செவ்வாய், ஜூலை 19

பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

முன்னுரை :

மரங்களை வெட்டுங்கள் என்று ஒரு பதிவை போன வருடம் இதே ஜூலை மாதம் எழுதினேன். அந்த பதிவு பலருக்கும் பதிவுகளாகவும், மெயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றும் பகிர்ந்துகொள்ளபட்டு வருகிறது. கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் இந்த பதிவு பல்வேறு தளங்களில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது...இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த மரத்தின் நச்சுத்தன்மை பற்றிய ஒரு விழிப்புணர்வு பலரிடம் சென்று சேர்ந்தது என்பதை குறித்து எனக்கு ஒரு நிறைவு. ஆனால் அது மட்டும் போதாது... அதில் ஒரு சிலர் பின்னூட்டத்தில் கருவேல மரம் என்பது மருத்துவத்திற்கு உரியது, நல்ல மரம் தானே என்று சந்தேகத்தை எழுப்பினர்...அதற்கு ஒரு விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.
            
மண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.

நல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிய வேண்டும் !

இரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துகொள்வது அவசியம்.

கருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica).  இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது. 

இம்மரத்தினை பற்றி மேலும் தகவல்கள் தேவை எனில் இங்கே சென்று பார்க்கவும்... 


   மரம் 

இலை, பூ 

                                                                                                  காய் 

* நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும். 

                                                                              மரம் 
                                                                       

                                                    இலை, பூ 
                                  
                                                                            காய்

இம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது.

பெரிய பாதிப்புகள் 

நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.

புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. 

இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி  விடுகிறது ! ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...!!?  

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.  

விறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!

அடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.

* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.

* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய ?!!

இன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா ??

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.

கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின்   தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்...!

உடனடி தேவை : வரையறுக்கப்பட்ட திட்டம் 

அறிவொளித்திட்டம் கொண்டுவந்த போது நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நச்சுமரத்தை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் அவசியத் தேவை.

இம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்...இதன் புகை கூட நமக்கு பகை ! 

நமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்...மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது.....ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது !!?

உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)


கெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் !! 

தலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் !

இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.

மரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்... 

 'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் !! 

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த  முழு அளவில் உதவி செய்யவேண்டும்.

கடைசியாக ஒரு கேள்வி

இம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன ??!!

சில ஆதாரங்கள் 

http://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Prosopis_juliflora.html

எனக்கு தெரிந்தவனவற்றை பகிர்ந்திருக்கிறேன், இன்னும் தெளிவான ஆதாரங்கள் நன்மை/தீமை எது இருப்பினும் அறிய விரும்புகிறேன்...மேலும் விவரங்கள்/தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...


"நச்சு மரத்தை பற்றிய இந்த தகவல்கள் /விவரங்கள் பலரையும் சென்றடைய உங்கள் தளங்களில் இந்த பதிவை வெளியிட்டும், மின் அஞ்சல் செய்தும் கூகுள் பஸ்சிலும், முக நூலிலும் பகிர்ந்து  உதவுவீர்களாக !"




*********************************************









வெள்ளி, ஜூலை 8

ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....!


பல இடங்களிலும்  நெல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றிய செய்திகள் புகைப்படங்கள் ! சந்தோஷ நிகழ்வுகள் நடந்ததை நினைவு படுத்தி பகிர்ந்துகொண்டே இருந்தாலும், போதும் என்ற திருப்தி வரவில்லை. முந்தைய பதிவில் விட்டு போன சில உறவுகளுக்கு இங்கே நன்றி சொல்லிகொள்கிறேன்.

நாய்க்குட்டி மனசு ரூபினா இவங்களை அன்றுதான் சந்தித்தேன்...இப்ப நாங்க இரண்டு பேரும் நெருங்கிய பாசமலர்கள். 

கல்பனா - எனக்கு இந்த சந்திப்பின் மூலம் கிடைத்த அருமையான ஒரு தங்கை.

ஜெயவேல் - இவங்க அண்ணாவின் உடன்பிறந்த அண்ணன்...இவங்க பிளாக் ரொம்பவே வித்தியாசமானது. ஒரு பெண் பிறந்தது முதல் வளர்ந்து திருமணம் முடிந்து , தாயான பின்னும் அதற்க்கு பின்னும் தொடரும் காலம் வரையிலான சடங்குகள் பற்றிய முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறார்.

