திங்கள், செப்டம்பர் 12

'தலையணை மந்திரம்' எனும் கவர்ச்சி நல்லுணர்வுகளின் வெளிப்பாடா?! தாம்பத்தியம் - 26

முன்குறிப்பு :
எனது கடந்த தாம்பத்தியம் தொடரில் சகோ.திரு.அப்பாதுரை அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார்...

//தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?//

எதையும் நேர்மறையாகப் பார்க்கும் அவரது பண்பிற்கு வணக்கங்கள்.

தலையணை மந்திரம் - அவசியம் தேவை

தலையணை மந்திரம் என்பதின் பின்னால் இருக்கும் கவர்ச்சி திருமண உறவைக்  கெடாமல் வைத்திருக்கும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஒரு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ கூடிய இடம் தனியறை. இந்த இடத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் அன்பு பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் போய்விடுவான் என்பது இயல்பு. ஆனால் இந்நிலை அந்நேரம் மட்டுமா அல்லது விடிந்த பின்னருமா என்பது அவரவர் மனநிலைகளைப்  பொறுத்தது. 

மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னைச்  சுற்றி வரும்படி செய்வது என்பது மிக நல்லதா இல்லையா என்பதே இந்த பதிவில் என் முன் நிற்கும் கேள்வி ? இந்த ஈர்ப்பு சரியென்றால் அவர்களின் வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஒருதலைபட்சமாகப்  போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது...அப்படி இல்ல, ஒருவரை ஒருவர் கலந்துதான் முடிவு பண்றோம் என்று சொன்னாலும் இறுதி முடிவு சந்தேகமே இல்லாமல் மனைவியுடையதாகவே இருக்கும். ஒருவேளை மனைவியின் முடிவு தவறான தீர்வாக போய்விட்டால்...!?

முந்தைய தலைமுறையில் 

முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்னியோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்...!

அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்தப்  பெண்களுக்குச்  சிலவற்றை அறிவுறுத்தினார்கள்...ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறி விடக்  கூடாது என்பதற்காக சில வார்த்தைகளைச்  சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்...! வார்த்தைகள் தான் 'தலையணை மந்திரங்கள்' இல்லை. இவை காலப்  போக்கில் ஆணை வசியப்படுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுப்பெற்று விட்டன...!!

'அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையேச்  சுத்தி வர்ற மாதிரிப்  பக்குவமா நடந்துக்க' என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. "ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும் , எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவுக்  கொள்ளவே விரும்புவார்கள். இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்...அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனைப்  பார்த்துக்கோ ,கைக்குள்ள போட்டு வச்சுக்க" என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து.

ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல்,பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தைத்  திசைத்  திருப்பக்கூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலைத்  தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம், இவற்றின்  பிடியில் சிக்கிக்கொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிகக்  குறைந்துவிட்டது.அவர்களின் அந்தரங்கமும் அள்ளித்  தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !

அதனால் இன்றையக்  காலகட்டத்திற்கு அந்த அறிவுரை, மந்திரம் எல்லாம் உதவாது. இத்தகைய மந்திரத்துக்கு (கவர்ச்சிக்கு) மயங்கும் ஆண்கள் இருந்துவிட்டால் நாட்டில் கள்ள உறவுகள், விவாகரத்துக்கள் அதிகரித்து இருக்காதே ?!! இது போன்றவை வீட்டிற்கு வெளியே  மிக தாராளமாக கிடைக்கக்கூடிய காலம் இது. எனவே உடல் கவர்ச்சி மட்டும் போதாது என்பதே எனது உறுதியான முடிவு.

* தலையணை(?) தேவையின்றி போனில் கூட மந்திரம் போட்டு மாங்காய் பறித்துவிடும் காலமிது.

'அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன்' என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்...!!



இப்போதைய தலையணை மந்திரம்,

* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூரத்  தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை...

* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள

* தன் தவறுகளைக்  கண்டுக்கொள்ளாமல் இருக்க

* தன் சுயத்தைத்  திருப்திப்படுத்த

* பெருமைக்காக

இவை போன்றவைகளுக்காகப்  பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !

ஒரு உதாரணம் 

சென்னையில் இருக்கும் மகளுக்கு இங்கிருக்கும் தாய் ஒருவர் செல்பேசினார் , அதுவும் பொது இடத்தில் பஸ்ஸில் !!

என் பதிவுக்கு பாய்ண்ட்ஸ் தேவைப்படுவதால் இப்போதெல்லாம் பொது  இடத்தில் என் காதுகள் கூர்மையாகி விடுகிறது .(அதாங்க ஒட்டு கேட்கிறது)

///"என்னடி எங்க அது (மருமகனைத் தான் !) எங்க ஊர் சுத்தப்  போயாச்சா  ? இன்னைக்கு லீவ் தானே கூட மாட ஒத்தாசைக்கு வச்சுக்கலையா நீ தனியாக்  கிடந்துக்  கஷ்டபடுற(?)"

''சரி சரி எப்போ கடைக்குப்  போன, அவருக்குப்  பிடிச்ச புடவையா ? ஏண்டி இப்படி இருக்கிற?.....அது உனக்கு பிடிச்சாலுமேப்  பிடிக்கலச்  சொல்லு.....அப்பத்தான் எல்லாம் உன் விருப்பப்படி என்று ஆகும்.....ஓ ! நாத்தனார் பையன் வந்திருக்கானா .....அதுதான் கேட்கிறதுக்கு எல்லாம் ம் கொட்ற? (மகளை பேச விட்டாத்தான?) அவன் எதுக்கு இங்கே வரான், இன்டர்வியூவா ஏதோ ஒரு சாக்கு கிளம்பி வந்துறாங்க.....உன் வீட்ல என்ன கொட்டியாக்  கிடக்கு? பரவாயில்லைன்னு சமாளிக்காத.....எல்லாம் உன் நல்லதுக்கு(?) தான் சொல்றேன்"

"இன்னைக்கு இன்டர்வியூ, நாளைக்கு வேலைக் கிடைச்சு, 'வெளிலத்  தங்கினா செலவு ஆகும் இங்கேயே இருக்கட்டும்' னு இவர் சொல்லப்  போறார்.....அதுக்கு முன்னாடி உஷாரா இருந்துக்கோ.....இவங்க எல்லோரையும் பத்து அடி தள்ளி வை, சொல்றதுக்  கேட்குதா முந்தானையில முடிஞ்சி வச்சுக்கோ...இல்லை உன்னை தெருவுக்குக்  கொண்டு வந்துவிடுவான்.....சாயந்தரம் அந்தாளு வந்ததும், நல்லா டிரஸ் பண்ணிட்டு சினிமா ஏதும் போய்ட்டுவா, அனுசரணையா(!) நடந்துக்க.....தகுந்த நேரம் பார்த்து நாத்தனார் மகனைப்  பத்திச்  சொல்லு !"///

இதுபோல பல உதாரணங்கள் இருக்கிறது. போதாததுக்கு டிவி சீரியல்கள் வேற இப்படி நிறையச்  சொல்லிக்  கொடுக்கிறது...!!
  
இது போன்ற எந்த தவறான ஆலோசனைக்கும் தயவுசெய்துச்  செவிசாய்த்து விடாதீர்கள். உங்கள் குடும்ப சந்தோசம் உங்கள் கையில் மட்டும் !! தவறான வழிமுறைகள் எதையும் கைக்கொண்டு குடும்பத்தை நாடகமேடையாக மாற்றிவிடாதீர்கள். நித்தம் ஒரு வேஷம், நித்தம் ஒரு நாடகம் என்பதாக இருக்குமே தவிர குடும்பமாக இருக்காது...!

(உடல் கவர்ச்சி தாண்டிய மந்திரங்கள் பற்றி போனப் பதிவில் சொல்லிவிட்டேன் , நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)



மெல்ல
என்
தலைகோதி
கை
விரல்களை
சொடுக்கெடுக்கும்
உன் தளர்ந்த விரல்கள்
மட்டும் போதுமடி
என் வயோதிகம்
பிழைத்துக்கொள்ளும்!!

