வெள்ளி, செப்டம்பர் 14

ஒத்துழைப்பு தாருங்கள், திட்டத்தில் இணையுங்கள் !!

பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இப்படி மாய்ந்து மாய்ந்து அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் ரசாயன உரம், பிளாஸ்டிக் என்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கும் ஒரு முரண்பாட்டு மூட்டை அரசாங்கம்...!!

அரசை திருத்துவது நம் வேலை அல்ல எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் தனி மனிதன் நம் கடமை ? தண்ணீருக்காக போர் போட்டால் சில அடிகளில் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர், பல நூறு அடிகள் போடப்பட்டும் கல்லை கரைத்து துப்பிக்கொண்டிருக்கிறது. திரளும் கருமேகங்களை குளிர்வித்து கீழே கொண்டுவரும் திறனற்ற வறண்ட பூமி !!? கான்கிரீட் பூமியில் கண்ணுக்கு தெரியாத பசுமை !

பசுமைவிடியல் 

அமைதியாக இருந்தால் போதுமா ஏதாவது செய்ய வேண்டாமா என யோசித்ததின் முடிவில் பிறந்ததுதான்  'பசுமை விடியல்'

கடந்த சில மாதகாலமாக சிறு குழந்தை போல தவழ்ந்து நிமிர்ந்து எழுந்து மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைந்த தன்னார்வலர்களின் கரங்களை பிணைத்து கொண்டிருக்கும் தைரியத்தில் பசுமைவிடியல் பெரிய அளவில் செயல் பட திடங்கொண்டு  பல வியத்தகு முடிவுகளை எடுத்திருக்கிறது. முதலில் இரண்டு திட்டம் தொடங்கினோம்.

* 'தினம் ஒரு மரம்' திட்டம்

* 'இலவச மரக்கன்று' திட்டம் 

சில முயற்சிகள் செய்யலாம் 

தன்  வீடு தன் வேலை என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் நின்றுவிடாமல் அதை தாண்டி வெளியே வந்து சில கடமைகளை இயன்றவரை செய்யலாமே. யாருக்கோ செய்யவேண்டாம். நம் குழந்தைகள் பேரன் பேத்திகள் நாளை வாழப்போகும் இடம் இது, இதை சரி செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை. 'வாழ தகுதியில்லாத பூமியை நமக்கு விட்டுச் சென்றுவிட்டார்கள் இரக்கமற்றவர்கள்' என்று நம்மை நம் குழந்தைகள் சபிக்க வேண்டுமா ??

வீட்டுக்குள் ரோஜா செம்பருத்தி குரோட்டன்ஸ் வளர்த்துவிட்டு நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்று திருப்தி பட்டுவிடக் கூடாது. 

*   நாம் வசிக்கும் தெருவின் ஓரத்தில்...

*   வீட்டு வாசலில், காம்பௌன்ட் உள்ளே...

* வீட்டை சுற்றி இடம் இல்லை என்றால் தெரிந்தவர்கள் வீட்டில் இடம் இருந்தால் வாங்கி கொடுத்து வைக்க சொல்லலாம். நீங்களே நட்டு, நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வரலாம்.    

* உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது  மரக்கன்றுகளை பரிசாக கொண்டு செல்லலாம்.

*  பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கொடுக்கலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளிடம்(அவங்க பிறந்தநாளின் போது) கொடுத்து அவங்க பள்ளியில் நட சொல்லலாம். தினம் தண்ணீர் ஊற்றி எப்படி வளர்ந்திருக்கு என்று குழந்தைகளிடம் கேட்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டலாம்.

* விதைகள் சேகரித்து மலைவாசஸ்தலம் எங்காவது சென்றால் அங்கே விதைகளை  தூவிவிட்டு வரலாம். (இதெல்லாம் காக்கா, குருவி, பறவைகள் பண்ற வேலை அவைதான் இப்போ கண்ணுல படலையே)

 ஏதோ ஒரு விதத்தில் நமக்கு இயன்றவரை செய்து வரலாம்.

இப்படியும் சொன்னாங்க 

*  எங்க வீட்ல இடம் இல்ல... எங்க நட.
* தெருவுல போய் நடவா ? வேற வேலை இல்ல...பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

இதெல்லாம் கூட பரவாயில்லை ஒரு காலேஜ் ப்ரோபசர் சொன்னார், "நீங்க நட்டு வச்சுட்டு போய்டுவீங்க, யாருங்க தண்ணீ ஊத்த? அதுக்கும் ஒரு ஆள நீங்களே ரெடி பண்ணி வச்சுட்டா நல்லது !!"

அவர் சொன்னப்போ சுர்ருன்னு கோபம் வந்துடுச்சு. ஆனாலும் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அவர் பாட(பாடத்தை) கவனிப்பாரா செடிக்கு தண்ணி  ஊத்திட்டு இருப்பாரா? இருந்தாலும் நானும் விடாமல் "காலேஜ்க்குனு தோட்டக்காரங்க இருப்பாங்களே" னு கேட்டேன், "இதுவரை செய்றதுக்கு சம்பளம் கொடுப்போம், இது எக்ஸ்ட்ரா  வேலை"

இப்படி சொன்னதும் நான் வேற என்ன செய்ய "சரிங்க நான் ஆள் ரெடி பண்ணிட்டு உங்க கிட்ட பேசுறேன்"னு போன் வச்சுட்டேன்.

ஆக

கன்றை கொடுப்பது  சின்ன வேலை அதை பராமரிப்பதுதான் பெரிய வேலை என்ற ஒன்றை புரிய வச்சாங்க. அதன் பின் தான் மூன்றாவது திட்டம் உதயமானது. ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்கே மரக்கன்றுகளை ஊரை சுற்றி நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க அங்க உள்ள சிலரை பணியில் அமர்த்தி பசுமைவிடியல் மூலமாக சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். முதல் இரண்டு திட்டங்கள் படிப்படியாக செயல்படதொடங்கியதும் மூன்றாவது திட்டம் தொடங்க இருக்கிறோம். 

* * * * * * * * * *

முகநூலில் பார்த்து சிலர் போன் பண்ணிகேட்டது மனதிற்கு நிறைவாக இருந்தது. முக்கியமாக சென்னையில் கொடுப்பிங்களானு கேட்டாங்க. பிற மாவட்டங்களுக்கும் கொடுக்கிறதுக்காக சில ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறோம்...விரைவில் நல்ல செய்தியை  பகிர்கிறேன்

சந்தோசமான செய்தி ஒன்று 

இலவச மரக்கன்று அறிவித்த மூன்றாவது நாளில் Rotaract Club of Kovilpatti Chairman திரு செந்தில் குமார் என்னை தொடர்புகொண்டு பேசினார். "ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு உங்களால் உதவ முடியுமா" என்று கேட்டார். இது போன்ற ஒரு வாய்ப்புக்காகத் தானே காத்திருக்கிறேன் என்பதால் சந்தோசமாக 'ஏற்பாடு செய்கிறேன்' என்றேன்.

