வெள்ளி, பிப்ரவரி 20

6:25 PM
16



எப்படித் தொடங்க என்று வேறு எந்த போஸ்டுக்கும் இவ்ளோ  யோசிக்கல ...சரி மனசுல வர்றத எழுதிவுடுவோம்  ...படிக்கிறவங்க பாடு ! :-)  ஆனா உண்மையில் எனக்கு இந்த பதிவு ஒரு அழகான நினைவுகளின் மீட்டல். அவனை பற்றி எழுத அமர்ந்ததும் இதயத் துடிப்பு அதிகரிக்க மனசு உளற கை நடுங்க கணினியின் மீது மெல்ல விரல்களை ஒத்தி எடுக்க ஆரம்பிக்கிறேன்... அவன் சில சமயம் இப்படித்தான் என் நினைவுகளில் உட்கார்ந்துக் கொண்டு என்னை நினைவிழக்கச் செய்வான் ... என்னை அதிகம் சிரிக்கவைப்பவன்... அவனுக்கு என்னை அடிக்கடி கட்டிக்கணும்... ஐ லவ் யூ சொல்லேன் என கெஞ்சினால் சரி சரி நானும் ஐ லவ் யூ  என்று சொல்லி போனஸாக என் கன்னத்தில் முத்தமிட்டு சிரிப்பான்.

அப்படி சிரிக்கும் போது அவன் கன்னத்தில் விழும் சின்ன குழிக்காக என் செல்லம், என் பட்டு , புஜ்ஜிமா, கண்ணம்மா என நீளும் என் கொஞ்சல்கள். மாதா பிதா குரு தெய்வம் நாலையும் விட மேலான ஒன்று இருக்குமென்றால் அதுதான் அவன்.  ஒருமுறை ஊசி குத்தி என் விரலில் ரத்தம் போது ஷ் ஆ என்று கொஞ்சம் சத்தமா கத்திட்டேன் போல... first aid பாக்சை தூக்கி வந்து  (கண்ணுக்கே தெரியாத காயத்திற்கு) கட்டுப் போட ஆரம்பித்துவிட்டான். அவனது செய்கையால் கலங்கிய என் கண்களை பார்த்தவன் வலிக்குதா சரியாப் போய்டும்  என விரலை நீவிவிட்ட அன்பில் கரைந்தே போய்விட்டேன். அவன் வந்தபிறகே பிரிக்கவேண்டும் என்று கட்டுடன் பகல் முழுவதும் சுற்றினேன், ஸ்கூல் முடிந்து வந்தவன் இப்போ எப்டிமா இருக்கு கேட்டுக் கொண்டே கட்டை பிரித்து பார்த்திங்களா சரியா போச்சு , நானும் அட ஆமால என்றேன் அவனை ரசித்துக்   கொண்டே ...

அவன் எப்போதும் அப்படித் தான்... பிறரின் மீதான நேசத்தை காட்டுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.  ஒரு குழந்தை போதும் என்று ஐந்தரை வருடங்களை கடந்த சமயத்தில் தற்செயலாக சந்தித்த ஒரு தூரத்து உறவினர், 'ஆணோ பெண்ணோ இன்னொன்னு பெத்துக் கோங்க, நம்ம காலத்துக்கு பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் கவனிச்சுப்பாங்க' என்றதுடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை தொடர்ந்தவர் 'உங்க பையனின் மீது உங்களுக்கு அன்பும் அக்கறையும் இருந்தால் அவனுக்கு ஒரு துணையை கொடுங்க,  ஒரு  பையனா தனியா வளருவது சரியல்ல' என்றார். அதன் பின் நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை... அதற்கு அடுத்த மாதம் ஜனித்து பத்தாவது மாதத்தில் கையில் தவழ்ந்தான் எங்களின் இரண்டாவது மகன் விஷால்!

