Sunday, March 14

8:37 PM
1




உரம் தயாரித்து விற்பனை செய்வது என்பது வேறு , ஆனால் நான் கூறபோவது வீட்டில் இருக்கும் காய்கறி, ரோஜா, மல்லி செடிகளுக்கு தேவையான இயற்கை உரங்களை நாமே தயாரித்து பயன்படுத்தி கொள்ளலாம் என்பதை பற்றித்தான்.

கடையில் விற்கும் காய்கறிகளில் அதிகமாக வேதி உரங்களின் தன்மை இருப்பதால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி என்ற ஒன்றே குறைந்து போய்விட்டது. அதனாலதான் ஏதோ நம்மால் முடிந்தவரை காய்கறிகளை மட்டுமாவது இயற்கையாக பயிரிட்டு பயன் பெறுவோம் என்பதற்காகத்தான் எந்த உரம் தயாரிப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


இது ஒன்றும் பெரியவேலை இல்லைதான். ஆனால் விரும்பி செய்யவேண்டும். ஒரு பிளாஸ்டிக் அரிசி சாக்கில் நம் சமையலறை காய்கறி வேஸ்ட், முட்டை தோடு, காய்ந்த இலைகள் இவைகளை போட்டு கொண்டே வரவேண்டும். கொஞ்சம் நிரம்பியதும் மாட்டு சாணியை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவேண்டும். கொஞ்சம் வெல்லத்தையும் கரைத்து ஊற்றவும். முடிந்தால் உங்கள் தோட்டத்து மண்ணை கிளறினால் மண்புழுக்கள் தென்படும் (இல்லை என்றாலும் பரவாஇல்லை) அதை எடுத்து சாக்கினுள் போட்டு ஒரு குச்சியை வைத்து நன்கு கிளறி சாக்கின் வாயை கட்டுங்கள். 4 அல்லது 5 நாளில் புழுக்கள் இனப்பெருக்கம் அடைந்திருக்கும். பின் சாக்கின் வாய் திறந்து தண்ணீர் தெளித்து வந்தால் 2 மாதத்தில் முழுவதும் மக்கி உரமாக மாறி இருக்கும். இதற்கு இடையில் சேரும் காய்கறி வேஸ்ட் ஐ வேறொரு சாக்கில் போட்டுக்கொண்டே வந்தால் முதல் சாக்கில் உள்ள புழுக்களை மட்டும் பிரித்து இதில் போட்டு விடலாம்.




இப்படி தொடர்ந்து செய்துகொண்டு வரவேண்டும். இந்த உரத்தை மட்டுமே பயன்படுத்தி வளரும் காய்கறிகள் விரைவில் வாடுவது இல்லை, மேலும் அதிக அளவிலும் காய்கறிகள் காய்க்கும். நாம் பயன்படுத்தியது போக பிறருக்கும் கொடுத்து இதன் பயனை உணர்ந்து பாருங்கள். முக்கியமாக இப்படி வளரும் பாவக்காய் கசப்பது இல்லை.
தோட்டம் போட இடம் இல்லாதவர்கள் வீட்டு மொட்டை மாடி யிலும் , Appartment இல் பால்கனியிலும் கூட காய்கறிகளை பயிரிட முடியும். இதை பற்றிய விவரங்கள் எனது மொட்டைமாடி இல் தோட்டம் என்ற தலைப்பில் பாருங்கள்.
Tweet

1 comments:

  1. அனைவருக்கும் புரியும்படியான நடையில் எளிமையாக விளக்கியமைக்கு நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...