புதன், ஏப்ரல் 28

ஏன் பிறந்தேன் பெண்ணாக?


இந்த கேள்வியை  தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான் . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு,  அது பிரசவ வேதனையை  அனுபவிக்கும் அந்த நேரம்!   

நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் இல்லை.  நர்ஸ் வந்து செக்  பண்ணி விட்டு இந்த வலி போதாது இன்னும் கொஞ்சம் வலி வர வேண்டும், அப்போதுதான் குழந்தை பிறக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.  எனக்கு எப்படி இருக்கும்?!  இந்த வலியே உயிர்  போகுது, இதை விட அதிக வலி என்றால் எப்படி இருக்கும்,  நினைக்கும்போதே வலியுடன் இப்போது பயமும் சேர்ந்து விட்டது.  

என் உறவினர்கள் வேறு உட்காராதே அப்படியே மெதுவாக  நட என்று அன்பாக கட்டளை இட்டார்கள்.  என்ன செய்ய அனுபவஸ்தர்கள் சொல்கிறார்களே என்று பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடந்தேன்.     

வலியை அதிகரிக்க ஜெல் என்ற ஒன்றை வைத்தார்கள்,   வைக்கும்போது அது வேற  வித்தியாசமான ஒரு வேதனையாக  இருந்தது.  இது போதாது என்று குளுக்கோஸ் வேறு ஒரு கையில் ஏறி கொண்டு இருந்தது.  அதிகம் இல்லை ஒரு 5 பாட்டில் தான்.  ஒரு பாட்டில் முடிந்ததும் நர்ஸ் செக் அப்,  பின்னர் வாக்கிங், மறுபடி ட்ரிப்ஸ், மறுபடி செக் அப் இப்படியாக கிட்டத்தட்ட 36  மணி நேரம் கடந்தது.   இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விட்டேன்.  எப்ப குழந்தை பிறக்கும் என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. 

டாக்டர் மறுபடி ஜெல் முயற்சி பண்ணுவோம் என்று சொன்னார்கள்,  நல்ல ஹாஸ்பிடல் என்பதால் சிசரியன்  பற்றி யாருமே அங்கே  பேசவில்லை.  (எனக்கு தான் வேற இடம் போய் இருக்கலாம் என்று தோன்றியது) மறுபடி ஜெல் என்றவுடன் பயம் அதிகமாகி விட்டது.  

இந்த நரக வேதனையில் தான் என் மனதில் தோன்றியது " ஏண்டா பெண்ணாக  பிறந்தோம்? "  மனதில் தோன்றியதை வாய் விட்டு கதறி சொல்லிவிட்டேன்,  அதற்க்கு என் அத்தை ' என்ன செய்ய நம்ம தலை எழுத்து, அனுபவிக்கத்தான் வேண்டும் '  என்று அவர்களுக்கு தெரிந்த ஆறுதலை கூறினார்கள்.   எனக்கு அந்த கேள்வி மட்டும் அல்ல வேறு ஒன்றும் தோன்றியது, ' எதை எதையோ கண்டுபிடித்தோம் என்று பெருமை பட்டு கொள்கிறோமே,  வலி இல்லாமல் பிள்ளை பெறுவதற்கு ஒரு மாத்திரை மாதிரி எதையாவது கண்டுபிடிக்கலாம் அல்லவா என்பதுதான் அது'.   

என் கதறல்  தாங்காமல் கடைசியில் ஆபரேஷன் ரூமிற்கு அழைத்து சென்றார்கள். போவதற்கு முன் இனிமா என்ற வேறொரு இம்சை, அதையும் அனுபவித்தேன்.  ஆபரேஷன் செய்யலாமா இல்லை மறுபடி  ஜெல் வைக்கலாமா என்று அவர்களுக்குள் ஒரு ஆலோசனை நடந்தது,    அரைமணி நேரம் கழித்து சரியாக 40 மணிநேர அவஸ்தைக்கு பின் கடவுள் மனம் இரங்கி பெரிய வலியை  கொடுத்தார்.