இவன் பிறந்து மூணு வருடம் கழித்து ஒருநாள் பெரிய மகனிடம் விஷாலின் பிளாஷ் பேக் பற்றி 'அந்த அங்கிள் சொன்னதும் கடவுள்கிட்ட கேட்டோம் இவன் பொறந்தான்'னு கதை மாதிரி சொன்னேன், பொறுமையா கேட்டவன் 'அந்த ஆள் மட்டும் என் கைல கிடைச்சான், அத்தோட தொலைஞ்சான்' அப்டினு ஒரு வெறியோட சொல்லவும், உண்மை புரிந்து சிரித்துவிட்டேன்.   அவ்ளோ அட்டகாசம் அராஜகம் பண்ணுவான் சின்னவன். கோபம், பிடிவாதம், வைராக்கியம் எல்லாமே ஜாஸ்தி. நினைச்சதும் நடந்தாகணும் இல்லைனா பக்கத்துல இருக்குறவங்க தலைமுடில பாதி இவன் இரண்டு கைக்கும்  போய்டும்.  அவன் வளர வளர எங்களின் பயமும் அதிகமாச்சு. கவுன்சிலிங் பண்ணா சரியாகிடும்னு நண்பர் ஒருத்தர் சொன்னதால பாளையங்கோட்டையில் இருக்கும் பன்னீர்செல்வம் டாக்டரை பார்க்கப் போனோம்.  ஹாஸ்பிடல் வாசலில் மனநல மருத்துவமனை என்ற போர்டை பார்த்ததும் என் மனசு என்னவோ பண்ண, உள்ள போகாம திரும்பி வந்துட்டோம்.

அவனோட ஸ்கூல்ல  டீச்சர்ஸ் இவனை பத்தி நிறைய கம்பிளைன்ட் பண்ணுவாங்க, கிளாஸ்ல பசங்ககிட்ட பேசிட்டே இருக்கிறான், பாடத்தை கவனிக்காம படம் வரைஞ்சிட்டு இருக்கிறான்னு....பரவாயில்லை கண்டிக்காதிங்க , நான் பார்த்துக்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு வருவேன். ஹோம் வொர்க் செய்யமாட்டான், சொல்லிகொடுக்க உட்கார்ந்தாலும் இரண்டு நிமிசத்துல அவன் பார்வை  வேற பக்கம் போய்டும்.   A  for Apple என்று தொடங்கி  Z  வரைகூட சரியாக சொல்லமாட்டான். இப்படியே நாலாவது வகுப்பு முடித்தான்.  கம்ப்யூட்டர் கேம்ஸ், படம் வரையறது என ரொம்ப சுதந்திரமாக சந்தோசமாக  வளர்ந்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் நிறைய பேசுவேன், அவனையும் பேச வைப்பேன். அவங்க அப்பா பஞ்சதந்திர கதைகள், விக்கரமாதித்தன்,தெனாலி ராமன் கதைகள் என்று புக்ஸ் வாங்கி படித்து இரவு இவனுக்கு கதை சொல்வார். படிப்பை விட அவனது குழந்தைமையை கெடுக்காம இருக்கணும் என்பதில் கவனமாக இருந்தேன்.   

