வியாழன், பிப்ரவரி 9

AM 10:18
17

திருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு அழைப்பிதழ் கொடுத்தாங்க என்பது எனக்கு உண்மையில் பெரிய விஷயம் தான்.  வேறு ஒரு மீட்டிங் முடிச்சிட்டு நான், என் கணவர், உணவுஉலகம்  சங்கரலிங்கம் அவர்களும் ஜானகிராம் ஹோட்டலை விட்டு வெளில வந்தபோது திரு.கிருஷி எங்களை எதிர்கொண்டார்...சரி அவருக்கு  தெரிஞ்சவர் போல என்று இருந்தேன்...இரண்டு பேரும் தனியா என்ன பேசினாங்கன்னு தெரியல...திரு .கிருஷி அவர்கள் வேகவேகமா ஒரு அழைப்பிதழ் எடுத்து என் பெயரை எழுதி என்கிட்டே கொடுத்து 'அவசியம் வாங்க' என்றார். அப்போது அருகில் மிகவும் அமைதியாக ஒருத்தர் நின்று கொண்டிருந்தார், கிருஷி 'இவர் பேர் திரு .நாறும்பூ நாதன், இவர் எழுதிய புத்தகத்தை தான் வெளியிட போறோம்' என்றார்.


தன்னை அறிமுகபடுத்திக்கொண்ட அவர் 'நானும் பிளாக் வச்சிருக்கிறேன், ஆனா அவ்வளவா எழுதுவதில்லை, யாருக்கும் தெரியாது' என்றார் அமைதியாக...!!(பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படிதான் அடக்கமா இருக்கிறாங்க, ஏதோ கொஞ்சம் அப்படி இப்படி எழுதுற நாம என்னனா' ஆஹா ஓஹோ னு கொடுக்குறது எல்லாம் ஓவர் சவுண்ட் !!? )

ஆக இப்படியாக எனக்கு கிடைக்க பெற்றது அழைப்பிதழ்...! இது போதாதுன்னு சென்னையில் இருந்து எறும்பு ராஜகோபால் போன் பண்ணி 'விழா நாள் நினைவு இருக்கா, வண்ணதாசன் சார்,சுகா சார் எல்லாம் வராங்க, சனிக்கிழமைதான் மறந்துடாதிங்க, வேணும்னா அழைப்பிதழை  கழுத்தில மாட்டிகோங்க'னு அடாவடி அட்வைஸ் வேற !!(என்னோட ஞாபக மறதி உலக பிரசித்தம் போல !) உண்மையில் அவர் சொன்னதும் தான் நினைவே வந்தது :))

பெரிய பெரிய எழுத்தாளர்களை பார்க்க போறோம்னு ஊருக்கு முன்னாடி கிளம்பி போயிட்டேன் போல , அப்பத்தான் ஸ்டேஜ் அரேன்ஜ் பண்றாங்க !! கொஞ்ச நேரத்தில எல்லோரும் வந்து சேர விழா தொடங்கியது...முதலில் கரிசல் குயில் கிருஷ்ண சாமி, திருவுடையான் இசை...பாரதியார் பாடல் அரங்கம் நிறைத்தது.

பின்னர் ஒவ்வொரு நிகழ்ச்சியாக தொடர்ந்தது...சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு தி.க.சி அவர்கள் திரு.நாறும்பூ நாதனின் 'ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன்' நூலை வெளியிட, இயக்குனர், எழுத்தாளர் திரு சுகா அவர்கள் பெற்று கொண்டார். வாழ்த்தி பேச வந்த திரு.தி.க.சி அவர்கள் எழுத்தாளர்களின் இன்றைய பங்களிப்பை பற்றி சில வார்த்தைகளும், அதிலும் முக்கியமாக இன்றைய எழுத்தாளர்கள் அரசியல் நையாண்டி போன்றவற்றை கொஞ்சம் எழுதினா நல்லா இருக்கும் என்றும், விழா நாயகனை பற்றி சில வார்த்தைகளும் சொல்லி அமர்ந்தார்...

