வியாழன், ஜூன் 17

குறைகள் அல்ல பிழைகள் - தாம்பத்தியம் பாகம் 7

முந்தைய பதிவு 


குறைகள் அல்ல பிழைகள்

ஆண்களின் குறைகள் 

குறை என்ற வார்த்தை எனக்கு குறையாகவே தெரிகிறது. குறையை சரி செய்வது சிரமம். எல்லாமே  பிழைகள் தான், இயன்றால் திருத்தி கொள்ளலாம், அல்லது மாற்றிக்  கொள்ளலாம்! வாழ்க்கை வாழ்வதற்கே!!   

திறமைகளை அங்கீகரிக்காத தன்மை 

இயற்கையாகவே  பெண்கள் அனைவருமே ஏதாவது ஒரு தனி  திறமையை பெற்றவர்களாக தான் இருப்பார்கள்.  அது என்னவென்று பார்த்து அதை செய்வதற்கு உற்சாக படுத்தலாம்...! இதனால் அவர்களின் மனம் மகிழ்ச்சி அடைவதுடன், கணவரிடம் பாராட்டை பெறவேண்டும் என்ற உற்சாகத்தில் இன்னும் சிறப்பாக செய்து அசத்துவார்கள். (பதிவுலகில் இருக்கும் பல பெண்களும் தங்கள் கணவர் கொடுக்கும் ஊக்கத்தில் தான் எழுதுகிறார்கள் என்பது என் அபிப்பிராயம்! கொடுத்து வைத்தவர்கள், நான் உள்பட)

ஆனால் சில ஆண்கள் தங்களது மனைவியை சுதந்திரமாக செயல் பட விட்டால் எங்கே நம்மை மதிக்காமல் போய்விடுவாளோ என்ற குறுகிய மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இப்படி பட்டவர்கள் தான் மனைவியின் எந்த கருத்துகளுக்கும் மதிப்பு கொடுப்பதே இல்லை.  

பொறுமை இல்லாத தன்மை 

குடும்பம் என்றால் பல சிக்கல்களும் வரத்தான் செய்யும், ஆனால் எதையும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று பொறுமை இல்லாமல், அவசரப்படும் கணவர்களால் பெண்கள் பல நேரம் அவதி படுகிறார்கள். எதையும்  பொறுமையுடன் நோக்கும் சிறந்த குணம் பெண்களுக்கு  இருப்பதால்தான் பல வீடுகளிலும் தாம்பத்தியம் தள்ளாடாமல் போய் கொண்டு இருக்கிறது.

மனைவியையும் கொஞ்சம் கவனிங்க!

பல ஆண்களும் செய்யும் பெரிய தவறே மனைவியின் உணர்வை மதிக்காமல் அலட்சியப்படுத்துவது...?  அவளுக்கும் சில ஆசைகள் இருக்கும், அதை  புரிந்து கொண்டு அல்லது அவளிடமே கேட்டு முடிந்தவரை நினைவேற்றினால் தன் விருப்பமும் நினைவேறுகிறது என்ற மகிழ்ச்சியில் உங்களிடம் இன்னும் அதிகமாக அன்பு செலுத்துவாள். அப்புறம் என்ன ?  நீங்க ( அன்பால் )சுத்திவிட்ட பம்பரம்தான் அவள்...!!  ஒரு சின்ன ஆதரவான அணைப்பு ஒன்றே போதும் பல காவியங்கள் அங்கே பிறக்கும்.   ( இவ்வளவு சொன்னால் போதும் என்று நினைக்கிறேன், நான் எதை பற்றி சொல்கிறேன் என்று புரிந்து இருக்கும்...?!)   


அலட்சியம் (அதிகார மமதை)


உயர்ந்த  பதவியில் (உதாரணமாக அரசாங்க அதிகாரி) இருக்கும் சில கணவர்கள், வீட்டுக்கு வந்த பின்னும் தங்களது அதிகாரத்தை வீட்டிலும் காட்டுவார்கள்.  வீட்டையும் அலுவலகமாக எண்ணி அங்கே கிடைத்த அதே அளவு மரியாதையை இங்கும் எதிர் பார்ப்பார்கள். வீட்டில் இருக்கும் மனைவி ஒன்றும் சம்பளம் வாங்கும் அலுவலக பணியாள் இல்லையே ? 

வீட்டிற்கு வரும்போது வாசலில்  செருப்பை கழட்டும் போதே தனது பதவி  போர்வையையும் கழட்டி விட்டு உள்ளே செல்ல வேண்டும். அப்போதுதான் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இருக்க முடியும். 

பதவி காலம் முடிந்து ஓய்வு பெற்றபின், இதே மனைவியின் முகத்தை தான் பார்த்து, வாழ்வின் மீதி காலத்தை ஓட்ட வேண்டும் என்பதை நினைவில் வைத்து  நடந்துக்  கொள்ளுங்கள். "அன்பை இப்போது விதைத்தால் தான், பின்னால் அதே அன்பை பல மடங்காய் அறுவடை செய்ய முடியும்"    

சில தொழிலதிபர்களும் இதே ரகம் தான்!  வெளியில் இருக்கும் டென்சனை வீட்டிலும் அப்படியே பிரதிபலிப்பார்கள்.  அப்படி கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக ?, தன் மனைவி மக்களுக்காக தானே! உங்கள் பணம் கொடுக்கும் சந்தோசத்தை விட, அவர்கள் அருகாமையில் அன்பாக நீங்கள் இருக்கும்போது கிடைக்கும் சந்தோசம் பெரிதல்லவா?

கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கொஞ்ச நேரத்தை அவர்களுக்கே அவர்களுக்காக  ஒதுக்குங்கள். ஒரு நல்ல தகப்பனாக, நல்ல கணவனாகத்தான் இருக்கிறோம் என்ற மனநிறைவாவது உங்களுக்கு கிடைக்கட்டும்!!

மனைவிக்கு உண்மையாக இருங்கள் (இயன்றவரை)!!? 

உங்களை மற்றவர்கள் மதிக்கணும் என்று எதிர்பார்க்கும் அதே நேரம், உங்கள் மனைவி உங்களை முதலில் மதிக்கும் படி நீங்கள் நடந்து கொண்டாலே போதும், பிறரிடம் இருந்து மதிப்பு தானாகவே தேடிவரும்!!

இந்த பிரிவின் அடுத்த பாகம் நாளை வெளி வரும்... 
   



புதன், ஜூன் 16

தாம்பத்தியம் 6 - ஆண்களின் குறைகள் அல்ல பிழைகள்



குறைகள் அல்ல சில பிழைகள்


பல நிறைகளை கொண்ட ஆண்களிடம் கட்டாயம் இந்த குறைகளும் இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  குறைகளையும் தெரிந்துகொண்டால் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள எதுவாக இருக்கும் என்பதாலேயே இந்த குறைகளை விளக்க வேண்டியது அவசியமாகிறது .



மனைவி அமைவது எல்லாம்..

எல்லோருக்குமே ஒரே புரிதலுடன் கூடிய மனைவி அமைவது இல்லை. ஆனால் அமைந்த மனைவியை தனக்கு ஏற்றாற்போல், தன் பக்கம் கொண்டு வந்து சரி செய்ய அந்த கணவனால் மட்டும் தான் முடியும்.  அதற்கு தன்னிடம் உள்ள சிலபல குறைகள் என்னவென்று முதலில் உணர்ந்து சரி செய்ய முயல வேண்டும்.  நம்மிடம் என்ன குறை இருக்கிறது ? நல்ல ஆள் என்றுதானே எல்லோரும் சொல்கிறார்கள் என்று எண்ணுவது தவறு (உங்கள் மனைவி சொல்கிறாளா...?) மற்றவர்களைவிட உங்களிடம் நெருங்கி உறவாட கூடியவள் மனைவிதான்.  நீங்கள் நிறை என்று நினைப்பது அவளுக்கு குறையாக தெரியலாம்.

உதாரணமாக, கணவன் அமைதியான, அதிர்ந்துகூட பேசாத, மென்மையான நடவடிக்கை கொண்டவனாக நல்லவிதமாக இருக்கலாம் .  உண்மையில் இந்த குணம் கொண்ட ஆண்களை பல பெண்களுக்கு பிடிப்பது இல்லை என்பது ஆச்சரியம்தான்!!  ஆண் என்றால் கலகலப்பான, பேச்சிலும் சிரிப்பாலும் கலவரபடுத்துகூடிய கம்பீரம் கொண்ட ஆண் மகனாக தன் கணவன் இருக்கவேண்டும் என்பது பல இளம் பெண்களின் எதிர்பார்ப்பு.  ஆனால் இதற்காக மென்மையான குணம் கொண்டவர்கள் மனைவிக்காக தங்களது சுயத்தை இழக்க முடியாது, இழக்கவும் கூடாதுதான்....!!


