செவ்வாய், ஜூன் 5

PM 12:11
7



ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடபடுகிறது...இத்தினத்தை பொறுப்பேற்று நடத்துவதற்காக ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் திட்டக் குழு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு நாட்டை தேர்ந்தெடுக்கிறது...இந்த ஆண்டு இந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது...

இதற்காக பெருமை கொள்ள முடியாது, எங்கே குறைவு இருக்கிறதோ அங்கே தான் நிறைவு செய்து கொள்ள வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும்...120 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாமல் 60 % மக்கள் இருக்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது..!!

இத்தகைய மோசமான நிலையில் நாடு இருக்கும்போது வல்லரசு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறும் அதி மேதாவிகளை என்னவென்று சொல்ல ??!

தரமற்ற குடிநீர்,
சாக்கடையாகும் நீர்பிடிப்பு பகுதிகள்,
பிளாஸ்டிக் கழிவால் சீர்கெட்டுப்  போன சுற்றுப்புறம்,
மணல் கொள்ளையால் காணாமல் போகும் ஆறுகள்,
மரங்களை வெட்டியதால் சுடுகாடாய் மாறிய பசுமை பிரதேசங்கள்

பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 

ஆனால்... 

மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் ஆபத்துகள்...

இனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை.

மரங்கள்  நடுவது போன்ற கண் துடைப்புகள்

ஒரு வாரத்தில் இத்தனை மரங்களை நட்டோம் என்று லட்சத்தில் கணக்குகளை சொல்கிறார்கள்...இது சாத்தியமா ?!! எந்த ஊரில் , எந்த தெருவில் என்று விவரமாக கூறினால் நல்லது. நடுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அதை பாராமரிப்பது தான் மிக முக்கியம்...மரம் நடுவது என்பது வியாபாரம் அல்ல !! விளம்பரத்துக்காக மரம் நடுபவர்கள் தாங்கள் நட்ட மரங்களை தொடர்ந்து கண் காணிக்கிறார்களா என தெரியவில்லை. தற்போது வி.ஐ.பி கள் ஒரு கன்றை நடுவதை போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதுடன் அவர்களின் சமூக கடமை நிறைவேறி விட்டதாக நிறைவு கொண்டுவிடுகிறார்கள். இப்படி அல்லாமல் முழுமையாக மரம் நடுவதை செயல்படுத்த வேண்டும்...

அரசின்  வீண் ஜம்பங்கள் !!

"வனங்கள்: உங்கள் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் வனங்களின் பங்கு, குறிப்பாக இந்திய வனங்களின் பங்கு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுசெய்யப்படும். - செய்தி 

 எந்த  வித விளம்பரமும் இல்லாமல் 30 வருடங்களாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய மாமனிதரை இன்று நினைவுகூர்வது ஏற்புடையதாக இருக்கும்...இவரை உலகிற்கு அறிமுகபடுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசு தான் இப்படி சொல்கிறது......

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பூமியின் சுற்றுச்சூழலை காப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் சமநிலையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது"

இன்னும்  எத்தனை காலத்திற்கு இது போன்ற பச்சை பொய்களை நம் அரசியல்வாதிகள் கூறி கொண்டிருப்பார்கள் ???!! கேவலம் !!

சுற்றுச்சூழலின் எதிரி பிளாஸ்டிக் !!

2009 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகின்றன. அதனையும் உடனுக்கு உடன் அகற்றி விடுகிறார்கள். ஊரின் நுழைவாயிலிலேயே இங்கே 'பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது' என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையாக இது இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒத்துழைப்பை பெற்று சிறப்பாக முழுமையாக செயல்படுத்த பட்டு வருகிறது பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் !!

ஜூன் முதல் தேதியில் இருந்து திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும்,அவ்வளவாக கவனிக்க படவில்லை. ஆனால் தற்போது மேயர் அவர்களின் சிறப்பான அக்கறை, ஆர்வத்தினால் முழுமையாக செயல்படுத்த படும் என்று நம்புகிறோம்...! அரசு மட்டும் திட்டங்களை போடும் ஆனால் அதை கடைபிடிக்க வேண்டியது மக்களின் வேலை. 500 ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் மக்கமுடியாத பிளாஸ்டிக் பொருட்களை வாங்காமல் தவிருங்கள்.

கூவமாகும் தாமிரபரணி போன்ற அனைத்து நதிகளையும் சுத்தபடுத்த கடுமையான தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்...!!


நமது கடமையும் கூட

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது ஏசி அறைக்குள் மீடியா மைக்குகள் சூழ கோட் போட்ட பெரிய மனிதர்கள் மட்டும் பேசி விவாதிக்கும் விஷயம் அல்ல...
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு நல்லதும் நடைபெறாது...இது நமது மண்...நம் பூமி...இதனை காக்கவேண்டியது நம் கடமை...

நம்மால் இயன்றவரை மரங்களை வெட்டாமல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, நதியில் கழிவுகளை/குப்பைகளை போடாமல், மரங்களை நட்டு வளர்த்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோம்...

அடுத்த தலைமுறைக்கு நல்லதை மட்டும் விட்டு செல்வோம்...!!


அனைவருக்கும் பசுமைவிடியல் நண்பர்களின் சார்பில் சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்...!! 
 
source - பசுமை விடியல் 

படங்கள்  - நன்றி கூகுள்
Tweet

7 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு ..,

    நல்லதையே விட்டுச்செல்ல முயற்சிப்போம் நம்முடைய எதிர்கால சந்ததிர்க்கு .. !

    பதிலளிநீக்கு
  2. சூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள்:நெகிழிப்பை பயன்படுத்துவது ஒரு படுபாதகச் செயல்!

    http://arulgreen.blogspot.com/2012/06/5.html

    பதிலளிநீக்கு
  3. இயற்கையை காக்க நாம் கைகோர்ப்போம்! லட்சம் மரங்களை நட்டு அதை சாவடிப்பதைத்தான் விளம்பர பிரியர்கள் செய்கிறார்கள்! தன் வாழ்நாளில் ஆளுக்கு ஒரு 50 மரம் வளர்த்தாலே போதும் நம் சந்ததிக்கு செய்யும் பெரிய தொண்டு...! பகிர்வுக்கு நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள பதிவு அடுத்த தலைமுறை நம் சந்ததிகள் தானே அவர்களுக்கு சொத்து மட்டுமல்ல ஆரோக்கிய வாழ்வையும் நம் செயல்களால் விட்டுச் செல்வோமே அருமை அருமை .

    பதிலளிநீக்கு
  5. அடுத்து வரும் சந்ததிக்கு நல்லதையே விட்டு செல்வோம் - நன்றி!

    பதிலளிநீக்கு
  6. இப்ப தான் இந்த பகிர்வை பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.மிக அருமை.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...