா வந்தது,வாசிக்க முடியலை,இப்ப சரியாகிடுச்சு,ஆதங்கமான அலசல் .என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் கேட்ட ஒரு மொக்கைப் பதிவிற்கு உதாரணம்

    http://rasikan-soundarapandian.blogspot.com/2010/09/blog-post_29.html

    போட்ட ஒரு நாளில் நாப்பது ஓட்டுகள்

    http://parentsclub08.blogspot.com/2010/09/blog-post_28.html

    இதோ இந்தப் பதிவு தடுப்பூசி பற்றியது. அது வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. பின்னூட்டம் வேண்டாம், குறைந்தபட்சம் ஒரு ஓட்டாவது போடலாம் அல்லவா ???

    பதிலளிநீக்கு
  17. தேவா கருத்துக்களுக்கு அப்படியே உடன்படுகிறேன். ஒரு செய்தியும் இல்லாத் பதிவு 40 ஓட்டுளுக்கு மேல், நல்ல பதிவு 15 ஓட்டை தாண்டுவது இல்லை... கொடுமை

    பதிலளிநீக்கு
  18. மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.
    நன்றி.
    வலைப்பூக்களின் பொறுப்புப் பற்றி நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. padiththen,nanum ithu patri ezhuthavendum. neram kidaikkaamal alaikiren. paarkalaam. vazhthukkal.

    பதிலளிநீக்கு
  20. யாருக்கோ சொல்வது போலான பதிவு.அருமை கௌசி.

    பதிலளிநீக்கு
  21. @ Lk
    //போட்ட ஒரு நாளில் நாப்பது ஓட்டுகள் //
    பாஸ், எவ்வளவு நல்ல படமா இருந்தாலும் மார்கெட் பண்ணலைனா flop தான். ஏன்? கேவலமா படத்துக்குலாம் சன் டீவி முதல் ரேங்க் கொடுக்கற்து இல்லையா?

    நீங்க சொன்ன பிளாக் இருக்கறதே இப்போதான் எனக்கு தெரியும்

    பதிலளிநீக்கு
  22. நல்ல பதிவு எல்லோரும் வந்து படிக்க வேண்டிய பதிவு .............
    ரொம்ப நன்றி உங்கள் பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  23. எனக்கு ஒரு சின்ன suggestion ...........
    உங்கள் ப்ளாக் முகவரி தந்தது சௌந்தர் தான் .
    FOR LK
    எல்லோரும் நல்ல பதிவு எழுத வேண்டும் என்று எண்ணுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.முதலில் பிரபலம் அக வேண்டும் அதற்க்கு சில ஜாலி ஆன பதிவுகளும் தேவை அதை தான் சௌந்தர் போட்டுள்ளார் அதுவுமில்லாமல் நல்ல பதிவு நிறைய போட்டிருக்கிறார் .ஒரு பதிவை மட்டும் மேற்கோள்காட்டி இந்த பதிவு மாதிரி என்று கூறியது வருத்தமாக உள்ளது .
    சத்தியமாக இதை எழுதும் பொது மனது கஷ்டமாக இருக்கிறது .பாராட்டுங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை
    என்றால் ஒன்றும் கூறாதீர்கள் நீங்கள் vote போட வேண்டாம் கமெண்ட்ஸ் உம போட வேண்டாம் .ரொம்ப நெருங்கிய நண்பராக இருந்தாலும் இன்னைக்கி ஆணி என்று கூறி விட்டு போய்விடுங்கள் .அதனால் தப்பில்லை .

    ஆனால் ஒரு பதிவை பத்தி குறை கூறும் பொது .அவர் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள்.என்ன வெல்லாம் கனவு கண்டு இருப்பார் .அதுவும் என்னை மாதிரி உள்ளவர்கள் தமிழ் சரியாகவே எழுத தெரியாது ஆனால் இப்பொழுது பரவாஇல்லை ஓரளவு நன்றாக எழதுகிறேன் .சௌந்தர், அருண் ,terror ,ரமேஷ்,வெங்கட்
    இப்படி நண்பர்கள் chat ல வந்து இன்னும் கொஞ்சம் யோசித்தீர்கள் என்றால் நல்ல எழுதலாம் அப்படி ஐடியா கொடுக்கும் பொழுது சந்தோசமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. உரத்த சிந்தனை .
    வரவேற்கிறேன் .
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  25. @பாபு
    யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. அவர் உதாரணம் கேட்டார் அதற்குதான் சொன்னேன்.

