Monday, November 26

10:57 AM
16


தாம்பத்தியம்  தொடரில் பலவித பிரச்சனைகளை பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிக தேவையானதும் கூட ! வாசகி ஒருவர் நீண்ட மடல் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார். அதன் மொத்தம் உள்ளடக்கம் இது...

"எனது கணவரின் வயது 46, மது,புகை  பழக்கம் உள்ளவர். 6 மாதங்களாக தாம்பத்திய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார்.முக்கியமான நேரத்தில் இயங்க 
முடிவதில்லை" என தொடர்ந்தவர் "இதற்கு வயாகரா உபயோகிக்கலாமா? " அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?"  என கேட்டிருந்தார்.

அவருக்கு சொன்ன பதில் பிறருக்கும் தேவைப்படலாம் என்பதால் கொஞ்சம் விரிவாக இங்கே பகிர்கிறேன். படித்துக் கருத்துக்களை கூறுங்கள்.

இன்பம்  எங்கே...?


இன்றைய இயந்திர உலகில் தாம்பத்ய இன்பம் என்பது வேறெங்கோ இருப்பதை போலவும் அதை சுலபமாக சீக்கிரமாக அடைய மருந்து மாத்திரைகள் போட்டுக்கொண்டால் போதும் என்பதே சிலரது
முடிவு...!!

ஆனால் உடல்  தயார் நிலையில் இருந்தால்  மட்டும், அங்கே உறவு நடந்துவிடுவதில்லை, (இருவர்) மனமும் ஒத்துழைக்க வேண்டும். 


இப்போதெல்லாம்  ஆண்கள் 30-40 வயதிலேயே ஆர்வம் குன்றிவிடுகிறார்கள். ஆர்வம் என்று கூறுவதை விட இயலாமை என்பதே சரி. இதற்கு மன சார்ந்த உடல் ரீதியிலான காரணங்கள் இருக்கலாம். அவை என்ன என்று கவனித்து சரி செய்ய வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றை நாடுவது சரியல்ல. செயற்கை தூண்டுதல்கள் அந்த நேரம் சுவைக்கலாம் தொடர்ந்து அவை எடுத்துக்கொள்ளப்பட்டால் சாதாரண அணைப்பு கூட, அந்த மருந்து இல்லாமல் நடவாது என்றாகிவிட்டால்...?!!

உறுப்பு  செயல்படும் விதம்

ஆணுக்கு உடலுறவு பற்றிய எண்ணமோ, செயலோ தேவைப்படும் போது மட்டும் விரிந்து நீளக் கூடிய தன்மை கொண்டதாக உறுப்பின் அமைப்பு  இருக்கிறது. விரியவோ சுருங்கவோ கூடிய இத்தன்மையை மூளையில்  உள்ள  'சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம்' என்ற பகுதி பார்த்துக் கொள்ளும் . இரண்டு விதமான நரம்பு அமைப்புகளில் ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டாலும் பிரச்சனைதான்.

பெண்ணை நினைத்ததும்  இந்த நரம்பு மண்டலம் உஷாராகி நியுரோடிரான்ஸ் மீட்டர்களை வெளியிடும், அடுத்து நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல் கோலைன், டோப்பாமைன் போன்றவை சுரக்க ஆரம்பிக்கின்றன. இவை ஆணுருப்புக்குள் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களை பெரிதாக்குகின்றன. அதிகமான ரத்தம் அங்கே சென்று அங்கிருக்கும் பஞ்சு போன்ற அறைகளை ரத்தத்தால் நிரப்புகின்றன. அறைகள் பெரிதானதும் ரத்தக்குழாய்கள் மூடிவிடுவதால் ரத்தம் தேங்கி உறுப்பு நீண்டு பெரிதாகி கடினமாகிறது.

உடலுறவு  நிகழ்ந்து முடிந்ததும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு கொண்டு வர மூளையின் இரண்டாவது நரம்பு மண்டலம் உடனே செயல்பட தொடங்குகிறது. இறுக்கத்தை குறைத்து விரிந்திருக்கும் தன்மையை தடுத்துவிடும்.

வயாகராவின் வேலை 

வயாகரா என்பது சில்டினாபில் என்கிற ஒரு கெமிக்கல். நைட்ரிக் ஆக்சைடு செய்யக்கூடிய வேலையை இதுவும் செய்யும்.  ரத்தக்குழாய்களை பெரிதாக்கி அதிக ரத்தத்தை செலுத்துவதும் அப்படியே இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை செயலற்றதாக ஆக்குவதும் இதன் வேலை, அதாவது விறைப்பு தன்மையை ! இதனால் உறுப்பு நீண்ட நேரம் விரிந்தே இருக்கும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை கொஞ்ச நேரம் தடுத்து வைக்கிறது வயாகரா.

