செவ்வாய், ஜூன் 26

கொஞ்சம் உதவி செய்யுங்கள்...! ஞானாலயா

இணையதளங்கள் இன்று பலராலும் கூர்ந்து கவனிக்க படுகிறது, விமர்சிக்க படுகிறது...இங்கே உள்ள தகவல்கள், துணுக்குகள், போன்றவை பத்திரிகைகள், தினசரிகளில் பகிரபடுகிறது. இப்படி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...! இத்தகைய இடத்தில் இருக்கும் நமக்கு, நல்லது செய்ய ஒரு வாய்ப்பு  கிடைத்தால் செய்யாம இருக்கலாமா?! வேற யாருக்கும் உதவி கேட்கல, நம்ம தமிழுக்காகத் தான் கேட்கிறேன்...'அப்படி என்னங்க ஆச்சு  தமிழுக்கு' ன்னு நீங்க பதறினா நிச்சயம் உதவி செய்வீங்க தானே...?! இப்ப தமிழுக்கு ஒன்னும் ஆகல, (ஏதோ  அப்டி இப்டின்னு ஓரளவு பெட்டரா இருக்குது ?!) ஆனா தமிழை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே...! தமிழ் தமிழன்னு சொன்னா மட்டும் போதுமா இந்த தமிழுக்காக இதுவரை நாம என்ன செஞ்சிருக்கோம் ?! செய்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு...தமிழ் நன்றாக நிலைத்து வாழட்டும் நம் தலைமுறை தாண்டியும்...! அதிகம் யோசிக்காம கை கொடுங்க...! எப்படின்னு புரியலையா...சரி நான் இத்தோட முடிச்சிகிறேன்...தொடர்ந்து படிங்க...புரியும் !
கழுகு இணைய தளம் ஒரு பதிவு வெளியிட்டது...அதனை இங்கே அப்படியே பகிர்கிறேன்...படித்து கழுகின் லிங்க் சென்று எடுத்து நீங்களும் பகிருங்கள் பலரையும் சென்றடையட்டும்...நன்றிகள் !

                                                                         * * * * *
நமது சந்ததியினருக்கு நம் வாழ்க்கைமுறையை அறியும் வாய்ப்பை விட்டுச் செல்வது எழுத்து ஒன்றினாலே சாத்தியம். அப்படி தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணங்களாக விளங்கப்போகும் எண்ணற்ற நூல்களை பாதுகாக்கும் ஒரு கடமை நமக்கு காத்திருக்கிறது. 

புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா மற்றும் அவரது துணைவியார் திருமதி டோரத்தி அம்மாள் இருவரும் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்து தமிழனின் ஒப்பற்ற வரலாற்றின் பாகங்களை சுமார் 90,000க்கும் மேற்பட்ட பழைமையான நூல்களாகவும், சிற்றிதழ்களாகவும், அரிய கடிதங்களாகவும் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதற்காக தங்களது வாழ்நாளில் ஈட்டிய பொருளை எல்லாம் அதைப் பராமரிக்கக் கொட்டி கொடுத்து இருக்கின்றனர்.  

தங்களின் பணிக்காலம் முடிந்த பின்பு கிடைத்த ஓய்வூதிய பணத்தால் ஞானாலயா என்னும் மிகப்பெரிய, தமிழகத்தின் அளவில் இரண்டாவதும் அறிவில் முதலாவதுமான புத்தக சேகரத்தை புதுக்கோட்டையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

அரசினையும், அரசியல் தலைவர்களையும் அவர்கள் முட்டி மோதி இந்த மிகப்பெரிய நூலகத்திற்கு எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை. 70 வயதுகளைக் கடந்திருக்கும் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் இதற்காக சில தனியார் நிறுவனங்களை அணுகியபோது அவர்கள் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் தங்களின் வியாபார நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி திட்டமாக முன் வைத்திருக்கின்றனர்.

தமிழ் சமூகத்தின் பெருமைகளை எல்லாம் நம் சந்ததிகள் கற்றறிய வேண்டும் என்ற பெரு நோக்கில் புத்தகங்களை சேகரித்து இன்று மலை போல அறிவினை நூல்களில் குவித்து வைத்திருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் நோக்கம், இந்த மிகப்பெரிய நூலகத்தின் பயன்பாடுகள் சாதாரண பொதுமக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே! அதோடு மட்டுமில்லாமல் நூலகத்தின் பயன்பாடுகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாய்ப் போய்விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வர்த்தக ரீதியாய் வந்த உதவிகளை எல்லாம் மறுத்தும் விட்டார்கள்.

புதுக்கோட்டையும் அதன் சுற்றுப்புற ஊர்களும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் சூழப்பட்டது. தமிழுக்கு அரும் தொண்டாற்றியுள்ள இச்சமூகத்தார் இருக்கும் இடத்திலேதான் தமிழகத்தின் மிகையான பதிப்பகங்கள் இருந்தது என்று நினைவு கூறும் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள், வெள்ளைக்காரன் காலத்தில் புதுக்கோட்டை மட்டும் தனி சமஸ்தானமாக இருந்ததால் இங்கே காகிதத்துக்கு வரி விலக்கு இருந்ததாலும் நிறைய பதிப்பகங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.

இதனை நினைவு கூறும் பொருட்டு மட்டுமில்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞானாலயா போன்ற மிகப்பெரிய புத்தக சேகரங்கள் இருந்தால் மிகையான வெளிநாடு வாழ் தமிழர்கள் வந்து போகும் இடமாக தென் தமிழகம் மாறுவதோடு,  இயற்கையாலும் வர்த்தகத்தாலும் பின் தங்கிப்போயிருக்கும் தென் தமிழகத்திலிருந்து அறிவுப்புரட்சி தொடங்கட்டும் என்ற பெரு நோக்கமுமே புதுக்கோட்டையில் ஞானாலாயாவைப் பிறப்பித்தது என்றும் கூறுகிறார்.



ஞானாலயாவில் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் முதல் பதிப்பிலேயே ஐயா அவர்களால் வாங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யார் எந்த புத்தகம் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு புத்தகத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களையும், பின் புலங்களையும், பதிப்பிக்கப்பட்டபோது நிகழ்ந்த வரலாற்றையும் நம் கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறார் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள்.

தனி மனிதர்களால் உருவாக்கம் கொண்ட இந்த ஞானாலயாவால் பயன் பெற்றிருக்கும் அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இன்று வாழ்க்கையின் உயரத்தில் மிகப்பெரிய பிரபலங்களாய் ஆனதோடு ஞானாலயாவை மறந்து விட்டார்கள். விபரம் அறிந்த பெருமக்கள் அனைவரும் தெளிவாய் அறிவர். தமிழகத்திலேயே தமிழர் வரலாறு அறியவும், தொன்மையான விடயங்களை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெறவும் ஞானாலாயா என்னும் அறிவுக் களஞ்சியத்தை விட்டால் வேறு வழியில்லை என்று....