என்னை சுற்றி பலர் இருந்தனர், வலி கூட கூட என் கதறலும் கூடுகிறது, பயத்தில் என் கைகள் உதவிக்காக அலைபாயுகிறது ,  தானாகவே என் கரங்கள் அருகில் இருக்கும் நர்சின் கையை பற்றி அழுத்தியது.  நெஞ்சின் படபடப்பு  அதிகரிக்கிறது, இதயம் அதிக ஆக்சிசனுக்காக துடிக்க என் திறந்த வாய் வேகமாக காற்றை உள்ளிழுக்கிறது. அருகில் இருக்கும்  நர்ஸ் என் காதருகில் வேகமாக உந்தி தள்ளுமாறு கூறினார்கள்.  

என் முழு உடலும் என் கட்டுபாட்டில் இல்லை,  என் கண்கள் நிலை குத்த, கைகள் பரபரக்க, இதயம் துடிக்க, நெஞ்சில் ஒரு பந்துபோல் ஏதோ வந்து அடைக்க, வேகமாக என் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி உள்ளிழுத்த காற்றுடன் அழுத்தம் கொடுத்து உந்தி தள்ள, இதோ என் குழந்தை பிறந்து விட்டது. என் அழுகை சத்தம் நின்று என் குழந்தையின் அழுகுரல் தொடங்கியது.   நான் மெதுவாக மூச்சை இழுத்து விட்டு இயல்பு நிலைக்கு வர தொடங்கினேன். (அந்த நேரத்திலும் அனிச்சையாக சினிமாவில் பார்த்த மாதிரி மயக்கம் வரும்  என்று கண்ணை மூடி பார்த்தேன், ஆனால் வரவில்லை) 

நர்ஸ் அருகில் வந்து 'உங்களுக்கு ஆண் குழந்தை' என்று சொன்னார்கள். எந்த குழந்தை என்றாலும் பரவாயில்லை , பிறந்தால் சரி என்றுதானே இருந்தேன். அதனால் மனதில் ஒன்றும் பெரிதாக பூ எல்லாம் பூக்கவில்லை,  நர்சிடம் சும்மா லேசாக சிரித்து வைத்தேன்.
 இன்னும் விட்டார்களா இந்த நர்ஸ்கள், என்னவோ இன்னும் சரியாக வெளியேறவில்லை என்று என்னை அடுத்த 20   நிமிடத்திற்கு பாடாய் படுத்தினார்கள், தையல் போட்டார்கள்.  என்ன மாதிரியான  விதவிதமான வேதனைகள், வலியில் இத்தனை விதங்களா?, அனுபவித்தேன் கொடூரமாக.....!

என்னே ஆனந்தம்:

இதற்குள் குழந்தையை சுத்தம் செய்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வைத்து என்னிடம் கொண்டு வந்து காட்டினர்.  மெதுவாக திரும்பி முகம் பார்த்தேன்...கடவுளே! இது என் குழந்தையா..?  இதன் தாய் நானா..?  நாந்தான் பெற்றேனா..? வெள்ளை துணியில் சிகப்பு ரோஜா மலராய் கண்மூடி என் அருமை மகன்... ! சின்ன சின்ன மணி விரல்கள், இதழ் பிரியா  மல்லிகை  மொட்டுபோல் உதடுகள்,  தாமரை இதழாய் கன்னம், மூடிய இமைக்குள் அலையும் கருவிழிகள்,  வர்ணிக்க வார்த்தைகள் தோணவில்லை,  ஆனந்தத்தில் எனக்கு போதை ஏறி சிறிது மயக்கம் வருவதுபோல் இருந்தது!

