புதன், ஏப்ரல் 2

7:57 AM
10


என் அன்புக் காதலா... 

கவிதைகளில் உன்னை பேசிப் பேசி தீரவில்லை என் காதல்... அதுதானோ என்னவோ கவிதை இன்று இப்படி கடிதமாகிவிட்டது. ம்ம்...தீராக் காதலை எப்படி சொன்னால் தான் என்ன  தீர்ந்துப் போய் விடுமா என்ன...  

'கா த ல்' என்ற வார்த்தையை இதுவரை மெல்ல உச்சரித்தவள் இன்று சற்றே சத்தமாக சொன்னேன் அல்ல அல்ல கத்தியே விட்டேன். செவிப்பறை அடைந்த என் கத்தல் உள்ளுக்குள் ஏதோ ஒன்றை உடைத்து ஏற்படுத்திய உணர்வு பிரவாகத்தில் மூழ்குவதும் மிதப்பதுமான அதி அற்புதமான ஒரு உன்னத நிலை...மயங்கிச் சரிந்தேன் மெல்ல. ஒரு வார்த்தைக்கு இவ்வளவு வலிமையா ... என்னை தொலைத்து உன்னில் தேடும் அபத்தத்திற்கு ஒரு அழகான பெயர் தான் காதலாக இருக்க முடியும் ... 

நம் இருவரின் தேசங்கள் வேறு, திசைகள் வேறு, நான் கிழக்கு நீ மேற்கு... எந்த புள்ளியில் இணைந்தோம் இணைத்தது எது என்பதைப்  பற்றியெல்லாம் இதுவரை யோசித்ததில்லை யோசிக்க நேரமுமில்லை, காதலில் மூழ்கிப் போன நெஞ்சம் வேறு எதைத் தான் சிந்தித்தது.  சிந்தனை சொல் செயல் எல்லாம் உன்னை பற்றியே உன் ஒருவனை பற்றியே ...விடியலில் தூக்கம் கலையும் போதே உன்னுடனான கனவும் கலைந்துவிட இழுத்து அணைத்துக் கொள்கிறாய் நினைவுகளால்....இரவின் கனவுகளில் பகலின் கற்பனையில் என்று உன்னைப்  பார்த்துக் கொண்டே இருக்கும் என் விழிகள் வேறு யாரைத்தான் அறியும்!

நம் தேசங்களின் இடைவெளியோ பல ஆயிரம் மைல்கள், காதல் வந்தப்பின் தேசமென்ன திசையென்ன தூரமென்ன நடுவில் எதிர்படும் மலை என்ன தடுக்கும் கடல்தான்  என்ன?

நீயும் நானும் பேசிப் பேசியே
இருவருக்கும் இடையிலான
கடலளவு தூரத்தை
குறைத்து விடமாட்டோமா என்ன?
பிரிவும் தூரமும் காதலை
அதிகரிக்கவேச் செய்யும்
என்று சொன்னவனே நீ தானே !   

நன்றாக நினைவிருக்கிறது பறவைகள் சூடான இடம் தேடி நாடு விட்டு நாடு இடம்பெயரும் ஒரு குளிர்காலம் அது.  அப்பொழுது தானே என்னைக் காக்கும் தேவனாய் வெகுத் தொலைவில் இருந்து நீ வந்து சேர்ந்தாய். அன்பை வளர்த்தாய் ஆதரவு நானே என உன் தோள் சாய்த்தாய். உறவாடி உயிரானோம்... உயிர்(கள்) வளர்த்தோம்...  

கையிழந்து
கவலை சுமந்து வாழ்ந்த மனதில்
உன்னைச் சுமக்க வைத்தாய்... 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் நான்
கவலை சுமக்கிறாய் நீ !! 

தற்செயலாய் சந்தித்ததாய் ஒருநாள் சொன்னாய், உன்னை என்னிடம் அழைத்து வந்த அந்த தற்செயல் சொல்லிவிட்டது என்னைத் தேடிய உனது ஜென்மாந்திரத் தேடலை...!

