செவ்வாய், பிப்ரவரி 17

11:52 AM
15



குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற   கனவுகளுடன் தேடித் தேடி பள்ளிகளில் சேர்த்தால் மட்டும் போதாது  அங்கே நமது  குழந்தைகளுக்கு உளவியல் பிரச்சனைகள் ஏதும் ஏற்படுகிறதா எனவும் கண்காணிப்பதும் இன்றைக்கு அவசியமாகிவிட்டது. 

எனது மகன்  படிக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் டாப்பர்ஸ்(Toppers), ஸ்லோலேனர்ஸ்(slow learners) என்ற பிரிவுகள்  உண்டாம். அதாவது  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரிக்கிறார்கள். பாடங்கள் அனைத்தும் நடத்தி முடித்திவிட்ட நிலையில் ஸ்லோலேனர்ஸ் தினமும் பள்ளிக்கு சென்று தனியாக படிக்க வைக்கப் படுகிறார்கள். டாப்பர்ஸ்(முதல் நிலை மாணவர்கள்) தேர்வுகளின் போது மட்டும் வகுப்பிற்கு செல்கிறார்கள், தவிர எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம் என்ற ஸ்பெஷல் சுதந்திரம் உண்டு. பாடங்கள்  குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவென்று தனி சலுகை வேறு .

இந்த முறை கீழ் சாதி மேல் சாதி என்ற பிரிவினைக்கு சிறிதும் குறைந்ததில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஸ்லோலேனர்ஸ் என்பவர்கள் பிறரின் பார்வையில் படிக்காத முட்டாள்கள் எதற்கு லாயக்கேற்றவர்கள்..  இது அவர்களின் மனதில் எத்தகைய எதிர்மறை எண்ணங்களை எல்லாம் ஏற்படுத்தும் என்று சிறிது சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஆசிரியர் அடித்தால் உடனே பள்ளிக்கு சென்று சண்டை போடுவதில் காட்டும் வேகத்தை பெற்றோர்கள் இதை குறித்தும் காட்டவேண்டும். அடிபட்ட புண் ஆறிவிடும். ஆனால் மனதில் ஏற்பட்ட காயம் ??! அவர்களின் எதிர்காலத்தை முடக்கிவிடும் செயல் இது.

எல்லா பெற்றோர்களுக்கும் இதைப் பற்றி தெரியுமா என தெரியவில்லை தெரிந்தாலும் வருத்தப்பட இதில் என்ன இருக்கிறது, நல்லதுதானே அப்படியாவது படிப்பார்களே என்ற எண்ணம் இருந்தால் ஸ்லோலேனர்ஸ் லிஸ்டில் இருக்கும் ஒரு மாணவனை அழைத்து சாதாரணமாக விசாரித்துப் பாருங்கள், அந்த எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொள்வீர்கள்,

எனது மகனின் நண்பனிடம் இது பற்றி விசாரித்தேன், அவன் சொன்னதில் இருந்து ...

* முதல்நிலை மாணவர்களிடம் நகைச்சுவையாக பேசினாலும் நோஸ்கட் பண்ணுவார்கள். ரொம்ப கஷ்டமாக இருக்கும்.  படிப்பின் மீது இருந்த கொஞ்ச ஆர்வமும் குறைந்துவிட்டது.

* ஆசிரியரின் 'என் தலையெழுத்து முட்டாள் பசங்க உங்களை வச்சு மேய்க்கணும்' என்ற  புலம்பலை அடிக்கடி கேட்க நேரும்.

* பள்ளிகளுக்கிடையே நடைபெறும் district level , state level விளையாட்டுப் போட்டிகளுக்கு Toppers மட்டுமே அனுப்பப்படுவார்களாம். (இந்த மாணவன் ஒரு foot boll player) திறமை இருந்தும் ஸ்லோலேனர்ஸ் விளையாட்டில் தவிர்க்கப் படுகிறார்கள்.

