திங்கள், நவம்பர் 26

'வயாகரா' வில் அப்படி என்ன இருக்கிறது ?!! தாம்பத்தியம் பாகம் - 29


தாம்பத்தியம்  தொடரில் பலவித பிரச்சனைகளைப்  பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிகத்  தேவையானதும் கூட ! வாசகி ஒருவர் நீண்ட மடல் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார். அதன் மொத்தம் உள்ளடக்கம் இது...

"எனது கணவரின் வயது 46, மது,புகை  பழக்கம் உள்ளவர். 6 மாதங்களாக தாம்பத்திய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார்.முக்கியமான நேரத்தில் இயங்க 
முடிவதில்லை" என தொடர்ந்தவர் "இதற்கு வயாகரா உபயோகிக்கலாமா? " அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?"  என கேட்டிருந்தார்.

அவருக்கு சொன்ன பதில் பிறருக்கும் தேவைப்படலாம் என்பதால் கொஞ்சம் விரிவாக இங்கே பகிர்கிறேன். படித்துக் கருத்துக்களை கூறுங்கள்.

இன்பம்  எங்கே...?


இன்றைய இயந்திர உலகில் தாம்பத்ய இன்பம் என்பது வேறெங்கோ இருப்பதைப்  போலவும் அதை சுலபமாக சீக்கிரமாக அடைய மருந்து மாத்திரைகள் போட்டுக்கொண்டால் போதும் என்பதே சிலரது
முடிவு...!!

ஆனால் உடல்  தயார் நிலையில் இருந்தால்  மட்டும், அங்கே உறவு நடந்துவிடுவதில்லை, (இருவர்) மனமும் ஒத்துழைக்க வேண்டும். 


இப்போதெல்லாம்  ஆண்கள் 30-40 வயதிலேயே ஆர்வம் குன்றிவிடுகிறார்கள். ஆர்வம் என்று கூறுவதை விட இயலாமை என்பதே சரி. இதற்கு மன சார்ந்த உடல் ரீதியிலான காரணங்கள் இருக்கலாம். அவை என்ன என்று கவனித்து சரி செய்ய வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றை நாடுவது சரியல்ல. செயற்கை தூண்டுதல்கள் அந்த நேரம் சுவைக்கலாம் தொடர்ந்து அவை எடுத்துக்கொள்ளப்பட்டால் சாதாரண அணைப்பு கூட, அந்த மருந்து இல்லாமல் நடக்காது  என்றாகிவிட்டால்...?!! யோசியுங்கள்!

உறுப்பு  செயல்படும் விதம்

ஆணுக்கு உடலுறவு பற்றிய எண்ணமோ, செயலோத்  தேவைப்படும் போது மட்டும் விரிந்து நீளக் கூடிய தன்மை கொண்டதாக உறுப்பின் அமைப்பு  இருக்கிறது. விரியவோ சுருங்கவோ கூடிய இத்தன்மையை மூளையில்  உள்ள  'சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம்' என்ற பகுதி பார்த்துக் கொள்ளும் . இரண்டு விதமான நரம்பு அமைப்புகளில் ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டாலும் பிரச்சனைதான்.

பெண்ணை நினைத்ததும்  இந்த நரம்பு மண்டலம் உஷாராகி நியுரோடிரான்ஸ் மீட்டர்களை வெளியிடும், அடுத்து நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல் கோலைன், டோப்பாமைன் போன்றவை சுரக்க ஆரம்பிக்கின்றன. இவை ஆணுருப்புக்குள் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களைப்  பெரிதாக்குகின்றன. அதிகமான ரத்தம் அங்கேச்  சென்று அங்கிருக்கும் பஞ்சு போன்ற அறைகளை ரத்தத்தால் நிரப்புகின்றன. அறைகள் பெரிதானதும் ரத்தக்குழாய்கள் மூடிவிடுவதால் ரத்தம் தேங்கி உறுப்பு நீண்டு பெரிதாகி கடினமாகிறது.

உடலுறவு  நிகழ்ந்து முடிந்ததும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குக்  கொண்டு வர மூளையின் இரண்டாவது நரம்பு மண்டலம் உடனே செயல்படத்  தொடங்குகிறது. இறுக்கத்தை குறைத்து விரிந்திருக்கும் தன்மையை தடுத்துவிடும்.

வயாகராவின் வேலை 

வயாகரா என்பது சில்டினாபில் என்கிற ஒரு கெமிக்கல். நைட்ரிக் ஆக்சைடு செய்யக்கூடிய வேலையை இதுவும் செய்யும்.  ரத்தக்குழாய்களை பெரிதாக்கி அதிக ரத்தத்தை செலுத்துவதும் அப்படியே இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையைச்  செயலற்றதாக ஆக்குவதும் இதன் வேலை, அதாவது விறைப்பு தன்மையை! இதனால் உறுப்பு நீண்ட நேரம் விரிந்தே இருக்கும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை கொஞ்ச நேரம் தடுத்து வைக்கிறது வயாகரா.

