செவ்வாய், செப்டம்பர் 11

5:39 PM
19


தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை தமிழகத்தில் மிக அருமையாக நடந்துகொண்டிருக்கிறது. போலீஸ்காரர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு அலறி துடிக்கும் மக்கள். பெண்கள் சிறுவர் சிறுமியரை போராட்டத்தில் ஈடுபட வைத்து இருக்கிறார்கள் என்ற அதிகாரவர்க்கத்தின் பேச்சுகள் ஆத்திரத்தை மூட்டுகிறது. ஏன் பெண்கள், சிறு பிள்ளைகள் சிந்திக்க திறனற்றவர்களா? தங்கள் அச்சத்தை தெரியபடுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு ஆட்சி நடக்கிறது. ஓட்டு போட மக்களை நாடி வரும் அரசியல் கட்சிகள்  ஓடி சென்று ஒளிந்து கொண்டன. மக்களுக்கான அரசு என்று மார்தட்டி கொள்ளும் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்திருக்கும் இந்த அடக்குமுறை மக்களின் மீதே என்பதை மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். 

கூடங்குளம் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடிய நிலையில் யாருமில்லை...அதை தாண்டி வெளியில் இருக்கும் நாம் கூட !!?

உதயகுமார் என்ற தனிமனிதன் தன் சுயநலத்துக்காக மக்களை தூண்டிவிடுவதை போல சித்தரிக்கப்பட்டு கூடங்குளம் வெளியே இருக்கும் மக்கள் மூளை சலவை செய்ய வைக்கப் படுகிறார்கள்.

காலங்காலமாக அங்கே வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த மண்ணின் மீது உரிமை இல்லை. அங்கிருக்கும் மக்கள் நல்வாழ்வு முக்கியம் இல்லை, ஆனால் மின்சாரம் தான் வேண்டும் என நிர்பந்திக்கும் அணுஉலை ஆதரவாளர்கள் !!?

போன வருடம்  செப் 11 இல் தீவிரமடைந்த இந்த போராட்டம் ஒரு வருடமாக கட்டுக்கோப்பாக நடந்து வருகிறது. (நேரில் பார்த்து தெரிந்துகொண்ட ஒன்று) பெரிய தலைவர்கள் எவரின் ஒத்துழைப்பும் இன்றி மக்களால் மக்களுக்காக நடந்துகொண்டிருக்கும் இதை தீவிரவாதிகளின் போராட்டம் என சித்தரித்தார்கள். தனது சொந்த நாட்டில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக  போராடினால் அவர்கள் தீவிரவாதிகள் !! அருமை !!

மது  அருந்திவிட்டு போராட்டபந்தலுக்கு வரக் கூடாது , மீறி வருபவர்கள் ஊர் கமிட்டியால் விரட்டபடுவார்கள் என்று ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது, அவ்வாறு  ஒருவரும் வெளியேற்றபடவில்லை என்ற ஒரு உதாரணம் போதும் போராட்டம் எத்தகைய ஒழுங்கின் கீழ் நடந்துவருகிறது என்பதற்கு...!

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும்  அச்சத்தை மத்திய மாநில அரசுகள் போக்கவேண்டும் என்பது தான் அவர்களின் அடிப்படை கோரிக்கை.
"எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும் இதை ஒரு வருடகாலமாக அமைதியான முறையில் கேட்டுகொண்டிருக்கிறோம். மிக தெளிவாக சொல்கிறோம் எங்களின் அச்சத்தை போக்கவேண்டும் !!" 

ஆனால் மக்களின் வாழும் உரிமைகள் மறுக்கப்படும் போது சாவின் விளிம்பை தொட்டு பார்க்கவும் துணிந்து விடுவார்கள் என்பது கண் முன் காட்சிகளாக விரியும் போது நெஞ்சம் பதறுகிறது.

மகாத்மாவின் உண்ணாவிரதம் இன்றுவரை பெரிது படுத்தபடுகிறது ஆனால் இந்த மக்களின் உண்ணாவிரதம் கேலிகூத்தாக பார்க்கப்படுவது வேதனை.


கலைந்து போக கொடுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம், அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மொத்தமாக எழுந்து நிற்க கூட இந்த நேரம் போதாது. பின் எப்படி அந்த இடம் விட்டு செல்ல...?! உடனே பிரயோகிக்கப்பட்டது தடியடி, கண்ணீர்புகை...!! எத்தனையோ காரணங்கள், பேச்சுக்கள், சப்பைக்கட்டுகள், சமாளிப்புகள் சக மனிதனை கொலை வெறியோடு அணுகும் நிலை கண்கொண்டு காண இயலவில்லை!!

