வியாழன், ஜனவரி 19

10:02 AM
19



மார்கழி மாதம் பிறந்ததும் வாசலில் புதுக்கோலங்கள் மட்டும் பூக்கவில்லை, சில பண்டிகைகளும் தான்...! புத்தாடைகள், பலகாரங்கள், ஆட்டம் பாட்டம், குதூகலங்கள், வாண வேடிக்கைகள் என்று சுற்றிச் சுழன்றது  மார்கழியும் அதனை தொடர்ந்த தை மாதமும்...!

கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தமிழ் புத்தாண்டு(!) இப்படி மாறி மாறி மக்களின் மணி பர்சை காலி செய்யும் தினங்கள் அணிவகுத்து, அவை  முடியும் தருவாயும் வந்து முடிந்தே விட்டது. பண்டிகைகளை கொண்டாட சில பல காரணங்கள் இருந்தாலும் ஒரே காரணம் மக்கள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்பதுதான். ஆனால் எத்தனை சதவீத மக்கள் உண்மையான மகிழ்ச்சியில் கொண்டாடி இருப்பார்கள்...?! கொண்டாட்டங்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் சில வருத்தமான நிகழ்வுகளையும் நினைக்க தோணுகிறது.

ஏன் இந்த கோபம் ?

கடலூர், புதுச்சேரியில் 'தானே' புயல் கோரதாண்டவம் ஆடி சில வாரங்கள் ஆகின்றன...15 வருட உழைப்பை ஒரே நாளில் தொலைத்துவிட்டு திகைத்து நிற்கிறார்கள். சிதறி போன தங்களின் வாழ்வை மீண்டும் எதில் இருந்து தொடங்குவது என தெரியாமல் தவிக்கிறார்கள். தென்னை, வாழை போன்றவையும் பிரதான மரங்களான பலா, முந்திரியும் வேரோடு சாய்ந்து அவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து முடக்கிப்போட்டு விட்டது.பிற இடங்களை விட இங்குள்ளவர்களின் விவசாயம் வித்தியாசமானது, நெல்,கரும்பு போன்ற பயிர்களை சில மாதங்களில் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால் பலா, முந்திரி போன்றவை அப்படி அல்ல.ஒரு பலா மரம் வைத்து அது பலன் தர 15 வருடங்கள் !!


அங்குள்ள எனது நண்பர் ஒருவர் சொன்னார்,'அக்காவின் தோட்டத்திலிருந்த 1,500 பலா,முந்திரி,தென்னை மரங்களும் வீழ்ந்துவிட்டன, குடும்பத்தின் மொத்த வருவாயும் இதனை அடிப்படையாக கொண்டு தான் இருந்தது.  இனி என்ன செய்வார்கள் என தெரியவில்லை' என்று மிக வருந்தினார். ஒரு குடும்பத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து மரங்களாவது இருக்குமாம், அதை வைத்துதான் அவர்களின் வாழ்க்கை ! இப்போது அதையும் இழந்து செய்வதறியாது நிற்கும் இவர்களுக்கு பொங்கல் தினம் என்ற ஒன்று எத்தகைய நினைவை கொடுத்திருக்கும் ?!

சுனாமி கடலோர பகுதிகளை சுருட்டிக்கொண்டு போனபோது, 'நாம ஊருக்குள்ள தானே இருக்கிறோம், பிரச்னை இல்லை' னு ஒரு நொடியாவது நினைத்திருப்போம். இயற்கை இதை புரிந்துகொண்டது போல, 'அப்படியா நினைக்கிற, விட்டேனா பார்' என புயலாய் உருவெடுத்து ஊரை லேசாக தனது கையினால் தட்டி இருக்கிறது. எத்தனை கோடி சேதங்கள், அழிவுகள்...! சாய்ந்த மின்கம்பங்களையும், வீசி எறியப்பட்ட கூரைகளையும் செப்பனிட்டு விடலாம் ஆனால் வாழ்வாதாரமாக நம்பிய மரங்கள் போய்விட்டனவே...என்ன செய்வார்கள் அம்மக்கள் !?


