செவ்வாய், ஏப்ரல் 16

AM 11:51
20

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக  வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !

படத்தில் இருக்கும் இந்த சிறுவனின் நிலையில் தான் பெரும்பாலான  குழந்தைகள் இருக்கிறார்கள் !

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும்..... இவ்வளவும்  சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும்  முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும் !!!??

என்ன கொடுமைங்க இது.  தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி,  ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை  குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்ல...?? 


போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின்  வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமே என்கிறார்கள். அதற்காக குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள்.   அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்காதீர்கள். அதன் விளைவை வெகு சீக்கிரம் நீங்கள் அனுபவிக்க நேரும் மிக கொடுமையாக...! வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து ! என் குழந்தை எப்படி பேசுறா என்பது எல்லா நேரமும் சாதாரணமாக சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.  

குழந்தை  குழந்தையாகவே...

தன்  போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பாருங்கள்...அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும் ! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள் !! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  . குழந்தை செய்வதை எல்லாம் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

மீடியாக்கள்  வேறு தன் பங்கிற்கு இந்த காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது

சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு 6 வயது குழந்தை ஆடிய ஆட்டம் எல்லோரையும் ஆரவார கூச்சலிட வைத்தது. முகநூலில் இந்த குழந்தையின் நடனத்தை ரசித்து பல ஆயிரம் ஷேர்ஸ், பலவித கமெண்ட்டுகள், அதிலும் ஒருவர் 'நீ நல்லா வருவே' என வாழ்த்த(?) எதில் நல்லா வர, குத்து பாட்டு நடிகையாகவா ? என்ன சொல்ல தெரியல. இந்த 'நல்லா வருவ' க்கு என்ன அர்த்தம்னும் புரியல.

பார்க்கும்  கண்ணை பொறுத்தது என்று எப்படி இதை ரசிப்பது. இன்றைய திரைப்படங்கள் நன்றாகவே நம் கண்ணையும் கருத்தையும் கெடுத்து வைத்திருக்கிறது. முகநூலில்  கருத்து சொன்னவர்களும் சிறு குழந்தை என்று எண்ணாமல் 'எப்படி இடுப்பை வளைக்குறா', கிறங்கடிக்குது கண்ணு, என்னமா கண் அடிக்கிறா என ஒவ்வொன்றாக வர்ணிக்கும் போது குழந்தையின் தாயால் அதை பாராட்டாக எண்ணி மகிழமுடிகிறது என்பது எனக்கு  ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சி ! 
போனமாதம்  ஒரு விழாவிற்கு சென்றிருந்த இடத்தில் , 4 வயதிருக்கும் ஒரு பெண்குழந்தையை பார்த்து எனக்கு அருகில் இருந்த ஒரு  தோழி ,'செம கிளாமர் ' என கமென்ட் அடித்து சிரித்தார். காரணம் இது தான்,  இடுப்பு தெரியும்விதத்தில் அக்குழந்தை அணிந்திருந்த மாடர்ன் உடை. சிறு குழந்தையின் ஆடை அழகை ரசிக்கும் லட்சணம் இப்படி இருக்கு! அதுவும் ஒரு பெண்ணே ப்படினா... ஆண்கள் ?!!

சினிமா,  தொலைகாட்சி போன்றவற்றை  பார்த்து அதில் வருபவர்களை போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காத போது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை...இறுதியில் அடி !!?   

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால்  கைத்தட்டு வாங்குவது தான் முக்கியம் என்பது  குழந்தையின் மனதில் ஆழமாக  பதிந்துவிடுகிறது...கிடைக்கும் கைத்தட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்டனும் என்பதை நோக்கித் தான் அதன் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு அடுத்தவங்க புகழ, நல்ல(!) பெயர் எடுக்க என்று முயலுகிறது. இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறது...சமயத்தில் தற்கொலை ! 

