Tuesday, July 17

11:12 AM
33

இந்தியாவுல இருக்கிற நாலு பெரிய சிட்டிகள்ல வளர்ந்த காரணத்தால சென்னை தெரியும், மும்பை, கொல்கத்தா போயாச்சு...இந்த டெல்லி மட்டும் ரொம்ப நாளா பிடிபடாம இருந்துச்சு!! (இருக்குற ஏழு கண்டங்கள்ல 6 பார்த்துட்டேன் ஒன்னும் மட்டும் பார்க்கலன்னு சொல்ற மாதிரி என்னா ஒரு பில்ட்அப் !!கண்டுக்காதிங்க)டெல்லிய பார்க்கவும்  ஒரு வேளை வந்தது...கிளம்பிட்டேன்.

வெளியூர் எங்கேயாச்சும் போயிட்டு வந்தா ஒரு போஸ்ட் போடனுமாம். " நாம பதிவர்கள் அதனால  அனைத்தையும் பதிவு பண்ணியே ஆகணும்" னு ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியை பல நாள் பல தொடரா போடுற நண்பர் ஒருத்தர் போன்ல மிரட்டல் விட்டார். எனக்கு பயண கட்டுரை மாதிரி எழுத வராது. அதனால பயணத்தில் என்னை பாதித்த விசயங்களை மட்டும் இங்கே பதிகிறேன். 

ரசித்தேன்

அழகுனா அழகு அவ்ளோ அழகு !! என்னனு கேட்குறீங்களா ?! வடநாட்டு பெண்களைத்தான் சொல்றேன்...!! வழியெங்கும் அவங்களை திரும்பி திரும்பி ரசிச்சு பார்த்துட்டே இருந்தேன்...சலிக்கவே இல்லை...அசரவைக்கும் கோதுமை நிறம் அழகுதான்...ஆனாலும் அவங்க பண்ணுற ட்ரெஸ்ஸிங், அதுக்கு பொருத்தமா ஹேர் ஸ்டைல், லிப்ஸ்டிக் அசத்துறாங்க போங்க !! நாள் பூரா பார்த்துகிட்டே இருக்கலாம்...ஜீன்ஸ்,லெக்கின்ஸ் (சில டிரஸ் பேர் வேற தெர்ல) அப்டி இப்டின்னு எந்த டிரெஸ் போட்டாலும் கன கச்சிதமா இருக்கு...மாடர்னா இருக்கிறோம் அப்டின்ற அலட்டல் சுத்தமா தெரியல...ரொம்ப இயல்பா இருக்காங்க... என்னை அதிகமா பாதிச்சது முதல்ல இந்த அழகு பெண்கள் தான்!!

சிலிர்த்தேன்

ஷேர் ஆட்டோல ஒரு பயணம், வண்டில பயங்கர சத்தமா லாலாக்கு டோல் டப்பிமா ரேஞ்சுக்கு சாங்க்ஸ் அலறுது !! ஹிந்தினாலும் புரியும்(?) இது பஞ்சாபி  போல...ஒரே டமால் டிமில்னு சவுண்ட் !! கண்ட்ரோல் பண்ணி அமைதியா இருந்தேன், திடிர்னு நம்ம கொலைவெறி சாங்...அப்டியே மெய் சிலிர்த்து போச்சு... வண்டில இருக்கிறவங்க  உற்சாகமா தலையாட்டி கூடவே பாடுறாங்க...அப்போ சொல்ல தோணிச்சு ' இது எங்க ஊரு பாட்டுங்க' !! முதல்ல வண்டில  ஏறியதும்  ஒரு பொண்ணு "நீங்க மராட்டியா?" னு கேட்டா. நான் "இல்ல மதராசி" ன்னேன். அவ இப்போ "நீங்க மதராசி தானே கொலவெறினா  என்ன மீனிங் ?" நான் என்ன பதில் சொன்னேன்னு இங்க சொன்னா நீங்க அடிக்க வந்துடுவீங்க !

ஆனா பாருங்க இந்த பாட்டால தமிழ் மொழி அழிஞ்சு போய்டும் அப்டி இப்டி நு ஆளாளுக்கு சொன்னாங்க...(ஒருவேளை பாட்டு ஹிட் ஆகலைனா சொல்லி இருக்க மாட்டாங்கலோ ?!) தமிழ் பாட்டுன்னு தான் இந்த பாட்டு உலகம் எல்லாம் சுத்தி வருது...எப்படியோ இப்படி நம்ம தமிழ் வளருது(?)னு, தமிழுக்கு இப்படி ஒரு அடையாளம்னு மனசை தேத்திப்போம்...!