செல்வா - நிகழ்ச்சியை அதிக கலகலப்பாக்க இவரின் கதை நன்றாகவே உதவியது. அவர் எழுந்ததுமே எல்லோரும் சிரிக்க தொடங்கிடாங்க.எங்கள் கலாட்டாக்களையும் தாண்டி கதையை சொல்லி முடித்தது அவரது திறமைதான். பத்திரிகை துறையில் இவர் பிரகாசிக்கவேண்டும் என்று செந்தில் சார் சொல்லியது மிக பொருத்தம். செல்வாவிற்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.

ஸ்டார்ஜான் - மிகவும் மென்மையாக பேசினார்...உரிமையோடு வீட்டிற்கு அழைத்திருக்கிறார்...போய் பிரியாணி சாப்பிட்டு வரணும் என்று ஒரு பிளான் இருக்கு. 

மற்றும் உறவுகள்  ஜெயந்த், பிரகாஷ், மணிவண்ணன், ஜோசபின் பாபா, கோல்ட்சிவம், அ.மு.ஞானேந்திரன்,சிநேகிதன் அக்பரின் தம்பி, காதர் அவர்கள் 
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
                                                         ***

பதிவுலகத்தில் சில நேரங்களில் நடக்கும் ஈகோ தொடர்பான சண்டைகள் பெரிதும் வருத்தத்திற்குரியது.ஆனால் இது போன்ற சந்திப்புகள் உறவுகளை வளர்க்கும்... பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான கொஞ்ச காலத்தில் போட்டி, பொறாமை,கோபம், பகைமை என்று வளர்த்து மனித மனங்களை கொன்று போட்டு கொண்டிருக்கிறோம். அன்பு இந்த ஒன்றை மட்டுமே ஏன் நாம் எல்லோர் மனங்களில் விதைக்க கூடாது...??! அதற்கு இந்த மாதிரியான சந்திப்புகள் மிக அவசியம் என கருதுகிறேன். 

நானும் சங்கரலிங்கம் அண்ணன், பாபு மூவரும் சந்திப்பு  ஏற்பாடுகள் பற்றி பேசும் போது, யாருக்கும் சின்ன மனவருத்தம் கூட வந்துவிட கூடாது, சந்தோசமாக தொடங்கி கடைசி வரை அப்படியே முடிக்கணும் என்பது தான் முக்கிய நோக்கமாக இருந்தது. சூழ்நிலையை கலகலப்பாக்க எதாவது பேசணும் என்று நானும் பாபுவும் சில பிளான் வேற போட்டோம்.....! (நடுநடுவே கமெண்ட்ஸ் பாஸ் பண்ணனும்...!என்பது போல)  ஆனால் நாங்கள் நினைத்ததை விட பல மடங்கு சிரிப்புகளை அள்ளிகொட்டி எங்களை பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்கள் வந்திருந்த உறவுகள்...! 

பதிவுலக சந்திப்பின் அர்த்தம் வெறும் கேலியும், கொண்டாட்டமும் மட்டும் இல்லை, நாங்கள் இணைந்தால் சேவையிலும் பங்கு கொள்வோம் என்ற ஒன்றை நிகழ்த்தி எங்கள் மனங்களை நிறைத்து விட்டார்கள். 

சந்திப்பு பற்றி பேச்சு வந்ததும் என் கணவர்,  'ஒரு சின்ன சேவை எதுவும் செய்யுங்கள், ஒரு முன்னுதாரணமா' என்றார். என் மனதிற்கு சரி என்று பட்டாலும்  , மத்தவங்க  என்ன  சொல்வாங்க  என்ற தயக்கம் இருந்ததால் சகோதரர் பாபுவிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். 'தாராளமாக செய்யலாம் சகோ எல்லோரும் சம்மதிப்பார்கள்' என்றார். அதன் பின் அண்ணனிடம் சொன்னோம், எங்கள் அலைவரிசை தான் ஒன்றாச்சே...! சந்தோசமாக உத்தரவு கொடுத்தார். சந்திப்பின் போது உறவுகளிடம் சொன்னார், சம்மதம் என்று அனைவரும் கைகளை தூக்கி ஆதரவு தெரிவித்தனர். வாரி வழங்கினர்.