    நானும் மொக்கைப் பதிவுகள் எழுதி உள்ளேன். இல்லை என்று சொல்லவில்லை. அதே சமயம் நல்ல பதிவுகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என்றே சொல்கிறேன்.

    உங்களுக்கு மட்டுமல்ல எனக்கு அவரும் நண்பர்தான்.

    பதிலளிநீக்கு
  26. பதிவுலகத்திற்கு படிக்க வருகிறவர்கள் பொதுவாக தெரிந்து கொள்வதற்காக வருவதில்லை. பொழுதுபோக்ககாத்தான் வருகிறார்கள். இன்றே உறுதியாக சொல்கிறேன் இன்றும் நாளையும் முழ்க்க முழுக்க ரோபோ பற்றிய திரை விமர்சனங்கள்தான் வரும். அவைதான் முன்னிலை பதிவாக இருக்கும்.
    சீரியசான பதிவுகளையும் வெற்றி பெற வைப்பது பதிவர்களின் கையில்தான் இருக்கிறது. காரணம் தமிழீஷில் பிரபலமான இடத்திற்கு வருவதற்கு குறைந்தது 20 ஓட்டுக்கள் இப்போதெல்லாம் தேவைப்படுகிறது. எப்படி வருவது.

    தமிழீஷ் போன்ற தளங்கள் இது போன்ற பொறுப்பான கட்டுரைகளுக்கு குறைந்த ஓட்டுக்களிலேயே பிரபலமானவை பதிவுகளுக்கு உயர்த்தலாம். காரணம் பிரபலமானவையாகும் போது இன்னும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இல்லையென்றால் அவை குப்பையில் கிடக்கும் பொக்கிஷமாக அப்படியே கிடக்கும். அதைவிட மிக முக்கியம் அந்த பதிவை எழுதிய ஒரு பொறுப்பான பதிவரின் தன்னம்பிக்கையை உடைக்கும்.

    இன்னோரு மிக முக்கியமான ஒரு விஷயம்,.. சீரியசான பதிவுகளையும் வெற்றிப்பதிவாக கொண்டு வருவது எழுதும் பதிவர்களின் தான் இருக்கிறது. இன்னும் சிறந்த கட்டுரைகள் நல்ல வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.ஆனால் துரதிர்ஷ்டவிதமாக சில புதிய பதிவர்கள் சிறப்பாக எழுதினாலும் இந்த லிஸ்டில் வருவதில்லை,..அது எப்படிவெளியே கொண்டுவருவது என யாராலும் நல்ல யோசனை தரலாம்,.

    பதிலளிநீக்கு
  27. //யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. அவர் உதாரணம் கேட்டார் அதற்குதான் சொன்னேன்.

    நானும் மொக்கைப் பதிவுகள் எழுதி உள்ளேன். இல்லை என்று சொல்லவில்லை. அதே சமயம் நல்ல பதிவுகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என்றே சொல்கிறேன்.

    உங்களுக்கு மட்டுமல்ல எனக்கு அவரும் நண்பர்தான்.//

    உங்களுக்கும் அவர் நண்பர்தான்னு சொல்லிட்டீங்க. ஓக்கே. நீங்களும் மொக்கைப்பதிவு எழுதுனதையும் ஒத்துக்கிட்டீங்க. அப்ப உங்க பதிவையே அதுக்கு உதாரணமா கொடுத்திருக்கலாமே. ஏன் இன்னோர்தரோட பதிவ கொடுத்தீங்க. அது ஒரு மொக்கை பதிவுதான்னு நீங்க சொல்லித்தான் தெரியனும்னு இல்லையே. அத படிச்சு வொட் போட்ட(எனக்கும்) எல்லோருக்குமே தெரியும்.

    பதிலளிநீக்கு
  28. பொதுவான விசயங்கள் பற்றிய விவாதத்தில் குறிப்பிட்ட சில வலைப்பக்கங்களை குறிப்பிடாது இருத்தல் நலம்.

    செளந்தரோட அந்த போஸ்ட் நானும் வோட் பண்ணினேன்... கமெண்ட் போட்டு இருக்கேன்...ஏன்னா அது பொழுது போக்கு அம்சம்.....

    மொக்கை என்பது.....முற்றிலும் எந்த பயனும் இல்லாதிருப்பது....

    நகைச்சுவை என்பது.... சிரிக்க வைப்பது...

    நகைச்சுவை மொக்கையாகது.

    இங்க மொக்கை என்ற வார்த்தை உபயோகம் தவறு... வாசிப்பவர்களுக்கு பொழுது போக்கு தரும்படியான எழுத்தாக பார்த்துக் கொள்ளல் நலம்... ! மற்றபடி போரடிக்காம படிக்கிறவங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற எழுத்துக்கள் எப்போதும் வரவேற்க படவேண்டியவை...

