
‘எவ்வாறு தொடங்குவது’ மிக நீண்ட யோசனைக்கு பிறகு தட்டுத் தடுமாறி கொஞ்சம் நடுநடுங்கி முதல் வார்த்தையை 'டைப்'பினால், பதிவுலகத் தொடர்பு எல்லைக்கு வெளியேச் சென்று ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது என அர்த்தமாகும். எதிரில் பார்க்கும் எதையும் எழுத்தாக்கி பகிரும் வேகம், துடிப்பு, உத்வேகம் எல்லாம் மலையேறி புதிதாய் எழுதவருவதைப் போல என் போன்றோர் நிலை கொஞ்சம் பரிதாபம்தான். என்னத்த எழுத என்ற சலிப்பு, வேலை பிஸி என்ற முகமூடி போட்டுக்கொள்கிறதோ என்னவோ!
மறுபடி எழுத வந்ததற்கு தோழி ஏஞ்சல் ஒரு முக்கிய காரணம். (எழுத போறிங்களா இல்லையானு பேஸ்புக் இன்பாக்ஸ், ஜிமெயில் போதாதுன்னு போன் செய்தும் ஏகப்பட்ட மிரட்டல்கள்) தவிர எங்க போனிங்க என்ன ஆச்சு என்று அடிக்கடி என்னை "அன்புடன்" விசாரித்துக்கொண்டிருக்கும் அந்த நாலு பேருக்கு என் நன்றிகள். மனிதர்களுக்கு எப்போதும் போன், இணையம் என ஏதோ ஒரு தொடர்பில் இருந்தாகவேண்டும்...இல்லனா மத்தவங்க நம்மள சுத்தமா மறந்து போய்டுவாங்க இல்லையா (நினைச்சுகிட்டே இருக்குற அளவுக்கு நாம பெருசா ஒன்னும் பண்ணலன்றது வேற) உயிருடன் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடன் இல்லையென்றால் மறந்துவிடுவார்கள் என்றால் மரணித்தப் பின்னால் பெரிதாக என்ன இருக்கப்போகிறது .....முதல் நாள் கண்ணீர் மறுநாள் சோகம் அடுத்தநாள் அவங்க அவங்க சொந்த வேலை கவலை ... நமது பெயரும் அடுத்த சில வருடங்களில் மறந்துப் போகும் ....இவ்வளவுதான் வாழ்க்கை! இதை புரிந்துக் கொள்ள இமயமலை தேடி ஓட வேண்டியதில்லை, கண் முன் கடந்து போகும் ஒரு மரணம் போதும்...
என்னைப் பொறுத்தவரை எந்த ஊர்ல இப்ப இருக்கிறேன்னு பக்கத்தில் இருக்கிறவங்க நினைவுப் படுத்துகிற அளவுக்கு அதி பிரமாதமாகப் போகுது வாழ்க்கை... ஓடி ஓடி களைத்துச் சாய ஒரு தோள் கிடைக்காதா என ஏங்கி அவ்வாறு கிடைத்தாலும் சாய நேரம் இல்லை போன்றதொரு நிலை.
எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு அது கொடுத்த வலி சோகம் துக்கம் இவை எல்லாவற்றையும் கடக்க அதிகப் பிரயத்தனம் எடுத்தும் அதுக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிந்ததும் சரி ஒரு ஓரமாக அதுவும் இருந்துவிட்டு போகட்டுமே என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒருவரை இழந்த பிறகே, ‘அவருடன் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே , பிடிச்சதைச் சமைச்சு கொடுத்திருக்கலாமே, உடன் ஊர் சுற்றி இருக்கலாமே, அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையேனும் போன் செய்து எப்டி இருக்குற என விசாரித்து இருக்கலாமே என தோன்றுகிறது. இதில் ஒன்றையுமே செய்யாமல் போனப் பின்பு ஐயோ போயிட்டியே என அரட்டுவதை என் மனசாட்சியே சும்மா நடிக்காதே என பரிகசித்தது. ஆமாம் உண்மைச் சுடுகிறது. இதுநாள் வரை அப்படிதானே நடந்திருக்கிறேன், நான் எனது வீடு குடும்பம் தொழில் என சுயநலமாகவே வாழ்ந்துவிட்டு அன்றைக்கு துக்க வீட்டில் அழுதது கூட அபத்தமாக தோன்றியது.
மரணமல்ல ஜனனம்!
ஒரு மரணம் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது... பிறரிடம் இருக்கும் நல்லது தீயது இரண்டில் நல்லதை மட்டுமே பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்... இதுவரை பிறரின் தவறுகளை மன்னித்த நான் இப்போது அதை மறக்கவும் முயற்சித்து அதில் சிறிது வெற்றியும் பெற்றுவிட்டேன். ஒரு தெளிந்த நீரோடையாக மனதை வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். உண்மையில் இது மிக பிடித்திருக்கிறது. முன்பை விட அதிகமாக எல்லோரையும் நேசிக்கவேண்டும், இன்னும் அதிகமாக பிறருக்கு உதவவேண்டும், இன்னும் அதிகமாக இந்த சமூகத்திற்காக உழைக்கவேண்டும், தெரிந்த சமூக அவலங்களை எழுத்திலாவது எழுதி வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது.