நெல்லையப்பர் சுவாமி அன்பு ஆஸ்ரமம் மற்றும் கருணை இல்லத்தில்

இதோ இன்று 35 குழந்தைகளின் மனங்கள் உற்சாகத்தில்...! அக்குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் பெரிய சொத்து புத்தகங்கள் வைக்கும் பேக், அந்த விருப்பம் நிறைவேறிய சந்தோசத்தில், இரு கை நீட்டி பேக்கை பெற்றதும் 'நன்றி அம்மா' என்று தழுதழுத்த குரலில் சொன்ன அக்கணத்தில் மீண்டும் ஒருமுறை  தாயாய் பிறந்தேன் ! பளபளக்கும் விழிகள் ! அங்கும் இங்கும் அலைபாயும்  கருவிழிகள் ! என்னிடம் தனிமையில் எதையோ சொல்ல துடித்தது போல் தோன்றியது...அண்ணனும் சித்ராவும் அங்கிருந்து சென்ற பின்னரும் என்னால் விடைபெற இயலவில்லை. 'அண்ணா நீங்கள் கிளம்புங்கள் நான் கொஞ்சம் நேரம் கழித்து வீட்டுக்கு போய் கொள்கிறேன்' என்றேன். என் உள்ளத் தேடல் நன்கு தெரிந்தவர் என்பதால் ஒரு மௌன புன்னகையில் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

அங்கிருந்த ஆசிரியையிடம் இயல்பாய் பேசிக்கொண்டே குழந்தைகளின் அறைகள் முழுவதையும் சுற்றினேன். தன் நிலைகளை என்னிடம் சொல்லி அமைதி கொண்டன அறைகள் !  என்ன செய்யமுடியும் என்னால் ? நலம் விசாரிக்கவும், ஆதங்கபடவும், வருத்தப்பட்டு கடந்து செல்ல மட்டுமே பழகி போன சராசரி மனித மனம் !

நான் அங்கிருந்த சமயம் ஒரு தந்தை தன் மனைவி இறந்து விட்டாள், பெண் குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லை, படிக்கவும் வைக்கணும் என்பதால் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்" என்றார்.   விவரங்களை எல்லாம் குறித்து வைத்துகொண்டார்கள்...வகுப்பு ஆசிரியை ஒருவரிடம் இரு குழந்தைகளையும் ஒப்படைத்தார் தலைமை ஆசிரியை...! அவர்களின் தந்தை வெளியே சென்றதும் நான் குழந்தைகளின் கைகளை பிடித்து 'உன் பேர் என்னமா' என்றேன், மழலைக்குரலில் 'வெங்கடலட்சுமி' என்றாள். 'சரி வீட்ல யார் எல்லாம் இருக்காங்க' கேட்டேன். அவளும் உற்சாகமாக 'செவப்பு கோழி, கருப்பு குட்டி நாய் ம்...அப்புறம் எங்க அம்மா...!?' திடுக்கென்றாலும் மறுகணம் சுதாரித்துக்கொண்டேன் !

வறுமை ! இதன் காரணமாக உயிருடன் இருக்கும் தாய் சாகடிக்கபட்டாள். படிக்க வைக்க பொருள் இல்லை, உணவு கொடுக்க உணவு இல்லை என்ன செய்யும் இந்த பிஞ்சு குழந்தைகள். சோறு போட்டு படிப்பு சொல்லிகொடுத்து அங்கேயே பாதுகாப்பாய் இருப்பார்கள் நம் பிள்ளைகள் என்று கொண்டுவந்துவிட்டு போகிறார்கள். அரசு பள்ளியில் சேர்த்தால் கௌரவம் இல்லை என்று எவ்வளவு பணம் கேட்டாலும் தனியார் பள்ளியில் சேர்த்து பெருமை பட்டுகொள்கிறோம். என் போன்ற பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் இது போன்ற இல்லங்களுக்கு சென்று வரவேண்டும்.

பேசிகொண்டிருந்தபோது ஒரு வயதான அம்மா வந்தாங்க, தன் மகனின் நினைவுநாள்  வருகிறது அன்று இங்கே அன்னதானம் செய்யவேண்டும் என்று. இவர்களும் சரி என்று தேதி குறித்துவைத்து கொண்டு நன்றி சொல்லி அனுப்பினார்கள். இது போன்று மாதத்திற்கு பத்து விருந்துகள்(அன்னதானம்) உண்டாம். அன்று குழந்தைகள் அருஞ்சுவையுடன் உண்டு மகிழ்வார்களாம். நல்ல விஷயம் தான். ஆனால் என் மனம் வேறு விதமாக சிந்திக்க தொடங்கியது.

ஒரு நாள் அருஞ்சுவை மறுநாள் சாதாரண உணவு என்னும் போது மீண்டும் அத்தகைய உணவு எப்போது கிடைக்கும் என்று ஏங்குவார்களே ? அந்த ஏக்கம் பெரியவர்களான போதும் மனதில் தங்கி இருக்குமே...?! இத்தகைய மனநிலை நல்லதா ? கிடைத்த போது ஆர்ப்பரிப்பதும், இல்லை என்ற போது துவண்டு ஏக்கத்தில் கழிவதும் சரியா ?

