புதன், ஜனவரி 25

இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!!

பதிவினை படிக்கும் முன்


'இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன்' என்று ஒரு கட்டுரை மெயில் மூலமாக வந்தது. தலைப்பை பார்த்ததும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது.  உண்மைதானா என்ற யோசனையில் உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா அவர்கள் இது தொடர்பாக எழுதிய ஒரு பதிவை படித்து பார்த்தேன்...அதன் மூலம் எனக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது...எனவே மெயிலில் வந்த விவரங்களையும் எனது புரிதல்களையும் சேர்த்து இங்கே பதிவாக எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்... 


* * * * * * * *

மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள். 

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.

ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி
மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை
மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.


முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை
மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு
ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு
நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி
நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம்
ஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.

4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப
வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு
சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும்  ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு  ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது. 

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.


7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்
போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு
மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால்
இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம்
கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!!

9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை
செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க
வேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை
கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.


கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும். இது பற்றிய முழு விபரங்களை காண: http://timesofindia.indiatimes.com/topic/search?q=idli-dosa%20batter (நன்றி-உணவு உலகம்)


நிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி,
மாட்டிரைச்சிகளில் காணப்படும்  ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி
சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான  இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள்.

இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும்.

தயவு செய்து இயன்றால் இதை பலருக்கும் பகிரவும், முடிந்த அளவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். 


நன்றி -  தமிழ் உலகம் 


* * * * * * * * 

பின்குறிப்பு 


இன்றைய உலகில் அனைத்தும் மிக வேகமாகி விட்டது. எல்லாமே ரெடிமேட் !! பொதுவாக வெளியில் வாங்கப்படும் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதில் முழுமையான சுத்தம் என்பது இருக்காது...சமையல் அறையில் ஒரு மணி நேரம் செலவு செய்வதை கூட நேர விரயம் என நினைக்கிறோம் . ஆண் பெண் இருவரும் வேலைக்கு சென்றாலும், தங்களின் ஆரோக்கியத்திலும் சிறிது அக்கறை காட்டினால் நல்லது. பணம் சம்பாதிப்பது நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்க்காகத்தான், மருத்துவருக்கு கொடுப்பதற்காக இல்லை என்பதை புரிந்து கொண்டு உணவுகளை கூடுமானவரை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது உத்தமம் ! எந்த உணவு பொருளில் எந்த ஆபத்து ஒளிந்திருக்குமோ தெரியவில்லை...!! அனைத்தையும் விட நமது உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை புரிந்து நடந்துகொள்வோம்.



நன்றி - படங்கள் கூகுள் 

வியாழன், ஜனவரி 19

எல்லோருக்குமல்ல, இந்த பொங்கலும் புத்தாண்டும்...!?



மார்கழி மாதம் பிறந்ததும் வாசலில் புதுக்கோலங்கள் மட்டும் பூக்கவில்லை, சில பண்டிகைகளும் தான்...! புத்தாடைகள், பலகாரங்கள், ஆட்டம் பாட்டம், குதூகலங்கள், வாண வேடிக்கைகள் என்று சுற்றிச் சுழன்றது  மார்கழியும் அதனை தொடர்ந்த தை மாதமும்...!

கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தமிழ் புத்தாண்டு(!) இப்படி மாறி மாறி மக்களின் மணி பர்சை காலி செய்யும் தினங்கள் அணிவகுத்து, அவை  முடியும் தருவாயும் வந்து முடிந்தே விட்டது. பண்டிகைகளை கொண்டாட சில பல காரணங்கள் இருந்தாலும் ஒரே காரணம் மக்கள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்பதுதான். ஆனால் எத்தனை சதவீத மக்கள் உண்மையான மகிழ்ச்சியில் கொண்டாடி இருப்பார்கள்...?! கொண்டாட்டங்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் சில வருத்தமான நிகழ்வுகளையும் நினைக்க தோணுகிறது.

ஏன் இந்த கோபம் ?

கடலூர், புதுச்சேரியில் 'தானே' புயல் கோரதாண்டவம் ஆடி சில வாரங்கள் ஆகின்றன...15 வருட உழைப்பை ஒரே நாளில் தொலைத்துவிட்டு திகைத்து நிற்கிறார்கள். சிதறி போன தங்களின் வாழ்வை மீண்டும் எதில் இருந்து தொடங்குவது என தெரியாமல் தவிக்கிறார்கள். தென்னை, வாழை போன்றவையும் பிரதான மரங்களான பலா, முந்திரியும் வேரோடு சாய்ந்து அவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து முடக்கிப்போட்டு விட்டது.பிற இடங்களை விட இங்குள்ளவர்களின் விவசாயம் வித்தியாசமானது, நெல்,கரும்பு போன்ற பயிர்களை சில மாதங்களில் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால் பலா, முந்திரி போன்றவை அப்படி அல்ல.ஒரு பலா மரம் வைத்து அது பலன் தர 15 வருடங்கள் !!