* சாதாரண குறும்புகளும் ஸ்லோலேனர்ஸ் செய்யும் போது பெரிதுப் படுத்தி பார்க்கப் படுகின்றன.

* மாணவர்களிடையே நட்பு இருக்கும் ஆனால் ஒற்றுமை இருக்காது !!

* பள்ளிக்குள்  உள்ளே ஏற்படும் வெறுப்பு வெளியிடங்களிலும் எதிரொலிக்கும்.

ஸ்லோலேனர்ஸ் என்ற பதம் மாணவர்களின் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்த ஆசிரியை ஒருவர் late blumers என்று மாற்றினார் .

என்றும் கூறினான்.

மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் போது அவர்களுக்குள் போட்டி பொறாமைகள் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் இவை கைகலப்புக்கு கொண்டு செல்லும். இளவயது குற்றங்களின் காரணம் இன்றைய பள்ளிகளில் அல்லவா இருக்கிறது என்றெல்லாம் எண்ணி தனியார் பள்ளிகளில் நடக்கும் இந்த கொடுமையை  அரசு கவனிக்காதா தட்டி கேட்காதா என் மனம்  புழுங்கினேன்.

ஆனால்,  தற்போது தமிழக பள்ளி கல்வித்துறையே தரம் பிரிக்கச்சொல்லி  அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது என்பதை செய்திகளின் மூலம் அறிந்து அதிர்ந்தே விட்டேன்.

அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் பள்ளிக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் உள்ள சில மட்டும் உங்கள் பார்வைக்கு...

* அரையாண்டு தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் இடை கடை என்று மாணவர்களை பிரிக்க வேண்டும்.

* கடைநிலை மாணவர்கள் சிறிதும் சிந்தனையில்லாத பரிதாபத்திற்குரியவர்கள்.

* இதில் நம்பர் 1 & 2 பிரிவுகள் டிவி பக்கமே திரும்ப கூடாது. அதே தரத்தில் உள்ள பிற மாணவர்களுடன்  மட்டுமே பேச வேண்டும். கடை நிலை மாணவர்களுடன் பிற மாணவர்கள் பேசக் கூடாது.

* பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 நிமிடங்களுக்குள் மதிய உணவை உண்டு முடித்துவிட வேண்டும். உடனே படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இந்த ரீதியில் தொடரும் அரசின் விளக்கெண்ணை அறிக்கையை இதுக்கு மேல் சொல்லவே வெறுப்பாக இருக்கிறது. 100/100 தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டுமென்றால் இதையெல்லாம் கண்டிப்பாக செய்யுங்கள் என்று ஆசிரியர்களுக்கு கட்டளை இட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு விடப் பட்ட இந்த அறிக்கை முட்டாள்தனத்தின் உச்சம். பெருந்தகை காமராஜர் அவர்களின் வரலாறு தெரியாத இது போன்றவர்கள் கல்வித்துறையில் இருப்பதே சாபக்கேடு.  விஞ்ஞானிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பலர் பள்ளி இறுதியை கூட முடிக்காமல் வாழ்க்கையில் சாதித்ததை கல்வித்துறைக்கு யார் எடுத்துச் சொல்வது.

மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் தரத்தை நிர்ணயிப்பதும்  அதையும் பள்ளிக் கல்வித்துறையே வழிமொழிவதும் இங்கே மட்டும்தான் நடக்கும் . ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களை நீ அறிவாளி நீ முட்டாள் நீ எதுக்கும் லாயக்கற்றவன் என மற்றவர்கள் முன்னாள் சுட்டிக்காட்டி பிரித்து வைத்த பின்னர் அவர்களுக்குள் ஒற்றுமை என்பது எப்படி இருக்கும். அரையாண்டுத் தேர்வு முடிவுக்கு பிறகு நேற்று வரை நண்பனாக தோளில் கைப் போட்டுப் பேசிக் கொண்டிருந்தவனிடம் இனி அவனிடம் பேசாதே என்பது எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும். அதிர்ச்சி அவமானம் தாழ்வு மனப்பான்மை அனைத்தும் ஒரு சேர மனதை தாக்க வெளியே சிரித்து உள்ளே அழும்  நிலை பரிதாபம். தனது நண்பன் தன்னைவிட இரண்டு மார்க் அதிகமாக எடுத்தாலே முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பருவம் இது.  அதும் தவிர பெற்றோர்களே நீ வீக் என்று பள்ளியே சொல்லிடுச்சே என குத்தி காட்டும் விபரீதமும் இருக்கிறது.