பிறவி குணத்தை மாற்ற  இயலாது அதைவிட இந்த குணம்தான் சிறந்தது என்பதை மனைவிக்கு புரிய வைக்க வேண்டும்!!


புரிந்து கொள்ளும் தன்மை குறைவு 
பெண்கள் ஒரு ஆணிடம் அரைமணி நேரம் பேசினால் போதும், அந்த ஆணை பற்றி சுலபமாக எடை போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த ஆண்கள் அப்படி இல்லை, 40  ௦வருடம் ஒன்றாகவே வாழ்ந்திருந்தாலும் மனைவியை முழுதாக புரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.


ஒரு மனைவியால் தன் கணவனின் விருப்பங்கள் என்ன என்று தெரிந்து வைத்து அதன்படி நடக்கும் போது கணவனால் மட்டும் ஏன் அவ்வாறு இருக்க முடியவில்லை.  மனைவியை புரிந்து கொள்ள நேரம் ஒதுக்காத வரை கணவனால் தாம்பத்திய வாழ்வில் வெற்றி பெறவே முடியாது!       


மரியாதை கொடுக்காத தன்மை 

அவளும் எல்லா உணர்வுகளும் உள்ள சக மனுசிதான் என்று பலருக்கும் தெரிவது இல்லை.  அவள் படிக்காதவளாக இருந்தாலுமே அவளுக்கும் சுய மரியாதை, சுய கௌரவம்  எல்லாம் இருக்கிறது ஆங்கிலத்தில் சொல்வது போல் சம அந்தஸ்துள்ள பார்ட்னர், இதில் சில ஆண்கள் தான் என்னவோ ஒரு முதலாளியை போலவும் மனைவியை அடிமை போலவும் நடத்தும் நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது.  

செவி கொடுக்காத தன்மை

மனைவி பேசும் எதையும் காது கொடுத்து கேட்காத நிலைமைதான் பல வீடுகளில்...!  வீட்டில்  அடைந்து கிடக்கும் அவளுக்கு என்ன தெரியும்? என்ற மட்டமான ஒரு  எண்ணம் பல கணவர்களுக்கும் இருக்கிறது. ஒரு பிரச்னைக்கு ஆண்களால் ஒரு தீர்வைதான் யோசிக்கமுடியும், அதே நேரம் இந்த மனைவி பலவற்றை  அலசி ஆராய்ந்து பல தீர்வுகளை கண்டு பிடித்து வைத்திருப்பாள்.....! 

ஆண்களின் பார்வை குதிரையின் பார்வையை போன்றது, ஆனால் பெண்களின் பார்வை கழுகின் பார்வையை போன்று கூர்மையானது!! பெண்கள்  பிறப்பிலேயே எதையும் பகுத்து அறியும் அறிவையும், எதையும் சந்தேக கண்கொண்டு நோக்கும் இயல்பையும் பெற்றவர்கள்....! அதனால் எந்த பிரச்சனையையும் சுலபமாக எடுத்துகொள்வார்கள். மனைவி ஒரு மந்திரிதான் அவளை புரிந்து கொண்ட கணவனுக்கு!! 
possessiveness  

இந்த குணம் ஆண், பெண் இருவருக்குமே இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் கல்யாணம் ஆன புதிதில் கணவனின் இந்த குணத்தை பெண்கள் விரும்பவே செய்வார்கள், நம் மேல்தான் கணவனுக்கு எவ்வளவு அன்பு என்று பெருமைகூட பட்டு கொள்வார்கள், ஆனால் வருடங்கள் போக போக கணவனிடம் இந்த குணம் அதிகமாக வெளிப்படும் போது மனைவிக்கு அது, 'நம் மேல் கணவனுக்கு சந்தேகம் வந்து விட்டதா' என்பதில் போய் முடிந்து விடுகிறது. பிறகு என்ன ? அவர் ஒன்று நினைத்து சொல்ல மனைவி வேறு ஒன்றை நினைத்து கோபபட இனி இங்கு தாம்பத்யம் தகராறுதான்....!!

சந்தேகம்

சில கணவர்கள் உண்மையிலேயே தங்கள் மனைவி மேல் கொள்ளும் சந்தேகம், அந்த மனைவியை சிறுக சிறுக கொன்று குடிப்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.  கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையும் , அன்பும் இல்லாவிட்டால் சந்தேகம் விஸ்பரூபம் எடுக்கத்தான் செய்யும்.  இருவருக்கும் இடையில் எந்த ஒளி மறைவும் இல்லாமல் வெளிப்படையாக இருக்கும் போது சந்தேகம் என்ற பிசாசு தான் வேலையை காட்டாது.  

இந்த சந்தேக புத்தியால் மனைவிக்கு 65 வயது ஆனபின்னரும் சந்தேகம் கொண்டு குறை சொல்லும் ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள்.

அதிகமாக உணர்ச்சி வசபடுவது

முன்பு எல்லாம் பெண்கள்தான் எடுத்ததுக்கு எல்லாம் உணர்ச்சி வச படுவார்கள்.  ஆனால் பெண்கள் இப்போது கொஞ்சம் தெளிந்து விட்டார்கள் ?  தேவை இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு கோபபடுவதோ, கண்ணீர் விடுவதோ இல்லை.  அதனால் மனைவியின் முன் அதிக கோபமோ , ஆவேசமோ படுவது பிரச்னைக்கு வடிகால் இல்லை.  அப்படியே நீங்கள் நடந்து கொண்டாலுமே அதை மனைவியர் பெரிது படுத்தவே மாட்டார்கள். 

இதில் சிலர் எப்படி என்றால் மனைவி ஏதாவது ஒரு பிரச்சனை பற்றி பேச தொடங்கி விட்டாலே போதும், 'ஆரம்பிச்சிடியா ? மனுஷன் வந்ததும் உயிரை எடுப்பீயே ? ச்சே' ,என்று ரொம்ப கோபமா பேசிட்டு வீராப்பாக வெளியில் சென்று விடுவது. இந்த நடவடிக்கையா அந்த பிரச்னைக்கு தீர்வு ? கணவனிடம் சொல்லாமல் வேறு யாரிடம் போய் சொல்வாள் ? யோசிக்கிறதே இல்லை...! 

அதே நேரத்தில் இந்த நிலைமையை வேறு மாதிரி, ' சரிமா நான் இப்பதானே வந்திருக்கேன், நான் என்னை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன் அப்புறம் விரிவா பேசுவோம் ' ,என்று சொன்னால் எப்படி இருக்கும்...?! சம்பந்தபட்ட  பிரச்சனை ஒருவேளை உங்களை பற்றியதாக இருந்துவிட்டால்,  உங்களின் இந்த பதிலிலேயே பாதி மேட்டர் சரியாகி விடும் !! 

தேக்கி வைக்கபட்டு இருக்கும் அழகிய, அமைதியான  நீரில் எறியும் ஒரு சிறு கல்தான், சலனத்தை ஏற்படுத்துகிறது...!! கல்யாணம் ஆன அனைவருக்கும் இந்த வரியில் உள்ள அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....!!!

இந்த பிரிவின் அடுத்த பாகம் நாளை வெளி வரும்....


செவ்வாய், ஜூன் 15

தாம்பத்தியம் 5 - ஆண்களின் தனித்தன்மை


ஆண்களை பற்றிய நிறைகளை இன்னும் கொஞ்சம் பார்ப்பது இந்த தொடர் முழுமை அடைவதற்கு உதவியாக  இருக்கும் என்று நினைக்கிறேன். 

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது எப்படி பெண்களை பெருமை படுத்துவதாக இருக்கிறதோ அதே போல் தான் எந்த ஒரு மனைவியின்  வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக அவளது கணவன்தான் இருக்கமுடியும் . அது நேரடியான அல்லது மறைமுக ஒத்துழைப்பாக கூட இருக்கலாம் . சமுதாயத்திலும், குடும்ப வாழ்விலும் ஒரு பெண் சிறந்து விளங்க ஒரு ஆண்தான் முக்கிய காரணமாக இருக்கிறான்.  ஆனால் இதை ஆண்கள்  வெளியில் சொல்லி பெருமை தேடி கொள்வது இல்லை...!!


பெண்கள் தன் அன்பினால் ஒரு முறை ஆண்களை கட்டி போட்டு விட்டார்கள் என்றால் நிச்சயமாக அதில் இருந்து அவர்களால் விடுபடவே  முடியாது. அதற்கு பிறகு தனது மனைவி செய்யும் தவறுகூட பெரிதாக தெரியாது  (சாப்பாட்டுக்கு உப்பு போடலைனாலும் " உப்பு இல்லைனாலும் சாம்பார் சூப்பர் டேஸ்ட்டு டா!!" ) இப்படி பதிலுக்கு அன்பு பாராட்டுவதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை!! 