அங்குள்ள எனது நண்பர் ஒருவர் சொன்னார்,'அக்காவின் தோட்டத்திலிருந்த 1,500 பலா,முந்திரி,தென்னை மரங்களும் வீழ்ந்துவிட்டன, குடும்பத்தின் மொத்த வருவாயும் இதனை அடிப்படையாக கொண்டு தான் இருந்தது.  இனி என்ன செய்வார்கள் என தெரியவில்லை' என்று மிக வருந்தினார். ஒரு குடும்பத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து மரங்களாவது இருக்குமாம், அதை வைத்துதான் அவர்களின் வாழ்க்கை ! இப்போது அதையும் இழந்து செய்வதறியாது நிற்கும் இவர்களுக்கு பொங்கல் தினம் என்ற ஒன்று எத்தகைய நினைவை கொடுத்திருக்கும் ?!

சுனாமி கடலோர பகுதிகளை சுருட்டிக்கொண்டு போனபோது, 'நாம ஊருக்குள்ள தானே இருக்கிறோம், பிரச்னை இல்லை' னு ஒரு நொடியாவது நினைத்திருப்போம். இயற்கை இதை புரிந்துகொண்டது போல, 'அப்படியா நினைக்கிற, விட்டேனா பார்' என புயலாய் உருவெடுத்து ஊரை லேசாக தனது கையினால் தட்டி இருக்கிறது. எத்தனை கோடி சேதங்கள், அழிவுகள்...! சாய்ந்த மின்கம்பங்களையும், வீசி எறியப்பட்ட கூரைகளையும் செப்பனிட்டு விடலாம் ஆனால் வாழ்வாதாரமாக நம்பிய மரங்கள் போய்விட்டனவே...என்ன செய்வார்கள் அம்மக்கள் !?


வாழும்போதே நரகத்தை சற்று ருசித்திருக்கிறார்கள் ! தூரத்தில் இருக்கும் நாம் சுலபமாக சொல்லலாம், மாற்றுத் தொழிலை பார்த்துக் கொண்டால் போச்சு என்று ! ஆனால் அனுபவித்தால் தான் தெரியும் அந்த வலி, வேதனை...! அம்மக்கள் விரைவாக மீண்டு எழ இயற்கையை வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் தோணவில்லை எனக்கு...!

ஏன் இந்த அவஸ்தை ?

வட தமிழகத்தில் ஒரு பக்கம் பண்டிகை கொண்டாட இயலாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்றால் தென்பகுதியில் வித்தியாசமான அவஸ்தை ஒன்றை இப்பண்டிகை நாட்களில் இந்த மக்கள் சந்தித்தார்கள்

பழி(லி) ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதை போல் எங்கோ நடந்த ஒரு வருந்த தகுந்த ஒரு கொலை சம்பவம் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்வை சிரமபடுத்திவிட்டது. பண்டிகை நாட்களில் பயணிக்க பேருந்துகள் சரிவர இயங்கவில்லை, எப்போது வரும், வருமா வராதா எனவும் வெளியூர் போனால் திரும்பி வர பேருந்து இருக்குமா எனவும் தெரியாமல் தவித்துவிட்டார்கள்.

ஒரு மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சமயங்களில் ஐந்து மணி நேரம் கூட ஆனது...இரவு நேரங்களில் பேருந்து பயணம் என்பது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவிட்டது. பேருந்துகள் தனியாக சென்றால்  வழி மறிக்கப் படலாம் என இரண்டு மூன்று பேருந்துகள் சேர்ந்ததும் அனுப்பப்பட்டது, காவல் துறையினரின் துணையுடன் பயணிக்கின்றன சில பேருந்துகள் !?

பெரும் ஆபத்துகள் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஓட்டுனரும், மக்களும் பயணிக்கின்றனர். (இதனை விரிவாக எழுதவும் மிக யோசிக்கவேண்டியதாக இருக்கிறது) அதுவும் இந்த பொங்கல் சமயத்தில் அல்லல்படுவதென்னவோ சாமானிய மக்கள்தான்.

இன்னும் கூட எப்போது எத்திசையில் இருந்து எந்தவிதமான பூதங்கள் கிளம்புமோ என்கிற ஒரு வித சிந்தனையில் உழலுகின்றனர் சில மக்கள். ஒரு கை வியாபாரத்தை கவனிக்க கடைக்காரரின் மற்றொரு கை கடையின் ஷட்டரின் மேல் இழுத்து மூட தயாராக !!

