புதன், ஜனவரி 23

தந்தையை தேடி...! உங்கள் உதவி தேவை நட்புகளே...!

முன்  குறிப்பு :

நண்பர் புவனேஷ் அவரது  தோழியின் தகப்பனார் காணாமல் போனதை  வருத்தத்துடன் என்னிடம் பகிர்ந்தார். பல பத்திரிக்கைகளிலும் செய்தி வெளி வந்திருக்கிறது...இருந்தும் அவர் இன்னும் கிடைக்கவில்லை. மன வேதனையுடன் விரிவாக ஒரு மெயில் அனுப்பி எனது தளத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டுமென கேட்டிருந்தார். அதன் படி இங்கே அப்படியே பகிர்கிறேன். நண்பர்கள் இயன்றால் பிளாக்,முகநூல் உட்பட சமூக தளங்களில் பகிர்ந்து தோழியின் தகப்பனார் கிடைக்க முயற்சி செய்யலாமே. 

தந்தை காணாமல் போனதும் இவர்கள் அடைந்த மன வேதனையும் தகப்பனாரை தேட இவர்கள் மேற்கொண்ட முயற்சியும் கண்கலங்க வைக்கிறது. விரைவில் இவர் கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

* * * * * * * * * *

அன்புள்ள வாசகர்களே, வணக்கங்கள்.

திருவனந்தபுரத்தில் RLNRA-41, Planning Board Lane, Rajalakshmi Nagar, Pattom என்னும் முகவரியில் எங்களுடன் வசித்து வந்த எண்பது வயதான எமது தந்தையார் திரு. நாராயணன் அவர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் காணவில்லை. அவர் தனது ஞாபக சக்தியை இழந்துள்ளார். அதன் காரணமாக மருந்துகளும் தினசரி உட்கொள்ளுகிறார். நவம்பர் எட்டாம் தேதி மதியம் ஒரு மணி வாக்கில் வெளியே நடந்து வருவதாகக்கூறி சென்றவர், இன்றளவும் திரும்பவில்லை. 
நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்யப்பெற்றது. இதைத்தொடர்ந்து நவம்பர் பத்தாம் தேதி இவரைப்பற்றிய விவரங்கள் மலையாள மனோரமாவில் வெளியிடப்பெற்றது. தூர்தர்ஷன் மற்றும் உள்ளூர்த்தொலைக்காட்சி அலை வரிசையிலும் அடுத்தடுத்து அறிவிப்புக்கள் வெளிவந்தன. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் மூலம், வயது முதிர்ந்த எங்கள் தந்தையாரை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. திருவனந்தபுரம் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பெற்றுள்ளன. 
தந்தை காணாமல் போன நவம்பர் எட்டாம் தேதி முதல் நிகழ்ந்த சம்பவங்கள் கீழ்வருமாறு:
8 Nov 12 : 3-30 pm:
பட்டம் மற்றும் கேசவதாசபுரம் பகுதிகளில் தேடினோம். எமது தந்தை ஒரு இதய நோயாளி என்பதால் ஒரு வேளை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பெற்று உள்ளாரா என தேடினோம். அவர் அங்கு இல்லை என எங்களுக்கு தெரிய வந்தது. மருத்துவக்கல்லூரி காவல் நிலையம், காவல் துறைக் கட்டுப்பாட்டறைக்கு இந்த செய்தியை அனுப்பியது. நாங்கள் அதே சமயத்தில் எங்கள் குடியிருப்புப்பகுதியில் தேடினோம். பேரூர்க்கடா காவல் நிலையத்தில் எங்கள் தந்தையாரை தேடுமாறு வேண்டுகோள் விடுத்தோம்,

9 Nov 12:
பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்தோம். அன்றே, தூரதர்ஷனிலும் உள்ளூர் தொலைகாட்சி அலைவரிசையிலும் அறிவிப்புகள் வெளிவந்தன.
10 Nov 12:
காணாமல் போன எமது தந்தையாரை பற்றி மலையாள மனோரமாவில் அறிவிப்பு செய்தி வெளியானது.
 
