சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 17

கூடன்குளம் - ஒரு நேரடி பார்வை




கூடன்குளம் தனது அடுத்த போராட்டத்தை தொடங்கி போராடிக்  கொண்டிருக்கிறது. இதை  போராட்டம் என்று சொல்வது கூட முரணோ என தோணுகிறது. ஒழுங்குடன் மிக நேர்த்தியாக அமைதியாக கட்டுபாட்டுடன் நடக்கும் ஒன்றை போராட்டம் என்று சொல்வதைவிட மக்களின் எழுச்சி  எனகூறுவது பொருத்தமாக இருக்கும். புத்தியில் போராட்டம் என்றால் அடிதடி ஆர்பாட்டம் என்றே பதியப்பட்டு இருக்கிறதே!? கூடன்குளம் மக்களை குறித்தும், முன்னெடுப்பவர்களை பற்றியும் ஏகப்பட்ட வதந்திகள்...ஊடகங்கள் ஒரு பக்கம் திசை திருப்புகிறது என்றால் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் சிலர் வாய்க்கு வந்ததை சொல்லி திரிகின்றனர்.(தமிழ் நண்டு கதை இப்போ ஏனோ நினைவுக்கு வருகிறது...!!?)

பல வதந்திகள் உலவினாலும் முக்கியமான சில இங்கே...

* அணுஉலையில் வேலை செய்தவர்களை அடித்து ஊரைவிட்டு அனுப்பி  வைத்ததாகவும்... 

* சாலையில் வண்டிகள் செல்ல வழிவிடாமல் நடுரோட்டில் கற்களையும், முட்களையும் போட்டு வைத்திருப்பதாக, அதனால் தான் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும்...

* ஒரு மத சாரார் தங்களை முன்னிலை படுத்தவும்...
  
* முக்கியமாக அமெரிக்காவில் வசித்தவர், உண்ணாவிரதத்தின் முன்னால் நின்றதால் அமெரிக்காவின் கைக்கூலி இவர் என்றும்...! 

* மக்களை போராட சொல்லி ஒரு சிலர் வற்புறுத்துவதாக, யாரையும் வேலைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக...

* பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவதாகவும்... 

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

அங்கே அப்படி என்ன அசாதாரண நிலை நிலவுகிறது என்று அறிய நானும் என் கணவரும் நேற்று நேரில் சென்றோம், ரோட்டில்  கற்கள் போடபட்டிருக்கிறது பெரிய வாகனங்கள் செல்லாது என்று கேள்விப்பட்டதால்(?) கார் வசதிபடாது என்று பைக்கில் இருவரும் கிளம்பினோம்...(இது தவறான முடிவு என்று அப்போ தெரியல !)நெல்லையில் நாங்கள் இருக்கும் இடத்தில இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கூடங்குளம். இரண்டரை மணிநேர பயணம், கடும் வெயில் அப்படியே தலையை சூடாக்க வழி நெடுக குளிர்பானம் பருகி வெயிலை சமாளித்து(வென்று) கூடங்குளத்தை அடைந்தோம். 

ஊரை அடைந்ததும் எங்களை வரவேற்றது அங்கே ஓரமாக கிடந்த கற்கள்...!?  ஊர்முழுதும் ரவுண்டு அடித்தோம். வேறு எந்த அதிகபடியான வித்தியாசமும் எங்களுக்கு தெரியவில்லை. வெகு இயல்பாக இருந்தது ஊர். முதலில் கூடல் பாலாவை பார்க்க சென்றோம்...(இதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்)

பெண்கள் கூட்டம் அல்ல வெள்ளம்  


பின் அவரிடம் இருந்து விடைபெற்று கொண்டு மக்கள் கூடி இருக்கும் இடத்திற்கு சென்றோம். போடபட்டிருந்த பந்தல்களில் பெண்கள் கூட்டம் மிக அதிகம். இரு பெண்கள் சேர்ந்து இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும்...ஆனால் இங்கே பல ஆயிரம் பெண்கள் சிறிதும் சத்தமில்லை...ஒருவருக்கு ஒருவர் பேசுகிறார்கள் ஆனால் சத்தம் கேட்கவே இல்லை...!! 