தமிழ் நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை, அதனால் தான் மின்தடை...கூடங்குளம் வேலை தொடங்கிவிட்டால் தமிழகமே ஒளிர்ந்துவிடும் என மக்கள் மூளை சலவை செய்யபடுகிறார்கள் கை தேர்ந்த அரசியல்வாதிகளால் !!  தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு தரை வார்க்கபடுகிறதே அதை கேள்வி கேட்ட முடியுமா நம்மால்...கேட்டால் இது எப்பவோ போட்ட ஒப்பந்தம் என்பார்கள். ஒப்பந்தத்தை மீறி நமக்கு தரவேண்டிய தண்ணியை ஒரு சொட்டு கூட தரமுடியாது என திமிராக சொல்வார்கள் நாம மட்டும் சரிங்க என்று கேட்டுக்கணும்.

40 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம் அதுவும் சலுகை விலையில் !! ஆனால் மக்கள் இருளில் கிடக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்துக்கு கொடுக்க மாட்டார்கள். 

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் அதிக அளவு மின்சாரம் வீணாகிறது. அரசியல் வாதிகள், அதிகாரிகள்  இதில் கவனம் செலுத்தலாம். எந்த விதங்களில் எல்லாம் மின் இழப்பு ஏற்படுகிறது என கவனித்து சரி படுத்தினாலே தமிழகம் ஒளிர்ந்துவிடும்.நாட்டின் வளர்ச்சி கருதி ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கூறும்  அணுஉலை ஆதரவாளர்களின் வீரம், தன் வீடு பாதுகாப்பாக இருக்கிறது என்ற ஒன்றினால் மட்டும் தான். அணு உலை ஆதரவாளர்கள் புத்திசாலிகள் என்றும் அணுஉலையை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்பதை போல எண்ணுவது பேதைமை.

அணுஉலை கழிவுகள் அகற்றுவதை பற்றி இன்றுவரை சரியான விளக்கம் இல்லை. அணு விஞ்ஞானிகள் பாதிப்பில்லை என்று கூறுகிறார்கள் என்பது அங்கே வேலை செய்பவர்கள் தங்கள் வேலை குறைவு உள்ளது என்று எப்படி கூறுவார்கள் இவர்கள் சொன்னார்களாம் அதை நம்பி ஆகணும் என்று மக்களை வலுக்கட்டாயமாக சம்மதிக்க சொல்வது வேடிக்கை.

வன்முறையற்ற வழியில் போராடும் கூடங்குளம் மக்களை போராட்டகாரர்கள் என்று சித்தரித்து வரலாறு காணாத வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களுக்கான பிரச்சனை என்று மட்டும் எண்ணி வாய்மூடி மௌனியாக இருக்கும் மக்களே! எங்கோ ஈழத்தில் கொத்துகொத்தாய் மடிந்த போது அமைதியாக இருந்ததை போல இப்போதும் இருக்குறீர்களே...கண்ணீர் புகையினால் பாதிக்கபடும் சிறுகுழந்தைகள் பற்றி யாரும் யோசிக்கமாட்டார்களா? அடிதடி, கதறல், வேதனை, வலி இதில் பாதிக்கப்படும்  அவர்களின் மனநிலை, அவர்களின் எதிர்காலம் !!!!???
 
வீடு புகுந்து ஆண்களை கைது செய்து இழுத்து போகிறது காவல்துறை. வாழும்  உரிமை கேட்டு போராடியதற்கு சிறை. மற்றொரு சுதந்திர போர் இப்போது நமக்கு எதிரி வெள்ளைக்காரன் அல்ல, அவனுக்கு பரிந்துகொண்டே சொந்த மக்களை கொல்ல துணிந்துவிட்டது மத்திய மாநில அரசுகள். 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டுமே தவிர பாதகமாக அல்ல...   

எங்கென்றாலும் அழிவதும், அடிவாங்குவதும் தமிழ் இனமாகவே இருக்கிறது !

மனித உரிமை கமிஷன்னு ஒன்னு உண்டு, இப்ப எங்கேன்னு வேற தெரியல...!!?