ஆனால்  இந்த நிலைக்கு வருவதற்கு முன் மனதால் செக்சை நினைக்க வேண்டும். மனம் ஒத்துழைக்காமல் வயாகராவை மட்டும் போட்டு கொண்டால் எந்தவித பிரயோசனமும் இல்லை.

ஆரோக்கியமான மனதும் உடம்பும் அமைய பெற்றவர்களுக்கு எந்த வித செயற்கையான தூண்டுதலும் தேவையில்லை. அதே சமயம் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறை மனதிலா உடலிலா என்பது தெரியாமல் வயாகரா போட்டுக்  கொண்டால் சரியாகி விடும் என்பது முற்றிலும் தவறு.

இந்த  பெண்ணின் கணவரைப்  பொருத்தவரை அவரது புகை மது பழக்கவழக்கங்கள் அவருக்கு தாம்பத்திய ஆர்வத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல் உறுப்பு எழுச்சியையும் முடக்கிப்  போட்டு விட்டது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். மற்றொன்று சர்க்கரை நோய், இது ஆண்மை குறைவை ஏற்படுத்தும். எனவே குடி, புகை சர்க்கரை நோய் இவற்றின் பாதிப்பை குறைப்பதில் அக்கறை எடுக்க வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றையும்,  இத்தனை நாளில் குணப்படுத்துகிறோம் என்ற விளம்பரங்கள் பின்னேயும் செல்வதும்  சரியல்ல!

பெண்களுக்கும் வயாகரா?!

இந்த வயாகரா பெண்களுக்காகவும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது...!! ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு மருந்து கம்பெனி பிளிபான்செரின் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. உறவில் முழு திருப்தியை அளிக்க வல்லது என்றும் இதனை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. நேரடியாக மூளையை சென்றடைந்து  தேவையான கெமிக்கல்களை மூளையில் அதிக அளவில் சுரக்க வைத்து ஆர்வத்தை தூண்டுகிறது.

ஆனால் பெண்கள் இது போன்றவற்றை உபயோகிக்கும் போது வேறு விதமான சிரமங்களை அனுபவிக்க வேண்டும். மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஆண்,பெண் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை, அனுமதி இன்றி எதையும் உட்கொள்வதை தவிர்தல் நலம்.

வயாகரா தீர்வு இல்லை?

தாம்பத்திய உறவு பற்றிய விருப்பம், ஆர்வம்  இல்லாதவர்களுக்கு, 'சர்க்கரை நோய் இருக்கிறதா' என சோதனை செய்வது முக்கியம். இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சைப்  பெற வேண்டும். சர்க்கரை நோயை மருந்து மாத்திரையினால் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டத்தை இந்நோய் இயங்கவிடாமல் தடுத்துவிடும் அல்லது பாதிக்கும். இந்நிலையில் எவ்வளவு தான் செக்ஸ் தூண்டுதலை வெளியே இருந்து ஏற்படுத்தினாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. இத்தகையவர்களுக்கு வயாகரா தீர்வு இல்லை. (ஒருவேளை ஈடுபட்டாலும் முழுமைப்  பெறாது.) ஆணிடம் இருந்து விந்தணுக்கள் வெளியேறுவதை போல் தோன்றினாலும் பெண்ணை அடைவதற்கு பதிலாக அவர்களின் சிறுநீர்பையினுள் சென்று விடும் !

பொதுவாக  சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை, குடி பழக்கம் இருப்பவர்களின் ரத்த குழாய்கள்  அதிக அளவு சுருங்கும். அதோடு ஆண் உறுப்புக்கு செல்லும் ரத்த குழாய்களும் சுருங்கும் என்பதால் அங்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிக்கும். இதனால் எழுச்சியின்மை ஏற்படும். ஆர்வம் குறையும்.

மேலும் 

இம்மாத்திரையை உடலுறவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். அந்த நேரத்திற்குள்ளாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை எட்டிவிடும். கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களுடன் உட்கொள்ளப்பட்டால் ரத்தத்தில் உறிஞ்சப்படுவது தாமதமாகும். முக்கியமாக இதய நோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளோடு(ISMN /ISDN) வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தாகலாம். 

சுலபமான வழி  - சூரிய குளியல் 

பாலியல் ஆர்வத்தைத்  தூண்ட ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன்  உதவுகிறது. இந்த ஹார்மோன்  சுரக்க   வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் எடுத்தாலே போதும் என்று ஆஸ்திரியா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்போது டெஸ்டோ டெரோன் 69 சதவீதம் அதிகரிக்கிறது. (நம்ம ஊர் சூரிய நமஸ்காரம் !!)
   
இறுதியாக ஒரு முக்கிய தகவல்

உடல் ரீதியினாலான குறைபாடுகள்   எதற்கும் சரியாக சிகிச்சை பெறாமலோ மது, புகை பழக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ நாளடைவில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். இதயப்பாதிப்பு ஏற்படும்.  100  சர்க்கரை நோயாளிகளில் 50 பேர் ஆண்மைகுறைவுக்கு  ஆளாகிறார்கள். இதில் 40 % பேர் மாரடைப்புக்குள்ளாகிறார்கள். இத்தகைய ஆபத்தை முதலில்  சரிப்படுத்த முயலவேண்டும். அளவான சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவை மிக அவசியம். இதெல்லாம் முறையான பழக்கத்திற்கு வந்த பிறகே உடல் தயாராகும். அதனுடன் மனமும்...!!