நந்தினி,ஹாசினி ரித்திகா என்ற அழகான பெயர்கள் துக்கக்கரமாக மாறிப்போனபோது பச்ச குழந்தைகளை போய் எப்படிடா என்னடா வேணும் உங்களுக்கு என கதறியே விட்டேன். இரவுகளில் தூங்கவிடாமல் ஓலமிடும் மனதிடம் இதோ எழுதி ஆதங்கத்தை தீர்த்துவிடுகிறேன் என சமாதானம் செய்வேன். பாலியல் பிரச்சனைகளின் மூலம் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கட்டுரையை இனி தொடரலாம்... மூலம் என்று தேடிப்போனால் பேசாப் பொருளா காமம் பற்றி பேசணும் சரி அதை பற்றியும் தொடர்ந்து எழுதலாம்... இதற்கு பெற்றோர்கள் எவ்விதம் காரணமாகிறார்கள் என்பதை தாம்பத்தியம் தொடரில் கொஞ்சம் தொட்டுக் காட்டலாம்.......அப்படி இப்படி என்று மறுபடி பதிவுகள் எழுத காரணங்களை நானாக யோசித்ததன் விளைவு இதோ எழுத தொடங்கியாயிற்று... எது ஒன்றுக்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும், தூண்டுகோல் வெளியில் இருந்து வரவேண்டும் என்றில்லை நாமாக உருவாக்கிக் கொள்ளலாம் ... நமக்கு தெரிந்ததை பிறரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான இடத்தில்(பதிவுலகம்) இருந்துக் கொண்டும் வாளாவிருப்பது வீண்தானே.
என்ன செய்துவிடும் எழுத்து
இந்த ஒரு வருடத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் !! மக்களை எப்போதும் பரபரப்பாக்கி வைத்துவிடுகிறது ஊடக உலகம். அதிலும் சமூக வலைத்தளம் முன்னணி, காபி போட்டு குடிகிறார்களோ இல்லையோ காபி கப் போட்டோ வந்துவிடும். மனித மனம் எப்போதும் பிறரது அங்கீகாரத்திற்காகவே காத்துக்கிடக்கிறது... எல்லோருக்கும் பிடித்தவராக யாராலும் இருக்கமுடியாது என்றாலும் தனக்கென்று ஒரு சிறு கூட்டத்தை சம்பாதித்தே தீரவேண்டும் என்ற ஆசை வெறியாக மாறுவதை கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்களை மதிக்கவேண்டும் என மகளிர்தின வாழ்த்துக்கள் கூறி மறுநாளே இவ மூஞ்சிக்கு ஐநா கேக்குதா என பகடி செய்யும் முரண்பாட்டு மூட்டைகள் நிறைந்த உலகிது! 'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் ' பாரதி எத்தனை பாடினாலும் போகப் பொருளாகவே பார்த்து பழகிய கண்கள், எம்பி குதிக்கும் டென்னிஸ் வீராங்கனையின் உள்ளாடையை க்ளோஸ்அப்பில் படம் பிடித்து போடும் பத்திரிகை கேமரா அனர்த்தங்கள்.
சிறிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்த அனுபவம் கூட இல்லாமல் தான் பதிவுலகம் வந்தேன்...பொன்னியின் செல்வன் பற்றி பலரும் சிலாகிக்கும்போது படிச்சுத்தான் பார்ப்போமே என்று வாங்கிப் படித்தேன், புத்தகம் படிங்க என்று வற்புறுத்தி ஐந்து புத்தகங்கள் அனுப்பி வைத்தார் நண்பர் ஒருவர் அப்படியாவது எனக்கு எழுத்து கைவராதா என்று... புத்தகங்கள் படித்ததற்கு பிறகு ‘நாம எழுதுறதெல்லாம் ஒரு எழுத்தா’ என்ற பயம் வேறு வந்துவிட்டது. ஆனால் உணர்வுகளை கொட்ட ‘தெரிந்த/பழகிய வார்த்தைகள்’ வேண்டுமே தவிர இலக்கியம் இலக்கணம் தேவையில்லை... வாசிப்பவர்களின் மனதோடு எனது எழுத்துக்கள் பேசினால் போதும்... மேடை ஏறி பரிசுகளை வெல்லவேண்டும் என்று இல்லையே... என்றெல்லாம் மனதைத் தேற்றி என்னை நானே சமாதானம் செய்து இதோ பேச வந்தேவிட்டேன் மறுபடியும் உங்களின் மனதோடு மட்டும்...
“யார் சூறையாடியது காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது ஒன்றாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது என்னுடையதாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
புன்னகைபுரிந்த முற்றிலும் முழுமையான காலம்
எனது ‘நான்’ தூயதாகவும் உண்மையாகவும் இருந்தது அங்குதானே
கவிதை அதுவாகவே தன்னை எழுதிக்கொண்டதும் அங்குதானே !”
-சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர்
பிரியங்களுடன்
கௌசல்யா
pic : google