சம்பாத்தியம் 


திருமணம் முடிந்த முதல் 6 அல்லது அதிக பட்சம் ஒரு வருடம் வரை  மன வாழ்க்கையின் சந்தோசத்தை ருசித்த அவர்கள், அதற்கு பிறகு தனது குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக தனது சந்தோசத்தையே அடகு வைத்து உழைக்க தொடங்குகிறார்கள்.  அதிலும் முக்கியமாக  முதல் குழந்தை பிறந்தபின் தகப்பன் என்ற ஸ்தானத்தை அடைந்த மகிழ்ச்சியை கொண்டாடும் அவனது மனம் அடுத்ததாக எண்ணுவது , அதிகரிக்க போகும் பண தேவையை சமாளிக்க என்ன செய்யலாம் என்பதாகத்தான் இருக்கும்.....!!  


குடும்ப பொறுப்பு அப்போதே அந்த கணவனுக்கு வந்து விடுகிறது.  தன் மனைவி, குழந்தையின் வளமான வாழ்விற்கு தேவையான பொருள் தேடலுக்காக இரவு, பகலாக உழைக்கிறான்.  உழைப்பை விருப்பத்துடன், அக்கறையாக செய்யும் அந்த குணம் பாராட்டப்பட வேண்டும், அந்த மனைவியால் அந்த உழைப்பு அங்கீகரிக்க பட வேண்டும்.  மனைவியின் ஒரு சிறு புன்னகை கொடுக்கும் அந்த அங்கீகாரமே அவனை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும்.  


தியாகம் - வெளிநாட்டு வேலை 


இந்த இடத்தில் ஆண்களின் உழைப்பிற்கு உதாரணமாக ஒன்றை கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  பொருளாதார  தேவைக்காக தன் தாய் நாடு, பழகிய உயிர் நண்பர்கள்,  பெற்றோர்கள்,   தன் மனைவி மக்களை பிரிந்து பொருளை தேட வெளிநாட்டிற்கு போகும் அந்த ஆண்களின் தியாகத்திற்கு  ஈடாக வேறு ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை.  இதில் கொடுமை என்னவென்றால்   நினைத்து போன வேலை ஒன்றாக இருக்கும், ஆனால் அதைவிட தகுதி குறைந்த வேலை செய்ய வேண்டியதாகி விடும்... இருந்தும் தன் குடும்பத்தை நினைத்து அந்த துன்பத்தையும் சுகமாக நினைத்து உழைப்பவர்கள் ஆண்கள்....!!  


பல மனைவியருக்கு கடைசி வரை தன் கணவன் எந்த மாதிரி வேலை செய்து இந்த பணத்தை அனுப்புகிறான் என்றே தெரியாமல் போய்விடும். ஆண்களும் தங்கள் கஷ்டம் தங்களுடன் போகட்டும் என்று மறைத்து விடுவார்கள். ஆனால் இவர்களின் வாழ்க்கையில் ஒரு துர்பாக்கியமான சூழ்நிலை ஒன்று ஏற்படும். வெளி நாடு போகும்போது அவனது குழந்தை தொட்டிலில் இருக்கும், மூன்று அல்லது ஐந்து வருடம் கழித்து வரும் அந்த தகப்பனை அடையாளம் தெரியாமல் அந்த குழந்தை விழித்து அருகில் வராமல் விலகும் போதுதான் அந்த ஆண் உடைந்து நொறுங்கி போய் விடுகிறான்.  சில நேரம் அந்த அன்பின் இடைவெளி குறையாமலேயே போய் விடுகிறது.....??  


இந்த மாதிரி கணவர்களுக்கும் அவர்களின் மனைவியர்க்கும் உள்ள உறவு அன்பால் அதிகமாக பிணைக்க பட்டு இருக்கவேண்டும்.  மனைவியின் அன்புதான் அவனை போர்வையாக மூடி அணைத்து பாதுகாக்கும்  . அப்படி பட்ட மனைவியை அடைந்தவர்கள் பாக்கியவான்கள்.  ஆனால் அந்த அன்பு கிடைக்காத பலரின் நிலை........???
       
ஆண்களிடம் இருக்கும் ஒரு முக்கியமான நிறையை இங்கே நான் இங்கே குறிப்பிடாவிட்டால் ஆண் சமூகம் என்னை மன்னிக்காது, தவிரவும் பல பெண்களுக்கும் இது ஒரு பெரிய நிறை என்பதை ஞாபக படுத்த வேண்டி இருக்கிறது...!!

தன் மனைவி வீட்டினரை மதிக்கும் மாண்பு:

கல்யாணம் ஆனதும்  ஒரு பெண் புகுந்த வீட்டில் கால் வைத்ததுமே மாமியார், மாமனார், நாத்தனார் இவர்களை எப்படி மதிப்பாள் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். சில பெண்கள் மனதில் வெறுப்பு இருந்தாலும் அதை வெளி காட்டாமல் நடப்பார்கள். எப்படி இருப்பினும் ஒரு சின்ன வெறுப்பு கூட இல்லாமல் மருமகளாக நடப்பவர்கள் மிகவும் குறைவுதான். 
  
பெண்கள் கணவனின் உறவினர்களை வித்தியாசமான பார்வை பார்ப்பது போல் எந்த ஆணும் தன் மனைவியின் உறவினர்களை பார்ப்பது இல்லை. ஆண்களை பொறுத்த வரை என் அனுபவத்தில் எந்த ஆணும் தனது மாமனார் வீட்டினரை குறைத்து பேசியோ அவர்களை மரியாதை குறைவாக நடத்தியதாகவோ  கேள்விபடவில்லை. இன்னும் சொல்ல போனால் அதிக மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள்.  மருமகன் சண்டை என்று செய்திகள் வருவது சொற்பமே. அப்படியே வந்தாலும் அதன் பின்னால் அவனின் திருமதி தான் இருப்பார்கள்.  ஆண் வாரிசு இல்லாத பல வீடுகளிலும் மருமகனே மகனாய் மாறி மாமனார் வீட்டினருக்கு உதவிகள் செய்தது உண்டு. ஆனால் இந்த மாதிரி செய்திகளை  வெளி வரவிடாமல் நாங்கள் இருட்டடிப்பு செய்து விடுவோமே!! 

முக்கியமாக மாமியார், மருமகள் சண்டை தான் கேள்வி பட்டு இருப்போம் மாமனார், மருமகன் சண்டை என்றோ மாமியார் , மருமகன் சண்டை என்றோ எங்காவது கேள்வி படுகிறோமா? அப்படினா ஆண்கள் இந்த விசயத்தில் நல்லவர்கள் தானே.   இது ஒன்று போதாதா, பெண்களுக்கு....?? இதை வைத்தாவது  அவர்களின் மற்ற குறைகளை மறந்து விடுங்களேன்...!! 

(என்னால் முடிந்தவரை ஆண்களுக்கு என் ஆதரவை பெருமையுடன் முடிந்தவரை கொடுத்து விட்டேன் .  இதற்கு மேலயும் சொல்லிட்டே போகலாம் ஆனால் பெண்களிடம் அடி வாங்கபோவது  யார்..?) 






பெண்களுக்கான சட்டங்கள் 

நம் நாட்டை பொறுத்தவரை பல சட்டங்களும் பெண்களுக்கே (மனைவியர்களுக்கே) சாதகமாக  இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒரு  கணவன் மனைவியின் பிரச்சனை, போலீஸ் ஸ்டேஷனுக்கோ, கோர்ட்டுக்கோ போனால் அங்கே  பெரும்பாலும் கணவனை விடுத்து, மனைவியின் சொல்லுக்கே மதிப்பு கொடுக்க படுகிறது.  அந்த நேரத்தில் கணவனின் மீது தவறு இல்லை என்றாலுமே அவன் அங்கே ஒரு குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறான் , அவனது வாதம் அங்கே மறுக்கவே படுகிறது. இந்நிலை மிகவும் பரிதாபம்தான், இதனால் பாதிக்கப்பட்ட ஆண்கள்  பலர்.  சில  பெண்களும் இதை சாதகமாக எடுத்துக்கொண்டு, தன் கணவர்களை படுத்தும் பாடு சொல்லி முடியாது....!  