வாழும்போதே நரகத்தை சற்று ருசித்திருக்கிறார்கள் ! தூரத்தில் இருக்கும் நாம் சுலபமாக சொல்லலாம், மாற்றுத் தொழிலை பார்த்துக் கொண்டால் போச்சு என்று ! ஆனால் அனுபவித்தால் தான் தெரியும் அந்த வலி, வேதனை...! அம்மக்கள் விரைவாக மீண்டு எழ இயற்கையை வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் தோணவில்லை எனக்கு...!

ஏன் இந்த அவஸ்தை ?

வட தமிழகத்தில் ஒரு பக்கம் பண்டிகை கொண்டாட இயலாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்றால் தென்பகுதியில் வித்தியாசமான அவஸ்தை ஒன்றை இப்பண்டிகை நாட்களில் இந்த மக்கள் சந்தித்தார்கள்

பழி(லி) ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதை போல் எங்கோ நடந்த ஒரு வருந்த தகுந்த ஒரு கொலை சம்பவம் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்வை சிரமபடுத்திவிட்டது. பண்டிகை நாட்களில் பயணிக்க பேருந்துகள் சரிவர இயங்கவில்லை, எப்போது வரும், வருமா வராதா எனவும் வெளியூர் போனால் திரும்பி வர பேருந்து இருக்குமா எனவும் தெரியாமல் தவித்துவிட்டார்கள்.

ஒரு மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சமயங்களில் ஐந்து மணி நேரம் கூட ஆனது...இரவு நேரங்களில் பேருந்து பயணம் என்பது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவிட்டது. பேருந்துகள் தனியாக சென்றால்  வழி மறிக்கப் படலாம் என இரண்டு மூன்று பேருந்துகள் சேர்ந்ததும் அனுப்பப்பட்டது, காவல் துறையினரின் துணையுடன் பயணிக்கின்றன சில பேருந்துகள் !?

பெரும் ஆபத்துகள் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஓட்டுனரும், மக்களும் பயணிக்கின்றனர். (இதனை விரிவாக எழுதவும் மிக யோசிக்கவேண்டியதாக இருக்கிறது) அதுவும் இந்த பொங்கல் சமயத்தில் அல்லல்படுவதென்னவோ சாமானிய மக்கள்தான்.

இன்னும் கூட எப்போது எத்திசையில் இருந்து எந்தவிதமான பூதங்கள் கிளம்புமோ என்கிற ஒரு வித சிந்தனையில் உழலுகின்றனர் சில மக்கள். ஒரு கை வியாபாரத்தை கவனிக்க கடைக்காரரின் மற்றொரு கை கடையின் ஷட்டரின் மேல் இழுத்து மூட தயாராக !!

நகரங்களில் இதன் பாதிப்புகள் அவ்வளவாக இல்லை என்றாலும் இங்குள்ள சில கிராமங்களில் சிலரிடம் 'என்ன பொங்கலு' என்ற ஒரு சலிப்பு வந்துவிட்டது. விலைவாசி உயர்வு பொதுவான ஒன்றுதான் என்றாலும் அபரீதமான பேருந்து கட்டண உயர்வு போன்றவை சாமானிய மக்களை வருத்தி எடுக்கிறதை பேருந்தில் பயணிக்கும் போது கவனிக்க முடிந்தது.(கணக்கு கேட்டு ஒரு வழி பண்றாங்க ஜனங்கள் ! பாவம் இந்த நடத்துனர்கள் !) 

இயற்கை தனது கோர முகத்தை ஒரு பக்கம் காட்டினால் சில மனிதர்கள் தங்களின் கோரமுகத்தை காட்டுவதால் ஏற்படும் இன்னல்கள் மற்றொரு புறம்.

இது போன்ற நிலையில் வந்து போன பொங்கலும் புத்தாண்டும் வருடத்தில் அதுவும் ஒரு தினம் என்பதாக கடந்து...சென்றே விட்டது...!!