ஆனால்  இந்த நிலைக்கு வருவதற்கு முன் மனதால் செக்சை நினைக்க வேண்டும். மனம் ஒத்துழைக்காமல் வயாகராவை மட்டும் போட்டு கொண்டால் எந்தவித பிரயோசனமும் இல்லை.

ஆரோக்கியமான மனதும் உடம்பும் அமைய பெற்றவர்களுக்கு எந்த வித செயற்கையான தூண்டுதலும் தேவையில்லை. அதே சமயம் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறை மனதிலா உடலிலா என்பது தெரியாமல் வயாகரா போட்டு கொண்டால் சரியாகி விடும் என்பது முற்றிலும் தவறு.

இந்த  பெண்ணின் கணவரை பொருத்தவரை அவரது புகை மது பழக்கவழக்கங்கள் அவருக்கு தாம்பத்திய ஆர்வத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல் உறுப்பு எழுச்சியையும் முடக்கி போட்டு விட்டது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். மற்றொன்று சர்க்கரை நோய், இது ஆண்மை குறைவை ஏற்படுத்தும். எனவே குடி, புகை சர்க்கரை நோய் இவற்றின் பாதிப்பை குறைப்பதில் அக்கறை எடுக்க வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றையும்,  இத்தனை நாளில் குணப்படுத்துகிறோம் என்ற விளம்பரங்கள் பின்னேயும் செல்வதும்  சரியல்ல!

பெண்களுக்கும் வயாகரா?!

இந்த வயாகரா பெண்களுக்காகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...!! ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு மருந்து கம்பெனி பிளிபான்செரின் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. உறவில் முழு திருப்தியை அளிக்க வல்லது என்றும் இதனை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. நேரடியாக மூளையை சென்றடைந்து  தேவையான கெமிக்கல்களை மூளையில் அதிக அளவில் சுரக்க வைத்து ஆர்வத்தை தூண்டுகிறது.

ஆனால் பெண்கள் இது போன்றவற்றை உபயோகிக்கும் போது வேறு விதமான சிரமங்களை அனுபவிக்க வேண்டும். மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஆண்,பெண் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை, அனுமதி இன்றி எதையும் உட்கொள்வதை தவிர்தல் நலம்.

வயாகரா தீர்வு இல்லை?

தாம்பத்திய உறவு பற்றிய விருப்பம், ஆர்வம்  இல்லாதவர்களுக்கு, 'சர்க்கரை நோய் இருக்கிறதா' என சோதனை செய்வது முக்கியம். இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். சர்க்கரை நோயை மருந்து மாத்திரையினால் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டத்தை இந்நோய் இயங்கவிடாமல் தடுத்துவிடும் அல்லது பாதிக்கும். இந்நிலையில் எவ்வளவு தான் செக்ஸ் தூண்டுதலை வெளியே இருந்து ஏற்படுத்தினாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. இத்தகையவர்களுக்கு வயாகரா தீர்வு இல்லை. (ஒருவேளை ஈடுபட்டாலும் முழுமை பெறாது.) ஆணிடம் இருந்து விந்தணுக்கள் வெளியேறுவதை போல் தோன்றினாலும் பெண்ணை அடைவதற்கு பதிலாக அவர்களின் சிறுநீர்பையினுள் சென்று விடும் !

பொதுவாக  சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை, குடி பழக்கம் இருப்பவர்களின் ரத்த குழாய்கள்  அதிக அளவு சுருங்கும். அதோடு ஆண் உறுப்புக்கு செல்லும் ரத்த குழாய்களும் சுருங்கும் என்பதால் அங்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிக்கும். இதனால் எழுச்சியின்மை ஏற்படும். ஆர்வம் குறையும்.

மேலும் 

இம்மாத்திரையை உடலுறவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். அந்த நேரத்திற்குள்ளாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை எட்டிவிடும். கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களுடன் உட்கொள்ளபட்டால் ரத்தத்தில் உறிஞ்சப்படுவது தாமதமாகும். முக்கியமாக இதய நோய்க்கு எடுத்துகொள்ளப்படும் மாத்திரைகளோடு(ISMN /ISDN) வயாகரா உட்க்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தாகலாம். 