தேவையற்ற அதிக மன அழுத்தம்


நண்பர்  ஒருத்தர் சொன்னார், 'என் குழந்தை இப்பவே ஓஷோ புக்  படிக்கிறாள்' என்று... நம்மில் பலருக்கு புரிய கடினமான விஷயத்தை குழந்தையை  படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் என்னனு புரியல...?! ஒன்பது  வயது குழந்தைக்கு வேண்டிய புத்திமதிகளை பெற்றோர்கள் நீங்கள் சொல்லி வழிகாட்ட முடியாதா? யாரோ ஒருவர்  அன்று அவர் வாழ்ந்த சூழல், பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று இன்றைய குழந்தைகளுக்கு எப்படி புரியும், எப்படி இன்றைய சூழலுக்கு சரியாக வரும்.  பெற்றோர்கள் நீங்கள் அதை படித்து அதில் குழந்தையின் வயதிற்கு  தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்'  என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள் ! 

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை  சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர்,அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் உங்களிடத்தில்  கண்டுக்கொள்ளட்டும்... கண்டு கற்றுக்கொள்ளட்டும்... உணரட்டும்...உங்களை மதிக்கட்டும் ! நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தை என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே , இவர்களை போன்றவர்களே என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிருங்கள் அது போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களிடத்தில் காணமுடியாத  நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்' என்ற கேள்வி எழும் ! உங்களிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது உங்கள் மீதான மதிப்பின் சதவீதம் பற்றியும்  சற்று சிந்தியுங்கள் !!  அரிச்சந்திரன் கதையை கேட்டு பின்பற்றி நடந்தது என்பது அந்த காலம் ...இப்போதைய உலகம் வேறு...! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள் ! 
  
எங்கையோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது    என்பதற்காக உங்கள் குழந்தையையும் படுத்தி எடுக்காதீர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது எது என்று கண்டு அந்த வழியில் நடக்க விடுங்கள், வழிகாட்டுங்கள், வழிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! மாறாக உங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்க பார்க்காதீர்கள், ஒடிந்துவிடுவார்கள் ! 

பொருளாதாரத்தில்  உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளருங்கள். அப்போதுதான் உங்களின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

ஆரோக்கியமான சமூதாயம் நம் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து நம் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து நம் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

தயவுசெய்து குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்...! உலகை தெரிந்துக் கொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.. மூன்றே வருடத்தில் தென்னையை  வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல !

குழந்தையின் வயதுக்கு  மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து  தன்னம்பிக்கையை  இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்... எரிச்சல், கோபம் , இயலாமை,விரக்தி, சுயபச்சாதாபம்  போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள்  இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை !?

பின்குறிப்பு 

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் குழந்தைகளை விட பாலியல் துன்புறுத்தலை நிகழ்த்துபவர்கள், வன்கொடுமையை ரசிப்பவர்கள் அதிகம். அவர்களின் ஆரம்பம் எங்கிருந்தும், இப்படியும் தொடங்கலாம் என்பதை இந்த பதிவு உணர்த்த முயலுகிறது. வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம்... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் மனதோடு மட்டும்
கௌசல்யா  
Tweet

20 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.. ஊடகங்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் நன்றாக பாடும் குழந்தைக்கு முப்பது, நாற்பது லட்சத்தில் பிளாட் என்று கூறுவது அந்த சிறுவர்களின் படிப்பை பாதிப்பதுடன், பணத்தின் மதிப்பை உணருவதற்கான வாய்ப்பும் மறுக்கப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  2. உண்மை... உண்மை வரிகள் பல... பாராட்டுக்கள்...

    /// தென்னையை வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல ! ///

    எனது சமீபத்திய பதிவும் இதை ஒட்டி தான்... வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/04/There-is-no-confusion.html

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. சரியான நேரத்தில் வந்த சிறந்த பதிவு . இன்று தங்களின் ஆசைகளை குழந்தைகள் மேல் திணித்துக் கொண்டுள்ளனர் . ரியால்டி நிகழ்சிகள் நிகழ்ச்சிகளில் குழந்தைகளை தடை செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. பாராட்ட வார்த்தைகளில்லை கௌசி !!!!!!!!!!!!! அவ்வளவு அருமையாக எழுதியிருக்கீங்க ..

    குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதுதான் அழகு ..
    அந்தந்த வயதில் வயதுக்கேற்ற முதிர்ச்சி இருந்தால் போதும் .
    ஆறு வயது பிள்ளை ...சின்ன வீட வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா பாடலுக்குக்கெல்லாம் அர்த்தம் புரியாமல் ஆடுவதை காணும்போது பரிதாபமேதொன்றுகிறது .
    உங்களின் ஆதங்கம் அப்படியே என் மனதை பிரதிபலிப்பதாக இருக்கு .

    தொடருங்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  5. தொடர்ந்து எழுதுங்க கௌசல்யா..

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா4:42 PM, ஏப்ரல் 16, 2013

    காற்று அதிகமாக அதிக மாக பலூன் வெடித்துவிடும் என்பதை பெறெறோர்கள் உணர்வதில்லை...நல்லதொரு பதிவு

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு கௌசல்யா...... இன்றைய பெற்றோர்கள் தன் குழந்தைகள் மூலம் தமக்கு பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தின் வெளிப்பாடே இந்த செயல்கள் எல்லாம்.

    இதே கருத்தை நான் முன்பு என் வலைத்தளத்தில் எழுதிய என் பதிவு. நேரம் கிடைக்கும் பொழுது வாசியுங்கள்.

    http://sindhanasaral.blogspot.in/2012/07/blog-post_17.html

    தொடர்ந்து பேசுங்கள்........நன்றி

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு. மிக வேண்டிய பதிவு. உலகம் பூராவும் குழந்தைகளை ஏன் தன் இப்படிப் படுத்துகிறார்களோ.

    இந்தப் பெற்றோரின் வெறி என்று அடங்குமோ.
    தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. பெற்றோர்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.... என் முக நூலில் பகிர்கிறேன்

    பதிலளிநீக்கு
  10. @@கோவை ஆவி said...

    //முப்பது, நாற்பது லட்சத்தில் பிளாட் என்று கூறுவது அந்த சிறுவர்களின் படிப்பை பாதிப்பதுடன், பணத்தின் மதிப்பை உணருவதற்கான வாய்ப்பும் மறுக்கப் படுகிறது.//

    உண்மை. பணத்தை நோக்கிய பயணம் மட்டும் தான் வாழ்க்கை என்று வலுவாக பதிய வைக்கப்படுகிறது. மேலும் போட்டியில் தோற்றவர்கள் மன அழுத்தத்தில் தள்ள படுவதை பற்றி இங்கே யாருக்கும், ஏன் பெற்றோருக்குமே அக்கறை இல்லை.
    ...

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. @@திண்டுக்கல் தனபாலன்...

    நன்றிகள் தனபாலன்...படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. @@எல் கே said...

    //ரியால்டி நிகழ்சிகள் நிகழ்ச்சிகளில் குழந்தைகளை தடை செய்ய வேண்டும் //

    ஊடகங்கள் தங்கள் வருமானத்திற்கு எதையும் செய்துவிட்டு போகட்டும், இந்த பெற்றோர்களுக்கு புத்தி இல்லையா? தன் குழந்தையின் திறமை வெளியில் வருகிறது என பெருமைபடும் முன் யோசிக்க வேண்டும். இதற்காக குழந்தைகளின் இயல்பை அடகு வைப்பதை நிறுத்தினால் போதுமானது.

    ...
    நன்றி கார்த்திக்

    பதிலளிநீக்கு
  13. @@angelin said...

    //அந்தந்த வயதில் வயதுக்கேற்ற முதிர்ச்சி இருந்தால் போதும் .//

    உண்மைதான்.