இதனால் முடிந்தவரை சின்ன சின்ன விசயங்களையும் பெரிது படுத்தாமல் அனுசரித்துப்போவது தான் நல்லதா தோன்றுகிறது.  மனைவிகளும் தங்கள் கணவர்களிடம்  இருக்கும் பல நிறைகளையும் தங்களுக்கு ஏற்றாற்போல் மறந்தே விடுவார்கள், அல்லது மறைத்துவிடுவார்கள், சில குறைகளை மட்டும் பெரிது படுத்தி வானிற்கும், பூமிக்கும் குதிப்பார்கள்.  இதில் அவர்களை குறை சொல்லி பிரயோசனம் இல்லை.  முந்தைய தலைமுறையில் வாங்கியதை இப்போது திருப்பி கொடுக்கிறார்கள் அவ்வளவே.  வேறு என்ன சொல்வது ? 


இனி தான் முக்கியமான விசயமே வருகிறது.. ஆம் ஆண்களின் குறைகள்...!!

எவைஎல்லாம் குறைகள்..?

இங்கே நான் விளக்கமாக கூறபோவது கணவர்களின் குறைகளைதானே தவிர ஆண்களின் குறைகளை  பற்றியது இல்லை. பொதுவாக ஆண்களின் குறைகள் என்று எடுத்துக்கொண்டால் அதை ஒரு தனி தொடர் பதிவாக எழுத வேண்டும்... அதனால் தாம்பத்யம் என்று பார்க்கும் போது கணவர்களிடம் இருக்கும் குறைகளை பார்ப்பது மட்டுமே  சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 


ஒரு ஆண் மணமாவதற்கு  முன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் அதன் பாதிப்பு யாரையும் பெரிதாக பாதிக்காது...!!? ( பெற்றவர்களை தவிர ) ஆனால் கல்யாணம் ஆனதும் அவனது ஒவ்வொரு செயலும் அவனது மனைவியையும், பிள்ளைகளையும் கட்டாயம் பாதிக்கும்.  அதனால்தான் கல்யாணம் ஆனபின் அவசரபடாமல், நிதானத்தை கைக்கொண்டு வாழ்க்கையை எதிர் கொண்டு சமாளித்தாக வேண்டும்.


ஒரு முறை வாழும் இந்த மனித வாழ்க்கையை சந்தோசமாகவும், முடிந்தவரை நிம்மதியாகவும் வாழ்ந்து முடிக்க நம்முடைய குறைகளை சரி செய்து நிறைவாக வாழ்வோம்....!


இதன் அடுத்த பாகம்,  இயன்றால்  நாளையே....!!


                                                தொடரும்...... 


ஞாயிறு, ஜூன் 13

இணைய நட்பு


இணைய நட்பு




சலனம் 
                                           
மௌனமாய் இருக்க மனதும்                                          இடம் கொடுக்க வில்லை...!
விலகிச் செல்ல பாதையும் 
எனக்கு தெரியவில்லை....?!

                       ********                                                  
எந்த நிமிடம் என் மனதினுள் நுழைந்தாய்?
நட்பு என்ற அடையாளத்துடன் நுழைந்து 
என் உணர்வோடு கலந்தது ஏன்?
தெளிந்த என் மன நீரோடையில் 
முதல் கல் எரிந்தது நீ..... ஏன்?
கலங்கிய நீரில் நான் 
கரைந்துப் போகவா...இல்லை
துடித்து சாகவா.....?    
காரணம் 
சொல் விட்டு விடுகிறேன் 
நிரந்தரமாக என் மன கூட்டில் இருந்து...!

*****

 நீ எழுதிய  ஒவ்வொரு வார்த்தையும் 
முள்ளாய் தைத்ததை நீ அறிவாயா?
தைக்கட்டும் என்று அறிந்தே எழுதினாயா 
வெறும் எழுத்துக்கள் ஒருவரை 
சித்திரவதை செய்யுமா....... ?   
செய்கிறதே என்னை......!?
                       
                     **********
கல் நெஞ்சகாரனடா  நீ ! 
என் நெஞ்சை ரணமாக்கி விட்டு, 
துயில்கிறாய்  நிம்மதியாக !!
விடமாட்டேன் உன்னை...?
கடவுளிடம் வருந்தி 
வரம் பெறுவேன் நிதமும் 
உன் கனவில் வருவதற்கு!!
                                              
                                                               **********
                      
                             மறந்தும் உன் நட்பை இழக்க, 
               மனம்  இடம் கொடுக்காது 
           என்றானபின், உன் மன நிலையை 
               நான் அறிவது எவ்வாறு ?
           முகமூடி  போட்டு பேச எனக்கு 
               விருப்பம் இல்லை,  உடைத்தே 
           சொல்கிறேன்,  உன் அன்பு வேண்டும் 
               வாழ்வின் இறுதிவரை...!!
           அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் 
                வைத்துகொள்....?! மண்ணுக்குள் நான்  
           போகும் கடைசி நொடி வரை கூட, 
                உன்னை நேரில் சந்திக்காது என் கண்கள் !
           பின் எவ்வாறு நம்  நட்பு கற்பிழக்கும்....??!
                ஆதலினால், தூய நட்பு  கொள்வோம் !!
                                                              
                                                                 ************


இணையம் பிரபலம் ஆன புதிதில் என் நெருங்கிய கல்லூரி தோழி இணைய நட்பை வைத்து எழுதிய கவிதைகள் தான் மேலே இருப்பவை. அவள் இப்போது பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறாள்.  நான் இணையத்தில் எழுதுவதை அறிந்த அவள் அப்போது விளையாட்டாய் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய இந்த கவிதைகளை எனக்கு அனுப்பி வைத்தாள்.  அதை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எழுதியவற்றில் பலதும் மறந்துவிட்டது என்று சொன்னாலும் நினைவில்  இருக்கும் இவற்றை படிக்கும் போது வியப்பாகத் தான் இருக்கிறது !! 

இணையத்தின் உதவியால் இன்று  முகம் தெரியாமல் பல நட்புகள் உருவாகின்றன.  அவை அனைத்தும் ஆரோக்கியமாகவே இருக்கவேண்டும்.  இந்த நட்பால் புது கலாச்சாரம் உருவாகிவிடக்  கூடாது என்பதில் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். சிறு சலனமும்  நம் மனதில் நுழைய இடம் கொடுக்காமல் இருந்தால் நட்பு என்பது நீடித்து நிலைத்து இருக்கும்.  

ஆண், பெண் நட்பு மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்றுதான், ஆனால் இருவரும் தங்களுக்கு என்று எல்லைகளை வரையறுத்துக்கொண்டு அதன்படி நடப்பதே நன்று. இணைய நட்பைப்  பொறுத்தவரை முகமறியா நட்புதானே என்று கவனக்குறைவாக இல்லாமல், வார்த்தைகளை பரிமாறும்போது மிகவும் கவனமாக கையாள்வது நட்பைக்  கொண்டாடும் இருவருக்குமே நலம் பயக்கும்.

வார்த்தைகளில் மரியாதையை கையாளும்போது அந்த நட்பு வணங்கப்பட கூடியதாகி விடுகிறது! அவசரப்பட்டோ, உணர்ச்சி வேகத்திலோ, வார்த்தைகளை வெளி இடாமல் நிதானமாக, தேவைக்கு ஏற்ப,  பதில் சொல்வது கண்ணியத்தைக்  கொடுக்கும்.  நன்கு பழகியவர்கள் ரூபத்திலேயே பிரச்சனைகள் உருவாகும் கால சூழ்நிலையில் இணைய நண்பர்கள், அது இரு ஆண்களுக்கு இடையிலான நட்பு, இரு பெண்களுக்கு இடையிலான    நட்பு என்றாலுமே கவனமுடன் நட்புக்கொள்வது தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தாது.  

தோழமைக்கு  உரிமை அதிகம்தான் ,  அது வரம்பு மீறாதவரை.....?!!
                               
நல்ல பல பதிவுகளை எழுதுவதற்கு இணைய நட்பு உதவியாக  இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த மாதிரி நல்ல நட்பை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ! அந்த மாதிரி 30 நண்பர்களை followers ஆகவும் , வோட் மற்றும் பின்னூட்டத்தின் மூலமாக பல நல்ல நண்பர்களை பெற்றதின் மூலம் நானும் கொடுத்து வைத்தவள்தான் !! 