மனது நினைக்க நினைக்க அந்நினைவுகள் மூளையின் நரம்பு மண்டலத்தை மெல்ல  மீட்ட, அங்கே பிறக்கும் இசை அதிர்வுகள், உடலெங்கும் பரவி வியாபித்து ஆனந்திக்க வைக்கும்...!! அப்புறம் என்ன உற்சாக அலைகள் கரைகளை வந்து முத்தமிட, நிலவின் மடியில், இரவின்  அமைதியில், சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுங்கள்...!

இனியும் வயாகரா போன்றவை பற்றிய சிந்தனை வேண்டுமா!? தவிர்த்திடுங்களேன் !!


பின் குறிப்பு :

தாம்பத்தியம் தொடரைப்  படிக்கும் வாசகர்கள் என்னிடம் கேட்கக்கூடிய சந்தேகங்களை மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.  பல சந்தேகங்களை டாக்டரிடம் தான் கேட்கவேண்டும், என்னிடம் அல்ல.  தவிர அந்தரங்கம் பற்றிய ஆழமான(?) பல கேள்விகள்  என்னை பதில் சொல்ல இயலாத படி செய்கின்றன. உண்மையில், பதில் தெரியாமல் கேட்கிறார்களா அல்லது எனக்கு தெரியுமா என சோதிக்கிறார்களா தெரியவில்லை. :-)

ஒருவர் கேட்டிருந்தார், 'பெண்ணிற்கு உச்சம் ஏற்பட்டதை ஒரு ஆணால்  எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும்?' என்று ...அதற்கு நான் சொன்னேன், ஒரு கணவனால் மனைவியின் அத்தகைய நிலையை புரிந்துக்கொள்ளமுடியும் என்று... மறுபடி அவர் பதில் சொல்கிறார், மேடம் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று !! கல்யாணம் ஆகாதவருக்கு இந்த கேள்வி எதற்கு??!!

கணவன்  மனைவியின்  கருத்துவேறுபாடு பிரச்சனைகளால்  பாதிக்கப்படும் குழந்தைகளை மனதில் வைத்தே இந்த தொடரை எழுதி வருகிறேன். அனாவசியமான  கேள்விகள்  கேட்பதைத் தயவுசெய்து தவிருங்கள். மேலும் அத்தகைய விவரங்கள்தான் தேவையென்றால் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன, தேடிக்கொள்ளலாமே...! ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சொல்ல முடியாததால் பொதுவில் இங்கே கூறுகிறேன். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'...!!

* * * * * 


படங்கள்- கூகுள் 

வெள்ளி, நவம்பர் 9

அரசின் உதவி இன்றி ஒரு சாதனை - யார் இவர் ?!!

சாதிக்க பிறந்தவர்கள் சாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும்...! அவர்களின் சாதனை பலருக்கும் தெரிய வேண்டும், தெரியவைக்கப்பட வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்து திறமை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் நேர்மையாக வாழ்ந்து, பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.   தங்களின் சாதனையை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதை விரும்பாதவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.

எதற்க்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லிக்கொண்டும் அரசை விமர்சித்து எதிர்த்தும் பேசிக்கொண்டிருப்பதை விட துணிச்சலுடன் செயலில் இறங்கி சாதித்துக் காட்ட வேண்டும். அப்படியான ஒன்றை செய்து கொண்டிருக்கிறார் ஆம்ஸ்ட்ராங் பமே !! கிட்டத்தட்ட 100 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க ஏற்பாடு செய்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் !

யார் இவர் ?


மணிப்பூர் மாநிலம்  டமீலாங் மாவட்டத்தில்  ஜெமி என்னும் பழங்குடி  இனத்தை சேர்ந்த முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் திரு. ஆம்ஸ்ட்ராங் பமே, 2005 ஆம் ஆண்டு டெல்லி செயின்ட்  ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். தற்போது தன் சொந்த மாவட்டமான டமீலாங்கின் துணை கலெக்டராக உள்ளார். 

1993ஆம் ஆண்டு 9 வயதில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது படிப்பில் சிறந்து விளங்கிய இவர், எல்லா பாடங்களிலும் 90 சதவீத மதிப்பெண்களை எடுத்து  இரு முறை டபுள் பிரமோசன் பெற்றார்.

இவரது அறிவியல் ஆசிரியர் இவருக்கு 120 மார்க் வழங்குவார் என்றும் 100 மார்க் பாடத்திற்கும், 20 மார்க் தனது கையெழுத்துக்கும் வழங்கினார் என குறிப்பிடுகிறார்.