நாங்கள் சென்ற நேரம் கேரளா திரிச்சூரில் இருந்து ஒரு பெண் கல்லூரிவிரிவுரையாளர்  வந்திருந்து மைக்கில் பேசிகொண்டிருந்தார்...அவரது மலையாள பேச்சை ஒருவர் மொழி பெயர்த்தார், மொழி பெயர்க்க தேவையும்  இருக்கவில்லை,அனைவருக்கும் மொழி புரியவே செய்தது. மொழி வேறாக  இருந்தாலும் மனித உணர்வுகள் ஒன்றுதானே... அவர் 'கேரளமக்கள் உங்கள் கூட இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு, மூடும் வரை ஓயமாட்டோம் ஓயமாட்டோம்' என்று கூற மக்களும் அதை தொடர்ந்து கூறினார்கள். மக்களின் குரல், கைதட்டல் இரண்டும் மிக மெதுவாகவே கேட்டது. (மக்கள் அதிகம் உணர்ச்சிவசபடவில்லை என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது)  நெருக்கமாக அமர்ந்து இருந்தாலும் அமர்ந்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள், சிறிதும் சலனமின்றி...


பெண்கள் அருகில் சென்று நான் நின்று கொண்டிருந்தேன், அமர்ந்திருந்த மூன்று பெண்கள் என்னை உட்காரசொல்லி நிழலில் இடம் ஒதுக்கி தந்தனர். கடல்மணலில் அமர்ந்து அமைதியாக ஒவ்வொருவரின் பேச்சையும் கவனித்து கொண்டிருந்தேன். அவர்களிடம் பேசியதில் இருந்து சில.....

காலை ஒன்பது மணிக்கு இந்த பந்தலுக்கு வந்து விடுகிறார்கள். மாலை ஐந்து அல்லது ஆறுமணி வரை இருக்கிறார்கள். இத்தனை மணிக்கு வந்தாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் யாருக்கு விதிக்க படவில்லையாம். அவர்களின் சூழ்நிலைகளை பொறுத்து எப்பவும் வரலாம் போகலாம். வலியுறுத்தல் இல்லை. 

இதை நேரிலும் நான் பார்த்தேன்...கோவில் திருவிழாவிற்கு வருவதை போல உற்சாகமாக கூட்டங்கூட்டமாக நடந்து வந்துகொண்டே இருந்தார்கள்... இரவிலும் நிறைய பேர் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். ஒரு பெண்ணிடம், 'தண்ணி, மற்ற வசதிக்கு என்ன பண்ணுவீங்க' என்று கேட்டதும்  ஒரு இடத்தை சுட்டி காட்டினார்...அங்கே இருக்கிறது என... 

அப்போது ஒரு தனியார் பஸ்ஸில் பக்கத்து ஊரில் இருந்து மக்கள் வந்து இறங்கினர். அதை பார்த்ததும் 'அப்ப பிற பஸ்கள் ஏன் வருவது இல்லை' என்று கேட்டதற்கு, 'அது தெரியலைங்க' என்று அப்பாவித்தனமாக கூறினார் ஒரு பெண்மணி.

விவசாயம் தான் இவர்களது முக்கிய தொழில். கூடன்குளத்தை  பொறுத்தவரை இப்பூமி மழை மறைவு பிரதேசம்...வேறு முக்கிய வேலைகள் இல்லாததாலும், மின்சாரம் இங்கே உற்பத்தி செய்யபட்டால் அதனை சார்ந்து வேறு பல தொழிற்சாலைகள் இங்கே உருவாகும், வேலை வாய்ப்புக்கு பஞ்சமிருக்காது என்கிற நியாயமான எதிர்பார்ப்பு அணுஉலை இங்கே அமைய காரணங்கள். அணு உலையிலும் வேலை கிடைக்குமே என்பதும் ஆரம்பத்தில் மக்கள் அமைதியாக இருந்ததுக்கு ஒரு காரணம். இவ்வூர் மக்கள் நாற்பது பேர் மட்டும் அங்கே நிரந்தர வேலையில் இருக்கிறார்கள்.

இடிந்தகரையில்


ஒரு மணி நேரம் அங்கே இருந்துவிட்டு அடுத்து இடிந்தகரை ஊருக்கு சென்றோம். சர்ச் முன்னால் பலர் உண்ணாவிரதம் இருந்தனர். படுத்துக்கொண்டும் அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனர். எங்களை பார்த்ததும் நீங்க எங்கிருந்து வரீங்க ? எந்த இயக்கம்(?) எதுக்கு வந்திருக்கீங்க என்று தொடர் கேள்விகள் கேட்டார் ஒருவர். கேள்விகளுக்கு பின்னே இருந்தவை எங்களுக்கு ஓரளவு தெரியும் ஆதலால் பொறுமையாக 'சும்மா சுத்திபார்க்க வந்தோம்' என்றோம். அவதி பட்டவர்களுக்கு தான் தெரியும் அதன் வேதனை ! வெளியே போடபட்டிருந்த பந்தலில்  ஊர் மக்கள் அமர்ந்திருந்தனர்.