என் நண்பர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு அதிகம் உண்டு என்பதை என்னால் மறைக்க முடியாது .  என் இணைய நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் மூலமாக என் அன்பையும் , நன்றியையும் தெரிவித்துக்  கொள்கிறேன்.  எழுதும் என் கையை பலப்படுத்த  உங்கள் நட்பு தொடர்ந்து வேண்டும்....!                                 
                           
எனது தாம்பத்தியம் பாகம் 5 பதிவு அடுத்ததாக  வெளி வரும்....!  காத்திருங்கள் !! நன்றி 


புதன், ஜூன் 9

உயிர் போகும் வாழ்க்கை

உளவாளி 


இந்திய நாட்டில் பிறந்ததிற்காக நாம் பெருமை படும் அதே நேரம் சில நிதர்சனங்களை பார்க்கும் போது வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படி வருத்தப்படகூடிய ஒன்றை பற்றியது  தான் இந்த பதிவு.  நம் நாட்டை பாதுகாக்கவும்,  எதிரிகளின் செயல்களை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும்  உளவாளிகளை பயன் படுத்துவார்கள்.  இவர்கள் எதிரியின் இருப்பிடத்திலேயே வாழ்ந்து கொண்டு, அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் செயல்களை கண்காணித்து தகவல் சொல்லவேண்டும்.

ஆனால் இது ஒன்றும் சாதாரண வாழ்க்கை இல்லை உயிரை பணயம் வைத்து பல சவால்களை சமாளிக்க வேண்டும். இவர்கள்  தைரியம் , புத்தி சாதூரியம் , தன்னம்பிக்கை,   மனோதிடம்  , திறமை ஆகியவற்றை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.  அனைத்தையும் விட தாய் நாட்டின் மேல் வெறி கொண்ட பக்தி உடையவர்களாக இருக்க  வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதன்தான் ரவீந்திர கௌசிக் என்பவர்,  2002 இல் பாகிஸ்தான் ஜெயிலில் நபி அகமது  என்ற பெயரில் இறந்து போனவர் இவர் தான்.   இந்தியாவுக்காக பாகிஸ்தானில் இருந்து உளவு பார்த்த ஒரு உளவாளி.  அவரின் வாழ்க்கை பல சிக்கல்கள், சவால்கள் நிறைந்த ஒரு திகில் வாழ்க்கை.  இவரது வாழ்க்கையை கிருஷ்ணாதர் என்ற ஒரு எழுத்தாளர் 'மிஷன் டு பாகிஸ்தான்' என்ற பெயரில் எழுதி வெளி இட்டார். ஆனால் நூலின் எந்த இடத்திலும் கௌசிக் பெயரை குறிப்பிட வில்லை. நீண்ட மௌனத்துக்கு பின் இப்போதுதான் அவரது பெயரை கூறியுள்ளார்.

இந்த உளவாளி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்கா என்ற நகரில் பிறந்து வளர்ந்தவர்தான், நன்கு  படித்தவர். 1971 ம் ஆண்டில் இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தபோது தேசபக்தியை வலியுறுத்தி கௌசிக் சில நாடகங்களை நடத்தினார். அவர் நடத்திய ஒரு நாடகம்தான் அவரது தலை எழுத்தையே மாற்றியது.  உயிரே போனாலும் தாய்நாட்டை காட்டி கொடுக்காத உளவாளி வேடம் ஒன்றிலும் நடித்து இருந்ததை பார்த்த ராணுவ  அதிகாரிகள் கௌசிக்கை அழைத்து பேசினார்கள். இதே போன்று உளவாளியாக நம் நாட்டிற்காக வேலை செய்ய முடியுமா என்று கேட்டனர். இயல்பிலேயே நாட்டுபற்று அதிகம் கொண்ட கௌசிக் உடனடியாக ஒத்து கொண்டார்.

பின்னர் டெல்லி, அபுதாபி, துபாய் என்று சுற்றி திரிந்தார். தனது பெயரையும் நபி அகமது என்று மாற்றி கொண்டு, ஒரு பாகிஸ்தான் பெண்ணையும்  மணந்து முழு பாகிஸ்தானியாக மாறினார். .  பிறகு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து இந்திய ராணுவத்திற்கு பல முக்கிய தகவல்களை தொடர்ந்து அனுப்பி கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தில் எல்லை பாதுகாப்பில் பணி புரிந்தாலும் அவரது கவனம் முழுவதும் நம் நாட்டின் மீதே இருந்து இருக்கிறது.  இந்த சூழ்நிலையில் இவரிடம்  இன்னொரு உளவாளியை பாகிஸ்தானை விட்டு பத்திரமாக அனுப்ப  வேண்டும் என்ற வேலையை இந்திய ராணுவம் கொடுத்தது.  அதன்படி தப்பிக்க வைக்கும் போது அந்த உளவாளி பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார்.  அவர்களின் சித்திரவதையை தாங்க முடியாத அந்த உளவாளி கௌசிக்கை  பற்றியும்  சொல்லிவிட்டார். அவ்வளவுதான் இவரையும் பிடித்து பாகிஸ்தானில் உள்ள முல்தான் சிறையில் அடைத்துவிட்டார்கள்.


சுமார் 18 ஆண்டுகள் அந்த சிறையில் தொடர் சித்திரவதைக்கு அவரை உட்படுத்தினார்கள் . அவர் உடலில் உயிர் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் . இதைவிட பெரிய வருத்தம் என்னவென்றால் இந்தியா அவரைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.....??  கடைசி காலத்தில் தனது தாய்க்கு கௌசிக் எழுதி இருந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஒரு வரி தான் ( என்னை தலை குனிய வைத்தது )

" இந்த வேலையை நான் அமெரிக்காவுக்காக செய்திருந்தால்,  மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன் " .  இப்படி மனம் நொந்து கடிதம் எழுதிய அடுத்த மூணு நாட்களில் கௌசிக் இறந்தே போனார்.

நாட்டுக்காக உண்மையாக உழைத்த ஒரு உளவாளியின் வாழ்க்கை இறுதியில் சிறையின் இருட்டு அறையில் முடிவுக்கு வந்து விட்டது.  இவரின் இந்த வாழ்க்கை அனுபவத்தை  அந்த எழுத்தாளர் எழுத வில்லை என்றால் நமக்கும் தெரிய வாய்ப்பு இல்லைதான்.  இன்றும்  இவரை மாதிரி எத்தனை பேர்,  எங்கே எல்லாம், எந்த நிலையில் எப்படி இருக்கிறார்களோ ???
                                                                                                           

திங்கள், ஜூன் 7

தாம்பத்தியம் 4 - ஆண்களின் நிறைகள்

முன் குறிப்பு:

இதுவரை எனது தாம்பத்தியம் தொடர் பதிவின் முந்தைய  பகுதிகளை படிக்காதவர்கள் ஒருமுறை அவற்றை படித்தபின் இந்த பதிவினைத்  தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  இந்த பதிவின் நோக்கமே அனைவரையும் சரியான விதத்தில் இந்த விஷயம் சென்று அடையவேண்டும் என்பதுதான். எழுதியவை அனைத்தும்  கேட்டும், பார்த்தும் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட  ஒன்றும்தான். குறை இருப்பின் பொறுத்துக்கொண்டும்,  நிறை இருப்பின் தட்டி கொடுத்தும் என்னை ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.

ஒரு குடும்பத்தில் பிரச்சனை  என்று வரும்போது கணவன், மனைவி  இருவரது இயல்புகளையும், தவறுகளையும்  கொஞ்சம் ஆராய்ந்துப்  பார்த்தப்  பின்னரே அவர்களின் பிரச்னைக்கு தீர்வைச்  சொல்லமுடியும்.  அதுமாதிரி தாம்பத்தியம் தொடர்பான இந்த பதிவில் பெண்ணின் சிறந்த குணநலன்கள் மற்றும் நிறை குறைகளை கொஞ்சமாக முன்னர் பார்த்தோம்.

இப்போது ஆணின் சிறப்புகளையும், நிறை, குறைகளையும் தொடர்ந்துப்  பார்ப்போம் 

வெளியில் தெரியாத ஆண்மை:

பலரின் எண்ணத்தில் ஆண்கள் என்றாலே முரடர்கள், ஆண் ஆதிக்க மனப்பான்மை கொண்டு பெண்மையை மதிக்காதவர்கள் , பெண்களை சுயநலத்திற்காகப்  பயன்படுத்திக்  கொள்பவர்கள், சிறு கோபம் என்றாலும் பெண்மையை இழிவுப்  படுத்த தயங்காதவர்கள் , குடும்பப்  பொறுப்பு இல்லாதவர்கள் , கெட்டப்  பழக்கம் அனைத்தும் கொண்டவர்கள் என்று பல விதமான தவறானக்  கண்ணோட்டத்தில் நினைத்தே, பார்த்தே  நமக்கு பழகிவிட்டது. உண்மையில் இது அவ்வளவு சரி அல்ல என்பதுதான் பொதுவான என் கருத்து.  ஆண், பெண் அனைவருமே குறைகளுக்குக்  குறைந்தவர்கள் இல்லை. 

