செவ்வாய், ஏப்ரல் 20

9:44 AM
11

'தாம்பத்தியம்' என்ன ஒரு அழகான வார்த்தை,  இந்த வார்த்தைக்கு உண்மையில்  என்ன அர்த்தம் என்பது கூட பலருக்கு  தெரிய வாய்ப்பு இல்லை , அப்படி இருக்கும்போது இந்த தலைப்பில் நான் எழுதினால் எப்படி என்று எனக்குள் ஒரு தயக்கம்.  ஆனால் கணவன் மனைவி உறவு பற்றி சொல்லும்போது இதைவிட சிறந்த தலைப்பு வேறு இருப்பதாக எனக்கு தோணவில்லை. இந்த ஒரு வார்த்தை பலருக்கு பலவிதமா தெரியலாம். படிக்க  படிக்க உங்க வீட்டு கதை போலகூட தெரியலாம்.  


என்னடா ஆரம்பத்திலேயே இப்படி குழப்புறாங்க  என்று நினைக்காதிங்க  .  தாம்பத்தியம் கூட தொடக்கத்தில் தம்பதியருக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல  ஒரே குழப்பமாகத்தான் இருக்கும்.  போக போக முத்து எடுக்கத்தான் சம்சார சாகரத்தில் விழுந்திருக்கிறோம் என்பது புரியும்.  சிலர் எடுப்பது முத்தாக இருக்கும், பலருக்கோ வெறும் சிப்பியாக ஏமாற்றத்தில் முடிந்து விடுகிறது.  முத்தை மட்டும்தான் தேடவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துவிட்டால் ஏமாற இடம் இருக்காது. 


இந்த உறுதி இல்லாததால் தான் பலர் இன்று விவகாரத்திற்காக கோர்ட் படி ஏறுகிறார்கள்.
கோர்ட் வரை போக வழி இல்லாதவர்கள் அதாவது கெளரவம் பார்த்துகொண்டு ஏதோ வாழ்ந்து (மனதிற்குள் வெந்து)  கொண்டிருக்கிறார்கள்.


பிறப்பு ஒரு முறைதான் இந்த வாழ்க்கையும் ஒருமுறைதான்,  (ஏழு ஜென்மம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை,  அத்தனை ஜென்மம்  எடுத்தவர்கள் யாராவது உள்ளேன் ஐயா என்று சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்)  நம் வாழ்கை ஓட்டத்தை நாம்தான் நன்றாக ஓடி முடிக்கவேண்டும்.  அதற்கு கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் துணை இருக்க வேண்டும். அவ்வளவுதான்.


அப்போதுதான் இருவரின் ஓடு பாதையை  பின்பற்றி வரும் அவர்களின் வாரிசுகள் வெற்றி பெறமுடியும்.  அப்படி வெற்றி பெற்ற வாரிசுகளால் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கமுடியும்.  ஆக ஒரு நல்ல சமுதாயதிற்கு அடிப்படை நல்ல குடும்பம்.  சமூகம் சரி இல்லை என்று குறை கூறுபவர்கள் முதலில் தங்களது வீடு சரியாக இருக்கிறதா என்று பார்த்து அதை சரி செய்தாலே போதும்.


எதிர்பார்ப்புகள் :


முரண்பாடுகள் நிறைந்ததுதாங்க வாழ்க்கை. கல்யாணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே பலவித எதிர்பார்ப்புகள் ஒருவர்மேல் ஒருவருக்கு இருப்பது தப்பு கிடையாது ஆனால் நம்முடைய எண்ணம் போலத்தான் இருக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பது ஒரு விதத்தில் ஆர்வகோளாறுதான்.  ஒரே  கருப்பபைஇல் வளர்ந்து பிறந்த குழந்தைகளின் செயல்களிலேயே வேறுபாடு இருக்கிறப்ப வேறுவொரு சூழ்நிலையில் வேற குடும்ப பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த துணையிடம் மட்டும் ஒத்த எண்ணங்கள் இருக்கணும் என்று நினைக்கிறது எப்படிங்க சரியாயிருக்கும்.   


