வெள்ளி, ஜூலை 8

9:31 AM
19


பல இடங்களிலும்  நெல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றிய செய்திகள் புகைப்படங்கள் ! சந்தோஷ நிகழ்வுகள் நடந்ததை நினைவு படுத்தி பகிர்ந்துகொண்டே இருந்தாலும், போதும் என்ற திருப்தி வரவில்லை. முந்தைய பதிவில் விட்டு போன சில உறவுகளுக்கு இங்கே நன்றி சொல்லிகொள்கிறேன்.

நாய்க்குட்டி மனசு ரூபினா இவங்களை அன்றுதான் சந்தித்தேன்...இப்ப நாங்க இரண்டு பேரும் நெருங்கிய பாசமலர்கள். 

கல்பனா - எனக்கு இந்த சந்திப்பின் மூலம் கிடைத்த அருமையான ஒரு தங்கை.

ஜெயவேல் - இவங்க அண்ணாவின் உடன்பிறந்த அண்ணன்...இவங்க பிளாக் ரொம்பவே வித்தியாசமானது. ஒரு பெண் பிறந்தது முதல் வளர்ந்து திருமணம் முடிந்து , தாயான பின்னும் அதற்க்கு பின்னும் தொடரும் காலம் வரையிலான சடங்குகள் பற்றிய முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறார்.

செல்வா - நிகழ்ச்சியை அதிக கலகலப்பாக்க இவரின் கதை நன்றாகவே உதவியது. அவர் எழுந்ததுமே எல்லோரும் சிரிக்க தொடங்கிடாங்க.எங்கள் கலாட்டாக்களையும் தாண்டி கதையை சொல்லி முடித்தது அவரது திறமைதான். பத்திரிகை துறையில் இவர் பிரகாசிக்கவேண்டும் என்று செந்தில் சார் சொல்லியது மிக பொருத்தம். செல்வாவிற்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.

ஸ்டார்ஜான் - மிகவும் மென்மையாக பேசினார்...உரிமையோடு வீட்டிற்கு அழைத்திருக்கிறார்...போய் பிரியாணி சாப்பிட்டு வரணும் என்று ஒரு பிளான் இருக்கு. 

மற்றும் உறவுகள்  ஜெயந்த், பிரகாஷ், மணிவண்ணன், ஜோசபின் பாபா, கோல்ட்சிவம், அ.மு.ஞானேந்திரன்,சிநேகிதன் அக்பரின் தம்பி, காதர் அவர்கள் 
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
                                                         ***

பதிவுலகத்தில் சில நேரங்களில் நடக்கும் ஈகோ தொடர்பான சண்டைகள் பெரிதும் வருத்தத்திற்குரியது.ஆனால் இது போன்ற சந்திப்புகள் உறவுகளை வளர்க்கும்... பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான கொஞ்ச காலத்தில் போட்டி, பொறாமை,கோபம், பகைமை என்று வளர்த்து மனித மனங்களை கொன்று போட்டு கொண்டிருக்கிறோம். அன்பு இந்த ஒன்றை மட்டுமே ஏன் நாம் எல்லோர் மனங்களில் விதைக்க கூடாது...??! அதற்கு இந்த மாதிரியான சந்திப்புகள் மிக அவசியம் என கருதுகிறேன். 

நானும் சங்கரலிங்கம் அண்ணன், பாபு மூவரும் சந்திப்பு  ஏற்பாடுகள் பற்றி பேசும் போது, யாருக்கும் சின்ன மனவருத்தம் கூட வந்துவிட கூடாது, சந்தோசமாக தொடங்கி கடைசி வரை அப்படியே முடிக்கணும் என்பது தான் முக்கிய நோக்கமாக இருந்தது. சூழ்நிலையை கலகலப்பாக்க எதாவது பேசணும் என்று நானும் பாபுவும் சில பிளான் வேற போட்டோம்.....! (நடுநடுவே கமெண்ட்ஸ் பாஸ் பண்ணனும்...!என்பது போல)  ஆனால் நாங்கள் நினைத்ததை விட பல மடங்கு சிரிப்புகளை அள்ளிகொட்டி எங்களை பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்கள் வந்திருந்த உறவுகள்...! 

பதிவுலக சந்திப்பின் அர்த்தம் வெறும் கேலியும், கொண்டாட்டமும் மட்டும் இல்லை, நாங்கள் இணைந்தால் சேவையிலும் பங்கு கொள்வோம் என்ற ஒன்றை நிகழ்த்தி எங்கள் மனங்களை நிறைத்து விட்டார்கள். 