டமீங்லாங் மாவட்டம், மணிப்பூர்

இம்மாவட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. மக்களால் அவசரத்துக்கு மருத்துவரை சென்று பார்க்க இயலாது. மலைப்பாங்கான பிரதேசம் என்பதால் வெளியூர்களில் இருந்து மருத்துவர்கள் இங்கே வர மறுத்த நிலையில் கிராம மக்கள் சொல்லொண்ணா துன்பம் அனுபவித்து வந்தனர்.  

கடந்த வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் டைபாய்டு, மலேரியா காய்ச்சலால் இங்குள்ள கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களின் அவல நிலையை நேரில் பார்த்த இவர், தனது டாக்டர் நண்பர்களின் உதவியை நாடினார், அதில் ஒரு தோழி இந்த ஊருக்கு வந்திருந்து தேவையான மருத்துவ உதவிகளை செய்ய  சம்மதித்தார். அவரது உதவியால் 500 க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர், உயிர் பிழைத்தனர் என்றே சொல்லலாம். 

மக்களின் துன்பத்திற்கு சாலை வசதி இல்லாததே ஒரு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொண்டார்  ஆம்ஸ்ட்ராங்.

அரசின் கவனமின்மை 

1982ம் ஆண்டு, மத்திய அரசு 101 கோடி ரூபாய் பணத்தை இங்கு சாலை போடுவதற்காக  ஒதுக்கி, திட்டத்திற்கும் அனுமதியளித்தது.ஆனால், சாலைகள் போடப்படவில்லை...!!?  போன வருடம் டிசம்பர் மாதத்தில் மணிப்பூர் வந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாலைகள் போடப்படாததை பற்றி விசாரித்தற்கு அங்குள்ள மாநில அதிகாரிகள் உடனே சாலை போட்டு விடுவதாக உறுதி கூறினார்களாம். உறுதி அளித்ததுடன் இந்த முறையும் நின்றுவிட்டது சாலை போடுவதை பற்றிய அரசின் பேச்சுக்கள் !!??


இப்படி பட்ட நிலையில் இனி அரசின் உதவியை எதிர்ப்பார்ப்பதை விட நாமாக முயற்சி செய்வோம் என்று மக்களின் துணையுடன் வேலையில் இறங்கினார்.
குறைந்தது 150 கிராம மக்கள் தங்களுக்குள் முறை வைத்து தினமும் சாலை போடும் வேலையை பார்த்து வருகிறார்கள். புதர் அடர்ந்த பகுதிகளை சுத்தம் செய்வது, சிறு மண் மேடுகளை சமப்படுத்துவது  போன்ற பணிகளை மக்கள் மேற்கொள்ள, கரடுமுரடான பகுதிகளையும் , விழுந்து கிடக்கும் பெரிய மரங்களின் வேர் பகுதிகளையும் வெட்டி அகற்ற வாடகைக்கு அமர்த்திய  புல்டவுசர், JCB யை பயன்படுத்துகிறார்கள். 

நிதி வசதி 
டெல்லி பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரியும் இவரது  சகோதர் இவருக்கு உறுதுணையாக இருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்தும் , அரசு துறையில் பணியாற்றும் சில நல்ல அதிகாரிகள் ஆகியோரிடமும் நிதி பெற்றிருக்கிறார்கள். மேலும் இவரது குடும்பத்தினர்  அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, இளைய சகோதரன் மற்றும் இவரது சம்பளம் எல்லாமுமாக சேர்த்து மொத்தம் 4 லட்சம்  ரூபாய் பணம் செலவிட்டு இருக்கிறார்கள்.
முகநூலில் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் உதவி கேட்டதின் மூலமாக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1,20,000.00 ரூபாய் டொனேசன் கிடைத்திருக்கிறது.

டெல்லி, பூனா, பெங்களூரு, சென்னை, கௌகாத்தி, ஷில்லாங், திமாப்பூர் போன்ற ஊர்களில் டொனேசன் சென்டர்களை அமைத்து நிதி உதவி பெற்றிருக்கிறார்கள்.

இதை தவிர அந்த கிராம மக்களின் ஒத்துழைப்பும உதவியும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கு தகுந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பது, தங்க வசதி செய்து தருவது , இயந்திரங்களுக்கு டீஸல், பெட்ரோல் வழங்குவது என்று சுயநலம் சிறிதும் இன்றி உதவி இருக்கிறார்கள்.

மாதம் ஆயிரம் ரூபாய் பென்சன் வாங்கும் ஒரு முதியவர் தனது ஒரு மாத பென்சன் தொகையை இப்பணிக்காக கொடுத்துவிட்டு, "என் ஆயுளுக்குள் எப்படியாவது ஊருக்குள் மோட்டார் வாகனங்கள் வருவதை பார்த்துவிட வேண்டும் " என்று சாலைவசதி  வரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறாராம்...!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இப்பணி இடையில் கடுமையான மழை பொழிவினால் சிறிது தடைபட்டிருக்கிறது. பின் முழு வீச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 70 கி மி தூரப்  பணிகள் முடிவடைந்து விட்டது. இது மணிப்பூர் , அசாம், நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ளது !! 

