வெள்ளி, மே 21

PM 3:32
16

ன்று ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம். இந்நாளை வன்முறை மற்றும் தீவீரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது . தீவிரவாதத்தால்  நம் குடும்பம் பாதிக்கபடாதவரை இது ஒரு சாதாரண நாள் தான் பலரின் பார்வையில்....! என்ன செய்வது நமக்கு அப்படியே பழகி விட்டது வேறு என்ன சொல்வது....?

தீவிரவாதத்தால்  பாதிக்கப்பட்ட, இன்றும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் மக்களை எண்ணி நாம் ஒரே ஒரு நிமிடம் நமது வேலைகளை மறந்து அவர்களுக்காக பிராத்தனை செய்வோம் . எங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும்.....! நமக்குள் அன்பு என்னும் நதி பிரவாகம் எடுத்து ஓடட்டும்......!  ஒருவருக்கு ஒருவர் சமாதானத்தை இந்த நாளில் சொல்லிகொள்வோம்.....!  அருகில் இருப்பவரின் கைகளை பற்றி 'சமாதானம் உங்களுக்கு கிடைக்கட்டும்' என்று அன்பாக கூறி கை குலுக்குவோம்.  அப்படி நீங்கள் செய்யும் போது 
உங்கள் அருகில் புன்சிரிப்புடன் கடவுள் நிற்பதை உணரமுடியும்!!  (அன்பிருக்கும் இடமே கடவுள் இருக்கும் ஆலயம் )

                                                                       *************



இந்த நாளை நினைவு கூறும்போது எனது கடந்தகால நிகழ்ச்சி ஒன்றை உங்களிடம் பகிர விரும்புகிறேன் . 

என் அம்மாவிற்கு உடல்நலக்குறைவினால் கர்ப்பபையை நீக்க வேண்டிஇருந்தது. ஆனால் அப்போது நடந்த குளறுபடியில் அம்மாவின் உடம்பின் வலதுபுறம் சரியாக இயங்காமல் போய்விட்டது. அதற்காக தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொண்டே இருந்தோம். அப்படி ஒரு நிலையில் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் சென்னை இசபெல்லா ஆஸ்பிட்டலில் செக் அப் செய்வதற்காக மே மாதம் 20 ம் தேதி மாலையில் அம்மா, நான், அண்ணன் மற்றும் நண்பர்கள் புடைசூழ போயிருந்தோம்.


8   மணி அளவில் டாக்டர் செக்கப் செய்தார்கள், அப்போது அதிக அளவில் ரத்தபோக்கு ஏற்பட்டுவிட்டது.  டாக்டரும் , " இனி வீட்டிற்கு  கொண்டுபோவது சிரமம், இங்கே அட்மிட் செய்துவிடுங்கள்" என்று கூறிவிட்டார்கள்.  அம்மா வேறு மயங்கிய நிலையில் இருந்தார்கள், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  அரை மணி நேர  ஆலோசனைக்கு பிறகு அம்மாஉடன்  என்னை மட்டும் தங்க வைத்து விட்டு, காலையில் தேவையான பொருட்களை எடுத்துகொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.


என்னிடம் கொஞ்ச பணத்துடன் ஒரு பர்ஸ் மட்டும்தான் இருந்தது.  ரூமில் அம்மாவை கொண்டுவந்து படுக்கையில் படுக்கவைத்துவிட்டு நர்ஸ் போகும்போது 'மயக்கம் தெளியும்போது பழச்சாறு கொடுங்கள்' என்று  சொன்னார்கள். எனக்கு அந்த இடம் ரொம்பவே புதிது!  ஆஸ்பத்திரி வளாகத்தில் கடைகள் இருப்பதாக தெரியவில்லை, வெளியேதான் வாங்கவேண்டும்.  சரி என்று நான் கிளம்பும்போது நேரம் 10 .05 இருக்கும்.  மூணு மாடி இறங்கி கீழே வருவதற்குள் கேட்டை பூட்டி விட்டார்கள்.  6  அடிக்கும் மேல்  உயரம் இருக்கும்  கேட் மனதிற்குள் பயத்தை கொடுக்க  ஏதோ தைரியத்தில் கேட்டின் மேல் ஏறி அந்த புறம் குதித்துவிட்டேன்.