வண்ணதாசன், செல்வராஜ், தோப்பில் முகமது மீரான், நாறும்பூநாதன், தி க சி, சுகா, கீரனூர் ஜாகிர் ராஜா, உதயகுமார் 

திரு.சுகா 

இவரது எழுத்துகளின் ரசிகை நான்...விகடனில் நெல்லை மணம் கமிழும் 'மூங்கில் மூச்சு' தொடர்ந்து படித்து விடுவேன்...அவரது பிளாக்கில் போட்ட பின்னூட்டத்தில் 'நேரில் சந்தித்தால் எப்படியும் உங்களிடம் இருந்து ஒரு கையெழுத்தை பெற்றுவிடணும்' என்று சொன்னேன், ஆனா நேரில் சந்திச்ச போது என்ன பேசனு தெரியாம பதட்டத்தில எதையோ பேசி கையெழுத்து வாங்க தோணல, இப்ப உட்கார்ந்து 'அடடா போச்சே'ன்னு முழிச்சிட்டு இருக்கிறேன் (ம்...அடுத்து ஒரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போய்டும்)

இவர் பேசியதில் இருந்து சில,

                                                  எழுத்தாளர் திரு சுகா அவர்கள் 

" நான் திரு.வண்ணதாசன் அவர்களின் வெறி பிடித்த தீவிர வாசகன்...அவர் கதையில் அவருக்கே ஏதாவது மறந்து போய் இருந்தாலும் அதை நான் சரியா சொல்லி விடுவேன்...அந்த அளவிற்கு அவர் எழுத்துக்களை நான் வாசிச்சிருக்கிறேன்...என்னோட இரண்டு தொடரில் எதிலாவது இவரது இரண்டு வரியை சேர்த்திருப்பேன், அது இயல்பா நடக்கிற ஒன்று. தோப்பில் முஹம்மது மீரான்,கீரனூர் ஜாகிர்ராஜா எழுத்துக்களை படிச்சிருக்கிறேன்...இப்பதான் நேர்ல பார்கிறேன்...உதயகுமார் எழுத்தை இரு நாள் முன் படித்தேன்...மூத்த எழுத்தாளர்  தி.க.சி இவர் மட்டும் இல்லைனா திருநெல்வேலியில் பல படைப்பாளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போய் இருப்பார்கள், பலரை உருவாக்கி இருக்கிறார், இவரால் பல எழுத்தாளர்கள் உருவாகியும் இருக்கிறார்கள்...! இவரோட நானும் மேடையில் இருக்கிறேன் என்பதை பெருமையாக நினைக்கிறேன் "


" நாறும்பூ நாதன் அவர்கள் தனது ஒரு கதையில் 'ஒரு கணவனும் மனைவியும் வீட்ல இருக்கிறாங்க, அவங்களுக்கு தெரியாம திருட்டு போயிடுது...' அந்த கதையை படிச்சிட்டு 'இதையெல்லாமா கதையா எழுதுவாங்க' ஆச்சர்யப்பட்டேன். அதிலையும் கதை முடிகிற இடத்தை படிச்சு ரொம்ப சிலாகிச்சேன். என்னுடைய கதையின் இறுதியை வண்ணதாசன் ரொம்ப சிலாகிப்பாங்க, அதுமாதிரி நான் நாறும் பூ அவர்களின் கதையின் இறுதி பகுதியை மிக ரசித்தேன் "


திரு.தோப்பில் முஹம்மது மீரான் 

1997 இல் 'சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். இவரது எழுத்துக்கள் ஏற்கனவே கொஞ்சம் படித்து இருக்கிறேன்...எல்லா சமூதாயதினரோடும் தொடர்பு உடையது இவரது எழுத்துக்கள்...இவரது 'மரணத்துக்கு பின்' கொஞ்சம் படித்து பாருங்கள்...