சுலபமான வழி  - சூரிய குளியல் 

பாலியல் ஆர்வத்தை தூண்ட ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன்  உதவுகிறது. இந்த ஹார்மோன்  சுரக்க   வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் எடுத்தாலே போதும் என்று ஆஸ்திரியா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்போது டெஸ்டோ டெரோன் 69 சதவீதம் அதிகரிக்கிறது. (நம்ம ஊர் சூரிய நமஸ்காரம் !!)
   
இறுதியாக ஒரு முக்கிய தகவல்

உடல் ரீதியினாலான குறைபாடுகள்   எதற்கும் சரியாக சிகிச்சை பெறாமலோ மது, புகை பழக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ நாளடைவில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். இதயப்பாதிப்பு ஏற்படும்.  100  சர்க்கரை நோயாளிகளில் 50 பேர் ஆண்மைகுறைவுக்கு  ஆளாகிறார்கள். இதில் 40 % பேர் மாரடைப்புக்குள்ளாகிறார்கள். இத்தகைய ஆபத்தை முதலில்  சரிப்படுத்த முயலவேண்டும். அளவான சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவை மிக அவசியம். இதெல்லாம் முறையான பழக்கத்திற்கு வந்த பிறகே உடல் தயாராகும். அதனுடன் மனமும்...!!

மனது நினைக்க நினைக்க அந்நினைவுகள் மூளையின் நரம்பு மண்டலத்தை மெல்ல  மீட்ட, அங்கே பிறக்கும் இசை அதிர்வுகள், உடலெங்கும் பரவி வியாபித்து ஆனந்திக்க வைக்கும்...!! அப்புறம் என்ன உற்சாக அலைகள் கரைகளை வந்து முத்தமிட, நிலவின் மடியில், இரவின்  அமைதியில், சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுங்கள்...!

இனியும் வயாகரா போன்றவை பற்றிய சிந்தனை வேண்டுமா!? தவிர்த்திடுங்களேன் !!


பின் குறிப்பு :

தாம்பத்தியம் தொடரை படிக்கும் வாசகர்கள் என்னிடம் கேட்கக்கூடிய சந்தேகங்களை மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.  பல சந்தேகங்களை டாக்டரிடம் தான் கேட்கவேண்டும், என்னிடம் அல்ல.  தவிர அந்தரங்கம் பற்றிய ஆழமான(?) பல கேள்விகள்  என்னை பதில் சொல்ல இயலாத படி செய்கின்றன. உண்மையில், பதில் தெரியாமல் கேட்கிறார்களா அல்லது எனக்கு தெரியுமா என சோதிக்கிறார்களா தெரியவில்லை. :-)

ஒருவர் கேட்டிருந்தார், 'பெண்ணிற்கு உச்சம் ஏற்பட்டதை ஒரு ஆணால்  எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும்?' என்று ...அதற்கு நான் சொன்னேன், ஒரு கணவனால் மனைவியின் அத்தகைய நிலையை புரிந்துக்கொள்ளமுடியும் என்று... மறுபடி அவர் பதில் சொல்கிறார், மேடம் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று !! கல்யாணம் ஆகாதவருக்கு இந்த கேள்வி எதற்கு??!!

கணவன்  மனைவியின்  கருத்துவேறுபாடு பிரச்சனையால் பாதிக்கப்படும் குழந்தைகளை மனதில் வைத்தே இந்த தொடரை எழுதி வருகிறேன். அனாவசியமான  கேள்விகளை  கேட்பதைத் தயவுசெய்து தவிருங்கள். மேலும் அத்தகைய விவரங்கள்தான் தேவையென்றால் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன, தேடிக்கொள்ளலாமே...! ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சொல்ல முடியாததால் பொதுவில் இங்கே கூறுகிறேன். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'...!!

* * * * * 


படங்கள்- கூகுள் 
Tweet

16 comments:

 1. மேலும் பலர் பாலியல் இன்பத்தை ஏதோ பொருளாக நினைக்கின்றனர். இருவர் மற்றவருடன் கொண்ட நம்பிக்கையால் உண்மையான அன்பினா, பாசப்பினவால் உருவாகுவது. மனம் கொண்டு உணர்வது. முதலில் காதலிக்க ஆரம்பித்த பின் பாலியல் சுகத்தை நாடுவதே அழகு உண்மை!

  ReplyDelete
 2. பெரிய ஆள்தான் போலிருக்கு என் தோழி. அற்புதமான உளவியல் அலசல் இந்த பதிவு. தொடருங்கள்.

  ReplyDelete
 3. நம் நாட்டில் 95 சதவிகித மக்களுக்கு இதுவொரு குறுகுறு சமாச்சாரம். புரிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம்இல்லை.