எந்த பக்கம் போவது என்றும்   தெரியவில்லை,  ஒளி  தெரியும் பக்கமாக நடந்தேன்.  சிறிது தூரம் சென்றதும் சில கடைகள் தெரிந்தன,   ஆனால் அந்த கடைகளையும் வேகவேகமாக இழுத்து மூடினர்......? எங்கும் ஒரே பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடினார்கள்......? அந்த இடமே கலவர பூமியாக தெரிந்தது!  பாதி மூடி கொண்டிருந்த கடைக்கு ஓடினேன்,  'இரண்டு பிரூட்டி வேண்டும்' என்றேன்.   அதை வேகமாக கொடுத்து விட்டு அந்த கடையையும் பூட்டி விட்டார்கள்!   எனக்கு ஒரே குழப்பம்!  யாரிடமும் கேட்கவும் பயம்!  இதயம் வேகமாக துடிக்க ஆஸ்பிட்டல் நோக்கி நடந்தேன் இல்லை மூச்சு வாங்க ஓடினேன்!   மீண்டும் ஒரு high jump பண்ணி உள்ளே வந்து மறுபடி ஓடி மூன்றாவது மாடி படி ஏறி அறையை அடைந்தேன்.   நான் வரவும் அம்மா எழவும் சரியாக இருந்தது.  அவர்களுக்கு குடிக்க கொடுத்து தூங்க வைத்து விட்டு நானும் குழப்பங்களுடன் தூங்கி போனேன். ( இத்தனைக்கும் யாரும் என்னை கவனிக்க வில்லை அவங்க வேலை அவங்களுக்கு)


காலையில் ஆறு மணிக்கு எழுந்தால் இரவில் நான் கண்ட அதே பரபரப்பு இங்கும்!  என்னவென்று நர்சிடம் கேட்டேன், அவர்கள் தினத்தந்தியை எடுத்து கொடுத்தனர். புரியாமல் பேப்பரை பார்க்க  'ராஜீவ் காந்தி படுகொலை' என்ற தலைப்பு செய்தி படித்ததும்  பதறிவிட்டேன்.   தொடர்ந்து செய்தியை படித்தபோதுதான் தெரிந்தது நான் முன்னிரவில் கடைக்கு சென்ற அதே நேரம்தான் இந்த கோர சம்பவம் நடந்து இருக்கிறது என்பதும் விஷயம் பரவியதால்தான் அந்த கடையடைப்பு என்பதும் புரிந்தது.  


கலங்கிய மனதுடன் அம்மாவை எழுப்பி செய்தியை சொன்னேன்.  தன் உடல் வேதனையைகூட மறந்துவிட்டு, " ஏன் இப்படி? மனித உயிருக்கு மதிப்பு இல்லையா? படுகொலைதான் பிரச்னைக்கு தீர்வா? "  என்று வேதனைப்பட தொடங்கிவிட்டார்கள்.
தாய்மைக்குத்தான் தெரியும் ஒவ்வொரு உயிரும் எவ்வளவு அற்புதம் என்று!  எந்த ஒரு உயிரின் இழப்பையும், எந்த ஒரு  தாயாலும் தாங்கிகொள்ளவே முடியாது!   'பெற்றால்தான் பிள்ளையா?'


தீவிரவாதத்தை விரும்புகிறவர்கள் தாய்மை நிலையில் இருந்து பார்த்தார்கள் என்றால் எந்த உயிரையும் கொடூரமாக கொல்ல மாட்டார்கள்......?!  


என் அம்மாவிற்கு உடல் வலியுடன் மனவலியையும் கொடுத்த அந்த நாளை மறக்கவே முடியாது.


                                                                                 *******
பின்குறிப்பு:


1   இந்த சம்பவத்தால் வாகனம் ஓடவில்லை என்பதாலும் சிறு சிறு கலவரங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நடைபெற்றதாலும்  என் அண்ணன் பைக்கில் வராமல் சைக்கிளில் சந்து பொந்தில் புகுந்து ஒரு வழியாக வில்லிவாக்கத்தில் இருந்து மயிலாப்பூருக்கு சாயங்காலம் நாலு மணிக்கு வந்து சேர்ந்தான்.  பிறகு அடுத்த நாலு நாளைக்கு போட்ட துணியையே போட்டு ஒருவழியாக சமாளித்தோம்.   எங்களை மாதிரி யாரெல்லாம் எப்படி கஷ்டபட்டார்களோ என்று வேறு, ஒரே கவலைதான் போங்கள்!!