நகரங்களில் இதன் பாதிப்புகள் அவ்வளவாக இல்லை என்றாலும் இங்குள்ள சில கிராமங்களில் சிலரிடம் 'என்ன பொங்கலு' என்ற ஒரு சலிப்பு வந்துவிட்டது. விலைவாசி உயர்வு பொதுவான ஒன்றுதான் என்றாலும் அபரீதமான பேருந்து கட்டண உயர்வு போன்றவை சாமானிய மக்களை வருத்தி எடுக்கிறதை பேருந்தில் பயணிக்கும் போது கவனிக்க முடிந்தது.(கணக்கு கேட்டு ஒரு வழி பண்றாங்க ஜனங்கள் ! பாவம் இந்த நடத்துனர்கள் !) 

இயற்கை தனது கோர முகத்தை ஒரு பக்கம் காட்டினால் சில மனிதர்கள் தங்களின் கோரமுகத்தை காட்டுவதால் ஏற்படும் இன்னல்கள் மற்றொரு புறம்.

இது போன்ற நிலையில் வந்து போன பொங்கலும் புத்தாண்டும் வருடத்தில் அதுவும் ஒரு தினம் என்பதாக கடந்து...சென்றே விட்டது...!!

கூடங்குளம் 

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது  மக்களின் உண்ணாவிரதம் ! சுயநல மனிதர்கள் நிறைந்த உலகில் எந்தவித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாக போராடி கொண்டிருக்கும் இம்மக்களை பற்றி ஆரம்பத்தில் பெரிதுபடுத்திய மீடியாக்கள், இணையம் உட்பட அனைத்தும் இப்போது சற்று தொய்வடைந்து விட்டன...இவர்களின் போராட்டத்தின் முடிவு எப்போது, எவ்வாறு, யாரால் என்று தீர்மானிக்க முடியா நிலையில் இவர்கள் நடுவிலும் பல பண்டிகைகள் வந்து சென்று விட்டன எந்தவித மகிழ்ச்சியையும் முழுதாய் கொடுக்காமல்...!!

முல்லை பெரியாறு 

ஆறு மாவட்ட மக்கள் தமது பகுதியில் இப்போதும்,எதிர்காலத்திலும் தொடர்ந்து விவசாயம் நல்லமுறையில் நடக்குமா என்ற கேள்விக்குறியுடன் முல்லை பெரியாறை எதிர்பார்ப்புடன் பார்த்துகொண்டிருக்கும் ஒரு நிலை...! இவர்களுக்கும் மிக நெருங்கிய சம்பந்தப்பட்டதுதான் பொங்கல் ! 

பொதுவா சொல்றேனுங்க !!

தன்னம்பிக்கை மிக்க நம் மக்கள் தங்களின் உழைப்பு, திறமை கைக்கொண்டு விரைவில் மீண்டு எழும் அந்நாளே அவர்களுக்கு உண்மையான பண்டிகைநாள்.

பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகளை/விவசாயத்தை நினைவு கூறுவதற்காக இருக்கவேண்டும். ஆனால் இப்ப யாருங்க விவசாயத்தை மதிக்கிறாங்க...?! ஊருக்கே உணவு கொடுக்கிற அவர்களை நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம், ஒரு சக மனிதராக கூட நினைக்காத நிலை தானே இருக்கிறது. முதலில் விவசாயத்திற்கு நல்ல ஒரு அங்கீகாரம் கொடுக்கபட வேண்டும். சமுதாயத்தின் பார்வையில் சராசரியை விட கீழாக பார்க்கபடுகிற அவர்களின் நிலை மாறவும் வழிவகை(?!) செய்துவிட்டு இந்த பொங்கலை சிறப்பாக அவர்களுடன் இணைந்து கொண்டாடும் வரை இது போன்ற தினங்கள் வெறும் விடுமுறை தினமாக மட்டுமே தெரிகிறது.

தொலைகாட்சிகள், பத்திரிக்கைகளும் நாடே சுபிட்சமாக இருப்பது போல தீவு திடல், பொருட்காட்சிகள், கடற்கரைகள்,திரையரங்குகள்  போன்றவற்றில் அலைமோதும் மக்கள் கூட்டத்தினரை காண்பித்து 'இதோ மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்' என விளம்பரபடுத்துகிறது.அதை பார்த்த மற்றவர்கள் 'அட நாம தான் அல்லல் படுறோம், ஆனா மத்தவங்க சந்தோசமா வாழ்க்கைய எப்படியெல்லாம் அனுபவிக்கிறாங்க' என்று பெருமூச்சுவிடுவதுடன் முடிந்துவிடுகிறது இன்றைய பண்டிகை நாட்கள் !!