    //ஆறு வயது பிள்ளை ...சின்ன வீட வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா பாடலுக்குக்கெல்லாம் அர்த்தம் புரியாமல் ஆடுவதை காணும்போது பரிதாபமேதொன்றுகிறது.//

    அர்த்தத்தை தான் அபிநயம் பிடித்து சொல்லி கொடுத்து விடுகிறார்களே. :)
    //உங்களின் ஆதங்கம் அப்படியே என் மனதை பிரதிபலிப்பதாக இருக்கு//

    இது சில பெற்றோர்களின் ஆதங்கம் தான் தோழி, எல்லாவற்றையும் தவறாகவே வளர்த்துவிட்டு நாளை புலம்புவது வீண். முதியோர் இல்லத்தை குழந்தைகளே கட்டி அவங்க பெற்றோர்களை கொண்டு போய் விட்டுவிடுவார்கள். அன்பை,பண்பை வளர்க்காமல் போனதின் பலன் இறுதியில் இதில் போய் முடியும்.

    ...

    இதை பற்றி தொடர்ந்து பேசுவோம்பா. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @@Asiya Omar said...

    //தொடர்ந்து எழுதுங்க கௌசல்யா..//

    கண்டிப்பா எழுதுகிறேன் தோழி. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @@kaliaperumalpuducherry said...

    //காற்று அதிகமாக அதிக மாக பலூன் வெடித்துவிடும் என்பதை பெறெறோர்கள் உணர்வதில்லை..//

    உண்மை. மிக சரியான உதாரணம். மிக்க நன்றிகள் சார்.

    பதிலளிநீக்கு
  16. @@Sundari said...

    //இன்றைய பெற்றோர்கள் தன் குழந்தைகள் மூலம் தமக்கு பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தின் வெளிப்பாடே இந்த செயல்கள் எல்லாம். //

    அதே தான் !!!

    உங்க பதிவை படிக்கிறேன் தோழி. நாம இதை போன்று தொடர்ந்து எழுதுவோம், ஒருத்தர் இரண்டு பேராவது உணர்ந்தால் போதும், அவர்களின் குழந்தை காப்பாற்றப்பட்டுவிடும்.

    வருகைக்கு என் மகிழ்வான நன்றி சுந்தரி.

    பதிலளிநீக்கு
  17. @@வல்லிசிம்ஹன் said...

    //உலகம் பூராவும் குழந்தைகளை ஏன் தன் இப்படிப் படுத்துகிறார்களோ.இந்தப் பெற்றோரின் வெறி என்று அடங்குமோ////

    பொம்மை என்றெண்ணி படுத்தி எடுக்கிறார்கள். வெகு விரைவில் அதன் விளைவை சந்திப்பார்கள், ஆனால் அப்போது தனது தவறுதான் இது என உணருவார்களா என்றால் இல்லை. அப்போதும் குழந்தைகளை குறை சொல்லி தங்களை நியாயவான்களாக்கி கொள்வார்கள்.

    ...

    நன்றி அம்மா.



    பதிலளிநீக்கு
  18. @@ezhil said...

    //பெற்றோர்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.... என் முக நூலில் பகிர்கிறேன்//

    தொடர்ந்து படிச்சிட்டு வரிங்க, மகிழ்வுடன் மிக்க நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பகிர்வு அக்கா...
    தொடர்ந்து பேசுங்கள்....


    பதிலளிநீக்கு
  20. எனது “போன்ஸாய் குழந்தைகள்” என்ற பதிவும் இதே கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதே. இப்போதைய பதிவிலும், குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுக்க வைப்பதையும், விவரமறியாச் சிறுமிகளுக்கு அதீத மேக்கப்+அரைகுறை ஆடை போடுவதைக் கண்டித்தும் எழுதிருக்கேன்.

    எனக்குப் புரியாத விஷயம் ஒன்றுதான்: நாமும் பெற்றோர்கள்தான், நமக்குப் புரியும் இந்த விஷயம் ‘அந்தப்’ பெற்றோர்களுக்கேன் புரியவில்லை?!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...