விழுந்தேன்

மெட்ரோ ட்ரெயின்ல போய் சுத்தி பார்க்கலைனா டெல்லி வந்ததே வேஸ்ட்னு பிரண்ட் சொல்ல, சரி போயிடுவோம்னு முடிவு பண்ணினோம்...ஏற்கனவே கொல்கத்தாவுல மெட்ரோ ட்ரைன்ல போன பழக்கம் இருக்கிற தெம்புல இருந்தேன். ஆனா அங்க ஒரு கண்டம் எனக்கு காத்திருக்குனு தெரியாம போச்சு...எஸ்கலேட்டரில் பல முறை போன அனுபவம் வேற இருக்கேனு ரொம்ப மிதப்பா காலை வச்ச அடுத்த நொடி உலகமே சுத்திச்சு...அட ஆமாங்க, எஸ்கலேட்டேர் மேலே போயிகிட்டே இருக்கு...ஆனா நான் மட்டும் மேலே போகல...என் உடம்பு அப்டியே பின்னாடி சாயுது...ஏன்னு ஒன்னும் புரியல...கைபிடிய இருக்கமா பிடிச்சும் நழுவிகிட்டே போகுது...ஒரு அடிக்கும் குறைவான இடைவெளியே இருக்கு என் தலை கீழே விழ...கிட்டத்தட்ட மல்லாந்து படுத்த மாதிரி ஒரு போஸ்...! என் பையன் மேலே போயிட்டு 'வாம்மா' ங்கிறான் என் நிலமை புரியாம...டக்குனு எஸ்கலேட்டேர் நின்னுடுச்சு...ஆ! னு ஒரே சத்தம், என்னடா கத்த வேண்டிய நான் கத்தல, வேற யார் கத்துரானு திரும்பி பார்த்தா பின்னாடி நாலு ஸ்டெப்ஸ் தாண்டி வரிசையா மூணு பேரு ஒருத்தர் மேல ஒருத்தர் மல்லாந்து விழுந்து கிடந்தாங்க...(பிரச்னை எங்கனு இப்பவரை புரியல !)

எழுந்தேன்

எஸ்கலேட்டேர் நின்ன பிறகும் என்னால முன்னோக்கி எழ முடியல...அப்போ மேலே இருந்து ஒருத்தர் இறங்கி வந்து கை நீட்டினார். 'தெய்வமே'னு டக்குனு அவர் கையை பிடிச்சிட்டேன்...அப்டியே தூக்கி நிக்க வச்சுட்டார்...'தேங்க்ஸ்'னு நான்   சொல்ல, பதிலுக்கு அழகா ஒரு ஸ்மைல். அவ்வளவு தான் போயே போய்ட்டார்...(டெல்லில  ஆண்களும் அழகுதான் !!):)

'ஏம்மா பார்த்து வர கூடாது, இப்டியா விழுவீங்க,வெரி பேட்' னு சொல்லி என் பையன் ஒரு லுக் விட்டான் பாருங்க...டெல்லி மெட்ரோ ட்ரெயின் காலத்துக்கும் மறக்காது !! 

வியந்தேன் 

ஊர் சுத்தமா பளிச்சுனு இருந்தது. எங்கும் குப்பையே இல்லை. (நான் பார்த்தவரை) துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்ற போர்ட் இருந்தது ரொம்ப பிடிச்சது....அதை மக்கள் சரியா பாலோ பண்ணுவதை  பார்த்து வியப்பா இருந்தது. அப்புறம் வழியெங்கும்  யூகலிப்டஸ் மரங்கள் (இந்த மரத்தின் மற்றொரு முகம் அங்குள்ள மக்களுக்கு தெரியுமா தெரியல!) நிறைய கண்ணில் பட்டது. நொய்டாவுல இருக்கும் போது ஷாப்பிங் போற வழியில ஒரு ரோட்டை காட்டி "இது நொய்டா(உ.பி), இதை தாண்டினா இதோ இது டெல்லி"னு பிரண்டோட கணவர் கை காட்டி சிரித்துக்கொண்டே சொன்னப்போது ரசித்து வியந்தேன்...சில அடி தூர இடைவெளியில் இரு மாநிலங்கள்! ஆம், எல்லைகள் இருக்கின்றன, அவை மனிதர்களை பிரிப்பதில்லை.....ஆனால் அவனாக சாதி மதம் இனம் என்று பாகுபாடு பார்த்து பிரிந்து நிற்க்கிறான் என்று மனதிற்குள் ஒரு ஆதங்கம் மின்னலாய் தோன்றி மறைந்தது.