நான் தொழிலில் பெரிதாக சாதித்தேன்,  கம்பெனிஐ  உயர்த்த கடினமாக உழைத்தேன் பொருளாதாரத்தில் உயர்ந்த  இடத்தில் இருக்கிறேன், நான் வெற்றியாளன் என்று  பெருமையாக சொல்லலாம்,  ஆனால் அதை மட்டுமே முழு வெற்றியாக கருத முடியாது. உங்கள் குடும்ப வாழ்க்கை  வெற்றிகரமாக நடக்கிறதா என்பதற்கு சரியான பதில் உங்களிடம் இருக்கிறதா?  உங்கள் பதில் ஆம் என்று இருந்தால் மட்டுமே நீங்கள் முழு வெற்றியாளன்.  இல்லை என்று இருந்தால் நீங்கள் வெற்றி என்று நினைப்பது வெறும் கானல் நீர்தான்.     குடும்ப வாழ்வில் நிறைவு பெறாமல் அந்த சந்தோசத்தை உணராமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா.......?


பொதுவா எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலே வாழ்க்கை சுவைக்காது.  ஆற்றின் நீரோட்டத்தை போல இயல்பா இருக்கணும்.  பள்ளம் இருந்தால் இறங்கியும் மேடு வந்தால் மேட்டில் ஏறியும் மண்ணின் நிறத்திற்கு ஏற்ப தனது நிறத்தை மாற்றியும் ஒரே சீராக ஓடி கடலில் சேரும் ஆறு போல இருக்க ஏன் சில பெண்களால் முடிவது இல்லை என்று தெரிவது இல்லை.  


என் குடும்பம்: 


எனது குடும்பத்தை எடுத்து கொண்டால் எனக்கும் என் கணவருக்கும் பல விசயங்களில் கருத்துகள் ஒத்து போகாதுதான், இருந்தாலும் எது எல்லாம் ஒத்து வரவில்லை என்று உட்கார்ந்து பட்டியல் போட மாட்டோம்.  ஒரு சில நேரங்களில் என் கருத்தை அவரும் அவர் கருத்தை நானும் ஏற்று கொண்டு விடுவோம்.  வேற வழி......! குடும்பத்தில் சந்தோசம் நிலைக்கனும் என்றால் இந்த மாதிரி small adjustment
செய்துதான் ஆக வேண்டும்.  


அப்படி எல்லாம் முடியாது என்று வாதம் செய்து கொண்டிருந்தால் வார்த்தைகள் தடிக்கும், மோதல் அதிகரிக்கும், இறுதியில் நாலு சுவத்துக்குள் பாராமுகம்.  பெண்களாகிய நாம் வாதத்திற்கு சளைத்தவர்கள் இல்லை, மூச்சுவிடாமல் ஒரு மணி நேரம்கூட பேசுவோம்,  அத்தனையையும்  பொறுமையாக ஆண்கள் கேட்பார்கள் ஆனால் இறுதியாக அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையில் நாம் துடித்து போய்விடுவோம்.  பதில் சொல்ல தோணாது, அப்புறம் எதற்காக சண்டை என்பதை மறந்து விட்டு என்னை பார்த்து இப்படி சொல்லி விட்டாரே  என்று மனம் ஒடிந்து போனதுதான் மிச்சம்.  