அழகான குடும்ப வாழ்க்கைக்கு ஒருவரின் மேல் ஒருவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தாக வேண்டியது அவசியம். முக்கியமாக கணவனும், மனைவியை தன் அன்புப்பிடிக்குள் வைத்தாக வேண்டும். கணவனின் பிடிக்குள் மனைவி இல்லாவிட்டால் எடுத்ததுக்கு எல்லாம் எதிர்வாதம் கிளம்பும். அதை தவிர்க்க மனைவியின் பிரியத்தைச்  சம்பாதியுங்கள். மனைவியை அதிகமாக நேசிக்கிறேன் என்று எண்ணி கொண்டிருந்தால் மட்டும் போதாது, அதை சொல்லில்,செயலில் வெளிப்படுத்துங்கள் !

தாம்பத்தியம் ஒரு வீணை , அதை மீட்டும் விதமாக மீட்டுங்கள் ! சுகமான இசை வெள்ளத்தில் மூழ்கி, வாழ்வை ரசித்து,உணர்ந்து,மகிழ்ந்து வாழுங்கள் ! வாழ்த்துக்கள் !!

*******************************************************************

தம்பதிகளுக்குள் உடல் , மனம் காரணமாக ஏதோ சிறு விருப்பமின்மை என்றாலும் விரைவில் சலித்து வெறுப்பின் எல்லைக்கு போய்விடுகிறார்கள். ஒருவேளை இந்த விருப்பமின்மைகள் மூன்று, நான்கு முறை என தொடர்ந்தால் மனவிரிசல் அதிகரித்து வேறு வடிகால்களை(?) தேடிக் கொள்கிறார்கள்.  

அடுத்த பதிவில் 'இல்லறத்திற்கு உடலுறவு ஏன் அவசியம் ?'  தொடர்ந்து பேசுவோம்...காத்திருங்கள் !!

*******************************************************************


நினைவிற்காக !

ஏற்கனவே விளக்கமாகச்  சொல்லி இருக்கிறேன்...மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் . எனது இந்த தொடர் கணவன், மனைவி பற்றியது...ஆண் பெண் என்ற பிரிவினை/பேதம் பற்றி இங்கே பேசப்படவில்லை.பெண்ணைக்  குறைச்  சொல்லி எழுதப்பட்டு இருக்கிறது என்று யாரும் பொங்கிடாதிங்க !? எதைப்  பற்றிச்   சொல்கிறேன் என்றே புரியாமல் விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது...!? தொடரில் சில உண்மைகளைச்  சொல்லும் போது எனக்கும் கசக்கவே  செய்கிறது.

குற்றாலமலையில் இருக்கிற ஆணாதிக்க ஞானசித்தர் வேற 'எது என்றாலும் வெளிப்படையாகச் சொல்லிடு, இல்லைனா பாவம் சேர்ந்துடும்'னு பயமுறுத்துகிறார்...!!! :))


                                                                           *****************

தொடர்ந்து பேசுகிறேன் 
கௌசல்யா  

வியாழன், செப்டம்பர் 8

NASSCOM, திருச்சி மற்றும் நான்...!



திருச்சியில் நான்கு நாள் ட்ரைனிங் ப்ரோகிராம் ஒன்று கடந்த ஆகஸ்ட்  மாதம் 23 லிருந்து 26ம் தேதி வரை நடந்தேறியது. இதனை நடத்தியவர்கள் நாஸ்காம் பவுண்டேஷன் NASSCOM பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம்,  National Association of Software and Service Companies.  இவர்கள் இதுவரை இதுபோன்ற 34 ஒர்க்சாப் நடத்தி இருக்கிறார்கள்.  எங்களுக்கு இதில் பங்குபெற வாய்ப்பு கிடைத்து திருச்சி சென்றோம். இந்த ட்ரைனிங் முக்கியமாக NGO'S அதாவது தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், சொசைட்டிகள் போன்றவற்றிற்காக நடத்தப் படுகிறது. அதிலும் புதிதாக நிறுவனம் ஆரம்பித்தவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

இதில் கலந்துக்கொள்ள தகுதி என்றால் ஒரு NGO (Non Governmental Organisation)  வாகவும் , அடிப்படை கணினி அறிவும் பெற்று இருக்கவேண்டும். 

                                  Mr.Vikas Kamble அறிமுக உரை  

ஒர்க்சாப் எதை பற்றியது?

பொதுவாக தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு என்று இணையத்தில் ஒரு வெப்சைட்டை உருவாக்குவதில் இருந்து, அதன் வடிவமைப்பு, தள இணைப்புகள், நிறுவனம் மேற்கொள்ளும் சேவை குறித்த செயல்களை தங்கள் தளத்தில் இணைப்பது மற்றும் , பயனாளர்கள்,டோனர்கள்  குறித்த தகவல்களை சேகரிப்பது, புதிய தன்னார்வலர்களை இணைப்பது, தன் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலக அளவில் கொண்டு சேர்க்க  இன்னும் பல வேலைகளுக்கு இணையத்தை நன்கு கையாளத் தெரிந்த பிறரிடமோ, அல்லது வெப் டிசைனிங் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டும். இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும். ஒவ்வொரு முறை ஒரு ஈவன்ட் முடிந்த பின்னும் அதை அப்டேட் செய்ய மீண்டும் அவர்களிடம் செல்ல வேண்டும். நாஸ்காம் பௌண்டேஷனின் இந்த வொர்க்சாப் இது போன்ற பல வேலைகளை செய்ய வெறும் நான்கு நாட்களில் பயிற்றுவிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறது.  


மேலும் கணினி நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட இன்றைய நாளில் சமூக பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுக்கு கணினி பற்றிய அறிவு மிக இன்றியமையாதது. முக்கியமாக பண பரிவர்த்தனைகள் பற்றிய கணக்குகளை எப்படி கையாளுவது, டோனர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது, தன்னார்வலர்களை ஒன்றிணைப்பது என சேவை நிறுவனம் குறித்த அனைத்து பணிகளையும் துரித கதியில் செய்வதற்கு இவர்களின் வழிகாட்டுதல் மிக உதவியாக இருக்கிறது.


                                சின்சியரா நோட்ஸ் எடுக்கிறோம் !
Ms Office 07
Word
Excel 
Power Point
Publisher

Windows Movie Maker


Online Tools
Skype
Face book
Twitter
Survey Monkey
Bigtech
Blog

இன்னும் சிலவும் பயிற்றுவிக்கபட்டன.

Mr.Karim Padaniya 

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தில் நடந்தது. பல ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள். நாஸ்காம் சார்பில் திரு.விகாஸ் காம்ளே(ப்ரோகிராம் மேனேஜர், மும்பை) மற்றும் திரு.கரீம் (டிரைனி, குஜராத்) இருவரும் இணைந்து நடத்தினர். தினமும் நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை. கற்றதை உடனே அடுத்த ஒரு மணிநேரத்திற்கு  கணினியில் பயிற்சியும் செய்ய வைக்கிறார்கள். காலை, மதியம் உணவும், நடுவில் தேநீர்/பிஸ்கட் உபசரிப்பும் உண்டு. பயிற்சி, உணவு இரண்டிற்கும் சேர்த்து மொத்தமாக ரூபாய் ஆயிரம் கட்டவேண்டும், ஒரு நிறுவனத்தில் இருந்து இரண்டு பேர் கலந்து கொள்ளலாம்.

ConnectIT ன் அடுத்த ஒர்க்சாப் பாண்டிச்சேரி மற்றும் கோயம்புத்தூரில் இந்த மாதம் நடைபெற இருக்கிறது. விருப்பம்/தேவை இருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். ஆறு மாதம்/ அதற்கு மேல் கற்க வேண்டியவற்றை நான்கு நாட்களில் கற்று கொடுத்துவிடுகிறார்கள்...! படித்தவற்றை நினைவில் வைத்து செயலில் காட்டி தங்கள் நிறுவனத்தை நல்முறையில் கொண்டு செல்வது நம் கையில் இருக்கிறது...!