வாசகர்களை வாசகன், ரசிகன், சக்ருதையன் என மூணாக பிரித்து சொல்வார். படைப்பாளிக்கு ஒத்த மனதை உடைய சக்ருதையன், படைப்பில் இருக்கும் மௌனத்தை சப்தமாக்கி, இடைவெளியை நிரப்பி, தேடலை உருவாகுபவன், எங்கே இவர்கள் இருவரும் சங்கமிக்கிரார்களோ அங்கே நிறைவு பெறுகிறது ஒரு படைப்பு,அது வரை அப்படைப்பு நிறைவு பெறாது என்பார் இவர். மேலும் ரசிகனும், வாசகனும் படைப்பின் விற்பனைக்கு தான் தேவை,படைப்பிற்கு சக்ருதையன் தான் தேவை, எந்த ஊடகத்தாலும் சக்ருதையனை அசைக்கமுடியாது என்பார். படிப்பவர்களை குறித்த இவரது புரிதல் அருமை.

இந்த விழாவிலும் திரு.நாறும்பூநாதன் அவர்களின் புத்தகத்தின் தலைப்பை பற்றி சிறிது நகைசுவையாக குறிப்பிட்டு பேசினார். கதையில் ஜமீலா என்ற பெண்ணை ஆரம்பத்தில் இருந்து தேடியதாகவும் ஆனால் இறுதியில் அந்த ஜமீலாவின் வருகை ஒரு புத்தக வடிவில் இருந்தது எனவும், இது போன்ற நடை ஒரு வித்தியாசமான டெக்னிக் என்று புகழ்ந்தார்.

எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் சொன்னவற்றில் சில...

*படைப்பாளிக்கு மொழி என்பது தடையாக இருக்காது...முக்கியமாக  படைப்பில் பிழைகளை தேடக்கூடாது...அவங்க படைப்பாகத்தான் பார்க்க வேண்டும்...


* எழுத்திற்காக அதிக நோபல் பரிசை வாங்கி இருப்பவர்கள் யூதர்கள் தான்...அதிகமான கொடுமையை தாங்கியவர்கள் அவர்கள் தானே ! அதனை பதிந்திருக்கிறார்கள்...


"முன்னாடி எழுதினவங்க எல்லாம்  அவங்க நிகழ்காலத்தில் நடந்ததை எழுதினாங்க, அதையே இப்ப நாமும் எழுத வேண்டியது இல்ல...பழைய கதை இப்ப தேவையும் இல்ல...அதை விடுத்து நிகழ்காலத்தில நடக்கிறதை எழுதுங்க...நம் சமூதாயத்தில் இருக்கும் அவலநிலையை எழுதுங்கள், சமூகம், அரசியலில் நிலவும் ஊழலுக்கு எதிராக எழுதுங்கள்...அதற்காக பேருந்தில் கல் எரிந்து போராட சொல்லவில்லை, எழுத்தினால் போராடுங்கள்...அந்நிய சக்திக்கு எதிரானதொரு ஒரு போராட்டத்தை இன்றைய இளம் படைப்பாளிகள் செய்யவேண்டும்..."

மேலும்

" இலங்கையில் நடக்கிறதை பற்றி ஈழ தமிழர்கள் எழுதுகிறார்கள் ...ஆனால்  இங்கே இருக்கிற எத்தனை தமிழ் படிப்பாளிகள் அதை பதிந்தார்கள் ? ஏன் அதை எழுத முடியவில்லை...?!" (இப்படி கேட்ட போது அரங்கில் நிலவிய கனத்த மௌனம் மனதை வெகுவாக தைத்தது !)