வேற்றுமையில் ஒற்றுமை


நான் இந்திய நாட்டில் பல இன, மொழி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் எல்லோரும் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்று இருக்கிறோம் அல்லது ஒற்றுமையாய் இருப்பதுபோல் தோன்றுகிறோம் இல்லையா.....?   அதைபோலத்தான் குடும்பமும் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும்,  வெளியில் இருந்து பார்க்கும்போது ஒற்றுமையாக இருப்பது போலாவது தெரியவேண்டும்.  அப்போதுதான் மூன்றாம் நபரின் தலையீடு என்பது குடும்பத்திற்குள் இருக்காது.  (நானும் கள்ளகாதல் என்ற தலைப்பை எழுத வேண்டிருக்காது)   அந்த மூன்றாம் நபர் ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


கணவரை பற்றி எப்போதும் குறைச் சொல்லிகொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணியிடம், ' குடும்பம்னா அப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க,  அவர் நடந்துக்கிற விதம் பிடிக்கலைனாலும் பிடிச்சமாதிரி இருந்துகோங்க, அப்பதான் பிரச்சனை வராதுன்னு'  சொன்னதுக்கு அந்த பெண் கொஞ்சங்கூட யோசிக்காம, ' அப்ப என்னை நடிக்க சொல்லுறீங்களா, எனக்கு வேஷம் எல்லாம் போட தெரியாது' ,  என்று கன்னத்தில அறைந்த மாதிரி சொல்லிட்டாங்க.   இப்படி சொல்லும் இவர்கள் யதார்த்தம் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத அறிவிலிகள் என்றுதான்  சொல்வேன்.


எது நடிப்பு.....?  ஷேக்ஸ்பியர் சரியாதான் சொன்னார், ' உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்',  இது சத்தியமான வார்த்தை.  நம் அன்றாட வாழ்வில் யார்தான் நடிக்கவில்லை, என்னிடம் பேசிய அந்த பெண்ணையும் சேர்த்துதான் சொல்கிறேன்.  நாம் கடவுளிடம் கூட, " நான் ஒரு பாவமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்த சோதனை" என்று கேட்கும்போது நடிக்கிறோம்.  பணிபுரியும் இடத்தில் மேலதிகாரி மேல் நமக்கு ஏதாவது கோபம் இருந்தாலும் வெளி காட்டிகொள்ளாமல், சிரிச்சிட்டே அவர் வரும்போது எழுந்து வணக்கம் சொல்லும்போது நடிக்கிறோம்,  பிடிக்காத உறவினர்கள் வீட்டிற்கு  வந்தால் சந்தோசமாக வரவேற்று நடிக்கிறோம், இதை மாதிரி உதாரனங்களை சொல்லிட்டே போகலாம்.  முக்கியமா எல்லோரிடமும் நான் ரொம்ப பெர்பெக்ட் என்ற மாதிரி ஒரு முகமூடியை  அணிந்துகொண்டு நடிக்கவில்லையா?      


அனைவருக்குமே மற்றவர்களின் முன் சிறப்பாக நடக்கவேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இருக்கும்.  அதேபோல் பெண்களுக்கு, நம் கணவரின் முன்னால் நல்லவிதமாக அவருக்கு பிடித்த  மாதிரி நடக்க வேண்டும் என்று ஏன்  தோன்றுவது இல்லை.
குடும்ப பிரச்சனைகளுக்கு பெண்கள் மட்டுமே காரணம் இல்லை.  நான் ஏன் முதலில் பெண்களை வைத்து மட்டும் சொல்கிறேன் என்றால் நல்லவிதமாக எடுத்து சொன்னால் அவர்கள் புரிந்து கொண்டு திருத்திகொள்வார்கள்,  ஆனால் ஆண்கள்..........!  


அடுத்த பதிவில் இன்னும் அதிகமாக பகிர்கிறேன் ,  காத்திருங்கள்....... 



Tweet

11 கருத்துகள்:

  1. சனியா தொடர்பான பதிவில்:

    //இந்தியாவில் ஆம்பளையே கிடைக்கலையா//
    // இந்தியாவின் ஒட்டு மொத்த கசப்பான பாகிஸ்தான்//