இங்கிருந்து சில அடிகள் தூரத்தில் கடல் இருந்தது.மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் அனைத்தும் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்து பார்க்கும் போது அணுஉலை மிக அருகில் தெரிந்தது. 

கடல் நீரில் சிறிது நேரம் நின்றேன்...'மனிதர்களின் எந்த உணர்வை பற்றியும்  எனக்கு அக்கறை இல்லை, இக்கரையை தொடுவது ஒன்றே என் வேலை' என்பது போல் இருந்தது வேகமாக ஓடிவரும் அலைகளை பார்க்கும் போது !  

வெளியே இருக்கும் சிலர் இந்த விசயத்திற்கு மதசாயத்தை பூசுகிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் இவர்களை வேறுபடுத்தவில்லை...அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள்.உண்ணாவிரத்தின் போது சர்ச்சில் காலையில் நடக்கும் பிராத்தனையில் இந்துக்கள் கலந்துகொள்கிறார்கள்...! இங்கே நடைபெற்ற விசுவாமித்திரர்  யாகத்தில் பாதிரியார் கலந்துகொண்டிருக்கிறார் ! 




என்ன முடிவு செய்யபோறாங்க?

'அணுஉலையால் ஆபத்தில்லை' 'உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்பதற்கு  எந்த உத்தரவாதமும் இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை.இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை கொடுக்கப்படும் வரையாவது அணுஉலை வேலைகளை நிறுத்தி வைக்கலாம் என்பதை ஏன் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை...?!

கணினியின் முன் அமர்ந்து ஆயிரம் சமாளிப்புகள், சப்பைக்கட்டுகள்,வாதங்கள் ,கருத்துக்கள் பேசலாம் ஆனால் நேரில் அந்த மனிதர்களை பார்க்கும்போது ,அந்த சூழ்நிலையில் சிறிது நேரம் இருந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள், உண்மையில் அதை எழுத்தில் எழுத எனக்கு தெரியவில்லை. மனிதம் அதன் உணர்வுகள் எங்கே என்றாலும் அது மதிக்கப்படவேண்டும்...மனிதன் சுகமாய் வாழவே இந்த மின்சாரம், அதுவே மனிதர்களின் கலக்கத்திற்கும், உயிரினை அச்சுறுத்தும் இடமாக இருக்கிறது என்கிறபோது கைவிடுவதை பற்றி யோசிப்பதில் தவறு என்ன இருக்கிறது...?!!

மனிதத்தை கொன்று மனிதனை வாழவைப்பதை பற்றி பேசுவது  வேடிக்கையாக இருக்கிறது !

அந்த அப்பாவி உயிர்களை அச்சுறுத்தி, பீதியுடன் வாழச்செய்து பெறக்கூடிய மின்சாரம் எதை பூர்த்தி செய்ய...? எதை வளமாக்க ? எதன் விருப்பத்தை நிறைவேற்ற ?  
   
யோசிக்குமா அரசாங்கம் !!?

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இதையும் படித்துவையுங்கள் kudankulam2011

பின்குறிப்பு 

பதிவர் கூடல்பாலாவிற்கு என்ன ஆயிற்று ?! அடுத்த பதிவில் பார்க்கலாம்.

  

செவ்வாய், ஜூலை 19

பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

முன்னுரை :

மரங்களை வெட்டுங்கள் என்று ஒரு பதிவை போன வருடம் இதே ஜூலை மாதம் எழுதினேன். அந்த பதிவு பலருக்கும் பதிவுகளாகவும், மெயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றும் பகிர்ந்துகொள்ளபட்டு வருகிறது. கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் இந்த பதிவு பல்வேறு தளங்களில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது...இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த மரத்தின் நச்சுத்தன்மை பற்றிய ஒரு விழிப்புணர்வு பலரிடம் சென்று சேர்ந்தது என்பதை குறித்து எனக்கு ஒரு நிறைவு. ஆனால் அது மட்டும் போதாது... அதில் ஒரு சிலர் பின்னூட்டத்தில் கருவேல மரம் என்பது மருத்துவத்திற்கு உரியது, நல்ல மரம் தானே என்று சந்தேகத்தை எழுப்பினர்...அதற்கு ஒரு விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.
            