ஒருநாள் அவன் கைப்பிடித்து ரேகைபார்த்து, குட்டிமா நீ பெரிய சைன்டிஸ்ட் ஆ வருவ போலிருக்கே' என்றதற்கு அவனும் 'ஆமாமா எனக்கும்  ஏதாவது ஆராய்ச்சிப் பண்ணனும்னு தோணிட்டே இருக்குமா' என்றான். எனது ரேகை ஜோஸ்யமும் அவன் மனதை படித்து சொன்னதுதானே. எங்க ஊரில் பல வசதியான வீட்டு பிள்ளைகள் சைனிக் மிலிட்டரி ஸ்கூலில் சேருவதற்கு  வருடாவருடம் முயற்சி செய்வதை பற்றி என் கணவர் பேசிக் கொண்டிருந்தார்.  6 ஆம் அல்லது  8 ஆம் வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும். அங்கே இடம் கிடைப்பது மிக கடினம்,  அங்க படிச்சா ஆர்மி ,  நேவி , ஏர்போர்ஸ் போன்றவற்றில் ஆபிசர் ஆகலாம் என்று சொல்லவும், அருகில் இருந்த விஷால் அந்த ஸ்கூலை பற்றி கூகுளில் தேடி எடுத்தான். ஹார்ஸ் ரைடிங், ட்ரெக்கிங் என்று போட்டோஸ் இருந்ததை பார்த்ததும் நான் அங்க படிக்கப் போறேன்மா என சீரியசாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டான்.  போட்டி அதிகம் இருக்கும் என்பதால் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத தயார் செய்வதற்கு கோச்சிங் சென்டரில் முதலில் சேர்க்கணும். 'ஒகே அப்போ அங்க சேருங்க' என விஷால் சொல்லவும் எனக்கு வயித்தில் புளியை கரைக்க ஆரம்பித்தது.

நீண்ட ஆலோசனை விவாதத்திற்கு பிறகு உடுமலைபேட்டை அருகில் அமராவதி நகர்  சைனிக் ஸ்கூலுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கோச்சிங் சென்டரில் சேர்த்தோம். இங்கேயும் இண்டர்வியூ வைத்தே செலக்ட் செய்கிறார்கள். இவனுடன் எங்கள் ஊர் பசங்க மூணு பேரும் அங்கேயே   சேர்ந்தார்கள். சேர்த்துவிட்டு கிளம்பும் நேரம் என் மனதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக, 'இருந்துப்பியா குட்டி' என்று கேட்டேன், அவனோ கொஞ்சமும் தயங்காமல்  'நான் இருந்துப்பேன், உங்களாலத்தான் முடியாது, அம்மாவ பார்த்துக்கோங்க அப்பா' என்று  பெரிய மனுஷன் மாதிரி சொல்லிவிட்டு வேகவேகமா ஹாஸ்டலுக்கு  உள்ளே சென்றே விட்டான்.   

அங்கிருந்து பழனி திண்டுக்கல் வரையும் தொடர்ந்தது என் அழுகை.  என் கணவர், 'அவனுக்கு எவ்ளோ வைராக்கியம் பாரேன், விரும்பியது நிறைவேறனும்ன்ற பிடிவாதம் இருக்குற இவன் நல்லா இருந்துப்பான், நீ தைரியமா இரு' என்றார். உண்மைதான். ஆறு மாதம் கோச்சிங் முடிந்து  போன வருடம் 2014 ஜனவரியில் எக்ஸாம் நடந்தது. Written exam, Interview இரண்டும் சைனிக் ஸ்கூலிலும் மெடிக்கல் பிட்நெஸ் செக்கப்  கோவையிலுமாக நடந்து முடிந்து ஊர் திரும்பினோம்.  மூன்றிலும் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சிப் பெற்றான், ஆனால் செலக்ட் ஆகவில்லை. தமிழகத்தில் ஒன்றுமாக  இந்தியாவில் மொத்தம் 23 சைனிக் ஸ்கூல்கள் இருக்கின்றன. தமிழக ஸ்கூல் சீட்க்கு ஆயிரக்கணக்கில் போட்டி போட்ட மாணவர்களில் மொத்தம் 90 பேரை செலக்ட் செய்திருந்தார்கள். இதில் அதிக சதவீதத்தில் வட நாட்டினர் இருந்தார்கள்.  விசாரித்ததில்  நம்ம பசங்க +2 முடித்ததும் டாக்டர், இஞ்சினியர் என்று போய்விடுகிறார்கள், ஸ்கூல் நடத்துவதின் குறிக்கோள் பூர்த்தி அடைவதில்லையாம். காரணம் என்னவோ இருக்கட்டும் என் மகனின் விருப்பம் நிறைவேறலையே என்ற வருத்தத்தில் அவனிடம், 'அடுத்து என்னமா பண்றது'  என்று கேட்டேன். கொஞ்சம் வருத்தம் நிறைய யோசனை என்றிருந்த அவன் சொன்னான், 'இந்த லெவல்ல இருக்குற வேற ஸ்கூல் பாருங்க, படிக்கிறேன்'.  அதை கேட்டதும் 'மறுபடியும் ஹாஸ்டலா வேண்டாம்டா' என்றதற்கு 'அடப்போமா உன்கூட இருந்தா படிக்க மாட்டேன், நான் சைன்டிஸ்ட் ஆகணும் நிறைய படிக்கணும்' 