    பதிலளிநீக்கு
  29. ஒற்றை ஆளாக் நின்று காற்றில் கத்தி சுழ்ற்றும் வித்தை தெரிந்தால் மட்டும் போதாது சுற்றி நின்று கும்மியடிக்க் ஒரு கும்பல் வேண்டும்

    பதிலளிநீக்கு
  30. இன்று மாலையில் இடுகை வாசித்ததிலிருந்தே பின்னூட்டம் போடுவதா வேண்டாமா என்று ஒரு தயக்கம். காரணம், யதார்த்தவாதி பொதுஜன விரோதி என்ற பழமொழி நினைவுக்கு வந்தது தான்!

    வலைப்பதிவு நடத்த வருகிறவர்கள் அனைவரும் மேதாவிகளும் அல்லர்; வாசிக்க வருகிறவர்களும் இடுகைகளை வாசித்துத்தான் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களும் அல்லர். என் போன்றவர்கள் தங்கள் பொழுதுபோக்குக்காகவும், நண்பர்களின் மனமகிழ்ச்சிக்காகவும் வலைப்பதிவு நடத்துகிறார்கள்.

    தமிழ்மணம், இண்டெலி ஓட்டுக்கள் பற்றி நிறைய இடுகைகளில் பேசியாயிற்று. தமிழ்மணம் நட்சத்திரமாகவே ஆனாலும் என்ன ஆகி விடப்போகிறது? The proof of the pudding is in the eating!

    உங்களுக்குப் பிடித்த இடுகைகளை எழுதுங்கள்; வாசியுங்கள்! பிடிக்காதவற்றை மொக்கை என்று சொல்ல உங்களுக்கு இருக்கிற அதே உரிமை, சீரியசான இடுகைகளை குடைச்சல் என்று சொல்லி ஒதுங்குகிறவர்களுக்கும் இருக்கிறது.

    ரசனைகள் மாறுபடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்ச்சி, கண்டனம் என்பவை எல்லாம் சற்றுக் கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பது என் கருத்து!

    சீரியஸான இடுகைகளைப் படிக்காமல் இருப்பதும், அதை எழுதுபவர்களை உற்சாகப்படுத்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்; அதைக் குறை சொல்லாதீர்கள்!

    பதிலளிநீக்கு
  31. @@@lk

    http://lksthoughts.blogspot.com/2010/08/blog-post_06.html

    அண்ணே இந்த மொக்க பதிவுக்கு நான் போட்டா மொக்க பதிவு பரவாயில்லை

    பதிலளிநீக்கு
  32. விழிப்புணர்வுங்கற பேர்ல ஒரு புரட்சியையே உண்டு பண்ணிட்டீங்க..

    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  33. சிறு விளக்கம்:

    எனது கண்டனம் என்ற பதிவு எதற்காக என்பதின் பொருள் திசை மாறி பயணித்து விட்டது என்று நினைக்கிறேன்.

    //இந்த கண்டனம் என்பது 'விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' என்று வாயளவில் சொல்பவர்களை நோக்கித்தான்.//


    //விஷயம் ஒன்றும் இல்லாத தளத்திற்கு சென்று எவ்வளவோ நேரம் செலவழிக்கும் அதே நேரம், நல்ல பதிவிற்கும் கொஞ்ச நேரத்தை செலவு செய்யுங்கள்.//

    மொத்த பதிவின் சாராம்சமே இவைகளை குறித்து தான்.

    பொதுவாக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று சொல்லும் முன் அதன் அர்த்தத்தை சரியாக தெரிந்து கொண்டு பேசுங்கள் என்பது தான்.

    'விஷயம் இல்லாத தளம்' என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேனே தவிர நகைசுவை தளம் என்றோ மொக்கை பதிவுகள் என்றோ குறிப்பிடவில்லை. உண்மையில் எல்லோராலும் நகைசுவையாக எழுத இயலாது. அது ஒரு கொடுப்பினை. அந்த மாதிரி எழுதுபவர்களின் மேல் எனக்கு லேசாக பொறாமை கூட உண்டு, என்னால் அப்படி எழுத இயலாதே என்பதால்.....?! நகைச்சுவை என்பது வாழ்வில் மிக அவசியம்...பலரையும் மனம் விட்டு சிரிக்க வைக்கும் படி எழுதும் பதிவர்கள் உண்மையில் போற்றப்பட கூடியவர்கள். அதை குறை சொல்லும் அளவிற்கு மாறுபாடான மனம் எனக்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  34. LK ...