நமக்கென்ன, நேற்று ஒரு சிவகாசி இன்று ஒரு கூடங்குளம் எப்படியோ நமக்கு பொழுது போனால் சரி !! வெறும் சராசரிகளாக இன்னும் எத்தனை காலம் தான் தமிழன் என்றொரு இனம் இருக்குமோ தெரியவில்லை. புரட்சி, போராட்டம் என்று முழக்கமிட்டவர்கள் எல்லாம் செத்து அழிந்துவிட்டார்கள் போலும்...

கூடங்குளம் மக்கள் 
உடலில் உயிர் இருக்கும் வரை கத்தி ஓயட்டும்
அந்த பிணங்களின் மீதிருந்து வரும் மின்சாரம் 
பெற்று பலகாலம் சுகித்து சுகமாய் வாழுவோம் 
வாழ்த்தட்டும் அம்மக்களின் ஆத்மா !!

சொந்த  நாட்டில் அகதிகளாகிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை கூறி என் இயலாமையை இங்கே வரிகளாக்குவதுடன் சகமனுசி என் வேலை முடிந்துவிட்டது என்ற நிறைவுடன்(?) முடிக்கிறேன்.

கூடங்குளத்தில் இருந்து கூடல்பாலா  'ஒவ்வொரு வீடாக புகுந்து ஆண்களை இழுத்து கொண்டு செல்கிறார்கள் நான் பாத்ரூமில் மறைந்து கொண்டு உங்களுக்கு போன் செய்கிறேன்...தெருவில் பெண்கள்  கத்தி கதறி முறையிட்டு(யாரிடம்?!) அழுது கொண்டிருக்கிறார்கள் ' என்றார்.

அவர் பேசியபோது அவரது குரலில் தெரிந்த நடுக்கம், பின்னால் ஒலித்த துப்பாக்கிச்சத்தம் நெஞ்சை பிசைய செய்வதறியாது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

என்னே என் கையாலாகாத்தனம்...!? வெட்கப்படுகிறேன் !!Tweet

19 கருத்துகள்:

 1. ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா? மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் "மா"க்களுக்கு?

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கவிதையில் உங்கள் ஆற்றாமை தெரிகிறது கௌசல்யா

  பதிலளிநீக்கு
 3. பதிவுலக மௌனதில்லிடை உங்கள் குரல் எழுந்து செவிடர்களின் செவிப்பறையை திறக்கிறது...
  மனிதம் செத்துவிட்டது...கூடவே மனிதர்களும்...

  கூத்தாடிகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் வோட்டைத்தவிர எதைப்பற்றியும் கவலையில்லை...

  ஒரு இந்தியனாய் பிறந்ததற்கு வெட்கப்படும் மற்றுமொரு தருணம்...

  பதிலளிநீக்கு
 4. உங்கள் இந்த ஆதங்கத்தை என் வலையில் இணைப்பாய் கொடுக்கிறேன்...நன்றி...

  பதிலளிநீக்கு
 5. ///மகாத்மாவின் உண்ணாவிரதம் இன்றுவரை பெரிது படுத்தபடுகிறது ஆனால் இந்த மக்களின் உண்ணாவிரதம் கேலிகூத்தாக பார்க்கப்படுவது வேதனை.///

  நூற்றுக்கு நூறு உண்மை; அவர்களைத் தவிர யார் போராடினாலும் அசிங்கப் படுத்துவது அவர்கள் வேலை...

  பதிலளிநீக்கு
 6. புதிய தலைமுறை ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளைப் பார்த்து மிக வேதனையாக இருந்தது. கொடூரமாக இருந்தது.ஒரு குழந்தை வேறு பலி.

  கூடங்குளத்தில் ஆபத்து என்றால் அது சென்னை வரை பரவாது என்று என்ன நிச்சயம்.?
  அது எங்கோ வெளிநாட்டில் இல்லையே.
  நினைத்தாலே அச்சம் கொட்டுகிறது.
  ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை விட்டு எங்கே செல்வார்கள்.
  நன்றி கௌசல்யா.

  பதிலளிநீக்கு
 7. @@பலசரக்கு said...

  //ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது.//

  //மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் "மா"க்களுக்கு?//

  அறவழி என்று யார் சொல்கிறார்கள், மக்களை போராட்டக்காரர்கள், தீவிரவாதிகள் என்று தானே மீடியாக்கள் முதல் எல்லோரும் சொல்கிறார்கள்.

  மனித உரிமை மீறல் என்பது அப்பட்டமாக தெரிந்தும் மௌனியாக இருக்கிறார்கள்.

  ...

  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. @@ரெவெரி said...

  //மனிதம் செத்துவிட்டது...கூடவே மனிதர்களும்...//

  வேதனை.

