வெள்ளி, ஜனவரி 29

பெண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் சீரழியும் ??!!





பெண்களை வைத்து இதோ அடுத்து ஒரு விவாதம் தொடங்கியாகிவிட்டது. பெண்களைப்  பேசுப்பொருளாக்கி விவாதிப்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் இல்லை என்பதை ஊடகங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. தற்போதைய  தலைப்பு பெண்களும் குடியும்... ஒரு பெண் டிவி ஷோவில் குடித்தால் என்ன தப்பு என்று கேட்டுவிட்டாள், உடனே பத்திக்கிச்சு சமூக வலைத்தளம். விதவிதமாக Memes ரெடி பண்ணித்  தாளித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்களை.  தாளிப்பவர்களில் எத்தனை பேர் குடியை முகர்ந்து கூட பார்க்காத மகாத்மாக்களோ தெரியவில்லை.  விஷயம் இப்போது  எப்படி திசைத்  திரும்புகிறது என்றால் 'குடிப்பழக்கம் சரி ஆனால் பெண்கள் குடிப்பது தவறு'  

சில  நாட்களுக்கு முன்னர் கரூரில் ஒரு பள்ளி மாணவன் குடி*போதையால் மயங்கி விழுந்துக் கிடக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் போட்டிப்போட்டுப்  பகிரப்பட்டு வந்தது. பள்ளி சீருடையுடன் இருந்ததே அப்போது பலரின் கவனத்தை வெகுவாக பாதித்தது. பள்ளி மாணவர்கள் குடி*போதைக்கு  அடிமையாகி ரொம்ப காலமாச்சு. சங்கரன்கோவில் அருகில் ஒரு கிராமத்தில் 9 வது  படிக்கும் இரு  மாணவர்களுக்கும்  சண்டை, காரணம் இருவரும் ஒரே மாணவியைக்  காதலித்தது. குடி*போதையில்  கையில் கத்தியுடன் மலையடிவாரத்தில் கட்டிப் புரண்டுப்  போட்ட சண்டையை காவல்துறை தலையிட்டு அவசர அவசரமாக சமாதானம் செய்து அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. எங்கே இது சாதிச் சண்டையாக மாறிவிடுமோ என்ற கவலை காவல்துறைக்கு !  மாணவர்கள் சார்ந்த இரு பிரிவினருக்கும் பல வருட பகைமை  உண்டு.

குடித்தால் தான் நண்பர்கள் மத்தியில் கௌரவம், குடிப்பது தைரியம் வீரம் இப்படி இன்னும் என்ன கண்றாவி புரிதல்கள்(?) இருக்கிறதோ அத்தனையையும் சினிமா நமது மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.  குடிக்கவைத்து சிறுகச்  சிறுக மக்களைக்   கொன்று அவர்களின் சடலங்கள் மீதேறி நின்று கைக் கொட்டிச் சிரிக்கும் அரசுகள்  வீழ்வதற்குள் இங்கே நாசமாகிப்  போவார்கள்  நம் மாணவ செல்வங்கள் ! பெர்த்டே பார்ட்டி பியருடன் என்ற  கலாச்சாரம்(?) கல்லூரியை  மட்டுமல்ல பள்ளிகளுக்கும் பரவி ரொம்பநாள் ஆச்சு. அதுபோக வாரம் ஒரு முறை வீக் எண்டு செலிபிரேசன் என்ற கண்றாவி  (கலாச்சாரம்=கண்றாவி) வேறு,

இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அடித்தேக்  கொன்று*விட்டான். நினைத்துப்  பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. எவ்ளோ வன்மம் அந்த மாணவனுக்குள் இருந்தால் இத்தகைய கொடூர*த்தை நிகழ்த்த முடியும். அவன் வாழும் சமூகம் அவனுக்குள் விதைத்தது இதை தானா ?  டிவி ஷோவில் குடிகாரத் தகப்பனால் வன்கொடுமைச்  செய்யப்பட்ட சிறுமி தகப்பனை நோக்கிக்  கேட்கிறாள், 'அருகில் படுத்திருப்பது மகளா மனைவியா என்பது கூடவாத்  தெரியாது என்று. குடி*போதையின் விபரீதத்தை சொல்ல இது ஒன்று போதும்?!