தங்களின் ஒரு மனத்திருப்திக்காக செய்யகூடிய இந்த ஒருநாள் நிகழ்விற்கு பதிலாக அந்த பணத்தில் தேவையான அரிசி, மளிகைபொருட்கள் அல்லது வேறு அத்தியாவசியமான ஒன்று இவற்றை வாங்கிகொடுக்கலாம். பத்துநாள் விருந்தளிப்பவர்கள் அனைவரும் இதுபோல் கொடுக்கும் போது அந்த மாதந்தோறும் ஓரளவிற்கு நல்ல சரிவிகிதமான உணவை அவர்கள் உண்ண வழி கிடைக்கும். என் மனதிற்கு தோன்றியதை அவர்களிடம் சொன்னபோது,  'நீங்கள் சொன்ன யோசனை நல்லா இருக்கு, ஆனா டோனர்கள் சம்மதிக்க மாட்டார்கள், அன்னத்தை(உணவை) தானமாக கொடுத்தால் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும் என்பார்கள்' என்றார். (கவனிக்க : அன்னதானம்  செய்வது  தவறு  என்று  இங்கே  நான்  குறிப்பிடவில்லை...!)

சிறு குழந்தைகளிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் பகிர்ந்த சில வார்த்தைகள் எனக்கு இப்படி எண்ண வைத்தது !

இதுபோல் பிறந்த நாள், நினைவு நாள் அன்று ஒருநாள் மட்டும் அன்னதானம் செய்யும் எனக்கு தெரிந்தவர்களிடம் இனி இது பற்றி சொல்லணும் என்று நினைத்து கொண்டு அங்கிருந்து விடைபெற்று வந்துவிட்டேன்.        

தலைமை ஆசிரியரிடம் பேசிகொண்டிருந்த போது நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்...! இன்னும் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கான வேலைகளை செய்வதற்கான முயற்சிகளை சங்கரலிங்கம் அண்ணன் எடுத்து வருகிறார்.   

பதிவர் சந்திப்பினை  தொடர்ந்து கருணை இல்லத்துடன் ஏற்பட்ட பிணைப்பு  வாழ்வின் மீதான பிடிப்பை இன்னும் அதிகபடுத்தி இனி கழியும் நாட்களை அர்த்தமுள்ளதாக்க புதிய  உத்வேகத்தை கொடுத்தது. 

தினம்...
எழுகிறோம்
உண்கிறோம்
சம்பாதிக்கிறோம்
வளர்கிறோம்
வளர்க்கிறோம்
வாழ்கிறோம்
முடிக்கிறோம் 
முடிகிறோம் !
  
ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கை...ஆனால் ஒரு சிலர் வாழ்ந்து முடித்த(முடிந்த) பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எம் ஜி யார் அவர்கள் இறந்து 23 வருடங்கள் கடந்தும் இன்றும் பல மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் சமாதிக்கு தினம் வந்துபோகும் மக்களை பார்த்தால் தெரியும். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தின் முள் இன்னும் ஓடிகொண்டிருக்கிறது என்று சமாதியின் மேல் காதை வைத்து கேட்கிறார்கள், ஒலி கேட்டதாக சொல்லி பரவசம் அடைகிறார்கள். அவர் பத்து வருடம் தொடர்ந்து அரசியலில் கோலோச்சினார் என்பதற்காக அல்ல அந்த கூட்டம்..... மக்கள் மேல் அவர் வைத்திருந்த அன்பு, பாசம், கொடுத்து சிவந்த அவர்தம் கைகள் !!    

சேவை என்று செய்யமுடியவில்லை என்றாலும், சக மனிதரிடம் அன்பை பரிமாறுவோம். சுயநலம் மிகுந்து போன இன்றைய சூழலில் அடுத்த வீட்டினரிடம் ஒரு 'ஹாய்' சொல்ல கூட அதிகம் யோசிப்பவர்களாக இருக்கிறோம். நாம் கொஞ்சம் மாறினால் என்ன...?! முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியில் எதிர்படும் மனிதர்களை குறைந்தபட்சம் ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....! 

"இறந்த பின்னும், ஒரு சில மனங்களிலாவது நாம் வாழ்வோம்  நினைவுகளாய்...!!"

                                ***********************************************

"மரத்தை வெட்டி, மண்ணை காப்பாற்றுவோம் "  என்ன இப்படி சொல்றாங்க என்று யோசிக்கிறீங்களா...? அடுத்த பதிவில் இதற்கான பதில் கிடைக்கும்.  மிக முக்கியமான ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.


                                                                   *********






இன்று கழுகில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் !!

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...