சந்திப்பு பற்றி பேச்சு வந்ததும் என் கணவர்,  'ஒரு சின்ன சேவை எதுவும் செய்யுங்கள், ஒரு முன்னுதாரணமா' என்றார். என் மனதிற்கு சரி என்று பட்டாலும்  , மத்தவங்க  என்ன  சொல்வாங்க  என்ற தயக்கம் இருந்ததால் சகோதரர் பாபுவிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். 'தாராளமாக செய்யலாம் சகோ எல்லோரும் சம்மதிப்பார்கள்' என்றார். அதன் பின் அண்ணனிடம் சொன்னோம், எங்கள் அலைவரிசை தான் ஒன்றாச்சே...! சந்தோசமாக உத்தரவு கொடுத்தார். சந்திப்பின் போது உறவுகளிடம் சொன்னார், சம்மதம் என்று அனைவரும் கைகளை தூக்கி ஆதரவு தெரிவித்தனர். வாரி வழங்கினர்.

நெல்லையப்பர் சுவாமி அன்பு ஆஸ்ரமம் மற்றும் கருணை இல்லத்தில்

இதோ இன்று 35 குழந்தைகளின் மனங்கள் உற்சாகத்தில்...! அக்குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் பெரிய சொத்து புத்தகங்கள் வைக்கும் பேக், அந்த விருப்பம் நிறைவேறிய சந்தோசத்தில், இரு கை நீட்டி பேக்கை பெற்றதும் 'நன்றி அம்மா' என்று தழுதழுத்த குரலில் சொன்ன அக்கணத்தில் மீண்டும் ஒருமுறை  தாயாய் பிறந்தேன் ! பளபளக்கும் விழிகள் ! அங்கும் இங்கும் அலைபாயும்  கருவிழிகள் ! என்னிடம் தனிமையில் எதையோ சொல்ல துடித்தது போல் தோன்றியது...அண்ணனும் சித்ராவும் அங்கிருந்து சென்ற பின்னரும் என்னால் விடைபெற இயலவில்லை. 'அண்ணா நீங்கள் கிளம்புங்கள் நான் கொஞ்சம் நேரம் கழித்து வீட்டுக்கு போய் கொள்கிறேன்' என்றேன். என் உள்ளத் தேடல் நன்கு தெரிந்தவர் என்பதால் ஒரு மௌன புன்னகையில் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

அங்கிருந்த ஆசிரியையிடம் இயல்பாய் பேசிக்கொண்டே குழந்தைகளின் அறைகள் முழுவதையும் சுற்றினேன். தன் நிலைகளை என்னிடம் சொல்லி அமைதி கொண்டன அறைகள் !  என்ன செய்யமுடியும் என்னால் ? நலம் விசாரிக்கவும், ஆதங்கபடவும், வருத்தப்பட்டு கடந்து செல்ல மட்டுமே பழகி போன சராசரி மனித மனம் !

நான் அங்கிருந்த சமயம் ஒரு தந்தை தன் மனைவி இறந்து விட்டாள், பெண் குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லை, படிக்கவும் வைக்கணும் என்பதால் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்" என்றார்.   விவரங்களை எல்லாம் குறித்து வைத்துகொண்டார்கள்...வகுப்பு ஆசிரியை ஒருவரிடம் இரு குழந்தைகளையும் ஒப்படைத்தார் தலைமை ஆசிரியை...! அவர்களின் தந்தை வெளியே சென்றதும் நான் குழந்தைகளின் கைகளை பிடித்து 'உன் பேர் என்னமா' என்றேன், மழலைக்குரலில் 'வெங்கடலட்சுமி' என்றாள். 'சரி வீட்ல யார் எல்லாம் இருக்காங்க' கேட்டேன். அவளும் உற்சாகமாக 'செவப்பு கோழி, கருப்பு குட்டி நாய் ம்...அப்புறம் எங்க அம்மா...!?' திடுக்கென்றாலும் மறுகணம் சுதாரித்துக்கொண்டேன் !

வறுமை ! இதன் காரணமாக உயிருடன் இருக்கும் தாய் சாகடிக்கபட்டாள். படிக்க வைக்க பொருள் இல்லை, உணவு கொடுக்க உணவு இல்லை என்ன செய்யும் இந்த பிஞ்சு குழந்தைகள். சோறு போட்டு படிப்பு சொல்லிகொடுத்து அங்கேயே பாதுகாப்பாய் இருப்பார்கள் நம் பிள்ளைகள் என்று கொண்டுவந்துவிட்டு போகிறார்கள். அரசு பள்ளியில் சேர்த்தால் கௌரவம் இல்லை என்று எவ்வளவு பணம் கேட்டாலும் தனியார் பள்ளியில் சேர்த்து பெருமை பட்டுகொள்கிறோம். என் போன்ற பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் இது போன்ற இல்லங்களுக்கு சென்று வரவேண்டும்.