இதுவரை நான் அனுபவித்தது வலிகளா இல்லை, என் கண்மணியை தேடி கண்டுபிடிக்க நான் எடுத்த பிரயாசங்களா ....!? ஒரே வினாடியில் என்னை தாய் என்று உணர வைத்தான்.   பால் அருந்த என் அருகில் படுக்க வைத்தனர்,  என் ரத்தம் என் மகனுக்காக பாலாக மாறி அவனை அருந்த வைத்தது....!  பெண்மை எதுவென இந்த இன்ப வலியை அனுபவிக்கும்போது தான் உணருகிறேன்,  கடவுள் வரம் கொடுத்தால் மீண்டும்  பெண்ணாகவே பிறப்பிக்க வேண்டுவேன் என்பதை... !

பெண்களே இனி ஒரு முறை கூட கூறாதிர்கள் , ' ஏன் பெண்ணாய் பிறந்தேன் என்று '.


உண்மைதான் ," மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா "     

செவ்வாய், ஏப்ரல் 20

தாம்பத்தியம் - ஒரு அறிமுகம்

'தாம்பத்தியம்' என்ன ஒரு அழகான வார்த்தை,  இந்த வார்த்தைக்கு உண்மையில்  என்ன அர்த்தம் என்பது கூட பலருக்கு  தெரிய வாய்ப்பு இல்லை , அப்படி இருக்கும்போது இந்த தலைப்பில் நான் எழுதினால் எப்படி என்று எனக்குள் ஒரு தயக்கம்.  ஆனால் கணவன் மனைவி உறவு பற்றி சொல்லும்போது இதைவிட சிறந்த தலைப்பு வேறு இருப்பதாக எனக்கு தோணவில்லை. இந்த ஒரு வார்த்தை பலருக்கு பலவிதமா தெரியலாம். படிக்க  படிக்க உங்க வீட்டு கதை போலகூட தெரியலாம்.  


என்னடா ஆரம்பத்திலேயே இப்படி குழப்புறாங்க  என்று நினைக்காதிங்க  .  தாம்பத்தியம் கூட தொடக்கத்தில் தம்பதியருக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல  ஒரே குழப்பமாகத்தான் இருக்கும்.  போக போக முத்து எடுக்கத்தான் சம்சார சாகரத்தில் விழுந்திருக்கிறோம் என்பது புரியும்.  சிலர் எடுப்பது முத்தாக இருக்கும், பலருக்கோ வெறும் சிப்பியாக ஏமாற்றத்தில் முடிந்து விடுகிறது.  முத்தை மட்டும்தான் தேடவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துவிட்டால் ஏமாற இடம் இருக்காது. 


இந்த உறுதி இல்லாததால் தான் பலர் இன்று விவகாரத்திற்காக கோர்ட் படி ஏறுகிறார்கள்.
கோர்ட் வரை போக வழி இல்லாதவர்கள் அதாவது கெளரவம் பார்த்துகொண்டு ஏதோ வாழ்ந்து (மனதிற்குள் வெந்து)  கொண்டிருக்கிறார்கள்.


பிறப்பு ஒரு முறைதான் இந்த வாழ்க்கையும் ஒருமுறைதான்,  (ஏழு ஜென்மம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை,  அத்தனை ஜென்மம்  எடுத்தவர்கள் யாராவது உள்ளேன் ஐயா என்று சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்)  நம் வாழ்கை ஓட்டத்தை நாம்தான் நன்றாக ஓடி முடிக்கவேண்டும்.  அதற்கு கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் துணை இருக்க வேண்டும். அவ்வளவுதான்.


அப்போதுதான் இருவரின் ஓடு பாதையை  பின்பற்றி வரும் அவர்களின் வாரிசுகள் வெற்றி பெறமுடியும்.  அப்படி வெற்றி பெற்ற வாரிசுகளால் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கமுடியும்.  ஆக ஒரு நல்ல சமுதாயதிற்கு அடிப்படை நல்ல குடும்பம்.  சமூகம் சரி இல்லை என்று குறை கூறுபவர்கள் முதலில் தங்களது வீடு சரியாக இருக்கிறதா என்று பார்த்து அதை சரி செய்தாலே போதும்.