எது எப்படியோ !? வார்த்தைகளில் வாழ்த்துக்களை நாம்  பரிமாறிகொள்வோம்...வாழ்த்துக்களில் மட்டுமாவது வாழ்ந்து கொள்ளட்டும் நம் பாரம்பரிய பண்டிகைகள் !!?


பிரியங்களுடன்
கௌசல்யா


படங்கள்-நன்றி கூகுள் 

வெள்ளி, ஜனவரி 13

பசுமை தேசம்...இது எங்கள் நம்பிக்கை !!



புதிய வருடத்தில் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்துள்ளபடி எனது மற்றொரு தளத்தை உங்கள் முன் இன்று அறிமுகப்படுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்கு என்று தொடங்கப்பட்டுள்ள அத்தளத்தை பார்வையிட்டு உங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுமென வேண்டுகிறேன். 

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எங்களது ஈஸ்ட் தொண்டு நிறுவனம்(EAST TRUST, Sankarankovil)  சார்பில் பசுமைவிடியல் என்ற பெயரில் ஒரு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களால் கடந்த வியாழன்(Jan/2012) அன்று குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸில் வைத்து பதிவர்கள் முன்னிலையில் இவ்வியக்கத்தின் இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டது.

  
முதல் களப்பணியாக மரம் நடுதல் விழிப்புணர்வுக்கான முதல் மரக்கன்றை எம்.எல்.ஏ அவர்கள் நட்டு வைத்தார். இனி இதர பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன... 


பசுமை விடியல் - ஒரு அறிமுகம் 


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... 


மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கைச்  சிறப்பாகச்  செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் பல்வேறு ஆபத்துகள்...


2020 ஆம் ஆண்டில் முழுமையாக உருகிவிடும் என்று கணிக்கப்பட்ட ஆர்ட்டிக் பனிப்படிவுகள் 2015 ஆம் ஆண்டே உருகிவிடும் என்று வேறு தற்போது விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்...!!


உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டேச்  செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான்  இருக்கின்றன...!

மக்களை பற்றி நாடு அக்கறைக்  கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும்  ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?!   அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டுச்  செயல்  படுத்தப் பட வேண்டும்...!

இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்...!

கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களைக்  கோர்த்து இருக்கிறோம்...!

இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது !!

ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்...இது வெறும் ஆசை அல்ல...திடமான நம்பிக்கை !!


பதிவுலக உறவுகளே !


உங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் எங்களை இன்னும் சிறப்பாக வழிநடுத்தும் என்பதால் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்கிறேன்.  மேலும் உங்களின் மேலான ஒத்துழைப்பும்,வாழ்த்துக்களும் என்றும் எங்களுடன் இருக்க வேண்டுமென அன்பாய் வேண்டுகின்றேன்.


இனி தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்...........அவசியம் செல்லவும். உங்களின் வருகைக்காக அங்கே காத்திருக்கிறோம்.



பிரியங்களுடன்
கௌசல்யா



படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், ஜனவரி 9

எங்களை கவர்ந்த மக்கள்பிரதிநிதி...! நேரடி அனுபவம்

நல்ல விசயங்கள் எந்த கணத்தில் நடைபெறும் என்று கணிக்கவே முடியாது...உண்மைதான் அப்படி ஒரு நிகழ்வை சாத்தியமாக்கி காட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி என்ற வார்த்தையில் முடித்துக்கொள்வதை விட தொடர்ந்து அவர்களுடன் அன்பை பரிமாறிகொள்வது ஒன்றே என் கடமை என்று எண்ணுகிறேன். எனவே 'அன்பு தொல்லை இனி தொடரும்' என்ற அன்பான மிரட்டலுடன், நடைபெற்ற ஒரு உன்னத நிகழ்ச்சி பற்றிய சிறு துளிகளை இங்கே பகிர்கிறேன்...



பதிவர் சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.  ஜனவரி 12 அல்லது  14 அன்று நிகழ்ச்சி நடத்தலாம் என 'நிகழ்ச்சி நிரல்' மாடல் ஒன்றை வடிவமைத்தும், பதிவர்கள் + எம் எல் ஏ கேள்வி நேரம் ஒன்றுக்காக இருபது கேள்விகள் (அரசியல் தவிர்த்து) ரொம்பவே யோசிச்சு(?) டைப் செய்து முன்தினம் இரவு செல்வா(செல்வாஸ்பீக்கிங் ) அண்ணனுக்கு மெயில் செய்தேன். இனி நட்புகளை அழைக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது...ஆனால் மறுநாள்(5/1/12) காலை 11 மணிக்கு "நாளையே  ஏற்பாடு பண்ண முடியுமா , எம்.எல்.ஏ வை இப்போது விட்டால் அடுத்து ஒரு மாதம் ஆகிவிடும்" என்றார் அண்ணன்...! ஒண்ணும் ஓடல...!! விசாலினியை பற்றி பிளாக்கில  எழுதியதும் தொடர்ந்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு போய் விடவேண்டும், தாமதம் பண்ணகூடாது என்பதால் "சரிணா பண்ணிடலாம்" என்றேன்.