இந்த ஒர்க்சாப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்

                                    Presentation
                                         
நான்காவது நாளின் முடிவில் ஒவ்வொருவரும் தனி தனி தலைப்புகளில் பிரசென்டேஷன் கொடுத்தோம். வந்திருந்த அனைவரும் தாங்கள் கற்றதை கணினியில் ப்ரோகிராம் தயார் செய்து அதை விளக்கிய விதம் மிக அருமையாக இருந்தது. presentation  கொடுப்பதை பலரும் முதல் அனுபவம் என்று சொன்னாலும், அப்படி தெரியவில்லை என்பதே உண்மை. கணினியில் வடிவமைக்கப்பட்ட தேர்வு ஒன்றையும் அட்டென்ட் செய்தோம். அனைவரின் மார்க் அறிவித்த போது எல்லோருக்கும் அவர்களின் பள்ளி, கல்லூரி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...!

இறுதியாக பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணை வேந்தர்.அவர்கள் அனைவருக்கும் சர்டிபிகேட் வழங்கினார். அதற்கு முன் தனக்கும் நாஸ்காம் பவுண்டேசன் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறிவிட்டு எங்களுக்கு சில வழிகாட்டுதல்களை மிக உற்சாகமாக கூறினார். அவர் எங்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல, நாங்கள் நன்றிகளை சொல்ல ட்ரைனிங் முடிவுக்கு வந்தது.


'மிக சுவாரசியமாக சென்ற நான்கு நாட்கள்' இறுதிகட்டத்தை நெருங்கவும் ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை கவ்வியதை உணர முடிந்தது. பல வயதினர் பல ஊர்கள் பல வாழ்வியல் சூழ்நிலைகள் இருந்தும் ஒரே உணர்வில் நான்கு நாட்களை கடந்தோம் ! நட்புகள் தொடரவேண்டும் என்று செல்பேசி எண்கள், இமெயில் முகவரிகளையும் எங்களுக்குள் பரிமாறி கொண்டு பிரியாவிடைபெற்றோம்.  

சில சுவாரசியங்கள் 

அங்கே வந்திருந்த 28 பேரில் ஒருவரும் பிளாக்கர் இல்லை என்பது எனக்கு ஒரு வருத்தம். ஆனா மூன்றாவது நாளில் அந்த வருத்தம் போயே  போச்சு. எப்படின்னு யோசிக்கிறீங்களா தொடர்ந்து படிங்க.....

பிளாக் பத்தி யாருக்கும் தெரியுமா என்று Mr.கரீம் கேட்டபோது நான் கை உயர்த்தி 'தெரியும், எழுதி கொண்டு இருக்கிறேன்' என்றேன். 'ஒகே குட்'னு சொல்லிவிட்டு 'உங்க பிளாக் லிங்க் சொல்லுங்க' என்று ப்ரொஜெக்டர் ஸ்க்ரீனில், பிளாக் ஓபன் பண்றதில் இருந்து ஒவ்வொண்ணா விளக்கம் கொடுத்து, போஸ்ட் எழுதி முடிச்சதும், பப்ளிஷ் பண்ணிய போஸ்ட் இப்படி இருக்கும் 'மனதோடு மட்டும்' தளத்தை சுட்டி காட்டினார். 

'மனதோடு மட்டும்'ல இருந்து 'பயணத்திற்காக வரை' உள்ளதை 'இது பிளாக் டைட்டில் இப்படி டாப்ல இருக்கும்' என்றவுடன் நான் திரு திருன்னு ஒரு முழி முழிச்சேன். அதை சரியா நோட் பண்ணிட்டார் போல ! 'எஸ் கௌசல்யா எனித்திங் ராங் ?'  நான் 'பஸ்ட் ஒன் இஸ் டைட்டில் அண்ட் செகண்ட் ஒன் இஸ் டிஸ்க்ரிப்ஷன்'னு தயங்கிட்டே சொல்லவும். 'ஓ !ஒகே பைன், கௌசல்யா யு டூ ஒன்திங், பெட்டெர் யு கேன் டேக் திஸ் செஷன், உங்க தாய்மொழில பிளாக் இருக்கிறதால மத்தவங்க புரிஞ்சிக்கிறது ஈசியா இருக்கும்' சொல்ல நான் என் கணவரை பார்க்க அவரோ, 'என்ன பாவம் பண்ணினாங்களோ எல்லோரும்' அப்படின்னு சிக்னல் காட்ட...ம்...நம்ம சைடு  இந்த அளவு வீக்கா இருக்கேன்னு நொந்தபடி மெதுவா எழுந்து, உள்ளுக்குள்  உதறல் எடுத்தாலும் ஒருவழியாக சொல்லி(உளறி) முடிச்சேன். சோதனை அதோட முடியல, பிராக்டிகல் நேரத்தில் மறுபடியும் கரீம் சார், 'if anybody have doubt, ask kousalya' கூலா சொல்லிட்டார். 

அப்புறம் என்ன மக்கள் எல்லோரும் பதிவுலக படைப்பாளிகளாக(!) ஆகியே தீருவது என்று முடிவு பண்ணிட்டாங்க. நான் மாத்தி மாத்தி ஒவ்வொருத்தருக்கும் பிளாக் ஓபன் பண்ண ஹெல்ப் செய்கிறேன் என்கிற பேர்ல சுத்தி சுத்தி வந்தேன்...கடைசில ஒரு சிலர் தவிர எல்லோரும் ஓபன் பண்ணிட்டாங்க. ஒரு சிலர் வார்ட்பிரஸ்ல, சிலர் பிளாக்கர்ல. சிலர் அவர்களை பற்றி ஒரு இன்றோ எழுதி போஸ்ட் போட்டுடாங்க. சந்தோசமாக இருந்தது. ஒரு பதிவரும் இல்லையே என்ற ஆதங்கம் இப்ப இத்தனை பேர் பதிவரானதும் போயே போச்சு.

இங்கே நான் ஒன்றை கவனித்தேன், 

           *  பிளாக்கில நாம எழுதினா மத்தவங்க எப்படி வந்து படிப்பாங்க?
           *  போஸ்ட் போட்டதும் யார் எல்லாம் வருவாங்க ?
           *  போன் நம்பர், வீட்டு முகவரி எல்லாம் போடலாமா?
           *  நாம போஸ்ட் எழுதி வச்சது எத்தனை நாள் வரை இருக்கும் ?!! 
           
இது போன்ற நிறைய கேள்விகளும், எனது ஜிமெயில் ஓபன் செய்த போது, அருகில் இருந்தவர்கள் மெயில் தமிழில் டைப் எப்படி பண்றீங்க என்று கேட்டதும் ஆச்சரியம். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஆபீசில் கம்ப்யூட்டரில் வேலை செய்து வருபவர்கள் !! மேலும் பிளாக் என்ற ஒன்றை பற்றி தெரியாதவர்கள் என்பது ஆச்சர்யம் என்றாலும் இது தான் நிதர்சனம். ஆனால் இது புரிந்தும் பதிவர்கள் என்ற பேரில் நாம (என்னையும் சேர்த்துத்தான் !) பண்ற அலம்பல் கொஞ்ச நஞ்சமா?

நண்பர் ஒருவர் அப்ப அப்ப ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டு சூழ்நிலையை கககலப்பாக மாற்றினார்.

* Mr.விகாஸ் 'உணவு, தேநீர் உங்களுக்கு ஒகே தானே, ஏதும் குறை இருக்கா?னு கேட்க நண்பர் 'அசைவம் இல்ல, அதுதான் பெரிய குறை' என சொல்ல எல்லோரும் சத்தமா சிரிச்சிட்டோம்.

* ப்ரோபைல்ல ஆணா பெண்ணா என்ற ஆப்ஷன் இருக்குதே நிறுவனம் பேர்ல ஆரம்பிச்சா என்ன போடுறது ?!! (என்னா, ஒரு சந்தேகம் ?!)