கூடங்குளம் 

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது  மக்களின் உண்ணாவிரதம் ! சுயநல மனிதர்கள் நிறைந்த உலகில் எந்தவித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாக போராடி கொண்டிருக்கும் இம்மக்களை பற்றி ஆரம்பத்தில் பெரிதுபடுத்திய மீடியாக்கள், இணையம் உட்பட அனைத்தும் இப்போது சற்று தொய்வடைந்து விட்டன...இவர்களின் போராட்டத்தின் முடிவு எப்போது, எவ்வாறு, யாரால் என்று தீர்மானிக்க முடியா நிலையில் இவர்கள் நடுவிலும் பல பண்டிகைகள் வந்து சென்று விட்டன எந்தவித மகிழ்ச்சியையும் முழுதாய் கொடுக்காமல்...!!

முல்லை பெரியாறு 

ஆறு மாவட்ட மக்கள் தமது பகுதியில் இப்போதும்,எதிர்காலத்திலும் தொடர்ந்து விவசாயம் நல்லமுறையில் நடக்குமா என்ற கேள்விக்குறியுடன் முல்லை பெரியாறை எதிர்பார்ப்புடன் பார்த்துகொண்டிருக்கும் ஒரு நிலை...! இவர்களுக்கும் மிக நெருங்கிய சம்பந்தப்பட்டதுதான் பொங்கல் ! 

பொதுவா சொல்றேனுங்க !!

தன்னம்பிக்கை மிக்க நம் மக்கள் தங்களின் உழைப்பு, திறமை கைக்கொண்டு விரைவில் மீண்டு எழும் அந்நாளே அவர்களுக்கு உண்மையான பண்டிகைநாள்.

பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகளை/விவசாயத்தை நினைவு கூறுவதற்காக இருக்கவேண்டும். ஆனால் இப்ப யாருங்க விவசாயத்தை மதிக்கிறாங்க...?! ஊருக்கே உணவு கொடுக்கிற அவர்களை நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம், ஒரு சக மனிதராக கூட நினைக்காத நிலை தானே இருக்கிறது. முதலில் விவசாயத்திற்கு நல்ல ஒரு அங்கீகாரம் கொடுக்கபட வேண்டும். சமுதாயத்தின் பார்வையில் சராசரியை விட கீழாக பார்க்கபடுகிற அவர்களின் நிலை மாறவும் வழிவகை(?!) செய்துவிட்டு இந்த பொங்கலை சிறப்பாக அவர்களுடன் இணைந்து கொண்டாடும் வரை இது போன்ற தினங்கள் வெறும் விடுமுறை தினமாக மட்டுமே தெரிகிறது.

தொலைகாட்சிகள், பத்திரிக்கைகளும் நாடே சுபிட்சமாக இருப்பது போல தீவு திடல், பொருட்காட்சிகள், கடற்கரைகள்,திரையரங்குகள்  போன்றவற்றில் அலைமோதும் மக்கள் கூட்டத்தினரை காண்பித்து 'இதோ மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்' என விளம்பரபடுத்துகிறது.அதை பார்த்த மற்றவர்கள் 'அட நாம தான் அல்லல் படுறோம், ஆனா மத்தவங்க சந்தோசமா வாழ்க்கைய எப்படியெல்லாம் அனுபவிக்கிறாங்க' என்று பெருமூச்சுவிடுவதுடன் முடிந்துவிடுகிறது இன்றைய பண்டிகை நாட்கள் !!

எது எப்படியோ !? வார்த்தைகளில் வாழ்த்துக்களை நாம்  பரிமாறிகொள்வோம்...வாழ்த்துக்களில் மட்டுமாவது வாழ்ந்து கொள்ளட்டும் நம் பாரம்பரிய பண்டிகைகள் !!?


பிரியங்களுடன்
கௌசல்யா


படங்கள்-நன்றி கூகுள் 
Tweet

19 கருத்துகள்:

  1. இதற்கு முன்பு ஒரு மாநிலத்தவருக்கு மற்ற மாநிலத்தவரின் பாதிப்புகள் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது பக்கத்து ஊர்க்காரனின் பாதிப்புகள் கூட நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. இதற்கு காரனமே ஊடகங்களின் அயோகியத்தனம்தான், தங்கள் நலனுக்காக மட்டுமே அவை செயல்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு மேல் அவைகள் ஒரு செய்தியை தொடர்வது இல்லை.