உடனே "முதலில் அடுத்த வாரம் பத்தாயிரம் மரக்கன்று வேண்டும்" என்றார். 

ஒரே சமயத்தில் இவ்வளவு கன்றுகள் ரெடி செய்வது முதல் முறை என்பதால் கொஞ்சம் தயங்கினாலும் ,தயார் செய்து விட்டோம். அடுத்தவாரம் கொடுக்க போகிறோம்.

மரக்கன்றுகள் சென்று சேர போகும் இடம்

Junior Red Cross Convener
தென்காசி கல்வி மாவட்டம்
இ.மா. அரசு மேல்நிலை பள்ளி
பண்பொழில்.
* * * * * * * * * * * * * *                             

2 வது திட்டம் குறித்த பதிவு  - ஒரு புதிய முயற்சி -தினம் ஒரு மரம் 

அன்பின் உறவுகளே!!

 * இலவச மரக்கன்றுகள் பெற்று இயன்றவரை உங்களை சுற்றி இருக்கிற இடங்களில் நட முயற்சிசெய்யுங்கள்...
* தினம் ஒரு மரம் திட்டத்தில் அனைவரும் அவசியம் பங்குபெற வேண்டுகிறேன்.
தொடர்புக்கு tree@pasumaividiyal.org

உங்களின் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்  நாடுகிறேன். 
 
மரம் நடுவோம், மண்ணை காப்போம்


பிரியங்களுடன்
கௌசல்யா


 

   

செவ்வாய், செப்டம்பர் 11

கொலைக்களமாகும் கூடங்குளம்...??!


தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை தமிழகத்தில் மிக அருமையாக நடந்துகொண்டிருக்கிறது. போலீஸ்காரர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு அலறி துடிக்கும் மக்கள். பெண்கள் சிறுவர் சிறுமியரை போராட்டத்தில் ஈடுபட வைத்து இருக்கிறார்கள் என்ற அதிகாரவர்க்கத்தின் பேச்சுகள் ஆத்திரத்தை மூட்டுகிறது. ஏன் பெண்கள், சிறு பிள்ளைகள் சிந்திக்க திறனற்றவர்களா? தங்கள் அச்சத்தை தெரியபடுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு ஆட்சி நடக்கிறது. ஓட்டு போட மக்களை நாடி வரும் அரசியல் கட்சிகள்  ஓடி சென்று ஒளிந்து கொண்டன. மக்களுக்கான அரசு என்று மார்தட்டி கொள்ளும் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்திருக்கும் இந்த அடக்குமுறை மக்களின் மீதே என்பதை மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். 

கூடங்குளம் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடிய நிலையில் யாருமில்லை...அதை தாண்டி வெளியில் இருக்கும் நாம் கூட !!?

உதயகுமார் என்ற தனிமனிதன் தன் சுயநலத்துக்காக மக்களை தூண்டிவிடுவதை போல சித்தரிக்கப்பட்டு கூடங்குளம் வெளியே இருக்கும் மக்கள் மூளை சலவை செய்ய வைக்கப் படுகிறார்கள்.

காலங்காலமாக அங்கே வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த மண்ணின் மீது உரிமை இல்லை. அங்கிருக்கும் மக்கள் நல்வாழ்வு முக்கியம் இல்லை, ஆனால் மின்சாரம் தான் வேண்டும் என நிர்பந்திக்கும் அணுஉலை ஆதரவாளர்கள் !!?

போன வருடம்  செப் 11 இல் தீவிரமடைந்த இந்த போராட்டம் ஒரு வருடமாக கட்டுக்கோப்பாக நடந்து வருகிறது. (நேரில் பார்த்து தெரிந்துகொண்ட ஒன்று) பெரிய தலைவர்கள் எவரின் ஒத்துழைப்பும் இன்றி மக்களால் மக்களுக்காக நடந்துகொண்டிருக்கும் இதை தீவிரவாதிகளின் போராட்டம் என சித்தரித்தார்கள். தனது சொந்த நாட்டில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக  போராடினால் அவர்கள் தீவிரவாதிகள் !! அருமை !!

மது  அருந்திவிட்டு போராட்டபந்தலுக்கு வரக் கூடாது , மீறி வருபவர்கள் ஊர் கமிட்டியால் விரட்டபடுவார்கள் என்று ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது, அவ்வாறு  ஒருவரும் வெளியேற்றபடவில்லை என்ற ஒரு உதாரணம் போதும் போராட்டம் எத்தகைய ஒழுங்கின் கீழ் நடந்துவருகிறது என்பதற்கு...!

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும்  அச்சத்தை மத்திய மாநில அரசுகள் போக்கவேண்டும் என்பது தான் அவர்களின் அடிப்படை கோரிக்கை.
"எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும் இதை ஒரு வருடகாலமாக அமைதியான முறையில் கேட்டுகொண்டிருக்கிறோம். மிக தெளிவாக சொல்கிறோம் எங்களின் அச்சத்தை போக்கவேண்டும் !!" 

ஆனால் மக்களின் வாழும் உரிமைகள் மறுக்கப்படும் போது சாவின் விளிம்பை தொட்டு பார்க்கவும் துணிந்து விடுவார்கள் என்பது கண் முன் காட்சிகளாக விரியும் போது நெஞ்சம் பதறுகிறது.

மகாத்மாவின் உண்ணாவிரதம் இன்றுவரை பெரிது படுத்தபடுகிறது ஆனால் இந்த மக்களின் உண்ணாவிரதம் கேலிகூத்தாக பார்க்கப்படுவது வேதனை.


கலைந்து போக கொடுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம், அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மொத்தமாக எழுந்து நிற்க கூட இந்த நேரம் போதாது. பின் எப்படி அந்த இடம் விட்டு செல்ல...?! உடனே பிரயோகிக்கப்பட்டது தடியடி, கண்ணீர்புகை...!! எத்தனையோ காரணங்கள், பேச்சுக்கள், சப்பைக்கட்டுகள், சமாளிப்புகள் சக மனிதனை கொலை வெறியோடு அணுகும் நிலை கண்கொண்டு காண இயலவில்லை!!

தமிழ் நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை, அதனால் தான் மின்தடை...கூடங்குளம் வேலை தொடங்கிவிட்டால் தமிழகமே ஒளிர்ந்துவிடும் என மக்கள் மூளை சலவை செய்யபடுகிறார்கள் கை தேர்ந்த அரசியல்வாதிகளால் !!  தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு தரை வார்க்கபடுகிறதே அதை கேள்வி கேட்ட முடியுமா நம்மால்...கேட்டால் இது எப்பவோ போட்ட ஒப்பந்தம் என்பார்கள். ஒப்பந்தத்தை மீறி நமக்கு தரவேண்டிய தண்ணியை ஒரு சொட்டு கூட தரமுடியாது என திமிராக சொல்வார்கள் நாம மட்டும் சரிங்க என்று கேட்டுக்கணும்.