திரு.கீரனூர் ஜாகிர்ராஜா 

'ஒடுக்கப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்' என்று பிளாக்கில் எழுதி இருப்பார்...! இது போன்றே இவரது எழுத்துக்கள் பல மனிதர்களின் வாழ்வை அப்படியே வெளிக்கொண்டு வந்திருக்கும்...அதிலும் இவரது 'மீன்காரத்தெரு' நாவலை இயன்றால் படித்து பாருங்கள்...அழுக்கும் வன்முறையும், வறுமையும் நிலவும் இஸ்லாமிய மீன்காரர்களின் தெருவையும், இம்மக்களை சுரண்டி வாழும் மேல்தட்டு பங்களாவாசிகளுக்கும் இடையேயான முரண்பாடுகளை அப்படியே அவர்களின் நடுவில் வாழ்ந்து எழுதியதை போன்று இருக்கும்...மிகவும் உணர்ச்சிகரமான பதிவு...!

இவ்விழாவிலும் திரு .வண்ணதாசன் அவர்கள் இவரது இந்த நாவலை குறித்து மிக பெருமையாக விவரித்தார்.

திரு வண்ணதாசன் 

சுவையாக சுவாரசியமா இப்படி எல்லாம் பேச முடியுமா என்ற ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்து கேட்டு கொண்டிருந்தேன். கவிதைகளின் வழியே அறிமுகமான இவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பம் அன்று நிறைவேறியது.

நாறும்பூ நாதன் அவர்களின் முதல் நாவலான 'கனவில் உதிர்ந்த பூ' பற்றி பேச தொடங்கியவர் அப்படியே எழுத்தாளர்கள் பற்றி சொல்லி கொண்டே போனார், அதில் என் நினைவில் இருந்தனவற்றில் இருந்து சில...

                                                  எழுத்தாளர் திரு.வண்ணதாசன் அவர்கள் 
 
" கனவு என்பதே ஒரு உதிரும் பூ தான்! எழுத்தாளன் என்பவன் கனவில் உதிர்கின்ற பூவையும், நனவில் மலர்கின்ற பூவையும் தொடுத்துக்கொண்டே இருக்கிறான் . எது கனவு என்பதும் அல்லது எது மலர் என்பதும் அல்லது எது மலர்ந்தது என்பதும், எது உதிர்ந்தது என்பதும் எழுதுபவன் மட்டுமே அறிவான்.....எழுதுகிறவன் செய்கிற வேலை என்ன ?? அறிவது, அறிந்து கொள்வது, தான் அறிந்தவற்றை பிறருக்கு அறியச் செய்வது.....தான் அறிந்த வாழ்வை, தான் அறிந்த மனிதர்களை அவர்கள் அறியாத மனிதர்களிடம், அறிய வைப்பது...!இது தான் வேலை  இதை அறிய விரும்புகிறவர்களுக்கும், அறிய விரும்பாதவர்களுக்கும்,அறிவதை மறுக்கிறவர்களுக்கு அறிமுகபடுத்தி வைக்கிறான் "


"புதுமை பித்தன் யாரை அறிமுகப்படுத்தினார் ?! செல்லம்மாவை மட்டும் அல்ல கந்தசாமியை மட்டுமல்ல கடவுளையே அறிமுகபடுத்தினார்...கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ! சுகா தனது கதைகளில் செல்லப்பா மாமா, குப்பம்மா ஆச்சி, பாலாஜி,குஞ்சு போன்றவர்களை அறிமுகபடுத்தி இருக்கிறார்...! "


" எழுத்தாளர்கள் மனிதர்களை, மனிதர்கள் சார்ந்த வாழ்வை, குடும்பத்தை ,தெருவை, வீட்டை இப்படி எதையாவது அறிமுகபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்..." 


"இசக்கி அண்ணாச்சி அவர்களின் புகைப்படங்கள் நமக்கு எதை அறிமுகப்படுத்தின... நமது அடுத்த சந்ததிக்கு மருத மரத்தை அறிமுகபடுத்தி காலத்தின் சாட்சியாக இருக்கின்றன.நாம் மருதநிலக்காரர்கள் ஆனால் சாலையில் இருக்கும் மருத மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு  விட்டன...மருத மரத்தின் பறந்து விரிந்த தோற்றத்தையும், அதன்  நிழலையும், அதன் அருகில் குளத்தில் கிடக்கும் ஒடிந்த கிளையையும் அறிமுகபடுத்தி இருப்பார், மரத்தில் ஏற்கனவே ஒரு காக்கா இருக்கும் அதைவிட அழகாய் மற்றொரு காக்காவை தனது தூரிகையால் ஓவியமாக புகைப்படத்தில் கொண்டு வந்திருப்பார், இப்படி ஒரு நல்ல கலைஞன் எதையாவது அறிமுகபடுத்திக்கொண்டே இருப்பான்...!"