மொத்ததுல ஊர் ரொம்ப பிடிச்சது...நிஜாமுதீன், மயூர் விஹார், ராஜீவ் சௌக், சாந்த்னி சௌக், கரோல் பாக், நொய்டா, கிரேட்டர் நொய்டா, மதுரா,ஆக்ரா, இந்த பெயர்கள் மட்டும் நல்லா மனசில பதிஞ்சு போச்சு.

நெக்ஸ்ட் செங்கோட்டை ! அங்க போனதும் ஒரு மிடுக்கு(!) ஓடிவந்து ஒட்டிகிச்சு. அதன் கம்பீரம் அத்தனை அழகு...அப்புறம் மதுரா,அங்க இங்கே சுத்தி அப்படியே யமுனா நதி கரையோரமா போயாச்சு...அங்கே அமைதியாய் தாஜ் மஹால் !!

கரைந்தேன் 

ரொம்ப நாளாக போகவேண்டும் என்று விரும்பிய இடங்களில் ஒன்றான தாஜ்மஹாலை அவ்ளோ பக்கத்துல பார்த்ததும் சந்தோஷத்தில் கொஞ்ச நேரம் பேச்சே வரல...என் மகனுக்கு இதன்  வரலாறை  சொல்லிக்கொண்டே கட்டிடத்தின் பிரமாண்டத்தை பார்த்து வியந்து கொண்டிருந்தேன்...அருகே செல்ல செல்ல இனம்புரியாத ஒரு பரவசநிலை...

ஷாஜஹான் மும்தாஜ் உறங்கும் இடத்தை அடைந்ததும் அதுவரை மனதிற்குள் வியந்த கட்டிடத்தின் பிரமாண்டம், கலை அழகு, கம்பீரம் எல்லாம் மறைந்து ஒரு ஆழ்ந்த அமைதி என்னைச்சூழ  அப்படியே நின்றுவிட்டேன்...ஒரு சிலருக்கு இது சமாதியாக, சிலருக்கு உலக அதிசயமாக, சிலருக்கு கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக, சிலருக்கு காதல் சின்னமாக  இருக்கலாம்...இரு உள்ளங்களின் நேசங்களின் சங்கமம் இது. அந்த உணர்வை உள்வாங்கும் போதே மனிதனாய் பிறந்ததின் பொருள் புரியலாம்...அமைதியாக ஒரு தியான நிலைக்கு மனதை கொண்டு வந்து பார்த்தால், 'ஆண் பெண் கொள்ளும் நேசம் மட்டும் பெரிதில்லை காணும் அத்தனை உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற பாடத்தை தாஜ்மஹால் நம் காதோரம் சொல்லி தருவதை தெரிந்து கொள்ள முடியும்.உணரமுடியும் நான் உணர்ந்தேன்.  கண்களால் பருகி மனம் முழுதும் நிறைத்தேன் !! நரம்புகளில் குளிர் புன்னகை ஓடி உள்ளத்தை குளிர்வித்ததை அனுபவித்தேன்...உயிர்த்தேன்...மகிழ்ந்தேன்...!

பிறரிடம் பகிர இயலாத ஏதோ ஒன்றை வெற்றிகொண்ட நிறைவு !! 

திகைத்தேன்

வந்தவர்களில் பலரும் தாஜ்மஹால் முன் நின்று புகைப்படம் எடுப்பதில் தான் தீவிரமாக இருந்தார்கள்...உலக அதிசயம்னு சொல்றாங்களே அப்டி என்ன இதில் இருக்கிறது அதை பார்ப்போமே என்ற ஆர்வம் அவர்களிடம் அவ்வளவாக தெரியவில்லை. எந்த இடத்தில் நின்றால் புகைப்படம் நன்றாக அமையும் என்ற கவனம் தான் இருந்தது...அனேகமாக இன்றைய தினத்தில் எல்லோரின் கையிலும் ஏதோ ஒரு ரூபத்தில் காமரா. படமாக எடுத்து தள்ளுகிறார்கள்...