இருப்பினும் இந்த அரிய பொக்கிஷம் காலமெல்லாம் தலை நிமிர்ந்து நின்று தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்போதும் வழிகாட்டும் ஒரு அறிவுக் கோயிலாய் திகழ வேண்டும் என்ற பெரு விருப்பத்தை யாரும் கொண்டிருக்கவில்லை என்ற நிதர்சனத்தை நாம் வலியோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதன் விளைவே ஞானாலயாவை உருவாக்கிய கிருஷ்ண மூர்த்தி ஐயா இன்று தனது தள்ளாத வயதிலும் இந்த பெரும் பொக்கிஷத்தை காலத்தால் அழியாத காவியமாய் ஆக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

அ)  ஞானாலயாவிற்காக தங்களிடம் இருந்த பொருளை எல்லாம் கொட்டி இன்று கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் போதவில்லை மேலும் மேல் தளத்தில் இதன் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட வேண்டும். பணிகள் துவங்கப்பட்டுவிட்டன.. நம்மைப் போன்றவர்களை நம்பி....

ஆ ) ஞானாலயாவில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் தொகுத்து மின் புத்தகங்களாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும். காகிதங்களில் அச்சிடப்பட்ட நூல்களில் ஆயுட்காலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிந்து போய் விடும் அபாயம் இருக்கிறது அல்லவா?

இ) ஐயா. திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒவ்வொரு பழந்தமிழ் நூல்களைப்பற்றியும், அவை சம்பந்தமான சுவாரஸ்யமான விவரங்களைப் ஒலிவடிவத்தில் பதிவு செய்து அவற்றையும் இணையத்தில் ஏற்ற வேண்டும்.

ஈ) நூலகத்தைப் பராமரிக்கவும், அங்கே பணி செய்யும் இரண்டு பணியாளர்களுக்கும் மாதா மாதம் ஊதியம் கொடுக்கப்படவேண்டும்.

 உ)  புத்தகங்களை மின்னேற்ற தொழில் நுட்பத்தில் தேர்ந்த தமிழ்ப்பிள்ளைகள் இதற்கு உதவ முன் வரவேண்டும். மேலும் மின்னேற்றுவதற்கு தேவையான கருவிகளையும் வாங்க வேண்டும்.

இப்படி பல கட்டங்களாய் விரிந்து கொண்டிருக்கும் இந்த அரிய பணியை செய்ய பணத்தேவை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. நம்மில் அத்தனை பேராலும் பெரும் பொருள் கொடுத்து உதவ முடியாது என்ற நிதர்சனத்தை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. நம்மால் என்ன இயலுமோ அதை நேரடியாய்க் கொடுக்கலாம் என்ற கோரிக்கையை வேண்டுகோளாய் உங்களிடம் வைக்கும் இந்த நொடியில்...

ஞானாலயா பற்றிய செய்தியை காட்டு தீயாய் தமிழ் பேசும் தமிழர்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லுங்கள் என்ற வேண்டுகோளினை நாங்கள் வலுவாக வைக்கிறோம். 



நாம் சந்திக்கும் ஒவ்வொரு தமிழரிடமும் ஞானாலயாவைப் பற்றி பேசுவோம், இப்படியான பேச்சுக்கள் சமூக நல ஆர்வலர்கள்,  புரவலர்கள், நல்லெண்ணம் கொண்ட தமிழ் நேசர்கள் அத்தனை பேரிடமும் செல்லும் போது அவர்கள் ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்து கொண்டு தங்களின் சுய தெளிவோடு உதவிகள் செய்வது தவிர்க்க முடியாததாய் போய்விடும்.

தமிழ்த் தாத்தா ஐயா. உ.வே.சா அவர்களை நாம் கண்டதில்லை ஆனால் ஐயா உ.வே.சா அவர்கள் அரும்பாடு பட்டு கரையான் அரித்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து அவற்றை புத்தகமாக்கி இருக்காவிட்டால் நாம் வாசித்தறிய மிகையான தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது. 

அந்த சூழ்நிலையின் சாயலைக் கொண்டதே இப்பணியும்..

நமது தமிழ்சமூகம் தொன்று தொட்டே தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகம். கலை, இலக்கியம், பண்பாடு, வீரம் என்று நம் மூததையர்கள் வாழ்ந்த வரலாறுகளை நாம் எடுத்து வாசிக்கும் போது நமது அறிவு விசாலப்படுகிறது. .ஒப்பற்ற ஒரு சமூகத்தின் அங்கம் நாம் என்ற தன்னம்பிக்கையில் எட்ட முடியாத உயரங்களையும் நாம் எட்டிப்பிடிக்க முடியும்.

எந்த மொழியில் நாம் விபரங்களை விளங்கிக் கொண்டாலும், பிறப்பால் நமது உணர்வோடு கலந்துவிட்ட, உயிர் தாய்மொழியில் நமது தொன்மைகளை வாசித்து உணரும் போது பிறக்கும் உற்சாகம்...இந்த உலகை படைத்து அதை நாமே இயக்குகிறோம் என்ற இறுமாப்பினை ஒத்தது.

இணையத்தில் எழுத வந்து விட்டு, எத்தனையோ குழுக்களாய் பிரிந்து நின்று எது எதையோ நிறுவ நாம் போராடிக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி நாம் நமது கருத்துக்களைப் பகிர நம்மிடம் இருக்கும் தாய் மொழியாம் தமிழுக்கு, தமிழர் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணக்கிடக்கை உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாய் ஞானாலயாவுக்கு ஏதேனும் செய்யுங்கள்......

குறைந்த பட்சம் இந்த கட்டுரையின் கருத்துக்களை இணையத்திலும், இணையம் சாராத தமிழர்களிடம் கொண்டு சேருங்கள். நம்மால் முடிந்த அளவு நன்கொடை, அல்லது நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு உதவச் செய்தல் அவசியம். எந்த கட்சிக்காவும், மதத்திற்காகவும், சாதிக்காகவும், இல்லாமல் நாங்கள் தமிழுக்காய் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறோம்.....

எம் தாய்த் தமிழ் உறவுகளே...தமிழுக்காய் ஒன்று கூடுங்கள்....! 

ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;



ஞானாலயாவிற்கு பொருளதவி செய்ய;

வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
Branch Code: 000112

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

மேலும் ஞானாலயாவுக்காக தொடர்ச்சியாக இயங்கப்போகும் கழுகோடு கரம் கோர்க்க கழுகிற்கு (kazhuhu@gmail.com) தகவல்களை மின்னஞ்சல் செய்யவும். உங்களின் ஆதரவினைப் பொறுத்து ஞானாலயாவிற்கு என தனி வலைப்பக்கம் துவங்க உத்தேசித்து தொடங்கியும் விட்டோம்...அதில் எல்லோரும் பங்கு பெரும் அளவில் செய்ய இருக்கிறோம்...உங்களின் மேலான ஆதரவினை தாருங்கள். நன்றி.

ஞானாலயா வலைப்பக்கம் லிங்க் - http://gnanalaya-tamil.blogspot.in/ 
                                                               * * * * *

பின் குறிப்பு 

கழுகு இணைய தளத்தின் பதிவை இங்கே பதிவிட்டதில் மகிழ்கிறேன்...பதிவிட அனுமதி கொடுத்த கழுகிற்கு என் நன்றிகள். நல்லனவற்றை தேடி பிடித்து வெளிக்கொண்டு வரும் கழுகிற்கு என் பாராட்டுகள்...!

கட்டுரை உதவி - கழுகு 

திங்கள், ஜூன் 25

உன் நினைவுகளின் தாலாட்டில்...! மைக்கேல் ஜாக்சன்

எங்கிருந்தோ வந்தாய்...! 