* Presentation கொடுக்க வந்த மற்றொருவர், வந்ததும், 'ஆள்காட்டி விரலை தூக்குங்க' என்றதும் நாங்க வேகமா ஆள்காட்டி விரலை உயர்த்தினோம். ஆனா அவர் தூக்கி இருந்ததோ கட்டை விரல் !! இதை கவனிச்சிட்டு நாங்க கேட்க, அவர் நிதானமாக 'எல்லோரின் கவனம் எங்கே இருக்கிறது' என செக் செய்ததாக சொல்ல அசந்துவிட்டோம். எல்லோரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அவர் கையாண்ட விதத்தை Mr.கரீம் & Mr.விகாஸ் மிக  ரசித்தார்கள் . 

'சமூகத்தில் பலதரப்பட்ட மக்களின் நடுவில்தான் தன்னார்வலர்களின் பெரும்பாலான நேரம் கழியும். நாம் பேசக்கூடிய விசயங்கள், அவர்களை சென்றடைய நமது 'பேச்சுத் திறன்' மிக முக்கியம். கூட்டத்தினரை நம் பக்கம் திருப்ப கூடிய லாவகம் தெரிய வேண்டியதன் அவசியத்தை இவர் புரிய வைத்துவிட்டார்' என்று Mr.காம்ளே வெகுவாக பாராட்டினார்.
 
* சென்னையில் இருந்து ஒர்க்சாபிற்கு வந்திருந்த திரு.சுப்ரமணி என்பவர் தன் விருப்பத்தின் பேரில் உணவு இடைவேளையில் 'தகவல் அறியும் உரிமை சட்டம்', அதன் முக்கியத்துவம் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். எங்களின் புரிதலுக்காக என்பதால் தமிழில் சொல்ல தொடங்கினார். உடனே 'ஆங்கிலத்தில் கூறுங்கள் நாங்களும் அறிந்து கொள்கிறோம்'  என்று Mr.கரீம் & Mr.விகாஸ் ஆர்வமாக சொல்லவும் பின் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். (பாடம் எடுக்க வந்தவர்களுக்கு, நாங்க பாடமும் எடுப்போம்ல...!) 
 
இப்படி நான்கு நாட்களும் பல விசயங்கள் இடைவெளியின்றி கற்றுக்கொண்டே இருந்தோம்.

திருநெல்வேலியின் பார்வையில் திருச்சி !

என் பசங்களுடன் சென்றதால் ஒவ்வொரு நாள் மாலையிலும்  ஊர் சுற்ற கிளம்பிவிடுவோம்.

மலைகோட்டை

உச்சிபிள்ளையார் கோவில் படிஏற மூச்சு வாங்கினாலும் நின்று நின்று மெல்ல உச்சியை அடைந்தோம். அங்கே கம்பீரமாக அமர்ந்திருதார் பிள்ளையார். அங்கிருந்து பார்த்தால் ஊர் விளக்கொளியில் தகதகவென கண்கொள்ளா காட்சி !!

கல்லணை :

கரிகாலன் கட்டிய கல்லணை என்று பசங்களிடம் வரலாற்றை சிறிது நினைவு கூர்ந்தோம். அணையின் கட்டுமானம் பிரமிக்க வைத்தது. இரவில் அந்த பகுதி மிக அற்புதமாக தெரிந்தது.

ஸ்ரீரங்கம் கோவில்

இராமாயாண காவியத்தை கம்பர் அரங்கேற்றிய இடம் இந்த ஸ்ரீரங்கம் என்பதை எண்ணி கோவிலை வலம் வந்தோம். நாங்கள் சென்ற நேரம் உற்சவர் வீதி உலா நடைபெற்றதால் பக்தியுடன் அருகில் கண்டு ரசித்தோம். சுவாமி ரங்கநாதரை பார்க்க இயலவில்லை என்று ஒரு வருத்தம். நடை  சாத்திட்டாங்க. (போனதே ராத்திரி,இதில வருத்தம் வேற ?!)

முக்கொம்பு

பகலில் சென்ற ஒரே இடம் . மிக அற்புதமான காவேரி நதி மூன்றாக பிரியும் இடம். ரொம்ப நேரம் அங்கே இருந்தோம்,திரும்பி வர மனமே இல்லை.     இங்கிருந்து கல்லணை வரை காவிரி நதியின் அழகை அள்ளி எடுத்து கேமராவில் வைத்துகொண்டோம்.

நீதிமன்றம் பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் போகவேண்டும் என இருந்தோம், நேரம் சரியாக வாய்க்கவில்லை.

ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதத்தில் மிக பிடித்திருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் திரும்பிய பக்கமெல்லாம் நிறைய பெரிய ஹோட்டல்கள் !!

திருச்சி ரோட்ல குறைந்தது ஒரு 200 பேரிடமாவது பேசி இருப்போம்.  ஸ்ரீனிவாச நகர்(தங்கி இருந்த இடம்) எப்படி போகணும் என்ற ஒரு கேள்வியை மட்டும் ஒரு நாளைக்கு பத்து முறை கேட்டு இருப்போம்,அப்ப மத்த இடங்கள எப்படி விசாரிச்சு இருப்போம்னு பாருங்க !!திருச்சி மக்கள் மிக பொறுமையா லெப்ட், ரைட்,ஸ்ரைட் னு சொன்ன விதம் இருக்கே ! அழகோ அழகு !! முதல் நாள் கேட்ட ஆளிடமே மறுநாளும் கேட்டோமான்னு வேற தெரியல !! எங்க பார்த்தாலும் பாலமா இருக்கு (எது எங்க போகுதுன்னு கண்ணுக்கு தெரிற மாதிரி  போர்ட் வச்சா என்ன மக்களே !?)  ஆனா அடுத்து முறை திருச்சி போனா நான் நிறைய பேருக்கு வழி சொல்வேன் (அந்த அளவு அனுபவப்பட்டாச்சு !)

பொதுவா பார்க்கும் போது ஊர்ல குப்பைகள் அவ்வளவா கண்ணுக்கு படல. சுத்தமாக தெரிந்தது. ஆனா மலைகோட்டை போனபோது பயங்கர மழை. அங்க இருக்கிற ரோட்ல தண்ணி நிறைய தேங்கி மக்கள் நடக்கவே முடியல...ரொம்ப கஷ்டபட்டாங்க ! அந்த தண்ணியும் சாக்கடை கலந்த மாதிரி இருந்தது ! அங்கே ஒருத்தரிடம் கேட்டேன், 'மழை பெய்தா இப்படிதான் மத்த நேரம் பிரச்சனை இல்லை' என்றார். மக்களின் இந்த சகிப்புத்தன்மைதான் அரசியல்வாதிகள், அதிகாரிகளை காப்பாற்றி வருகிறது...!!

எங்கே பார்த்தாலும் பசுமை, கம்பீரமாக பாய்ந்து ஓடும் காவேரிநதி,அழகான கட்டிடங்கள், புகழ்பெற்ற  கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவில்கள், இனிமையாக பழகும் மக்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்......!! மொத்தத்தில் திருச்சி எங்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டது...!

வாழ்க எம்மக்கள் ! வளர்க அவர்தம் பெருமை !!

பிரியங்களுடன் 

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

திங்கள், ஆகஸ்ட் 22

உள்ளத்தில் நல்ல உள்ளம்...! யார் இவர்...?!



நம் வாழ்க்கையில் பல வேறுபட்ட குணமுள்ள மனிதர்கள் நம்மை கடந்து சென்று இருப்பார்கள். அதில் ஒரு சிலர் நம் மனதை அதிகமாக கவர்ந்துவிடுவார்கள். பதிவுலகம் வந்தபின் எனக்கு தெரிந்தவர்கள் வட்டம் விரிந்துகொண்டே செல்கிறது...அதிலும் முக்கியமாக நெல்லை பதிவர்கள் சந்திப்பிற்கு பிறகு, என் அலைவரிசையோடு ஒன்றி போனவர்களை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன் என்பது மிக ஆச்சரியம்.

எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக சில முயற்சிகள் மேற்கொண்டபோது, சேவை உள்ளம் நிறைந்த மிகச்  சிறந்த ஒருவருடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. உடலளவில் ஒரு குறை இல்லை என்றாலும்  மனதில் பல குறைகளை வைத்துகொண்டு வலம் வருகிறோம். ஆனால் நம் போன்றோருக்கு மத்தியில் தான் அற்புதமான, சில நல்ல உள்ளங்களும் வாழ்ந்துவருகின்றன.