40 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம் அதுவும் சலுகை விலையில் !! ஆனால் மக்கள் இருளில் கிடக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்துக்கு கொடுக்க மாட்டார்கள். 

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் அதிக அளவு மின்சாரம் வீணாகிறது. அரசியல் வாதிகள், அதிகாரிகள்  இதில் கவனம் செலுத்தலாம். எந்த விதங்களில் எல்லாம் மின் இழப்பு ஏற்படுகிறது என கவனித்து சரி படுத்தினாலே தமிழகம் ஒளிர்ந்துவிடும்.



நாட்டின் வளர்ச்சி கருதி ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கூறும்  அணுஉலை ஆதரவாளர்களின் வீரம், தன் வீடு பாதுகாப்பாக இருக்கிறது என்ற ஒன்றினால் மட்டும் தான். அணு உலை ஆதரவாளர்கள் புத்திசாலிகள் என்றும் அணுஉலையை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்பதை போல எண்ணுவது பேதைமை.

அணுஉலை கழிவுகள் அகற்றுவதை பற்றி இன்றுவரை சரியான விளக்கம் இல்லை. அணு விஞ்ஞானிகள் பாதிப்பில்லை என்று கூறுகிறார்கள் என்பது அங்கே வேலை செய்பவர்கள் தங்கள் வேலை குறைவு உள்ளது என்று எப்படி கூறுவார்கள் இவர்கள் சொன்னார்களாம் அதை நம்பி ஆகணும் என்று மக்களை வலுக்கட்டாயமாக சம்மதிக்க சொல்வது வேடிக்கை.

வன்முறையற்ற வழியில் போராடும் கூடங்குளம் மக்களை போராட்டகாரர்கள் என்று சித்தரித்து வரலாறு காணாத வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களுக்கான பிரச்சனை என்று மட்டும் எண்ணி வாய்மூடி மௌனியாக இருக்கும் மக்களே! எங்கோ ஈழத்தில் கொத்துகொத்தாய் மடிந்த போது அமைதியாக இருந்ததை போல இப்போதும் இருக்குறீர்களே...கண்ணீர் புகையினால் பாதிக்கபடும் சிறுகுழந்தைகள் பற்றி யாரும் யோசிக்கமாட்டார்களா? அடிதடி, கதறல், வேதனை, வலி இதில் பாதிக்கப்படும்  அவர்களின் மனநிலை, அவர்களின் எதிர்காலம் !!!!???
 
வீடு புகுந்து ஆண்களை கைது செய்து இழுத்து போகிறது காவல்துறை. வாழும்  உரிமை கேட்டு போராடியதற்கு சிறை. மற்றொரு சுதந்திர போர் இப்போது நமக்கு எதிரி வெள்ளைக்காரன் அல்ல, அவனுக்கு பரிந்துகொண்டே சொந்த மக்களை கொல்ல துணிந்துவிட்டது மத்திய மாநில அரசுகள். 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டுமே தவிர பாதகமாக அல்ல...   

எங்கென்றாலும் அழிவதும், அடிவாங்குவதும் தமிழ் இனமாகவே இருக்கிறது !

மனித உரிமை கமிஷன்னு ஒன்னு உண்டு, இப்ப எங்கேன்னு வேற தெரியல...!!?

நமக்கென்ன, நேற்று ஒரு சிவகாசி இன்று ஒரு கூடங்குளம் எப்படியோ நமக்கு பொழுது போனால் சரி !! வெறும் சராசரிகளாக இன்னும் எத்தனை காலம் தான் தமிழன் என்றொரு இனம் இருக்குமோ தெரியவில்லை. புரட்சி, போராட்டம் என்று முழக்கமிட்டவர்கள் எல்லாம் செத்து அழிந்துவிட்டார்கள் போலும்...

கூடங்குளம் மக்கள் 
உடலில் உயிர் இருக்கும் வரை கத்தி ஓயட்டும்
அந்த பிணங்களின் மீதிருந்து வரும் மின்சாரம் 
பெற்று பலகாலம் சுகித்து சுகமாய் வாழுவோம் 
வாழ்த்தட்டும் அம்மக்களின் ஆத்மா !!

சொந்த  நாட்டில் அகதிகளாகிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை கூறி என் இயலாமையை இங்கே வரிகளாக்குவதுடன் சகமனுசி என் வேலை முடிந்துவிட்டது என்ற நிறைவுடன்(?) முடிக்கிறேன்.

கூடங்குளத்தில் இருந்து கூடல்பாலா  'ஒவ்வொரு வீடாக புகுந்து ஆண்களை இழுத்து கொண்டு செல்கிறார்கள் நான் பாத்ரூமில் மறைந்து கொண்டு உங்களுக்கு போன் செய்கிறேன்...தெருவில் பெண்கள்  கத்தி கதறி முறையிட்டு(யாரிடம்?!) அழுது கொண்டிருக்கிறார்கள் ' என்றார்.

அவர் பேசியபோது அவரது குரலில் தெரிந்த நடுக்கம், பின்னால் ஒலித்த துப்பாக்கிச்சத்தம் நெஞ்சை பிசைய செய்வதறியாது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

என்னே என் கையாலாகாத்தனம்...!? வெட்கப்படுகிறேன் !!



திங்கள், செப்டம்பர் 10

ஒரு புதிய முயற்சி - 'தினம் ஒரு மரம்'

அருமை இணைய உறவுகளே,

வணக்கம். 

சில நிமிடங்கள் உங்கள் பார்வையை இங்கே பதியுங்கள்...படித்து கடந்து செல்லும் முன் ஒரு உறுதியுடன் செல்வீர்கள் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென்று ஒரு புதுமையான திட்டம் 'தினம் ஒரு மரம்' யார் தொடங்கினாங்க? எப்படி? எதுக்கு? என்னவென்று கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் EAST TRUST ஆல்  தொடங்கப்பட்ட 'பசுமைவிடியல் அமைப்பு' கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென்று பல செயல்களை செய்துவருகின்றது. அதன் அடுத்தகட்ட ஒரு முயற்சிதான் 'தினம் ஒரு மரம்' என்ற திட்டம். நாம் வாழும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற தேடல், ஆர்வம் இருப்பவர்கள் பங்கு பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் .  

 

தினம் ஒரு மரம்!
பசுமை விடியல் குழுவின் புதிய பசுமைத் திட்டம்!