பேசிகொண்டிருந்தபோது ஒரு வயதான அம்மா வந்தாங்க, தன் மகனின் நினைவுநாள்  வருகிறது அன்று இங்கே அன்னதானம் செய்யவேண்டும் என்று. இவர்களும் சரி என்று தேதி குறித்துவைத்து கொண்டு நன்றி சொல்லி அனுப்பினார்கள். இது போன்று மாதத்திற்கு பத்து விருந்துகள்(அன்னதானம்) உண்டாம். அன்று குழந்தைகள் அருஞ்சுவையுடன் உண்டு மகிழ்வார்களாம். நல்ல விஷயம் தான். ஆனால் என் மனம் வேறு விதமாக சிந்திக்க தொடங்கியது.

ஒரு நாள் அருஞ்சுவை மறுநாள் சாதாரண உணவு என்னும் போது மீண்டும் அத்தகைய உணவு எப்போது கிடைக்கும் என்று ஏங்குவார்களே ? அந்த ஏக்கம் பெரியவர்களான போதும் மனதில் தங்கி இருக்குமே...?! இத்தகைய மனநிலை நல்லதா ? கிடைத்த போது ஆர்ப்பரிப்பதும், இல்லை என்ற போது துவண்டு ஏக்கத்தில் கழிவதும் சரியா ?

தங்களின் ஒரு மனத்திருப்திக்காக செய்யகூடிய இந்த ஒருநாள் நிகழ்விற்கு பதிலாக அந்த பணத்தில் தேவையான அரிசி, மளிகைபொருட்கள் அல்லது வேறு அத்தியாவசியமான ஒன்று இவற்றை வாங்கிகொடுக்கலாம். பத்துநாள் விருந்தளிப்பவர்கள் அனைவரும் இதுபோல் கொடுக்கும் போது அந்த மாதந்தோறும் ஓரளவிற்கு நல்ல சரிவிகிதமான உணவை அவர்கள் உண்ண வழி கிடைக்கும். என் மனதிற்கு தோன்றியதை அவர்களிடம் சொன்னபோது,  'நீங்கள் சொன்ன யோசனை நல்லா இருக்கு, ஆனா டோனர்கள் சம்மதிக்க மாட்டார்கள், அன்னத்தை(உணவை) தானமாக கொடுத்தால் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும் என்பார்கள்' என்றார். (கவனிக்க : அன்னதானம்  செய்வது  தவறு  என்று  இங்கே  நான்  குறிப்பிடவில்லை...!)

சிறு குழந்தைகளிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் பகிர்ந்த சில வார்த்தைகள் எனக்கு இப்படி எண்ண வைத்தது !

இதுபோல் பிறந்த நாள், நினைவு நாள் அன்று ஒருநாள் மட்டும் அன்னதானம் செய்யும் எனக்கு தெரிந்தவர்களிடம் இனி இது பற்றி சொல்லணும் என்று நினைத்து கொண்டு அங்கிருந்து விடைபெற்று வந்துவிட்டேன்.        

தலைமை ஆசிரியரிடம் பேசிகொண்டிருந்த போது நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்...! இன்னும் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கான வேலைகளை செய்வதற்கான முயற்சிகளை சங்கரலிங்கம் அண்ணன் எடுத்து வருகிறார்.   

பதிவர் சந்திப்பினை  தொடர்ந்து கருணை இல்லத்துடன் ஏற்பட்ட பிணைப்பு  வாழ்வின் மீதான பிடிப்பை இன்னும் அதிகபடுத்தி இனி கழியும் நாட்களை அர்த்தமுள்ளதாக்க புதிய  உத்வேகத்தை கொடுத்தது. 

தினம்...
எழுகிறோம்
உண்கிறோம்
சம்பாதிக்கிறோம்
வளர்கிறோம்
வளர்க்கிறோம்
வாழ்கிறோம்
முடிக்கிறோம் 
முடிகிறோம் !
  
ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கை...ஆனால் ஒரு சிலர் வாழ்ந்து முடித்த(முடிந்த) பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எம் ஜி யார் அவர்கள் இறந்து 23 வருடங்கள் கடந்தும் இன்றும் பல மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் சமாதிக்கு தினம் வந்துபோகும் மக்களை பார்த்தால் தெரியும். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தின் முள் இன்னும் ஓடிகொண்டிருக்கிறது என்று சமாதியின் மேல் காதை வைத்து கேட்கிறார்கள், ஒலி கேட்டதாக சொல்லி பரவசம் அடைகிறார்கள். அவர் பத்து வருடம் தொடர்ந்து அரசியலில் கோலோச்சினார் என்பதற்காக அல்ல அந்த கூட்டம்..... மக்கள் மேல் அவர் வைத்திருந்த அன்பு, பாசம், கொடுத்து சிவந்த அவர்தம் கைகள் !!    

சேவை என்று செய்யமுடியவில்லை என்றாலும், சக மனிதரிடம் அன்பை பரிமாறுவோம். சுயநலம் மிகுந்து போன இன்றைய சூழலில் அடுத்த வீட்டினரிடம் ஒரு 'ஹாய்' சொல்ல கூட அதிகம் யோசிப்பவர்களாக இருக்கிறோம். நாம் கொஞ்சம் மாறினால் என்ன...?! முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியில் எதிர்படும் மனிதர்களை குறைந்தபட்சம் ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....! 

"இறந்த பின்னும், ஒரு சில மனங்களிலாவது நாம் வாழ்வோம்  நினைவுகளாய்...!!"

                                ***********************************************

"மரத்தை வெட்டி, மண்ணை காப்பாற்றுவோம் "  என்ன இப்படி சொல்றாங்க என்று யோசிக்கிறீங்களா...? அடுத்த பதிவில் இதற்கான பதில் கிடைக்கும்.  மிக முக்கியமான ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.


                                                                   *********


இன்று கழுகில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் !!

Tweet

19 கருத்துகள்:

 1. இதே மாதிரி மனமுருகி ..மனமுவந்து .கட்டுரை எழுதுரவங்களை ..இந்த பதிவுலகம் சில சமயம் பெருமை அடிக்கிறாங்கன்னு சொல்லுவாங்க சகோ ..

  இதையும் தாண்டி எழுதும் துணிச்சல் உங்கள் ஒருவருக்கே உண்டு ..

  பதிலளிநீக்கு
 2. இனிமையான பதிவர் சந்திப்பு நினைவுகள் ......அருமை

  பதிலளிநீக்கு
 3. நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து நிறையப் பதிவுகள்
  எழுதப்பட்டிருந்தாலும் இதைப்போல மனம் தொட்டுப் பேசும் படியாக
  யாரும் எழுதவில்லை.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அக்குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் பெரிய சொத்து புத்தகங்கள் வைக்கும் பேக்//
  என் கண்ணில் நீர் கோர்த்த வரிகள். இந்த பதிவு மட்டும் தான் என்னை இந்த சந்திப்பில் பங்கு கொள்ளாமைக்கு வருந்த வைத்தது. மிகவும் அருமையான எழுத்து நடை. உங்களுடைய மனித நேயம் அப்படியே உங்களுடைய எழுத்துக்களிலும் பிரதிபலிக்கிறது. உங்கள் மனநிலையை சார்ந்தவன் தான் நானும். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. சும்மா பார்த்தோமா, பேசினோமா, சாப்பிட்டோமா, கிளம்பினோமா என்று இல்லாமல் ஏதாவது சேவை செய்யலாம் என்ற நோக்கம்(கணவருக்கு நன்றிகள்) வந்ததற்கு பாராட்டுக்கள். அது வாய்ச்சொல்லில் மட்டும் இல்லாமல் அதை இன்று நிருபித்து காட்டிய தங்களை வாழ்த்த வயதில்லை. அதுவும் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் உதவி செய்தது மிகவும் சிறப்பானது. தங்களை போல மனிதர்கள் உள்ள பதிவுலகில் நானும் உள்ளேன் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன். நன்றி கவுசல்யா அக்கா.

  பதிலளிநீக்கு
 6. பதிவர் சந்திப்பினை தொடர்ந்து கருணை இல்லத்துடன் ஏற்பட்ட பிணைப்பு வாழ்வின் மீதான பிடிப்பை இன்னும் அதிகபடுத்தி இனி கழியும் நாட்களை அர்த்தமுள்ளதாக்க புதிய உத்வேகத்தை கொடுத்தது. //

  நிறைந்த நேயமிக்க வரிக்ள் மனம் தொட்டன.

  பதிலளிநீக்கு
 7. மீண்டும் நெல்லை மலரும் நினைவுகள்...

