Monday, February 8

6:58 PM
8
பெண்கள் மது குடிப்பது தொடர்பான எனது  பதிவு ஒரு சிலருக்கு சரியான புரிதலை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வருண் நெகடிவ் வோட் போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். அவ்வாறு நேரடியாக தெரிவிக்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கும்  இந்த பதிவு ஒரு புரிதலை கொடுக்கலாம், அல்லது கொடுக்காமலும் போகலாம் ஆனால் தெளிவுப் படுத்துகிறேன் பேர்வழி என எழுதுவது எனது ஆகச் சிறந்த கடமையாகிவிட்டது தற்போது ! :-)  

///நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி! அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.///

இது போன்ற ஒரு அறிவுரையை எனது பதிவில் நான் குறிப்பிட இல்லை...அதும் தவிர  அந்த பதிவிலேயே குறிப்பிட்டு இருந்தேன், 'பெண்கள் குடிப்பதற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை, ஆணுக்கு சமம் என்பதை குடிப்பதன் மூலம் பெண்கள் நிரூப்பிக்கக் கூடாது' என்று.  நண்பர் வருணின் மொத்த கருத்துரையும் தவறான புரிதலின் காரணமாக வெளிவந்தவை. புரிதலின்மை என்பதற்காக ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும்  இயலாத காரியம்.  இருப்பினும் மதுவை குறித்து சமயம் வாய்க்கும்போதே எழுதிவிட வேண்டும்  என்பது எனது எண்ணம். ஏனென்றால் என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களின்   பிரச்சனையின்  மூலக் காரணம்  மது. ஏதோ ஒன்றை மறக்க/நினைக்க மதுவை  தொடுகிறார்கள் விடமுடியாமல் தொடருகிறார்கள்.   

மது அருந்துவதை குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை அதனால்தான்   அரசாங்கம்  விற்கிறது.  டாஸ்மாக் வாசலில் பெண்கள் குடிக்கக்கூடாது, பெண்களுக்கு இங்கே மது விற்கப்படாது என்ற போர்டோ இல்லை. பெண்கள் மது குடிப்பதை பற்றிய கவலை அரசிற்கே இல்லை அதுவும் பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில்... அப்படி இருக்க ஆண் குடித்து கும்மாளம் போட்டால்  ஒதுங்கிப்  போகும் ஆண்கள், பெண் என்றதும்  கேலி கிண்டல் கூச்சல் கூப்பாடு போடுவதும், அதிலும் பெண் குடித்தால் என்ன தவறு என்று கேட்ட  பெண்ணை, நாலு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதுதான் சரி  என்று சொல்வதும் வக்கிரத்தின் உச்சம். 

பெண் குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது எனக்கும் தெரியும். ஆணுக்கு ஏற்படுவதை விட அதிகமான பிரச்சனைகள் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும்.   ஒரு குடும்பம் ஆண் குடித்தாலும் தெருவுக்கு வரும் பெண் குடித்தாலும் தெருவுக்கு வரும். மேல் தட்டு மக்களில் ஆண் பெண் குடிப்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பார்ட்டிகளில் குடிப்பது தான் அவர்களை பொறுத்தவரை நாகரீகம்.  அவர்கள் குடிப்பதால் அவர்களுக்கோ சமூதாயத்திற்கோ பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை... (அவர்கள் குடித்து விட்டு கார் ஒட்டி ஆளை கொன்றாலும், சாட்சி சொன்ன எளியவர் பாதிக்கப்படுவாரே தவிர கொன்றவர் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம்)  அதே சமயம் மதுவால் எளிய மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வீடுகளில் யாரோ ஒருவராவது குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  அதிகரித்துவிட்ட குடிப்பழக்கத்தால் பெண்கள் தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்படுகிறாள்.  கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் புரியும் அத்தனை பேரும் குடிப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் !
   