உதயசங்கர் குறித்து : " இவர் 22 புத்தகங்கள் எழுதி இருக்கிறார்...இவரை நாம் இன்னும் சரியாக அறிந்து கொள்ளவில்லை...நல்ல கலைஞனை எவ்வாறு அறிவது, அவனது படைப்பின் மூலமாகத்தானே ?! இவரது  'பிறிதொரு மரணம்' நாம் அறியவில்லை என்றால் பிறிதொரு வாழ்வையே நாம் அறியாதவர்கள் ஆகிறோம். பிறிதொரு வாழ்வு என்ன வாழ்வு நான்ம வாழும் வாழ்வையே அறியாமல் இருக்கிறோம்...தயவு செய்து இவரது 'முன்னொரு காலத்திலேயே' என்ற புத்தகத்தை அவசியம் படியுங்கள்...அனைவராலும் கொண்டாடபடவேண்டியவர்...இவரது 22 கட்டுரைகள் 22 மனிதர்களை பற்றிய அற்புதமான தொகுப்பு...அதில் வருபவர்கள் இறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி விடாதீர்கள், இவர்கள் நம் காலத்து நாயகர்கள் "


இவ்வாறு, இன்னும் பேசிக்கொண்டே சென்றார்...பேச்சை முடித்து திரு. வண்ணதாசன் அவர்கள் அங்கிருந்து அகன்றபின் நேரம் பார்த்தேன் சரியாக 'இருபது நிமிடங்கள்' கடந்திருந்தன...!பேசி முடிக்கும் வரை சிறு சத்தம் எழவில்லை...அனைவரையும் தனது பேச்சால் கட்டி போட்டு இருந்தார். இன்னும் அரைமணி நேரம் பேசி இருந்தாலும் கேட்டுக்கொண்டுதான் இருந்திருப்போம்...!!


திரு.உதயசங்கர்

கோவில்பட்டி நிறைய எழுத்தாளர்களை படைப்புலகிற்கு கொடுத்திருக்கிறது...முப்பது வருடத்திற்கு முன் அங்கிருந்து வந்தவர்தான் எழுத்தாளர் உதயசங்கர்...இவர் நாறும்பூ நாதனின் நெருங்கிய நண்பர். சிலவற்றை மிக சுவாரசியமாக கூறி அரங்கை கலகலப்பாக்கினார். அவரது பேச்சில் இருந்து...

                                                    எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்கள் 

" எழுத்தாளர்களின் மனைவியர் தான் ரொம்ப சிரமப்படுவாங்க...என்னவோ எழுதுறார் என்ற அளவில் தான் அவர்களின் புரிதல் இருக்கும்...இது தெரிஞ்சிதான் நான் கல்யாணத்துக்கு முன்பே நான் ஒரு எழுத்தாளன் அப்படின்னு இப்படின்னு பில்ட்அப் எல்லாம் கொடுத்து தயார் பண்ணி வைத்தேன்...ஆனால் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் வெடித்தது பிரச்சனை, 'என்னை எழுத்தாளர்னு தெரிஞ்சி தானே சம்மதிச்ச, இப்ப என்ன சண்டை போடுற'னு கேட்டேன். அதுக்கு அவங்க, 'ஆமாம் தெரியும், கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்க, அப்புறம் திருத்திவிடலாம்னு நினைச்சேன் ஆனா இது புது கோட்டியால்ல(?) இருக்கு...!?' 