  //கூத்தாடிகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் வோட்டைத்தவிர எதைப்பற்றியும் கவலையில்லை...//

  வோட்டு வாங்கும் வரை ஒரு பேச்சு, வாங்கிய பின் வேறு ஒரு பேச்சு . பச்சோந்தி மனிதர்கள் !!

  //உங்கள் இந்த ஆதங்கத்தை என் வலையில் இணைப்பாய் கொடுக்கிறேன்...//

  மிக்க நன்றிகள்

  பதிலளிநீக்கு
 9. @@நம்பள்கி said...

  //நூற்றுக்கு நூறு உண்மை; அவர்களைத் தவிர யார் போராடினாலும் அசிங்கப் படுத்துவது அவர்கள் வேலை...//

  போராட்டம் என்ற பெயரில் நடத்தியதுக்கு எவ்ளோ ஆடம்பரம், எவ்ளோ விளம்பரம் !!

  ஆனால் எளிய இம்மக்களின் போராட்டம் எள்ளி நகையாடப்படுகிறது...!!

  ...

  நன்றி

  பதிலளிநீக்கு
 10. @@வல்லிசிம்ஹன் said...

  //புதிய தலைமுறை ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளைப் பார்த்து மிக வேதனையாக இருந்தது. கொடூரமாக இருந்தது.ஒரு குழந்தை வேறு பலி.//

  குழந்தை ஏன் அங்கே சென்றது என்று கொஞ்சமும் யோசிக்காமல் பேசுபவர்களை எண்ணி கோபப்படாமல் இருக்கமுடியவில்லை. வலி அடுத்தவருக்கு தானே என்கிற மமதையில் மனித மனம் எப்படியெல்லாம் பேசுகிறது...!!

  //கூடங்குளத்தில் ஆபத்து என்றால் அது சென்னை வரை பரவாது என்று என்ன நிச்சயம்.?
  அது எங்கோ வெளிநாட்டில் இல்லையே.//

  பஸ்ஸில் போனா கூடத்தான் விபத்து நேரும் அதுக்காக பஸ்சில் போகாம இருக்கமுடியுமா என தத்துவம் பேசும் விதண்டாவாதிகள் நிறைந்த நாடு இது.

  //ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை விட்டு எங்கே செல்வார்கள்.//

  ஆதரவற்ற ஒரு ஜீவனுக்கு அடைக்கலம் கொடுக்க கூட மனம் இல்லா மனிதர்கள் இதை பற்றி எப்படி சிந்திப்பார்கள்...?!

  அச்சத்தை போக்கி அவர்களை அங்கே நிம்மதியாக வாழச்செய்ய வேண்டும்.இது தான் எனக்கிருக்கும் ஒரே எண்ணம்.
  ...

  நன்றி அம்மா.

  பதிலளிநீக்கு

 11. வாழ்க்கைப் பற்றிய அச்சத்தில் வெடித்திருக்கும் இந்தப் போரட்டத்திற்கு தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கும் அரசின் போக்கு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

  இந்தியப் பேரரசு எங்கெல்லாம் மக்கள் விழித்தெழுந்து தங்களின் உரிமைகளுக்காகப் போரடுகிறார்களோ அங்கெல்லாம் இது போன்ற அரக்கத்தனமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதோடு மட்டுமில்லாமல் போரட்டத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்திகளையும் வெளியிட தனது கைக்கூலி ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்கிறது.

  தமிழகமெங்கும் போரட்டம் தீயாய்ப் பற்றிப் பரவி... அரசினை ஸ்தம்பிக்க வைத்தால்தான்... எதிர்காலத்தில் இது போன்ற வன்முறைகளை காவலர்களைக் கொண்டே நடத்தும் அரசியல் அராஜகப் போக்குகள் ஒழியும்...

  எப்படிப் பார்த்தாலும் வராலறு ஐயா உதயகுமாரின் பெயரினை பொன்னெழுத்துக்களில் பொறித்துக் கொண்டு நமது சந்ததியினருக்கு எல்லாம் அவரின் வீரப்போரட்டத்தைப் பற்றி சொல்லியே தீரும்...!

  வலியினை எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்திருப்பமைக்கு நன்றிகள்...!

  பதிலளிநீக்கு
 12. ஏற்கனவே நம்ம நாடு பிச்சக்கார நாடாத்தான் இருக்கு. நீங்கள்லாம் ஏத்துகிட்டாலும் ஏத்துக்கிலன்னாலும் ..