உடலில் குறை இருந்தும் தன்னை போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிற மனிதர்களை காண்பது அபூர்வம். அப்படி கால் ஊனமுற்ற ஒருவர் நவீன காலிபர் ஷூ ஒன்றை பிற மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் என்பதை கேள்விப்படும்போது என்னால் பாராட்டாமல் இருக்க இயலவில்லை. அச்செய்தியை நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.  

அது என்ன காலிபர் ஷூ ?

கால் ஊனமுற்றவர்கள் அதிலும் போலியோவால் பாதிக்க பட்டவர்கள் 'காலிபர் ஷூ' என்று அழைக்கப்படும் செயற்கை காலை அணிந்து இருப்பார்கள். ஆனால் அது சுகம் அல்ல வலி என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். 

சொல்லமுடியாத நரக வேதனை அது. சுமார் ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், தொடையிலும், முட்டியிலும் முட்டி மோதி உயிரை உறிஞ்சி எடுக்கும் அளவிற்கு வலி கொடுக்குமாம். தவிரவும் சில நேரம் உடைந்து போய், அடுத்த அடி வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார இயலாது, இரு சக்கர வாகனம் ஓட்ட இயலாது. அடிக்கடி காலில் ஏற்படும் காயத்தினால், வலி, மருத்துவம் என்று தொடரும் சிரமங்கள் சொல்லி முடியாது...ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு இந்த வலியையும் சுமந்துகொண்டுதான் பல ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். 

நவீன செயற்கை கால்

டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் கண்டுபிடிப்பு இது என்பது நாம் பெருமைபடகூடிய ஒரு விஷயம்.

இந்த நவீன செயற்கைகால் ஒன்றின் மொத்த எடையே  முக்கால் கிலோ தான். ஷாக்ஸ் மாட்டுவதை போன்று மாட்டிக்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம், வலி ஏதுமின்றி வழக்கமான எந்த வேலையிலும் ஈடுபடலாம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்காயிரம் என்றால் இதன் விலை 15  ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். இந்த விலை காரணமாக புதிய செயற்கைகால் இன்னும் பிரபலமாகவில்லை. இதை பற்றி தெரிந்தவர்கள் இதன் அதிக விலையின்  காரணமாக வலியுடன் வாழ்க்கையை தொடருகின்றனர். 



ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு துறையோ பட்ஜெட் காரணமாக பழைய ஷூவையே கொடுக்கின்றனர். வலி இன்மைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றை அதிக விலை காரணமாக வாங்க வழி இல்லாமல் தவிப்பது கொடுமை. 


இந்த வலியை அன்றாடம் அனுபவித்தவர் சென்னையை சேர்ந்த திரு.மின்னல் பிரியன். அதன் பிறகு இவர் நவீன காலிபர் வாங்கி அணிந்து அதன் அருமையை முழுமையாக உணர்ந்திருக்கிறார். இத்துடன் இவர் இருந்திருந்தால் நம்மை போன்ற ஒரு சராசரி மனிதராக மட்டுமாகவே  இருந்திருப்பார். ஆனால் தான் பெற்ற இன்பத்தை, வலி அனுபவிக்கும் பிறரும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இவர் மேற்கொண்ட செயல் தான் மிக ஆச்சர்யம்.


இவர் பெரிய வசதியானவர் இல்லை, ஆனால் தனக்கு தெரிந்தவர்களிடத்தில் பணம் கேட்டு பெற்று இந்த நவீன ஷூவை மாற்றுதிறனாளிகளுக்காக வாங்கி, அதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதை ஒரு சேவையாக செய்து வருகிறார். இதுவரை இருபது பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். பழைய காலிபர் ஷூவுடன் ரோட்டில் நடக்க முடியாமல் யாராவது சென்றால், அவர்களிடம் வலிய சென்று அவரது காலை அளவெடுத்து புது ஷூவை வாங்கி அணிவித்து மாட்டி அந்த புதிய நடையை பார்த்து சந்தோஷபடுகிறார் இந்த மின்னல் பிரியன்...!
இவரது இந்த சீரிய சேவைக்கு மிக பக்க பலமாக இருப்பது இவரது துணைவியார் திருமதி பவானி அவர்கள்.


திரு.மின்னல் பிரியன் மேற்கொண்டுள்ள இதர பணிகள் 

* 'அன்பு கரம்' மாற்று திறனாளிகளுக்கான மாத இதழில் துணை ஆசிரியர். 

* தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் (அரசு பதிவு ) 
மாநில துணை பொதுசெயலாளர்.

* திரைத்துறையில் உதவி இயக்குனர்,பாடலாசிரியர்.   


நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு 


போன வாரத்தில் ஒரு நாள் மதுரையில் இருந்து ஒருவர் மின்னல் பிரியனை தொடர்பு கொண்டு.' எனக்கு இந்த காலிபர் வேண்டும், எவ்வளவு பணம் வேணும்' என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பிரியன் 'ஒரு பைசா கூட வேண்டாம், நான் இலவசமா தருகிறேன்' என்று சொல்லி இருக்கிறார். உடனே அவர் திடுக்கிட்டு, 'இல்லைங்க நான் ஒரு பிரபல வக்கீல், பணம் கொடுத்தே வாங்கிக்கிறேன், என் காலை அளவெடுக்க வேண்டியது இருப்பதால் நேரில் வந்து சந்திக்கிறேன்' என்று கூறி சென்னை வந்து சந்தித்து இருக்கிறார். நேரில் பிரியனின் எளிமையை பார்த்து மிக வியந்து, உங்களின் சேவைக்கு முன் நான்,  என் பணம் இரண்டும் எம்மாத்திரம், எனது காலிபருக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன், மேலும் மூன்று பேருக்கு தேவையான காலிபரையும் ரெடி பண்ணுங்கள்,  அந்த செலவு  முழுதும் நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்லி இருக்கிறார் !!

இது தாங்க மனிதம் ! இது போல் உதவி செய்ய மனம் கொண்டவர்கள் நம்மை சுற்றி நிறைந்து இருக்கலாம்...இப்படி அவர்களை ஒருவருக்கு ஒருவர் இணைத்து வைப்பது இறைவனின் செயல் மட்டுமல்ல நம் போன்றோரின் முயற்சியும் தான். 

அதனால் நண்பர்களே ! உங்களிடம் இரண்டு வேண்டுகோள்கள் வைக்கிறேன்


முதல் வேண்டுகோள் 

உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களிடம் பிரியன் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் கொடுங்கள். தொடர்பு கொண்டு முன் அனுமதி வாங்கிக்கொள்ள சொல்லுங்கள். நீங்கள் செய்ய போகும் இந்த சிறு உதவி, மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும். செய்வீர்களா பதிவுலக நட்புகளே ?! 

முகவரி

கவிஞர் மின்னல் பிரியன்
310 A குளக்கரை 3வது தெரு,
துரைப்பாக்கம் 
சென்னை - 97.

தொலைபேசி எண் 
+91 8925373001  
+91 9842293774

இரண்டாவது வேண்டுகோள்

"மாற்றுத்திறனாளிகள் துறை இப்போது முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால் அவர் மனது வைத்தால் அரசின் மூலமாக பழைய ஷூவிற்கு பதில் புதியதை கொடுத்து உதவலாம்.  அதுவரை நாங்கள் எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம்" என்று பிரியன் அவர்கள் சொன்னது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. 


அரசாங்கம் இதில் உதவி செய்யும் என்று நம்புவோம் 

மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , சேவை எண்ணம் கொண்ட நல் இதயங்கள் முன் வந்தால் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின்  வாழ்வில் ஒளி ஏற்றலாம். அந்த நாள் ஒன்று நிச்சயம் வரும்...! 


பலரையும் இந்த தகவல்கள் சென்றடையச் செய்யுங்கள்...! என்றாவது, யார் மூலமாவது  முதல்வரின் பார்வைக்கு செல்லலாம். மேலும் நல்ல உள்ளங்கள் இதற்கு உதவி செய்ய முன் வரலாம்...!