    மொத்த கட்டுரையும் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இந்த இரண்டு வரிகளும் அதீதமாய் படுகிறது. இந்த இரண்டு கருத்துகளும் மிக மோசமான பார்வைகள். முதல் வரி ஒரு பெண்ணிற்கெதிரான கடுமையான வன்முறை என்பது உங்களுக்கு புரியாமல் போனது ஆச்சர்யம். இரண்டாவது இந்திய பாகிஸ்தானிய பிரச்சனை முழுக்க முழுக்க அரசியலானது.. இதில் வெகு மக்களுக்கு ஏறக்குறைய தொடர்பில்லை.
    *****************
    தாம்பத்தியம்: எளிய, சிறந்த சரளமான நடை! அழகான உதாரணங்களுடன் ஆரம்பித்துள்ளீர்கள். சிறப்பாக வர வாழ்த்துக்கள்.
    ***************
    அந்த படம்: பிளாஸ்டிக் குடத்துக்குள் அலையும் மீன்கள் என்பது சரிதானே!
    ***************

    பதிலளிநீக்கு
  2. தாம்பத்தியம்,நல்ல அருமையான இடுகை.தொடர்ந்து எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள்.போட்டோ அருமை.என்னால் எதுன்னு கணிக்க முடியலை.

    பதிலளிநீக்கு
  3. asiya omar மிக்க நன்றி தோழி. உங்களின் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்கிறேன். அந்த படம் பிளாஸ்டிக் குடத்துக்குள் நீந்தும் கலர் மீன்கள். எனது 10 வயது மகன் எடுத்தது, உங்களின் பாராட்டை அவனுக்கு சமர்பித்துவிட்டேன். சந்தோசமா?

    பதிலளிநீக்கு
  4. adhiran உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அந்த படத்தை மிக சரியாக கணித்ததற்காக என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள கெளசல்யா!

    ‘ தாம்பத்யம் ‘ பற்றிய கருத்துக்கள் அருமை! அழகான, சரளமான நடை!
    நல்ல எழுத்து வன்மை! வாழ்த்துக்கள்!
    தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி மேடம், உங்களின் அன்பும் ஆதரவும் என்னை இன்னும் அதிகமாக எழுத தூண்டுகிறது. உங்களின் பதிவை பார்த்தேன், மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் அனுபவம் அதில் தெரிகிறது. தொடர்ந்து பேசுவோம் மேடம்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான இன்றைக்கு தேவையான பதிவு .தொடர்ந்து எழுதுங்கள் . படம் மிக அருமை

    பதிலளிநீக்கு
  8. என்ன ஒரு அருமையான கட்டுரை இது எல்லோராலும் அதாவது எல்லா குடும்பஸ்தவர்களாலும் அவசியம் படிக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்... மிக பயனுள்ளது நானும் நிறைய பேருக்கு இந்த LINK அனுப்பிஉள்ளேன்.... நல்லாவே எழுதிரிக்க்ரீர்கள்... இப்போதுள்ள பெண்கள் என்ன நினைகிறார்கள் என்பதை சுட்டி காட்டினீர்களே அது மிக மிக பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. கவுசல்யா ரொம்ப அருமையான சப்ஜெக்ட் எடுத்து அழகான ஒரு பயணத்தை வழிகாட்டி இருக்கீங்க.

    எல்லோரும் சொல்ல நினைப்பதை ஒன்றாக சொலல் முடியாது, அந்த விதத்த்தில் உங்கள் ட்தொடர் அனைத்து தம்பதிகளுக்கும் வழிகாட்டியாக் இருக்கும்.

    நேரமில்லாததால் படிகக் முடியாமல் போய் விட்டது .

    ஓவ்வோரு முறை நீஙக்ள் பதிவு போடும் போது முன்பைய பதிவ படிச்சிட்டு தான் படிக்கனும் என்று விட்டேன். அபப்டியே 9 பதிவு சேர்ந்து விட்டது.

    நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான தொடக்கம் மேடம்,

    நான் இன்று மிகுந்த மனசோர்வுடன், சிக்கலுக்கு தீர்வு கிடைக்காதா என்று...அலைபாய்ந்து கொண்டிருந்தேன்...

    கூகுலில் தேடும்போது இந்த பதிவு காணக்கிடைத்தது..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...