  புரிந்து கொள்வபவர்கள் இதனை பொறுமையாக கையாள வேண்டும் என்பதே முதல் விதி.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்! நன்றாக எழுதுகிறீர்கள். ஆண்கள், ஏன் மருத்தவர்கள் கூட, "தமிழில்" எழுத தயங்கும் விஷயங்களை நன்றாக எழுதுகிறீர்கள்.

  ReplyDelete
 5. தெளிவான பதிவு.
  வாழ்வில் இரு மனங்களும் ஒன்று சேரும்போது உடல் தானாக் ஒத்துழைக்கும்.


  நிறைய நபர்களுடைய வயகரா ஆசைகள்தீர்ந்துவிடும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் கௌசல்யா.

  ReplyDelete
 6. @@ J.P Josephine Baba said...

  //முதலில் காதலிக்க ஆரம்பித்த பின் பாலியல் சுகத்தை நாடுவதே அழகு உண்மை!//

  உண்மைதான் தோழி. மனங்கள் ஒன்றுசேர வேண்டும்,ஒருவரை ஒருவர் ஓரளவு புரிந்து கொண்டபின் நிகழும் உறவு முழுமையாக நீடித்து நிலைக்கும்.

  நன்றி.

  ReplyDelete
 7. @@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

  //பெரிய ஆள்தான் போலிருக்கு என் தோழி.அற்புதமான உளவியல் அலசல் இந்த பதிவு. தொடருங்கள். //

  தொடர்ந்து வருகை தருவது நிறைவாக இருக்கிறது விஜி.

  உங்கள் அன்பிற்கு நன்றி தோழி !

  ReplyDelete
 8. @@ ஜோதிஜி திருப்பூர் said...

  //நம் நாட்டில் 95 சதவிகித மக்களுக்கு இதுவொரு குறுகுறு சமாச்சாரம். புரிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம்இல்லை.//

  புரிந்து கொள்ளும் அவசியம் இல்லை என்றே நினைக்கிறார்கள் போலும். எனக்கு வரும் கேள்விகளும் ஓரளவிற்கு இப்படி தான் இருக்கிறது.

  //புரிந்து கொள்வபவர்கள் இதனை பொறுமையாக கையாள வேண்டும் என்பதே முதல் விதி//

  உண்மை .

  நன்றிகள்

  ReplyDelete
 9. @@ நம்பள்கி...

  மிக்க நன்றிகள்

  ReplyDelete
 10. @@வல்லிசிம்ஹன் said...

  //வாழ்வில் இரு மனங்களும் ஒன்று சேரும்போது உடல் தானாக் ஒத்துழைக்கும்.//

  கண்டிப்பாக.

  //நிறைய நபர்களுடைய வயகரா ஆசைகள்தீர்ந்துவிடும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் கௌசல்யா.//

  ஒருவர் இருவர் புரிந்துக் கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே!

  என் அன்பான நன்றிகள்!

  ReplyDelete
 11. I think there are two issues. You have certainly covered both but let me put in my own way..

  1) sexual desire or drive

  2) performance (to satisfy the partner)

  2) If a person has desire and could not perform well, (that is the case you have addressed in your post to help the woman) viagara can help. It also helps improving the performance. That is why men who do not have problems also want to take viagara (it is an abuse) to do "better", I believe.

  Going back to 1)

  This has to do with hormones esp testosterone. (நீங்க இதைப் பத்தியும் எழுதி இருக்கீங்க.. சூரிய குளியல்..) If a person has low testosterone level, (that is not uncommon due to aging 45+ or so - it varies), then he will not have desire to have sex or he lacks sex drive. This can be resolved by taking more testosterone. Again testosterone is a hormone, so one need to be careful here too. Overdose of hormones can have serious side effects.

  **********

  உங்க வாசகிக்கு என் பதில் (வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு), வயாகரா உபயோகிப்பதனால் தப்பில்லை! அவர் கணவர் உடல்நிலை வயாகராவை ஏற்க தகுதியானதா வென்று டாக்டரிடம் கேட்டு உபயோகிக்கலாம். அது அவர் பிரச்சினைக்கு ஒரு தீர்வுதான்.

  என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார்.முக்கியமான நேரத்தில் இயங்க
  முடிவதில்லை"


  ஏன் என்றால், மேலே மேற்கோள் காட்டப்பட்ட ப்அவர் கணவர் பிரச்சினை, ...உங்க வாசகி சொல்வது அவரால் தேவையான நேரத்தில் சரி வர பெர்பார்ம் பண்ண முடியவில்லை என்பதே பிரச்சினையாகவும் தெரிகிறது.