 நிறமற்ற என் நாட்களிலும் வண்ணங்களை பூசிச் செல்வாய்...!! உன்னை விட வேறு யார் இப்படி என்னை கவனித்து கொண்டார்கள்...!? உறவுகள் நட்புகளுக்கிடையே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு உண்டு...! நேசிக்கவும் நிபந்தனை விதிக்கும் சுயநல மனிதர்கள் மத்தியில் வாழும் வாழ்கையில் எந்த வித எதிர்பார்ப்பும் வைக்க இயலாத உன்னை நேசிக்க தூண்டியது எதுவோ...? எனது 11 வயதில் இருந்து தொடங்கிய இந்த உறவு நாளுக்கு நாள் உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டே செல்லும் விந்தை எதுவோ ?! ஆராய முடியவில்லை, என்றாலும் 'பிடிச்சிருக்கு' என்ற ஒன்றை சொல் பொருத்தமான பதிலாக இருக்கலாம் !!


நமக்கு பிடித்தவர்கள் எது செய்தாலும், சொன்னாலும் அழகு தான், அவர்கள் வைக்கும் ஒரு சிறு புள்ளியை கூட விடாமல் சுற்றிச் சுற்றி வரும் நமது  மனம். அவர்களை நிழலென பின் தொடர்ந்து செல்லும் மனதை கட்டுபடுத்த வழி  ஏது...?!

எங்கோ தூரத்தில் இருந்து கொண்டு குரலால், வார்த்தையால் வழிநடத்த முடியும் என்பதை முதன்முதலாய் சாத்தியமாக்கி காட்டினாய் நீ !!

அழுகைகள், வேதனைகள்,வலிகள்,துயரங்கள், சிக்கல்கள், அத்தனையிலும் மயிலிறகென மனதை வருடி துணையாக இருக்கிறாயே...! மனது சரியில்லாத ஒவ்வொரு நேரமும் உனது பாடலை ஒலிக்க வைத்து அமைதி அடைந்திருக்கிறேன் இன்று வரை...! பிரச்சனைகளால் தூக்கமற்று புரளும் என்னை, பல இரவுகள் தாலாட்டி தூங்க வைத்திருக்கிறாய் ! குழப்பமான மன நிலையை சீராக்கி பிரச்னையை எதிர்கொள்ள வைத்திருக்கிறாய் ! எல்லாம் செய்த உன்னை இன்று மிக அதிக அதிகமாய் நினைக்க வைத்துவிட்டாய்...

இதோ நீ மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன...! பலரும் சொல்றாங்க 'மிஸ் யு ' னு...விடியும் ஒவ்வொரு நாள் காலையிலும் உன் குரல் கேட்டு என் நாளை  தொடங்கிற எனக்கு உன்னை 'மிஸ் யூ' என்று சொல்வது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும்...?!

மூன்று வருடங்களுக்கு முன் 

காலை நேர பரபரப்பில் இருந்த என் வீட்டை சென்னையில் இருந்து வந்த அம்மாவின் போன் அழைப்பு மாற்றிப்போட்டது. அம்மா, "அந்த பையன் இறந்துட்டான்டி" புரியாத குழப்பத்தில் நான், "யார்மா, எந்த பையன் ?" அம்மா "அதான் அந்த பையன், உனக்கு பிடிக்குமே MJ " (என் அம்மாவிற்கு இன்னும் நீ பையன் தான் !!)அதிர்ச்சியுடன் "என்னமா சொல்ற ?" "ஆமாண்டி  கொலை பண்ணிட்டாங்களாம், டிவில நியூஸ் போட்டு பாரு...... " என்னென்னவோ சொல்லிக்கொண்டே போக இங்கே என் காலடியில் பூமி நழுவி கொண்டிருந்தது...மயக்க நிலைக்கு போன என்னை என் கணவர் பிடித்து சோபாவில் அமர்த்தினார்...சில நிமிடம் கழித்து பதட்டத்துடன் டிவியை போட்டு BBC , NDTV இரண்டு சேனலையும் மாத்தி மாத்தி பார்க்க அங்கே தெரிந்த உண்மை நெஞ்சை கீறி கிழிக்கத் தொடங்கியது...

ஸ்கூல் போக கிளம்பி நின்ற குழந்தைகளை மறந்தேன், என் நிலை புரிந்த கணவர் அவர்களை கவனித்து தயார் பண்ணி அனுப்பினார்...

தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளில் அண்ணன், தம்பியினரின் வருத்தமான விசாரிப்புகள்...துக்கவீடாகி போனது என் வீடு...!

'ரிலாக்ஸா இருமா, நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்' என்று என் தனிமையின் அவசியம் உணர்ந்து கிளம்பினார் என்னவர். அதுக்காகவே காத்திருந்ததை போல அதுவரை கண்ணீர் விட்டு கொண்டிருந்த நான் அவர்  அகன்ற அடுத்த நொடி கதற தொடங்கினேன்...எப்போதும் பறிக்கப் பிடிக்காத என் தோட்டத்து ரோஜா பூக்களை (செடியில் இருந்தால் மேலும் 3 நாட்கள் வாடாமல் இருக்கு என்பதால் பறிக்க மாட்டேன்)பறிக்க சென்று, பூத்திருந்த அத்தனை மலர்களையும் கை நிறைய அள்ளி கொண்டுவந்தேன். சுவரில் மாட்டி இருந்த ஆளுயர படத்திற்கு மாலையாக்கினேன்...சில பூக்களை உதிர்த்து மெல்ல தூவி பார்த்துக்கொண்டே இருந்தேன்...!

நெருங்கிய நேசங்களின் பிரிவின் போது என் கண் அழுதிருக்கலாம் , அன்று உனக்காக என் இதயம் அழுததை உணர்ந்தேன்...!!

மிக பிடித்ததால் தான் கடவுள் உன்னை விரைவாக அழைத்து கொண்டார் போலும்...
சிலர் சொன்னார்கள் கண்மூடித்தனமான நேசம் இது, உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொல்கிறேன் என்று...சிறு வயது முதல் கூடவே இருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை நெறிப்படுத்தி கொண்டு வந்த ஒரு உன்னத உயிரை பற்றி சொல்ல 'உணர்ச்சிவசப்பட்ட நிலை' மட்டும் போதாது அதிகபடியான புரிதலும் பக்குவமும் வேண்டும்...! 

சேவை எண்ணத்தை சிறுவயதில் விதைத்தது நீ ...அது தானே இன்று தொண்டு நிறுவனமாய் செயல்பட்டு கொண்டிருக்கிறது...!! நீ கற்றுக் கொடுத்த நேசத்தை என்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரிடமும் செலுத்தி எல்லோரையும் நேசிப்பேன்...!இதோ இந்த வீடியோவிலும் உன் பேச்சு நெகிழவைத்து விடுகிறது...


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் முன் ஜாக்சனின் "Gone to Soon - Heal The World" பாடல்கள்...மனதை மெல்ல ஊடுருவி இதமாய் வருடி கொடுக்கும் ...அத்தனை  பேரும் எழுந்து நின்று ஜனாதிபதி உட்பட கரகோஷ ஒலி எழுப்புவது அருமை ! நம்மை அருகில் அழைத்து வெகு இயல்பாய் எடுத்து சொல்வதை போன்ற  நடை பாவனைகள் அழகு ! இம்மண்ணை விரும்ப, மனிதர்களை நேசிக்க என் மனதில் சிறுவயதிலேயே மனித நேயத்தை பதிய வைத்தது இப்பாடல் (Heal the World) என்பது உண்மை. 