எதிர்பார்ப்புகள் :


முரண்பாடுகள் நிறைந்ததுதாங்க வாழ்க்கை. கல்யாணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே பலவித எதிர்பார்ப்புகள் ஒருவர்மேல் ஒருவருக்கு இருப்பது தப்பு கிடையாது ஆனால் நம்முடைய எண்ணம் போலத்தான் இருக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பது ஒரு விதத்தில் ஆர்வகோளாறுதான்.  ஒரே  கருப்பபைஇல் வளர்ந்து பிறந்த குழந்தைகளின் செயல்களிலேயே வேறுபாடு இருக்கிறப்ப வேறுவொரு சூழ்நிலையில் வேற குடும்ப பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த துணையிடம் மட்டும் ஒத்த எண்ணங்கள் இருக்கணும் என்று நினைக்கிறது எப்படிங்க சரியாயிருக்கும்.   


நான் தொழிலில் பெரிதாக சாதித்தேன்,  கம்பெனிஐ  உயர்த்த கடினமாக உழைத்தேன் பொருளாதாரத்தில் உயர்ந்த  இடத்தில் இருக்கிறேன், நான் வெற்றியாளன் என்று  பெருமையாக சொல்லலாம்,  ஆனால் அதை மட்டுமே முழு வெற்றியாக கருத முடியாது. உங்கள் குடும்ப வாழ்க்கை  வெற்றிகரமாக நடக்கிறதா என்பதற்கு சரியான பதில் உங்களிடம் இருக்கிறதா?  உங்கள் பதில் ஆம் என்று இருந்தால் மட்டுமே நீங்கள் முழு வெற்றியாளன்.  இல்லை என்று இருந்தால் நீங்கள் வெற்றி என்று நினைப்பது வெறும் கானல் நீர்தான்.     குடும்ப வாழ்வில் நிறைவு பெறாமல் அந்த சந்தோசத்தை உணராமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா.......?


பொதுவா எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலே வாழ்க்கை சுவைக்காது.  ஆற்றின் நீரோட்டத்தை போல இயல்பா இருக்கணும்.  பள்ளம் இருந்தால் இறங்கியும் மேடு வந்தால் மேட்டில் ஏறியும் மண்ணின் நிறத்திற்கு ஏற்ப தனது நிறத்தை மாற்றியும் ஒரே சீராக ஓடி கடலில் சேரும் ஆறு போல இருக்க ஏன் சில பெண்களால் முடிவது இல்லை என்று தெரிவது இல்லை.  


என் குடும்பம்: 


எனது குடும்பத்தை எடுத்து கொண்டால் எனக்கும் என் கணவருக்கும் பல விசயங்களில் கருத்துகள் ஒத்து போகாதுதான், இருந்தாலும் எது எல்லாம் ஒத்து வரவில்லை என்று உட்கார்ந்து பட்டியல் போட மாட்டோம்.  ஒரு சில நேரங்களில் என் கருத்தை அவரும் அவர் கருத்தை நானும் ஏற்று கொண்டு விடுவோம்.  வேற வழி......! குடும்பத்தில் சந்தோசம் நிலைக்கனும் என்றால் இந்த மாதிரி small adjustment
செய்துதான் ஆக வேண்டும்.  


அப்படி எல்லாம் முடியாது என்று வாதம் செய்து கொண்டிருந்தால் வார்த்தைகள் தடிக்கும், மோதல் அதிகரிக்கும், இறுதியில் நாலு சுவத்துக்குள் பாராமுகம்.  பெண்களாகிய நாம் வாதத்திற்கு சளைத்தவர்கள் இல்லை, மூச்சுவிடாமல் ஒரு மணி நேரம்கூட பேசுவோம்,  அத்தனையையும்  பொறுமையாக ஆண்கள் கேட்பார்கள் ஆனால் இறுதியாக அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையில் நாம் துடித்து போய்விடுவோம்.  பதில் சொல்ல தோணாது, அப்புறம் எதற்காக சண்டை என்பதை மறந்து விட்டு என்னை பார்த்து இப்படி சொல்லி விட்டாரே  என்று மனம் ஒடிந்து போனதுதான் மிச்சம்.  