இத்தகைய சிறந்த செயல் இன்னும் மாவட்டத்தின் வெளியில் இருக்கும் பலரால் கவனிக்கப்படவில்லை. அதை இவர்கள் பெரிது படுத்தவும் இல்லை, அரசாங்கத்தின் நிதி உதவி இன்றி தனி ஒரு மனிதனாக மேற்கொண்ட இம்முயற்சி  பொது மக்கள், நண்பர்கள் உறவினர்கள், போன்றோரின் துணையுடன் வெற்றிகரமாக செயல்பட்டு முடியும் தருவாயை நெருங்கிவிட்டது. வரும் டிசம்பருக்குள்  வேலை நிறைவடைந்து மக்களுக்கு கிறிஸ்மஸ் பரிசா இந்த சாலை வசதி இருக்கும் என்று  சந்தோசமாக நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆம்ஸ்ட்ராங் பமே அவர்கள் !

ஐ ஏ எஸ் ஆனால் தான் இதை எல்லாம் செய்ய முடியும் என்று இல்லை. நமது தகுதி, திறமை, வேலை, வசதிகளுக்கு ஏற்ற மாதிரி குறைந்த பட்சம் நாம் வசிக்கும் தெருவிலாவது ஏதோ ஒரு நல்லதை செய்யலாம்.  ஒவ்வொன்றுக்கும் அரசு செய்யும், அரசின் கடமை என்று சொல்லாமலும், நாமதான் வரி கட்டுறோமே என்று வரி கொடுப்பதே பெரிய உபகாரம்  என்பதை போல் நடந்துகொள்ளும் சராசரிகளாக இல்லாமல் இருப்போம் !!

நாம் வாழும் சமூகம், நாளை நம் குழந்தைகள் வாழபோகும் சமூகம் நன்றாக இருக்க வேண்டாமா ?! வாழ்நாளில் ஒரு மரம்  நடாதவர்கள் கூட நம்மிடையே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று ஒரு மரத்தையாவது நடுங்கள் !

தன் வீட்டை சுத்தப்படுத்தி அடுத்த வீட்டு வாசலில் குப்பையை கொட்டும் தேசிய பழக்கத்தை மட்டுமாவது இன்றே நிறுத்துவோம், நிறுத்த முயற்சியாவது செய்வோம்.

தமிழ்நாட்டிலும் பல கிராமங்கள் சாலை வசதி இன்றி இருக்கின்றன...மாணவர்கள் கல்வி கற்க பல கிலோ மீட்டர் தூரம் கல்லிலும் முள்ளிலும், ஆற்றை கடந்தும் பயணிக்கிறார்கள். இங்கும்  ஆம்ஸ்ட்ராங் போல ஒருவர் தேவைப் படுகிறார்...!!

திரு.ஆம்ஸ்ட்ராங் பமே அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். 

                                    வாழிய எம்  நாடு !! வாழிய எம் மக்கள் !!

                                                            * * * * *
Sources:

http://e-pao.net/epSubPageExtractor.asp?src=education.Jobs_Career.Armstrong_Pame_as_I_see
http://www.northeasttoday.in/our-states/nagaland/northeast-villagers-pool-money-to-build-road-set-christmas-deadline
http://articles.timesofindia.indiatimes.com/2012-11-03/india/34892690_1_tamenglong-village-motorable-road

photos: Google

செவ்வாய், நவம்பர் 6

இணையம் - ஒரு 'சின்'ன விவகாரமும், ஆணாதிக்கமும்...!!?

இணையத்தில் விவாதிப்பதற்கு காரச்சாரமாக ஒரு விஷயம் கிடைத்து ஒரு மாதம் ஓடிவிட்டது, இந்த ஒன்று பலவாகி, பலரையும் பலவிதத்தில் யோசிக்க,வசைபாட,விவாதிக்க,எழுதவும் வைத்துக்கொண்டிருக்கிறது... அவர்கள் எல்லோரின் புண்ணியத்தில் எனக்கு பூர்வ ஜென்ம ஞாபகமே வந்துவிடும் போல...!? :) அந்த அளவிற்கு பல தலைமுறை வரலாறுகளை தோண்டி கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எதைப்  பற்றிய பிரச்சனை என்பதே இந்த நிமிஷம் மறந்து பின்நவீனத்துவம்னா என்னனு யோசிச்சிட்டு இருக்கேன்.:) 