பெண்ணே காரணம்:

இன்றைய கால கட்டத்தில் ஆண்களின் பல தவறுகளுக்கும் ஒரு விதத்தில் பெண்களே காரணமாக இருந்துவிடுகிறார்கள்.  ஆனால் எந்த ஆணும் இதை வெளியே  சொல்வது இல்லை அதனால் தான் பல பெண்களும் வெளி பார்வைக்கு  இன்னமும் நல்லவர்களாகவே இருந்துவருகிறார்கள்.  பெண்மையை மதிக்க தெரியாத எந்த ஆணும் தவறானவன்தான்  அதே போல் ஆண்மையை மதிக்கத்  தெரியாத பெண்மையும் 
வீண்தான்!!  


பெண்களை விட :


ஆண்களிடமும் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்  கொடுத்துப்  போவது போன்ற குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் பெண்களைப்  போல் மனதில் இருப்பதை எல்லாம் வெளியில் கொட்டத  தெரியாதவர்கள். அன்பையும் அழுத்தமாக சொல்லத் தெரியாதவர்கள்.  அதனாலேயே மனைவியிடம் அதிக அன்பு இருந்தும் வெளிப் படுத்தாமல் போய்விடுவதால் தான் பல பிரச்சனைகள் உருவாகின்றன.


எல்லாம் புரிந்து இருந்தும் சிறுவயதில் இருந்து 'ஆண் பிள்ளை அழகூடாது' என்று பெரிதாகச்  சொல்லியே வளர்க்கப்  பட்டு வருவதால் அவர்களும் அன்பு, அழுகை போன்ற உணர்ச்சிகளையும் மனதிற்குள்ளையேப்  போட்டு அழுத்தி விடுகின்றனர்.  இந்த உணர்சிகள் ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை.  வெளிபடுத்த  வேண்டிய  நேரத்தில்  வெளிப்படுத்தாவிட்டால் மனதையும் சேர்த்து உடம்பிற்கும் அது கேடுப்  பயக்கும்.


ஆண்களுக்கும்  உண்டு தாய்மை:


பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள்தான் தாய்மை என்ற மகாசக்தியை பெற்று இருப்பதால்  ! ஆனால் சாதாரண ஒரு பெண்ணையும் மகாசக்தியாக, தாயாக மாற்றுவது அந்த ஆண்மைதான் !!  ஒரு பெண் வயிற்றில் குழந்தையை சுமக்கும் அதே நேரம் அவளது கணவன் அந்த சுமையை தன் மனதில் சுமக்கிறான்.


மனைவி குழந்தை உண்டானதும் எல்லோரைவிடவும் சந்தோசத்தின் உச்சத்தை அடைவது அந்த கணவன்தான்......!  தனது ஆண்மை நிரூப்பிக்கப்பட்டதாக எண்ணி நெஞ்சை நிமிர்த்திக்  குதூகலம் அடைகிறான்......!  தன்னை கணவன் என்ற நிலையில் இருந்து தகப்பன் என்ற நிலையை அடையக்  கூடிய சந்தர்ப்பத்தைக்  கொடுத்த மனைவியை எண்ணிப்  பெருமிதப்  படுகிறான்......!  அவனால் முடிந்தவரை அவளை சந்தோசமாக வைத்து கொள்ள முயலுவான்......!




பிடித்த பொருட்கள், பழங்கள், பூக்களை வாங்கிக்  கொடுத்து அவளது மனத்  தேவைகளை நிறைவேற்றி வைப்பதின் மூலம் அந்த மனைவிக்கு  அந்த கணவன் தந்தையாகிறான் !!
நிறைமாத வலியுடன் தவிக்கும் போது ஆதரவாக தன் தோளில் சாய்த்து ' நான் இருக்கிறேன் ' என்று சொல்லும்போதும், இதமாக கை, கால்களை பிடித்து விட்டு, சில நேரம் உணவு ஊட்டிவிடும்போதும் அந்த மனைவிக்கு அக்கணவன் ஒரு தாயுமானவன் !!
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனைவியுடன் இருந்து கண்ணின் மணிபோல் காத்துக்  கொள்ளும் அவனில் தனது தாயையும், தகப்பனையும் ஒருசேர பார்க்கும் மனைவிக்கு தன் பிறந்த வீடு சில நேரம் மறந்துதான் போகிறது........!!


திருமண ஆன பெண்களை அவளது தாயே சில நேரம் வீட்டுக்காரனை பத்தி ஒரு வார்த்தை தப்பாச்  சொல்ல விட மாட்டியே? விட்டு குடுக்காம பேசறியே? நேத்து வந்த அவன் பெரிசாப்  போயிட்டானா ? அப்படின்னு சலிப்பா குறை சொல்வதைக்  கேட்டிருக்கலாம். (அந்த பெண்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்!!)


சிலர் வேண்டுமானால் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையால் மாறுபடலாமே ஒழிய மனைவியை மனதில் சுமப்பவர்கள்தான் அதிகம்.


பிரசவ  நேரத்திலும் மனைவி வயிற்று வலியால் துடிக்க, கணவன் மனவலியால் துடித்துக்  கொண்டிருப்பான்.  ஆண் என்பதால் வெளியில் தெரியாமல் கண்ணீர் விட்டவர் பலர்......!! தன் மனைவி படும் வேதனையை காணும்போதுதான் தன்னை பெற தன் தாய் எவ்வாறு கஷ்டபட்டிருப்பாள் என்பதை உணர்ந்து மானசீகமாக தன் தாயை வணங்குகிறான்.  மனைவிக்காக அதுவரை வணங்காத தெய்வங்களை எல்லாம் மனதிற்குள் பூஜிக்கத்  தொடங்கிவிடுவான். (அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் சில வேண்டுதல்களைகூட கடவுளிடம் வைத்து விடுவான்)


ஆப்பரேசன் அறைக்குள் போவதற்கு முன் தன் மனைவியின் கரம் பற்றி, 'ஒன்றும் ஆகாது போய்வா ' என்று தைரியம் சொல்லி அனுப்பி விட்டு தனக்குள் சிறுபிள்ளையாய் கலங்குகிறான்....!  அவள் உள்ளே கதறும் சத்தம் கேட்க்கும் போதெல்லாம் தவிக்கிறான்.......!   பிரசவம் முடிந்து குழந்தை பிறந்ததும் எந்த கணவனும் முதலில் தன் குழந்தையை பார்க்க ஓடுவது இல்லை!  தன் மனைவி எப்படி இருக்கிறாள் என்றுதான்  பரபரப்புடன் மனைவியிடம் ஓடுவான்.  பிறகு அருகில் சென்று களை  இழந்து இருக்கிற தன் மனைவியின் முகத்தை பார்த்து அவள் கரம் பற்றி மென்மையாக வருடி ,   ' ரொம்ப கஷ்டபட்டியாமா '  என்று ஆதரவாக கேட்கும்போது அந்த மனைவியின் வலி, வேதனை அனைத்தும் அந்த நொடியே  மறைந்து போய்விடுமே!  அவளும் பெருமிதத்துடன் ,    "பரவாயில்லைங்க, நம்ம குழந்தையை பாருங்க"  என்று குழந்தையை நோக்கி கைகாட்டுகிறாள்.  இருவரும் சேர்ந்து ஒன்றாக குழந்தையை பார்க்கும் இந்த அற்புத காட்சியை பலர் அனுபவித்திருப்பார்கள்.  அன்பும், பாசமும், தாய்மையும் பிரவாகம் எடுத்து ஓடும் இந்த இடத்தில் பெரிய  காவியங்கள் கூட தோற்றுவிடுமே......!!!


தன்னையே உரித்து  வைத்திருக்கும் குழந்தையை கொடுத்த உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று மனைவியை எண்ணி பெரும் உவகை அடைகின்ற  அந்த கணவனால் எப்படி  பின்னாளில் தன் மனைவியை வெறுத்து சண்டை போட இயலும் ? யோசிக்கவேண்டிய தருணம் ??


 தாய்க்கு பின் தாரம்:


இந்த வார்த்தைக்கு பலரும் பல அர்த்தம் கொடுக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஆணும் தன் மனைவி இடத்து தனது தாயை தேடுகிறான் என்பதே...!  தன் தாயால் தனக்கு கிடைத்த அன்பையும், பாசத்தையும், அரவணைப்பையும் தனது மனைவியிடமும் எதிர்பார்க்கிறான்...!! இந்த அன்பும், பாசமும் மறுதலிக்க படும்போதுதான் ஏமாற்றம் ஏற்படுகிறது , ஏமாற்றம் கருத்து வேறுபாட்டில் கொண்டு வந்து விட்டு விடுகிறது .