மண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.

நல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிய வேண்டும் !

இரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துகொள்வது அவசியம்.

கருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica).  இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது. 

இம்மரத்தினை பற்றி மேலும் தகவல்கள் தேவை எனில் இங்கே சென்று பார்க்கவும்... 


   மரம் 

இலை, பூ 

                                                                                                  காய் 

* நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும். 

                                                                              மரம் 
                                                                       

                                                    இலை, பூ 
                                  
                                                                            காய்

இம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது.

பெரிய பாதிப்புகள் 

நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.

புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. 

இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி  விடுகிறது ! ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...!!?  

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.  

விறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!

அடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.

* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.

* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய ?!!

இன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா ??

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.

கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின்   தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்...!

உடனடி தேவை : வரையறுக்கப்பட்ட திட்டம் 

அறிவொளித்திட்டம் கொண்டுவந்த போது நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நச்சுமரத்தை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் அவசியத் தேவை.

இம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்...இதன் புகை கூட நமக்கு பகை ! 

நமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்...மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது.....ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது !!?

உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)


கெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் !! 

தலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் !

இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.

மரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்... 

 'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் !! 

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த  முழு அளவில் உதவி செய்யவேண்டும்.

கடைசியாக ஒரு கேள்வி

இம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன ??!!

சில ஆதாரங்கள் 

http://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Prosopis_juliflora.html

எனக்கு தெரிந்தவனவற்றை பகிர்ந்திருக்கிறேன், இன்னும் தெளிவான ஆதாரங்கள் நன்மை/தீமை எது இருப்பினும் அறிய விரும்புகிறேன்...மேலும் விவரங்கள்/தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...


"நச்சு மரத்தை பற்றிய இந்த தகவல்கள் /விவரங்கள் பலரையும் சென்றடைய உங்கள் தளங்களில் இந்த பதிவை வெளியிட்டும், மின் அஞ்சல் செய்தும் கூகுள் பஸ்சிலும், முக நூலிலும் பகிர்ந்து  உதவுவீர்களாக !"




*********************************************









வெள்ளி, மார்ச் 18

ஜப்பான் அணு உலை வெடிப்பு - ஒரு விஞ்ஞானியின் பார்வையில் !



ஜப்பானில் அணு உலை விபத்து நிகழ்ந்து அதன் மூலம் உலகின் பல  நாடுகளிலும் கதிரியக்கம் பரவுவதாக பல வதந்திகள் வலம் வருகின்றன. மீடியாக்கள் தங்கள் பங்குக்கு எதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கணும் என்பதை விடுத்து திரித்து சில செய்திகளை மட்டும் பெரிதாக்கி வெளியிட்டு வருகின்றன. வழக்கம் போல மக்கள் இப்போ அரசியல்வாதிகள் பண்ணும் கூட்டணி கூத்துக்கு சிரிக்கவா ? இந்த கதிரியக்கம் பற்றி கவலைபடுவதா என்ற யோசனையில் இருக்கிறார்கள். அரசியல் குழப்பத்தை தெளிவு படுத்த என்னால் இயலாது ஆனால் இந்த கதிரியக்கம் பற்றி எனக்கு வந்த ஒரு முக்கிய தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. அதாங்க விழிப்புணர்வு. தொடர்ந்து பதிவை படியுங்கள்...உங்களுக்கு வேறு தகவல் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் போதும், அதைப்பற்றிய பல புரளிகளை கிளப்பிவிட்டுவிட்டு மக்களை குழப்பத்திலும், தேவையற்ற சஞ்சலங்களிலும் ஆழ்த்துவதில்தான் நம்மவர்களுக்கு எவ்வளவு இன்பம்?! இப்படித்தான் 2000 ஆண்டு உலக அழிவுன்னு சொன்னாங்க, அப்புறம் மிகச்சமீபத்துல 2012, 21 டிசம்பர் அன்றைக்கு உலகம் அழியப்போகுதுன்னு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அது இன்னும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில இப்போ அணு உலை பாதிப்புகளால் நிலைகுலைந்துபோயுள்ள ஜப்பான். அணு உலை இருக்கும் கட்டிடங்களின் கூரைகள் வெடித்ததை அணு உலையே வெடித்துச் சிதறிவிட்டது, அதனால் சுற்றுச்சூழலில் கதிரியக்கம் பரவி, உலகெங்கும் அமில மழை பெய்யப்போகிறது ஜாக்கிரதை என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி ஜப்பான் நாட்டு சுக்குபா நகரில் பணிபுரியும்  இந்திய அணு விஞ்ஞானி திரு.அனிர்பன் பந்தோப்தியாய ஒரு விளக்கமளித்திருக்கிறார். அது பின்வருமாறு......