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me



You Are Not Alone பாடல்.  ஆறுதலாய் தோள்  சாய்க்கும், பலமுறை அனுபவித்திருக்கிறேன்...தனிமையாக உணரும் தருணம் தவறாமல் இப்பாடலை போட்டு கண்கள் மூடி கேட்க, பாடல் முடியும் தருவாயில் என் தியானமும்(!) முடிந்திருக்கும்...!! புது உற்சாகம்  மனதில் பிறந்திருக்கும் !!

(சில வரிகள்...)

Another day has gone
I'm still all alone
How could this be
You're not here with me
You never said goodbye
Someone tell me why
Did you have to go
And leave my world so cold

Everyday I sit and ask myself
How did love slip away
Something whispers in my ear and says
That you are not alone
For I am here with you
Though you're far away
I am here to stay

You are not alone
I am here with you
Though we're far apart
You're always in my heart
You are not alone

வாழ தகுதி அற்ற இடமாக மாறி கொண்டிருக்கிறது இந்த பூமி...! சுயநலதிற்க்காக, வசதிக்காக, தேவைக்காக இன்னும் எவைகளுக்கோ மனிதன் உலகை, சுற்றுப்புறத்தை சிதைத்து கொண்டிருக்கிறான், சிதைந்து கொண்டிருக்கிறான்...!! இப்பாடலில் தெறிக்கும் வேதனை வரிகள், இசை, காட்சிகள் மனதை வலிக்க செய்யும் கேட்கும்போதெல்லாம்...!!  



What about sunrise
What about rain
What about all the things
That you said we were to gain...
What about killing fields
Is there a time
What about all the things
That you said was yours and mine...
Did you ever stop to notice
All the blood we've shed before
Did you ever stop to notice
The crying Earth the weeping shores?

What have we done to the world
Look what we've done
What about all the peace
That you pledge your only son...
What about flowering fields
Is there a time
What about all the dreams
That you said was yours and mine...
Did you ever stop to notice
All the children dead from war
Did you ever stop to notice
The crying Earth the weeping shores


கடந்த வருடங்களில் இதே தினத்தில்  எழுதிய இரு பதிவுகள்
நினைவு தினம் 
மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு கடிதம்...!
ஒரு ரசிகையாய் என் உணர்வுகளை வருடம் தோறும் இந்த நாளில் எழுதி பதிவு செய்வதால் கிடைக்கும் மன நிறைவு மிக பெரிது...!! அதற்க்கு துணை செய்யும் பதிவுலகத்துக்கு என் நன்றிகள்...

இவ்வுலகம் அழகானது, மிக அருமையானது மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு கடமையை சேர்த்தே கொடுத்திருக்கிறது...மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கடமை பிற உயிர்களை நேசிப்பது !! எல்லோரையும் தூய மனதுடன் அன்பால் அரவணைப்போம்...!! வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாகிகொள்வோம்.

பிரியங்களுடன்
கௌசல்யா


வெள்ளி, ஜூன் 22

சில புரிதல்களும், விளக்கங்களும்...! வீட்டுத் தோட்டம்

பதிவர் வவ்வால் அவர்கள் வீட்டுத் தோட்டம் பதிவில் நான் சொல்லியிருந்த கீரை வளர்ப்பதற்கான எளிய வழிமுறையினால் நீர் கசிவு ஏற்படும், தளம் பாதிக்கப்படும் என்று பின்னூட்டத்தில் கூறி இருந்தார். அத்துடன் தொடர்ந்து துணை பதிவு ஒன்றும் (பசுமை மாடி - வீட்டுத்தோட்டம் ) எழுதி இருந்தார். கடந்த ஒரு வாரமாக என்னால் இணையம் வர இயலாத சூழ்நிலை. அதனால் உடனே வாசித்து பதில் சொல்லமுடியவில்லை. அப்பதிவில் மிகவும் விளக்கமாக எல்லா நுணுக்கங்கள்  பற்றியும் விரிவாக தெளிவாக எழுதி இருந்தார். உபயோகமான நல்ல பல தகவல்கள். அப்பதிவை பற்றி சொல்லும் முன் ஒரு சிறு தன்னிலை(வீட்டுத் தோட்டம் தொடரை குறித்த) விளக்கம்...

ஆர்வமின்மை 

தோட்டம் போடுவது என்பது அக்ரி படித்தவர்கள் , விவசாயம் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்டது, அவர்களுக்கு தான் தெரியும் நமக்கும் இதுக்கும் ஒத்துவராது என்பதே பலரின் எண்ணம்னு நினைக்கிறேன். கொஞ்சம் கூட முயற்சி செய்து பார்ப்பது  இல்லை. சுலபம் இல்லை மிகவும் கடினம் என்று தெரிஞ்சவங்க சிலர் என்னிடம் கேட்கிறப்போ 'என்னடா இது சோதனை' என்பது போல இருக்கும்...எங்க வீட்டு தோட்டத்துல ரோஜா செடிகள் நிறைய பூ பூக்கும் அதை பார்க்கிறவங்க 'உன் கை ராசி, அதுதான் இப்படி, நானும் எத்தனையோ வச்சு பார்த்துட்டேன் ஒரு பூவோட நின்னுடுது'னு சொல்வாங்க...அவங்களுக்கு பொறுமையா சில நுணுக்கங்களை சொல்வேன். மொத்தமா எல்லாம் கேட்டு விட்டு 'நீ என்னதான் சொல்லு, இதுகெல்லாம் ராசி வேணும்'...!!?? மறுபடியும் முதல்ல இருந்தான்னு எரிச்சல் வரும்.

இப்படி நம்மில் பலரும் ஒவ்வொன்னுக்கும் ஏதோ சில சமாளிப்புகளை கொடுத்து கொண்டு இருக்கிறோம்...தோட்டத்தை பொறுத்தவரை செய்து பார்ப்போமே, அதன் நெளிவு சுளிவுகளை கத்துக்கணுமேன்னு முயற்சி பண்றதே இல்ல. பணம் சம்பாதிக்க காட்டும்  ஆர்வம், முயற்சிகள் இதில் சிறிதும் இல்லை. உடம்பிற்கு ஏதும் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய தயங்காத நாம் இதற்கு மிகவும் யோசிப்பது சரியில்லை. தோட்டம் போடுவது என்பது நம் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது...!! உடல்நலத்துடன் மனநலமும் பேணப்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.  இதில் ஆர்வம் வரணும், இனியும் அசட்டையாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்தவே தான் இந்த வீட்டு தோட்டம் தொடரே எழுதத் தொடங்கினேன். 

ஆர்வம், அக்கறை வர வைத்துவிட்டால் போதும், இதில் இருக்கும் சாதக பாதகங்களை அவங்களே புரிஞ்சிப்பாங்க. கூகுள்ல தட்டினா வந்து விழும் பல தகவல்களை விட அனுபவத்தில் பெற்றதை சொல்லும் போது " அட இவ்வளவுதானா மேட்டர், நாமும் செஞ்சு பார்த்தால் என்ன?" என ஒரு ஆர்வம் வந்துவிடாதா என்கிற ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கையில் எழுதுகிறேன். படிக்கும் ஒருவர் இரண்டு பேர் முயன்றால் கூட போதும் என்கிற விருப்பம் காரணமாகவே எளிமையாக பெரிய மேற்கோள்களை காட்டாமல் எழுதுகிறேன்.