இத் திட்டத்தின் நோக்கம் என்ன?
பசுமை விடியல் சார்பில் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினம் ஒரு மரம் நடப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் யார் யார் எல்லாம் பங்கு கொள்ளலாம்?
உலகில் பசுமை நிலைத்திருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும் பங்கு கொள்ளலாம்

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?
ஒரு சங்கிலித் தொடர்போல, மரம் நடும் நண்பர்கள், தினம் தினம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் ஆர்வலரை பசுமைவிடியலே பரிந்துரை செய்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறது. முதல் நபர் மரத்தை நடும் முன்பே, அடுத்த நபரை பரிந்துரைக்க வேண்டும். அவர் நண்பராகவோ, உறவினராகவோ, பசுமை விடியல் அங்கத்தினராகவோ இருக்கலாம். அவர் அவருக்கடுத்த நபரை பரிந்துரைப்பார். இப்படியே தினம் ஒரு மரம் பசுமை விடியல் சார்பில் உலகில் எங்காவது ஒரு மூலையில் நடப்படும். வருடத்திற்கு 365 மரங்கள். சங்கிலித் தொடர்போல இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சங்கிலித் தொடருக்குள் இணைவது எப்படி?
மிக எளிது. தினம் ஒரு மரம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் பெயர் தினம் ஒரு மரம் ஆர்வலர்களின் பட்டியலில் இணைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை மற்றவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஒரு மரம் நட வேண்டும்.

மரம் நடப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது?
 மரம் நடும் காட்சியை ஒரு புகைப்படமாக tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப் புகைப்படம் தேதிவாரியாக ஒரே ஆல்பத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைக்கப்படும். இந்த ஆல்பம் மற்றவர்களை  நிச்சயம் ஊக்கப்படுத்தும்

                                                                               * * * * *                                                                      

விழிப்புணர்வு ஏற்படுத்துவதே...

உலகம் தற்போது இருக்கும் நிலையில் ஒருநாளைக்கு ஒரு மரம் நட்டால் போதுமா? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படக்கூடும். இத்திட்டம் ஒரு மரம் வைக்கணும் என்பதாக இருந்தாலும், உலகின் பல இடங்களில் இருந்தும் பலர் இணைந்து தினமும் தொடர்ச்சியாக செய்து வரும் போது பிறருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். 

இத்திட்டத்தின் நோக்கம் பலரை தட்டி எழுப்புவது தான். அவர் செய்துவிட்டார் நாமும் செய்வோம் என்ற மறைமுக ஊக்கப்படுத்துதல். மரம் நடுவது அனைவரின்  இன்றியமையாத கடமை என்றில்லாமல், அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பலன் என்ற கேள்வியை இன்னமும் கேட்கும் பலர் இங்கே உண்டு...! அப்படிபட்டவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பதே போதுமானது. பின் அவர்களாக தொடர்ந்து செய்ய தொடங்கிவிடுவார்கள்.

எந்த ஒன்றும் எல்லோரின் ஒத்துழைப்பு இன்றி செயல்வடிவம் பெற இயலாது என்பதை தெரிந்தே இருக்கிறோம்.  அதனால் உங்களின் மேலான ஆதரவையும், பங்கெடுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறிதும் தயக்கம் இன்றி முழுமனதாக ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இனிமேல் இது  'எங்க திட்டம்' இல்லை 'நம்ம திட்டம்'. 

இணைந்து செயலாற்றுவோம். 
                                    வாழ்த்தட்டும் இயற்கை !! வணங்கட்டும் தலைமுறை !!

தினம் ஒரு மரம்!
இந்த பூமி உள்ள வரை...
 
ஆம் சங்கிலித் தொடராக தினம் ஒரு மரம்.

இன்று நீங்கள், நாளை நண்பர், அடுத்த நாள் மற்றொருவர்!

ஆளுக்கொரு மரம்!
                                       மரம் நடுவோம்! 
                                                                           மண் காப்போம்!!

                                                                                      * * * * *

பிரியங்களுடன்

கௌசல்யா 
பசுமைவிடியல்.


வெள்ளி, செப்டம்பர் 7

நெருப்புக்கு இன்னும் பசி அடங்கவில்லை...!? உடல் தாருங்கள்...!!!



சிவகாசி என்றதும் பட்டாசு நினைவுக்கு வரும், கூடவே வெடித்து சிதறிய கருகிய உடல்களும்...  வருடாவருடம் இத்தகைய விபத்துகள் நடந்துகொண்டு இருக்கின்றன...தீபாவளியும் மகிழ்ச்சியுடன்(?) கொண்டாடப்படுகிறது. எதுவும் யாருக்காகவும் மாறப்போவதில்லை.  இதோ இப்ப நடந்த இந்த கோர விபத்து பத்தி 'பாவம் அப்பாவிகள்' என்று அனுதாபம் தெரிவித்து  இரண்டு நாள் பேசுவோம்  பிறகு புதிதாய் வேறு ஒரு பரபரப்பு செய்தி...!!
 
ஆனால் சில மணித்  துளிகளில் பொட்டல் காடாக மாறிய அந்த பிரதேசம், காற்றில் கலந்திருக்கும் நெடியுடன் கூடிய அந்த கந்தக வாசம்,  தீயில் வெந்த, கருகிய உடல்களின் வாடை அந்த பூமியை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது.

வெடி விபத்தை நேரில் பார்த்ததில்லை ஆனால் தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரும் விபத்துகளின் பாதிப்பை நேரில் கண்டு அதிர்ந்திருக்கிறேன். தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தே கோரமாக இருக்கும் என்றால் அதை விட பல மடங்கு வீரியம் உள்ள வெடிவிபத்து எத்தகைய மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எண்ணி உடல் நடுங்குகிறது. 

நினைக்காமல் இருக்க முடியவில்லை 

தீப்பெட்டி தயாரிக்க முக்கிய மூல பொருளான  குளோரேட் வைக்க தனி அறையும், சல்பர் பிற மருந்து பொருட்கள் வைக்க தனி அறையும் எல்லா தொழிற்சாலைகளிலும் இருக்கும். இதில் குளோரேட் மிக ஆபத்தானது...சிந்தி கிடப்பதின் மேல் கால் லேசா உரசினால் கூட பற்றிக்கொள்ளும். ஒரு பாக்டரியில் குளோரேட் எடுக்க அந்த அறைக்கு சென்ற ஒரு தொழிலாளி கை தவறுதலாக தராசு எடை கல்லை கீழே போட சிந்தி கிடந்த குளோரேட் சட்டென தீப்பிடித்து வெடித்து எரிய தொடங்கியது. தனியாளாக உள்ளே மாட்டிகொண்ட தொழிலாளியை  சிரமப்பட்டு (சிறிது நேரம் கழித்து) மீட்டு எடுத்தார்கள். இரண்டுநாள் கழித்து மருத்துவமனையில் உயிர் பிரிந்துவிட்டது.

அந்த இளைஞன் சிறுவயதில் இருந்து எங்கள் பாக்டரியில் வேலை பார்த்தவன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தான் அங்கே இடம் மாறினான். காதுகேளாத வாய் பேச முடியாத, அவனால் தீப்பிடித்த போது உதவிக்கு ஆட்களை கூப்பிட கூட இயலாமல் போய்விட்டது. அப்போது அவன் மனது எப்படி துடித்திருக்கும் !! தீப்பிடித்தால் கத்த கூட வாய்ப்பில்லாத ஒருவனுக்கு வேறு வேலை கொடுக்காமல் இந்த வேலைக்கு அமர்த்தியது யார் தவறு...! இறந்த பின் ஒரு லட்சம் கொடுத்தது அந்த நிர்வாகம். பணத்தை வழங்கி இறப்பினை, இழப்பினை மறக்கச் சொல்கிறது (முதலாளிகள்) சமூகம்!!