    உங்கள் கருத்து சரியாக இருந்தாலும் தனி மனிதனை விடுத்து பொதுவாக பேசி இருக்கலாம், நலமாக இருந்திருக்கும். நகைசுவை எங்கிருந்தாலும் ரசிக்கப்பட கூடிய ஒன்று தான். அந்த தளங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை...முக்கியத்துவம் இல்லாத பதிவிற்கு கொடுக்கும் நேரத்தில், கொஞ்ச நேரத்தை பிற நல்ல பதிவிற்கும் கொடுக்கலாமே என்று 'வேண்டுகோள்' தான் வைத்து இருக்கிறேன். மற்றபடி படிப்பதும் படிக்காததும் அவரவர் விருப்பம்.

    @@LK said...

    ///நாம் நண்பர்களுடன் சேர்ந்து கும்மி அடிப்பதை நல்ல பதிவுகளுக்கு ஆதரளிப்பதிலும் காமிக்க வேண்டும்///

    உங்களின் இந்த கருத்து மிக சரியான புரிதல் கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  35. சௌந்தர் said...

    //விழிப்புணர்வு பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் அடுத்த பதிவு போட வேண்டும் என்ற எண்ணம வரும்//

    அது என்னவோ உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  36. நிகழ்காலத்தில்... said...

    //மனமார வாழ்த்துகிறேன்..
    நிகழ்காலத்தில் சிவா//

    உங்களின் முதல் வருகைக்கும் மனம் திறந்த வாழ்த்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. என்னது நானு யாரா? said...

    //சரியாக சொல்லியிருக்கீங்க தோழி! செக்ஸ் கல்வி என்பது பயப்படுவதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் சொன்னதுப் போன்று எல்லா விஷயங்களையும் ஆராய்வது தானே செக்ஸ் கல்வி. அருமையான சிந்தனை.//

    சரியாக புரிந்து கொண்டதிற்கு நன்றிங்க...

    //Assault - என்பது ஆங்கிலத்தில் தாக்குதல் என்று அர்த்தம். ஆனால் தமிழில் அது Carelessness என்றுப் புரிந்துக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இந்த தவறு ஏன் நடக்க வேண்டும். நாம் திருந்திக்கொள்ளலாமே.
    சரி செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன்...//

    உடனே சரி செய்து விட்டேன் சகோ. தவறுக்கு வருந்துகிறேன். தவறை சுட்டி காட்டி திருத்த சொல்லும் உங்கள் பண்பிற்கு மகிழ்கிறேன். இந்த பண்பு தொடரவேண்டும் என்பதே என் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீ.... said...

    //தற்போது நடக்கும் எதுவும் எனக்குச் சம்மதமில்லை. நல்ல பதிவுகளுக்கு ஆதரவு இல்லையென்றால் பதிவுலகம் வெறுமையை நோக்கிச் செல்கிறது என்று புரிந்து கொள்ளலாம். உங்களுடயது அவசியமான இடுகை //


    உங்களின் மேலான புரிதலுக்கு நன்றி... உங்களை போன்றோரின் ஆதரவு இனி நல்ல பதிவுகளுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  39. ganesh...

    வாழ்த்திற்கு நன்றி கணேஷ்

    பதிலளிநீக்கு
  40. //உங்கள் கருத்து சரியாக இருந்தாலும் தனி மனிதனை விடுத்து பொதுவாக பேசி இருக்கலாம், நலமாக இருந்திருக்கும். நகைசுவை எங்கிருந்தாலும் ரசிக்கப்பட கூடிய ஒன்று தான். அந்த தளங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை...முக்கியத்துவம் இல்லாத பதிவிற்கு கொடுக்கும் நேரத்தில், கொஞ்ச நேரத்தை பிற நல்ல பதிவிற்கும் கொடுக்கலாமே என்று 'வேண்டுகோள்' தான் வைத்து இருக்கிறேன். மற்றபடி படிப்பதும் படிக்காததும் அவரவர் விருப்பம்.////




    நான் முதலில் பொதுவாக தான் சொன்னேன். அவர் உதாரணம் கிடப் பிறகே நான் அந்த சுட்டியை போட்டேன். அவ்வளவே

    பதிலளிநீக்கு
  41. இரவு வானம் said...

    //நானும் எனக்கு தெரிந்த வரையில் எழுதிக் கொண்டு உள்ளேன்.//

    உங்கள் தளம் வந்து பார்கிறேன்...உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. dheva...