(அப்புறம் அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்பவர்களுக்குகாக இந்த பின்குறிப்பு)  


    பத்து நாள் அங்கிருந்து தொடர்ந்து வைத்தியம் பார்த்ததில் கொஞ்சம் (நானும்தான்) தேறி வீடு வந்து சேர்ந்தோம்.  ஆறு மாதத்தில் நடக்க தொடங்கி விட்டார்கள்.
  
ஒவ்வொரு மே மாதம் 21 ம் தேதி வந்தால் எல்லோரும் பழைய நினைவை பகிர்ந்துகொள்வோம். எங்களது அவஸ்தையின் நினைவுநாள் !! இந்த வருடம் கூடுதலாக உங்களிடமும் சொல்லியாச்சு .........  




Tweet

16 கருத்துகள்:

  1. இந்த சம்பவம் நடந்த பொழுது கோவையில் எனது அத்தை வீட்டில் இருந்தேன். இது போன்ற தருணங்களில் பலர் சம்பந்தம் இல்லாமல் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. //தீவிரவாதத்தால் நம் குடும்பம் பாதிக்கபடாதவரை இது ஒரு சாதாரண நாள் தான் பலரின் பார்வையில்....!//

    உண்மைதான். ஆனா பாதிக்கபடுவதாலும் தீவிர வாதிகள் உருவாகிறார்கள். என்ன சொல்வது காலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு
  3. ஓவரு நிமிடமும் இப்படிப்பட அவஸ்தைகள்
    காலம் கலி காலம்

    பதிலளிநீக்கு
  4. சரியாக சொன்னீர்கள் யாதவன், ஜெய்லானி. உங்கள் கருத்துக்கு நன்றி.
    எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும்..! ஆனால் பக்கத்தில் நம் உடன்பிறப்புகள் படும் அவதியை காதால் கேட்டுக்கொண்டும், கண்களால் பார்த்துக்கொண்டும் இருக்கத்தான் முடிகிறதே தவிர நம்மால் ஒரு துரும்பைக்கூட எடுத்து போட முடியவில்லை என்பது நம் இயலாமையா, பலவீனமா.... பதில் இல்லாத கேள்விகள்!! உண்மைதான் காலத்தின் கோலம்தான்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல எழுதறீங்க,கௌசல்யா.சம்பவத்தை கூட ஆர்வம் மேலிட படிக்க தூண்டியது உங்கள் திறமை.நானும் அந்த நாளில் ,மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன்,இந்திரா காந்தி,பின்பு ராஜிவ் காந்தி என்ன ஒரு கொடுமை.

    பதிலளிநீக்கு
  6. //தீவிரவாதத்தால் நம் குடும்பம் பாதிக்கபடாதவரை இது ஒரு சாதாரண நாள் தான் பலரின் பார்வையில்....!//


    ....வேதனையான உண்மை.

    பதிலளிநீக்கு
  7. எனக்கு வோட்டுகள் போட்டு தமிளிஷின் முதன்மை பக்கத்தில் இடம்பெற செய்த அத்தனை நல்ல அன்புள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி....

    தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.....

    பதிலளிநீக்கு
  8. ###########################################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

    http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
    அன்புடன் >ஜெய்லானி <
    #############################################

    பதிலளிநீக்கு
  9. நீங்க சொல்வதும் முற்றிலும் உண்மை. எல்லா நாளும் நல்லநாளாய் அமைய இறைவனிடம் பிராத்திப்போம். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. http://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_23.html

    உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்

    பதிலளிநீக்கு
  11. எனக்கு விருது கொடுத்த சகோ.ஜெய்லானி அவர்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. nice template.

    good post. I too remember that day.

    பதிலளிநீக்கு
  14. இது போல அவதிக்குள்ளானவர்கள் நிறைய...
    சோகமான சம்பவம் உங்களுக்கும்.
    ராஜீவ் காந்தியாவது பரவாயில்ல... படுகொலை செய்யப்பட்டார்னு காரணம் இருக்கு.
    ஆனால், சில தலைவர்கள் இயற்கை மரணம் எய்தினால் கூட இது போல் 4 நாள் கடையடைப்பு, பந்த்... கலவரம் அது ஏன்னு தான் புரியல.

    பதிலளிநீக்கு
  15. அதுதான் நம்ம ஊரு ரோஸ்விக், வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...