அரிசி மண்ணுக்கு மேலா, அடியிலா என்பது தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத தலைமுறையினருக்கு நடுவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மில் பலரும் விவசாய பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விவசாயத்தை வெறுக்கிற, அதன் மேல் பற்று இல்லாதவர்களாக இருக்கிறோம். இது நல்லதுக்கல்ல. வீட்டில் தோட்டம் போடுவதின் மூலமாக இயற்கையுடன் நம்மை பிணைத்து கொள்ளமுடியும். இயந்திரங்களின் துணையுடன் வாழும் வாழ்க்கைக்கு நடுவில் கொஞ்சம் பசுமையுடன் வாழ்ந்து மனதை மென்மையாக்கி கொள்வோம்.

'இது செடி, இதுதாங்க மண், இதில் நட்டுவிட்டால் போதும்' என்று சொல்வதற்கு பல இணைப்புகள் கூகுளில் இருந்தாலும் ஆர்வம் இல்லாதவர்கள் எப்படி தேடி போவார்கள்...?! நிச்சயம் போக மாட்டார்கள்...அவர்களை தேட வைக்கணும்...தேடி கண்டடைந்த பின்னர் முயற்சி செய்து பார்க்கலாம்...பலன் கிடைத்ததும் புது புது நுணுக்கங்களை அவர்களாகவே கண்டு பிடிப்பார்கள்...பின் செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்...ஒரு முறை தோட்டம் போட்டு அதன் மகத்துவத்தை அனுபவித்து விட்டார்கள் என்றால் இறுதிவரை விட மாட்டார்கள். மரம், செடிகளுடனான காதல் இன்பம் எத்தகையது என்பதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும் !! மீளவே முடியாத போதை அது !! 

ஒகே, இப்ப நேரா விசயத்துக்கு வரேன்...அப்ப இதுவரை சொன்னது விசயமே இல்லையானு கேட்ககூடாது :)

ஆர்வத்தை கொண்டுவருவது முதல் படி என எண்ணியதால் சில வரிகளில் மட்டும் முடித்துக்கொண்டேன்...தொடராக எழுத போவதால் ஒவ்வொன்றை பற்றியும் தனித்தனியாக மேலும் பல தகவல்களை சேர்த்து எழுதுகிறேன். 

தோட்டக்கலை பொறுத்தவரை நாள்தோறும் ஏதாவது புது புது முறைகள்  வரும், போகும். வீட்டுத்தோட்டத்தில் அவரவர் கிரியேடிவிட்டிக்கு  தகுந்த மாதிரி கண்டுபிடித்து செய்து கொண்டே போகலாம்...சட்டதிட்டங்கள் இருக்குமோனு யோசிச்சிட்டே இருக்ககூடாது...சில விதங்கள் இப்படி இருந்தால் நல்லது என வழி  காட்ட முடியும் அவ்வளவே. அடிப்படை தேவையான மண், நீர், விதை இவற்றை வைத்து இருக்கிற இடத்திற்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ள வேண்டியது தான்.

முன்னாடி எல்லாம், மொட்டை மாடியில் தொட்டிகள் வைத்தால் ரூப் கனம் தாங்காமல் இறங்கிவிடும்(சேதமாகி விடும்) என்று கூட பயந்திருக்கிறோம் ??! :) 

மாடியில் கீரைத்தோட்டம் போடுவதில் சிறந்தது  என்பது கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்கை/விரிப்பை சரியான விதத்தில் பயன்படுத்துவதில் இருக்கிறது. தென்னை நார் கழிவை அடியில் பரவலாக விரிக்கலாம்...நீரை உறிஞ்சி வைத்துகொள்ளும்...மண்ணில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்...அதிகபடியான நீர் வெளியேறவும் செய்யாது...தொட்டியில் செடி வைக்கும் போதும் இதை பயன்படுத்தி கொண்டால் நல்லது. தினம் தண்ணீர் ஊற்றவேண்டுமே என கவலை படவேண்டாம்.3 அல்லது 4 நாள் வரை தாங்கும்.

திரு வின்சென்ட் சார் அவர்களின் இந்த பதிவும், காணொளியும் உங்களுக்கு மாடியில் கீரை பயிரிடுவதை பற்றிய ஒரு தெளிவினை/புரிதலை கொடுக்கும்.

மாடியில் கீரை வளர்ப்பு - லிங்க் சென்று பார்க்கவும்.

http://youtu.be/s5gXutQws8E


'வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம்' என்று வலியுறுத்துகிறது வின்சென்ட் சாரின் இந்த  Powerpoint Presentation. அவசியம் பாருங்க...

 http://www.authorstream.com/Presentation/vincent2511-607128-home-garden/

மொட்டை மாடியில் கீரைத் தோட்டம் அமைக்க

"ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது." - வவ்வால் 
கழிவு நீர் சுத்திகரிக்கும் முறை,தொழு உரம் தயாரிப்பது என்பதை குறித்து விரிவாக பதிவிட்டதையும் அவசியம் படிங்க...

(காய்கறி கொடி பந்தலின் கீழே கீரை வளர்ப்பதை போல் அமைத்து கொள்வது நன்று)

பதிவர் வவ்வால் அவர்களுக்கு,

உங்கள் பின்னூட்டத்துக்கும் துணை பதிவுக்கும் முதலில் என் நன்றிகள். 

எனது பதிவை ஊன்றி படித்து அதில் தங்கள் பார்வையில் குறையாக தெரிந்ததை பின்னூட்டத்தில் குறிப்பிட்டதோடு அல்லாமல் விரிவான விளக்கம் கொடுக்கவேண்டும் என தனி பதிவு எழுதிய உங்களுக்கு  என் பாராட்டுகள். 

அதிலும் துணை பதிவு என்று குறிப்பிட்டது என் கவனத்தை மிக ஈர்த்தது...(எனக்கு தெரிந்ததெல்லாம் எதிர்பதிவு?!) :) இச்சமயத்தில் எதிர்பதிவுகள் எழுதிய சகோதர, நண்பர்கள் என் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பதிவின் கருத்தை குறித்த விமர்சனத்தை விட எழுதியவரை பற்றிய கடும்விமர்சனத்தை தான் இதுவரை பார்த்திருக்கிறேன். அத்தகையோரை பற்றி மட்டும் தெரிந்த எனக்கு வவ்வால் அவர்களின் துணை பதிவை படித்து ஆச்சர்யம் ஏற்பட்டது ! சக மனிதரை மதிக்கக்கூடிய இந்த பண்பை கற்றுக்கொள்ளவேண்டும் நான் உட்பட...பதிவில் இருக்கும் குறைகளை(?) சுட்டிக்காட்டுகிறேன் என்ற போர்வையில் தனிமனித தாக்குதல் நடத்தும் பதிவுலகத்தில் நாகரீகமான இவரது அணுகுமுறையை எண்ணி உண்மையில் மகிழ்கிறேன். ஒருவருக்கொருவர் நல்ல கருத்துக்களை, நிறை குறைகளை பரிமாறும் ஆரோக்யமான நிலை தொடர இவரை போன்றோர் இருக்கிறார்கள் என்ற மன நிறைவுடன் இப்பதிவை முடிக்கிறேன். 