    //கோபத்தின் உச்சம் சொல்கிறது.... ஜன நாயக இந்தியாவில் இது சகஜம் என்று...ஜீரணிக்க முடியாத ஒன்று..! இன்னும் சொல்லப்போனால்.. வலைப்பூக்கள் எல்லாம் நிஜத்தில் வலைப்பூக்களின் மூலம் எழுத்த்னை நிறுவவில்லை..//

    கோபம் நியாயமாக தான் இருக்கிறது...நல்ல காரியங்கள் ஏதும் செய்யவில்லை என்றால் குறை சொல்வதும், நல்லது செய்தவர்களையும் குறை சொல்வதும் தானே பெரும்பாலும் நடந்து கொண்டு இருக்கிறது.

    வலைபூக்கள் பொழுது போக்கின் பக்கம் அதிகம் செல்வதால் உங்களுக்கு அப்படி தெரிகிறது. இனி வரும் காலங்களில் மாறும் என்று நம்புவோம்.

    ///மற்றபடி போரடிக்காம படிக்கிறவங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற எழுத்துக்கள் எப்போதும் வரவேற்க படவேண்டியவை...//

    நன்றி தேவா.

    பதிலளிநீக்கு
  43. prabhadamu said...

    //உங்களி ஆரோகியமனா ஆதங்கத்துக்கும், எங்களின் சிந்தனைகளை தூண்டிய வார்த்தைக்கும் மிக்க நன்றிக்கா.//

    உங்களின் முதல் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி. நகைசுவை பதிவு தவறு என்று நான் குறிப்பிடவில்லை என்பதை முக்கியமாக குறித்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  44. ஜீவன்பென்னி said...

    //என்னளவுல நான் யோசிக்கின்ற பொழுது நானும் ஒரு சராசரிப்பதிவராதான் இருக்கேன். கமெண்ட் போட்டவங்களும் சரி போடப்போகின்றவங்களும் சரி தன் விரல்களை தன்னை நோக்கி வச்சுக்கிட்டு யோசிக்கனும். இது எனக்கும் தான்.//

    உங்களின் இந்த சுய பரிசோதனை என்ற ஒரு வார்த்தையில் என் பதிவின் மொத்த பொருளுமே அடங்கி விட்டது. இது உண்மையில் எனக்கானதும் தான் என்பதை இந்த நிமிடம் எனக்கும் உணர வச்சிட்டீங்க. அதற்கு உங்களுக்கு நன்றி சகோ.

    தெளிவான கருத்து சொன்னதுக்காக மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  45. சே.குமார் said...

    //உங்கள் கூற்று உண்மையே...
    நல்ல பதிவுகளுக்கு உரிய மரியாதையை கொடுக்கலாம். நல்ல பதிவுகளை நாமும் பதிவிடலாம்.//

    இது போதும் சகோ...இதை விட பெருசா வேற என்ன விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்....?!!

    :))

    பதிலளிநீக்கு
  46. asiya omar said...

    //பதிவு போட்டவுடன் வந்தேன்,ரைட் சைடில் ஒற்றை ஒற்றை எழுத்தா வந்தது,வாசிக்க முடியலை,இப்ப சரியாகிடுச்சு,ஆதங்கமான அலசல் .என்ன செய்ய?//

    அடடா ஏன் அப்படி வந்தது என்று தெரியலையே... சரி ஆகிவிட்டது மகிழ்ச்சி தோழி. அந்த கேள்வி எனக்குள் எழுந்ததால் தான் இந்த பதிவே... புரிதலுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  47. அருண் பிரசாத் said...

    //தேவா கருத்துக்களுக்கு அப்படியே உடன்படுகிறேன். ஒரு செய்தியும் இல்லாத் பதிவு 40 ஓட்டுளுக்கு மேல், நல்ல பதிவு 15 ஓட்டை தாண்டுவது இல்லை... கொடுமை//

    ஆதங்கம் புரிகிறது... நன்றி

    பதிலளிநீக்கு
  48. அமைதி அப்பா said...

    //மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.
    நன்றி. வலைப்பூக்களின் பொறுப்புப் பற்றி நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்//

    உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  49. adhiran said...

    //padiththen,nanum ithu patri ezhuthavendum. neram kidaikkaamal alaikiren. paarkalaam. vazhthukkal.//

    கிடைத்த நேரத்தை பயன்படுத்திகணும் நண்பா..... நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  50. ஹேமா said...

    //யாருக்கோ சொல்வது போலான பதிவு.அருமை கௌசி.//

    அடடா...ஹேமா இது யாருக்கோ இல்லை...எல்லாருக்கும் தான்.....சரியா ??

    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  51. இம்சைஅரசன் பாபு.. said...

