Thursday, September 2

5:22 PM
28


இளம் பெற்றோரின் நிலை  

இதுவரை இருந்த தலைமுறையினருக்கு இல்லாத கஷ்டங்கள் இப்போதுள்ள இளைய  தலைமுறையினருக்கு உள்ளது. ஒன்று நல்லதா, கெட்டதா என்று பிரித்து சொல்ல கூட்டுக்குடும்பம் இல்லை.  பெரியோர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் சில நேரம் தடுமாறி விடுகின்றனர் .  

தங்கள் வரவேற்பறையில் வந்து விழுபவை எத்தகையவை என்பதை தரம் பிரிக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.  தங்களை சுற்றி கலர் கலராய் நல்லதும், கெட்டதும் வலம் வரும்போது, அதையும் தாண்டி ஒழுக்கத்துடனும், முறையுடனும் வாழ்வது என்பது சவாலான விசயம்தான். அந்த சவாலை வெற்றிகரமாக பல இளம் தம்பதியினரும் சமாளித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்.

இதே மாதிரியான சூழ்நிலையில் தங்களது குழந்தைகளை வளர்ப்பது என்பது அதைவிட மிகவும் கடினமான சவால்தான்.

பெண்களும் இப்போது வேலைக்கு செல்வதால், தன் வீட்டு வேலை, பணியின் சுமை , வேலை நேரத்தில் தங்கள் சகாக்களுடன் ஏற்படும் உறவு, உரசல், விரிசல் இதனால் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல், உடல் சோர்வு போன்றவற்றையும் மீறி குழந்தைகளை கவனித்து வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

குழந்தைகளின் எதிர்பார்ப்புகள்

குழந்தையின் வளமான வாழ்க்கைக்கு மிக முக்கியமான அடித்தளமே குழந்தைக்கும்,  அதன் பெற்றோருக்கும் இடையிலான உறவுதான் தீர்மானிக்கிறது.

*  எல்லா குழந்தைகளுமே தங்கள் பெற்றோரிடம் அன்பு, அரவணைப்பு, உணர்வு ரீதியான பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்ப்பார்கிறது. அது ஏமாற்றத்தில் முடியும்போது  தான் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. 

*  தங்களின்  பெற்றோர்கள் தங்களுடைய சிறு சிறு விருப்பங்களையும் நிறைவேற்ற   வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே நேரத்தில் அதை காதுகொடுத்து கேட்கவாவது செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

* தங்களின் சிறு செயல்களையும் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். அது விளையாட்டாகவோ, படிப்பு மற்றும் எந்த விசயமாக இருந்தாலும் சிறு அங்கீகாரத்தை எதிர்பார்கிறார்கள் நம் பிள்ளைகள்.

*  தங்களின் ரோல் மாடலாக ஆண் குழந்தை தந்தையையும், பெண் குழந்தை தன் தாயையும் கொண்டு வளருகிறார்கள் . சிறந்த பெற்றோராய் தங்கள் பெற்றோரும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு.

கிரச் (குழந்தைகள் காப்பகம்)

வேலைக்கு செல்லும் பெற்றோர் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கிரச்சில்  விட்டு செல்கின்றனர். வார  இறுதியில் மட்டுமே தன் தாயுடன் முழு பொழுதையும் கழிக்கிறார்கள். தாயின் அன்பையும் அரவணைப்பையும் சிறு பிராயத்தில் இழந்து விடுவதால் அவர்கள் கண்களில் ஒரு ஏக்கம் நிரந்தரமாக தங்கி விடுகிறது. 

இதைவிட வீட்டு பெரியவர்களிடம் விட்டு செல்லப்படும் குழந்தைகள் நல்ல அன்பான கவனிப்பில் வளருகிறார்கள். ஆனால் பல வீடுகளில் பெரியோர்கள் இல்லாத நிலைதான் நிலவுகிறது. தங்கள் குழந்தைகளின் நன்மையை கருதியாவது பெரியோர்களை வீட்டில் இருக்க செய்வது அல்லது அவர்களுடன் இணைந்து வாழ்வது வேலைக்கு செல்லும் இளம் பெற்றோருக்கு நன்மையாக இருக்கும்.