    இன்னும் சில வருடங்களில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஏதாவது நடந்தால்கூட நமக்கு தெரியாமல் போகும்..

    உட்சபட்ச அயோகியத்தனமே கூடங்குளம் போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி சில நாதாரிகள் கோசம் போடுவது..

    வாழ்க வடிகட்டின அயோக்கியத்தன ஜனநாயகம்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி நலமா ? சாமான்ய மக்களின் மீதான தங்களின் அக்கறைக்கு பாராட்டுக்கள் .சாமான்ய மக்களின் மீது அக்கறை காட்டும் மன நிலை கிடைக்க புண்ணியம் செய்திருக்கவேண்டும் .

    பதிலளிநீக்கு
  3. இன்று தமிழகம் உள்ள நிலையைத்
    தெளிவாகவும் விரிவாகவும் இப் பதிவின் மூலம் விளக்கியுள்ளீர்
    உண்மை நிலையை படம் போல
    பதிவு காட்டுகிறது!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. //வாழும்போதே நரகத்தை சற்று ருசித்திருக்கிறார்கள் ! தூரத்தில் இருக்கும் நாம் சுலபமாக சொல்லலாம், மாற்றுத் தொழிலை பார்த்துக் கொண்டால் போச்சு என்று ! ஆனால் அனுபவித்தால் தான் தெரியும் அந்த வலி, வேதனை...! அம்மக்கள் விரைவாக மீண்டு எழ இயற்கையை வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் தோணவில்லை எனக்கு...!//

    மிகவும் துயரமான சம்பங்களே!
    படிக்கும் போதே மனதுக்கு மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. புதுச்சேரி பற்றிய செய்தி மனதிற்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கியது. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டு பணம் பண்ணும் ஊடகங்கள், இது மாதிரியான மக்களுக்கு உருப்படியாக ஏதும் செய்தால் நன்று. என்னசெய்வது இந்த சுயநல உலகத்தில் பொதுநலத்தை உங்களைப்போன்றவரகளிடம் தான் பார்க்க முடிகிறது.

    சமூக சேவை செய்யும் எண்ணம் இருந்தும், என்னால் செய்ய முடியவில்லை என்று வருந்துகிறேன். வளர்க உங்களது சேவை.

    பதிலளிநீக்கு
  6. எது எப்படியோ !? வார்த்தைகளில் வாழ்த்துக்களை நாம் பரிமாறிகொள்வோம்...வாழ்த்துக்களில் மட்டுமாவது வாழ்ந்து கொள்ளட்டும் நம் பாரம்பரிய பண்டிகைகள் !!? //

    அனைவரின் மன நிலையையையும்
    மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

    பதிலளிநீக்கு
  7. >>>>வட தமிழகத்தில் ஒரு பக்கம் பண்டிகை கொண்டாட இயலாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்றால் தென்பகுதியில் வித்தியாசமான அவஸ்தை ஒன்றை இப்பண்டிகை நாட்களில் இந்த மக்கள் சந்தித்தார்கள்

    உண்மைதான்.. கட்டுரையின் நோக்கம் நேர்மையானது.. ஏற்றுக்கொள்ளக்கூடியது

    பதிலளிநீக்கு
  8. @@ கே.ஆர்.பி.செந்தில் said...

    //இன்னும் சில வருடங்களில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஏதாவது நடந்தால்கூட நமக்கு தெரியாமல் போகும்..//

    நகரங்களில் ஒரு சில இடங்களில் இப்போதே அப்படிதான் இருக்கின்றன. மனிதன் மிக குறுகிய வட்டத்திற்குள் தான் நிற்கிறான். அதை விட்டு வெளியே வர அவனது சுயநலம் தடுக்கிறது.

    //உட்சபட்ச அயோகியத்தனமே கூடங்குளம் போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி சில நாதாரிகள் கோசம் போடுவது..//

    அங்கே நடக்கும் போராட்டங்கள் தங்களுக்கும் சேர்த்துதான் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.