   " பெண்கள் யாரை மனதார காதலிக்கிறார்களோ,  அந்த ஆண்கள்,
           அந்த பெண்கள் எதிரில் பச்சை குழந்தைகளாகி விடுவர்! "
                                                                                                                        -தாகூர்.


இந்த வார்த்தைகள் கணவன், மனைவிக்கும் பொருந்தும்.  பழைய காலத்தில் இருந்து இன்று வரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்  , தலையணை மந்திரம் போட்டுவிட்டாள் என்று...?!  அது வேறு எந்த தவறான அர்த்தத்திலும் சொல்லப்படவில்லை என்பதுதான் என் புரிந்துகொள்ளுதல் !!   அன்பால் தன் கணவனை கட்டிபோட்டு வைத்து இருக்கிறாள் என்பதே அதன் உள்அர்த்தம்!!


இப்படி அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் தான் இந்த அப்பாவி ஆண்கள்! இந்த அன்புதான் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது ! தைரியத்தை கொடுக்கிறது! கவலையில் துவண்டாலும் ஆறுதலை கொடுக்கிறது !  முரடான மனதையும் மென்மையாக மாற்றுகிறது !  கோபம் என்ற தணலையும் அணைக்ககூடிய நீராக இருக்கிறது ! மனைவி செலுத்தும் அந்த அன்பிற்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்கவும் தயங்கமாட்டான் !!!


பின் குறிப்பு :  


ஆண்களின் நிறைகள் என்று பார்த்தால் இன்னும் சொல்லலாம், ஆனால் " ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் "      என்பதால் இது போதும் !!


அவர்களின் குறைகள் என்ன என்பதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.  காத்திருங்கள்!!
                                                       *******************


                                  

ஞாயிறு, மே 30

பிரச்சனைகளுக்கு பெண்களே காரணம் ! தாம்பத்தியம் பாகம் -3

பெண்களின் மனோபாவங்கள்:

ஒரு குடும்பம் சிறந்து விளங்குவதற்கு  பெண்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறாள் அதே நேரம் அந்த குடும்பம் சீர் குலையவும் அந்த பெண்ணே காரணமாகி விடுகிறாள்.  இதற்கு அவளது குணாதிசியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பொதுவான குணாதிசியங்கள்:

எல்லா பெண்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும்.   எதிர்காலத்தை பற்றிய கனவுகள் இருக்கும்.

பல பெண்களும்  விரும்புவது துடிப்பான, விவேகமான, படித்த, கொஞ்சம் அழகான (ரொம்ப அழகா இருந்தா ஆபத்துதானே), நகைச்சுவையுடன் பேசக்கூடிய (மனைவியுடன் மட்டும்), உயரமான (மனைவியை விட கொஞ்சம் அதிகமாக), புத்திசாலியான  (மனைவிக்கு  முன்னால் இல்லை ) , சிகரட் , தண்ணி அப்படினா என்ன என்று கேட்கக்கூடிய அப்பாவியா  (எங்க டார்ச்சர் தாங்க முடியாம தண்ணி அடிக்க தொடங்கினா, பரவாயில்லை, பொறுத்துக்கலாம் ). அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா கை நிறைய சம்பளம் (கணவன், மனைவி இருவர் கையும் சேர்ந்தால் போல நிறையணும்)   . இவ்வளவு தாங்க பெண்களின் முக்கியமான எதிர்பார்ப்பு.

விருப்பங்களும், எண்ணங்களும்  ஒவ்வொருத்தருக்கும் ஏற்ப மாறுபடலாம், ஆனால் எதிர்ப்பார்ப்பு என்பது கண்டிப்பாக இருக்கும். எதிர்பார்ப்பில் ஏதாவது ஒன்று  குறைந்தாலும் அவள் மனதிற்குள் வெறுமை சூழ்ந்து விடும்.  இதுதான் இன்றைய பெண்களின் மனப்போக்கு.  இது மிகவும் ஆபத்தான ஒன்று தான்.  

முந்திய தலைமுறையினர் கிடைப்பதை வைத்து மனதிருப்தியுடன் குடும்பத்தை நடத்தினர்.  கணவனின் எண்ணத்திற்கு ஏற்ப தங்களுக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் சமாளித்தனர், அதனால் அவர்களின் திருமண வாழ்க்கை வெள்ளிவிழா கொண்டாடும் அளவிற்காகவாவது வந்தது.  ஆனால் இப்போது பல திருமணங்கள் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவதற்குள் கோர்ட்டில் முடிந்துவிடுகிறது.   இந்நிலை கவலைப்படக் கூடிய ஒன்று என்பதை யாரும் மறுக்கமுடியாது.   எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற போக்குதான்.   

ஆண்கள்தான் காரணம் என்று அவர்களை குறைச்  சொல்வதை விடுத்து தங்களால் முடிந்தவரை பிரச்சனைகளைச்  சரி செய்ய முயலவேண்டும்.  முக்கியமாக பிறர் சொல்வதைக்  கேட்காமல் சுயமாக முடிவு எடுக்க பழகிக்  கொள்ள வேண்டும். பலர் ஆலோசனை சொல்கிறேன் என்று அவர்கள் வாழ்வில் நடந்த சிலவற்றை முன் உதாரணமாக சொல்லி நம்மை குழப்பி விடுவார்கள்.  ஆனால்  சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது ஆணோ நிச்சயமாக அந்த பிரச்சனையைப்  பற்றி மட்டும்தான் யோசிப்பார்கள், அதனால்  ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும்.   மற்றவர்களுக்கு இவர்கள் பிரச்சனை சாதாரண ஒரு சம்பவம் ஆனால் இவர்களுக்கு அது வாழ்க்கை அல்லவா ? 

பிறரின் சொல்படி நடக்கும் மனோபாவம்:

இப்போது  பல பெண்களும் நன்குப்  படித்து உலக அனுபவம் பெற்றவர்களாக இருந்தும் திருமணம் என்று வந்தவுடன் பிறரது  பேச்சுக்குச்  செவி சாய்ப்பவர்களாகி விடுகிறார்கள்.   

காதல் திருமணம் செய்தவர்களுக்கு, திருமணம் முடியும் வரை யார் சொல்வதும் காதில் விழாது.  ஆனால் திருமண வாழ்க்கையில் சின்ன பிரச்சனை வந்தால் போதும் அவன் மேல் தவறு என்று அவளும்,   இவள்  மேல்தான் தவறு  என்று அவனும், ஆட்களை வலிய தேடிப்  போய் மாறி மாறி குறைச்  சொல்வார்கள். கேட்பவர்களும் வாய்க்கு வந்ததைச்  சொல்லி பிரச்சனையில்  கொஞ்சம் எண்ணையை ஊற்றுவார்கள். அதுவரை புகைந்துக்கொண்டிருந்தது அதன்பிறகு நெருப்பாக பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரியும் .  
  
பெற்றோர்கள் வரன் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களில் பெண்ணிற்கு நல்லது பண்ணவேண்டுமே என்ற எண்ணத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் சில விதங்கள் அந்த பெண்ணின் வாழ்கையையே சீரழிப்பதை அவர்கள் உணருவதே இல்லை. வரன் பார்க்க தொடங்கும்போதே தரகரிடம் அவர்கள் வைக்கும் முதல் கோரிக்கையே  மாமியார் , நாத்தனார் மாதிரி எந்த பிக்கல், பிடுங்கலும் இல்லாத வீடாக  இருந்தால்  நல்லது என்பதுதான்...?! (இப்படியே இவர்கள் மகனுக்கு வரும் பெண் வீட்டாரும் இருந்து விட்டால் ஒன்று அந்த பையனுக்கு கல்யாணம் ஆக பல வருடம் ஆகும் அல்லது தாய் உடனே சாக வேண்டும் )  

இதை கேட்கும் பெண்ணின் மனநிலை என்ன ஆகும்....?   அந்த நிமிடமே அவள் மனதில் மாமியார், நாத்தனார் என்பதின் அர்த்தம்  பிக்கல், பிடுங்கல்தான் என்ற விஷ விதை மறைமுகமாக ஊன்றப்பட்டுவிடுகிறது.  ஒருவழியாக சம்பந்தம் இருவீட்டார்க்கும் பிடித்துபோய் நிச்சயத்தின் போது  அந்த மாமியார் கேட்கும் வரதட்சணையால் அந்த விதைக்கு நீர் ஊற்றப்படுகிறது.   பின்னர் திருமண நாள் நெருங்கும் நேரத்தில் அந்த பெண்ணின் உறவினர்களாலும், அக்கம்பக்கத்து நண்பர்களாலும் (நல்லது செய்வதாக  நினைத்து கொண்டு ) பல அழிவுரைகள் மன்னிக்கவும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.  அதில் சில வசனங்களை பார்ப்போம்:  

i )  'மாமியார்கிட்ட கொஞ்சம் கவனமா இருந்துக்கோ..!'   ( ஏன்னா அவங்க பூதம் பாரு, தூக்கிட்டு போனாலும் போய்டுவாங்க! ) சில நேரம் இப்படி சொல்றவங்களே இன்னொரு பெண்ணுக்கு  மாமியாரா கூட இருக்கலாம்.....!!

