புதன், பிப்ரவரி 22

7:48 AM
12



பதிவுலகம் வந்த புதிதில் எனக்கு அறிமுகமான கார்த்திக்(எல்.கே) அதற்கு பிறகு இப்போது என் கணவருக்கும் நெருங்கிய நண்பராகி விட்டார் ...! தற்போது பிளாக்கில் பதிவுகள் எழுதுவதை குறைத்துவிட்டார். முன்பு பிறரது தளங்களை தனது பாகீரதி தளத்தில் அறிமுகம் செய்து பலரை, பலருக்கும் தெரிய வைத்தவர் எல்.கே. (மீண்டும் பாகீரதியில் 'இவர்களும் பிரபலமானவர்களே' பகுதியை எழுதலாமே !)

நாங்கள் பசுமை விடியல் இயக்கத்தின் இணையதளம் தொடங்கியதை அறிந்து மிக பாராட்டி வாழ்த்தினார். 'அதீதத்தில் பசுமைவிடியல் தளத்தை அறிமுகம் செய்து எழுதட்டுமா?' என ஒரு மாதமாக கேட்டு கொண்டே இருந்தார். தற்போது தான் இருவருக்கும் நேரம் வாய்த்தது...சில கேள்விகளை என்னிடம் கேட்டு பதிலை பெற்றுக்கொண்டு உடனே பதிவை எழுதி வெளியிட்டும் விட்டார். நடந்தது இதுதான் என்றாலும் அதன் பின் நடந்தது தான் நான் சிறிதும் எதிர்பாராத ஒன்று, வெளிவந்த அன்று மாலையே முகநூலில் 'மரத்தை வெட்டுங்கள்' பதிவு சசிதரன் என்பவரால் பகிரப்பட்டு இந்த நிமிடம் வரை 2,083 பகிர்வுகள் வரை பலராலும் கவனிக்கபட்டு கொண்டிருக்கிறது...!!! இரண்டு வருடங்களாக நான் எதிர்பார்த்து கொண்டிருந்த இது போன்ற ஒரு தருணத்திற்கு ஒரு மறைமுக காரணமாக அதீதத்தை நினைக்கிறேன்...! பெருமிதம் கொள்கிறேன் !

பசுமைவிடியல் இயக்கத்தின் சார்பாக நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதீதத்தில் வந்த பதிவு இப்போது உங்கள் பார்வைக்காக...

                                                       * * * * * * * * * * * * * * * * * 


இதுவரை பிற தளங்களை பற்றி வலையோசையில் மட்டுமே பகிர்ந்துள்ளோம்.. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தளத்தை பற்றியக் கட்டுரை இது.. இன்றைக்கு நமது சுற்றுப்புறச் சூழல் பல விதத்திலும் பாதிப்படைந்துள்ளது. பலரும் பலவகையிலும் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். இங்கே நமது இணையத்திலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதி வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.அதே நேரம் விழிப்புணர்வை எழுத்தில் வெளிபடுத்துவதுடன் நின்றுவிடாமல் களத்தில் இறங்கி இருக்கும் 'மனதோடுமட்டும்' கௌசல்யாவையும் அவருக்கு உற்றத் துணையாக கை கோர்த்திருக்கும் ISR. செல்வகுமார், பிரபு கிருஷ்ணா , சூர்யபிரகாஷ் போன்றோரையும் பாராட்டுகிறேன்.

இணையத்தின் மூலமாக இணைந்த இவர்கள் 'பசுமைவிடியல்' என்ற இயக்கத்தை தொடங்கி, முறையாக திட்டங்கள் தீட்டி ஒவ்வொரு படியாக நிதானமாக எடுத்து வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்... இதற்கான ஒரு இணையதளம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து பதிவர்களின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் திரு இசக்கி சுப்பையா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

*அன்றே இயக்கத்தின் முதல் மரமாக செண்பக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது...

*மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒன்றையும் சங்கரன்கோவில் ஊரில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

* ISR. Ventures நிறுவனமும் பசுமைவிடியலும் இணைந்து மாங்குரோவ் காடுகளை பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறது...