வேற்றுமையில் ஒற்றுமை


நான் இந்திய நாட்டில் பல இன, மொழி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் எல்லோரும் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்று இருக்கிறோம் அல்லது ஒற்றுமையாய் இருப்பதுபோல் தோன்றுகிறோம் இல்லையா.....?   அதைபோலத்தான் குடும்பமும் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும்,  வெளியில் இருந்து பார்க்கும்போது ஒற்றுமையாக இருப்பது போலாவது தெரியவேண்டும்.  அப்போதுதான் மூன்றாம் நபரின் தலையீடு என்பது குடும்பத்திற்குள் இருக்காது.  (நானும் கள்ளகாதல் என்ற தலைப்பை எழுத வேண்டிருக்காது)   அந்த மூன்றாம் நபர் ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


கணவரை பற்றி எப்போதும் குறைச் சொல்லிகொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணியிடம், ' குடும்பம்னா அப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க,  அவர் நடந்துக்கிற விதம் பிடிக்கலைனாலும் பிடிச்சமாதிரி இருந்துகோங்க, அப்பதான் பிரச்சனை வராதுன்னு'  சொன்னதுக்கு அந்த பெண் கொஞ்சங்கூட யோசிக்காம, ' அப்ப என்னை நடிக்க சொல்லுறீங்களா, எனக்கு வேஷம் எல்லாம் போட தெரியாது' ,  என்று கன்னத்தில அறைந்த மாதிரி சொல்லிட்டாங்க.   இப்படி சொல்லும் இவர்கள் யதார்த்தம் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அறிவிலிகள் என்றுதான்  சொல்வேன்.


எது நடிப்பு.....?  ஷேக்ஸ்பியர் சரியாதான் சொன்னார், ' உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்',  இது சத்தியமான வார்த்தை.  நம் அன்றாட வாழ்வில் யார்தான் நடிக்கவில்லை, என்னிடம் பேசிய அந்த பெண்ணையும் சேர்த்துதான் சொல்கிறேன்.  நாம் கடவுளிடம் கூட, " நான் ஒரு பாவமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்த சோதனை" என்று கேட்கும்போது நடிக்கிறோம்.  பணிபுரியும் இடத்தில் மேலதிகாரி மேல் நமக்கு ஏதாவது கோபம் இருந்தாலும் வெளி காட்டிகொள்ளாமல், சிரிச்சிட்டே அவர் வரும்போது எழுந்து வணக்கம் சொல்லும்போது நடிக்கிறோம்,  பிடிக்காத உறவினர்கள் வீட்டிற்கு  வந்தால் சந்தோசமாக வரவேற்று நடிக்கிறோம், இதை மாதிரி உதாரனங்களை சொல்லிட்டே போகலாம்.  முக்கியமா எல்லோரிடமும் நான் ரொம்ப பெர்பெக்ட் என்ற மாதிரி ஒரு முகமூடியை  அணிந்துகொண்டு நடிக்கவில்லையா?      


அனைவருக்குமே மற்றவர்களின் முன் சிறப்பாக நடக்கவேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இருக்கும்.  அதேபோல் பெண்களுக்கு, நம் கணவரின் முன்னால் நல்லவிதமாக அவருக்கு பிடித்த  மாதிரி நடக்க வேண்டும் என்று ஏன்  தோன்றுவது இல்லை.
குடும்ப பிரச்சனைகளுக்கு பெண்கள் மட்டுமே காரணம் இல்லை.  நான் ஏன் முதலில் பெண்களை வைத்து மட்டும் சொல்கிறேன் என்றால் நல்லவிதமாக எடுத்து சொன்னால் அவர்கள் புரிந்து கொண்டு திருத்திகொள்வார்கள்,  ஆனால் ஆண்கள்..........!  


அடுத்த பதிவில் இன்னும் அதிகமாக பகிர்கிறேன் ,  காத்திருங்கள்....... 