விழிகளால் பேசிக் நட்பை வளர்த்து, செல்லச் சண்டைகளில் மூழ்கித் திளைத்து,  ஏதோ ஒரு தருணத்தில் காதலை என்னையே சொல்லவும் வைத்துவிட்டாய்  ...சிறிதும் லக்ஜையின்றி நேராய் உன் முகம் பார்த்து காதலை நான் சொல்ல அதை ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டே தலை குனிந்தாய். அது வெட்கமா சம்மதமா என்ற குழப்பத்தில் நான் நிற்க எனது ஒரு கை கோர்த்து உள்ளங்கை வெப்பத்தில் மௌனமாய் உணர்த்தினாய். இன்று வரை நொடிக்கொரு முறை நான் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க நீயோ காதலாகவே இருக்கிறாய், வாழ்கிறாய்... 

காதலால் கட்டுண்டு வருடங்கள் பல உருண்டோடிவிட்டன.  நம் காதல், நாட்களை எண்ணுவதில்லை பிரிந்த பொழுதில் சேரும் பொழுதையும் சேர்ந்தப்  பொழுதில் ஒருவரை ஒருவருமாக  எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்!

இதோ இந்த மார்ச் மாதத்துடன் நமது காதல் 12 வது ஆண்டை எட்டி விட்டது.  குளிர்காலம் முடிந்ததும் உன்னை பிரிய மனமின்றி பிரிந்து அடுத்த குளிர்காலத்திற்காக வழக்கம் போலவே காத்திருக்கப் போகிறேன்... காதல் என்றும் அழிவதில்லை அது நம்மை போன்ற பறவையின் காதலாக இருந்தாலும்...


அன்பு காதலி 
மலேனா   


இரு பறவைகளின் காதல் கதை   
------------------------------

1993 ஆம் ஆண்டு குரேஷியா நாட்டில் வேட்டைக்காரன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதால் ஒரு இறக்கையை இழந்து தவித்தது ஒரு பெண் நாரை. அதை  Stjepan Vokic என்ற ஒரு நல்ல மனிதர் அன்புடன் எடுத்துக் காப்பாற்றி தனது வீட்டின் கூரையில் இடம் ஒதுக்கிக் கொடுத்து  உணவிட்டு 20 வருடமாக வளர்த்து வருகிறார். 

தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலமாக இருந்தப்போது அங்கிருந்து குரேஷியா வந்த ஒரு ஆண் நாரை இறக்கை இழந்த பெண் பறவை மலேனா மீது தீராக் காதல் கொண்டது.  வருடந்தோறும் தவறாமல் மார்ச் மாதம் வருவதும் காதலில் திளைப்பதும் வழக்கமாகிவிட்டது. பெண் நாரை முட்டை இட்டு குஞ்சுகள் பொரித்ததும் பொறுப்புள்ள தகப்பனாக அவற்றிற்கு பறக்க கற்றுக் கொடுக்கிறது.  பிள்ளைகள் நன்கு பறக்க பழகியதும் அவற்றை அழைத்துக் கொண்டு தனது சொந்த  நாடான தென் ஆப்பிரிக்கா கிளம்பி விடுகிறது. இப்படியே கடந்த  32 பிள்ளைகளை பெற்று(!) வளர்த்து அழைத்துச் சென்றிருக்கிறது.

அந்த அன்புக் காதலன் ரோடான் ஒவ்வொரு வருடமும் மத்தியத்தரை கடல், மலைகள், பாலைவனம் எல்லாவற்றையும் கடந்து சுமார் எட்டாயிரம் மைல்கள் பறந்து வருகிறது . தனது காதலி மலேனா காத்திருப்பாள் அதற்கு ஏமாற்றம் தரக் கூடாது என்பதை ரோடான் நன்கு அறிந்திருக்கிறது. சரியாக மார்ச் மாதம் வந்து  அன்பாக குடும்பம் நடத்தி, தனது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காதலியிடம் விடைப் பெற்றுக் கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது நாட்டிற்கு கிளம்பி விடுகிறது. 

காதலின் வலிமை இனம் மொழி மதம் தேசம் கடந்து மனிதர்களிடம் மட்டுமல்ல ஐந்தறிவு உயிர்களிடமும் உண்டு என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வரும் இவர்களை எண்ணி ஆச்சர்யப்படாமல் இருக்க இயலவில்லை. 