அன்று துவங்கவேண்டும் என முடிவு செய்திருந்த பசுமைவிடியல் தளம் முழுமையாக வடிவமைக்கபடவே இல்லை...பெங்களூரில் இருக்கும் பிரபுவை(பலே பிரபு) தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னேன். "சரிக்கா கவலை படாதிங்க, இரவுக்குள் முடிச்சிடலாம்" என்றான்.

சங்கரலிங்கம் அண்ணாவிற்கு தெரிந்திருந்தாலும் "எல்லாம் நீங்க இருக்கும் தைரியத்தில்தான்,உதவி பண்ணுங்க"னு புலம்பி தள்ளிட்டேன்...எல்லாம் பொறுமையாக கேட்டவர், 'ஓ.கே ஜி (தங்கையை பெயர் சொல்லாமல் 'ஜி' னு மரியாதையாக அழைக்கும் அன்பு அண்ணன் !!) பண்ணிடலாம்' என்றார்.  

அப்புறம் அங்கும் இங்கும் போன் மேல போன் பண்ணிட்டே இருந்தோம். இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் யாரை அழைத்தாலும் நிச்சயமாக வர இயலாது...இது நன்கு தெரிந்தும் அழைத்தோம்...தூரத்தில் இருந்து வந்த சீனா ஐயா, ரத்னவேல் ஐயா, சி.பி.செந்தில்குமார், மதுரை சரவணன் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (தனி போஸ்ட் ரெடி ஆகிட்டு இருக்கு)

நிகழ்ச்சியை அப்படியே சொல்வதை விட என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த அற்புத தருணங்களை மட்டும் இங்கே...

                        சூரிய சக்தியால் மின்சாரம் பெற்று உபயோகபடுத்துகிறார்கள்-இசக்கி ரிசார்ட்ஸ் 

விழா நடைபெறும் இடமான 'குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்' போனதும் எம்.எல்.ஏ கலந்து கொள்ளும் விழாவாச்சே மேடை, மைக் அப்படி இப்படின்னு பந்தா செட்டப் இருக்கும்னு ஹால் கதவை மெதுவா திறந்தா ...திக்குன்னு ஆச்சு !! மேடைக்கு பதில் சின்னதா ஒரு டீப்பா, நோ மைக், நல்லவேளை வி ஐ பி சேர் இருந்தது...நாங்கள் அமர ஷோபா, பிளாஸ்டிக் சேர் என்று போடப்பட்டிருந்தது. அங்கே இருந்தவர்களை இதை பற்றி கேட்டேன், ) ஆனா அவங்க,' எம் எல் ஏ சார் ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு கால் பண்ணி சொல்லிட்டார் மேடம் அதான் இப்படி' என்றார்கள்.

அட என்ன அரசியல்வாதி இவர், ஆடம்பரமா ஏன் பண்ணலன்னு கேட்பார்னு பார்த்தா இப்படி சொல்லி இருக்கிறாரே(எத்தனை சினிமாவுல பார்த்திருக்கோம்...!) ம்...சரி சரி வரட்டும் பார்ப்போம்னு நானும் வேறு எந்தவித உள்வேலைகளும்(இன்டீரியர் டெக்கரேஷன் !?) செய்யாம, டென்ஷனை குறைக்க விசாலினியை தோட்டம் நடுவில வச்சு சுத்தி சுத்தி போட்டோ  எடுத்து தள்ளினேன்.

பதிவுலக நட்புகளின் வருகை 

நம்ம நட்புகள் எல்லாம் வந்து சேர்ந்தாங்க...சீனா ஐயா வந்து அமர்ந்ததும் "யார் வரவேற்பு கொடுக்க போறாங்க , ப்ரோக்ராம் லிஸ்ட் எங்க?" அப்படின்னு கிட்டத்தட்ட மிரட்ட தொடங்கினார் அன்பாகத்தான்...நானும் கொஞ்சம் டென்ஷனோட(?) "வேற யாரு நீங்கதான்" டக்குனு சொல்லவும், ஐயா(வாழ்க) மறுப்பார்னு பார்த்தால் ஒரு நோட்ல குறிக்க தொடங்கிட்டார். மதுரை சரவணன் திருக்குறள் சொல்லி தொடங்க, ஐயா வரவேற்பு என முடிவாகியது.