சுனாமி தாக்கியதும் ஜப்பானில் உள்ள அணு உலைகளின் உற்பத்தி உடனே நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்க தொடர் வினைகள் எதுவும் அதில் இருக்காது. தொடர் வினைகள் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே அணு உலை வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு. எனவே ஜப்பானின் அணு உலை வெடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. செர்னோபில்  விபத்து போன்றதொரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை. தற்போது ஜப்பானில் உள்ள  அணுமின் நிலையத்தில் வாயுக்கள் வெளியாவதாலும், சுற்றுப்புற தட்ப வெட்ப மாற்றங்களாலும் கட்டிடங்களின் கூரைகள் மட்டுமே தற்போது வெடித்துள்ளன. அணு உலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்கம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் அணு உலை சூடாவதும், கதிரியக்கம் வெளியாவதும் இரு வேறு தனி தனி  நிகழ்வுகள்.

மேலும் நாம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம், காற்றில் கதிரியக்கம் பரவுவதை பற்றி வெளிவரும் செய்திகள். நாம் சில அடிப்படையான விசயங்களை அறிந்து கொண்டால் இதை பற்றி வரும் வதந்திகளை பற்றி கவலைபடவேண்டாம். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நம் உடல் உறுப்புகளை தாக்கும் கதிர்வீச்சுகளில் அயோடின் கதிர்வீச்சு மட்டுமே ஆபத்தானது.

யுரேனியம் போன்றவை, உடனடியாக எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது.தொடர்ந்து மிக மிக அதிக அளவிலான கதிர்வீச்சு உடலில் பட்டு வந்தால் மட்டுமே உடல்நல பாதிப்புகளை உருவாக்கும்.ஜப்பானிலுள்ள ஆறு அணு உலைகளில் உள்ள மொத்த யுரேனியத்தின் அளவு அதை விட குறைவாகவே இருக்கும்.

அயோடின் கதிர்வீச்சு பற்றிய  சில உண்மைகள்.

எதிர்காலத்தில்  இதனால்  நமக்கு பாதிப்பு   வரலாம்  என்றும் அதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோடின் சத்து குறைபாடு நமக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் உடம்பில் அயோடின் சத்து குறைவாக இருந்தால், அப்போது காற்றில் உள்ள அயோடினை நம் உடம்பு உறிஞ்சும். அப்படி உறிஞ்சப்படும் அயோடினில் கதிர்வீச்சு இருந்தால் நம் உடல் பாதிக்கப்படும்.

எனவே அயோடின் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால் நலம், கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். 

(இந்த தகவல்கள் எனக்கு ஆங்கிலத்தில் வந்தது)

தமிழாக்கம் உதவி - திரு. சங்கரலிங்கம், உணவு உலகம் 
படம் உதவி - கூகுள்

Sharing with you the information related to Explosions at Fukushima Nuclear Reactors received from one of Indian Scientists by name Dr. Anirban Bandyopadhyay working in Tsukuba, Japan.



அணு உலை வெடிப்பா அல்லது அணு உலை கட்டிடங்களின் கூரை வெடிப்பா என்பதை  பற்றி ஜப்பானில் வாழும் தமிழகத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் தனது தளத்தில் மிக தெளிவாக எழுதி இருக்கிறார். தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புவர்கள் அதனை படித்து பாருங்கள். அத்தளத்தின் லிங்க் இங்கே 




திங்கள், ஆகஸ்ட் 16

மின்சாரம் - மகிழ்ச்சியான செய்திகள்

நம் நாட்டில் இப்ப இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றுதான் 'மின்தட்டுப்பாடு'.  நம்ம அரசும் என்ன என்னவோ முயற்சி செய்தாலும் (உண்மை தாங்க ) இதை மட்டும் சரி படுத்தவே  முடியவில்லை...??!! தினம் இரண்டு மணி நேரம் இல்லை மூணு மணி நேரம் விருப்பம் போல் கரண்ட் கட் தான். ஆனால் மின் உற்பத்திக்காக பல இடங்களில் மின் காற்றாலைகளை  நிறுவி வந்தாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. ஆனால் மின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை இங்கே பார்க்கலாம். 