இயல்பாக எல்லோரும் ரசிக்கும் விதமாக நிறைய பேசினார்...

திரு.நாறும்பூநாதன் 

திரு.உதயகுமார் அவர்களை பற்றி பேசியபோது, தங்களது சிறுவயது நினைவுகளை குறிப்பிட்டு சொன்னவை அருமை. உதயசங்கர் தனது அறையில் உடன் இருந்த மலையாள நண்பர் ஒருவரின் மூலமாக மிக குறுகிய காலத்தில் மலையாளம் கற்று பல மலையாள நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்று கூறி ஆச்சர்யபடுத்தினார்...!!

படைப்புலகம் குறித்து திருநெல்வேலியில் ஒரு பெரிய கருத்தரங்கம் நடத்தணும் என்று ஒரு யோசனை இருக்கிறது என தனது என்னத்தை வெளிபடுத்தினார்.

நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது...பல நல்ல நினைவுகளை பெற்ற மகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

ஒரு வித்தியாசமான அனுபவம் 

பொதுவாக எழுத்தாளர்கள் கலந்துக்கிற விழா என்றாலே இப்படி எல்லாம் இருக்கும் என சில புரிதல்கள், சில கற்பிதங்கள் என் மூலையில் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தது...அதை எல்லாம் உடைத்து தூக்கி போட்டுவிட்டது இந்த நிகழ்ச்சி...!! வந்திருந்த ஒவ்வொருவரும் பிற எழுத்தாளர்களை வெளிப்படையாக மனமார பாராட்டினர், அதை விட அடுத்தவர்களின் நாவல்களை நினைவு கூர்ந்து அதில் இருக்கும் கதாபாத்திரம் பெயர் வரை நினைவு வைத்து சொன்ன விதம் பெருமிதம் கொள்ள செய்தது...

                                       ஆர்வமுடன் கவனிக்கும் அரங்கில் ஒரு பகுதியினர்...


அரங்கம் முழுவதும் நிறைந்து பலர் நின்றுகொண்டிருந்தனர்...எழுத்தாளர்கள் பேசும் போது சிறிதும் தேவையற்ற சத்தம் எழவில்லை...கைதட்டல்களும் , சிரிப்பொலியும் மாறி மாறி கேட்டது அழகு...நல்ல தமிழை, ஆங்கில கலப்பில்லாத தமிழை கேட்க வேண்டுமென்றால் இது போன்ற நிகழ்ச்சியை தவறவிட கூடாது. 

'ஜமீலாவை எனக்கு அறிமுகம் செய்தவன்' புத்தகம் வெளியிட்டவர்கள்: வம்சி புக்ஸ்.

இப்படி ஒரு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சங்கரலிங்கம் அண்ணாவுக்கு என் நன்றிகள்.

பின் குறிப்பு

எனக்கு நினைவில் இருந்த வரை எழுதி இருக்கிறேன்...யாருக்கும் ஏதும் குறையாக தெரிந்தால் பொறுத்துக்கொள்ளவும்...உடன் தெரிவித்தால் சரி செய்து கொள்கிறேன்.

நூல் வெளியீட்டு விழா குறித்து தொடர்ந்த எனது பார்வையை அடுத்த ஒரு பதிவில் பதிய இருக்கிறேன்...

இங்கே குறிப்பிடபட்ட எழுத்தாளர்களின் வலைத்தளங்கள் செல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும் அவர்களின் பெயரை கிளிக் செய்யவும்...அவசியம் சென்று அருமையான நல்ல எழுத்துக்களை வாசித்து பயன்பெறுங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்.

நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா 
Tweet

17 கருத்துகள்:

  1. திரு.வண்ணதாசன் அவர்களின் எழுத்துக்களை
    ரசித்து படித்திருக்கிறேன் சகோதரி.
    மற்றவர்களின் இணைப்பை கொடுத்ததற்கு
    என் மனமுவந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நம்மூர் திருநெல்வேலியில் இத்தனை எழுத்தாளர்கள் இருப்பது ரொம்ப பெருமையான விசயம். அவர்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கீங்க கௌசல்யா அக்கா. ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
  3. \\\(பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படிதான் அடக்கமா இருக்கிறாங்க, ஏதோ கொஞ்சம் அப்படி இப்படி எழுதுற நாம என்னனா' ஆஹா ஓஹோ னு கொடுக்குறது எல்லாம் ஓவர் சவுண்ட் !!? \\\ ஆமால்ல !

    பதிலளிநீக்கு
  4. \\\\பொதுவாக எழுத்தாளர்கள் கலந்துக்கிற விழா என்றாலே இப்படி எல்லாம் இருக்கும் என சில புரிதல்கள், சில கற்பிதங்கள் என் மூலையில் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தது...அதை எல்லாம் உடைத்து தூக்கி போட்டுவிட்டது இந்த நிகழ்ச்சி...!!\\\ வியப்பான ஒன்று!

    பதிலளிநீக்கு
  5. அருமையான நிகழ்வை அருகிலிருந்து பார்த்ததுபோல் இருக்கிறது. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. மிக விரிவான பகிர்வு.நிகழ்வுகளை பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு.
    நிறைய படிக்க வேண்டும்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளீர்கள்.மிக்க சந்தோஷம். அருமையான தகவல் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. @@ மகேந்திரன் said...

    //திரு.வண்ணதாசன் அவர்களின் எழுத்துக்களை
    ரசித்து படித்திருக்கிறேன் சகோதரி//

    நீங்களும் அவரது வாசகர் என்பது குறித்து மகிழ்கிறேன் மகேந்திரன்.

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  10. @@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //நம்மூர் திருநெல்வேலியில் இத்தனை எழுத்தாளர்கள் இருப்பது ரொம்ப பெருமையான விசயம். அவர்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கீங்க கௌசல்யா அக்கா.//

    இந்த விழாவின் மூலம் இன்னும் பலரை பற்றியும் தெரிந்து கொண்டேன்...சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
    ஏற்கனவே பலருக்கும் அறிமுகமானவர்கள் தான் எனக்கு இப்போது தான் தெரிகிறது.

    மகிழ்கிறேன் ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  11. @@ koodal bala said...

    \\\(பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படிதான் அடக்கமா இருக்கிறாங்க, ஏதோ கொஞ்சம் அப்படி இப்படி எழுதுற நாம என்னனா' ஆஹா ஓஹோ னு கொடுக்குறது எல்லாம் ஓவர் சவுண்ட் !!? \\\ ஆமால்ல !//

    ஆமாம்மே தான். :))

    பதிலளிநீக்கு
  12. @@ குடந்தை அன்புமணி said...

    //அருமையான நிகழ்வை அருகிலிருந்து பார்த்ததுபோல் இருக்கிறது. மிக்க நன்றி//

    எனது உளப்பூர்வமான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. @@ Asiya Omar said...

    //மிக விரிவான பகிர்வு.நிகழ்வுகளை பகிர்ந்த விதம் அருமை.//

    ஆமாம் தோழி, பதிவு கொஞ்சம் பெரிதாகி விட்டது...அவ்வளவையும் ஒரே பதிவில் கொண்டு வந்துடனும்னு நினைச்சேன்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. @@ FOOD NELLAI said...

    //நல்ல நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளீர்கள்.மிக்க சந்தோஷம். அருமையான தகவல் பகிர்வு.//

    கலந்து கொள்ள காரணம் நீங்கள் தானே...

    நன்றிகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  15. நானும் அன்று உங்கள் அருகில் இருந்து கதைத்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியான அனுபவம்!

    பதிலளிநீக்கு
  16. தேனீர் என்ற நாவலின் எழுத்தாளர் செல்வராஜும் கலந்து கொண்டவர்களில் ஒருவர். அவருடைய எழுத்தும் சுவாரசியமானவை.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...