நன்றாக படிப்பவர்களுடன் பிற மாணவர்களும் கலந்து அமர்ந்து படிக்கும் முந்தைய குரூப் ஸ்டெடி முறை நல்லதொரு முறை. மாறாக     சமத்துவத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய பள்ளிகளை மாணவர்களை தரம் பிரிக்கச்  சொல்லும் பள்ளி கல்வித்துறையின் செயல்  கடும் கண்டனத்திற்குரியது.  (இன்று மதிப்பெண்கள் அடிப்படையில் தரம் பிரிப்பார்கள் நாளை சாதி, மத அடிப்படையில் பிரித்தாளும் பிரிப்பார்கள்)



Slow learners  மன உளைச்சலை ஏற்படுத்தும் இம்முறை Toppers மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதே உண்மை.  தரம் பிரிப்பதை பற்றி பிளஸ் 2 படிக்கும் என் மகனிடம் கேட்டேன்,

'Toppers க்கு அதிக  பிரசர் இருக்கும். பள்ளியின் கெளரவமே உன் கைல தான் இருக்குன்ற மாதிரி ஓவர் பில்டப், டார்சர் எல்லாம் இருக்கும். ஒட்டுமொத்த ஆசிரியர்கள், பள்ளியின் கவனமும் நம்ம மேலேயே  இருந்தால் சுதந்திரமாக இயல்பாக நடக்க முடியாது.  இப்போ என்னை எடுத்துக்கோங்க இந்த இரண்டு category  பத்தியும் நான் கேர் பண்ணமாட்டேன். நான் free bird, படிக்கிறதும் படிக்காததும் என் இஷ்டம், யாரும் வலுகட்டாயமா என்மேல பிரஷரை ஏத்த முடியாது, சோ சந்தோசமா இருக்கிறேன்' என்று கூறினான்.  இந்த மனப்பக்குவம் எல்லா மாணவர்களுக்கும் இருக்குமா என்று சொல்ல முடியாது.

 குழந்தைகளுக்கு இந்த மனப்பக்குவத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கையில் இருக்கிறது. ஒருபோதும் என் மகனை நான் படி படி என்று வற்புறுத்த மாட்டேன், படிப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி, அதுவே வாழ்க்கையல்ல என்றே சிறு வயதில் இருந்தே சொல்லி வந்திருக்கிறேன். என் மகனும் டியுஷன்,ஸ்பெஷல் கிளாஸ் என்று இதுவரை போனதில்லை, பத்தாம் வகுப்பில் 468 மார்க் எடுத்தான், அவ்வாறே  பிளஸ் 2 விலும் எடுப்பான்,  மேல்படிப்பு என்ன என்பதையும் அவன் முடிவு செய்திருக்கிறான்.  அதனால் அதற்கேற்றாற்போல் மார்க்  எடுக்கவேண்டும் என்று படிக்கிறான். அது போதும்.

பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளின் மனதை பக்குவபடுத்தி வைத்துவிட்டால் பள்ளியும், கல்வித்துறையும் மாத்தி மாத்தி எத்தகைய பிரஷர் கொடுத்தாலும் அது நம் குழந்தைகளை சிறிதும் பாதிக்க வாய்ப்பில்லை.  பள்ளிகளுடன் மல்லு கட்டுவதை விட  இது சுலபம் அல்லவா ?!