11 Nov 12:
திருவனந்தபுரம் முழுவதும் காணாமல் போன எமது தந்தையாரைப்பற்றி போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டப்பெற்றன.
12 Nov 12 to 25 Nov 12:
எமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படையினர் உதவியுடன் திருவனந்தபுரம் நகரின் எல்லா மூலைகளிலும் தேடல் நடைபெற்றது. ரயில்வே காவல் துறையும் உஷார்படுத்தப்பெற்றது. தந்தையாருடைய சொந்த ஊர் பாலக்காடு என்பதால் அங்கும் சென்று ஊர் முழுவதும் தேடினோம். அவர் பணிபுரிந்த பெங்களூர் HAL பகுதியிலும் அந்த பகுதி தபால் துறையினர் உதவியுடன் தேடினோம். விமானப்படையினர் உதவியுடன் கேரள – தமிழக எல்லைப்பகுதிகளான கன்னியாகுமரி, சுசீந்தரம், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியில் தேடினோம். பலனில்லை. 
26 Nov 12:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. உம்மன் சாண்டி அவர்களை சந்தித்து, இந்த விஷயத்தில் அவருடைய உதவியை கோரி மனு கொடுத்தோம். அவர், ADGP அதிகாரியான திரு ஹேமச்சந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரை சந்திக்குமாறு சொன்னார். அவரையும் பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் அவர்களையும் தொடர்பு கொண்டோம். அவர்கள் எல்லா உதவியும் செய்வதாக வாக்களித்தனர்.

29 Nov 12:
பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் திரு. பிரதாபன் அவர்கள் எங்கள் தந்தையை பற்றிய குறிப்புகளை சேகரிக்க வேண்டி எங்களைத்தொடர்பு கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர், எங்கள் காரில் ஒட்டி இருந்த போஸ்டரை பார்த்து இந்த பெரியவருக்கும் எங்களுக்கும் என்ன உறவு என்று கேட்டார். நாங்கள் இவர் எமது தந்தையார் சொன்னதும், அந்த ஆட்டோ ஓட்டுனர், எங்கள் தந்தையார் அன்று மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு சாலையை கடக்க முயன்று கொண்டிருந்ததாக கூறினார். இதை வட்ட ஆய்வாளர் திரு பிரதாபன் அவர்களிடம் வாக்குமூலமாக தந்தார்.. அன்றே, ஏசியாநெட் நிருபர் வந்து தகவல்களை சேகரித்தார். ADGP, CCTV ஆவணப்படத்தை கட்டுப்பாட்டறையில் இருந்து நாங்கள் காண ஏற்பாடு பண்ணினார். அப்போது, அந்த ஆவணப்படத்தை கண்ட பொழுது, சாலையை கடந்தது எங்கள் தந்தை தான் என்று உறுதி ஆனது. இதனை அவர் சாலையை கடக்க உதவிய போக்குவரத்துக்காவல் துறை அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.

30 Nov 2012:
ஏசியாநெட் தொலைகாட்சி எனது பேட்டியுடன் கூடிய அறிவிப்பை செய்திகளுக்குப்பின் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் ஒளிபரப்பியது. போக்குவரத்து துறையினரும் உஷார் நிலையில் வைக்கப்பெறுவர் என ADGP உறுதி கொடுத்தார். 
1 Dec 2012 – 4 Dec 2012:
எங்கள் தந்தை இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர் என்பதால், கோயில்களிலும் வழிபாட்டு தளங்களிலும் தேடுதல் தொடர்ந்தது. டிசம்பர் இரண்டாம் தேதி, காவல் துறையிடம் ஐம்பது போஸ்டர்களை தருமாறு அவர்களால் அறிவுறுத்தப்பட்டோம். CCTV ஆவணமும் எங்களுக்கு வழங்கப்பட்டது.