அப்புறமென்ன மறுபடியும் ஸ்கூல் தேடும் படலம். மதுரையை அடுத்த திருப் புவனம் ஊரில் இருக்கும் வேலம்மாள் ரெசிடென்சியல் ஸ்கூலை முடிவு செய்தோம். அங்கேயும் ஒரு Interview + 1 1/2 லட்சத்தில் பீஸ். வாரா வாரம் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவோம். ஆச்சு இதோ ஒரூ வருடம் முடியப்போகிறது.  எல்லா பாடத்திலும் 95, 97 என்று எடுக்கிறான். கூடவே டிரம்ஸ் , டென்னிஸ், ஸ்விம்மிங், யோகா என்று என்னவெல்லாம் விருப்பமோ அதை எல்லாம் கற்று வருகிறான்.  ஸ்கூல் உள்ளே இருக்கும் லைப்ரரியில்  எடுத்து படிக்கும் புக்ஸ் பத்தி நிறைய பேசுவான். எங்களிடம் கதை கேட்டு கேட்டு கதை சொல்ற பழக்கம் அவனுக்கும் வந்துவிட்டது. போன வாரம் போனில் பேசும்போது சொன்னேன், நீயா கதை எழுத டிரை பண்ணிப் பாரேன் என்று. சரி என்றவன் இன்று வீட்டுக்கு வந்ததும்  நோட்டை காட்டினான்,அழகான கையெழுத்தில் ஐந்து பக்கத்திற்கு கதை அங்கே இருந்தது... எனக்கு முன்னால் அவன்  புக் போட்டுட்டுவான்னு நினைக்கிறேன். :-)

அப்பா அம்மாவை விட தனது அண்ணன் மேல் உயிரையே வைத்திருக்கிறான். இரண்டு வருடமாகிறது இருவரும் சண்டைப்போட்டு, லீவுக்கு இவன் வந்ததும் தனது லேப்டாப்பை இவனிடம் ஒப்படைத்துவிடுவான் பெரியவன். கேம்ஸ் , ஆங்கில படங்கள் என்று முழு நேரமும் அதில் மூழ்கிவிடுவான். மகன்கள்  இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக பேசி விளையாடுவதை ஓரமாக நின்று ரசிப்பதுதான் எங்கள் இருவரின் பெரிய சந்தோசமே, வாழ்தல் இனிது !!

இப்போ ஆறாவது படிக்கிற இவரு ஒரு மாசமா 'டென்த் முடித்ததும் அமெரிக்கா போய் படிக்கப் போறேன், பணத்தை ரெடி பண்ணிக் கோங்க' என்று சொல்றாரு. ஏண்டா அங்க போகணும்னு கேட்டதுக்கு, எனக்கு பிடிச்ச வில்ஸ்மித், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், கார்ட்டூன் காரெக்டர்ஸ் எல்லாம் நியூயார்க்லதான் இருக்காங்க, சோ ஹேப்பியா ஜாலியா படிப்பேன்னு சொல்றான். என்னத்த சொல்ல... குழந்தைகளின் உலகம் ஆச்சரியங்கள் நிரம்பியதுமட்டுமல்ல, இப்படி சில திடீர் திருப்பங்களும் தான். :-)  விஷாலிடம் இப்போதும் அதே பிடிவாதம் வைராக்கியம் உண்டு, தனது விருப்பத்தை நிறைவேற்ற இவை இருக்கட்டும் என்பதை புரிந்தவனாச்சே  அவன் !