    ///நல்ல பதிவு எல்லோரும் வந்து படிக்க வேண்டிய பதிவு
    ரொம்ப நன்றி உங்கள் பகிர்வுக்கு///

    உங்களின் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.

    //சத்தியமாக இதை எழுதும் பொது மனது கஷ்டமாக இருக்கிறது .பாராட்டுங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒன்றும் கூறாதீர்கள்//

    ஜாலியான ஆளான நீங்கள் என் தளம் வந்து வருத்தபட்டதை நினைத்து நான் வருந்துகிறேன்.

    //ஆனால் ஒரு பதிவை பத்தி குறை கூறும் பொது .அவர் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள்.என்ன வெல்லாம் கனவு கண்டு இருப்பார் .//

    பதிவை குறிப்பிட்டு குறை சொல்வது தவிர்க்க பட்டிருக்க வேண்டும். என் தளத்தில் நீங்கள் அடைந்த வருத்தம் நான் எதிர் பார்க்காத ஒன்று.இதற்காக வருந்துகிறேன்.


    //சௌந்தர், அருண் ,terror ,ரமேஷ்,வெங்கட்//

    இவங்க எல்லோரின் நகைசுவை பதிவையும், பின்னூட்டங்களையும் ரசித்து படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  52. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    //உரத்த சிந்தனை .
    வரவேற்கிறேன் .
    வாழ்த்துக்கள் .//

    உங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிகவும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  53. jothi said...

    //தமிழீஷ் போன்ற தளங்கள் இது போன்ற பொறுப்பான கட்டுரைகளுக்கு குறைந்த ஓட்டுக்களிலேயே பிரபலமானவை பதிவுகளுக்கு உயர்த்தலாம்.//

    நல்ல யோசனைதான். சில பதிவுகள் அந்த மாதிரி பிரபலமாவதை கவனித்து இருக்கிறேன் . ஆனால் இது தொடர்ந்து நடக்கணுமே.

    //சில புதிய பதிவர்கள் சிறப்பாக எழுதினாலும் இந்த லிஸ்டில் வருவதில்லை,..அது எப்படி வெளியே கொண்டுவருவது என யாராலும் நல்ல யோசனை தரலாம்,.//

    அந்த பதிவர்களை பற்றி பிரபலமான பதிவர்கள் தங்கள் தளத்தில் அறிமுக படுத்தலாம்...

    நண்பர் கார்த்திக்(LK) அந்த மாதிரி பலரை அறிமுக படுத்தி உள்ளார். உங்களுக்கு தெரிந்த பதிவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.

    கருத்திற்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  54. saravanakumar sps said...

    //ஒற்றை ஆளாக் நின்று காற்றில் கத்தி சுழ்ற்றும் வித்தை தெரிந்தால் மட்டும் போதாது சுற்றி நின்று கும்மியடிக்க் ஒரு கும்பல் வேண்டும்//

    என்னங்க இப்படி பட்டுன்னு போட்டு உடைசிடீங்க...!!?

    முதல் வருகையே பிரமாதமாக தான் இருக்கிறது. நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  55. அப்பாவி தங்கமணி said...

    //வாழ்த்துக்கள்... nice post friend... great job //

    வாழ்த்திற்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  56. சேட்டைக்காரன் said...

    //இடுகை வாசித்ததிலிருந்தே பின்னூட்டம் போடுவதா வேண்டாமா என்று ஒரு தயக்கம். காரணம், யதார்த்தவாதி பொதுஜன விரோதி என்ற பழமொழி நினைவுக்கு வந்தது தான்!//

    எதுக்கு தயங்கணும்...?? நானும் என்னை யதார்த்தவாதி என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறேன் . ஆனா என்னை யாரும் இப்பவரை விரோதியா நினைக்கலை என்று நம்பிட்டு இருக்கிறேன்.

    //வலைப்பதிவு நடத்த வருகிறவர்கள் அனைவரும் மேதாவிகளும் அல்லர்; வாசிக்க வருகிறவர்களும் இடுகைகளை வாசித்துத்தான் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களும் அல்லர். என் போன்றவர்கள் தங்கள் பொழுதுபோக்குக்காகவும், நண்பர்களின் மனமகிழ்ச்சிக்காகவும் வலைப்பதிவு நடத்துகிறார்கள். //

    நீங்கள் சொன்ன கருத்துகள் உங்களின் தனிப்பட்ட கருத்து அவ்வளவே.பொழுது போக்கிற்காகவும் நண்பர்களுக்காகவும் எழுதுவது என்பது அது உங்களை போன்றோர்களின் விருப்பத்தை பொறுத்தது தான். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. உண்மைதான் . என் பதிவும் உங்களை போன்றோருக்கு எதிரானது இல்லையே...?!

