Wednesday, April 28

10:55 PM
16


இந்த கேள்வியை  தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான் . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு,  அது பிரசவ வேதனையை  அனுபவிக்கும் அந்த நேரம்!   

நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் இல்லை.  நர்ஸ் வந்து செக்  பண்ணி விட்டு இந்த வலி போதாது இன்னும் கொஞ்சம் வலி வர வேண்டும், அப்போதுதான் குழந்தை பிறக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.  எனக்கு எப்படி இருக்கும்?!  இந்த வலியே உயிர்  போகுது, இதை விட அதிக வலி என்றால் எப்படி இருக்கும்,  நினைக்கும்போதே வலியுடன் இப்போது பயமும் சேர்ந்து விட்டது.  

என் உறவினர்கள் வேறு உட்காராதே அப்படியே மெதுவாக  நட என்று அன்பாக கட்டளை இட்டார்கள்.  என்ன செய்ய அனுபவஸ்தர்கள் சொல்கிறார்களே என்று பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடந்தேன்.     

வலியை அதிகரிக்க ஜெல் என்ற ஒன்றை வைத்தார்கள்,   வைக்கும்போது அது வேற  வித்தியாசமான ஒரு வேதனையாக  இருந்தது.  இது போதாது என்று குளுக்கோஸ் வேறு ஒரு கையில் ஏறி கொண்டு இருந்தது.  அதிகம் இல்லை ஒரு 5 பாட்டில் தான்.  ஒரு பாட்டில் முடிந்ததும் நர்ஸ் செக் அப்,  பின்னர் வாக்கிங், மறுபடி ட்ரிப்ஸ், மறுபடி செக் அப் இப்படியாக கிட்டத்தட்ட 36  மணி நேரம் கடந்தது.   இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விட்டேன்.  எப்ப குழந்தை பிறக்கும் என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. 

டாக்டர் மறுபடி ஜெல் முயற்சி பண்ணுவோம் என்று சொன்னார்கள்,  நல்ல ஹாஸ்பிடல் என்பதால் சிசரியன்  பற்றி யாருமே அங்கே  பேசவில்லை.  (எனக்கு தான் வேற இடம் போய் இருக்கலாம் என்று தோன்றியது) மறுபடி ஜெல் என்றவுடன் பயம் அதிகமாகி விட்டது.  

இந்த நரக வேதனையில் தான் என் மனதில் தோன்றியது " ஏண்டா பெண்ணாக  பிறந்தோம்? "  மனதில் தோன்றியதை வாய் விட்டு கதறி சொல்லிவிட்டேன்,  அதற்க்கு என் அத்தை ' என்ன செய்ய நம்ம தலை எழுத்து, அனுபவிக்கத்தான் வேண்டும் '  என்று அவர்களுக்கு தெரிந்த ஆறுதலை கூறினார்கள்.   எனக்கு அந்த கேள்வி மட்டும் அல்ல வேறு ஒன்றும் தோன்றியது, ' எதை எதையோ கண்டுபிடித்தோம் என்று பெருமை பட்டு கொள்கிறோமே,  வலி இல்லாமல் பிள்ளை பெறுவதற்கு ஒரு மாத்திரை மாதிரி எதையாவது கண்டுபிடிக்கலாம் அல்லவா என்பதுதான் அது'.   

என் கதறல்  தாங்காமல் கடைசியில் ஆபரேஷன் ரூமிற்கு அழைத்து சென்றார்கள். போவதற்கு முன் இனிமா என்ற வேறொரு இம்சை, அதையும் அனுபவித்தேன்.  ஆபரேஷன் செய்யலாமா இல்லை மறுபடி  ஜெல் வைக்கலாமா என்று அவர்களுக்குள் ஒரு ஆலோசனை நடந்தது,    அரைமணி நேரம் கழித்து சரியாக 40 மணிநேர அவஸ்தைக்கு பின் கடவுள் மனம் இரங்கி பெரிய வலியை  கொடுத்தார்.

என்னை சுற்றி பலர் இருந்தனர், வலி கூட கூட என் கதறலும் கூடுகிறது, பயத்தில் என் கைகள் உதவிக்காக அலைபாயுகிறது ,  தானாகவே என் கரங்கள் அருகில் இருக்கும் நர்சின் கையை பற்றி அழுத்தியது.  நெஞ்சின் படபடப்பு  அதிகரிக்கிறது, இதயம் அதிக ஆக்சிசனுக்காக துடிக்க என் திறந்த வாய் வேகமாக காற்றை உள்ளிழுக்கிறது. அருகில் இருக்கும்  நர்ஸ் என் காதருகில் வேகமாக உந்தி தள்ளுமாறு கூறினார்கள்.  