கௌசல்யா  

தகவல்,படங்கள் உதவி 
நன்றி வின்சென்ட் சார் 

புதன், ஜூன் 13

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2

வீட்டுத் தோட்டம் முதல் பாகத்திற்கு கருத்துக்கள் தெரிவித்த நட்புகளுக்கு நன்றி...மேலும் சிலவற்றை சிறிய அளவில் இங்கே விளக்கி இருக்கிறேன்...தொடரும் பதிவுகளில் ஒவ்வொன்றை குறித்தும் தனித் தனியாக பகிர்கிறேன்...

உருளை கிழங்கு

                                                              (photo courtesy - Siva)

உருளைகிழங்கை பாதியாக கட் பண்ணி, கட் செய்த பகுதியை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்...ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது. இல்லைஎன்றாலும் பரவாயில்லை.நன்றாக விளைந்ததாக இருந்தா ஒகே.

சேப்பங்கிழங்கு



சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க வேண்டும். இதன் இலைகள் மிக பெரிதாக அகலமாக  பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால் அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.

தக்காளி, மிளகாய், கத்தரி


நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு தக்காளியை பிசைந்து விட வேண்டும்....விதைகள் தனியே பிரியும்...பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்...

நன்கு முற்றிய கத்தரிக்காய்  வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்துக்  கொள்ள வேண்டும்

பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

விதைக்கும் முறை 

விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்...காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்...செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்று அல்லது இரண்டாக  நட்டு விட வேண்டும்...


தக்காளி காய்க்கத்  தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.

பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும். அதுக்கும் சிம்பிளா ஒரு வழி இருக்கு. 

பந்தல் முறை  

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும்...இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கைப்பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி(ஒரு ஏழு அடி) விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்...கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 10 இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டிக்  கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்...இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், முடிந்தது வேலை.

கயிறுக்கு  பதிலாக கட்டு கம்பிகளையும் உபயோகப் படுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம். வீட்டில் கிடைப்பதை வச்சு உங்க கற்பனையை கொஞ்சம் சேர்த்து கோங்க...அவ்வளவுதான் !

மற்றொரு பந்தல் முறை 

நாலு சிமென்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்...இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்...மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.

 உரம்  

இரண்டு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் அல்லது பிளாஸ்டிக் சாக்கில் சமையலறை கழிவுகள்/காய்ந்த இலைகள் போன்றவற்றை சேகரித்து போட்டு கொண்டே வரவேண்டும்...ஒன்று நிரம்பியதும் மற்றொன்றில் போட்டு வர வேண்டும்...முதலில் போட்டு வைத்தது கொஞ்ச நாளில் மக்கியதும் அதை எடுத்து, செடிகள் இருக்கும் தொட்டியின் மணலை லேசாக கிளறி மக்கிய காய்கறி கழிவை கொஞ்சம் அள்ளி போடலாம்...மீன்,மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் முழுதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் செடிக்கு விடலாம்.நன்கு வளரும். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் எதையும் வீணா சாக்கடையில்  கொட்டாமல் , செடிகளுக்கு ஊற்றுங்கள்... 

பாத்ரூம் கழிவு நீர், துணி துவைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து தொட்டி செடிகளுக்கு ஊற்றலாம்...(நேரடியாக ஊற்றக்கூடாது) சுத்திகரித்துனு சொன்னதும் என்னவோ பெரிய மேட்டர் போலன்னு நினைச்சுடாதிங்க...ரொம்ப சிம்பிள் தான்.

கழிவு நீரை சுத்திகரித்தல்

சோப்பு தண்ணீர் /கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன...இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல...எனவே இதை ரொம்ப எளிதான வழியில் சுத்திகரிக்கலாம்...

சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி  நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்...விரைவில் வளர்ந்து  விடும்...கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்...நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்...கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்...சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்... 

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவு தான் . மற்றபடி மேலே கூறிய அதே மெதட் தான். கருங்கல்  ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.

ஸ்பெஷல் கேர் 

விதைக்காக கடைகளை தேடி  வருந்துபவர்களுக்கும் /தூரமாக இருக்கிறது யார் போய் வாங்குறது என்பவர்களுக்கும் தான்   இந்த குறிப்பிட்ட வகைகளை மட்டும் கூறினேன்...மற்றவர்கள் கடைகளில் வாங்கி பயிரிடலாம்.

தரையில் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்குகளை(தார்பாலின் சீட்) விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் விதைக்கலாம்...தரையில் நீர் இறங்கி  விடும் என்பது போன்ற அச்சம் தேவையில்லை, ஒன்றும் ஆகாது...இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சி இலவசம் என்பது ப்ளஸ்  !!

* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்...

* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்...சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லையென்றால் சாதாரண தண்ணீர் போதும்.

* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

*மண்புழு உரம் ஆன்லைனில் கிடைக்கும். ஒரு செடிக்கு இரண்டு ஸ்பூன் என்றளவில் போட்டால் போதும். அந்த உரத்தில் மண்புழு முட்டைகள் இருக்கும் மண்ணில் போட்டதும் கொஞ்சநாளில் புழுக்களாக மாறி மண்ணிற்கு மேலும் சத்துக்களை கொடுக்கும் . 

அக்கறையும், கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில மெனக்கிடல்கள் அவசியமாகிறது.

நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க, ஒரு பத்துநாள் ஊருக்கு போய்ட்டோம்னா செடிகள் நெலம அதோ கதிதான் , அதுக்கு என்ன சொல்ல போறீங்கன்னு கேக்குறீங்களா? கவலையே படாதிங்க அதுக்கும் கைவசம் சில செட் அப் வேலைகள் இருக்கு !! அது என்னனு அடுத்த பாகத்தில் சொல்றேன்...சரிதானா ?! அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க... 

உற்சாகமான வீட்டுத்  தோட்டத்திற்கு என் வாழ்த்துகள்...கலக்குங்க !!
                                                               * * * * *
அப்புறம்...

வீட்டுத் தோட்டத்தை ரொம்ப ஆசையா பார்த்துப்  பார்த்து செஞ்சிட்டு வர்ற இருவரின் பதிவை அவசியம் படிங்க...இதுக்கு முந்திய பதிவிற்கு பின்னூட்டம் போட்டதின் மூலமாக அந்த இரு தளங்களை காணக்  கூடிய நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது...

* துளசி மேடம் தளம் - http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/yam.html

* சிவா என்பவரின் தளம் - http://thooddam.blogspot.in

நீங்களும் சென்று பாருங்க...மறக்காதிங்க பிளீஸ் !!

                                                                   * * * * *


Happy Gardening !!

பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

படங்கள் - நன்றி கூகுள் 


புத்தகப் பரிந்துரை : Your One Stop Guide to Growing Plants at Home 

திங்கள், ஜூன் 11

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...!! அறிமுகம் - 1

கொஞ்சம் கேளுங்க... 

பதிவுக்கு உள்ள போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் என்பதே இந்த பதிவின் நோக்கம்...ஆர்வம் இல்லைனாலும் எல்லோருக்கும் இது அவசியம் என்பது காலத்தின் கட்டாயம். 'மண்ணுல கை வச்சிட்டு, தினம் தண்ணி ஊத்திட்டு இது பெரிய பிராசஸ் நமக்கு ஒத்து வராது'னு சொல்றவங்க முதலில் கட்டுரையைப்  படிங்க...ஏன்னா முக்கியமா இது உங்களுக்காகவே...!!