கண் முன் நிகழ்ந்த விபத்து 

ஒருமுறை எங்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை  நடந்து கொண்டிருந்த மதிய நேரத்தில், மருந்து கட்டைகள் அடுக்கி வைத்திருந்த பெரிய அறையில் தீப் பிடித்துவிட்டது. பெண் தொழிலாளி ஒருவர் கட்டையை (மருந்து குச்சிகள் அடுக்கி வைக்கப்பட்ட மரபிரேம்) மர ஸெல்ப்பில் இருந்து எடுக்கும்போது உரசி தீ பிடித்து விட்டது. அந்த பெண் அப்படியே கீழே போட்டுவிட்டு வெளியே (உடனே வெளியேறி விடவேண்டும் என்று ட்ரைன் பண்ணுவோம்) ஓடிவந்து விட்டாள். தீ மளமளவென பிற  ஸெல்ப்களுக்கும் பரவி விட்டது. சில நிமிடங்கள் கழித்து நான் சென்று பார்த்தபோது எட்டடி உயரத்துக்கு தீ எரிகிறது. நாலு பேர் வெளியே இருந்து Fire Extinguisher மூலமா அணைக்க முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது...

அருகில் போக முடியாத படி வெப்பம், புகை, மெதுவாக உள்ளே எட்டி பார்த்தேன் தீக்குள்  இரு கரிய உருவங்கள், "அங்க என்ன பண்றீங்க, வெளில வாங்க" பதறி நான் கத்த, மூச்சிரைக்க ஓடி வந்த அவங்க, "ஒண்ணுமில்லமா, தீ பிடிக்காத நல்ல கட்டைகளை தனியா எடுத்து வெளில வீசுறோம், இல்லைனா அதும் எரிஞ்சிடும்"  னு சொல்ல எனக்கு பேச வாய் வரல. அவங்க கண்ணில் சுத்தமா உயிர் மீதான பயம் இல்லை...மாறாக கண் முன்னே சேதமாகும் பொருளை காப்பாற்ற முடியலையே என்ற வருத்தம்  மட்டுமே தெரிந்தது.   

சுற்றிலும் சூழ்ந்த (மருந்து)புகையால்  தொண்டை அடைக்க எனக்கு இருமல் வந்துவிட்டது (ஆழமாக சுவாசித்துவிட்டால் மயக்க நிலைக்கு ஆளாக நேரும், கண் எரிச்சல், பாதிப்பு ஏற்படும்) 'நீங்க போங்கமா இங்க நிக்காதிங்க' என்று என்னை அங்கிருந்து போக வைப்பதில் கவனமாக இருந்த அவர்களின் அக்கறைக்கு முன்னால் யார் அங்கே முதலாளி !? முதலாளி என்ற எண்ணம் எனக்குள் சுத்தமாக அழிந்தே விட்டது !

இப்படி பட்ட தொழிலாளியை தான் நாம் சுலபமாக சொல்கிறோம் அப்பாவி மக்கள்னு...இத்தகைய மாமனிதர்களின் உழைப்பில், உயிர் தியாகத்தில் தான் பல முதலாளிகள் கொழுத்து திரிகிறார்கள்.

பணத்தை போடுவதுடன் முதலாளிகளின் வேலை முடிந்து விடுகிறது , ஆனால் தொழிலாளிகள் செய்யும் தொழிலை தாய்க்கும் மேலாக வழிபடுகிறார்கள். விபத்து நேரிட்டால் முதலாளிகளுக்கு நஷ்டம் பணம் மட்டும், ஆனால் தொழிலாளி தன் வாழ்க்கையை தொலைக்கிறானே...!? இந்த காலத்திலும் முதலாளி விசுவாசம் என்பது இன்னும் நீர்த்துபோகவில்லை.

சிவகாசி விபத்தில் ஒரேநாளில் எத்தனை குழந்தைகள்  அநாதையோ, எத்தனை பெண்கள் தாலியை , எத்தனை கணவன்வர்கள் மனைவியை, எத்தனை தாய்மார்கள் தங்கள் வாரிசுகளை இழந்தார்களோ !! வேதனை சூழ்ந்து விட்ட அவர்களின் வாழ்வை மீட்டு தர யாரால் முடியும்...?!

நிவாரண பிச்சை போட அதிகார கூட்டம்
அஞ்சலி செலுத்த ஒரு கூட்டம்
ஆறுதல் சொல்ல ஒரு கூட்டம்
வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்
அத்தனைக்கும்  நடுவில்
கையில் கேமராகளுடன் ஒரு கூட்டம்
எல்லாம் சில மணி நேரங்களில் காணாமல் போய்விடும்
அப்பாவிகள் இனி அனாதைகள் !!

'சிவகாசியில் சரியான மருத்துவமனைகள் இல்லை' இப்படி சொல்றது ரோட்ல போற யாரோ இல்ல விருதுநகர் எம்.எல்.ஏ !! அதுவும் எதிர்கட்சி என்பதால் அவர்களுக்கு ஆளும் கட்சியை குறை சொல்ல கிடைத்த ஒரு வாய்ப்பு. பதவியில் அமரவைத்த மக்களின் அடிப்படை வசதி எது குறை, என்ன என்ன இல்லை என்று இத்தனை மாதமாக ஏன் இவர் பார்க்கவில்லை...! 'சொன்னோம், மேலிடம் கவனிக்கவில்லை' என்பார்கள்...! ஓம்சக்தி  முதலாளி ஆளுங்கட்சி கவுன்சிலர் !! பேஷ் இப்படிதான் இருக்கணும்...!! 

அரசியல்வாதிகள் , அதிகாரிகள் மத்தியில் மக்கள் விளையாட்டு பொம்மைகள்...சுற்றிலும் ஆபத்தான தொழில்சாலைகள் இருக்கும் ஊரில் தீவிபத்து தனி பிரிவு உள்ளடக்கிய,அனைத்து வசதிகள் கொண்ட  சிறப்பு மருத்துவமனை இல்லை. சுத்தம்,சுகாதாரம்,பாதுகாப்பு எல்லாம் வசதியானவர்களுக்கு மட்டுமானப் பேச்சுக்கள்.  

முதலாளிகள் என்னும் மனிதநேயமற்றவர்கள் 

உரிய விதிமுறையின்(40 விதிமுறை மீறல்) கீழ் நடத்தப்படவில்லை என்று லைசென்ஸ் ரத்து செய்ய தெரிந்தவர்களுக்கு ஆலையை இழுத்து மூடி சீல் வைக்க மறந்து போய்விட்டது. மறக்கவைத்தது பணம் தரும் போதை. 