ii )    'நாத்தினார கிட்ட சேர்க்காத...!'  ( ஏன் தொத்து வியாதியா? ) ' உங்க வீட்டு விசயத்தில அவள் தலையிடாம பார்த்துக்கோ...!' (பெண்ணுக்கு, பிறந்த வீட்டில் எவ்வளவு உரிமை  இருக்கோ அந்த அளவு உரிமை நாத்தனாருக்கும் அவள்   பிறந்த வீட்டில் இருக்கக்கூடாதா ?)

iii )    அடுத்த ஆபத்து கணவனுக்கு!!  ' உன் கணவனை உன் கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில முடிஞ்சி வச்சுக்க ' ( அவ்வளவு குட்டியாவா இருப்பாரு..!! ) 

iv )      'கடைசியா முக்கியமா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ  அவ்வளவு சீக்கிரம் தனி குடித்தனம் போற வழியப்  பாரு ' ( நீ சீரா கொண்டு வந்த பொருட்களை வித்து தின்னுடுவாங்க ) 'புத்திசாலியா பொழைச்சுக்கோ, நான் சொல்லவேண்டியதை  சொல்லிட்டேன் அப்புறம் உன் சாமார்த்தியம் ' கடைசியா கொஞ்சம் பொடி வச்சு சொல்லிவிட்டு  சென்று விடுவார்கள்.  

அந்த புதுப்பெண்ணும் எப்படி தன்னை புத்திசாலி என்று நிரூபிப்பது, எப்படி சாமார்த்தசாலி என்று பெயர் எடுப்பது என்பதை பற்றி யோசிக்கும் போதே ஏற்கனவே போடப்பட்ட விதை நன்கு ஆழ ஊன்றி துளிர் விட ஆரம்பத்திருக்கும். இப்படி இந்த விதத்தில் ஒரு பெண்ணை திருமணத்திற்கு தயார்  படுத்தினால் அவளது எதிர்காலம் என்னவாகும் என்று யாரும் ஒரு நிமிடம் கூட நினைத்துப்  பார்ப்பது இல்லை.   திருமணத்திற்கு பிறகு  ஏதாவது பிரச்சனை என்றால் இந்த நலம் விரும்பிகள் எங்கே என்று கண்ணில் விளக்கெண்ணை போட்டு கொண்டுத்தான் தேட வேண்டும்.  அப்படியே தென்பட்டாலும் 'நீதாம்மா பார்த்துக்கணும்' என்று நாசுக்காக சொல்லி  நழுவிவிடுவார்கள்.  பெற்றவர்களும் 'மகளே உன்  சமத்து' என்று   சொல்லிவிட்டால் அந்த பெண்ணின் நிலை என்ன....?   இது இன்றும் பல வீடுகளில் குடும்பங்களில் தொடர்ந்துக்  கொண்டுதான் இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் தொடரும் அவலம்

திருமணத்திற்கு பின் புகுந்த வீட்டில் பெண்ணின் கண்களுக்கு அங்குள்ள அனைவருமே எதிரிகளாகவே தெரியும். யாரிடமும் சரியாக பேசிப் பழகாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளே முடங்கிவிடுகிறாள்.  கணவன் இருக்கும் நேரத்தில் மட்டும்தான் அவளது பேச்சையும், சிரிப்பையும் மற்றவர்கள் கேட்க முடியும். புதுப்பெண்தானே  போகப்போக சரியாகிவிடும் என்று பிறரும் சமாதானம்  செய்துக்  கொள்வார்கள் ( இவள் மனதில் விஷம் என்ற மரம் தற்போது கிளைப்  பரப்பிச் செழித்து  வளர்ந்திருப்பதை அறியாதவர்களாய்!! )

அந்த மாமியாரும், நாத்தனாரும் ஒருவேளை நல்லவர்களாக இருந்தாலும் இந்த பெண்ணை பொறுத்தவரை கெட்டவர்கள்தான் (அப்படிதானே அவளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது) புகுந்த வீட்டினரை தனது நாக்கு என்னும் விஷ கொடுக்கால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கொட்ட தவறுவதே இல்லை.  அடுத்த சில நாட்களில் எடுத்ததுக்கெல்லாம் குற்றம் குறைச்  சொல்லி தன் கணவனை அந்த குடும்பத்திடம் இருந்து பிரித்து தனி குடித்தனம் கொண்டு போய்விடுகிறாள்.

கணவனும் அப்படி போனாலாவது சண்டை குறையுமே என்றுதான் போகிறான். அங்கும் சச்சரவு  தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் (எதையும்  குறை சொல்லியே  பழகி விட்டதால்)  காலம் கொஞ்சம் கடந்த பின்தான் கணவனும் தன் தாயை தவிக்கவிட்டு வந்ததை உணர்ந்து மனம் குமைகிறான். அவனுடைய இயலாமை வெறுப்பாக மனைவியின் மீது திரும்ப வீடு நரகமாகிறது,  இத்தனைக்கும் நடுவில் குழந்தை பிறப்பு வேறு (அது ஒரு தனி டிராக்) அழகான போகவேண்டிய திருமண வாழ்வும், கணவன், மனைவி உறவும்  பாதிக்கப்படுகிறது.  

ஆக இப்படிப்பட்ட நிலை உருவாக காரணமாக அமைவது அந்த பெண்ணின் நிலையற்ற  மனநிலைதான்.  மற்றவர்கள்  ஆயிரம் சொன்னாலும் கேட்கிறவர்களுக்கு புத்தி எங்கே போனது..?  தன் வாழ்க்கை எப்படிப்பட்ட நிலையில் அமைய வேண்டும் என்பதை படித்த அந்த பெண்தான் முடிவு  செய்யவேண்டும் .  மற்றவர்களின் ஆலோசனையை கேட்டாலும் தனக்குள் அதை பொருத்தி 'சரியாக இருக்குமா?'  என்று சீர்தூக்கி பார்க்கும் மனபக்குவம் இல்லாமைதான் கணவன் மனைவி உறவு கெடக்  காரணமாகி விடுகிறது .  இதுதான் இன்று பலரின் அனுபவம்.  


(பின் குறிப்பு)

நாங்கள் மட்டுமா காரணம் ?

இந்த கேள்வி பலருக்கும் தோன்றும்தான்.  மனைவியரும் ஒரு காரணம் தான்.  ஆனால் பெண்களால் மட்டும்தான் மலைபோல் பிரச்னையை உண்டாக்கவும் முடியும்,  அதை பனிபோல் விலக்கவும் முடியும்.  இன்னும் நிறைய பகிர வேண்டியது உள்ளது.  தாம்பத்தியம் கெட எடுப்பாற்கைப் பிள்ளை போன்ற மனநிலை ஒரு காரணம் என்றால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் கருத்து வேறுபாட்டால் ஏற்படக்கூடிய சண்டையை பார்த்தே வளரக்கூடிய பெண்பிள்ளைகளின் பாதிக்கப்பட்ட மனநிலையும் ஒரு பெரிய முக்கிய காரணமாக இருக்கிறது.   இந்த இரண்டு காரணங்கள் பற்றி மட்டும் நாம் பார்த்தாலே போதும்,  குடும்ப சீர்குலைவு  எங்கிருந்து தொடங்குகிறது  என்பதை புரிந்து கொள்ளலாம்.


இரண்டாவது காரணத்தால் ஒரு படித்த, வசதியான, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கணவன்,  திறமையான நல்ல குணம் படைத்த மனைவி, நல்ல குழந்தைகள் என்று எல்லாம் சரியாக இருந்தும் கருத்து வேறுபாடால் இன்று சிதைந்து (அவர்கள் இல்லை அவர்களது குழந்தைகள் ) நாலாபுறமாக சிதறி இருக்கிறார்கள் (கிடக்கிறார்கள் ). அந்த வீட்டின் பெண் பிள்ளையின் குடும்ப வாழ்விலும் இது எதிரொலித்து கொண்டிருக்கிறது, விளைவு அவளது குழந்தைகளையும் பாதித்து வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பயங்கரம்.....!!  இது ஏதோ கற்பனை கதை இல்லை, கண்முன்னே நான் காணும்  உண்மை.  இதை பற்றி இனி தொடரும் பதிவில் கொஞ்சமாக பகிர்கிறேன்.


நெஞ்சை சுடுகின்ற நிஜம்.........!