சனி, ஏப்ரல் 17

ஐஸ்கிரீமும் மோர் மிளகாயும்

   
இந்த கோடை காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் இருக்கமாட்டோம். அப்படி ஐஸ்கிரீம் ஐ பார்க்கும் போது எல்லாம் என் college life இல் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வரும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

college  இல் final year exam நடந்து முடிந்ததும் எங்களுக்கு நாங்களே பார்ட்டி வச்சுக்கலாம் என்று முடிவு செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு restaurent போனோம். அங்கே பபே முறை என்பதால் மிகவும் உற்சாகமாக உள்ளே சென்று அமர்ந்தோம்.  பல வித உணவு வகைகள் சூடாக வரிசையாக வைக்கபட்டிருந்தன.  ஆளுக்கு ஒரு plate  எடுத்து கொண்டு அவரவருக்கு வேண்டிய உணவுகளை எடுத்து போட்டு கொண்டு அந்த இடத்தையே அதகளம் பண்ணி சாப்பிட்டு கொண்டிருந்தோம்.  

1  மணி நேரம் கடந்தும் எங்கள் பார்ட்டி முடிந்தபாடில்லை.  இடையில் தண்ணீர் குடித்தால்  அதிகமாக சாப்பிட முடியாது அதனால் கடைசியில் தான் குடிக்கவேண்டும் என்று ஆரம்பதில்லேயே எங்களுக்குள்  அக்ரீமென்ட் வேறு போட்டு கொண்டோம். எல்லாம் நன்றாகதான் போய்கொண்டிருந்தது.  ஆனால் ஐஸ்கிரீம் உண்டு என்பதும், அதையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதும் எனக்கு இறுதியாகத்தான் தெரிந்தது.  

என்ன பன்றது சென்னையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் இந்த மாதிரி வெளி இடங்களுக்கு போய் பழக்கம்  இல்லை .  15 வருடத்திற்கு முன்னால நாம எந்த மாதிரி இருந்தோம் என்று தெரியாதா......?  ஒ.கே ஒ.கே விசயத்திற்கு வருகிறேன்.

இந்த ஐஸ்கிரீம் விஷயம் ஆரம்பத்திலேயே எனக்கு தெரிந்து இருந்தால் சாப்பாடு பக்கமே போய் இருக்கமாட்டேன்.  அந்த அளவிற்கு நான் ஐஸ்கிரீம் பைத்தியம். கொட்டற மழையில் கூட கிலோ கணக்கில முழுங்குவேன்.  இப்போது வயிறு full  , இருந்தாலும் plate நிறைய எல்லா flavourரிலும் எடுத்து கொண்டு வந்து அமர்ந்தேன். ஒரு ஸ்பூன் உள்ளே போனதுமே  திகட்டிவிட்டது.  

என்னடா பண்ண என்று ஒரே feeling . அதிரடியா செயலில் இறங்கினேன் . 10 நிமிடத்தில் காலியாகிவிட்டது. எப்படி தெரியுமா? மீல்ஸ் வரிசையில் மோர் மிளகாய் இருப்பதை பார்த்தேன், அப்புறம் என்ன? மிளகாய் ஒரு கடி, ஐஸ்கிரீம் ஒரு ஸ்பூன், plate காலி.   

இதை கவனித்த என் தோழியர் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர், பின் சுதாரித்து எனக்கு ஒரே பாராட்டு மழைதான் பின் அவர்களும் என் methodfollow பண்ண தொடங்கிவிட்டனர்.  எங்கள் அராஜகத்தை பார்த்த waiters ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தனர்.  வேறு என்ன செய்ய முடியும்...? நாங்கள் 10 பேரும் cute teens அல்லவா...!?

இப்போதும் ஏதாவது பார்ட்டியில் பபே என்றால் பழைய நினைவு வராமல் இருக்காது.  சுமைகள், வலிகள், வேதனைகள் இல்லாத,  அப்படி இருந்தாலும் எதை பற்றியும் கவலைபடாத, கல்லூரி வாழ்க்கை பருவம்  இப்போது நினைத்தாலும் இனிக்க கூடிய  ஒன்றுதான்.    