முதலாளிகள் அறைக்குள் பேசப்படும் பேரங்கள் பாவம் இந்த தொழிலாளிகளுக்கு எங்கே தெரியபோகிறது. நம்ம முதலாளி எல்லாம் சரியா முறைப்படி  செய்து வைத்திருப்பார், நமக்கு ஒண்ணுனா  அவர் தானே பார்க்க போறார்...என்ற நம்பிக்கை. (இப்போது அவரையே அவர் பார்த்துக்க முடியாதபடி,எங்க  எப்படி இருக்கிறாரோ ??!)

மழை  இல்லை, விவசாய வேலை இல்லை , தீபாவளி சமயம் வேலை அதிகம் ஓவர்டைம் சம்பளம் தரேன் என்ற முதலாளிகளின் பசப்பு வார்த்தைகள் இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது கருகி போவதற்கு...!

ஏழை மக்களின் வாழ்வில் மட்டும் ஏன் மேலும் மேலும் இத்தனை கோரங்கள்...உயிர் இழந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். தீக்காயத்துடன் மருத்துவமனையில் இருப்பவர்களின் உடலில் உயிர் ஓடும் ஒவ்வொரு நொடியிலும் மரண வேதனை ! நரகத்தை தவணை முறையில் தரிசிப்பார்களே.....! தீ நாக்குகள் தீண்டிய தேகத்தை தாயும் தீண்ட அஞ்சுவாள்...வெயிலில் வெறுங்கால் வைக்க அஞ்சுபவர்களுக்கு எங்கே புரியும்  பத்து மாதம் தான்   இவர்களுக்கும் என்பது !!

அரசையும் அதிகாரிகளையும் குறை சொல்லி ஆகபோவது ஒன்றுமில்லை. மனிதநேயம் மறந்த முதலாளிகளே  முழு பொறுப்பு. பணத்தை மட்டுமே பார்க்கும் முதலாளிகள் திருந்தாதவரை இது போன்ற விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கும். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தொழிலாளிகளின் நலன் முக்கியம் அதற்கு பின்தான் லாப கணக்கு என என்று ஒவ்வொரு முதலாளிலும் நினைக்கிறானோ அன்று தான் தொழிலாளர்களின் வாழ்வு விடியும். அதை தவிர எந்த சட்டங்களும் மக்களை பாதுகாக்க முடியாது. போடப்பட்ட சட்டங்களை எப்படி வளைப்பது என்று முதலாளிகளுக்கு  நல்லாவே தெரியும். 

இதுவரை நடந்த பட்டாசு ஆலை விபத்துகள் விபரம்:


1998ம் ஆண்டு சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 150 பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.
2002ம் ஆண்டு கோவில்பட்டியில் 16 பேர் பலி
2005ம் ஆண்டு மீனாம்பட்டியில் 20 பேர் பலி
2006ம் ஆண்டு பர்மா காலனியில் 12 பேர் பலி
2007ம் ஆண்டு நாராயணபுரத்தில் 4 பேர் பலி
2009ம் ஆண்டு மதுரை வடக்கம்பட்டியில் 19 பேர்,
நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர்,
சிவகாசியில் 3 பேர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேர் பலி
2010ம் ஆண்டு சிவகாசியில் 8 பேர் பலி
2011ம் ஆண்டு விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடியில் 14 பேர் பலி
                                                                                                       (தகவல் -இணையம்)

இப்படி வருடந்தோறும் மனிதர்கள் கருகிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் தீபாவளி கொண்டாடி கொண்டுதான் இருக்கிறோம். 

யார் அப்பாவி?

ஏழை மக்கள் பாதிக்கபடுகிறார்கள் என்றதும் வெகு சுலபமாக 'பாவம் அப்பாவி மக்கள்' என்று சொல்வது படு அபத்தம். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இப்படியே சொல்லியே  அவர்களை ஓரங்கட்டுவது. ஓட்டு போட, கொத்தடிமையாய் உழைக்க மட்டும் இவர்கள் வேண்டும்.இவர்களின் உழைப்பில், ஓட்டு பிச்சையில் வாழ்ந்து கொண்டு சொல்கிறோம் அப்பாவிகள் என்று. அனுதாபம் என்ற பெயரில் அவர்களை தயவுசெய்து இனியும் இப்படி சொல்லாதீர்கள். அவர்கள் நமக்கெல்லாம் மேலே, நம்மைவிட மிக பெரியவர்கள் அப்படி எண்ணி அவர்களை நடத்துவோம்...இயற்கை நம்மை வாழ்த்தட்டும்...!!

எதற்கு எதை முடிச்சு போடுவது   என சிலர் நினைக்கலாம், அதிகார வர்க்கத்தினருக்கு பல்லக்கு தூக்கி மனிதர்களின் எதிர்ப்பை சம்பாதித்து அவர்களின் அச்சத்தை அலட்சியம் செய்து பின் யாருக்காக மின்சாரம் ?! என்றாவது ஒருநாள் கூடங்குளத்தில் ஒரு குரல் கேட்கக்கூடும் "அப்பாவிகளே உடல் தாருங்கள், நெருப்புக்கு பசி இன்னும் அடங்கவில்லை !!?"

மனிதத்தை தொலைத்துவிட்டு எங்கே சென்று எதை சாதிக்கபோகிறோம்...! எதிர்பார்ப்புகள் இன்றி ஏற்றத்தாழ்வுகள் பாராமல் சக மனிதர்களை நேசிக்கும் உள்ளம் அனைவருக்கும் வேண்டும் எங்கள் இறையே...!

இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற வெற்று வார்த்தைகள் இனியும் எதற்கு...!? சக மனிதனை உள்ளன்போடு உண்மையாக நேசியுங்கள், அது போதும் !!


                                                                                    * * * * *

படங்கள்  - நன்றி கூகுள் 

செவ்வாய், செப்டம்பர் 4

பதிவுலகத்தில் முகமூடி மனிதர்கள்...! உறவுகளை கொச்சைப்படுத்தாதிங்க...!


இரண்டு வருடங்களுக்கு மேலாக பதிவுலகம் மூலம் பெற்றவை நிறைய அனுபவங்கள், படிப்பினைகள், நட்புகள், சகோதர உறவுகள் பெயரில்  மனிதர்கள் ! ஆம் மனிதர்கள்...பல்வேறு விதமான முகங்கள் கொண்ட மனிதர்கள்...இணையத்துக்கு வெளியே இருக்கும் அதே மனிதர்கள் தானே இங்கேயும், இவர்களை படித்தவர்கள், பண்பட்டவர்கள் என்று எண்ணினால் அது நம்பியவர்களின் தவறு என்கிறது பதிவுலகம். அதிலும் சகோதர உறவு பாராட்டி பழகியவர்களின் நிஜ(?)முகம் பற்றி தெரியவரும் போது பெண்கள் அடையும் மனவேதனை மிக அதிகம்.

