நம்மவர்கள் ஏன் அடிக்கடி தமிழ் தமிழ்னு அடிச்சிகிறாங்கனு கொஞ்சம் குழப்பமா இருந்தது இப்பதான் ஓரளவு புரிகிறது...! எப்போதும் ஏதாவது ஒன்று மக்களின் தமிழ் உணர்வை தூண்டி விட்டுவிடுகிறது, அது போன்ற சமயத்தில் மட்டும் தான் தமிழர்கள் என்கிற ஞாபகமே வருகிறது...
இப்படித்தான் என் தமிழ் உணர்வை தட்டி(?) எழுப்பி விட்டது ஒரு பாடல்...எங்க வீட்டு சின்ன வாண்டு பொதுவா சினிமா பாட்டை தப்பு தப்பா அரைகுறையா பாடுவான், ஆனா ஒரு பாட்டை ரொம்ப சரியா அழுத்தமா பாடினான்...அது எப்படின்னு ஆச்சர்யபட்டு முழுசா அந்த பாட்ட கேட்டேன், சும்மா சொல்லகூடாது...முதல் முறையா கேட்ட உடனேயே பிடித்துவிட்டது...ஆனா இதை ஒரு பாட்டா, இசையா மட்டும் எடுத்துக்காம 'தமிழ் மொழியே நாஸ்தியாகி விட்டது' என்ற ஒரு சிலரின் பேச்சுகள் எனக்கு மிகுந்த ஆச்சர்யம்...!
ஏதோ ஒரு விதத்தில இந்த பாட்டு தமிழ்நாட்டை தாண்டி எங்கையோ போய்டுச்சு...! பல மொழியினரும், கடல் தாண்டி உள்ளோரும் கூட ஒரே பாட்டை பல விதத்தில மாற்றி மாற்றி பாடி சந்தோசப்பட்டு கொள்கிறார்கள், தமிழ் நாட்டை கடந்து செல்லும் போது தமிழ் பாட்டு(?) என்றுதான் சொல்கிறார்கள்...!! தமிழின் பெருமை(?) இந்த விதத்தில் பரவுகிறது என்று சகித்துக்கொண்டு, சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான்.
சொல்லபோனா இந்த பாட்டுல ஆங்கிலத்தைதான் கொலை பண்ணி இருக்காங்க ...!! அதை பார்த்து இங்கிலீஸ்காரனுக்கு தானே கோபம் வந்திருக்கணும் !! :)
இந்த மாதிரி சாதாரணமா எடுத்துக்கிறத விட்டுட்டு, இந்த பாட்டில் தமிழ் இல்லை, இது போன்ற பாட்டால் தமிழ் மொழி அழிந்துவிடும்...அப்படி இப்படின்னு ஒரு சிலர் ஓவரா பில்டப் கொடுக்கிறதா பார்த்தா சிரிக்காமல் இருக்க முடியவில்லை...!ஒருத்தர் சொல்றார் "தமிழ் அழிய போகுது', அப்புறம் ஒருத்தர் கேட்கிறார், "தமிழ் மெல்ல சாகுமோ", இது கூட பரவாயில்லை, இன்னொருத்தர் ஒரே போடா போட்டாரு,"தமிழ் செத்தே போச்சு"ன்னு !!என்ன கொடுமைங்க இது...?! தமிழ் என்னவோ நேத்து பிறந்து, இன்னைக்கு வளர்ந்து, நாளைக்கு சாக போற ஒரு ஜந்துவா...?!
தவறு யாரிடம் ...!?
ஏதோ ஒரு பாட்டு தமிழின் பெருமையை கெடுத்துவிட்டது, அழித்துவிட்டது என்று எப்படி சொல்வது...அந்த அளவிற்கு தமிழ் மொழி என்ன சாதாரணமா? ஒரு பாட்டால், ஒரு திரை படத்தால் தமிழ் அழிகிறது என்று சொல்பவர்கள் ஒரு நிமிடம் நிதானித்து யோசித்து சொல்லுங்கள்...
* தமிழனிடம் பேசும் போது, தமிழில் மட்டும்தான் பேசுகிறேன்.
* பேச்சில், எழுத்தில் தேவையின்றி ஆங்கிலம் இருக்கவே இருக்காது.
* என் குழந்தைகள் தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள்.
* ஆங்கில மீடியத்தில் படித்தாலும் கட்டாயம் தமிழ் ஒரு பாடமாக இருக்கும்.
* குழந்தைகள் வீட்டில்/வெளியே தேவையின்றி ஆங்கிலம் பேசுவதை ஊக்குவிக்க மாட்டேன்.
* கையெழுத்தை தமிழில் போடுகிறேன்.
குறிப்பா குழந்தைகள் பெயராவது தமிழில் இருக்கிறதா ?
இல்லையா ? அப்புறம் எதுக்கு இப்படி தமிழ் தமிழ்னு குரல் கொடுத்துட்டு...?!!
நம்ம ஊரில் கம்பன் விழா, திருக்குறள் விழா போன்றவை அடிக்கடி நடத்தபடுகிறது என்பதாவது சிலர் தவிர்த்து பலருக்கு தெரியுமா ?!என்றாவது ஒருநாளாவது சென்று கலந்துகொண்டது உண்டா?