இதோ தேர்வு நெருங்கியே  விட்டது. டிவி, கிரிக்கெட் பார்க்கட்டும் தப்பில்லை. மாணவர்களுக்கு தேர்வை பற்றிய பயம் அதிகம் இருக்கும், அதை களைந்து அவர்களின் மனதை ரிலாக்ஸ் ஆக  இருக்குமாறு மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.  மதிப்பெண்ணை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நம்புங்கள் !! அவர்கள் உங்கள் குழந்தைகள் !!





Tweet

15 கருத்துகள்:

  1. சரியான தகவல்..... தொடர்கிறேன்! சிறந்த பதிவு....

    என் தளம் www.naveensite.blogspot.com!

    பதிலளிநீக்கு
  2. இன்றைய கல்வித் துறை தவறான பாதையில்
    வெகுவேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது சகோதரியாரே
    மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாக வைத்து மாணவர்களை மதிப்பிடுவதும், தேர்ச்சி சதவீதத்தினை மட்டும் அடிப்படையாக வைத்து பள்ளிகளை மதிப்பிடுவதும் , முற்றிலுமாக மாற வேண்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேர்ச்சி சதவீதத்தினை மட்டும் அடிப்படையாக வைத்து பள்ளிகளை மதிப்பிடுவதும் //

      கடந்த சில வருடங்களாக இந்த மனப்பான்மை அதிகரித்திருக்கிறது...மாநிலத்தில் முதல் இடம் பிடித்த பள்ளியை நோக்கி அது பெற்றோர் படையெடுக்கிறார்கள், அது வேறு மாவட்டத்தில் இருந்தாலும் சிறிதும் தயங்காமல் ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார்கள்... ஹாஸ்டலில் சேர்ப்பது என்பது அந்த குழந்தையின் விருப்பதை பொறுத்தே இருக்கவேண்டும், விருப்பத்திற்கு மாறாக ஹாஸ்டலில் சேர்த்தால் படிப்புடன் சேர்ந்து அதன் மனநிலையும் கெட்டுவிடும். நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று இது!!!

      கருத்திட்டமைக்கும் தமிழ்மணத்திற்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  3. நான் என் மகனுக்கு அதிகம் அழுத்தம் கொடுப்பதில்லை, முடிந்த அளவுக்கு படி என்ற அளவில் தான்... அதனால் அவன் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் நடமாடுகின்றான்...

    படிப்பு மதிப்பெண்களுக்கானதல்ல... பெற்றோராகிய நாம் தான் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்...

    அருமையான பதிவு சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் என் மகனுக்கு அதிகம் அழுத்தம் கொடுப்பதில்லை, முடிந்த அளவுக்கு படி என்ற அளவில் தான்//

      அருமை. இந்த புரிதலும் தெளிவும் அனைத்து பெற்றோருக்கும் இருந்துவிட்டால் இன்றைய குழந்தைகளின் எதிர்கால உலகம் அற்புதமான இருக்கும்.

      மகிழ்வுடன் மிக்க நன்றி சரவணன்.