5 Dec 2012:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. உம்மன் சாண்டி அவர்களை மீண்டும் இவ்விஷயத்தில் உதவி கோரி அணுகினோம். அவரது உதவியாளரை அணுகுமாறு அவர் கூறினார். அவரது உதவியாளர் ADGPயிடம் பேசி, அவர்களால் முடிந்த அளவு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதி கூறினார். பாதுகாப்புத்துறை அதிகாரியான திரு. அனில் காந்த் IPS அவர்களை சந்தித்து பேசினோம்.  
7 Dec 2012:
நெடுமாங்காடு பகுதிகளில் பல்வேறு அநாதை இல்லங்களில் தேடினோம்.
12 Dec 2012:
திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதி தினமலர் செய்திதாளில் தந்தை காணவில்லை என அவருடைய படத்துடன் அறிவிப்பு வெளியிட்டோம்.
20 Dec 2012:
கேரளாவில் உள்ள அனைத்து பொது சேவை NGO அமைப்புகள் கூட்டம் டிசம்பர் இருபதாம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளத்தின் பலவேறு பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களின் சார்பில்  வந்தவர்களுக்கு, காணாமல் போன தந்தையாரின் விபரங்கள் அடங்கிய படத்துடன் கூடிய போஸ்டர்கள் அளிக்கப்பெற்றன.  
4 & 5th Jan 2013:
தந்தையார் இறை வழிபாடுகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் குமரியில் இருந்து மதுரை வரை கோயில் குளங்களில் தேடினோம். 
15 Jan 2013:
பேரூர்க்கடா காவல் துறையினருடன் வள்ளியூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தேடினோம். இருப்பினும் இன்றளவும் எங்கள் தந்தையார் கிடைக்கவில்லை.
* * * * * * * * * * *

அன்புள்ளங்களே உதவி செய்யுங்கள்!
தோழியின் அன்பு தந்தையை தேடும் முயற்சி தொடர்ந்துக்கொண்டிருக்கிறது...இவரை எங்கேயும் கண்டாலும் உடனே தெரிவியுங்கள்...நாமும் நம்மால் இயன்ற அளவு இந்த செய்தியை பகிர்ந்துகொள்வோம். விரைவில் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவோம். நன்றி.

தகவல் கிடைத்தவர்கள் தொடர்பு கொள்ள - உமா - 09567739646

திங்கள், ஜனவரி 7

அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் - குற்றவாளி யார்...??!



இன்றைய பெண்கள் குறிப்பாக சிறுமிகள் மனதில் ஆண்கள் என்றாலே மோசமானவர்கள் என்பதை மிக அழுத்தமாக இது போன்ற மோசமான நிகழ்வுகள் பதியவைத்துவிடுமோ என்றே வருந்துகிறேன். அருவருக்க தக்க இச்செயல்களை ஒரு சில ஆண்கள் செய்வதால் ஒட்டுமொத்த ஆண்சமூகமும் தலைகுனிந்து நிற்கிறது. நடக்கும் சம்பவங்களுக்கு  ஆண்கள் மட்டுமா காரணம் !!?? என ஒரு கேள்வியும் உடன் எழுகிறது...

ஓடும் பேருந்தில் பலரால் சிதைக்கப்பட்டு இறந்த இளம் பெண், ஆசிட் வீசப்பட்டதால் வாழ்வை தொலைத்தவள், எதிர்வீட்டுக்காரனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கபட்டுவிட்டாள் என தந்தை கையால் கௌரவ(?)கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி, பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட சிறுமி புனிதா, வீட்டில் இருந்த 4 ஆம் வகுப்பு மாணவியை இருவர் சிதைத்த கொடுமை......... இவை எல்லாம் விட கொடுமை பிளே ஸ்கூல் படிக்கும் மூன்றை வயது குழந்தையை வன்கொடுமை புரிந்த பள்ளி உரிமையாளரின் கணவன் !!??

ஊடகத்திற்கு வந்தவை கொஞ்சம், ஆனால் இப்படிபட்ட அல்லது இதை விடவும் மோசமான கொடுமையான நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிக அளவில், விதவிதமாக பெண்களின் மீது காலங்காலமாக நடந்துக்கொண்டிருக்கின்றன, மீடியாக்களின் உபயத்தில் இன்று அதிகரித்து வருவதை போல தெரிகிறது...

இணையத்தின் விவாதப்பொருளா ?!

டெல்லியில் நடந்தது மட்டும் இப்போது பெரிதுபடுத்தி பார்க்கப்படுகிறது,  பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஏன் இல்லை என இணையத்தில் காரசாரமான கருத்துக்கள் கண்டேன்.   ஊடகங்கள் செய்யாவிட்டால் என்ன தனி மனிதர் ஒவ்வொருவரும் போராட வேண்டியது தானே ?! நமக்கு அருகில், தெருவில் ஒரு பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் போது நம்மில் எத்தனை பேர் வேடிக்கை மட்டும் பார்த்து கடந்து சென்றிருப்போம்.

பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்டுவிட்டாள் என தெரிந்ததும் ஆவேசத்துடன்  சரமாரியாக கருத்துக்கள் இடுபவர்களில் சிலர் முகநூலில் நடிகையின் படத்தை வெளியிட்டு மட்டமாக வர்ணிப்பவர்கள் !! மனதில் இவ்வளவு வக்ரத்தை வைத்துகொண்டு பெண்ணுக்கு ஆதரவாக கருத்திடும் வேடதாரிகள் ஒருவகையில் குற்றவாளிகள் தான் ! உடலை தீண்டி சிதைத்தால்தான் வன்முறையா ? பார்வையால், பேச்சால்  பெண்களை கேலிப்பொருளாக்குபவர்கள் செய்வதற்கு பெயரும் வன்முறைதான்   !!

பெண்களை போகப்பொருளாக எண்ணி பேசுபவர்கள் நிறைந்திருக்கும் உலகம், இப்போது பெண்களைப்பற்றி புதிதாக கவலைப்படுவது தான் வினோதம் !!
  
மேலும்

என்னவோ எல்லோரும் தமிழ்நாட்டுக்கு வெளில வாழ்வதை போல 'டெல்லியில் போராடுறாங்க, தமிழ்நாட்டுல ஏன் யாரும் போராடல' என்று முகநூல்,ட்விட்டர்ல  பொங்கறத பார்த்தபோது வேடிக்கையான வேதனை !!??  ஏதோ சொல்லனும்னு கண்டபடி உளறி இந்த மாதிரி நிகழ்வுகளை தயவுசெய்து  வெட்டி விவாதப்  பொருளாக்கி வேடிக்கை பார்க்காதீர்கள் !!  நடந்த கொடுமையை விட இது மிக அதிகமாக வலிக்கிறது !!

இது போன்ற செய்தியை சில நாள் பேசுவதும் பின் மொத்தமாக மறந்து விடுவதுமாக இருக்கும் நாம் தான் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகள் !! .

போராட்டம் ??

பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப்பிடிக்கிறோம் என்ற பெயரில் போடப்படும் கோஷங்கள் அறிக்கைகள் எல்லாம் தங்கள் உடை சுதந்திரத்தில் யாரும் தலையிட கூடாது , என் உடல் என் விருப்பம் என்பது மாதிரியாக த்தான் இருக்கிறது !! எங்கோ ஒரு மூலையில் நிமிடத்திற்கு ஒரு முறை பெண் கொடுமைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாள், அவற்றை எதையும் கண்டுகொள்ளாத ஆணுலகம் ஒரு புறம் என்றால், பெண்கள் இயக்கமும், அமைப்புகளும் அமைதியாகவே  இருக்கிறது !

இரோம் ஷர்மிளா என்ற பெண்ணின் பல வருட தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்று வரை பெரிதுபடுத்தப்படாமல், முடிவும் எட்டப்படவில்லை. எந்த பெண்ணுரிமை இயக்கங்களும் இதனை அவ்வளவாக தீவிரப் படுத்தவும் இல்லை ?! அவருக்கே நீதி கிடைக்காத நாட்டில் வேறு எந்த பெண்ணிற்கு கிடைத்துவிட போகிறது...??!!

தூக்கில் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்?!!

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு அரசும் அதிகாரிகளும் என்ன செய்வார்கள், அவர்கள் மட்டுமா பொறுப்பு ?! தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாத வரை எந்த அரசும் என்னவும் செய்ய முடியாது ! அந்த 6 பேரை தூக்கில் போடுவதுடன் முடிந்துவிடுமா அத்தனை கேவலங்களும், அசிங்கங்களும் ?! நிச்சயமாக இதுவல்ல தீர்வு...?!!

குற்றச்செயலின் போது, உணர்ச்சி வசத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்களுக்கு உயிர் பயம் சுத்தமாக இருக்காது, ஈடுபடும் செயலை முடித்தே தீரவேண்டும் என்ற வெறி மட்டுமே  மனதை ஆக்கிரமித்து இருக்கும் என்ற நிலையில் தண்டனையை பற்றிய எண்ணம் எப்படி வரும் ?

நடக்கும் அத்தனை பாலியல் கொடுமைகளும் வெளிவருவதில்லை...  ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டுமே வெளி உலகம் அறிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினர் மறைத்துவிடும் அளவில் தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது. கேவலம் அவமானம் போன்றவைகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை பெண்மை மௌனம் சாதித்துத்தான் ஆகவேண்டும் போல...!!