அனைவரின் வீட்டிலும் எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா 'டென்ஷன்' இருக்கும். சின்ன பையன் கூட "போம்மா நானே டென்ஷன்ல இருக்குறேன், நீங்க வேற அதச்  செய் இதச்  செய்னு சொல்லிட்டு " இப்படி யாரைக்  கேட்டாலும், யார்கிட்ட பேசினாலும் இந்த டென்ஷன் என்ற வார்த்தை சொல்லாத ஆள் இல்லை...காரணம் இன்றைய பரபரப்பான சூழல்...!! இப்படி எல்லோருமே எதையோ நோக்கி ஓடிக்கிட்டே இருந்தா உங்களை யார் கவனிக்கிறது...உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாக படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா அது தோட்டம் போடுவதுதான்...காய்கறிகள், பூக்களைப்  பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம் மனதை சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்...!!

ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் சுவையும் இல்லை சத்தும் இல்லை...நன்கு கழுவிக்  சமைங்க அப்டின்னு சொல்றபோதே இதுல ஏதும் விஷத்தன்மை இருக்குமோனு பயமா இருக்கு !?

சென்னை உட்பட பல ஊர்களில்  முழுவதும் இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் என தனி கடைகள் வந்துவிட்டன.  ஆனால் எல்லோராலும் அங்கே சென்று வாங்க இயலாது. 

எதுக்கு  தயக்கம்?!

'நீங்க சொல்றது எல்லாம் சரிதான்,ஆனா எங்க வீட்ல இடம் இல்லைங்க' என சாமார்த்தியமா தப்பிக்க கூடாது...தூங்க, சமைக்க, டிவி பார்க்க, அரட்டை அடிக்க எல்லாம் இடம் இருக்குதுல அது மாதிரி இதுக்கும்  ஒரு இடத்தை ஒதுக்குங்க...மாடி,பால்கனி,தாழ்வாரம், திண்ணை, வெயில்படுற ஜன்னல் திண்டு இப்படி எவ்வளவோ இடம் இருக்கே...!! வெயில் படுற மாதிரி எந்த இடம் இருந்தாலும் தோட்டம் போடலாம்...அங்கேயும் இடபற்றாக்குறை இருந்தாலும் கவலை இல்லை, அடுக்கு முறைல செடி வளர்க்கலாம்...! நீங்க மனசு வச்சு வேலைல இறங்குங்க முதல்ல, அப்புறம் பாருங்க இவ்ளோ இடம் நம்ம வீட்ல இருக்குதான்னு ஆச்சர்யமா இருக்கும்...?!!

ஓகே...! ஒருவழியா இடம் ரெடி பண்ணிடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சா? அடுத்தது விதை, எங்க வாங்க, மண், உரம், இதுக்கு என்ன பண்ணனு ஒரு தயக்கம் வருதா? தயக்கம் ஏதும் தேவையில்லை...உங்களுக்காகவே சில சுலபமான வழிமுறைகள் இருக்கு...கொஞ்சம் ஆர்வம், உழைப்பு இருந்தா போதும்...தண்ணி வசதி இல்லைன்னு சொல்றீங்களா...அதுக்கும் பல ஐடியா கை வசம் இருக்கு...தொடர்ந்து படிங்க...அதை பத்தியும் சொல்றேன்...நம்ம உடல் ஆரோக்கியம் பத்திய விசயத்துல இனியும் தயக்கம் காட்டலாமா?! ஏதாவது சாக்கு போக்கு சொல்லிச்  சமாளிக்காம தைரியமா காரியத்தில் இறங்குங்க...கலக்கிடலாம்...!!

எளிய முறையில் வீட்டிலேயே காய்கறி உற்பத்தி
ஆரம்பத்துல தோட்டக்  கலைல நமக்கு அனுபவம் வர்ற வரை வீட்ல கிடைக்கிற விதைகளை வைத்தே பயிரிடலாம்...ஓரளவு நம்மாலும் பெரிய அளவில் காய்கறி உற்பத்திப்  பண்ண முடியும்னு நம்பிக்கை வந்த பிறகு வெளி கடைகளில் விதைகள் வாங்கி கொள்ளலாம். நம் சமையல் அறையில்  இருப்பதை வைத்து முதலில் வேலையை ஆரம்பிங்க...உங்க வீட்டை பசுமை வீடா மாத்தாம உங்களை விடுறதா இல்ல... 


அடடா பேசிட்டே இருக்கேனே, சரி சரி வாங்க வாங்க... ஏற்கனவே நாம ரொம்ப லேட்...இனியும் தாமதிக்காம வேலையில இறங்குவோம்...காய்கறிகளை பயிரிடுவோம்...சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்...! ஒகே தயாரா...? அப்டியே படிக்க படிக்க கற்பனை பண்ணி மனதில் பதிய வச்சுகோங்க...அப்பத்தான் உடனே காரியத்தில் இறங்கக்கூடிய ஒரு உத்வேகம் வரும்...

அடிப்படை தேவைகள் 

* மண் அல்லது சிமென்ட் தொட்டி
* பிளாஸ்டிக் அரிசி சாக்
* பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்)
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது)   

20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும், கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்) 

ஓகே!  இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள். (எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது...)வாங்கி வந்த மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள். பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்க. 

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டுவிட்டு அதனுடன் காய்ந்த சாணம் கிடைத்தால் தூள் செய்து கலந்து  வைத்து கொள்ளுங்கள்.(இல்லை என்றாலும் பரவாயில்லை), மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.

காய்ந்த அல்லது பச்சை இலைகள் (வேப்பமர இலைகள் என்றால் மிகவும் நல்லது) சேகரித்து சாக்/தொட்டியின் பாதி அளவு வரை நிரப்பி பிறகு மண்ணைப்  போட்டு நிரப்புங்கள்...இலைகள்  மக்கி உரமாகி விடும்...அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்...வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட !

தக்காளி, சின்ன வெங்காயம் , கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , உருளைகிழங்கு ,சேப்பங்கிழங்கு இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும்  தேடிபோக வேண்டாம் என்பது ஒரு வசதி.

ஒவ்வொன்றையையும் தனி தனியாக பார்க்கலாம்...

புதினா,கீரை

புதினா இலைகளை ஆய்ந்த பின் இருக்கும் தண்டுகள், கீரைகளில் பொன்னாங்கண்ணி தண்டுகளை சேகரித்து தொட்டி மண்ணில் சிறிது இடைவெளி விட்டு ஆழ ஊன்றி விடுங்கள் (2 இஞ்ச் மண்ணின் உள்ளே போனா போதும்), பின் தண்ணீர் தெளித்து விடுங்கள்...வெயில் அதிகம் இருந்தால் துளிர் வரும் வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். பின் ஒருவேளை ஊற்றினால் போதும்.   

கொத்தமல்லி

கடையில் வாங்கும் போது வேருடன் இருந்தால் கட் பண்ணி சமையலுக்கு எடுத்தது போக வேர் பகுதியை மண்ணில் அப்படியே புதைத்து விடலாம். தண்டுக்கீரை(முளைக்கீரை) பொதுவாக வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் வளர்க்கலாம். முழு மல்லி(தனியா) விதையை இரண்டாக பிரித்து தான் விதைக்கணும்...மண்ணில் தூவி மண்ணோடு நன்கு கலந்து விடவேண்டும்...