பின் குறிப்பு :


1. கவிபேரரசு வைரமுத்து அவர்கள் இந்த சேவையை கேள்விப்பட்டு தம்பதிகள் இருவரையும் அழைத்து பாராட்டி ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளார். மேலும் நிறைய பேருக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்...!

2. நெல்லையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளில் காலிபர் ஷூ தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் டிரஸ்ட் இமெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள்.  எனது டிரஸ்ட் மெயில் ஐடி -  easttrust2011@gmail.com




நன்றி - திரு.மின்னல்பிரியன் 

புதன், ஆகஸ்ட் 3

தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

கணவன் மனைவிக்கான தலையணை மந்திரம்


மந்திரம் என்பது ஆன்மீக வாழ்வுக்கானது என்றாலும் நம் சமூக அமைப்பில் சாதாரணமாகச் சொல்லப்படும் பொதுவான ஒரு மந்திரம் தலையணை மந்திரம் !! இது கணவன் மனைவி இருவரும் தங்களின் தனிமையான நேரத்தில் ரொம்ப ஸ்பெஷலாக அன்னியோனியமாக பேசிக்கொள்வதை குறிக்கிறது! ஆனால் இதன் அர்த்தம் வேறு விதமாக நம்மால் எடுத்து கொள்ளப்படுகிறது.

எனக்கு தெரிந்தவரை மாமியார் தனது மருமகளை திட்டுவதற்கு கையாளும் ஒரு வசைச் சொல் என்றே தெரிகிறது. 'தலையணை மந்திரம் போட்டு என் மகனை மயக்கிட்டா ', 'அப்படி என்ன தலையணை மந்திரம் போட்டாலோ,இப்படி மயங்கி கிடக்கிறான் '  இதை சொல்லாத மாமியார்கள் குறைவு.....!! ஆனால் மிக உன்னிப்பாக கவனித்தால் இதன் பொருள் அந்தரங்கம் என்றே வருகிறது. இது எவ்வளவு மோசமான உதாரணம் என்று பலருக்கும் புரிவதில்லை....ஆண்கள் எல்லோரும் அந்த உறவிற்கு மயங்கிவிடுவார்கள் என்றும் அதற்காக பெற்றவளையும் உதாசீனப் படுத்தி விடுவான் என்பதாகத்தானே பொருள்...?! அதுவும் பெற்ற தாயே தனது மகனை அவ்வாறு சொல்வது எந்த விதத்தில் ஏற்புடையது !?

மருமகளை திட்டுவதற்காகக்  கூறப்படும் இந்த வார்த்தை அந்த ஆண்மகனை இழிவுக்குள்ளாக்கும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை ?? 'வீட்டுக்காரனை கைக்குள்ளப்  போட்டுகிட்டா' , 'முந்தானையில் முடிஞ்சிகிட்டா' என்பது போன்றவைகள் பெண்ணை குறை சொல்லணும் என்று பேசப்பட்டாலும் மறைமுகமாக அங்கே கேலிப் பொருளாக்கப்படுவது பரிதாபத்துக்குரிய ஆண்மை...!!

ஆண்களே ?!

என்னவோ ஆண்கள்  என்றாலே எப்போதும் பெண் சுகத்திற்கு அலைபவர்கள் போலவும், அதைத் தவிர அவர்களின் மூளை வேறு எதையும் சிந்திக்காது என்கிற ரீதியில் ஒரு சில பெண்கள் ஆண்களை நடத்துவது மிகவும் வருந்த தகுந்த ஒன்று.......

ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே.....அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!! அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறிப்  போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள் ! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிதுப்படுத்த மாட்டான். இது புரியாத அறிவிலிகள் தலையணை மந்திரம் என்று எதையாவது சொல்லி அன்பான தம்பதிகளுக்கிடையே பிரிவினையை, விரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள். 

அதனால் கணவன், மனைவி இருவருக்குள் மனப்பொருத்தம் ஏற்பட வழி  இல்லாமல் கெடுக்கக்கூடிய காரணங்கள் பெரும்பாலும் பெண்ணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது.....அதை பெண்கள் புரிந்துக்  கொண்டு நடந்துக் கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பெண்ணிற்கு நல்லது சொல்கிறோம்/செய்கிறோம் என்று வருகிற நலம்விரும்பிகளை(?) முதலில் வெளியே நிறுத்துங்கள்.  

மனைவிகளே !


பிறர் கூறும், கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதீர்கள்...அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள் குறிப்பாக  தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.

இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய்  கொண்டிருக்கும் போது...இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிடக்  கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!


ஒரு சர்வே : 


" நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்துக்  கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"  


சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!

சரி இருக்கட்டும்...தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க... அதையும் பார்ப்போம்.....


"எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம்.  வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துக்  கொள்கிறோம் " 


இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை...சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம் !!



'தலையணை மந்திரம்' இனி இப்படி போடுங்க...!!


* மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!

* அவரது குறைகளை மட்டுமே பெரிதுப் படுத்தி வாதாடாமல் நிறைகளைச்  சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!

*  கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!

* குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!

* எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துக் கொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!

கணவன் தன்னை புரிந்துக்  கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்துக்  கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக்  கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டுப்  பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்துச்  செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்கக் கூடாது...!! 

பிறரின் தேவையற்ற ஆலோசனைகளைக்  கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை  ஏற்படுத்திக்  கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின்பற்றுங்கள்...கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதைக்கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல் !!

                                           ***************************


பின் குறிப்பு 


தாம்பத்தியம் பற்றிய தொடரின் 25 வது பாகம் இது ! இந்த தொடர் முதலில் ஒரு பத்து பாகத்துடன் முடிந்துவிடும் என எண்ணி எழுத தொடங்கினேன் . வாசகர்களாகிய உங்களின் அன்பான ஆதரவினால் இது இன்னும் பல பாகங்களைத்  தொடரும் என்று நினைக்கிறேன்...! என்னை தொடர்ந்து எழுத வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 


பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

 


செவ்வாய், ஜூலை 19

பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

முன்னுரை :

மரங்களை வெட்டுங்கள் என்று ஒரு பதிவை போன வருடம் இதே ஜூலை மாதம் எழுதினேன். அந்த பதிவு பலருக்கும் பதிவுகளாகவும், மெயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றும் பகிர்ந்துகொள்ளபட்டு வருகிறது. கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் இந்த பதிவு பல்வேறு தளங்களில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது...இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த மரத்தின் நச்சுத்தன்மை பற்றிய ஒரு விழிப்புணர்வு பலரிடம் சென்று சேர்ந்தது என்பதை குறித்து எனக்கு ஒரு நிறைவு. ஆனால் அது மட்டும் போதாது... அதில் ஒரு சிலர் பின்னூட்டத்தில் கருவேல மரம் என்பது மருத்துவத்திற்கு உரியது, நல்ல மரம் தானே என்று சந்தேகத்தை எழுப்பினர்...அதற்கு ஒரு விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.
            
மண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.

நல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிய வேண்டும் !

இரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துகொள்வது அவசியம்.

கருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica).  இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது. 

இம்மரத்தினை பற்றி மேலும் தகவல்கள் தேவை எனில் இங்கே சென்று பார்க்கவும்... 


   மரம் 

இலை, பூ 

                                                                                                  காய் 

* நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும். 

                                                                              மரம் 
                                                                       

                                                    இலை, பூ 
                                  
                                                                            காய்

இம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது.

பெரிய பாதிப்புகள் 

நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.

புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. 

இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி  விடுகிறது ! ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...!!?  

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.  

விறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!

அடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.

* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.

* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய ?!!

இன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா ??

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.

கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின்   தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்...!

உடனடி தேவை : வரையறுக்கப்பட்ட திட்டம் 

அறிவொளித்திட்டம் கொண்டுவந்த போது நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நச்சுமரத்தை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் அவசியத் தேவை.

இம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்...இதன் புகை கூட நமக்கு பகை ! 

நமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்...மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது.....ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது !!?

உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)


கெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் !! 

தலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் !

இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.

மரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்... 

 'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் !! 

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த  முழு அளவில் உதவி செய்யவேண்டும்.

கடைசியாக ஒரு கேள்வி

இம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன ??!!

சில ஆதாரங்கள் 

http://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Prosopis_juliflora.html

எனக்கு தெரிந்தவனவற்றை பகிர்ந்திருக்கிறேன், இன்னும் தெளிவான ஆதாரங்கள் நன்மை/தீமை எது இருப்பினும் அறிய விரும்புகிறேன்...மேலும் விவரங்கள்/தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...


"நச்சு மரத்தை பற்றிய இந்த தகவல்கள் /விவரங்கள் பலரையும் சென்றடைய உங்கள் தளங்களில் இந்த பதிவை வெளியிட்டும், மின் அஞ்சல் செய்தும் கூகுள் பஸ்சிலும், முக நூலிலும் பகிர்ந்து  உதவுவீர்களாக !"




*********************************************









வெள்ளி, ஜூலை 8

ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....!


பல இடங்களிலும்  நெல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றிய செய்திகள் புகைப்படங்கள் ! சந்தோஷ நிகழ்வுகள் நடந்ததை நினைவு படுத்தி பகிர்ந்துகொண்டே இருந்தாலும், போதும் என்ற திருப்தி வரவில்லை. முந்தைய பதிவில் விட்டு போன சில உறவுகளுக்கு இங்கே நன்றி சொல்லிகொள்கிறேன்.

நாய்க்குட்டி மனசு ரூபினா இவங்களை அன்றுதான் சந்தித்தேன்...இப்ப நாங்க இரண்டு பேரும் நெருங்கிய பாசமலர்கள். 

கல்பனா - எனக்கு இந்த சந்திப்பின் மூலம் கிடைத்த அருமையான ஒரு தங்கை.

ஜெயவேல் - இவங்க அண்ணாவின் உடன்பிறந்த அண்ணன்...இவங்க பிளாக் ரொம்பவே வித்தியாசமானது. ஒரு பெண் பிறந்தது முதல் வளர்ந்து திருமணம் முடிந்து , தாயான பின்னும் அதற்க்கு பின்னும் தொடரும் காலம் வரையிலான சடங்குகள் பற்றிய முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறார்.

செல்வா - நிகழ்ச்சியை அதிக கலகலப்பாக்க இவரின் கதை நன்றாகவே உதவியது. அவர் எழுந்ததுமே எல்லோரும் சிரிக்க தொடங்கிடாங்க.எங்கள் கலாட்டாக்களையும் தாண்டி கதையை சொல்லி முடித்தது அவரது திறமைதான். பத்திரிகை துறையில் இவர் பிரகாசிக்கவேண்டும் என்று செந்தில் சார் சொல்லியது மிக பொருத்தம். செல்வாவிற்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.

ஸ்டார்ஜான் - மிகவும் மென்மையாக பேசினார்...உரிமையோடு வீட்டிற்கு அழைத்திருக்கிறார்...போய் பிரியாணி சாப்பிட்டு வரணும் என்று ஒரு பிளான் இருக்கு. 

மற்றும் உறவுகள்  ஜெயந்த், பிரகாஷ், மணிவண்ணன், ஜோசபின் பாபா, கோல்ட்சிவம், அ.மு.ஞானேந்திரன்,சிநேகிதன் அக்பரின் தம்பி, காதர் அவர்கள் 
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
                                                         ***

பதிவுலகத்தில் சில நேரங்களில் நடக்கும் ஈகோ தொடர்பான சண்டைகள் பெரிதும் வருத்தத்திற்குரியது.ஆனால் இது போன்ற சந்திப்புகள் உறவுகளை வளர்க்கும்... பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான கொஞ்ச காலத்தில் போட்டி, பொறாமை,கோபம், பகைமை என்று வளர்த்து மனித மனங்களை கொன்று போட்டு கொண்டிருக்கிறோம். அன்பு இந்த ஒன்றை மட்டுமே ஏன் நாம் எல்லோர் மனங்களில் விதைக்க கூடாது...??! அதற்கு இந்த மாதிரியான சந்திப்புகள் மிக அவசியம் என கருதுகிறேன். 

நானும் சங்கரலிங்கம் அண்ணன், பாபு மூவரும் சந்திப்பு  ஏற்பாடுகள் பற்றி பேசும் போது, யாருக்கும் சின்ன மனவருத்தம் கூட வந்துவிட கூடாது, சந்தோசமாக தொடங்கி கடைசி வரை அப்படியே முடிக்கணும் என்பது தான் முக்கிய நோக்கமாக இருந்தது. சூழ்நிலையை கலகலப்பாக்க எதாவது பேசணும் என்று நானும் பாபுவும் சில பிளான் வேற போட்டோம்.....! (நடுநடுவே கமெண்ட்ஸ் பாஸ் பண்ணனும்...!என்பது போல)  ஆனால் நாங்கள் நினைத்ததை விட பல மடங்கு சிரிப்புகளை அள்ளிகொட்டி எங்களை பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்கள் வந்திருந்த உறவுகள்...! 

பதிவுலக சந்திப்பின் அர்த்தம் வெறும் கேலியும், கொண்டாட்டமும் மட்டும் இல்லை, நாங்கள் இணைந்தால் சேவையிலும் பங்கு கொள்வோம் என்ற ஒன்றை நிகழ்த்தி எங்கள் மனங்களை நிறைத்து விட்டார்கள். 

சந்திப்பு பற்றி பேச்சு வந்ததும் என் கணவர்,  'ஒரு சின்ன சேவை எதுவும் செய்யுங்கள், ஒரு முன்னுதாரணமா' என்றார். என் மனதிற்கு சரி என்று பட்டாலும்  , மத்தவங்க  என்ன  சொல்வாங்க  என்ற தயக்கம் இருந்ததால் சகோதரர் பாபுவிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். 'தாராளமாக செய்யலாம் சகோ எல்லோரும் சம்மதிப்பார்கள்' என்றார். அதன் பின் அண்ணனிடம் சொன்னோம், எங்கள் அலைவரிசை தான் ஒன்றாச்சே...! சந்தோசமாக உத்தரவு கொடுத்தார். சந்திப்பின் போது உறவுகளிடம் சொன்னார், சம்மதம் என்று அனைவரும் கைகளை தூக்கி ஆதரவு தெரிவித்தனர். வாரி வழங்கினர்.

நெல்லையப்பர் சுவாமி அன்பு ஆஸ்ரமம் மற்றும் கருணை இல்லத்தில்

இதோ இன்று 35 குழந்தைகளின் மனங்கள் உற்சாகத்தில்...! அக்குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் பெரிய சொத்து புத்தகங்கள் வைக்கும் பேக், அந்த விருப்பம் நிறைவேறிய சந்தோசத்தில், இரு கை நீட்டி பேக்கை பெற்றதும் 'நன்றி அம்மா' என்று தழுதழுத்த குரலில் சொன்ன அக்கணத்தில் மீண்டும் ஒருமுறை  தாயாய் பிறந்தேன் ! பளபளக்கும் விழிகள் ! அங்கும் இங்கும் அலைபாயும்  கருவிழிகள் ! என்னிடம் தனிமையில் எதையோ சொல்ல துடித்தது போல் தோன்றியது...அண்ணனும் சித்ராவும் அங்கிருந்து சென்ற பின்னரும் என்னால் விடைபெற இயலவில்லை. 'அண்ணா நீங்கள் கிளம்புங்கள் நான் கொஞ்சம் நேரம் கழித்து வீட்டுக்கு போய் கொள்கிறேன்' என்றேன். என் உள்ளத் தேடல் நன்கு தெரிந்தவர் என்பதால் ஒரு மௌன புன்னகையில் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

அங்கிருந்த ஆசிரியையிடம் இயல்பாய் பேசிக்கொண்டே குழந்தைகளின் அறைகள் முழுவதையும் சுற்றினேன். தன் நிலைகளை என்னிடம் சொல்லி அமைதி கொண்டன அறைகள் !  என்ன செய்யமுடியும் என்னால் ? நலம் விசாரிக்கவும், ஆதங்கபடவும், வருத்தப்பட்டு கடந்து செல்ல மட்டுமே பழகி போன சராசரி மனித மனம் !