    உங்களின் உள்ள உணர்வை மதிக்கிறேன் செந்தில். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. @@ koodal bala said...

    //வணக்கம் சகோதரி நலமா ?//

    வணக்கம் பாலா. நலம்.

    நான் இங்கே வெறும் எழுத்தில் பேசி கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி அல்ல, செயலில் காட்டி கொண்டிருக்கிறீர்கள்.

    உங்களை போன்றோரின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும், உங்களை ஊக்கபடுத்தவேண்டியது எங்கள் கடமை.

    இயன்றால் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. @@ புலவர் சா இராமாநுசம் said...

    //இன்று தமிழகம் உள்ள நிலையைத்
    தெளிவாகவும் விரிவாகவும் இப் பதிவின் மூலம் விளக்கியுள்ளீர்
    உண்மை நிலையை படம் போல
    பதிவு காட்டுகிறது!//

    வணக்கம்.

    இயன்றவரை சொல்ல முயன்றேன்.உண்மையில் இங்கே சொன்னவை மிக குறைவு. விரிவாக சொல்லவும் அதிகம் யோசிக்கவேண்டியதாக இருக்கிறதே. :)

    உங்களின் அருமையான புரிதலுக்கு என் நன்றிகள் அப்பா.

    பதிலளிநீக்கு
  11. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...

    //மிகவும் துயரமான சம்பங்களே!
    படிக்கும் போதே மனதுக்கு மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது.//

    பிறரின் துன்பத்தை அறிந்து வருந்தும் உள்ளம் உங்களை போல் எல்லோருக்கும் இருபதில்லை. இதிலும் குற்றம்குறை ஏதாவது இருக்கிறதா என தேடிகொண்டிருக்கிறது ஒரு சில சுயநல மனித உள்ளம்.

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  12. @@ FOOD NELLAI said...

    நன்றிகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  13. @@ Mano said...

    // பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டு பணம் பண்ணும் ஊடகங்கள், இது மாதிரியான மக்களுக்கு உருப்படியாக ஏதும் செய்தால் நன்று. //

    புதிய தலைமுறை தொலைக்காட்சி உடனே இதற்கான முயற்சிகள் மேற்கொண்டு உதவிகள் செய்து வருகிறது...
    கண்டிப்பாக அவர்களை பாராட்டலாம்.

    உங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. @@ Ramani said...

    //அனைவரின் மன நிலையையையும்
    மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    மனம் கனக்கச் செய்து போகும் பதிவு//


    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  15. @@ சி.பி.செந்தில்குமார் said...

    //உண்மைதான்.. கட்டுரையின் நோக்கம் நேர்மையானது.. ஏற்றுக்கொள்ளக்கூடியது//

    புரிதலுக்கு நன்றிகள் செந்தில்.

    பதிலளிநீக்கு
  16. "இது போன்ற நிலையில் வந்து போன பொங்கலும் புத்தாண்டும் வருடத்தில் அதுவும் ஒரு தினம் என்பதாக கடந்து...சென்றே விட்டது...!!"

    இதே நிலைதான் பாதிக்கப்பட்ட இடங்களில்.

    பதிலளிநீக்கு
  17. ஊடகங்களில் அக்கறையுடன் செயல்பட்டது புதியதலைமுறை மட்டுமே... தானே புயலின் பாதிப்புகளை தொடர்ந்து வெளிப்படுத்தியதில் அதன் பங்கு அதிகம். அதற்காக அவர்களை பாராட்டியே தீரவேண்டும். ஆனந்தவிகடன், பாக்யா போன்ற இதழ்கள் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி வசூல் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  18. ந.இராமநாதன்.11:34 PM, ஜனவரி 21, 2012

    தமிழனின் துயரப் பட்டியலில் ஈழத்தமிழர், தமிழக மீனவர்கள், காவிரி பாசன விவசாயிகள் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதுவரை தமிழர்களின் போராட்டங்கள் அனைத்தும் உணர்ச்சிகரமான ஒன்றாக மட்டுமே இருந்தன. அறிவுப்பூர்வமான, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே நாம் வெற்றியடைய முடியும் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...