குற்றவாளியை தூக்கில் போடணும், அடிச்சே கொல்லனும் என்கிற ஆவேசமான ஆர்பாட்டங்களை மதிக்கிறேன். ஆனால் இதனால் மட்டும்  இது போன்ற பிரச்சனைகள்  முடிவுக்கு எப்படி வரும்...??!  வன்முறைக்கு மற்றொரு வன்முறை என்பது போல் ஆகுமே தவிர குற்றங்கள் குறைந்துவிடுமா?.  பலிக்கு பலி என்று மனதை சமாதானம் பண்ணிக்கொள்ளலாம், அதே நேரம் இப்படிப்பட்ட பலியை எதிர்பார்க்கும் நமக்கு  என்ன பெயர் ???! 

இன்று இவர்கள் 6 பேரை தூக்கில் போட்டுவிடுவோம், அதே நேரம் இன்னும் பலர் தினசரி செய்திகளில் தொடர்ந்து வருகிறார்களே...அவர்களை என்ன செய்வது...அதன்பிறகு நாளை சிலர் வருவார்களே...அவர்களை...???!!!  தண்டனைகள்  தொடர்கதையாகுமே தவிர வேறு என்ன நடந்துவிடும்.  மாற்றம் வந்தாகவேண்டும்...சமூகத்தில்...அரசியலில்...கல்வியில்...மனிதமனங்களில்...!!

சட்டங்கள் என்ன செய்யும் ??

ஒவ்வொரு கொலை, மரணங்கள்  ஏற்பட்ட பின்னரே விழித்துக்கொண்டு சட்டங்களை இயற்றும் நம் அரசு. பள்ளி கூரை தீப்பிடித்து நூறு குழந்தைகள் இறந்தால், பள்ளிகளை கண்காணிக்க உத்தரவு!  பள்ளி வேனின் ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்ததும் வாகனங்கள் லைசென்ஸ், பராமரிப்பை தீவிரமாக செக் பண்ணுவார்கள்... இப்போது இந்த பரிதாப டெல்லிப் பெண் கிடைத்துவிட்டார் புதிதாக சட்டங்களை இயற்ற 

கடுமையான தண்டனைகள் கொடுக்ககூடிய சட்டங்களை இயற்றுங்கள் என்பது பலரது கூக்குரல் !! சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த நாவரசு கொலை பலருக்கு நினைவிருக்கலாம். நாவரசின் கை கால்களை தனித்தனியாக வெட்டி சூட்கேசில் மறைத்த குற்றவாளி ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் ! உலகமே அதிர்ச்சி அடைந்த அந்த கொடூர கொலைக்கு தண்டனை கிடைக்க 15 வருடம் ஆனது. ராகிங் தடுப்பு சட்டம் (Tamil Nadu Prohibition of Ragging Act)ஒன்றும் அதன் பிறகு இயற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை வேறு ராகிங் குற்றங்களே நடக்கவில்லை என்பது உண்மை என்றால் , பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை இயற்ற சொல்லி போராடலாம் தவறே இல்லை !! 

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை வைத்து  பிடிக்காத கணவன்/ கணவன் வீட்டாரை பழிவாங்கும் சில பெண்கள் இருக்கிறார்கள். அதை  போல இதற்காபோடப்படும் சட்டங்களும் தவறாக பிரயோகிக்கப்படலாம் ...  

அரசாங்கம் 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம் என்று மத்திய அரசும், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என மாநில அரசும் சிறிதும் மனசாட்சி இன்றி சொல்கிறது. வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் ?? மக்கள் அரியணையில் அமரவைத்ததற்கு இதையாவது சொல்ல வேண்டாமா?? இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்வதுடன் அரசு தனது பொறுப்பை முடித்துக்கொள்கிறது. சுயநல அரசுகள், கையாலாகாத அதிகாரிகள், ஊழலுக்கு துணை நிற்கும் நீதி மற்றும் காவல்துறை, இவை  எல்லாவற்றையும் விட முதுகெலும்பில்லாத நம் மக்கள் !!!

இணைய தளங்களில் ஆவேசபடுகிற அளவில் தான் மக்களின் தைரியம் இருக்கிறது. அப்படியே ஒரு சிலர் உண்மையாக கருத்திட்டு கோபத்தை காட்டினாலும் சைபர் கிரைம் என்ற பயத்தை காட்டிவிட்டது அரசு.

சமூகம் !!