கண்களால் ரசிக்க வேண்டிய காட்சிகளை நிழல் படமாக்கி கொள்வதில் அந்த காட்சி அன்னியமாகிவிடுகிறதே...கண் வலிக்கும் வரை பார்த்து பார்த்து ரசிக்கவேண்டும்...இன்றே வாழ்வின் கடைசி நாள் என்பதை போல சுற்றி இருக்கும் அழகை எல்லாம் ஆசை தீர அள்ளி பருக வேண்டும்...

பல வருடங்களாக பாடுபட்டு உருவாக்கிய ஒரு அழகை, அற்புதத்தை, அரிய பொக்கிஷத்தை அவசர அவசரமாக பத்து நிமிடத்தில் சுற்றி வருவதற்கு ஏன் அவ்வளவு தூரம் போவானேன்...புகைப்படத்தில் பார்த்துகொண்டால் போதுமானது...மனிதனின் இயந்திரத்தன வாழ்க்கை அழகை ரசிப்பதற்கும் அவசரப் படுகிறது !!

                           என்ன ஒரு கம்பீரம் !! (வண்டில போகிறபோது அப்டியே ஒரு கிளிக்)
தொலைத்தேன் 

வெளியூர் சென்றும் என்னுடன் போனில் தொடர்பு கொண்டு விசாரித்த பதிவுலக தம்பியர், அண்ணன்கள், நட்புகள் அதிலும் 'நீ ஜப்பான் போனாலும்(?) கால் பண்ணி பேசுவேன்'னு மிரட்டி ஒரு மணி நேரம்(ரோமிங்!!) :) பேசிய என் நெருங்கிய நண்பர் இவர்கள் எல்லோரும் அங்கிருந்த நாட்களுக்கு மேலும் வண்ணங்களை சேர்த்தார்கள்!!

எல்லாம் நல்ல படியாத்தான் போச்சு என் மொபைல் தொலையும் வரை...தொலைஞ்ச பத்தாவது நிமிஷம் தெரிஞ்சவங்க ஒருத்தர் போன்ல இருந்து என் கணவருக்கு கால் பண்ணினேன்..."உன் நம்பருக்கு அடிச்சு பார்த்தியா?"னு கேட்டார். "ஆமாம்ங்க , நாட் ரீச்சபிள் வருது" னேன். "அப்டியா சரி விடு யாரோ எடுத்துடாங்க, எடுத்ததும் சிம்மை கழட்டி இருப்பாங்க, மறந்துட்டு ரிலாக்ஸா கிளம்பி வா...இங்க நீ வர்றதுக்குள்ள வேற போன் ரெடி பண்ணிடுறேன்" என்றார்.. அவர் சொல்லிட்டார். ஆனா எனக்கு மனசு கேட்கல...எல்லோரோட நம்பரும், சில முக்கியமான தகவல்களும் போச்சேனு ஒரே பீலிங். சரி போகட்டும், இனி புதுசா முதல்ல இருந்து தொடங்கலாம்னு சமாதானம் பண்ணிகிட்டேன்.(வேற வழி ?!)

கேளுங்களேன் 

பக்கத்துக்கு ஊரோ, தூர ஊருக்கு பயணமோ எதாக  இருந்தாலும்  பயணங்கள் இனிமையானவை. பிரயாணத்துல இருக்கும் போது சிலர் 'வீட்ல கதவை சரியா பூட்டினமா , கேஸ் மூடினமா' யோசிக்க ஆரம்பிச்சு மறுபடி வீடு வந்து எல்லாம் சரியா இருக்குனு தெரியும்  வரை அதை பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்க. பயணம் எதுக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் நாம் பயணிக்கும் அத்தருணம் நமக்கானது மட்டும் தான். அந்த நேரத்தில் உங்களை உற்சாகபடுத்தி கொள்ள தவற விட்டு விடகூடாது... செல்லும் பாதையெங்கும் கொட்டி கிடக்கும் இயற்கையை ரசியுங்கள், உள்வாங்குங்கள்...அருகில் அமர்ந்திருக்கும் சக மனிதரை சிறு புன்னகையால் சிநேகியுங்கள். சுற்றுலா செல்வதென்றால் காட்சிகளை கேமெராவில் அள்ளுவதை குறைத்துக் கொண்டு இயற்கை அழகை, காட்சிகளை கண்களால் நன்றாக பருகுங்கள்... ஒவ்வொரு பயணமும் மறக்ககூடாததாக மாறட்டும்...மாறும் !! 

பிரியங்களுடன்
கௌசல்யாTweet

33 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...