சனி, ஏப்ரல் 10

கள்ளக்காதல் தவறில்லை இறுதி பாகம்

ழுத தூண்டிய பெண்கள்:

நான் இந்த தலைப்பை தேர்ந்துஎடுக்க இரண்டு பெண்கள் தான் காரணம், அவர்களின் தூண்டுதலின் பெயரில்தான் இதை எழுதவே தொடங்கினேன்.  அவர்கள் இருவரும் எனது சிறிய அளவு COUNSELLING மூலமாக தங்களது வாழ்வை திரும்ப மீட்டெடுத்தவர்கள்.  இப்போது இடையில் வந்த புது உறவை மறந்து சந்தோசமாக இருக்கிறார்கள். 

கவுன்செலிங்   :   

ஒருவேளை மனதளவில் சிறிது தடுமாற்றம் இருந்தாலோ ,  அல்லது கவுன்செல்லிங் தேவைப்படும் நிலையில் என் தோழிகள் இருந்தால் தயங்காமல் எனது இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.   உங்களுக்காக காத்திருக்கிறேன்.   மேலும் உங்களது ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.  

வெளிவரமுடியாத ஒரு நிலை: 

சிலரின் விசயத்தில் இந்த உறவில் இருந்து வெளியில் வர முடியாத ஒரு நிலை ஏற்படும்
எப்போது என்றால் அந்த ஆண் அல்லது பெண் ஒருவர்மீது ஒருவர் முறையான கணவன் மனைவி மாதிரி பாசமாகவும், அன்பாகவும், விட்டு கொடுத்து வாழ்ந்தும்,  ஒருவர் மற்றவருக்காக உயிரை விட கூட தயாராக இருப்பார்கள்.   இவர்கள் விசயத்தில் மாற்றம் என்பது உடனே வராது ஆனால் இரண்டு  குடும்பங்களின் சூழ்நிலைகாகவும், குழந்தைகளுக்காகவும்,  மனசாட்சிகாகவும் விடுபட நினைத்தால் கண்டிப்பாக முடியும் .

அதே நேரம் மனம், உடல் இரண்டும் சேர்ந்து மாறவேண்டும்.  இதற்கும் ஒரு நல்ல தீர்வை என்னால் கொடுக்கமுடியும்.  ஆனால் இதை விளக்கமாக பதிவில் எழுத இயலாது மெயில் மூலமாக கேட்பவர்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன்.

பெண் ஒரு மாபெரும் சக்தி:

பெண் ஒரு சக்தி, அந்த சக்திஐ ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கு பயன்படுதிவிடகூடாது.  இதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்பது இல்லை.  பலரும் ஒத்து கொண்ட உண்மை.  பெண்களின் திறமைக்கும், தைரியத்திற்கும், விடாமுயற்சிக்கும் எவ்வளவோ சாதிக்கமுடியும்.  

அதை விட்டுவிட்டு இந்த மாதிரி வேண்டாத உறவில் ஈடுபட்டு காலம் முழுவதும் குற்றஉணர்ச்சியுடன் வாழ்வதை விட,  கிடைத்த வாழ்க்கையை மேன்மை படுத்தி நம்மை மற்றவர்கள் பெருமையாக பார்க்கும்படி, புகழும்படி வாழ்ந்து முடிக்க வேண்டும்.   இந்த உறவை பாவம் என்று சொல்லும் அதே நேரத்தில்  இந்த பாவம் நம் பிள்ளைகளை போய் சேரும் என்பதை தாய்மை உள்ளம் படைத்த நாம் மறக்ககூடாது.


எச்சரிக்கை :

மேலும் சிலர் சொல்லலாம் , " எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை, என் சந்தோசம் தான் முக்கியம் என்று " ,  அந்த மாதிரி ஆட்களை ஒன்றும் செய்ய முடியாது,  ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் என்னால் கொடுக்கமுடியும்.  