நண்பர் ஒருத்தர் கேட்டார், பெண் சம்பந்தப்பட்ட இதை பற்றி பெண் பதிவர்கள் அவ்வளவா ஏன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்று...ஆதரவாக, எதிராக, நடுநிலை என்று மூன்றில் எதையோ ஒன்றை சார்ந்து பேசணும் இல்லைனா மௌனமா இருக்கணும். இந்த விசயத்தின் ஆரம்பம், முடிவு பற்றி எதுவும் தெரியாமல் என்னனு எழுத??!  (சம்பந்தப்பட்ட அத்தனையும் படிச்சிட்டு பதிவு எழுதணும்னா எனக்கு இரண்டு மாசம் ஆகும்) :) நான் பதிவுலகம் வந்த புதிதில் ஒரு பெண் பதிவரை சுற்றி பாலியல் சார்ந்த கருத்து மோதல்கள், சாதியை சாடுதல் என பிரச்சனைகள் பல கட்டங்களில் நடந்தேறின. இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இது பெண் பதிவரின் குடும்பத்திலும் எதிரொலித்து பிரச்னை பெரிதானது. இணைய உலகில் இது போன்றவையும் நிகழும் என்ற யதார்த்தம் அப்போது புரிந்தது. அதே போல் சமீபத்திய விஷயம் இன்று பலருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. எனது சொந்த(?) தளம் எதுவும் எழுதுவேன் என்று இனி சொல்ல கூட ரொம்ப யோசிக்கணும் போல !?  

இந்த பிரச்னையை பேசவோ, விவாதிக்கும் அளவிற்க்கோ எனக்கு விவரம் போறாது. அதற்குள் போகவும் விரும்பவில்லை. ஆனா இந்த பிரச்சனையை வைத்து ஒரு சிலர் சொல்லும் கருத்துக்கள் ஆண் பெண் என பிரித்து பார்பதாகவே இருக்கிறது. யாராக இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்தை விவாதிப்பது என்று இல்லாமல் எழுதியவரை தாக்குவது குறித்த என் வருத்தத்துடன் கூடிய  ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பேதம் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஆண் பெண் பேதம் பிரித்தும் பெண் என்றால் பாலியல் ரீதியாக விமர்சிப்பது என்பதும் மிக கேவலம், கண்டிக்கப்படவேண்டும். இச்செயல் படித்தவர்களிடத்தில் மிகுந்திருப்பது கொடுமை !! பணம் சம்பாதிக்க, அறிவை வளர்க்க பயன்படும் கல்வி, ஒழுக்கத்தை போதிக்கிறதா அல்லது அந்த போதனை அலட்சியபடுத்தபடுகிறதா ?!

முகநூலில் ஒரு பிரபல பெண்மணி ஒருவர் நடுநிலையாக பேசுகிறேன் என்று எழுதிய அந்த நோட்ஸில்  முழுக்க முழுக்க ஆண்களின் மீதான தாக்குதல் மட்டுமே அதிகம். அங்க சுத்தி இங்க சுத்தி தவறுகள் அத்தனையையும் தூக்கி ஒருசாராரின் மீது போடுவது எப்படி நடுநிலைமை ஆகும்...??!

ஆண்  பெண்ணை வசைபாட முதலில் தேர்ந்தெடுக்கும் வழி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் என்கிறதாம் பெண்ணிய உலகம்...??!!

அதனால் இனிமேல்,

சாதி, மதம், மொழி போன்ற பிரச்சனைக்குரிய தலைப்புகளின் வரிசையில் ஆண்களையும் சேர்த்து விடலாம் போல ...!

ஒருவர் இப்படியா பேசினார் ?! எப்படி பேசலாம் ?! என்று பாலினம் ரீதியாக மட்டும் பார்த்து பேசுவது சரியா ?!

இணையம் மூலமாக ஒரு சில வரிகளில் எவ்வளவு பெரிய பிரபலங்களையும் நெருங்கிவிடமுடியும், அதிகம் நெருங்கினால் வம்பில் முடிந்து வாழ்வே கேள்வி குறியாகிவிடும் என்பதை தற்போது காலம்  எச்சரிக்கிறதா ?!

அவ்வளவு பெரிய குற்றமா ?

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் தவறுகள் இருக்கிறது, அதற்கு சிறைத் தண்டனை என்பது மிக அதிகம் என்பதே எனது புரிதல். தெருவில் ஒரு பெண் மானபங்கபடுத்தபடும் போது  வேடிக்கை பார்க்கும் கூட்டமும்,  காவல் நிலையம் வரை பந்தாடப்படும் பெண்மை பற்றி கூட பெரிதாக கவலைபடாதவர்கள் தானே நாம்...

பெண்ணுக்கெதிராக அரங்கேறும் கேவலங்கள் தான் எத்தனை எத்தனை ?! அருவருக்கச்செய்யும் அவலங்கள்,கொடுமைகள் பார்த்து  கலங்காத மக்கள், அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை கூட கள்ளகாதல் என்று நாமகரணம் சூட்டி அதிலும் பெண்ணை மட்டுமே சாடும் விவஸ்தைகெட்ட சமூகம் !! பெண் கெடுக்கப்படுகிறாள் என்றால் அவளது சம்மதமும் அதில் இருக்கிறது என்று வாய்கூசாமல் சொல்பவர்கள் வாழும் சமூகத்தில், எழுத்துக்கள் மன உளைச்சலை கொடுத்ததால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் புகார் என்பதும் அதுக்கு சிறைத்தண்டனை என்பதும் வினோதம் !