எல்லோரும் நம் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கிலவழியில் தான் படிக்கவைக்கிறோம், இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் தமிழ் வழியில் படிப்பது என்பதே மறைந்து போகும். தமிழ் பேச தெரிந்த பிள்ளைகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரியாமல் போய்விடும்.
முதலில் தமிழுக்கு உண்மையான கௌரவத்தை நாம் கொடுப்போம்...நம் வீட்டை தமிழ் படுத்துவோம்...அப்புறம் தேவை என்றால் நாட்டை பற்றியும் பிறரை பற்றியும் வரிந்து கட்டிக்கொண்டு குறை பேசலாம்.
நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் எத்தனை தமிழ் சான்றோர்கள், பெரியவர்கள் கவனிக்கபட்டார்கள்...?!! எத்தனை தமிழ் அறிஞர்கள் பாராட்டி கெளரவபடுத்தப் பட்டார்கள்...?! கல்லூரியில் தமிழ் இலக்கியம் எத்தனை பேர் விரும்பி எடுக்கிறார்கள்...? வேறு பாடம் கிடைக்காத போது, ஒரு வருடம் வீணாக போய்விடும்,சும்மா படிச்சி வைப்போம் என்றே இறுதியில் எடுக்கப்படுகிறது 'பி ஏ தமிழ் இலக்கியம் ' !!(வெகு சிலரே விரும்பி எடுக்கிறார்கள்) அப்படியே தமிழ் இலக்கியம் படித்தாலும், படிக்கும் காலத்திலும், அதற்கு பிறகும் அப் படிப்பிற்கு என்ன மரியாதை இருக்கிறது...?! ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன் என்கிற போது வியப்பில் உயர்த்தபடும் புருவம், தமிழ் என்றதும் 'தமிழா ?!!' என்கிற இகழ்ச்சியான பார்வைதான் !!
தமிழ் என்பது மொழி அதுவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பழம்பெருமை வாய்ந்தது. தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருக்கும் தமிழர்களால் பேசப்பட்டு வருகிறது...கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 7 ,000 மொழிகள் அழிந்துவிட்டன, இதை வைத்து தமிழும் அழிந்துவிடும் என்று எண்ணுவது தேவையில்லை. தமிழ் நிச்சயம் அழிய வாய்ப்பே இல்லை, உலகெங்கும் பரவலாக தன் வேர்களை ஊடுருவ செய்து கிளைகளை பரப்பி கொண்டிருக்கிற உயிருள்ள, துடிப்பான, உணர்வுள்ள மொழி நம் தாய்மொழி தமிழ்.
நம் மொழி எப்போதும் போலத்தான் இருக்கிறது...ஒரு சிலரின் அதீத ஆர்வகோளாறு பேச்சால், நடவடிக்கையால் தான் தமிழ் என்னவோ கீழே விழுந்துட்டு இருக்கிற மாதிரியும் இவங்க எலோரும் சேர்த்து தூக்கி பிடிப்பதும் போலவும் இருக்கிறது.
வெளிநாடு வாழ் தமிழர்கள் !
தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தான் உண்மையில் தமிழை விடாமல் இருக்கிறார்கள். அந்நாட்டின் கலாச்சாரம் எதுவும் தங்களை ஆட்கொண்டுவிடாமல் கவனமாக இருக்கிறார்கள், தமிழை உண்மையாக நேசிக்கிறார்கள், தமிழன் என்று சொல்வதில் பெருமை படுகிறார்கள்.
அதிலும் ஈழ தமிழர்களின் தமிழ் பேசும் அழகே அழகு...! வெளிநாடுகளில் தமிழ் சென்று கிளை பரப்ப நம் உடன்பிறவா ஈழத்து புலம் பெயர்ந்த சகோதர சகோதரிகள் மிக பெரிய காரணம். பிற மொழியின் தாக்கம் அவ்வளவாக இல்லாமல் அவர்கள் பேசுவதை பார்த்தாவது நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால் இங்கே தமிழ் பேசினால் தமிழன் என தெரிந்துவிடுமோ என்று ஆங்கிலத்தில் பேசுவது அல்லது பல்லை இறுக்கி கடித்துக்கொண்டு அரைகுறையாக வாக் பண்ணி, ரீட் பண்ணி, குக் பண்ணி, டிரைவ் பண்ணி என்று அருமையான(?) 'பண்ணி' தமிழில் பேசுவது என்று தமிழன் தன்னை வேறு மாதிரி காட்டி கொண்டிருக்கிறான். செந்தமிழில் பேசுவது சிரமம் என்றால் சாதாரணமான (பேச்சுத்) தமிழிலாவது பிற மொழி கலப்பின்றி பேசலாமே...!
ஆங்கிலத்தை ஒரு மொழியாக பார்ப்பதை விட்டு விட்டு அறிவாக பார்க்கும் நம் மனநிலை என்று மாறுவது...?!
மாற்றம் என்பது இயல்பு !