  இதுல போராட்டம் வேறையா??? நாடு முன்னேறனும்னா பொருளாதார மண்டலங்கள் அமைக்கனும்.ஏற்கனவே உலகமயமாக்கல எதிர்த்து எதிர்த்துதான் குட்டிசுவாரா நிற்குது.சீனா எங்கயோ போயிட்டு..!!!

  ஒன்னு அமெரிக்கா மாதிரி சொந்த புத்தி இருக்கனும் இல்லனா சிங்கப்பூர் மாதிரி சொல்றத ஏத்துக்குற புத்தியாவது இருக்கனும்..

  வெளங்காத கூட்டங்கள்..!!!!

  பதிலளிநீக்கு
 13. //மக்களின் உண்ணாவிரதம் கேலிகூத்தாக பார்க்கப்படுவது வேதனை.

  உண்மை.

  //அணு உலை ஆதரவாளர்கள் புத்திசாலிகள் என்றும் அணுஉலையை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்பதை போல எண்ணுவது பேதைமை.

  vice versa.

  இருந்தாலும் (எதிர்ப்போரை முட்டாள் எனாமல்) நான் அணு உலையை ஆதரிக்கிறேன். பிரச்சினை அணு உலையை மூடுவதால் தீராது. காரணம் பிரச்சினை அதுவல்ல. கூடங்குளம் இல்லையென்றால் இன்னொரு குளம்.

  பதிலளிநீக்கு
 14. @@dheva said...


  //வாழ்க்கைப் பற்றிய அச்சத்தில் வெடித்திருக்கும் இந்தப் போரட்டத்திற்கு தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கும் அரசின் போக்கு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.//

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 15. @@mazhai.net said...

  //ஏற்கனவே நம்ம நாடு பிச்சக்கார நாடாத்தான் இருக்கு. நீங்கள்லாம் ஏத்துகிட்டாலும் ஏத்துக்கிலன்னாலும் ..//

  வருத்தபடுற நீங்க கொஞ்சம் சோறு போட்டு காப்பாத்துங்களேன். நாடு பொழைச்சு போகட்டும்.:)

  //இதுல போராட்டம் வேறையா??? நாடு முன்னேறனும்னா பொருளாதார மண்டலங்கள் அமைக்கனும்.ஏற்கனவே உலகமயமாக்கல எதிர்த்து எதிர்த்துதான் குட்டிசுவாரா நிற்குது.சீனா எங்கயோ போயிட்டு..!!!//

  உலகமயமாக்கலை எதிர்த்தாங்களா ??! அது யாருங்க...??!

  //ஒன்னு அமெரிக்கா மாதிரி சொந்த புத்தி இருக்கனும் இல்லனா சிங்கப்பூர் மாதிரி சொல்றத ஏத்துக்குற புத்தியாவது இருக்கனும்..//

  இதுதாங்க நம்மாளுங்ககிட்ட, ஆ வூனா சிங்கப்பூர பாரு , அமெரிக்காவா பாரு, சீனாவ பாருனு சொல்லிக்கிட்டு !!!

  அவங்க அவங்க முதல்ல தன் வீட்டை ஒழுங்கா பார்த்தா போதும். வீடுன்னு சொல்றது நாட்டையும் சேர்த்து தான்.

  கண்ணை மூடிட்டு நாட்டை குறைசொல்றவங்க முதல்ல மாறினா தேவலை.

  வெளிப்படையான உங்க கருத்துக்கு என் நன்றிகள் மழை.

  பதிலளிநீக்கு
 16. @@அப்பாதுரை said...

  //இருந்தாலும் (எதிர்ப்போரை முட்டாள் எனாமல்) நான் அணு உலையை ஆதரிக்கிறேன். பிரச்சினை அணு உலையை மூடுவதால் தீராது. காரணம் பிரச்சினை அதுவல்ல. கூடங்குளம் இல்லையென்றால் இன்னொரு குளம்.//

  புரிந்தே இருக்கிறேன். அங்குள்ள மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.இத்தகைய அலட்சியம்,அடக்குமுறை தேவையா என்பதுதான் எனது ஆதங்கம். எங்கே என்றாலும் மக்கள் தானே !!

  நன்றி அப்பாதுரை.

  :))

  பதிலளிநீக்கு
 17. அணுஉலை பாதுகாப்பானது என்பது கடந்த சில வருடங்களாக பரப்பப்பட்டு வரும் பெரிய வதந்தி.

  மக்கள் போராட்டம் வெல்லும்.

  நம்புவோம்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...