சில ஆலோசனைகள்

*  உங்கள் விருப்பங்கள், கனவுகளை அவர்களின் மீது திணிக்காதீர்கள். LKG  படிக்கும் போதே டாக்டர் ஆகவேண்டும், இன்ஜீனியர் ஆகவேண்டும் என்பது போன்ற கனவுகளை விதைக்காதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். வளர வளரத்தான் தான் என்னவாக  வேண்டும், எத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பிடிபடும். அதை விடுத்து ஒன்றை மட்டுமே நாம் சொல்லி வளர்க்கும் போது பிற துறைகளில் அவர்களின் கவனம் செல்வது தடுக்கப்படுகிறது. அவர்களின் தனித்தன்மையும் பாதிக்கப்பட்டு, உங்களின் கனவும் நிறைவேறாமல் தடுமாறி போக கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். 

*  வாய்ப்புகளை மட்டும் நீங்கள் ஏற்படுத்தி கொடுங்கள்....இன்றைய குழந்தைகள் மிக புத்திசாலிகள் சாதிப்பார்கள்....அவர்களுக்கு  போடப்பட்ட கனவு கைகட்டுகளை அவிழ்த்து விடுங்கள்.  தன் வாழ்கையை தாங்களே நிர்ணயிக்க கூடிய உரிமையை வளரும் பிள்ளைகளுக்கு கொடுங்கள், அதற்கு தேவையான உதவிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள்.

*   முக்கியமாக ஒரு குழந்தையை ஓயாமல் விளையாட கூட விடாமல் படி படி என்று வற்புறுத்தும் போது அந்த பிள்ளை இப்படித்தான் பதில் சொல்லும், " படிக்கச்சொல்லி வற்புறுத்தி உட்கார வைத்தாலும் நான் மனம் வைத்து முயன்றால் தானே படிக்க முடியும். இப்ப கொஞ்சம் நேரம் விளையாடனும் போல் இருக்கிறது, விளையாடிவிட்டு வந்தால் ரிலாக்சாக  பீல் பண்ணுவேன். அப்புறம் படித்தால் மனதில் நன்கு பதியும். SO LET ME GO  TO PLAY "  இதுதான் நம் எல்லோருக்குமான பதில். நாம் தலை கீழாய் நின்றாலும் படிக்க வேண்டியது அவர்கள்தானே....நிதர்சனம் இதுவே...!! 

அதிக கண்டிப்பு இப்போது வேலைக்கு ஆகாது. ரொம்ப கண்டித்தால் 'சரிதான் போங்கள்' என்று அசால்டாக போய்ட்டே இருப்பார்கள்.


வழி முறைகள்

பெரிதாக ஒன்றும் இல்லை ஒரே ஒரு திட்டமிடல் மட்டுமே போதும் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கு.  தினம் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யுங்கள் என்னதான் வேலை , பிசி என்றாலும் தினம் கொஞ்ச நேரம் அவர்களுடன் மனம் விட்டு பேசி சிரித்து பாருங்கள் உங்களின் அன்றைய மொத்த டென்ஷனும் பறந்து போகும். குழந்தைகளும் உற்சாகமாக  பள்ளியில் நடந்த விசயங்கள் அனைத்தையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் கிடைக்கக்கூடிய பெரிய நன்மை என்னவென்றால் அவர்களின் நடவடிக்கைகள் நல்லவை , கெட்டவை  இரண்டையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த தனிப்பட்ட நேரத்தில் சில நற்பண்புகளையும் அவர்கள் மனதில் சுலபமாக விதைத்து விட முடியும்

" சரியான திட்டமிடுதலும், முன் யோசனையும் மட்டும் இருந்தால் போதும் வேலையையும் இழக்காமல் , உங்கள் குழந்தைகளையும் நன்கு கவனித்து வெற்றிகரமாக வாழ்க்கையில் பேலன்ஸ்   பண்ண முடியும் " 

" நேரத்தை கொஞ்சம் அவர்களுக்காகவும்   கொடுங்கள்,  நம் குழந்தைகள் தானே சந்தோசமாக  இருந்துவிட்டு போகட்டுமே ".


   
Tweet

28 comments:

  1. வழக்கம் போல் உபயோகமான பதிவு. குழந்தைகளுடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது செலவிட வேண்டும்.
    அது நமது மன இறுக்கத்தை நீக்கும் . வாழ்த்துக்கள் கௌசல்யா

    ReplyDelete
  2. எப்படி தான் குழந்தையை வெளியே விட்டு விட்டு வேலைக்கு செல்கிறார்களோ

    இப்போ உள்ள குழந்தைகள் என்ன சொன்னாலும் அப்படியே புடித்து கொள்ளும் அறிவு இருக்கிறது அன்பாக சொல்ல வேண்டிய இடத்தில் அன்பா சொல்ல வேண்டும் பயம் இருக்க வேண்டும் ஆனால் நாம் தொடர்ந்து அடித்து அந்த பயத்தை தெளியே வைக்க கூடாது

    ReplyDelete
  3. அதிக கண்டிப்பு இப்போது வேலைக்கு ஆகாது. ரொம்ப கண்டித்தால் 'சரிதான் போங்கள்' என்று அசால்டாக போய்ட்டே இருப்பார்கள்.