  இதற்கு நிச்சயம் வயாகரா உதவும். இவர் போல் பிரச்சினை உள்ளவர்களுக்கு "வயாகரா" என்கிற ஒரு "தீர்வை" முழுமையாக மறுக்க வேண்டியதில்லை, என்பது என் தாழ்மையான எண்ணம்.

  ReplyDelete
 12. தொடரைத் தொடர்ந்ததற்குப் பாராட்டுக்கள். வழக்கம் போல் துணிவான தெளிவான கருத்துக்கள். ஒன்றைத் தவிர :-)

  நீங்கள் சொல்லியிருப்பது போல் மாத்திரைகள் உடல் சம்பந்தப்பட்டது - உணர்வுக்கு.. மனதுக்கு.. மாத்திரையை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. அல்லது மாத்திரையே தேவையில்லை என்பது நமக்கு மறந்துவிட்டது. அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

  கல்யாணமாகாதவருக்கு இந்தக் கேள்வி எதற்கு என்று நீங்கள் கேட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. குறுகியக் கண்ணோட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கல்யாணம் ஆனவருக்குத் தான் கலவி ஞானம் என்பது போலித்தனம் இல்லையா?

  ReplyDelete
 13. கௌசல்யா வாழ்த்துக்கள், நீங்கள் செய்வது கத்தி மேல் 'நெடுந்தூரம் ' பயணம் செய்வது போன்றது. மிகக் கவனமாக கையாளுகிறீர்கள்.ஒருவர் சொல்லி இருப்பது போல் தமிழில் எழுதவே பலரும் தயங்கும் விஷயம் அது. ஏன் பின்னூட்டம் இடவே தயங்கித் தான் இந்நாள் வரை நான் கூட இடவில்லை.  இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒரு முறை இரு முறை தன் செயல் முழுமை அடைய வில்லை என்பதை மறைக்க முயலும் கணவர்கள் அதை தன் மனைவி புரிந்து கொண்டாள் என்பதை தெரிந்து கொண்டதும் ஏற்படும் சுய இரக்கம் மேலும் இயங்க முடியாமல் செய்து அந்த குறை அதிகரிக்க வழி வகுக்கும். அதை மறைக்க சிலர் தன் மனைவியை சந்தேகிப்பது போல் நடித்து உறவை தவிர்ப்பது கூட உண்டு. பெண்கள் குழந்தைகள் திருமணம் முடித்து கணவன் மனைவி மட்டும் தனித்து இருக்கும் போது அதிக நெருக்கத்தை விரும்புவார்கள். அந்த நேரத்தில் இந்த குறைபாடு கண்ணிற்கு அருகில் வைக்கும் சிறுகல் மலையை போல் தோன்றுவது போல் ஆகும். உளமுதிற்சியோடு கையாள வேண்டிய விஷயம். சுய மருத்துவம் கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டிய ஒன்று. வாழ்க!! வளர்க!!

  ReplyDelete
 14. சகோதரி, வணக்கம்

  கொஞ்ச நாளாக உங்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை மாணவர்களை சமாளிக்கவே பொழுது சரியாக இருந்தது.

  நல்ல பதிவு தான். ஒரு ஆள் (கல்லூரி மாணவன்) வந்தான் ஒரு மருத்துவரிடம். அவன் பிரச்சினை என்னவென்றால் அளவு மீறி வயாகரா சாப்பிட்டதால் ஏற்பட்ட விறைப்பு 2 நாட்களாக அடங்கவில்லை. என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா? சிறுநீர் கழிக்க இயலாமல் அவதிப்பட்டு வந்தான். இன்னொரு ஆளுக்கு பீனைல் ஃப்ராக்ட்ச்சர் ஆகி விட்டதாம். இது எல்லாம் நான் இளநிலை பட்டம் படிக்கையில் கலவி கல்வி வகுப்பில் ஒரு மருத்துவர் வயாகரா வேண்டாம் என்று சொல்லுகையில் சொன்னது.

  ஜோசபைன் அவர்கள் சொன்னது அழகு! வாழ்த்துக்கள்

  வல்லிசிம்ஹன், இந்த வலைப்பூவிலும் நீங்கள் தொடர்ந்து படிக்கிறீர்களா? உங்களை வகுப்பறையில் பார்த்துள்ளேன்....... நன்று!

  +++++
  Bhuvaneshwar D
  www.bhuvanasays.blogspot.in  ReplyDelete

 15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 16. தைரியமான பதிவு.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...