என் முழு உடலும் என் கட்டுபாட்டில் இல்லை,  என் கண்கள் நிலை குத்த, கைகள் பரபரக்க, இதயம் துடிக்க, நெஞ்சில் ஒரு பந்துபோல் ஏதோ வந்து அடைக்க, வேகமாக என் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி உள்ளிழுத்த காற்றுடன் அழுத்தம் கொடுத்து உந்தி தள்ள, இதோ என் குழந்தை பிறந்து விட்டது. என் அழுகை சத்தம் நின்று என் குழந்தையின் அழுகுரல் தொடங்கியது.   நான் மெதுவாக மூச்சை இழுத்து விட்டு இயல்பு நிலைக்கு வர தொடங்கினேன். (அந்த நேரத்திலும் அனிச்சையாக சினிமாவில் பார்த்த மாதிரி மயக்கம் வரும்  என்று கண்ணை மூடி பார்த்தேன், ஆனால் வரவில்லை) 

நர்ஸ் அருகில் வந்து 'உங்களுக்கு ஆண் குழந்தை' என்று சொன்னார்கள். எந்த குழந்தை என்றாலும் பரவாயில்லை , பிறந்தால் சரி என்றுதானே இருந்தேன். அதனால் மனதில் ஒன்றும் பெரிதாக பூ எல்லாம் பூக்கவில்லை,  நர்சிடம் சும்மா லேசாக சிரித்து வைத்தேன்.
 இன்னும் விட்டார்களா இந்த நர்ஸ்கள், என்னவோ இன்னும் சரியாக வெளியேறவில்லை என்று என்னை அடுத்த 20   நிமிடத்திற்கு பாடாய் படுத்தினார்கள், தையல் போட்டார்கள்.  என்ன மாதிரியான  விதவிதமான வேதனைகள், வலியில் இத்தனை விதங்களா?, அனுபவித்தேன் கொடூரமாக.....!

என்னே ஆனந்தம்:

இதற்குள் குழந்தையை சுத்தம் செய்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வைத்து என்னிடம் கொண்டு வந்து காட்டினர்.  மெதுவாக திரும்பி முகம் பார்த்தேன்...கடவுளே! இது என் குழந்தையா..?  இதன் தாய் நானா..?  நாந்தான் பெற்றேனா..? வெள்ளை துணியில் சிகப்பு ரோஜா மலராய் கண்மூடி என் அருமை மகன்... ! சின்ன சின்ன மணி விரல்கள், இதழ் பிரியா  மல்லிகை  மொட்டுபோல் உதடுகள்,  தாமரை இதழாய் கன்னம், மூடிய இமைக்குள் அலையும் கருவிழிகள்,  வர்ணிக்க வார்த்தைகள் தோணவில்லை,  ஆனந்தத்தில் எனக்கு போதை ஏறி சிறிது மயக்கம் வருவதுபோல் இருந்தது!

இதுவரை நான் அனுபவித்தது வலிகளா இல்லை, என் கண்மணியை தேடி கண்டுபிடிக்க நான் எடுத்த பிரயாசங்களா ....!? ஒரே வினாடியில் என்னை தாய் என்று உணர வைத்தான்.   பால் அருந்த என் அருகில் படுக்க வைத்தனர்,  என் ரத்தம் என் மகனுக்காக பாலாக மாறி அவனை அருந்த வைத்தது....!  பெண்மை எதுவென இந்த இன்ப வலியை அனுபவிக்கும்போது தான் உணருகிறேன்,  கடவுள் வரம் கொடுத்தால் மீண்டும்  பெண்ணாகவே பிறப்பிக்க வேண்டுவேன் என்பதை... !

பெண்களே இனி ஒரு முறை கூட கூறாதிர்கள் , ' ஏன் பெண்ணாய் பிறந்தேன் என்று '.


உண்மைதான் ," மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா "     
Tweet

16 comments:

  1. மிகவும் அருமையாக பெண்மையின் இயல்பை எழுதியிருக்கிறீர்கள்! ஒரு பெண் என்பவள் தாயாக மாறும் தருணம், அதன் பெருமை, வலிகள் எல்லாமே கவிதை வரிகளாய் வந்து விழுந்திருக்கின்றன!

    ReplyDelete
  2. ஒவ்வொரு பெண்ணும் இந்த வேதனையை அனுபவித்து சுகப்பிரசவம் ஆகும் தருணம் பேரின்பம்,அந்த சுகம் எந்த சுகத்திற்கும் ஈடாகாது.

    ReplyDelete
  3. அன்புள்ள கெள்சல்யா!

    உங்களுக்கு அன்புடன் நான் அளித்திருக்கும் விருதை கீழ்க்கண்ட இணைப்பில் வந்து பெற்றுக்கொள்ளவும்.

    http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post_28.html#comments

    அன்புடன் மனோ சாமிநாதன்

    ReplyDelete
  4. எனக்கு அன்பாக விருது கொடுத்து கௌரவபடுத்தின திருமதி மனோ சாமிநாதன் மேடம் அவர்களுக்கு என் அன்பான நன்றிகள் பல!