மக்களால்  கட்டி அமைக்கப்பட்ட இந்த சமூகம் இப்போது மது என்னும் கொடிய அரக்கனாலும், மின் தடையாலும் முடக்கிப்போடப்பட்டுள்ளது. தொழில், வேலை, விவசாயம் பாதிப்பது  ஒரு பக்கம் என்றால் இரவில்  தடை செய்யப்படும் மின்சாரத்தால் சரியான தூக்கமின்றி பகலிலும் தொடரும் உடல், மன சோர்வு, மன உளைச்சலில் கொண்டுபோய் விட்டு விடுகிறது. சிந்தனைகள் முழுவதும் எதன் வசமோ சென்றதை போல் மந்திரித்துவிட்ட கோழியாக வலம்  வருகிறார்கள் மக்கள். இங்கே மக்கள் என்று குறிப்பிடுவது  சென்னையை தவிர்த்த பிற பகுதிகளை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

மனம் தடுமாற குடியை காரணம் சொல்கிறான் ஒருவன், ஓ அப்படியா என்று கேட்பதுடன் இங்கே நம் அனைவரின் கடமையும் ஏறக்குறைய முடிந்தே விடுகிறது. குடிக்கிற எல்லோருமா தவறு பண்றாங்க என்ற மேதாவிகளின் விமர்சனங்களை சகித்துகொள்ளவும் பழகிகொள்ளவேண்டும் .

திரைத்துறை, தொலைக்காட்சி, மீடியாக்கள் 

திரைப்படம் விளம்பர படம் எடுக்கும் ஆண்களால் தான் கலாச்சாரச்சீரழிவு  என்ற கருத்துகள் விமர்சனங்கள் சுத்த அபத்தம் ! அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கு துணை போகும் பெண்களை என்னவென்று சொல்வீர்கள்...??! உடை குறைக்கவேண்டும், ஆபாச காட்சி இருக்கிறது என்றால் முடியாது என மறுக்காமல் அதற்கு  உடன்படும்  பெண்கள் இருக்கும் வரை இந்த சீரழிவு தொடரத்தான் செய்யும் !! தனது விருப்பத்திற்காக , பணம் புகழுக்காக தனது உடலை, பெண்மையை  கடைவிரித்துவிட்ட பெண்களால் நிரம்பி இருக்கிறது திரைத்துறை, விளம்பர மீடியாக்கள் !! 

பெண்களின் அங்கங்களை கேமரா ஜூம் செய்ய அனுமதித்துவிட்டு கேமராவை  குறை சொல்வதை போல் இருக்கிறது படம் எடுப்பவர்களை குறை சொல்வது ... 

இளைஞர் கூட்டத்திற்கு  தன் அங்கங்களை காட்டிவிட்டு, 'நான் காட்டுவேன் அதை நீ பார்த்து சலனபடகூடாது' என கூறுவது என்ன லாஜிக் தெரியல...உணர்ச்சிகள் அற்றவர்களா மனிதர்கள் ?!! இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கும் மொபைல் போன் ஒன்று போதும் எத்தகைய மோசமான நிகழ்வுகளையும் நிமிடத்தில் கண்டுகளிக்க......இதற்கு மத்தியில் வாழும் இன்றைய இளைஞர்கள்  ஒரு விதத்தில் பரிதாபத்துக்குரியவர்கள், இவர்களுக்கு எது சரி எது தவறு என்று வழிகாட்ட பெற்றோர்களோ, கல்வியோ, சமூகமோ இல்லை. 

பெண்களின் உடைதான் காரணம் என்ற கருத்துகளை படிக்கும் போது  இப்படி கேட்கத் தோன்றுகிறது...திரைப்படங்களில் நடிகைகளின் அரைகுறை உடைகள்  பாலியல் உணர்வுகளை தூண்டுகிறது இனிமேல் அது போன்று உடை அணியக்கூடாது, நாகரீகமாக இருக்கவேண்டும் என அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்தால் என்ன...?!! (முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம்........!!)

குற்றவாளிகள்  எங்கும் இருக்கிறார்கள்?!

பல ஹாஸ்டல் அறை சுவர்கள் கூட சொல்லும்... பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல் மாதிரியிலான(?) கதைகளை !! ஒரு சிலர்  உடன்பட்டும் மற்றவர்கள் சகித்துக்கொண்டும் கடத்தவேண்டும் நாட்களை!