    ....True!!! குடும்ப சூழ்நிலை மற்றும் parents' priorities எப்படி குழந்தைகளை பாதிக்கிறது என்று சொல்லும் பதிவு.

    ReplyDelete
  4. ஒரு தலைமுறை குழந்தை வளர்ப்பின் அவசியங்களை உணராமல் பிள்ளைகள் வளர்ந்தாயிற்று இன்று நாம் காணக்கூடிய மிகப்பெரிய குற்றங்களின் பிண்ணணியில் முறை தவறிவ வளர்ப்பின்றி வேறு என்ன இருக்கப்ப்டும்.

    அழுத்தப்படும் எல்லாம் அட்ங்காமல் மேலெழும்பி வரும். குழந்தைகளிடம் சாந்தமாய் எடுத்து சொல்லி விசயங்களை புரியவைக்க வேண்டும். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் கணவன் மனைவியர் தமது தாய் தந்தையரை உடன் வைத்துக் கொள்வதில்லை...எப்படிப்பார்த்தாலும் பொருளீட்டல் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம்...பால்யத்தில் பதியும் நினைவுகள்...அவை சுகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது பெற்றோர் கையிலே தான் இருக்கிறது........

    தானாக விளைவது நூற்றில் ஒன்றிரண்டுதான்.....விதிவிலக்குகளை பேசாமல் குழந்தை நலனில் கவனம் செலுத்துவது நல்லது என்று பதிவிட்டு அறிவுறுத்தியிருக்கும் கெளசல்யா..வுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  5. ரொம்ப கரெக்டாக சொன்னீர்கள் கௌசல்யா,இன்னும் எழுதுங்க,அருமை.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. மிக அவசியமான பதிவு கண்டிப்பாக் எல்லா பெற்றார்களும் வாசிக்க வேண்டும் ( வாசிக்க எங்கே நேரம் உண்டு ) .குழந்தையின் வளார்ப்பு உணவில் மட்டும் அல்ல பெற்றவர்களின் கவனிப்பிலும் உண்டு. உங்கள் பதிவுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல பதிவு..

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு...please continue

    ReplyDelete
  9. LK...

    //அது நமது மன இறுக்கத்தை நீக்கும்//

    பெற்றவர்களின் மன இறுக்கமும் குறையும், குழந்தைகளின் மனமும் குதூகலம் அடையும்...சுமூகமான உறவும் பலப்படும்...

    :))

    ReplyDelete
  10. சௌந்தர்...

    //எப்படி தான் குழந்தையை வெளியே விட்டு விட்டு வேலைக்கு செல்கிறார்களோ//

    அவர்களின் வசதியான எதிர்கால வாழ்க்கைக்காக தானே நாங்கள் இப்படி கஷ்டபடுகிறோம் என்பார்கள். ஆனால் இன்று பிஞ்சு வயதில் அவர்களை தவிக்க விட்டுவிட்டு, அவர்கள் மனதில் அன்பையும், அரவணைப்பையும் விதைப்பதை விட்டு எதிர்காலத்துக்காக என்று சொல்வது முரண்பாடுதான். என்ன செய்வது...??

    ReplyDelete
  11. Chitra...

    //குடும்ப சூழ்நிலை மற்றும் parents' priorities எப்படி குழந்தைகளை பாதிக்கிறது என்று சொல்லும் பதிவு.//

    சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது தோழி. இந்த தலைமுறை குழந்தைகள் மிகவும் பாவம், பல புற சூழல்களையும் தாண்டி வெற்றி பெற போராட வேண்டி இருக்கிறது. பெற்றவர்கள் தான் அதை உணர்ந்து பிள்ளைகளை அதிகமாக கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  12. dheva...

    //அழுத்தப்படும் எல்லாம் அட்ங்காமல் மேலெழும்பி வரும். குழந்தைகளிடம் சாந்தமாய் எடுத்து சொல்லி விசயங்களை புரியவைக்க வேண்டும்//

    மிக சிறந்த உதாரணம்...அதிக கண்டிப்பு தேவையற்றது என்பது உண்மைதான்.