                                             (பதிவுலக நட்புகளுடன் விசாலினி மற்றும் குடும்பத்தினர் )

சட்டமன்ற உறுப்பினர் உள்ளே என்ட்டர், நாங்க அட்டன்ஷன் பொசிஷனுக்கு வந்தாச்சு...பரஸ்பர அறிமுகம்...பிறகு அகரமுதல் எழுத்தெல்லாம் என சரவணன் சொல்ல விழா தொடங்கியது...அமரப் போன (விழா) தலைவர், இந்த சேர் யார் போட்டா, வேண்டாம் எடுங்க"னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த பிளாஸ்டிக் சேர் எடுத்து போட்டு உட்கார்ந்தே விட்டார். எனக்கு சப்புன்னு ஆகிபோச்சு...!

அப்புறம் பொன்னாடை அணிவிக்க தயார் ஆனதை பார்த்தவர், "என்ன இது", "இது ஷால்...மரியாதைக்கு" னு இழுக்க..."அதெல்லாம் வேண்டாம், இனி இது மாதிரி யாரையும் கௌரவபடுத்தனும்னா இதுக்கு பதிலா ஒரு புக் வாங்கி கொடுங்க போதும்" என்றதும் எனக்கு மயக்கம் வராத குறை...இவர் எம் எல் ஏ இல்லையோ, சந்தேகமே வந்து போச்சு...

சீனா ஐயா மிக அருமையாக வரவேற்பு உரை நிகழ்த்தினார்...எல்லோரை  பற்றியும் சொல்லிவிட்டு 'பசுமை விடியல்' நிர்வாகிகள் நாலு பேரின் பெயர் , இயக்கத்தின் திட்டங்கள், நோக்கங்கள் அனைத்தையும் சுருக்கமாக சிறப்பாக எடுத்துரைத்தார்...இதெல்லாம் இவருக்கு எப்படி தெரிந்தது என ஆச்சரிய பட்டேன், நிகழ்ச்சி முடிந்து வெளில வந்து கேட்டால் 'எனக்கு எப்படி தெரிந்தது' என அவரே வியந்துதான் ஹைலைட் !! (ஒரு வேளை மைன்ட்வாய்ஸ் ரீட் பண்ண தெரியுமோ...?!)

                          இணையதளம் துவக்கம் - M.L.A, விசாலினி,செல்வகுமார் அண்ணா

தொடர்ந்து விழா தலைவர், 'பசுமை விடியல்' இணைய தளத்தினை தொடங்கிவைத்தார். தளத்தினை பார்த்தவர் pages ஒவ்வொன்னும் பார்த்து 'இது என்ன, இது எப்படி' என்று கேட்டு, 'இந்த லிங்கை எனக்கு மெயில் பண்ணிடுங்க' என்று அருகில் இருந்த உதவியாளரிடம் ஐடியை என்னிடம் கொடுக்கசொல்லி சொன்னார்.

பிறகு சட்டுன்னு செல்வகுமார் அண்ணன், 'கௌசல்யா நீ எழுந்து பசுமை விடியல் பத்தி சில வார்த்தைகள் சொல்'லுனு சொல்லிட்டார். சத்தியமா இதை நான் எதிர்ப்பார்க்கல, சும்மா கூட்டத்தில கோவிந்தா போட்டுட்டு இருந்த என்னை தனியா பேச சொன்னா எப்படி ? அதுவும் எம் எல் ஏ முன்னாடி, எத்தனை நாள் பிளான் பண்ணினாரோ தெரியல, நல்லா மாட்டி விட்டுட்டார், அப்புறம் ஏதோ ஒரு வேகத்துல கடகடன்னு ஒப்பிச்சிட்டு வந்துட்டேன். (என்ன பேசி இருப்பேன்னு இப்பவும் யோசிச்சு பார்க்கிறேன் 'ம்ஹூம் சுத்தம், நினைவே இல்ல')என் பேச்சை பொறுத்துக்கொண்ட நட்புகளின் சகிப்புத்தன்மை ரொம்ப பெரியது...!!

சுட்டிப்பெண்ணுக்கு மரியாதை 


விசாலினிக்கு கேடயம் ஒன்று 'தமிழ் இணைய வலைபதிவர்கள்' சார்பில் வழங்கப்பட்டது...அவளை பற்றி அவங்க அம்மா, சட்டமன்ற உறுப்பினரிடம் விவரமாக எடுத்து சொல்லவும், மிக ஆச்சர்யபட்டவர் "நம்ம சி எம் பெண் குழந்தைகளுக்காக நிறைய செஞ்சிட்டு வராங்க,விசாலினி பற்றி சொன்னால் சந்தோசபடுவாங்க,பாராட்டுவாங்க,  கண்டிப்பாக இவளது திறமையை உலகம் அறியச் செய்ய நிச்சயம் சி எம் கிட்ட கொண்டு போவேன்" என்றதும் ஒரே கைதட்டல் !! இதை எதிர்ப்பார்த்து தானே பதிவர்கள் நாங்கள் அனைவரும் குழுமி இருந்தோம் !!