  பதிலளிநீக்கு
 8. //முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியில் எதிர்படும் மனிதர்களை குறைந்தபட்சம் ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....!// இந்த வாசகத்தை பின்பற்றினால் போதுமே எந்த பிரச்சினையும் வரவே வராது .புன்னகை விதைகளை தூவி விடுவோம் பூக்கள் மலரட்டும் .

  பதிலளிநீக்கு
 9. //ரூபினா ,கல்பனா,
  ஜெயவேல்,செல்வா ,ஸ்டார்ஜான்// அவர்களின் பெயரிலேயே வலைப்பக்தின் லிங்கையும் இணைத்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
 10. இரா.ச.இமலாதித்தன்...

  //அவர்களின் பெயரிலேயே வலைப்பக்தின் லிங்கையும் இணைத்திருக்கலாம்//

  நல்ல யோசனை. ஆனால் ஏற்கனவே போட்ட பதிவர் சந்திப்பு பதிவில் எல்லோரின் லிங்க் கொடுத்துவிட்டேன். அதனால் மறுபடியும் போடணுமா என ஒரு தயக்கம் . வேறு ஒன்றும் இல்லை.

  வருகைக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 11. அருமையான நிகழ்வுகள் அருமை

  பதிலளிநீக்கு
 12. மிக நன்றாக உள்ள்து
  எனது
  ஜயவேல் ,Jayavel
  shunmuga-shunmugas view.blogspot.com
  gmailல் எனது படைப்புகளை காண்லாம்

  பதிலளிநீக்கு
 13. முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியில் எதிர்படும் மனிதர்களை குறைந்தபட்சம் ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....!


  உறவும் மலரும்.
  மனிதர்களுக்கிடயே உள்ள
  இடைவெளியும் குறையும்

  பதிலளிநீக்கு
 14. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 15. நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து நிறையப் பதிவுகள்
  எழுதப்பட்டிருந்தாலும் இதைப்போல மனம் தொட்டுப் பேசும் படியாக
  யாரும் எழுதவில்லை.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. கருணை இல்லம், அதன் உண‌ர்வுகள், சோகம், அதில் நாம் எப்படியெல்லாம் பங்கேற்கலாம் என்பது போன்ற வழிமுறைகள் அனைத்துமே அருமையாக இருக்கிறது கெளசல்யா! உணவிற்குப்பதிலாக பொருள்கள் கொடுப்பதுவும்கூட‌ நல்ல யோசனை!

  "பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான கொஞ்ச காலத்தில் போட்டி, பொறாமை,கோபம், பகைமை என்று வளர்த்து மனித மனங்களை கொன்று போட்டு கொண்டிருக்கிறோம். அன்பு இந்த ஒன்றை மட்டுமே ஏன் நாம் எல்லோர் மனங்களில் விதைக்க கூடாது...??! "

  அருமையான வ‌ரிகள்!

  பதிலளிநீக்கு
 17. அன்புமிக்க திருமிகு கௌசல்யா அவர்களே,
  எனது வலைப்பூவில் இன்றுதான் புள்ளியலை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் வலைப்பூவில் இருந்து அதிக பார்வையாளர்கள் வந்துவிட்டு சென்றிருப்பதை கவனித்தேன்.பிறகு தங்கள் வலைப்பூவை பார்த்தேன்.என்து வலைப்பூவை தங்களது வலைப்பூவில் சிறந்த தளமாக குறிப்பிட்டு இருப்பதைக் கண்டேன்.தங்கள் வலைப்பூவில் பின்தொடர்பாளனாக மாறியதோடு,கழுகு வலைப்பூவிலும் என்னை பின் தொடர்பவனாக இணைத்துக் கொண்டேன்.சந்தர்ப்பத்துக்கு நன்றி.வலைப்பூ நண்பர்கள் சந்திப்பை பார்த்தேன்.''ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு''.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்
  http://machamuni.blogspot.com/
  http://kavithaichcholai.blogspot.com/

  பதிலளிநீக்கு
 18. பதிவர் சந்திப்பில் சந்தோசமாகத் தொடங்கி இறுக்கமாய் முடித்து விட்டீர்களே? மனதை மிகவும் சங்கடப்படுத்தும் விவரங்கள். சேவைச் செயல் புரிந்த நீங்கள் அனைவரும் என் ஹீரோக்கள்.

  ஸ்டார்ஜான் வீட்டுப் பிரியாணியில் என் பங்குக்கு ஒரு கைப்பிடி அதிகமாகச் சாப்பிட்டு வாருங்கள் :)

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...