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏன் ஒவ்வொரு வீட்டிலும் கூட ஒரு குற்றவாளி இருக்கலாம் மனபிறழ்வு, மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, போட்டி பொறாமை, பழி வாங்கும் எண்ணம் , வன்மம்  நிரம்பிய மனது சந்தர்ப்பம் கிடைப்பதற்காக காத்திருந்து சந்தர்ப்பம் அமைந்தால்,  அப்போது தெரியும் நேற்றுவரை சாதுவாக தெரிந்த இவனா இப்படி என்று...!!???

டெல்லி பெண் விசயத்தில் பிடிபட்ட ஒருவரின் வயது 17,  மற்றொருவனுக்கு 18 இருக்குமாம் ??!! என்ன கொடுமை இது !! பாலியல் வெறியை தணித்துகொண்டதுடன் நில்லாமல் உறுப்பை சிதைத்து.......????!! இவர்களின் ரத்தத்தில், மூளையில், உடல் செல்களில் எதில் கலந்திருக்கும் இத்தகைய  வன்மம் !?  அந்த பெண்ணை பார்த்த அந்த கணத்தில் ஏற்பட்ட வன்மம் மட்டும் அல்ல இது, மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு பாதிப்பு, கோபம், காயம், வலி, வடு இருந்திருக்கிறது... அது இப்போது வெளிவந்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அமைதி அடைந்திருக்கிறது .

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு மிருகம்... அன்பிற்கு அர்த்தமோ...ஆண் பெண் பேதமோ...மனித நேயமோ...இடம் பொருளோ...எதுவும் தெரியாது அவ்வளவு ஏன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வந்ததும்  மறந்து போகும்...
மிருகம் வெளிப்படும் அந்த வேளையில்...

பாலியல் இன்பத்திற்காக, பாலியல் வறட்சி காரணமாக இவை நடக்கின்றன என்றால் நாம் இன்னும் மனித மனதை சரியாக புரிந்துகொள்வில்லை என்றே அர்த்தம்!

ஏதோ ஒன்றை அடைய முயன்று அது முடியாமல் இப்படி தீர்த்துகொள்கிறார்கள்  என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் இதில் உண்மை இருக்கிறது. எதிலும் நிறைவு அடையாமை, மேலும் மேலும் வேண்டும் என்பதை போன்ற மனதிற்கு, ஏதோ ஒரு வடிகால் தேவை படுகிறது, சமூக சீரழிவு அரங்கேறுகிறது! 


மனிதநேயம், சக மனிதரின் மீதான அன்பு குறைந்து காழ்ப்புணர்ச்சி அதிகரித்துவிட்டது. நம் மதங்கள் கடவுளை முன்னிறுத்துகின்றனவே தவிர  ஆன்மீக விழிப்புணர்ச்சியை கொடுக்கவில்லை. மனிதனுக்குள் இருக்கும் ஆத்மாவை தூய்மை படுத்த முயற்சி செய்யாமல் தனி மனித துதிகள் பெருகிவிட்டது. 

ஒரு குற்றம் நடந்ததற்கு பின்னால் மறைமுக கா'ரணங்கள்' இப்படி பல இருக்கின்றன, ஆனால் செய்தவன் மட்டும் குற்றவாளி என கூண்டில் ஏற்றப்படுகிறான்...! வன்மத்தால் கொடுமை செய்தவனுக்கு தண்டனை வாங்கி தருவது பெரிய காரியமல்ல, வன்மம் ஏற்படாமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே மிக நல்லது !!

* * * * * * * * * * * * *
பாலியல் வன்முறை பெண்கள்  மீது மட்டுமல்ல பெண்களாலும் நடந்துகொண்டிருக்கிறது என்பது கொஞ்சமும்  ஜீரணிக்கமுடியாத உண்மை !! நேரம்  இருப்பின்  படித்து பாருங்கள் - பெண்களா இப்படி ??!!
மற்றும் எனது இரண்டு பதிவுகள் உங்கள் பார்வைக்கு
ஒரு அலசல் - குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு 
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன்...?
* * * * * * * * * * * * * * 
பெண்களே காரணம்? பெற்றோர் காரணமா? இந்த பிரச்னைக்கு தீர்வு ஏதும் இருக்கிறதா ?? 
தொடர்ந்து பேசுவோம்...சிந்திப்போம் !!