      நீக்கு
  4. சகோ
    வணக்கம்.
    தாங்கள் ஒரு பெற்றோராக இருந்து ஆதங்கப்பட முடிகிறது.
    அடிமைப்பணியில் ஈடுபடும் ஆசிரியச் சமூகம் அவ்வாதங்கம் கூடப் படமுடியவில்லை.
    மாணவரது நலனில் சற்றும் அக்கறை இல்லாத கல்வி முறை, தீட்டப்படும் “ நல “ திட்டங்கள்...,
    மாணவன் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று செய்யப்படும் அழுத்தம் இதெல்லாம் இதன் பின்னணியில் இருக்கின்றன.
    உண்மையில் மாணவர் கல்வி அறிவு பெறச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்கு முற்றிலும் எதிரான பாதையில்தான் இன்றைய பாடசாலைகள் சென்று கொண்டிருக்கின்றன.
    தேர்ச்சி பெறும் இலக்கு நோக்கிய பயணத்தில் இடப்படும் நெருக்கடிகளுக்கு முன் மாணவரை “ மெல்லக் கற்போன் “ என்று வகைமைப்படுத்தும் நிலை ஒரு ஆசிரியனுக்கு நேர்கிறது.
    எப்படியாவது தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்கிற கட்டளைக்கு முன்னால், கல்வியாவது அறிவாவது,,....
    உண்மையில் இன்று மீத்திறமற்ற அல்லது மெல்லக் கற்கும் மாணவர் என்று வகைப்படுத்தப்படும் மாணவர்க்கு வகுப்பறைகளில் அளிக்கப்படும் பயிற்சி,ஓரளவிற்கு புரிந்து கொள்ளுந்திறனுள்ள 5ஆம் வகுப்பு மாணவர்க்கு அளிக்கப்படுமேல், அவர்கள் மிக எளிதாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட முடியும்.
    தங்களின் ஆதங்கம் நியாயமானதே..!
    என்ன உங்களால் அதேனும் பட முடிகிறது.
    அருமையான பதிவு.
    தங்களைத் தொடர்கிறேன்.
    தம கூடுதல் 1
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக கூறியுள்ளீர்கள்...இன்றைய ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கொடுக்கப் படும் அழுத்தம் மிக அதிகம். இயந்திரம் மாதிரி மனதை இறுக்கமாக்கி கொண்டுவிட்டார்கள் என்றே வருந்துகிறேன். வேறு வழியும் இல்லை.

      கற்பிக்கும் முறையும், பாடத்திட்டங்களும் ஒழுங்குப் படுத்தப்படவேண்டும், மாற்றம் தேவை, அதுவும் விரைவாக......

      ஆதங்கத்தை என்னால் பதிவு பண்ணமட்டுமே முடிகிறது...

      முழித்துக் கொள்ளுமா தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை ??!!!

      வருகைக்கும் கருத்துக்கும் என் அன்பான நன்றிகள் .

      தமிழ்மணத்திற்கு நன்றி.

      நீக்கு
    2. சகோ தவறாகப் புரிந்து கொண்டீர்களோ......
      உங்களால் ஆதங்கத்தைப் பதிவு செய்ய முடிகிறது.
      ஆசிரியர்களாகிய எங்களால் அதுவும் முடிவதில்லை என்னும் பொருளிலேயே சொல்லப்பட்டது அக்கருத்து.
      நன்றி

      நீக்கு
    3. அச்சோ நான் அப்டி ஏதும் சொல்லலையே... என்னாலும் பதிவு பண்ணவே முடிகிறது , குறைந்த பட்சம் என் மகன் படிக்கும் பள்ளியை கூட என்னால் எதிர்த்து கேட்க முடியவில்லையே என்பதையே குறிப்பிட்டேன். தவறை சுட்டிக் காட்டி கடமையை முடித்துக் கொள்கிறோமோ என்பதை போன்ற ஒரு குற்றவுணர்ச்சி இது , வேறு ஒன்றுமில்லை.

      உங்களின் நிலையை புரிந்துக் கொண்டேன்...உங்களின் ஆசிரிய பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!

      நன்றி.

      நீக்கு
  5. அடப்பாவிகளா...! அங்கேயே பிரிவினையா...? நாடு வெளங்கிடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே அதிர்ச்சிதான் எனக்கும் ஏற்பட்டது... !!

      நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  6. பாதிக்கப்படும் பெற்றோர்கள் தனியாகவே அல்லது மொத்தமாக ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்துங்க. திருப்பூரில் இதே போல ஒன்று நடக்க வாலை ஒட்ட நறுக்கினார்கள். நிர்வாகத்திற்கு பயம் வந்தது.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...