    //பிடிக்காதவற்றை மொக்கை என்று சொல்ல உங்களுக்கு இருக்கிற அதே உரிமை, //

    இந்த மாதிரி ஒரு வார்த்தை என் பதிவில் எங்கும் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை சரி பார்த்து விட்டு சொல்லலாமே...

    //விழிப்புணர்ச்சி, கண்டனம் என்பவை எல்லாம் சற்றுக் கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பது என் கருத்து!//

    போன முறை என் கண்டனம் பதிவிற்கு வந்தீர்கள்..மீண்டும் இந்த கண்டனத்திற்கு வருகிறீர்கள்...அப்போது உங்களின் புரிதல் எந்த அளவு இருந்ததோ அதே அளவு தான் இப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறேன்...இந்த இரு வார்த்தைகள் கடினமாக தோன்றும் அதே நேரம் வேண்டுகோள் என்ற ஒரு வார்த்தை கண்ணில் படாதது எப்படி என்று தான் தெரியவில்லை. யாரையும் குறை சொல்வது என் விருப்பம் இல்லை...இப்படி இருக்கலாமே என்று வேண்டுகோள் தான் வைத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  57. சௌந்தர் said...

    உதாரணம் என்று நீ கேட்டதால் உன் தளத்தை குறிப்பிட்டு விட்டார்.... நீ அவரது நண்பர் என்ற உரிமையில்..... அதற்கு விளக்கம் மட்டும் சொல்லி இருக்கலாம் ,பதிலுக்கு அவரது பதிவை சுட்டி காட்டுவது வீண் மன கசப்பை தான் உண்டு
    பண்ணும்.

    எல்லோரும் எப்பவும் எதையும் விளையாட்டாய் எடுத்து
    கொள்ளமாட்டார்கள். இன்னும் பல நல்ல பதிவுகளை எழுத இதை தூண்டுகோலாக எடுத்துகொள்.

    விவாதம் வேண்டாம் என்பது இந்த அக்காவின் கருத்து.

    பதிலளிநீக்கு
  58. அன்பரசன் said...

    //விழிப்புணர்வுங்கற பேர்ல ஒரு புரட்சியையே உண்டு பண்ணிட்டீங்க..//

    அட என்னங்க நீங்க... புரட்சி அப்படி இப்படி என்று பெரிய வார்த்தைகளை சொல்லிட்டு இருக்கிறீங்க. அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க... வீணா டீவி சீரியல் பார்த்து பொழுது போக்காம, இப்படி ஏதாவது எழுதலாமே என்று எழுதிட்டு இருக்கிறேன்...

    :))

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  59. @கௌசல்யா

    சகோ நேரா போனிங்க.. அப்புறம் ஒரு ரைட் எடுத்திங்க.. அங்க இருந்து ஒரு லெப்ட் எடுத்திங்க.. அப்புறம் ஒரு யு டெர்ன் போட்டு முடிச்சிட்டிங்க!! இப்பொ நான் எங்க நிக்கிறேன் எனக்கே தெரியல.... :))))

    பதிலளிநீக்கு
  60. @LK

    என்ன இப்படி பட்டுனு கோவ பட்டுடிங்க?? மொக்கை பதிவு என்று நீங்கள் எதை சொல்றீங்க அப்படினு கேள்வி கேட்டா மொக்கை மூனு வகைபடும்

    1. மொக்கை
    2. படு மொக்கை
    3. படுபடு மொக்கை

    இப்படி பொதுவா கருத்து சொல்லி இருக்கலாம். லிங்க் கொடுத்து இருக்க வேண்டாம் என்பது என் தாழ்வான், ரொம்ப தாழ்வான கருத்து.

    (சாமி நான் பொதுவாத்தான் கருத்து சொன்னேன்.. சண்டைக்கு வந்துடாதிங்க... வர வர சண்டை சொன்னாலே பயமா இருக்கு....)

    பதிலளிநீக்கு
  61. Terror said...

    @கௌசல்யா

    //சகோ நேரா போனிங்க.. அப்புறம் ஒரு ரைட் எடுத்திங்க.. அங்க இருந்து ஒரு லெப்ட் எடுத்திங்க.. அப்புறம் ஒரு யு டெர்ன் போட்டு முடிச்சிட்டிங்க!! இப்பொ நான் எங்க நிக்கிறேன் எனக்கே தெரியல.... :))))//

    அடடா...இந்தளவு குழப்பிட்டேனா....?? நல்லா யோசிச்சு சொல்லுங்க சகோ...இப்ப எங்க நிக்கிறீங்க என்று.....ஒரு வேளை நடு ரோட்டில நிக்க போறீங்க ....??!!!!