என்னைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டுமே தவிர பிரச்சனைகுரியவர்களை தூற்றுவது  சரியல்ல.   பெண் குடிக்கிறாள் என்று கூச்சலிடுவதை விட அவளும் குடிக்கத் தொடங்கியதற்கு காரணம் என்ன என்று பார்க்கவேண்டும்.   அவள் குடிப்பதை தடுக்க அல்லது குறைக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு குடிக்கிறாளே என்று கூச்சலிட்டு அவளை இழிவுப் படுத்துவதால் பிரச்சனை இன்னும் தீவிரமாகும். ஏனென்றால்  பெண்ணுக்கு எதிராக எதை செய்தாலும் சொன்னாலும் அதை மீற வேண்டும் என்பது  பெண்களின் புத்தியில் புதிதாக பதிந்துவிட்டது.   குடிப்பது தவறு என்று அவளுக்கும் நன்கு தெரியும், ஆனால் அதை ஆண் கேவலப்படுத்தும் போது குடித்தால் என்ன தப்பு என்று எதிர்த்து கேட்கிறார்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக பெண்ணை  அடிமையாக நடத்தியதன் விளைவு இது.  கர்சீப் கூடவே கூடாது என்று வற்புறுத்திப் பாருங்கள், நாளையே கர்சீப் உடுத்தும் போராட்டம் தொடங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. முத்தப்போராட்டதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.  

///This is how it started among men too. First 1% started consuming, now it is almost 100% The same thing would happen with women. I dont understand why women should be treated "gently" and "alcohol should be blamed" rather than blaming consuming women.
I am completely against your view in this issue, my respectable friend, Mrs.Raj! We should not use two different balances to weigh men and women's alcohol consumption. Let us blame the consumer not the ethyl alcohol, even if it is a "poor woman"! Then only it is fair after all.///

மது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன்? பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன ?  சமூகத்தின் மீது இதுவரை  இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது  அதுவே நம் வீட்டுப்பெண்ணாக  இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம்.   ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள்.  திருத்துங்கள்.  வளமாகட்டும் நம் சமூகம்.

மது என்னும் அரக்கன் 

உடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளை சேகரிக்கும்  பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து  மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை  எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி !   அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையை காரணம் காட்டுவது. 

என்றோ ஒருநாள் மதுவை கையில் எடுப்பதற்கும். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் வித்தியாசம் அதிகம். ஆண்கள் அளவிற்கு பெண்களால் தினமும் குடிக்க முடியுமா என்ற சந்தேகம்  உடுமலைபேட்டையில் நீங்கியது.  செய்யும் வேலையில் ஏற்படும் களைப்பை /உடல் வலியை மறக்கலாம் என்று மதுவை நாடும்  ஏழை எளிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடிக்கும் குடும்பங்களும் உண்டு.  மதுவை கையில் எடுத்தால் தான் அன்றைய தினம் நன்கு தூங்கி மறுநாள் வேலைக்கு ஆயுத்தமாக முடிகிறது  என தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள் போல...

தினமும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை குடிக்க என்று ஒதுக்குகிறார்கள். எங்கள் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்த வர்களிடம் ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சா கம்பியூட்டர் வேலை பாக்குறவங்க  அளவு மாச வருமானம் வரும் அப்புறமென்ன கவலை என்றதற்கு  ' வீட்ல முன்னூறு ரூபா கொடுப்பேன் மிச்சம் என் செலவுக்கு உடம்பு வலிக்கு மருந்து போட்டாத்தான் நாளைக்கு வேலைக்கு வரமுடியும்' என்று அவ்வளவு பொறுப்பாக(?) பதில் சொன்னார்கள். மது உடல் வலி போக்கும் மருந்து என புரிந்து வைத்திருக்கும் எளிய மக்களிடம் எதை சொல்லி மது குடிக்காதீர்கள் என சொல்வது.  அற்ப ஆயுசு என்றாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம் என்று தத்துவம் பேசுகிறார்கள்.

சந்தோஷம்  திரில் கிடைக்கும் என்பதற்காக குடிக்கத் தொடங்கும்  படித்த பெண்கள் ஒரு கட்டத்தில் முழுமையாய் போதையில் மூழ்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.   அப்படிப் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம் . ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்று தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டிப் பேச்சுக்களில்     பெண்ணை துகில் உரித்து வன்புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இளைய சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

நண்பர் பயப்படுகிற  மாதிரி ஒரு சதவீத குடிக்கும் பெண்கள் அதிக சதவீதத்தை எட்டும் என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் அல்லது மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்.  கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் மதுவை மாநிலம் தாண்டியோ , உள்ளூரில் திருட்டுத் தனமாகவோ எல்லா பெண்களாலும் வாங்க முடியாது.  அப்படியென்றால் குடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை தானே.

பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது  அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது. சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வந்த ஒரு இளம்பெண், இப்ப கேர்ள்ஸ் டிரிங்க்ஸ் பண்றாங்களாம்  குடிச்சா என்ன மேடம் தப்பு, அப்டி அதுல என்ன இருக்கு குடிச்சு பார்ப்போமேனு எனக்கு தோணிகிட்டே  இருக்கு'. என்று பேச்சோடு பேச்சாக  சொன்னாள். உண்மை என்ன தெரியுமா அந்த பெண் ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவள், அதற்கு நியாயம் கற்பிக்க என்னிடம் இப்படி கேட்கிறாள். இதே மனநிலை நிறைய பெண்களுக்கு இருக்கிறது ஆண் வேண்டாம் என்று எதையெல்லாம் சொல்கிறானோ அதை எல்லாம் செய்து பார்க்கணும் என்ற எண்ணம்.  அது உடை தொடங்கி  குடி என்று  தொடருகிறது.  இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். எதிர்பாலினம் எதிரி பாலினமாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஏற்பட்ட அச்சம் இது...

நான் பதிவில் குறிப்பிட்ட 'வற்புறுத்த' என்ற வார்த்தை முக்கியம். மது அருந்தினால் ஆரோக்கியம் கெடும் என அறிவுறுத்தலாம் ஆனால் வற்புறுத்துவது என்பது எதிர்விளைவையே கொடுக்கக்கூடும். எதை வலியுறுத்த முயலுகிறோமோ அது வலிமையாகிக் கொண்டேப்  போகிறது.

எனது நிலைப்பாடு :-

பெண்களுக்கு ஒன்று என்றால்  கண்மூடித்தனமாக பொங்குவதல்ல  எனது வேலை... காலகாலமாக பெண் அடிமைப்பட்டுக்  கிடக்கிறாள் ஆதரவு தந்து இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவும் நான் வரவில்லை... சொல்லப் போனால் உங்களின் கழிவிரக்கம் பெண்ணுக்கு தேவையேயில்லை.  பெண் அனைத்தையும் விட மேலானவள்...இந்த  மனித சமுத்திரத்தின் வேரானவள் !

விதிவிலக்குகள் இருக்கலாம் அதை தவிர்த்து  பெண்ணை விமர்சிக்கலாம்  நாகரீகமாக... பெண்ணை  கிண்டல் செய்யலாம்  நட்பாக... பெண்ணைப்  பற்றி பேசலாம்  வெளிப்படையாக...!  ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து  நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத்  தவிர்க்கலாம் !!! இதைத்தான் ஆண் பெண் இருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.

பெண் குடித்தால் அவள் உடல் மனம் பாதிக்கப் படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பலருக்கும்  பெண்களை இழிவுப் படுத்த இது இன்னொரு வழி அவ்வளவே.  ஆண் குடிகாரனாக மாறுவதற்கும் பெண்ணே காரணம் என குற்றம் சாட்டவும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. குழந்தையை பெறும் பெண் குடிப்பது குழந்தையை பாதிக்கும் என்பதே பலரின் ஆகச் சிறந்த அறிவுரை, அப்படியென்றால் குழந்தைகளை பெற்று வளர்த்து  35/40 வயதை தாண்டிய பெண் குடிக்கலாம் என்றால் ஒத்துக்கலாமா ? ஆண் பெண் யார்  (அளவுக்கு மீறி) குடித்தாலும் பிரச்சனை தான் என்று செய்யப் படும் விழிப்புணர்வு ஒன்றுதான் தற்போது சமூகத்திற்கு அவசியம். அதை விடுத்து பெண்ணை கைக்காட்டிவிட்டு ஆண் தப்பித்துக்கொள்வதை  சமூக வலைத்தளத்தில் இயங்குபவர்கள்  ஊக்குவிக்கக் கூடாது.

தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்கு பகுத்தறிய  தெரியும். தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது. பெண்ணை பற்றிய எந்த விமர்சனமும் எல்லை  மீறி பெண்மையை கேவலப் படுத்தி  துன்புறுத்தும் அளவிற்கு போகக் கூடாது. அவ்வாறு போகும் போதெல்லாம் பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.  

குறிப்பு :-

நண்பர் வருணின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக  இந்த பதிவை எழுதினேன், ஆனால் எழுதி முடித்ததும் பொதுவான ஒரு பதிவாக மாறி இதை பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் தோன்றிவிட்டது. கருத்துக்களில் என்ன எதிர் நேர்? எதாக இருந்தாலும் என்னை யோசிக்கவும்  எழுதவும்   வைப்பது  நல்லது தானே. அதற்காக நண்பர் வருணுக்கு என் அன்பான நன்றிகள்!


Tweet

8 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...