சீமை கருவேலமரம்


இவ்வியக்கம் மிக முக்கிய பணியாக கையில் எடுத்திருப்பது சீமை கருவேலமரங்களை வேருடன் அழித்தொழிப்பது. சுற்றுச்சூழலையும் , நிலத்தடி நீரையும் பெருமளவில் பாதித்துகொண்டிருக்கும் நச்சு மரமான இதனை வேரறுக்க சீரிய முறையில் பல திட்டங்களை வடிவமைத்து இருக்கிறார்கள். முதல் படியாக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறார்கள். மேலும் விவரம் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

இம்மரத்தை குறித்த விவரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல  வேண்டிய ஏற்பாடுகள் ஒரு புறமும், மக்களிடம் நேரில் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றொரு புறத்திலுமாக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றார்கள்.    
இவர்களை நாம் வாழ்த்துவோம்...நமது வாழ்த்துக்கள் அவர்களை அதிக உற்சாகமாக உழைக்க வைக்கும்.

பசுமைவிடியல் தளம் - www.pasumaividiyal.org

அதீதம் சார்பில் இயக்கத்தை குறித்து நான்கு கேள்விகள் கேட்கப்பட்டது...கேள்விகளுக்கான பதிலை பசுமைவிடியலின் சார்பில்  கௌசல்யா தெரிவித்தார்கள்...

1. எல்லோரும் மரம் நடவேண்டும் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் ஏன் மரத்தை வெட்ட வேண்டும் என்று ஆரம்பித்து உள்ளீர்கள்? 

உலக வெப்பமயமாதல் பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் சொல்வதும், செய்வதும் மரம் நடுவதுதான். ஆனால் நாங்கள் சொல்வோம் நடுவது முக்கியமில்லை, இந்த சீமைக்கருவேல மரத்தை வெட்டுவதுதான் முக்கியம் என்று...! ஏன் என்றால் வயலில்  களைகளை அகற்றினால் தான் பயிர் நன்கு வளரும், களைகள் இருப்பின் பயிரை வளரவிடாது என்பது விவசாயம் ! களை இருக்கும் போது பயிருக்கு தண்ணீர்,உரம் போட்டு பயனேதுமில்லை. அதையே தான் இங்கே நாங்களும் சொல்கிறோம், இந்த நச்சு மரங்களை அழித்தால் தான் நல்ல மரங்கள் வளரமுடியும், நல்ல மரங்களின் பயன் முழுதாக பூமிக்கு கிடைக்கும்.

2. சீமை கருவேலமரத்தின் தீமையை சுருக்கமாக கொஞ்சம் சொல்ல முடியுமா ?

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் சீமைக் கருவேல மரம்(வேலிகாத்தான், சீத்த மரம்,டெல்லி முள் என்று பல வட்டார பெயர் உண்டு அறிவியல் பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora))

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டுவாக்கில் விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறோம். மேலே சொன்னபடி களை எடுக்காமல் பயிர் நடுவதும், உரமிடுவதும் வீண் என்ற எண்ணம் தான் இது பற்றிய ஆழமான ஆராய்ச்சியை எங்களுக்குள் உருவாக்கியது மேலும் இதன் தீங்குகள் பற்றி அறிய இங்கே படிக்கவும்
பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

3. களப்பணி தான் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.  பசுமை விடியல் நிர்வாகிகள் நால்வரும் நான்கு திசையில் இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியம்?
இதில் இப்படி ஒன்று இருக்கிறதா ?? உண்மையில் இந்த கேள்வி எங்களுக்குள் ஏன் இதுவரை எழவில்லை என ஆச்சர்யபடுகிறேன்.  இணைந்து செயல்படவேண்டும் என முடிவு செய்தோமே தவிர 'முடியுமா' என்ற வினா யாருக்கும் எழாததே 'சாத்தியம்' என்பதால் இருக்கலாம் அல்லவா...?! நால்வரின் எண்ணங்கள் ஒத்த அலைவரிசை என்ற போது நிச்சயம் எதுவும் சாத்தியமே !