புதிதாக நிறைய தெரிந்துக் கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இன்றைய குழந்தைகளிடம் அதிகம். சுதந்திரமாக சிந்திக்கவும்  செயல்படவும் விட்டுவிட்டால்  அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதை புரியவைத்தவன் விஷால்.  எல்லாவற்றையும்விட  குழந்தையை ஒரு குழந்தையாக எப்படி வளர்க்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான்.

* * *

இது வெறும் கட்டுரை அல்ல பதினோரு வயது வரையிலான அவனது அனுபவங்களின் சிறிய தொகுப்பு, என்றாவது ஒரு நாள் இந்த அனுபவங்களை, அவனது பார்வையில் அவன் எழுதலாம் ஒரு பிளாக் ஆரம்பித்து...! பேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருப்பவனுக்கு  பிளாக்கில்  அக்கவுன்ட் வைக்க ரொம்ப நாளாகுமா என்ன  !!! :-)   

அப்புறம்

சொல்ல மறந்துட்டேனே  இந்த பதிவு யார் கண்ல எல்லாம்படுதோ  அவங்கலாம் என் மகனை அவசியம் (மனதிலாவது) வாழ்த்தியே ஆகணும்... பின்ன இன்னைக்கு(20/2/15) அவனுடைய பிறந்தநாள் ஆச்சே ... 

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா 
பேசும் பொற்ச்சித்திரமே...
அள்ளி அணைத்திடவே 
என் முன்னே ஆடி வரும் தேனே... !!

பெரியோர்களின் பரிபூர்ண அன்பும் ஆசியும் பெற்று தமிழ் போல் செம்மையாய் நீ வாழ வேண்டுமாய் இறைவனை வேண்டுகிறேன்.

என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிமா !!!


பிரியங்களுடன்
விஷால் அம்மா. 


பின்குறிப்பு : சைன்டிஸ்ட் ஆவாய் என்று நான் சொன்னதற்கு காரணம்  அவனுக்கு படிப்பின் மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தணும் என்பதற்காக... அந்த ஐடியா நல்லவிதமாக வொர்க் அவுட் ஆனது. குழந்தைகளுக்கு இப்படி எதையாவது மறைமுகமாக சொல்லி அவர்களின் கவனத்தை நல்ல விதத்தில் திசைதிருப்பலாம் என்பது எனது அனுபவம்.


Tweet

16 கருத்துகள்:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷால் :)

    பதிலளிநீக்கு
  2. ///வாழ்தல் இனிது //உண்மைப்பா சந்தோஷமா ஒவ்வொரு தருணத்தையும் நினைகூர்ந்திருக்கீங்க ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியதற்கு என் அன்பும் நன்றியும் தோழி...

      நீக்கு
  3. anupavichu ezhutirukinga thozhi..many more happy returns of the day vishal may ur all dreams come tru,god bless u!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியதற்கு மகிழ்கிறேன் ... நன்றி மேனகா

      நீக்கு
  4. பெற்றோர்களுக்கு (உங்களுக்கு) இதை விட சந்தோசம் ஏது...?

    எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    பிளாக்கில் அக்கவுன்ட் - கொஞ்ச நாள் ஆகட்டும்...

    குழந்தைகளிடமிருந்து தினம் தினம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் - இன்றைக்கு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிளாக்கில் அக்கவுன்ட் - கொஞ்ச நாள் ஆகட்டும்//

      அவர் எப்போ என்ன முடிவு எடுப்பார்னு தெரியல... :-) எது தேவை,எது சரி தவறு என்பதை தீர்மானிக்கும் பக்குவம் உள்ள பிள்ளைகளை எண்ணி நாம் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை என நினைக்கிறேன். தனபாலன் சார்.

      நானும் அவனிடம் கற்றப் பாடத்தை தான் என் பதிவுகளில் அங்கே இங்கே தெளிக்கிறேன் என்பதே உண்மை.