நான் அங்கிருந்த சமயம் ஒரு தந்தை தன் மனைவி இறந்து விட்டாள், பெண் குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லை, படிக்கவும் வைக்கணும் என்பதால் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்" என்றார்.   விவரங்களை எல்லாம் குறித்து வைத்துகொண்டார்கள்...வகுப்பு ஆசிரியை ஒருவரிடம் இரு குழந்தைகளையும் ஒப்படைத்தார் தலைமை ஆசிரியை...! அவர்களின் தந்தை வெளியே சென்றதும் நான் குழந்தைகளின் கைகளை பிடித்து 'உன் பேர் என்னமா' என்றேன், மழலைக்குரலில் 'வெங்கடலட்சுமி' என்றாள். 'சரி வீட்ல யார் எல்லாம் இருக்காங்க' கேட்டேன். அவளும் உற்சாகமாக 'செவப்பு கோழி, கருப்பு குட்டி நாய் ம்...அப்புறம் எங்க அம்மா...!?' திடுக்கென்றாலும் மறுகணம் சுதாரித்துக்கொண்டேன் !

வறுமை ! இதன் காரணமாக உயிருடன் இருக்கும் தாய் சாகடிக்கபட்டாள். படிக்க வைக்க பொருள் இல்லை, உணவு கொடுக்க உணவு இல்லை என்ன செய்யும் இந்த பிஞ்சு குழந்தைகள். சோறு போட்டு படிப்பு சொல்லிகொடுத்து அங்கேயே பாதுகாப்பாய் இருப்பார்கள் நம் பிள்ளைகள் என்று கொண்டுவந்துவிட்டு போகிறார்கள். அரசு பள்ளியில் சேர்த்தால் கௌரவம் இல்லை என்று எவ்வளவு பணம் கேட்டாலும் தனியார் பள்ளியில் சேர்த்து பெருமை பட்டுகொள்கிறோம். என் போன்ற பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் இது போன்ற இல்லங்களுக்கு சென்று வரவேண்டும்.

பேசிகொண்டிருந்தபோது ஒரு வயதான அம்மா வந்தாங்க, தன் மகனின் நினைவுநாள்  வருகிறது அன்று இங்கே அன்னதானம் செய்யவேண்டும் என்று. இவர்களும் சரி என்று தேதி குறித்துவைத்து கொண்டு நன்றி சொல்லி அனுப்பினார்கள். இது போன்று மாதத்திற்கு பத்து விருந்துகள்(அன்னதானம்) உண்டாம். அன்று குழந்தைகள் அருஞ்சுவையுடன் உண்டு மகிழ்வார்களாம். நல்ல விஷயம் தான். ஆனால் என் மனம் வேறு விதமாக சிந்திக்க தொடங்கியது.

ஒரு நாள் அருஞ்சுவை மறுநாள் சாதாரண உணவு என்னும் போது மீண்டும் அத்தகைய உணவு எப்போது கிடைக்கும் என்று ஏங்குவார்களே ? அந்த ஏக்கம் பெரியவர்களான போதும் மனதில் தங்கி இருக்குமே...?! இத்தகைய மனநிலை நல்லதா ? கிடைத்த போது ஆர்ப்பரிப்பதும், இல்லை என்ற போது துவண்டு ஏக்கத்தில் கழிவதும் சரியா ?

தங்களின் ஒரு மனத்திருப்திக்காக செய்யகூடிய இந்த ஒருநாள் நிகழ்விற்கு பதிலாக அந்த பணத்தில் தேவையான அரிசி, மளிகைபொருட்கள் அல்லது வேறு அத்தியாவசியமான ஒன்று இவற்றை வாங்கிகொடுக்கலாம். பத்துநாள் விருந்தளிப்பவர்கள் அனைவரும் இதுபோல் கொடுக்கும் போது அந்த மாதந்தோறும் ஓரளவிற்கு நல்ல சரிவிகிதமான உணவை அவர்கள் உண்ண வழி கிடைக்கும். என் மனதிற்கு தோன்றியதை அவர்களிடம் சொன்னபோது,  'நீங்கள் சொன்ன யோசனை நல்லா இருக்கு, ஆனா டோனர்கள் சம்மதிக்க மாட்டார்கள், அன்னத்தை(உணவை) தானமாக கொடுத்தால் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும் என்பார்கள்' என்றார். (கவனிக்க : அன்னதானம்  செய்வது  தவறு  என்று  இங்கே  நான்  குறிப்பிடவில்லை...!)

சிறு குழந்தைகளிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் பகிர்ந்த சில வார்த்தைகள் எனக்கு இப்படி எண்ண வைத்தது !

இதுபோல் பிறந்த நாள், நினைவு நாள் அன்று ஒருநாள் மட்டும் அன்னதானம் செய்யும் எனக்கு தெரிந்தவர்களிடம் இனி இது பற்றி சொல்லணும் என்று நினைத்து கொண்டு அங்கிருந்து விடைபெற்று வந்துவிட்டேன்.        

தலைமை ஆசிரியரிடம் பேசிகொண்டிருந்த போது நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்...! இன்னும் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கான வேலைகளை செய்வதற்கான முயற்சிகளை சங்கரலிங்கம் அண்ணன் எடுத்து வருகிறார்.   

பதிவர் சந்திப்பினை  தொடர்ந்து கருணை இல்லத்துடன் ஏற்பட்ட பிணைப்பு  வாழ்வின் மீதான பிடிப்பை இன்னும் அதிகபடுத்தி இனி கழியும் நாட்களை அர்த்தமுள்ளதாக்க புதிய  உத்வேகத்தை கொடுத்தது. 

தினம்...
எழுகிறோம்
உண்கிறோம்
சம்பாதிக்கிறோம்
வளர்கிறோம்
வளர்க்கிறோம்
வாழ்கிறோம்
முடிக்கிறோம் 
முடிகிறோம் !
  
ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கை...ஆனால் ஒரு சிலர் வாழ்ந்து முடித்த(முடிந்த) பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எம் ஜி யார் அவர்கள் இறந்து 23 வருடங்கள் கடந்தும் இன்றும் பல மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் சமாதிக்கு தினம் வந்துபோகும் மக்களை பார்த்தால் தெரியும். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தின் முள் இன்னும் ஓடிகொண்டிருக்கிறது என்று சமாதியின் மேல் காதை வைத்து கேட்கிறார்கள், ஒலி கேட்டதாக சொல்லி பரவசம் அடைகிறார்கள். அவர் பத்து வருடம் தொடர்ந்து அரசியலில் கோலோச்சினார் என்பதற்காக அல்ல அந்த கூட்டம்..... மக்கள் மேல் அவர் வைத்திருந்த அன்பு, பாசம், கொடுத்து சிவந்த அவர்தம் கைகள் !!    

சேவை என்று செய்யமுடியவில்லை என்றாலும், சக மனிதரிடம் அன்பை பரிமாறுவோம். சுயநலம் மிகுந்து போன இன்றைய சூழலில் அடுத்த வீட்டினரிடம் ஒரு 'ஹாய்' சொல்ல கூட அதிகம் யோசிப்பவர்களாக இருக்கிறோம். நாம் கொஞ்சம் மாறினால் என்ன...?! முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியில் எதிர்படும் மனிதர்களை குறைந்தபட்சம் ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....! 

"இறந்த பின்னும், ஒரு சில மனங்களிலாவது நாம் வாழ்வோம்  நினைவுகளாய்...!!"

                                ***********************************************

"மரத்தை வெட்டி, மண்ணை காப்பாற்றுவோம் "  என்ன இப்படி சொல்றாங்க என்று யோசிக்கிறீங்களா...? அடுத்த பதிவில் இதற்கான பதில் கிடைக்கும்.  மிக முக்கியமான ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.


                                                                   *********






இன்று கழுகில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் !!