    தோழி ஆசியா ஓமர் அவர்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. //பெண்மையே இந்த இன்ப வலியை அனுபவிக்கும்போது தான் உணருகிறேன், கடவுள் வரம் கொடுத்தால் மீண்டும் பெண்ணாகவே பிறப்பிக்க வேண்டுவேன் என்பதை... //

    unmai. thaimyil penmai meendum pookirathu

    ReplyDelete
  6. நன்றி நண்பரே! ' தாய்மையில் பெண்மை மீண்டும் பூக்கிறது ' என்றதற்காக என் அன்பான நன்றி கலந்த பாராட்டுகள்!!

    ReplyDelete
  7. படித்ததும் என்ன சொல்வது ஒன்னுமே புரிய வில்லை. இப்படி கஷ்டப்பட்டு பெற்று விட்டு குழந்தையை தெருவில் வீசும் பெண்களும் இருக்கிறார்களே!!!. எப்படிதான் மனசு வருதோ ?.

    அருமையான பதிவு.

    ReplyDelete
  8. பகிர்தலுக்கு நன்றி.. ஒவ்வொரு தாயும், இது போல கஷ்டப்பட்டு தானே ஓர் உயிரை உலகுக்கு கொண்டு வருகிறாகள்... அதை உணர்ந்தால், எல்லா பெண்களையும் , பெண்மையையும் வணங்கதானே தோன்றும்...

    கண் கலங்க வைத்த பதிவு...

    ReplyDelete
  9. இதில் பெண்கள் வனங்கப்படவேண்டியவர்கள்

    ReplyDelete
  10. ரோஸ்விக் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. பதட்டமாகத்தான் இருந்தது...பதிவினைப் படிக்கும் போது.! பெண் வலுவானவள்....மேலானவள் என்று நான் அடிக்கடி கூறுவதும் இதனால்தான்....! பெண்மை மதிக்கப்பட வேண்டும் என்று சிறப்பித்து சொல்வதும் இதனால்தான்....

    ஆனால் அந்த வேதனைகள் ........உற்று நோக்கிப் போற்றப்படவேண்டியவை...! இதனால் தான் பெண் சக்தி ரூபம் என று பெண்ணைப் போற்றும் சாக்த வழிபாடு உருவானது.....


    உள்வாங்கிக் கொண்டேன் தோழி....மேலும் என்னை உற்று நோக்கி இது பற்றி இன்னும் விலாவாரியாக நான் எழுதுகிறேன்.....! புரிதலை இன்னும் கொஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான் படித்த முதல் அனுபவம் இது.....கோடி நமஸ்காரங்கள்...பகிர்வுக்கு!

    ReplyDelete
  12. பதட்டமாகத்தான் இருந்தது...பதிவினைப் படிக்கும் போது.! பெண் வலுவானவள்....மேலானவள் என்று நான் அடிக்கடி கூறுவதும் இதனால்தான்....! பெண்மை மதிக்கப்பட வேண்டும் என்று சிறப்பித்து சொல்வதும் இதனால்தான்....

    ஆனால் அந்த வேதனைகள் ........உற்று நோக்கிப் போற்றப்படவேண்டியவை...! இதனால் தான் பெண் சக்தி ரூபம் என று பெண்ணைப் போற்றும் சாக்த வழிபாடு உருவானது.....


    உள்வாங்கிக் கொண்டேன் தோழி....மேலும் என்னை உற்று நோக்கி இது பற்றி இன்னும் விலாவாரியாக நான் எழுதுகிறேன்.....! புரிதலை இன்னும் கொஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான் படித்த முதல் அனுபவம் இது.....கோடி நமஸ்காரங்கள்...பகிர்வுக்கு!

    ReplyDelete
  13. Superb post. Me too frequently said, why have i born as a woman, but the birth of my son i did not thought like that

    ReplyDelete
  14. உணர்ச்சிப் பூர்வமான பதிவு!

    பெண்மை, தாய்மை, தூய்மை. !!!

    இம்மூன்று வார்த்தைகளையும் முத்துக்களாக கோர்த்து முத்துமாலையாய் எங்களுக்கு வழங்கிய நீங்களும் ஒரு தாய் தான் எங்களுக்கு.

    தாய்மையின் மகோன்னதத்தை எடுத்துரைத்தமைக்கும், உணர்த்தியதிற்கும் நன்றி..!!

    ReplyDelete
  15. மிகச் சிறப்பான பதிவு.....

    உங்கள் பதிவினை எனது இன்றைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  16. மற்றொரு முறை பிரசவ அறைக்கு போன பீலிங். தத்ரூபமாக விளக்கிவிட்டீகளே தோழி! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...