4. சாத்தியம் என்றால் எவ்வாறு ? கொஞ்சம் சொல்லவும்...
நாங்கள் ஒன்றிணைய இணையம் தான் காரணம் என்பதை மறுக்கயியலாது. அதே நேரம் களத்தில் இறங்கி பணியாற்ற நல்ல மனிதர்களின் உதவிதான் வேண்டும். தகவல்களை பரிமாற்ற, சமூக நோக்கு கொண்டவர்களை ஒன்றிணைக்க, செய்திகளை அறிவிக்க, பலரிடம் இயக்கம் பற்றிய செயல்களை கொண்டு சேர்க்க இணையத்தை பயன்படுத்தி கொள்கிறோம். அவ்வளவே.

தற்போது எங்களுடன் இணைந்திருக்கும் தன்னார்வலர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள்...அவர்களுடன் நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம்...அந்தந்த இடத்தில் நடக்க வேண்டிய களப்பணிகளை பற்றிய ஆலோசனைகள், முன்னெடுப்புகள் , கருத்துகள் பற்றி எல்லாம் விவாதித்த பின்னே செயலில் இறங்க இருக்கிறோம். களப்பணிகளின் போது கூடுமானவரை எங்களில் ஒருவர் களத்தில் இருப்பார்.  நாங்கள், தன்னார்வலர்கள் இணையும் போது அனைத்தும் சாத்தியமாகும்.

அதீததிற்கு மனமார்ந்த நன்றிகளை எங்கள் இயக்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற நல்ல உள்ளங்கள்  எங்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்கு இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது...நாம் வாழும் இந்த சமூகத்திற்கு நம்மால் இயன்றவரை சிறு துரும்பையாவது கிள்ளி போடுவோம் என்று சொல்வார்கள் நாங்கள் துரும்பை கிள்ள அல்ல மரத்தையே வெட்டி சாய்க்க போகிறோம்...!!

நன்றி - அதீதம்   
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மீண்டும் ஒரு முறை அதீததிற்கு நன்றியையும் , 'மரங்களை வெட்டுங்கள்' பதிவை பலருக்கும் கொண்டு சேர்க்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 
Tweet

12 கருத்துகள்:

  1. நல்ல தரமான விழிப்புணர்வு பதிவு. நல்ல எண்ணம் நல்ல செயல். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு சிறந்த முயற்சி...பசுமை விடியலில் பாலாவை இணைத்துக் கொண்டேன் ...சேவை செய்ய காத்திருக்கிறேன் .....

    பதிலளிநீக்கு
  4. ஆழ்ந்த தரமான விழிப்புணர்வுப் பதிவு சகோதரி.
    விடியலை நோக்கி பசுமை...

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  6. @@ கோவை நேரம் said...

    //வெட்டிடுவோம் ...வாங்க//

    மிக்க நன்றிகள்

    பதிலளிநீக்கு
  7. @@ Avargal Unmaigal said...

    //நல்ல தரமான விழிப்புணர்வு பதிவு. நல்ல எண்ணம் நல்ல செயல். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்//

    உங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  8. @@ ராமலக்ஷ்மி said...

    //பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//

    மிக்க நன்றிகள் தோழி

    பதிலளிநீக்கு
  9. @@ koodal bala said...

    //ஒரு சிறந்த முயற்சி...பசுமை விடியலில் பாலாவை இணைத்துக் கொண்டேன் ...சேவை செய்ய காத்திருக்கிறேன் .....//

    உங்களின் சுற்றுச்சூழல் ஆர்வம், அக்கறை யாவரும் அறிந்த ஒன்று பாலா.

    எங்களுடன் உங்கள் கரங்கள் சேர்ந்ததால் நாங்கள் இன்னும் அதிக பலம் பெற்றோம்...

    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  10. @@ மகேந்திரன் said...

    //விடியலை நோக்கி பசுமை...//

    உண்மை. ஒரே வரியில் அழகா சொல்லிடீங்க மகேந்திரன்.

    மகிழ்கிறேன். நன்றிகள்

    பதிலளிநீக்கு
  11. @@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //பாராட்டுகளும் வாழ்த்துகளும்..//

    உங்களின் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கிறது...!

    :)

    நன்றிகள் ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...