மறுபடியுமான 
உனது பயணத்தைத்  தொடங்கிவிடாதே
காதலை நான் வாசித்து
முடிக்கும் வரையிலாவது  
சற்றுப் பொறுத்துக் கொள்
முடிக்கவும் இயலாக் காதலை 
எனக்கு கொடுத்துவிட்டு
விட்டு விலகிச்செல்வது
அவ்வளவு சுலபமில்லை
புரியவைக்கிறேன் என்னை 
கொஞ்சம் அருகினில் நெருங்கி வா என் கண்ணே!  

என்று கொஞ்சி பேசி மகிழ தனது காதல் கணவன் அடுத்து எப்போது வருவார் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் மலேனா... கூடவே Stjepan என்ற நல்ல மனிதரும் !!  எங்கே ரோடான் வராமல் போய்விடுமோ என்ற கவலையுடன் காத்திருக்கும் இவர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். பணமில்லாமல் தனதுதொலைபேசியையும் விற்று மலேனாவிற்கு உணவு வாங்கிய  இவரை போன்றவர்களால் தான் இப்பறவைகளின் காதல் வென்றிருக்கிறது ... உலகில் மனிதம் நிலைத்திருக்கிறது. இதோ இப்போது இந்த  மார்ச் மாதமும் கிளம்பி வந்துவிட்டது. தனது காதலியுடன் இணைந்து தங்களது 12 வது ஆண்டு விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த காதல் பறவைகளை நாமும் வாழ்த்துவோம் !!!  

                                 * * * * *

பின் குறிப்பு:

மலேனா ரோடான் பற்றி தனது தளத்தில் எழுதிய அன்புத்தோழி ஏஞ்சல் இவர்களை பற்றி நீங்களும் எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட நெருங்கிய தோழியாச்சே மீற முடியவில்லை, என்பதை  விட இந்த பறவைகளின் காதல் கண்டுப் பிரமித்துவிட்டேன். எனக்கு மிகப் பிடித்த காதல் அவர்களிடம் கொட்டிக் கிடக்க இதோ எழுதியே விட்டேன். படிச்சிட்டு திட்டுறதுனா தோழியை திட்டுங்க :-)    


Tweet

10 கருத்துகள்:

 1. பறவைகளின் காதல் கதையை அவர்கள் தளத்திலும் ரசித்தேன்... உங்களின் கவிதை வரிகளும்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா1:35 PM, ஏப்ரல் 02, 2014

  வணக்கம் அக்கா ,

  அஞ்சு அக்கா வோட status ளையும் பார்த்தனே ...எவ்ளோ காதல் ,..மலேனா ரொம்ப கொடுத்து வைத்தவள்

  பதிலளிநீக்கு
 3. Kaathal jodiyai veliye kooddi vantha Anju vukkum vaalththukkal... vaalka gold fishuuuuuu!!!!

  பதிலளிநீக்கு
 4. பறவைகளின் காதல் என்னை பாதித்ததை விட கௌசல்யாவை மலேனா வாகவே மாற்றி விட்டது என்று நினைக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 5. பறவைகளின் காதல் என்னை பாதித்ததை விட கௌசல்யாவை மலேனா வாகவே மாற்றி விட்டது என்று நினைக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 6. aaawww :) நான் owl and cat லவ் மாதிரி ஒண்ணாம் வகுப்பு பிள்ளை மாதிரி story எழுதினேன் ..நீங்க கலீல் ஜிப்ரான் மாதிரி எழுதி இருக்கீங்க கௌஸ் :)

  பதிலளிநீக்கு
 7. ஆமாம் இன்னிக்கு உங்களுக்கு பெர்த் டேயா :)இல்லை வாலன்டைன்ஸ் டேயா :)
  மனிதர் உணர இது மனித காதல் அல்ல :)அதனால்தான் நீங்க மலெனாவா மாறிட்டீங்களோ :)

  பதிலளிநீக்கு
 8. ரொம்ப சந்தோஷம் தோழி அந்த பறவைக்கு வாய் இருந்து பேச முடிஞ்சா இப்படித்தான் பேசியிருக்கும் .

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...