சிறந்த பள்ளிகளை தேடி அதிக பணம் கட்டி சேர்த்துவிட்டதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணி பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். தனது மகன்/மகள் எங்கே செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. பள்ளி குழந்தைகள் மது அருந்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது நல்ல செய்தி அல்ல.  விடுமுறை தினத்தன்று  குழந்தைகளுடன் செலவழிப்பதை விட தங்கள் நண்பர்களுடன் இணைந்து தண்ணி அடிக்க செல்லும் பொறுப்பற்ற தகப்பன்கள் அதிகரித்துவிட்டார்கள்.  இதில் வேண்டுமானால் தற்போது தாய்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  பெற்றோர்கள்  தங்களை ரிலாக்ஸ் செய்வதில் வைக்கும் கவனத்தை தங்களின் குழந்தைகளின்  மீது வைக்கவில்லை என்றால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் 'சிறுவர் சிறைச்சாலை'யில் கழிவதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டு நாளா நீயா நானா வீடியோவை ஷேர் பண்ணி  ஐயையோ ஒரு பெண் இப்டி பேசலாமா, அது எப்டி பொம்பளக்  குடிக்குறது நாடு என்னாவறது சமூகம் கெட்டு குட்டி சுவராப்  போச்சேனு கதறிக்  கதறி அழுவுறாங்க. பெண் குடிக்கலாமா அதுவும் தமிழ் பெண் குடிக்கலாமா என்ற கேள்விகளை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றுத்  தெரியவில்லை.  அந்த பெண் விவாதத்திற்கு பேசினாலே ஒழிய தான் குடிக்கிறேன் அதனால் பேசுகிறேன் என்று சொல்லவில்லை. இதைக்  கூட புரிந்துக் கொள்ளாமல் அந்த பெண்ணின் புறத் தோற்றத்தை வைத்தும் கேலிகிண்டல் செய்து தங்களின் ஆணாதிக்க வெறியைச்  சொறிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடிப்பதில் என்ன ஆண் பெண் வித்தியாசம்... விஷ*த்தை யார் குடித்தாலும்  சாவுதான்.  ஆனால்  இதை ஆண்களால் ஒத்துக் கொள்ள முடியாது, இவங்க தான் புதுசா கண்டுப்பிடிச்ச மாதிரி பொண்ணுக்கு  கர்ப்பப்பை இருக்கு,    குடிச்சா அது கெட்டுப் போய்டும் குழந்தைக்கும் பாதிப்புனு என்னா பேச்சுன்றிங்க ...சகிக்கல! அப்புறம் பொண்ணு குடிச்சா பாலியல் ரீதியிலான துன்பத்துக்கு ஆளாவாளாம். பாலியல் கொடுமை அதிகரிக்க பெண் குடிப்பதும் ஒரு காரணமாம். அப்படினா இந்த ஆம்புளைங்க மூக்கு முட்ட குடிச்சிட்டு போறப்போ எதிர்ல பெண் வந்தாக்  கண்டுக்காம தலையைக்  குனிஞ்சிகிட்டு அப்டியே நேரா வீட்டுக்கு போய் குப்புறப்படுத்துடுவாங்கப்  போல... பெண்  குடிப்பதைக்  கண்டித்தும் ஆண் தனது குடிப்பழக்கத்தை நியாயப் படுத்தவும் எப்படி  எல்லாம் சமாளிக்கிறார்கள்

குடிகார ஆண்கள்.  . மதுப்பாட்டில்களை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதும், குடியைப்  பற்றிய   உற்சாகப்பேச்சுக்களை  ஸ்டேடஸ்/கமெண்ட்ஸ்  என்று போடுபவர்களும் சமூகத்தைக்  கெடுக்கும் படு பாதகர்கள். மதுவை விற்கும் அரசின் செயல் கயமைத்தனம் என்றால் மதுவை  மறைமுகமாக உற்சாகப் படுத்தும் உங்களில் சிலரின் செயலுக்கு என்ன பெயர்? கையில் பியர் பாட்டிலை வைத்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தைச்  சிறிதும் வெட்கமின்றிப்  பகிர்ந்து கேவலமாய்  திட்டித்தீர்த்துவிட்டு  வாரக்கடைசியில் 'என்னடா மச்சி இன்னைக்கு பார்ட்டி எங்க' என ஸ்டேடஸ் போடும் அதி உன்னதமான ஆண்கள் நிறைந்த உலகமிது. பேஸ்புக்கில் பரவலாக சனிக்கிழமை (வீக் எண்டு)இரவைப் பற்றிய பேச்சுக்கள்/உளறல்கள் நிறைந்திருக்கும்.  இதை விட சிறந்த பொறு*க்கித்தனம் வேறில்லை. 

மக்களின்  நிகழ்காலத்தைச்  சிதைத்து எதிர்காலம் என்ற ஒன்றே  இல்லாமல் போக்கும் குடியை மட்டும் ஏன் எதிர்க்க முடியவில்லை. ஆண் பெண் சமத்துவம் வேண்டும் என்று பேசுபவர்கள் கூட ஒரு பெண் குடியை பற்றி பேசியதும் உடனே புரட்சி புடலங்காயா மாறிடுவாங்க.

புதுமைப் பெண்களே !