சின்ன வெங்காயம்

வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்...மண்ணிற்கு  மேல் தெரிய கூடாது...வளர வளர பார்க்க அழகாக இருக்கும்...வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். (அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது) சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அரிஞ்சி பொரியல் செய்து சாப்பிடலாம்...உடம்பிற்கு அவ்வளவு நல்லது...

ஓகே...இன்னைக்கு இவ்வளவு போதும்...

காலை அல்லது மாலையில் ஒரு அரை மணி நேரம் இதற்காக செலவு செய்தால் போதும்... மனதுக்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி இதை விட வேறு என்ன இருக்கிறது...?!

உற்சாகமாக ஈடுபடுங்கள்... 

சந்தோசமான  வீட்டுத் தோட்டத்துக்கு என் வாழ்த்துக்கள்...

உருளை கிழங்கு நம்ம வீட்லையேவா ?? எப்படி ??  அடுத்த பதிவில் பார்த்துடுவோம்...!


பின் குறிப்பு 

தோழிகள் சிலர் என்னிடம் 'எங்களுக்கும் வீட்ல விளையவச்சு அதைப்  பறிச்சு சமைக்கணும்னு தான் ஆசை , ஆனா அந்த உரம், இந்த மண் போடணும் அப்டி இப்படினு பெரிசா சொல்றாங்க...ஈசியான வேலை மாதிரி சொல்லி தந்தா நல்லா இருக்கும்' என கேட்டுகொண்டதின் காரணமாக இந்த பதிவை எளிமையாக  எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு சந்தேகம் ஏதும் இருப்பின் கேட்கவும்...காத்திருக்கிறேன். நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா 

படங்கள்  - நன்றி கூகுள்

வெள்ளி, ஜூன் 8

மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !!?




எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான  ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.....?! பொருட்படுத்துவதும் இல்லை.....!? ஒரு முக்கியமான மாற்றம் தான் பெண் குழந்தைகளின் விரைவான பூப்படைதல். சமீப காலமாக பருவமடையும் வயது குறைந்துக்  கொண்டே செல்கிறது. ஒரு பெண் குழந்தை ஆறு வயதில் பருவமடைந்திருக்கிறது...இங்கே இல்லை லண்டனில்...?!!


Precocious Puberty causes hormone disorders and  brain abnormalities


அவ்வாறு விரைவில் வயதிற்கு வருவது நல்லதல்ல என்பதே மருத்துவர்கள், ஆய்வாளர்களின் கருத்து.  பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் மனமும் உடலும் ஒன்றாக  சேர்ந்து வளர வேண்டும். உடல் மட்டுமே வளர்ந்து, மனதில் குழந்தையாக இருப்பவர்களின் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை விட பல ஆபத்துகளுக்கும் இது வழி வகுக்கும்.

இது ஏன் அவ்வாறு விரைவாக ஏற்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருப்பது  அக்குழந்தையின் பெற்றோர் தான் ?!

இதனைப்  பற்றியதே இந்த பதிவு.....

முன்பு எல்லாம் பதினாறு வயதில், பின் அதுவும்  குறைந்து பதினாலு வயதில் பருவமடைதல் என்றானது...இப்போது 12 வயதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதில்....!! பொதுவாக ஒரு பெண் வயதிற்கு வருவது என்பது அவர்கள் வளரும் சூழ்நிலை, பரம்பரை, உணவு பழக்க வழக்கம் இவற்றை அடிப்படையாக வைத்து தான் நடை பெறும்.

உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

*  குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

*   பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை பலவிதத்திலும் பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் இது பெண் குழந்தைகள் விரைவில் வயதிற்கு வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறும் போது பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது போன்றவை பெண் குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது, இது  ஹார்மோன்களின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, பிரச்சனை நேருகிறது. உடல் வளர்ச்சியில் பெறும் குழப்பம் ஏற்பட்டு முடிவில் விரைவாக அக்குழந்தையை பூப்படையச்  செய்து விடுகிறது.

*  ஆணின் அரவணைப்பு இல்லாமல்...

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை ஆணின் அரவணைப்பு அதாவது தன்  தந்தையின் நெருக்கம் அவசியம் தேவை. தந்தையில்லாத , தந்தை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் படி நேர்ந்தால்,  அவர்களின் பெண் குழந்தைகள் விரைந்து வயதிற்கு வந்து விடுகிறார்கள்....!!

சகோதரனின் பாசமும் ஹார்மோன்களின் குழப்பத்தை சரிச்செய்யும். இப்போது பெரும்பாலான  வீடுகளில் ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால் அதுவும் ஒரு பெண் குழந்தையாக இருந்துவிட்டால் சகோதரன் என்ற ஒரு உறவேத்  தெரியாமல் தான் அக்குழந்தைகள் வளருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தந்தையின் அருகாமையும், பாசமான அரவணைப்பும் மட்டுமாவது கண்டிப்பாகத  தேவை.

*  தொலைக்காட்சியும் ஒரு காரணம் !!?

நம் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதில் இந்த தொலைக்காட்சிக்கு அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. குறைந்தது ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழப்பமான மனதுடனே  தூங்கவும் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் விரைவில் பூப்படைகிறார்கள்  என்று அறிஞர்கள் தங்களது ஆய்வில் கண்டுப்  பிடித்துள்ளனர்.

சீக்கிரம் வயதிற்கு வருவதால் ஏற்படக்கூடிய அசௌரியங்கள்

* முதலில் இதைப்  பற்றி என்ன வென்றே தெரியாத ஒரு நிலை.
* நிகழ்ந்த பின் ஏற்படக்கூடிய ஒரு அச்சம், குழப்பம், எதனால் என்கிற கேள்வி ?!!
* பள்ளியில் சக மாணவிகள்/மாணவர்கள்  வினா எழுப்பும் பார்வைகள்.
* தனிமையான ஒரு உணர்வு.
* மனதளவில் குழந்தை, உடலளவில் பெண் ?!!

தகுந்த சரியான முறையான நேரத்தில் நடக்காத எது ஒன்றுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்...பெண் குழந்தைகளின் வளர்ப்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்

பெற்றோர்கள் சரியாக இருந்துவிட்டால் அந்த வீட்டில் குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல முறையில் தான் வளருவார்கள்....குழந்தைகள் முன்னால் சண்டைப்  போடும் பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவது மட்டும் இன்றி ஹார்மோன் குளறுபாடுகள்  ஏற்பட்டு விரைவில் பெண் குழந்தைகள் வயதிற்கு வருவதும் ஏற்படுகிறது.

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே! கொஞ்சம் உங்கள் குழந்தையின் மனநிலையிலும் அக்கறைக் காட்டுங்கள்.

இதற்கு ஒரு தீர்வு உங்கள் கையில் தான் இருக்கிறது, குழந்தைகளின் மனம் பாதிக்காத அளவிற்கு அவர்கள் முன் நடந்து கொள்ளுங்கள் , உணவு பழக்கவழக்கத்தை முறைப் படுத்தணும் , கொழுப்புப்  பொருட்களைத்  தவிர்க்க வேண்டும், அவர்கள் வளரும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.






பூ மெதுவாய்.....இயல்பாய் மலரட்டுமே....!