விசாலினி பற்றி அவங்க அம்மா நிறைய சொன்னாங்க...(அவ்வளவையும் சொல்லனும்னா ஒரு தொடர் பதிவு போடணும்...!!)அவளின் பெற்றோர்கள் இவளுக்காக படும் பாடுகள், எடுக்கும் பிரயாசங்கள், செலவு பண்ணும் தொகை எல்லாமே வேறு யாரும் கற்பனை செய்ய கூட இயலாதவை !! இவளுக்காக பெரிய பை நிறைய பைல்கள், போட்டோ ஆல்பம், சான்றிதல்கள் என்று வைத்திருக்கிறார்கள்...இப்பவும் தொடர்ந்து சில கோர்ஸ்கள் படித்து வருகிறாள்...ஒரு தேர்வுக்கு இரண்டு பேப்பர், இதில் ஒரு பேப்பர் தலா ரூபாய் 80,000 என கட்டி இருக்கிறார்கள், இரண்டில் ஒரு பாடத்தில் தோற்றுவிட்டாலும், மொத்தமாக 1,60,000 போய்விடுமாம். என் போன்ற சாதாரண தாய் இப்படிதான் பணத்தை பற்றி யோசிப்பாள் ஆனால் அவர்கள் செலவழித்து கொண்டே இருக்கிறார்கள்...!! பெண்ணின் திறமையை பட்டை தீட்டி கொண்டே இருக்கிறார்கள்...!!


சட்டமன்ற உறுப்பினரின் எளிமை 


எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதி என்றால் மக்களுக்கு(என்னையும் சேர்த்துதான் ) சிலபல  புரிதல்கள் இருக்கின்றன. ஆனால் இவரை பொறுத்தவரை அங்கே இருந்த ஒரு மணி நேரமும் (விழா முடிந்ததும் சென்னை ரயிலை பிடிக்கவேண்டிய அவசரம் வேறு ) எங்களில் ஒருவராக இருந்தார். இவரின் குணம் தெரிந்து தான் செல்வகுமார் அண்ணன் எங்களிடம் அறிமுகம் படுத்திவைக்க 'இப்படி தவித்தாரா ?' என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. மக்களோடு மக்களாக பழகும் இத்தகைய குணம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்...!?

'கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் இத்தனை மரங்கள் நடவேண்டும் என்ற ஒரு யோசனை இருக்கிறது, அப்போது 'பசுமை விடியல்' இயக்கத்தை சேர்த்து கொள்கிறோம்' என்றார். அவரின் ஆர்வத்தை மிக வியந்தேன்...தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் (துகள்களாக்கி)வைத்து சாலைகள் அமைக்கும் பணியை அரசு தொடங்கிவிட்டது என பகிர்ந்துகொண்டார். நாங்கள் அதற்கு வாழ்த்து சொன்னோம். சில கேள்விகள் கேட்டோம், ரொம்ப கேஷுவலாக பதில் சொன்னார்...'விழா முடிந்ததா நான் கிளம்பலாமா' என கேட்டு அனுமதி(!) கொடுத்த பின் தான் கிளம்பினார்.

மரக்கன்றை செல்வகுமார் அண்ணனிடம் இருந்து இவர் பெறும்போது விசாலினியை அழைத்து "நான் உன்னைவிட ரொம்ப சின்ன பையன்,நீதான் பெரியவ, உன் கையால் தொட்டு கொடு" னு சொல்ல அனைவரின் முகத்திலும் பிரகாசமான புன்னகை !


மரக்கன்றை அதே இடத்தில் நன்றாக நட்டு பேணி வளர்க்க வேண்டும் என்று உதவியாளரிடம் சொன்னார்.அந்த செண்பக மரம் பூத்துகுலுங்கி மணம் வீசும் நாள் அன்று பதிவர்களான நம்மை அம்மரம் நிச்சயம் வாழ்த்தும்...! 

மிக சிறப்பாக விழா நடைபெற பேருதவி புரிந்த மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.

பின்குறிப்பு

தொடரும் பதிவு ஒன்றில் விசாலினியை பற்றியும் , வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நட்புகள் பற்றியும், ஜெயா டிவி, சன் டிவி, ராஜ் டிவி, விண் டிவி, மக்கள் டிவி, மற்றும் மீடியாக்கள் பற்றியும் சிறிது பகிர்கிறேன்..
 



புதன், ஜனவரி 4

அன்பின் இணைய உறவுகளே...!



