இப்போது நாம எல்லோரும் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது, எதிலும் சுகாதார கேடு, சுவாசிக்கும் காற்றிலும் சுத்தம் இல்லை என்று புலம்புறோம் ஆனால் இன்னும் சரியான விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. சமீப காலமாகத்தான் 'மரங்களை வளர்க்கணும்', 'மரங்களை வெட்டகூடாது' என்ற கோஷங்கள் வலுப்பெற தொடங்கி உள்ளன. மரங்களை வெட்டகூடாது என்பது சம்பந்தமான ஒரு ஆச்சரியமான வரலாறு ஒன்று நம்ம நாட்டில் இருக்கிறது. நமக்கு முந்தைய காலகட்டத்திலேயே இதற்காக ஒரு பெரிய உயிர் போராட்டம் நடந்திருக்கிறது...!!
சுற்றுசூழல்மாசுக்கு எதிராக முதல் முறையாக ஒரு போராட்டம் நடைபெற்றது நம் இந்தியத் திருநாட்டில்தான் !
பல ஆச்சரியங்களுக்கும், அதிசயங்களுக்கும் ஆரம்பம் மட்டும் நம் நாடாகத்தான் இருக்கும்...?!!
கி.பி. 1730 ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங் தனது அலுவல் வசதிக்காக புதிதாக ஒரு அரண்மனையை மார்வார் என்ற வனப்பகுதியில் அமைக்க நினைத்தார். ஆனால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் இவரது விருப்பத்திற்கு தடையாக இருந்தது. அந்த மரங்களை வெட்ட தனது ஆட்களை அனுப்பினார்.
அந்த பகுதியில் வாழ்ந்து வந்த 'பிஷ்ணோய்' என்ற இன மக்கள் மரங்களை தெய்வமாக கருதி வாழ்ந்து வந்திருக்கின்றனர். மன்னரின் ஆணையை கேட்ட மக்கள் முடிந்தவரை தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் பலன் அளிக்கவில்லை. மன்னரின் உத்தரவின் படி வீரர்கள் மரங்களை வெட்ட வந்தனர். பதறிப்போன மக்களும் வேறு வழியின்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மரத்தையும் கட்டிப் பிடித்துக் கொண்டனர். அதில் பெரும் பாலானவர்கள் பெண்கள் !
வீரர்களும் மன்னரின் உத்தரவை மீற முடியாமல் மரத்தை கட்டிபிடித்தவர்களை முதலில் வெட்டிப் போட்டுவிட்டு பின் மரத்தை வெட்டினார்கள். மூணு பெண் குழந்தைகளுக்கு தாயான 'அம்ரிதா தேவி' என்ற பெண் தனது குழந்தைகளுடன் முதலில் உயிரை விட்டார். இப்படியே 363 மரங்களையும் அதனை கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டிய பின்னரே மன்னரின் மனம் இளகியது.....?!! 'போதும் நிறுத்துங்கள் இந்த இடம் வேண்டாம்' என்று போர்வீரர்களை திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார். மரங்களுக்காக தங்களின் உயிரை விட்ட அம்மக்களின் தியாகம் எவ்வளவு பெரிது ?!!
இந்த தியாகத்தின் ஆழம் இன்றைய மக்களுக்கு புரியவில்லை...இதனை நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி புரியவைக்க வேண்டும். மரங்களை வளர்க்க சொல்லி ஊக்கபடுத்த வேண்டும்.
இந்த மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபெற்ற முதல் எதிர்ப்பு என்கிறார்கள். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்வை 'சிப்கோ இயக்கம்' என்று கொண்டாடுகிறார்கள். 'சிப்கோ' என்றால் தழுவுதல் என்று அர்த்தம். 'கொண்டாடுகிறோம்' என்று சொல்ல இயலவில்லை !? ஏன்னா பலருக்கும் இந்த இயக்கம் பற்றியே தெரியாது என்பதே உண்மை.
இந்த இயக்கத்தை தோற்றுவித்தவர் திரு சுந்தர்லால் பகுகுணா என்பவர் ஆவார். இப்படி ஒரு இயக்கம் இருப்பதால் தான் மரங்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றன....!!
1981-ம் ஆண்டு இந்திய அரசு, சுந்தர்லால் பகுகுணா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க வந்ததை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ''இமய மலைப் பகுதியில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. பாரத மாதாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த 'வளமான மண்’, கடலை நோக்கித் தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்றுதான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும் !'' என்றாராம்.
தற்போது வரை அந்த தகுதியை அவர் அடையவில்லை என்பது சந்தோஷபடகூடிய செய்தி அல்ல !!?
மரங்கள் மனிதனின் தயவு இல்லாமல் கூட வளர்ந்துவிடும்,
மனிதனால் மரங்கள் இன்றி வாழ இயலாது என்பது நிதர்சனம் "
"இந்த பிரபஞ்சம் ஒரு மகாசக்தியின் படைப்பு. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும், அவற்றின் நலனுக்காகவே இயற்கை என்னும் மகாசக்தி படைத்துள்ளது, எந்த உயிரினமும் அடுத்த உயிரின் உரிமைகளை பறிப்பது பெரும்பாவம்"
- ஈசோபநிஷதம்.
நறுமணம்
என்னில் எதற்கு...
வெட்டுகிறார்களே
கதறுகிறது
சந்தன மரம் !?
சந்தன மரம் !?
மரங்களை வெட்டுவதை தடுப்போம்...மனிதம் காப்போம். !!!
***********************************************************************
அன்பான பதிவுலக நட்புள்ளங்களே,
வணக்கம்.
சொந்த தொழில் சம்பந்தமாக எனக்கு நிறைய வேலை, அலைச்சல் இருக்கிறது. பதிவுகள் எழுதவும், பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதவும் நேரம் கிடைப்பது இல்லை. தவிரவும் எனக்கு ஒரு ஸ்பேஸ் தேவை படுகிறது. அதனால் இந்த மாதம் முழுவதும் விடுமுறை எடுத்துக்கிறேன். (ஸ்...அப்பாடான்னு தோணுதா...?? வந்து சேர்த்து மொத்தமா எழுதிடுவேன்ல.....?!!)
என்றும் உங்களின் ஆதரவு ஒன்றே என்னை எழுத வைத்துகொண்டிருக்கிறது. உங்கள் அனைவரின் நட்பே என்னை அதிகம் உற்சாகப்படுத்துகிறது மீண்டும் பல பதிவுகளுடன், உற்சாகமாக உங்களை சந்திக்கிறேன்....நன்றி.
பிரியங்களுடன்
கௌசல்யா