சகோதரி என்று அழைத்தால் மனதிலும் அவ்வாறுதான் எண்ணுவார்கள் என்பதற்கு மாறாக அதே பெண்ணை பற்றி தன் நண்பர்கள் மத்தியில் குறிப்பிட்டு கிண்டல் செய்து மகிழ்கிறார்கள் என்று தெரியவரும் போது 'உறவுகளின் உன்னதம்' தெரியாத உன்மத்தர்கள் என்று சொல்வது தான் சரி. இதை பற்றிய ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பதிவுலகத்தில் ஒருவரைவிட ஒருவர் பெரியவர் என்று காட்டிகொள்வதில் நடக்கும் ஈகோ யுத்தத்தில் சகோதர உறவுகளும் தப்புவதில்லை.  

அண்ணன் என்ன? தம்பி என்ன? 

பொதுவாக  நம்ம ஊர் வளர்ப்பு எப்படி என்றால் அண்ணனோட நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அம்மா சொல்வாங்க 'அண்ணன்னு கூப்பிடு' நாமளும் அதையே பாலோ பண்ணுவோம் (ஒன்னு இரண்டு, அண்ணன் பிரண்டை லவ் பண்ணி செட்டில் ஆகிடுவாங்க...அது வேற விஷயம்!) :)

அண்ணன் தம்பியருடன் பிறந்த பெண்கள் பிற ஆண்களுடன் சகஜமாக பேசுவார்கள், தயங்க மாட்டார்கள்.  தன்னைவிட  மூத்தவர்களை அண்ணன் என்றும் இளையவர்களை பெயர் சொல்லியும் தம்பி என்றும் அழைப்பார்கள். கூட பிறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருந்தால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளி ஆண்களுடன் பழக மாட்டார்கள் என நினைக்கிறேன்.

பதிவுலகம் பொருத்தவரை புதிதாக பேசக்கூடிய ஆண்களிடம் ஒரு பாதுகாப்புக்காக அண்ணன், சகோனு சொல்லிக்கிறோமா அல்லது எதுக்கு வம்பு இப்படியே கூப்டுவோம் என்றோ இருக்கலாம்...அவரவர் விருப்பம்.

என் சகோதரர்கள் 

'செல்வா ஸ்பீகிங்' செல்வா அண்ணனை முதல் அறிமுகத்தின் போது சார்னு கூப்ட்டு பேசிட்டு, கிளம்புற சமயம் 'சார்னு சொன்னா நல்லா இல்ல, உங்களை அண்ணன்னு சொல்லட்டுமா' என கேட்டேன்... அவரும் 'தன்னியனானேன் தங்க்ஸ்' என்று கூறிவிட்டார். அப்புறம் என்ன, ஒரு வருஷமா இரண்டு பேரும் பேசாம இருந்த நாட்கள் ரொம்ப குறைவு என்ற அளவுக்கு ஆகிபோச்சு. என்னை  உற்சாகபடுத்தி எனது சமூக சேவைகள் தொடர உறுதுணையாக இருக்கும் அருமையான அண்ணன் இவர்...! 

இன்னொருத்தர்  'உணவு உலகம்' சங்கரலிங்கம் அண்ணா  'என்கூட பிறந்தவங்க எல்லோரும் ஆண்கள் , அக்கா தங்கை கூட பிறக்கலைன்னு வருத்தம் நிறைய உண்டு அந்த குறை இனி இல்லை'னு சொல்லி உரிமையாக தங்கையாக்கி கொண்டவர். டிரஸ்ட் தொடங்க தைரியம் கொடுத்த அன்பான நல்ல மனிதர் !

அப்புறம் ஒருத்தரிடம் முதல் முறையா சாட்டில் பேச, உடனே அவர் உங்க போன் நம்பர் கொடுங்க, டைப் பண்ண பொறுமை இல்லன்னு சொல்ல, "அடடா என்ன இது, ஆரம்பமே இப்படி, மத்தவங்க சொல்ற மாதிரி ஆள் ஒரு மாதிரி தானோ" என யோசிச்சு 'சரி பார்த்துக்கலாம்'னு நம்பர் கொடுத்து பரஸ்பரம் அறிமுகம், பதிவுலகம் என்று பேச்சு போனது. அப்புறம் எப்போவாவது பேசி கொண்டதுண்டு. "என்கிட்டே பேசுறதா வெளில சொல்லாதிங்க, உங்களையும் ஒரு லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க" என்று சிரித்துக்கொண்டே ஒருநாள் சொன்னார். பதிவுலகத்துல ரொம்ப நல்ல பேர் தான் எடுத்திருக்கிறார் போலன்னு உள்ளுக்குள் ஒரு உதறல். பேர் சொல்லி பேசிக்கொள்வோமே தவிர நண்பர் என்றோ, சகோதரன் என்றோ சொல்லிகொண்டது இல்லை. ஒருநாள் போன் செய்து சொன்னார், "கௌசல்யா உங்களுக்கு மருமகள் பிறந்திருக்கிறாள்" 

உறவுகளை எப்படி கையாளணும் என்கிற பண்பு தெரிந்தவர். முக்கியமாக முகமூடி போட்டுக்கொள்ளாதவர். தன்னை குறித்து யாரும் எதுவும் சொல்லிக்கொண்டு போகட்டும், கவலை இல்லை. நான் நானாகத்தான் இருப்பேன் என்பவர். சகோதரன் என்ற முகமூடி அணிந்து உள்ளுக்குள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக தெரிந்தார்.

பதிவுலகின் மூலம் நிறைய தம்பிகள் இருக்கிறார்கள்...பசுமைவிடியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் அவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதில் எனக்கு மகிழ்வுடன் ஒரு நிறைவு இருக்கு. பதிவுலகம் எனக்கு இதுபோன்ற நல்ல சகோதர உறவுகளை கொடுத்திருப்பதில் பெருமைபடுகிறேன்.

உறவுகளின் உன்னதம்

பொண்ணுங்க தங்களை டீஸ் பண்ற ஆண்களை திட்டும்போது 'அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா'னு கேட்பாங்க. அப்படி பிறந்திருந்தா சகோதர உறவின் அருமை தெரிந்திருக்கும், இப்படி இன்னொரு பெண்ணை டீஸ் பண்ண மாட்ட, அவளையும் உன் சகோதரியாக தான் நினைக்க தோணும் அப்டின்னு அர்த்தம் . (பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தை என்பதால்  இனி இப்படி திட்ட முடியாது போல...!?)

ஒரு  பெண் ஆணுடன் சகஜமாக பேசுகிறாள் என்பதால் அவளை பற்றி அடுத்தவரிடம் எப்படியும் பேசலாம் என்கிற உரிமையை யார் கொடுத்தார்கள்...?!