      மிக்க நன்றிகள் சார் உங்களின் வாழ்த்திற்கு...

      நீக்கு
  5. விஷாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அருமையா நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்பையும் சொல்லிடுங்க. ந்யூயோர்க் வரட்டும் பார்த்துக்குவோம்.

    மறுபடி எழுத வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷால், நியூயார்க் போகணும் என்று சொன்னதும் உங்களை தான் நினைத்தேன்... உடனே சொன்னேன், 'அங்கே உன்னை வரவேற்க ஒருத்தர் இருக்கிறார்' என்று . ஆமா அது எப்டி இதையே நீங்களும் சொல்றிங்க !!! :-)))

      வாழ்த்துக்கும் அன்புக்கும் மகிழ்கிறேன் ...

      நன்றி 'துரை' (அப்பா டி... நீங்க விரும்பியபடி கூப்டாச்சு) :-))

      நீக்கு
  7. அழகாக அனுபவங்களை ரசித்து எழுதியிருக்கிறீங்க. என் பிந்திய வாழ்த்துக்கள் விஷாலுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் என் நன்றிகள் பிரியசகி...

      நீக்கு
  8. விஷாலுக்கு எனது வாழ்த்துக்கள்...

    எங்க வீட்டுலயும் ரெண்டு பசங்க.. இப்பவே ரெண்டு பேரும் சேர்ந்து ஆட்டம் போடுராங்க .....

    உங்க பதிவுகளை படிக்க படிக்க எங்க பசங்க எண்ணமே தோணுது ...

    அருமையானபதிவு...........

    பதிலளிநீக்கு
  9. என்ன நேரம் என்று தெரியலம்மா, தங்கள் பதிவுகள் பல இன்று தொடர்ந்து படிக்கிறேன். மனம் ஒத்த அலைவரிசையோ,,,

    சரி சரி குடிக்கு என் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சரியா சொல்வோம்ல,,,,

    என் மகனின் நிலையும் இது தான். என்னவர் டாக்டரிடம் போகனும் என்று சொல்லும் போதெல்லாம் அவர் மீது கோபமும் என் குழந்தை என்ன மனநோயாளியா என்ற பயமும்.
    தாங்கள் சொன்ன காரணங்கள் மட்டும் தான்,,,,, எப்பவும் விளையாட்டு, டிவி, படிப்பு என்பது (அவனைப் பொறுத்தவரை) நான் சொல்லவதால் மட்டும் தான். இப்ப கொஞ்சம் நம்பிக்கை,,,

    நன்றி சகோ, நம்பிக்கையுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புயல் போல ஒரு தென்றல் வந்து 'மனதோடு மட்டும்'மின் நிறைய பதிவுகளில் தடத்தை பதிந்து விட்டு சென்றுவிட்டது. :-)

      ஒரே நாள் ல எப்டி இத்தனை பதிவுகளை படித்து கமென்ட் போடமுடிகிறது என ஆச்சர்யமாக இருக்கிறது தோழி. இன்று ஒரு தோழியை சந்தித்தேன் அவர்களும் இதேதான் சொன்னார், நமக்குள் ஒத்த அலைவரிசை என்று, ஆனா ரொம்ப லேட்டா சந்திக்கிறோம் என்று வருத்தப் பட்டேன். இப்போ உங்களை பார்த்ததும் அதேதான் தோன்றுகிறது, ஆனால் நோ வருத்தம் ,இனிதான் அடிக்கடி சந்திக்கப் போறோமே :-)

      அப்படினா இந்த ஆண்டும் எழுத சொல்றிங்களா, உங்களுக்காவது எழுதியே ஆகணும் போல :-)

      கண்டிப்பா அவன் விருப்பம் போல விடுங்க , ஆனா அதிகம் அவன்கிட்ட நேரத்தை செலவு பண்ணுங்க நிறைய பேசுங்க...அது போதும்
      நன்றி + வாழ்த்துக்கள் தோழி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...