அனைவருக்கும் வணக்கம்.

நல்லதொரு செயல், சாதனை எங்கே யாரால் நிகழ்த்தப்பட்டாலும் உங்களால் பாராட்டப்படும், போற்றப்படும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் நேற்றைய பதிவு. என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !

நல்ல எண்ணம் கொண்ட நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் நிறைய செய்யலாம், சாதிக்கலாம் என்கிற உத்வேகத்தை உங்களின் ஒத்துழைப்பு நிரூபித்தது. அடுத்து ஒரு நிகழ்வு இதை தொடர்ந்து நடத்தணும் என்று எண்ணி இருந்தோம் ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற போகிறது என்று இன்று காலையில் கூட எண்ணவில்லை...

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒரு இணையதளம் தொடங்க போவதாக ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்...! அதன் தொடக்க விழாவை பதிவர்களின் துணையோடு செய்வதாகவும் மற்றும் இந்தியாவின் விடிவெள்ளி சிறுமி.விசாலினி அவர்களை பதிவர்கள் இணைந்து கௌரவிக்க வேண்டும் எனவும் அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்காக பதிவர்கள் கையால் 'மரம் நடுதல்' என்கிற விழிப்புணர்வு ஒன்று என அனைத்தையும் சேர்த்து ஒரே நிகழ்வாக நிகழ்த்த முடிவு செய்திருந்தோம்.....

ஒரு பத்து நாளுக்கு முன்பே இணையத்தில் இதனை செய்தியாக பகிர்ந்து, பின் அழைப்பிதழ் ஒன்றின் மூலமாக அனைவரையும் அழைக்க வேண்டும் என பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தோம்.....

ஆனால்

உடனே இந்த நிகழ்வை நாளையே நடத்தக்கூடிய அவசியம் ஏற்பட்டு விட்டது... அதற்கு உங்களின் ஆதரவையும், வாழ்த்தையும் எதிர்ப்பார்கிறேன்...

மூன்று முக்கிய நிகழ்வுகள் 

1. பதிவுலக உறவுகள் ஒரு நான்கு பேர் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்கு என்று ஒரு இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம்...இதன் மூலம் பல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள பட இருக்கின்றன...தளத்தின் பெயர் 'பசுமை விடியல்' 


பசுமை போராளிகள் 

செல்வகுமார்
பிரபு கிருஷ்ணா 
சூர்யபிரகாஷ் 


(தளத்தை பற்றிய விரிவான விவரங்கள் இனி தொடரும் பதிவுகளில் )

2.இந்தியாவின் விடிவெள்ளி விசாலினியை கௌரவிக்கும் விதமாக பதிவர்களின் சார்பில் நடக்க போகும் இந்த விழாவிற்கு திரு இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் (அம்பாசமுத்திரம்)  அவர்கள் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார். நம் அரசின் பார்வை இனி பட தொடங்கி விடும் என்றே எண்ணுகிறேன்...நம்மால் இயன்ற மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம். அது நமது கடமை அல்லவா...?

3 . பசுமை விடியலின் முதல் விழிப்புணர்வு பணியாக விழாவிற்கு வர இருக்கின்ற பதிவுலக நண்பர்களின் கையால் மரங்கள் நடப்பட்ட இருக்கிறது. 

இவை எல்லாம் நல்ல முறையில் நடைபெற உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.


மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதால் எல்லோரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க இயலவில்லை...இவ்விழாவினை குறித்த செய்தியை முகநூலிலும், ட்விட்டரிலும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அனைவரும் அவசியம் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

விழாவிற்கு வருகை தருபவர்கள் வசதிக்காக,
எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்

சங்கரலிங்கம் - 9597666800




பிரியங்களுடன் 
கௌசல்யா 


செவ்வாய், ஜனவரி 3

யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!




   பதிவர் திரு.சங்கரலிங்கம்  அவர்கள் தனது உணவுஉலகம் தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறேன்...தமிழகத்தில் இப்படி ஒரு அறிவார்ந்த சிறுமி இருப்பது தமிழர்கள் நமக்கு ஒரு பெருமைதானே ? நீங்களும் படித்து பாருங்கள் செய்தியை பலரிடம் கொண்டு சேருங்கள். வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன்றெடுத்த தாயும் , தந்தையும் !! 



ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

                                         

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 




15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.










                                                     
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச் செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
   

                                              

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
                                         


CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை. 



                  

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.




நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    
வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில், முக நூல், ட்விட்டர் போன்றவற்றில்  பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண்ணை ஊக்கபடுத்துவோமே...!

நன்றிகள் - இப்பதிவை பகிர எனக்கு ஊக்கம் அளித்த திரு.சங்கரலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.