தண்டனை சரியென்றால் இதுவரை இங்கே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் நீதி கிடைத்திருக்கிறதா? இப்போது ஊடகம் எங்கும் ஒரே பேச்சாக பேசப்படும் அளவிற்கு பிற விசயங்கள் பேசப்பட்டிருக்கிறதா?  காரணங்கள் என்னவேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், பெண் என்றால் பெண்தான். இன்று அந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து பொங்குகிறவர்கள் பிற பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடன் நின்றிருக்க வேண்டுமே...??!

பெண்களுக்கெதிராக  நடக்கும் பல பெரிய மோசமான கொடுமைகளுக்கு மத்தியில் இந்த விவகாரம் எனக்கு சிறியதாகவே தெரிகிறது.

சாதி,  மதம், இனம் என்பதன் முழுமையான புரிதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்படுதல் மட்டுமே இன்று மேலோங்கி நிற்கின்றது. இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற விதிவிலக்கு இல்லை. சாதியை குறித்து ஏதும் கருத்து வந்தால் என்ன ஏது என்று தீர யோசிக்காமல் ஆவேசகருத்துக்களை அள்ளி விடுபவர்கள் அதிகம். கல்வி, அரசியல் , சமூகம் என்று அனைத்து இடத்திலும் சாதி பெருமைகள் கொண்டாடபடுகிறது. அதன் அடிப்படையில் வளரும் மாணவர்களின் நிலை சுயநலத்துடன் கூடிய ஒன்றாக மட்டும் இருக்கிறது. தனது கல்வி, தனது வாழ்க்கை , தன் சந்தோசம் என்ற குறுகிய வட்டத்தில் சுற்றிவர சாதி உதவலாம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல...?!

சக  மனிதனை மதித்து அன்பும் அக்கறையும் செலுத்தும் மனப்பான்மை தற்போது குறைந்து சுயநலம் மிகுந்திருப்பதால் யார் என்ன சொன்னாலும் அதை குறையாக மட்டுமே பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நல்லவை குறைந்து தீயவை நிறைந்துவிட்டது. 

எது கருத்து சுதந்திரம் ?

சக மனிதனை பாதிக்காத எந்த கருத்தையும் தெரிவிக்கலாம், அதுதான் கருத்து சுதந்திரம் அப்படின்னு நினைக்காதிங்க. தனக்கு என்ன சொல்ல வருதோ அதை சொல்லலாம் அதுதான் கருத்து சுதந்திரம்...!!!!? ஒரு விஷயத்தை பலவிதமாக திரித்து கூறுவது, ஆபாசமாக கருத்திடுவதை நியாயபடுத்துவது, எழுதிய கருத்தை அழிப்பது, வக்கிரமாக வன்மமாக பேசுவது, வேறு பல பெயரில் ஒளிந்து கொண்டு கருத்திடுவது, சாதி, மதம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு பேசுவது இது எல்லாமே கருத்து சுதந்திரத்தில் சேரும் என்கிறார்கள். மொத்தத்தில் எதன் அர்த்தமும் புரியாத ஒரு குழப்பத்தில் நான் !!

ஒருவருக்கு சாதாரண வார்த்தையாக இருப்பது பிறருக்கு மிக ஆபாசமான வார்த்தையாக தெரியும். அது போன்றவைகளை கேட்டு பழகாத சூழலில் வளர்ந்திருக்கலாம். ஊருக்கு ஒரு தமிழ்,  சென்னையில் வா போ என்றால் சாதாரணம், ஆனால் இங்கே,  என்ன'ப்பா' என்றால் 'நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா?' என்கிறார்கள். வார்த்தைகளை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அழுத்தமாக சொல்கிறது தற்போதைய பிரச்சனை !

எதிரான கருத்து ஒன்று எங்கோ வெளியிடப்படும் போதும், அது ஒருவேளை தன்னை குறித்துத்தானோ என்ற சந்தேகமே பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம் என்பது  பதிவுலகில் சகஜம்.  நம்மை குறித்த தவறான கருத்துக்களுக்கு பதில் சொல்லிகொண்டிருப்பது பிரச்சனையை அதிகரிக்குமே தவிர குறைக்காது .

முகநூல், பிளாக், டுவிட்டர் எதாக இருந்தாலும் நாம் முன் வைக்கும் கருத்துக்களை வைத்துதான் நாம் அறியபடுகிறோம். நம்ம சொந்த தளம் நான் எதுவும் சொல்வேன் என்ற ரீதியில் கருத்துக்கள் இருந்தால் பிறரும் அதே ரீதியில் தான் நடந்துகொள்வார்கள். பிறரது கருத்துக்கள் பிடித்தால் ஏற்றுக்கொள்வதும், பிடிக்கவில்லை என்றால் நிராகரிப்பதும் நமது உரிமை என்பதை நினைவில் வைத்துகொள்வது நம் மனதிற்கும் உடலுக்கும் நல்லது !

பெண்களே

ஆண்களை குறை சொல்றப்போ தவறாம பெண்கள் நாம சொல்றது 'உங்க அக்கா, தங்கை, அம்மா பத்தி கூட இப்படித்தான் பேசுவீங்களா?' என்று... ஆண்களை ஒட்டுமொத்தமாக மோசமானவங்க,ஆணாதிக்கவாதிகள், பாலியல் துன்புறுத்தல் பண்றவங்க என்று சொல்லும் போது நம்ம வீட்லயும் அப்பா,சகோதரன்,கணவர், மகன் என்று இருப்பார்களே அப்போ அவர்களையும் சேர்த்து தான் சொல்றோமா ?!