பேச்சுக்கு பேச்சு சகோ, அக்கா என்று அழைத்து பழகியவர்கள் தன் நண்பர்களிடம் பேசும் போது அந்த  பெண்ணை குறித்து விமர்சிப்பது எத்தகைய துரோக செயல் ! வெறும் உதட்டளவில் மட்டும் தானா உறவுகள் ??!  இவர்களை பற்றிய உண்மை தெரியும் போது அந்த பெண்ணின் மனநிலை ??! இப்படி பட்டவர்கள்  பெண்களை கேலி செய்யட்டும் தவறில்லை, அதற்காக சகோதர உறவு கொண்டாடாமல் சாதாரணமாக யாரோ எவரோ என்று பேசிவிட்டு போகலாம். 

இங்கே ஒரு நடிப்பு அங்கே ஒரு நடிப்பு என்று ஆளுக்கொரு வேடம் தரிக்கும் இவர்களை போன்றவர்கள் பிறரை மட்டுமல்ல தங்களையும் ஏமாற்றி கொள்கிறார்கள்...!!

சகோதரன்

சகோதர  அன்பு சாதாரணமானது அல்ல...அண்ணனை அப்பா ஸ்தானத்திலும் தம்பியை மகனாகவும் பாவிக்கிறவள் பெண். உடன் பிறந்தவர், அடுத்தவர் என்ற பேதம் சகோதர அன்பிற்கு கிடையாது. அண்ணன் என்றால் அண்ணன் தான் அதை தவிர்த்து வேறு எதையும் யோசிக்க மாட்டாள் ஒரு நல்ல பெண்...ஒரு குழந்தையாய் விசயங்களை பகிர்வதாகட்டும், சிக்கல்களை சொல்வதற்காகட்டும் முதலில் சகோதரனை தான் தேடுவாள்.

நட்புகளிடம் சொந்த விசயங்களை பகிர மிக யோசிப்பவள், தன்னை சகோதரி என்று அழைக்கும் ஆணிடம்  தயங்காமல் கூறிவிடுவாள். சகோதர பாசம் துரோகமிழைக்காது  என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை.

சகோதர அன்பு ஒருவர் செய்யும் தவறினை எளிதாக கண்டுபிடித்து ஒருவரை நல்வழி படுத்தவும் , சரியான பாதையில் வழிநடத்தி செல்லவும் உதவும். 

உலகின் உன்னத உறவு சுயநலமில்லாத உறவு, ஆதரவாய் தோள் கொடுக்கும் உறவு சகோதர உறவு. இந்த உறவு அமையபெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் இதே உறவை சிலர் தங்கள் விருப்பம் போல் கையாளுவது ஏனோ தெரியவில்லை.

கிடைத்த நல்ல உறவை தக்கவைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி தன்னை நேசிக்கும் உன்னத உறவை  ஈகோ, பொறாமை, சுயநலம், தற்பெருமை போன்றவற்றுக்காக இழந்துவிடுகிறார்கள்.

சகோதரி ஸ்தானத்தில் வைத்து பேசிகொண்டிருக்கும் ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்து கேலி பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்து பேசுவது போன்றதை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்வார்களா ?! நிச்சயம் செய்ய மாட்டார்கள். உடன்பிறப்பின் மானத்தை  மட்டும் தான் காப்பார்கள், பிற பெண்கள் எப்படி போனால் நமக்கென்ன, யாரோ தானே என்ற இளக்காரம் !! இப்படி பட்ட வக்கிர புத்தி இருக்கிற ஆண்கள் யாரையும் சகோதரி என்று அழைக்காமல் இருப்பது உத்தமம்.

ஆண் பெண் யாராக இருந்தாலும்...

பெண்களை மட்டம் தட்டி பேசணும், அதுவும் பொது இடத்தில் என்றால் போதும் சில ஆண்களுக்கு எங்கிருந்து வீரம்(?) வருகிறதோ தெரியவில்லை...பெண்களை குறைத்து பேசி தங்களுக்கான மதிப்பை உயர்த்தி கொள்கிறார்களாம். எப்படி புரியும் அந்த இடத்தில் தான் தங்களது மதிப்பு குறைய போகிறது என்று !!

வேடம் கலைந்தபின் அவர்களின் ஒவ்வொரு நாளும் நரகலின் மீது தான் என்பது மட்டும் உண்மை.

மனதில் சகோதரி என்று எண்ணாமல் வாயினால் அந்த வார்த்தையை உச்சரிக்க எப்படி முடிகிறது. யாரிடம் வேண்டுமானாலும் முகமூடி இட்டு நடியுங்கள். சகோதரனாய் எண்ணி பழகும் பெண்ணுக்கு எதிராக நடந்து சகோதர உறவை தயவுசெய்து கொச்சைபடுத்தாதீர்கள்.
                                                      
பதிவுலகம் என்று இல்லை வெளியிடங்களிலும், ஆண், பெண் எல்லோருக்கும் நிஜ முகம் வேறு என்பதை மனதின் ஒரு ஓரத்தில் வைத்தே பழக வேண்டிய நிலை தற்போது இருக்கிறது . வெளியில் தெரியும் முகம் தான் உண்மையானது என்று முழுமையாக நம்பி ஏதோ ஒரு சூழ்நிலையில் உண்மை தெரிந்து வேதனை படுவதை விட, எத்தகைய மனிதர்களிடத்தும் பழக நம்மை தயார் படுத்தி வைத்துகொள்வது நலம். 
                                                      
                                                         மனிதன் இங்கும் அங்கும் 
எதையோ தேடி
ஓடிக்கொண்டே இருக்கிறான்...
சத்தியமாக என்றோ 
தொலைத்த மனிதம் தேடி அல்ல !                    உத்தமர் வேடம் கன கச்சிதம்
கலையாத வரை... 
பேச்சிலும் புழு நெளிகிறது
கலைந்த பின்...!
                                                          
சக மனிதனை கீறிக் கிழிப்பது
பொழுதுப் போக்காம்...
நகைச்சுவை என்ற                                                சப்பைக்கட்டுகள் 
ஆறுதலாம்...!
                                                         
                                                           நம்பிக்கையுடன் பகிர்வதை
அடுத்தவருக்கு 
கடத்திவிடும்
நரம்பில்லா 
நம்பிக்கை துரோகி...!
பாழும் மனதினுள்ளே
பலவித வஞ்சகங்கள்..
பாழும் மனிதா
வாழும் வரை பொய்யன்
கொள்ளி இன்றி வெந்துச் சாவாய்
பிறரின் வயிற்றெரிச்சல் தீயில்...!
                                                   
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் உறவுகளை
ஒவ்வொன்றாக
களைய முயன்றால்  
அனாதையாகிவிடுவேன் 
ஒருவருமின்றி...!

அதனால்  
கச்சிதமாக பொருந்தும்
முகமூடி ஒன்றைத் 
தேடி எடுத்து
பத்திரப்படுத்திக் கொண்டேன்
தேவைப்படுகிறது
இனி எனக்கும்...!?

 * * * * * * * * * * * * * * * * *



படம் -நன்றி கூகுள் 

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...