உங்களுக்கு விருப்பம் வசதி இருந்தால் மது அருந்துங்கள் ஆனால் ஆணுக்கு பெண் சமம் என்பதை மது அருந்துவதன் மூலம் நிரூபிப்பதாக சொல்லிக் கொண்டுத்  திரியாதீர்கள். ஒரு பெண் மரத்திலோ தரையிலோ சாய்ந்து கண் மூடி இருக்கும் போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததும் வரும் முதல் கமென்ட் என்ன மட்டை ஆகிடிங்களா? இன்னைக்கு ஓவரா? ஆண்கள் இப்படி கேட்கவேண்டும் என்றே போட்டோவை பகிரும் பெண்கள் ஒரு தனி ரகம், எதை/யாரை  பற்றியும் அக்கறை இல்லாத இவர்களை நான் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.  குடித்தால் என்ன தப்பு என்று பேசிய நீயா நானா பெண்ணும் இவர்களும் ஒன்று.  எதில் சமத்துவம் வேண்டும் என்பதேப்  புரியாத பெண்களால் தான் பெண்மை மேலும் மேலும் கேலிக்கு உரியதாக மாறிக் கொண்டிருக்கிறது.    

அரசின் பொறுப்பின்மை 

மதுக் குடிப்பது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப் பட்டது என்றாலும் அரசே அதை ஊக்குவிப்பது வேதனை. ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த சாராயக் கடைகள் இன்று வீதிக்கு ஒன்று என்ற அளவில் குடியிருப்புப்  பகுதியையும் விடாமல் பள்ளிக்கு அருகில் மருத்துவமனைக்கு அருகில் என்று எதைப்  பற்றியும் யோசிக்காமல் இஷ்டத்திற்குப்   பெருகிவிட்டதை எவ்வாறு நியாயப்படுத்துவது. இந்த அரசு கைக்கெட்டிய தூரத்தில் டாஸ்மாக் கடையை வைத்துவிட்டு குடிக்காதே குடி பழக்கம் உடலுக்கு கேடு என்று பிரச்சாரம் செய்கிறது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதைப்  போல .

பெண்களின் முன்னேற்றத்தை ஜீரணிக்க ஆண்களால் முடியவில்லை பிற பெண்களாலும் முடியவில்லை. நம் சமூகத்தின் சாபக் கேடு இது. எல்லாவற்றிலும் சமத்துவத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் பெண் குடியிலும் சமத்துவத்தை நாடிவிட்டால் என்னாவது என்பது தான் பெரும்பாலோரின் கேள்வி.

ஆண்கள் தான் இதில் அதிகமாக மிரண்டு விட்டார்கள் என்பதை அவர்களின் கருத்துகளின் மூலம் புரிகிறது, எங்கே தனது மனைவி 'வரும் போது எனக்கு ஒரு பகார்டி ஆப்பிள் பிளேவர் வாங்கிட்டு வாங்க' என்று கேட்டுவிடுவாளோ, அவளுக்கு ஆம்லெட், மட்டன் சுக்கா ரெடி பண்ணிக் கொடுக்கும் நிலைமை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம். மத்தபடி கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது.  சுய ஒழுக்கம்  கட்டுப்பாடு நாகரீகம் ஆண் பெண் எல்லோருக்கும் வேண்டும், அளவுக்கு மீறி யார் குடித்தாலும் பாதிப்பு சம்பந்தப்பட்டவங்களுக்கு தான். பெண் குடிப்பது சமூகத்தைப்  பாதிக்கும் என்றால் ஆண் குடிப்பது சமூகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுச்  செல்லுமா என்ன ?!!

ஆண் குடித்து தெருவில் புரண்டால் ஒதுங்கிச் செல்லும் சமூகம் பெண் குடித்து புரளும் போது சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறது துணி எப்போது விலகும் என்று. பாலியல் வறட்சிக் கொண்ட மனிதர்களுக்கு அந்த இடத்தில் பெண் குடித்துவிட்டாள் என்பதை விட பிறவற்றின் மீதுதான் அதிக கவனம்.

பாலியல் வன்*புணர்வு செய்யப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிற சமூகத்தில், பெண் குடிப்பதற்கு மதுவைப் பழிக்காமல் பெண்ணை பழிப்பதுத் தானே வழமை 

பெண்கள் குடிப்பதற்கு வக்காலத்து அல்ல இந்த பதிவு  ஆனால் பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்ற கூப்பாடு ஏன். அதுதான் பிரச்சனை.  பெண்களைக்  குடிக்காதீர்கள் என்று வற்புறுத்த  'குடிக்கும்'  எந்த ஆண்களுக்கும் உரிமை இல்லை.  வேண்டுமானால் உங்கள் வீட்டுப் பெண்களைக்  குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே சமூகத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரமாக இருக்கட்டும்!!  

 


போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...