அதில் முக்கியமான ஒன்றுதான் 'மரபு சாரா எரிசக்தி'. அதாவது விவசாய கழிவுகள், நெல் உமி, தேங்காய் மட்டை, காடுகளின் கழிவுகள், கோதுமை கழிவு, குப்பை இவைகளில் இருந்தும்  மின் உற்பத்தி பண்ண முடியும், இவை எல்லாம் மரபு சாரா எரிசக்திகள். இவற்றில் இருந்து எல்லாம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியாத  புது தகவல்  என்று நினைக்கிறேன். (ஒருவேளை உங்களுக்கு தெரிந்து இருந்தால் விவரங்களை சொல்லுங்கள் , உபயோகமாக இருக்கும் )

பல பொறியாளர்கள் பரிந்துரை செய்தும், நம் தமிழ் நாடு அரசு இவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய இதுவரை முயற்சி எடுத்ததாக  தெரியவில்லை ??  காரணம் தெரியவில்லை...?? ஆந்திராவில் நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய  45 மின் உற்பத்தி நிலையங்கள் 4 வருடங்களாக செயல்பட்டு வருகின்றன...??!!  அங்கே அனுபவமிக்க பொறியாளர்களின் ஆலோசனையினை   பெற்று அதன்படி வெகு ஜோராக மின் உற்பத்தி செயல்படுத்தபட்டு வருகிறது. இன்று 45 நிலையங்களில் ஒவ்வொன்றும் தலா 6  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது கொஞ்சம் மகிழ்ச்சியான செய்திதான். 

மின் உற்பத்தி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும்......இருக்கும் மின்சாரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறோம் என்பது தெரிந்தால் நம்முடைய ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகும்.....

முறையற்ற மின் விநியோகம்

மின்சாரத்தை கொண்டு போய் விநியோகம் செய்யும் வழிமுறைகளினால் மட்டும் 30௦%  மின்சாரம் வீணாகிறது என்பதே அந்த  அதிர்ச்சியான செய்தி. ஆனால் பெருமையான விஷயம் என்னனா இந்த ஒழுங்கற்ற மின் விநியோகத்தால் மின்சாரத்தை வீணாக்குவதில் உலகத்திலேயே இந்தியாவிற்க்குதான் முதல் இடமாம்..... என்ன கொடுமைங்க இது ??!!

இதிலும் தமிழகத்தின் நிலை இன்னும் மோசம். மத்திய மின்சார ஆய்வு நிறுவனம் தமிழகத்தில் தற்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ட்ரான்ஸ்பார்மர்களை  மாற்றச் சொல்லி 5 வருடம் ஆகிறதாம்....இதுவரை மாற்றவில்லை. ( இன்னும் பல வருடம் ஆகும்....?! முதல் இடத்தை அவ்வளவு சீக்கிரம் இழக்க மனசு வராதே  ??)

கழிவில் இருந்து மின்சாரம்

இந்த முறையில் ஆஸ்திரேலியா தனது மின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது.  கழிவு நீரை வடிகட்டி, அதில் இருக்கும் கழிவுகளை உருண்டைகளாக்கி  , அதில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுதான் 'கழிவு நீர் மின் உற்பத்தி'. இந்த முறையை நாம் செயல்   படுத்தினால் நமக்கு இரண்டு விதத்தில் ஆதாயம்.