நவீன தொழில் நுட்பத்தில் வந்த கேமரா போன்,  இப்போது பெண்களை என்ன பாடுபடுத்தி கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்வதை விட மீடியாக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடியும்.  இனி சிம்கார்ட் அளவிற்கு மைக்ரோ ரெகார்டிங் சிப் வரபோகிரதாம்.   


செல்போனில் பேசுவதை  கூட ரொம்ப யோசித்து பேசவேண்டிய காலநிலையில் இருக்கிறோம்.   எல்லோருமே நல்லவர்கள்தான் பணத்தேவை, மற்றும் இதர தேவைகள்  இல்லாதவரை.  உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் ரகசியம் வெளியேறிவிடும்.  பிறகு பலநாள் திருடன் ஒருநாள் அகபடுவான் கதைதான்.    எதற்கு வம்பு உங்களை நீங்களே சந்தோஷ படுத்திக்கொள்ள  முடியும்,  அப்படி இருக்கும் போது மூன்றாம் நபர் எதற்கு?  

" பாதகம் ஏற்பட வாய்ப்பு இல்லை, இந்த உறவால் நான் திருப்தியாக இருக்கிறேன்" என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் கள்ளகாதல் தவறில்லை,  ஆனால் மற்றவர்களுக்கு?!




புதன், ஏப்ரல் 7

லவ் பேர்ட்ஸ் ன் விபரீதம்

எங்கள் வீட்டில்  உள்ள  lovebirds  கூண்டில்  ஒரு பெண் பறவை தொடர்ந்து 3  பருவங்களாக குஞ்சு  பொறித்து கொண்டு வந்தது.  முதலில் பானையில் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும்,  பின் குஞ்சுகள் சிறகு முளைத்து பானையை விட்டு வெளியே போய் பறக்கும் வரை  குஞ்சுகள் உடனே  இருக்கும்.   பிறகு மறுபடியும் அடுத்த 10 ௦ நாளில் முட்டை போட தொடங்கிவிடும்.   இது எங்களுக்கு  தெரியாதா எதுக்கு இந்த கதைன்னு நினைக்கிறீங்களா?   விபரீதமே இனி தான்........!

இந்த பெண் பறவை பொதுவா முட்டை போட்டும், குஞ்சுகளை 
வளர்க்கும் காலம் முழுவதும் பானையிலே இருக்கும்.    வெளியில் இருக்கும் நேரம் குறைவுதான்.    இப்போது 4 வது   முறையாக முட்டை போட தொடங்கியது.   அதனால் அதிகமாக வெளீயே வருவதில்லை.  பொறுத்து பொறுத்து பார்த்த  இதனுடைய ஜோடி அதாவது ஆண் பறவை இன்று திடீரென்று  பானையில் இருந்த எல்லா முட்டைகளையும் 
வெளியே தள்ளி உடைத்து விட்டது.  

எனக்கு பயங்கர அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்!!   என்னாயிற்று  இந்த பறவை இனங்களுக்கு?!   சந்தோசமா இருக்கிறத 
விட்டுட்டு இது என்ன தேவை இல்லாத வேலை என்ற  எண்ணம்    வந்துவிட்டதா தெரியவில்லை.    ஆனால் ஒருவிதத்தில்
அந்த ஆண் பறவையை பாராட்டலாம்,   தனது  ஜோடியை இப்பவரை மாற்றவில்லை.   கிட்டதட்ட இரண்டும் 
இன்றுவரை கணவன் மனைவி போல் தான் வாழ்ந்து வருகின்றன.

LOVEBIRDS  என்பதன் அர்த்தம் எனக்கு இப்பதான் புரிகிறது,  
உங்களுக்கு புரியவில்லை என்றால்  LOVEBIRDS  வளர்த்து  பாருங்கள்,  
காதல்  கண்ணை மட்டும் அல்ல மனதையும் சேர்த்து எப்படி குருடாக்குகிறது என்பது புரியும்!
by Kousalya                                                 
                                                             **********