இதுவரை ஆண்கள் யாரும் பெண்களை பார்த்து இப்படி கேட்டார்களா என தெரியவில்லை !!?

இதுவும் ஆணாதிக்கம் ??!

தற்போது நடந்த பிரச்சனையிலும் இது முழுக்க ஆணாதிக்கம் அடிப்படையிலானது என்று கூறப்படுவது தவறு. பெண்ணை பற்றி ஆண் பேசினாலே அது ஆணாதிக்கம் என்று முத்திரை குத்தபடுவதை எண்ணி வருந்துகிறேன். இந்த பெண்ணியம் பேசுபவர்கள் எந்த ஒரு விசயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும் என்பதையே பார்க்க மாட்டார்களா ?! ஆணாதிக்கம் என்ற கண் கொண்டு மட்டுமே பார்ப்பதால் உண்மையில் அந்த ஆண் எதை குறித்து சொல்ல வருகிறான் என்பதன் உட்கருத்து, பொருள் புரிந்து கொள்ளபடாமலேயே போய் விடுகிறது...!!? சமயங்களில் சிறந்த பொருள் பொதிந்த வாதங்களும் திசை மாறி போய்விடுகின்றன...!! 

ஒரு பெண்ணை அதிகபட்சமாக இழிவு படுத்த எவரும் கையில் எடுக்கும் ஆயுதம் பாலியல் ரீதியிலான கருத்திடல் . இதை ஆண்கள் மட்டும் செய்வது இல்லை, பெண்ணே மற்றொரு பெண்ணை அப்படி பார்க்கலாம், பேசலாம். இதை யாரும் ஆணாதிக்கம் மாதிரியான கருத்து என்று வசைபாடுவதில்லை, அதே சமயம் ஒரு ஆண் கூறும் போது மட்டும் ஏன் ஆணாதிக்கம் என்று பெரிதாக கூச்சலிட வேண்டும்...?

ஒரு ஆணை எதை சொல்லி, எந்த இடத்தில் தட்டினால் அவனுக்கு வலிக்கும் என்று ஒரு பெண்ணுக்கு நன்றாகவே தெரியும். இரக்கத்தை சம்பாதிக்க தன் விருப்பத்தை பூர்த்தி செய்ய எந்தவிதமாக பேசவும் சிலரால் முடியும். பெண் என்பதால் சலுகை கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்பில் அதிகம் அடிபடுவது ஆண்கள் தான்.  ஆண் ஒரு பெண்ணை பழிவாங்க வார்த்தைகளை பிரயோகிப்பது முதலில் அவளது உடலை நோக்கி என்றால் ஒரு சில பெண்கள் கையில் எடுப்பதும் அதே உடலை(வைத்துத்தான்) நோக்கிதான்  என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை !!?   

சுயபரிசோதனை

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள்  ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் கருத்துகளை அள்ளித் தெளிக்கிறார்கள். எப்போதோ தாங்கள் பட்ட காயத்திற்கு இப்போது மருந்திடுகிறார்கள் போலும். ஆனால் இணையத்தில் இயங்கும் அனைவரையும் நன்றாக சுய பரிசோதனை செய்ய வைத்திருக்கிறது டுவிட்டர் விவகாரம் ! பேசத் தெரியும் என்பதற்காக எதையும் பேசலாம் என்று கண்டபடி உளறிக்கொட்டிக் கொண்டிருந்தவை இனிகுறையலாம்.
ஆண் பெண் இருவரும் தங்களின் எல்லை, நிலை, தகுதி அறிந்து நடந்து கொள்வது அவசியம். அது வீடாக இருந்தாலும் சரி பொதுவெளியாக இருந்தாலும் சரி! பகுத்தறியும் சுயசிந்தனை அற்று வார்த்தைகளை வீசுவது பூமாராங் போல திரும்பி வந்து தாக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்வது நலம்.

பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட தங்கள் நிலை உணர்ந்து மனிதநேயம் என்ற ஒன்றை மட்டுமே எண்ணி விட்டுகொடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது ஒன்றே இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமே, பிறரை தூற்றவோ, பழிவாங்கவோ  இல்லை. பிறரையும் நோகடித்து தானும்  மன அழுத்தத்தில் விழும் இது போன்றவை இனியும் நிகழாமல் இருக்கவேண்டும். 

சிலரின் சுயநலம், பலரின் தூண்டுதல் என மாறி மாறி சொல்லப்படும் கருத்துக்களால் பிரச்சனை இன்னும் பெரிதாகாமல் விரைவில் நல்லதொரு முடிவுக்கு வரவேண்டுமென  இறைவனை வேண்டுகிறேன்.


பிரியங்களுடன்
கௌசல்யா




படம்  -நன்றி கூகுள்

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...