    :)))

    பதிலளிநீக்கு
  62. ///ஆண்,பெண் சம்பந்த பட்ட அந்தரங்க உறவுகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு இருக்கிறது என்றால் கருத்துகளை அங்கே பதிவு செய்ய பலரும் தயக்கம் காட்டுகின்றனர், தங்களின் பெயர் அங்கே இடம் பெறுவதை பலரும் விரும்புவது இல்லை. சமுதாய சீர்கேடு இன்றைய காலகட்டத்தில் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். திருமணம் முடித்தவர்களுக்குமே எத்தனை பேருக்கு இதனை பற்றிய முழு தெளிவு இருக்கிறது...??!
    //

    இதனை நான் ஒப்புக்கொள்கிறேன் அக்கா .. அதிலே பின்னோட்டம் இடாதது எனது குற்றமும் கூட. ஆனால் நீங்கள் அந்தப் பதிவினை எழுதிய நாட்களில் எனது அலுவலக பணிகளின் காரணமாக ப்ளாக் ஓபன் செய்ய இயலாமல் போனது .. ஆயினும் தங்களது பதிவுகளை READER இல் படித்தேன். என்னால் எனது கருத்துக்களை பதிவு செய்திட இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் ..

    பதிலளிநீக்கு
  63. ப.செல்வக்குமார் said...

    //அதிலே பின்னோட்டம் இடாதது எனது குற்றமும் கூட//

    அடடா செல்வா... இது என்ன இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு...நான் பொதுவாக தான் பதிவு எழுதி இருந்தேன். சிறந்த பதிவுகளுக்கும் கொஞ்சம் நேரத்தை கொடுங்களேன் என்று. இது ஒரு வேண்டுகோள்தான். குற்றம் ஏதும் இல்லை.... இங்கே என் ஆதங்கத்தை தான் பதிவு செய்தேன்.

    //ஆயினும் தங்களது பதிவுகளை READER இல் படித்தேன். என்னால் எனது கருத்துக்களை பதிவு செய்திட இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் ..//

    படித்தீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது....நேரம் இல்லாத போது பின்னூட்டம் இடவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே ... விசயங்கள் சென்று சேர்ந்தால் போதும்.


    வருகைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  64. கௌஸ், நல்லா இருக்கு பதிவு. நல்ல பதிவுகள் எல்லோரையும் சென்று சேர்ந்தால் பயன் பெறுவார்கள் என்பது உண்மை தான். ஆனால், ஒரு சிலர் ஜாலியான, நகைச்சுவையான பதிவுகளை விரும்பி பார்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  65. கௌசல்யா...நான் அப்படியே..தேவா மற்றும் ஜோதி யின் கருத்துக்களை வழி மொழிகிறேன்..

    பதிலளிநீக்கு
  66. அருமையான பதிவுங்க தோழி!பதிவுலகம் என்பது அவரவர் விருப்பப்படி, அவரவர் விருப்பு வெறுப்பு சார்ந்த எழுத்துக்களை பகிர்ந்துகொள்ளும் இடம். அப்படிப்பட்ட இடத்தில் இந்தப் பதிவைத்தான் படிக்கவேண்டும் என்று யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதே நிதர்சனம். ஆனால் அதேசமயம்,இங்கே நாம் செலவழிக்கும் சில நிமிடங்களும்,ஊக்கப்படுத்தும் எழுத்துக்களும் நாம் வாழும் சமூகத்தின் போக்கை நல்வழியில் மாற்றியும், அவலங்களையும், ஆபத்துகளையும் நீக்க/குறைக்கவல்லது என்று நாம் உணரும் பட்சத்தில் அதை ஊக்கப்படுத்துவதன்மூலமே, நாம் ஒரு சமூக அக்கரை/பொறுப்புள்ளவர் என்பதை நிரூபிக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து!

    கண்டனமே ஆயினும், அதை நயம்பட, தைரியமாகவும், தெளிவாகவும் எடுத்துறைத்த தோழி கௌசல்யா அவர்கள் பாராட்டுக்குறியவர். உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இனி உங்கள் பக்கத்தை அடிக்கடி வாசிப்பேன். அழகான உங்கள் தள பரிந்துரைப் பட்டியலில் எனக்கும் ஒரு இடம் அளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
    பத்மஹரி,
    http://padmahari.wordpress.com

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...