 'பல கோடி  ரூபாய்' செலவு செய்து கூவத்தை சுத்தபடுத்த போவதற்காக  சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து இருக்கிறது 'தமிழகம்'.  அதற்கு மாற்றாக  கூவத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுத்தால் கூவமும்  சுத்தமாகும், நமக்கு மின்சாரமும் கிடைக்கும். அதற்காக கூவம் கரைகளின் ஓரத்தில்  பெரிய அளவிலான 'நீரேற்று நிலையங்களை' அமைத்து கூவம் நீரை சுத்திகரிக்கவேண்டும். பின்னர்  அந்த சுத்திகரிக்கபட்ட நீரை தொழிற்சாலை தேவைகளுக்கும், சேகரித்த  கழிவு உருண்டைகளை  மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம்.  (ஒரு கல்லில் இரண்டு மாங்காய் )

சூரிய ஒளி மின்சாரம்



சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.  இதற்கு கட்டிடங்களின் உச்சியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கான 'சோலார் பேனல்' களை பொருத்தினால் போதும். ஆரம்ப முதலீடு காஸ்ட்லி என்றாலும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும் போது , 'இதுதான் நிரந்தர தீர்வு' என்று அடித்து சொல்லலாம்.

இவை எல்லாம் அரசாங்கம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை நம்பி இருப்பதற்கு பதில் நம்மால் முடிந்தவரை இவற்றை நாமே செய்து கொள்ள முடியும் என்று ஒரு குடும்பம் நிரூபித்து உள்ளது. இங்கே இல்லை பக்கத்தில் பெங்களூருவில் தான் அந்த அற்புதம்.

சிவகுமார் என்பவர் கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் முதுநிலை விஞ்ஞானி. அவரது மனைவி திருமதி சுமா. இவர்களின் இல்லத்தில் தான் அந்த அதிசயம்.  10 வருடங்கள் முன் வீடு கட்டியதில் இருந்து இன்று வரை 'மின் இணைப்போ', 'குடிநீர் இணைப்போ', 'சமையல் எரிவாயு இணைப்போ' இல்லை...!! மாற்றாக சூரிய ஒளியும், மழை நீரும் தான்....!!??

வீட்டின் ஒவ்வொரு அறையின் கூரையிலும் நேரடியாக சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அந்த கட்டிடம் வடிவமைக்க பட்டுள்ளது. மின்சார தேவைக்கு 10 வருடங்களுக்கு முன் 7000  ரூபாய்  செலவில் மொட்டை மாடியில் 'சூரிய ஒளி மின் உற்பத்தி சிஸ்டத்தை' அமைத்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு




தண்ணீர் தேவைக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி 'மழைநீர் சேகரிப்பு'  தான். 45 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேகரிக்கும் தொட்டிகள் அமைத்து அதை சுத்திகரிக்க பில்டரை அவரே வடிவமைத்துள்ளார்.  அந்த 'பில்டர்'தான் இப்போது மாநில அரசுகளால் பரிந்துரை செய்யபடுகிறது.  இவர்கள் வீட்டை உதாரணமாக வைத்து மழைநீர் சேகரிப்பு முறையை வீட்டில்  அனைவரும் ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று சட்டமே போட்டு விட்டதாம் அரசாங்கம்.

ஆனால் நம்ம ஊர்ல போடப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம் என்ன ஆச்சுனு... எப்படி சொல்ல....ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தது...மக்களிடம் சரியான விழிப்புணர்வை  ஏற்படுத்தாமல் போய்விட்டதால், ஏதோ கடமைக்கு செய்வது போல் மக்கள் செயல் படுத்தினார்களே  ஒழிய முழு மனதுடன் , முழு ஈடுபாட்டுடன் செய்யவில்லை....

எந்த ஒரு 'நல்லதுமே ஒரு வீட்டில் இருந்துதான்' தொடங்குகிறது என்பார்கள். அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி குரல் கொடுப்பது அவசியம் தான்.  அதே சமயம் நம்மால் முடிந்தவரை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வரலாமே....

அடுக்குமாடி குடியிருப்பவர்களில் சேரும் கழிவு நீரை அவர்களே தகுந்த ஆட்களை வைத்து தேவையான மின்சாரம் தயாரித்து, மிச்ச நீரை செடிகளுக்கு உபயோகபடுத்தி கொள்ளலாம். வழிமுறைகளை சொல்லி கொடுக்க பொறியாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.  முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும் 

சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் 'இச்செய்தியை செவிமடுத்து, (செல் எடுத்து') சம்பந்த பட்டவர்களிடம் பேசி உங்கள் வீட்டையும்  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக்கி காட்டுங்களேன் எனதருமை பதிவுலக தோழர்களே....

நன்றி ஜூனியர் விகடன்    

வியாழன், ஜூலை 22

மரங்களை வெட்டுங்கள்





உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 

மண்ணின் வில்லன் 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே !

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!  





நன்றி - தினத்தந்தி