அப்பா அம்மா என்று அழைக்கவேண்டிய குழந்தை டாடி மம்மி என்றதும் அந்த மாற்றத்தை மகிழ்வுடன் வரவேற்றோம். அப்போது தொடங்கிய மாற்றம் இன்று வரை அசூர வளர்ச்சியில் போய்க்கொண்டிருக்கிறது. அன்றே இது வேண்டாம் என நம்மால் ஏன் தடுக்க/தவிர்க்க இயலவில்லை...மாற்றம் பிடித்திருந்தது...ரசித்தோம்...தூக்கி வைத்து கொண்டாடினோம்...மாற்றம் இயல்பு தானே என சமாளித்தோம்...!!
இப்போது நடக்கும் இந்த மொழியின் மாற்றத்தையும் வேறு வழியின்றி சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்நிய மொழி மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் நாம், அது இன்று விருட்சமாகி இருக்கிறது. இப்போது போய் ஐயகோ தமிழ் செத்து போய்டுமே, என்று கதறுவது வேடிக்கைதான். தமிழ் மரிக்கவில்லை, இனி மரிக்கவும் வாய்ப்பில்லை ! தமிழ் மொழி மாற்றதுக்குட்பட்டு இருக்கிறது...அவ்வளவே !!
மொழி மேல் அளவு கடந்த அக்கறையும் பாசமும் இருந்தால் வெறும் வாயளவில் தமிழ்,தமிழ் என்று மட்டும் சொல்லி கொண்டிராமல் முதலில் பிற மொழி கலவாமல் நாம் பேசுகிறோமா என்று சீர் தூக்கி பார்ப்போம்..
அனைத்திலும் தமிழனாக இருங்கள், பிறமொழி கலவாமல் பேசுங்கள்... எழுதுங்கள்...குழந்தைகளை பேசச்சொல்லி பழகுங்கள்...தமிழரோடு பேசும்போது தமிழில் மட்டும் பேசுங்கள்...அவசியம் ஏற்படும் இடங்களில் மட்டும் ஆங்கிலத்தை துணைக்கு அழையுங்கள். மாற்றத்தை உங்களில் இருந்து தொடங்குங்கள்...!
மனம் நொந்து(!) போன ஒரு அனுபவம்
இந்த பாட்டையும் அதனை தொடர்ந்த சர்ச்சைகளையும் கேட்டபின், மூன்றாம் வகுப்பு படிக்கும் என் பையனின் தமிழ் முதலில் எந்த விதத்தில இருக்குனு, அவனை கூப்பிட்டு 'அ,ஆ,இ எழுது, அம்மா தெரிஞ்சிக்கணும்' என்றேன்...அவனும் பேப்பரை வாங்கி வேக வேகமா எழுதி திருப்பி கொடுத்தான். 'அட சரியாத்தான் வளர்த்திருக்கிறோம்'னு பெருமையா பேப்பரை பார்த்தேன், அ ஆ... எழுதி 'ஒ' மேல சுழிச்சி(ओ இதில் இருப்பதை மாதிரி) , அடுத்து 'ஓ' பக்கத்துல : இப்படி போட்டு இருந்தான். 'என்னடா இது'ன்னு கேட்டா 'தமிழ்' என்கிறான்...?! அவன் மேல எனக்கு கோபம் வரல, தவறு என் மீதுதான்...முதல் மூன்று வருடங்கள்(from LKG) தமிழ் படித்தது போதும்(?) என்று 2ஆம் வகுப்பில்(CBSE) இருந்து இந்தியை மொழி பாடமாக படிக்க வைத்ததின் பலன் இது !!
அப்புறம் மறுபடி பதிவின் ஆரம்பத்திற்கு வருகிறேன், தமிழ் திரைப்படங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள் பல இருக்கின்றன, அதை கேட்கும் நம் குழந்தைகள் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ பாடுகின்றன அதை கேட்க்கும் பெரியவர்களுக்கு தான் சங்கடமாக இருக்கிறது. கொலைவெறி பாடலில் தமிழ் இல்லை என்று கொடி பிடிப்பவர்கள், முடிந்தால் மோசமான இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்களை பற்றிய உங்களின் கோபத்தையும் பதிவு செய்யுங்களேன்.
வெல்க தமிழ் !! உயர்க அதன் புகழ் !!
பின் குறிப்பு
முதலில் என் வீட்டை சரி செய்து கொள்வேன் என முடிவு செய்து கொண்ட பின்பே இப்பதிவை எழுத தொடங்கினேன். உண்மையில் என் இரண்டாவது பையனுக்கு தாய்மொழியை சரியாக அறிய வைக்காமல் விட்டது எனது குற்றம் ! அடுத்த வருடம் இந்திக்கு பதில் தமிழுக்கு மாற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.இந்தியை தனியாக படிக்க வைத்துக்கொள்ளலாமே ! புது வருடத்தில் பல உறுதி மொழி எடுத்திருப்போம், நான் எடுத்த உறுதிமொழி இது...!
என் மன மாற்றத்துக்கு வித்திட்ட அப்பாடலுக்கு என் நன்றிகள் !
படங்கள் - நன்றி கூகுள்