    //தானாக விளைவது நூற்றில் ஒன்றிரண்டுதான்.....விதிவிலக்குகளை பேசாமல் குழந்தை நலனில் கவனம் செலுத்துவது நல்லது//

    உங்களின் புரிதலுக்கும் ஆழமான கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. asiya omar...

    நன்றி தோழி.

    :))

    ReplyDelete
  14. நிலாமதி...

    //வாசிக்க எங்கே நேரம் உண்டு//

    சரியா சொன்னீங்க....!

    //குழந்தையின் வளர்ப்பு உணவில் மட்டும் அல்ல பெற்றவர்களின் கவனிப்பிலும் உண்டு.//

    இந்த உண்மையை புரிந்தவர்கள் மிகவும் குறைவுதான் சகோதரி.

    நன்றி.

    ReplyDelete
  15. //வாய்ப்புகளை மட்டும் நீங்கள் ஏற்படுத்தி கொடுங்கள்....இன்றைய குழந்தைகள் மிக புத்திசாலிகள் சாதிப்பார்கள்....//

    உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.

    அருமையான பதிவு.

    அவசியமான இடுகை.

    ReplyDelete
  16. நல்ல பதிவுங்க கௌசல்யா... இன்றைய பெற்றோர்களுக்கு அவசியமான பதிவு

    ReplyDelete
  17. நல்ல ஆலோசனைகள்...இதை படித்து சிலராவது திருந்துவார்கள் என்று நம்புவோம்....

    ReplyDelete
  18. குழந்தைகளின் நன்மையை கருதியாவது பெரியோர்களை வீட்டில் இருக்க செய்வது அல்லது அவர்களுடன் இணைந்து வாழ்வது///

    Important Line Kousalya..Nice Post..

    ReplyDelete
  19. குழந்தைகள் மீது நீங்கள் காட்டும் அன்பு மலைக்க வைக்கிறது. எழுதுங்கள்!

    இது போல் பல விஷயங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

    நானும் உங்களை பின்தொடர்பவராக சேர்ந்துவிட்டேன் இப்போது!

    என் இயற்கை மருத்துவ தகவல்களை பாராட்டியதற்கு நன்றி தோழி!

    ReplyDelete
  20. சே.குமார்...

    nanringa...

    ReplyDelete
  21. அப்பாவி தங்கமணி...

    //இன்றைய பெற்றோர்களுக்கு அவசியமான பதிவு//

    ஆமாம் தோழி. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. வெறும்பய...

    நன்றி


    பதிவுலகில் பாபு...

    நன்றி


    கோவை குமரன்...


    நன்றி

    ReplyDelete
  23. இனிய தமிழ்...

    //நல்ல ஆலோசனைகள்...இதை படித்து சிலராவது திருந்துவார்கள் என்று நம்புவோம்....//

    நம்புவோம்.

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  24. அஹமது இர்ஷாத்...

    //Important Line Kousalya..Nice Post..//

    ரொம்ப நன்றிங்க சகோ.

    ReplyDelete
  25. என்னது நானு யாரா...

    //குழந்தைகள் மீது நீங்கள் காட்டும் அன்பு மலைக்க வைக்கிறது.//

    ஒரு தாய்க்கு இந்த அன்பு என்பது இயற்கை தானே.

    //நானும் உங்களை பின்தொடர்பவராக சேர்ந்துவிட்டேன் இப்போது!//

    அதற்கு என் நன்றி சகோ.

    தொடர்ந்து வாங்க

    :)

    ReplyDelete
  26. மிக மிக அருமையான நடையில், விளக்கமாக எழுதி இருக்கீங்க...

    அதுக்காக ஒரு பாராட்டு....

    இன்றைய சூழலின் நிலையை அப்படியே படம் பிடித்து எழுதி இருப்பதற்கு மற்றுமொரு பாராட்டு....

    மழலை செல்வங்கள் தான் உண்மையாகவே (இயற்கையாக) நம் மனதை மகிழ்விக்கும்.... மற்றவை எல்லாம் செயற்கையே....

    ReplyDelete
  27. R.Gopi...

    //மழலை செல்வங்கள் தான் உண்மையாகவே (இயற்கையாக) நம் மனதை மகிழ்விக்கும்.... மற்றவை எல்லாம் செயற்கையே..//

    உங்களின் கருத்து மிக சரியானதே...

    பாராட்டுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...